Advertisement

                                                மௌன முத்திரைகள் – 2

பார்வதி சொன்னதுபோலவே மின் மயானத்திற்குத் தான் வந்தார். உடன் ம்ருதுளாவும். பெருங்கோடி வகையறா ஆட்கள், அதுபோக பாக்கியத்தின் பக்கத்து ஆட்கள், அதுபோக ஊர் ஆட்கள், அரசியல் கட்சி ஆட்கள், பழகியவர்கள், தொழில் வட்டாரம் என்று எக்கச்சக்க பேர்  இருக்க, தனரூபன் ஏற்கனவே சொல்லியிருந்தான்.

‘அவங்க வந்தா யாரும் அங்க எதுவும் பேசக் கூடாது. அமைதியா மட்டும் தான் இருக்கணும். சண்டை சச்சரவு கூடாது. அப்பா இருக்கும்போது எந்த பிரச்சனையும் இல்லாம எப்படி இருந்ததோ. அதே போலத்தான் இப்பவும். இனிமேயும்..’ என்றிட, அவன் வார்த்தைகளை மீறும் தைரியம் யாருக்கு உண்டு?

பார்வதி ஒரு சந்தன நிற நூல் சேலை அணிந்து அதை, தோள் போர்த்தி வேறு வந்தார். முகத்தில் அப்படியொரு கலக்கம். இப்போது தான் அவரை முதல்முறையாய் பார்க்கிறான்.

ஆட்களை கண்டதுமே அவர் எப்படி என்று அனுமானிக்கும் திறன் தனரூபனுக்கு நிறையவே உண்டு. இப்போதும் கூட, முதலில் பார்வதியை எடை போடும் பார்வை தான். அதன்பின் அவரோடு அவர் கரம் பற்றி வந்த ம்ருதுளா.

இருவருமே யாரையும் சட்டை செய்யவில்லை. ம்ருதுளாவிற்கு பார்வதியை கவனிப்பது மட்டுமே கடமை என்பது போல் வர, பார்வதியோ சுற்றிலும் யாரையும் பார்க்கவில்லை. நேராய் நல்லசிவத்தின் உடல் வைத்திருக்கும் இடத்திற்கு வந்தார். அருகே தனரூபன் நிற்க, அவனிடம்

“ரெண்டு நிமிஷம் மட்டும்…” என, தன்னைப்போல் அவன் தலை ஆடியது.

இந்த நேரத்தில், தன் அம்மாவின் வாழ்வில் இடையில் வந்தவர் என்ற கோபம் வரவேண்டும். உனக்கென்ன உரிமை உண்டு என்று கேட்டு சண்டையிட வேண்டும். யார் நீ என்று கத்தி கூவல் இட வேண்டும். எல்லாமே மனதில் தோன்றியது தான். இல்லாமல் இல்லை.

என்ன சொன்னாலும், எத்தனை நியாயங்கள், காரணங்கள் நல்லசிவம் சொல்லியிருந்தாலும், இன்றளவும் அவனால் அதனை எல்லாம் ஏற்கவே முடியவில்லை.

முடியவும் முடியாது தானே.

ஆனால் அவரின் இறுதி நேரத்தில், அவர் கூறிய வார்த்தைகளும், வேண்டுகோள் என்று கேட்டதும், அவனை கட்டி நிறுத்தியது. பாக்கியத்திற்கு கொடுத்த வாக்கை அவர் காப்பாற்றிட, பெற்ற தந்தைக்கு கொடுத்த வாக்கை அவன் காப்பாற்ற வேண்டிய நிலை.

சூழல் பல நேரங்களில் நம்மை நியாய, தர்மங்கள் கடந்து கட்டி போட்டு நிற்க  வைக்கும். அப்படித்தான் இந்த விசயத்தில் தனரூபனும். அப்பாவின் வார்த்தைகள் அவனை அப்படியே சிலையென நிற்க வைத்தது.

பார்வதி ஒருமுறை நல்லசிவத்தின் முகத்தை பார்த்தார். பின் அவரின் பாதங்களை இறுக பற்றி, இரண்டொரு நொடி தன் நெற்றியை அதில் வைத்து கண்ணீர் வடித்தார். அவ்வளவே.

“அம்மே…” என்று ம்ருதுளா பார்வதியின் தோள் தொட,

“ம்ம்..” என்றவர், பின் நிமிர்ந்து முகம் துடைத்துக்கொண்டே தனரூபனிடம் “நன்றிப்பா…” என்று கரம் கூப்ப, அவனால் வாயே திறக்க முடியவில்லை.

சுற்றி நின்று இருந்த கூட்டம் எல்லாம் ஆ! என்று பார்த்துக்கொண்டு இருக்க, தனலட்சுமியின் கணவன், அதாவது நல்லசிவத்தின் மருமகன் குமாரவேல் தான்

“நேரமாச்சு தனா…” என்று அவன் தோளைத் தொட,

“நாங்க கிளம்பிட்டோம்…” என்று பார்வதி மொழிந்தவர், எப்படி வந்தாரோ அப்படியே வேறு யார் முகத்தையும் காணாது காரில் ஏறி சென்றுவிட்டார்.

இப்போதும் கூட தனரூபனுக்கு அந்த நிகழ்வுகள் எல்லாம் அப்படியே கண் முன்னே வந்துபோனது.

வெகுநேரமாய் எதுவும் பேசாமல் இருந்த தனரூபனை, ப்ரீத்தியின் “மாமா…” என்ற உலுக்கல் தான் நிகழ் காலத்திற்கு வர வைக்க,

“என்ன மாமா… பிளாஸ் பேக்கா? அதெல்லாம் அப்புறம் நினைக்கலாம்.. முதல்ல என்னை ஏன் இங்க வர சொன்னீங்க நீங்க?” என்றாள்.

“எதுக்கு வர சொல்வாங்க? கம்பளைன்ட் வாபஸ் வாங்கு ப்ரீத்தி. மத்தது எல்லாம் நம்ம பேசிக்கலாம்…” என,

“நீங்க தான் பேசுறீங்களே தவற, சம்பந்தப்பட்ட யாரும் பேசவே மாட்டேங்கிறாங்க…” என்றவள், மாமனார் மாமியார் மற்றும் கணவனைப் பார்க்க,  தனரூபன் நித்தீஸ் முன் சென்று நிற்க, மீண்டும் அடிக்கப் போகிறானோ என்று அஞ்சியவன், இரண்டடி பின்னே செல்ல, அவனால் உருப்படியாய் நடக்கக் கூட முடியவில்லை.

“என்னடா வாய் திறந்து பேச மாட்டியா நீ?” என,

“அண்ணா நிஜமாவே அந்த பொண்ணு என்னோட பிரண்ட் தான். நம்புங்க ப்ளீஸ்…” என,

“இதை உன் பொண்டாட்டிக்கிட்ட முதல் நாளே சொல்லி இருக்க வேண்டியது தானே…” என்றான் நெற்றியை நீவியபடி.

“அதெப்படி… அந்த பொண்ணு பிரண்டுன்னே வச்சுப்போம். அவ கூட நடு ராத்திரில என்ன சேட்டிங் வேண்டி கிடக்கு? போனை வாங்கி நீங்களே பாருங்க மாமா… மணிக்கணக்கா சேட்டிங். விடிஞ்சு வெளிய போனா, திரும்ப மணி கணக்கா போன்ல பேசிருக்காங்க… எல்லாம் நானும் கவனிச்சு பார்த்துட்டு தான் இந்த முடிவுக்கே வந்தேன்…” என,

நித்தீஸோ “அண்ணா அப்படில்லாம் இல்லைண்ணா…” என்றான் திரும்ப.

“இங்க பார் என்ன கன்றாவியா வேணும்னாலும் இருக்கட்டும். ஆனா அதெல்லாம் இப்போவே இன்னிக்கே முடிஞ்சிடணும்.. பொண்டாட்டிக்கு துரோகம் பண்றது எல்லாம் எங்கப்பாவோட போகட்டும். அப்போ என்னால எதுவும் செய்ய முடியலை. ஆனா இப்போ அப்படி இல்லை. தொலைச்சு கட்டிடிடுவேன்…” என,

“சரிண்ணா…” என்றான் வேகமாய்.

“இல்லை மாமா எனக்கு நம்பிக்கை இல்லை…” என்று ப்ரீத்தி சொல்ல,

“ப்ரீத்தி நீ முதல்ல குழந்தையை எடுத்துட்டு இங்க வா.. இவனை நீ சரி பண்ணுன்னு நான் சொல்லவே மாட்டேன். ஆனா நீ இங்க இருக்கணும். சில விஷயங்கள் சொல்லி விவரிக்க முடியாது…” என்றவன்,

நித்தீஸிடம் “முதல்ல உன் பொண்டாட்டிய நல்ல பிரண்டா நினைச்சு பழகு.. அப்புறம் மத்தவங்களோட கும்மாளம் போடலாம்…” என்றவன்

சித்தப்பா சித்தியிடம் “நீங்க எல்லாம் வீட்ல இருந்து என்ன செய்றீங்க?” என்று கடிந்தான்.

தவசியின் சுபாவமே அமைதி தான். சுலோச்சனா அவருக்கு ஏற்ற மனைவி. தவசி முன்னர் அப்பா அம்மா பேச்சிற்கு கட்டுப்பட்டார். பின் அண்ணன் பேச்சுக்கு. இப்போது அண்ணன் மகன் பேச்சுக்கு.

ஆரம்பத்தில் எல்லாம் ஒன்றாகத்தான் இருந்தனர். நல்லசிவம் பார்வதி விஷயம் அறிந்தும் கூட, தவசி தன் அண்ணனிடம் ஒரு வார்த்தை அதனை முன்னிட்டு பேசவே இல்லை. தனலட்சுமியின் திருமணம் முடிந்து, பிறகு தனரூபனுக்கு செய்ய வேண்டும் என்று பேச்சுக்கள் அடிபட, ஜோசியர் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.

அது தனரூபனுக் இன்னும் இரண்டு ஆண்டுகள் கழித்துத் தான் திருமணம் செய்ய வேண்டும் என்று. தனரூபனை விட, மூன்றே ஆண்டுகள் சிறியவன் தான் நித்தீஸ்.

சுலோச்சனாவின் அம்மா ஒருமுறை அங்கே வந்திருக்க, மகளிடம் “பெரியவனுக்கு பார்க்கலைன்னா என்ன? உன் மகனுக்கு பாரு… இப்போ இருந்து பார்க்க ஆரம்பிச்சா தான்..” என்று சொல்லிவிட்டுச் செல்ல, சுலோச்சனா மனதில் என்ன தோன்றியதோ தன் மகனுக்கு வரன் தேட வேண்டும் என்று பேச்சை ஆரம்பித்தார்.

இந்த பேச்சு, வீட்டில் அனைவருக்குமே கொஞ்சம் அதிர்ச்சி தான். பெரியவன் தனரூபன் இருக்கும்போது, சிறியவனுக்கு பெண் தேடினால் என்ன பேசுவர் எல்லாம் என்று.

பெருங்கோடியோ “இப்பவே என்ன அவசரம் சுலோச்சனா?” என,

“இல்லை மாமா தனாக்கு இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சுன்னு சொல்றாங்க.. பொண்ணு என்ன ரெடியாவா இருக்கு ரெண்டு வருஷம் கழிச்சு உடனே கல்யாணம் முடிக்க… அதுக்கப்புறம் பொண்ணு தேடி, எல்லாம் தோது வந்து வருஷம் ஓடிரும்.. அதுக்கப்புறம் இவனுக்கு பார்க்கணும்னா ரொம்பவுமே தாமதம் ஆகிரும் மாமா….” என்று தன்மையாகவே சொல்ல, அவர் சொல்வதிலும் இருக்கும் நிஜம் புரியவே செய்தது.

இருந்தும்?! என்று அனைவரும் யோசிக்க, தனரூபன் வாயே திறக்கவில்லை.

நல்லசிவமும், பாக்கியமும் “ஜோசியர் கிட்ட கேட்டுக்கோங்க…” என்று முடித்துக்கொண்டனர்.

மறுப்பாகவும் சொல்ல முடியுமா?!

தவசி தான் மனைவியை கடிந்தார். ஆனால் சுலோச்சனா இந்த விசயத்தில் பிடிவாதமாய் இருக்க, கங்கையம்மாள் என்ன நினைத்தாரோ, கணவரோடு பேசிவிட்டு, பின் வீட்டினர் அனைவரையும் அழைத்து சொல்லிவிட்டார்

“நித்தீஸ் கல்யாணம் முடியவும், அண்ணன் தம்பி ரெண்டு பேரும் தனி உலை வச்சுக்கோங்க…” என்று.

அனைவரும் அதிர்ந்து பார்க்க “இது நல்லதுக்கு தான்.. இத்தனை நாள் நம்ம ஒண்ணா இருந்துட்டோம்.. இப்போ புது உறவுகள் வர்ற நேரம்.. அதனால இப்போவே இந்த முடிவை எடுக்கிறது நல்லது…” என்றவரின் பேச்சில் இருந்த உறுதியை யாராலும் தடுத்து ஒரு வார்த்தை சொல்ல முடியவில்லை.

ஆனால் பாக்கியம் “அத்தை  தனி தனியா எங்க போறது… இனி ஒரு வீடு கட்டி போகணும்னா அதுக்கெல்லாம் வருஷம் ஆகும்…” என,

“யாரு தனி வீடு கட்ட சொன்னா. இதோ இந்த வீடு இத்தனை பெருசு இருக்கு.. பத்து ரூமுக்கு மேல. முன்னாடி பின்னாடி அளந்து பிரிச்சு ஆளுக்கு எங்கன சமையல் கட்டு வைக்கனுமோ வச்சுக்கோங்க…” என்று முடித்துவிட்டார்.

அனைத்தும் அவரின் யோசனைகள் படிதான் நடந்தன. ஒற்றை பெரிய வீடு, அது அப்படியே இரண்டாய் மாற்றி அமையக்கப் பட்டது.

“நாங்க பெரியவனோட இருந்துப்போம்…” என்று பெருங்கோடி சொல்ல, அப்போதுதான் தவசி வாய் திறந்தார்.

“ஏன்பா தனரூபனுக்கு முடிக்காம, நித்தீசுக்கு முதல்ல கல்யாணம் செய்யனும்னு சுலோ சொன்னது கோபமா?” என,

“அப்படி இல்லை தவசி.. கல்யாணம் புது சொந்தங்கிறது எல்லாம் லேசுபாசான விசயமில்லை. நிறைய வேலை இருக்கும்.. சுலோச்சனாக்கு இனி பொறுப்புகள் கூடிரும் அதனால எல்லாம் யோசிச்சுத்தான் சொல்றோம்.. இங்கயே தானே இருக்கோம்.. அவ ஏதாவது செஞ்சா கொண்டு வந்து தரட்டும்.. நாங்க அதையும் சப்பிட்டுப்போம்…” என்றிட, கடிந்து பேசினால் தானே மறுக்கவோ, எதிர்க்கவோ சண்டையிடவோ முடியும்.

ஆனால் இது பிரச்னைகள் எதுவும் வந்துவிடக் கூடாது என்பதனால் சொல்வது ஆகிற்றே.

எப்படி மறுக்க?!

வீடு இரண்டாய் தான் ஆனதே தவிர, எந்தவொரு நல்லது கெட்டது எல்லாம் ஒன்றாய் நின்று தான் செய்தனர்.  விசேச நாட்களுக்கு பலகாரம் சுடுவது கூட, எல்லாம் ஒன்றாய் செய்து பின் பிரித்து எடுத்துக்கொள்வர். அதனால் எவ்வித பிரச்சனையும் இப்போது வரைக்கும் இல்லை.

அதுபோலவே சொத்துக்களையும் பெருங்கோடி இரு மகன்களுக்கும் பிரித்து எழுதிவிட, அனைத்தும் சுமுகமே.

சுலோச்சனா விரும்பியது போல, அதே ஊரினில் தான் பெண் கிடைத்தது. அதுவும் மிக சிக்கிரமே. ப்ரீத்தி அன்னியம் தான் இருந்தாலும் ஒரே ஊர் என்கையில் அனைவருக்குமே மகிழ்ச்சி. ஆனால் கேட்காமல் விட்டவர்கள் யாரும் இல்லை.

‘பெரியவனுக்கு ஏன் செய்யலை…’ என்று.

தனரூபனுக்கோ எரிச்சலாய் ஆனது.

ஆனாலும் வெளிக்காட்ட முடியாது தானே.

இதற்கும் அனைத்து வேலைகளையும் முன் நின்று செய்தது அவனே. அன்றைய தினமும் அடுத்து சில நாட்களுக்கும் அனைவரின் வாய்க்கும் அவல் ஆனது தனரூபன் தான்.

“ம்மா ஏன் ம்மா… உலகத்துலேயே இவர் ஒருத்தர் தான் ஜோசியரா.. வேற யார்கிட்டனாலும் காட்டி இருக்கலாம் தானே.. அது அதுக்கு ஆயிரம் பரிகாரம் இருக்கு. அதை பண்ணிட்டு தம்பிக்கு முதல்ல கல்யாணம் பண்ணிருக்கலாம். பாரு யார் யாரோ என்னென்னவோ பேசுறாங்க…” என்று தனலட்சுமி வருத்தப்பட,

“அது சரி சொல்றவங்க எல்லாம் நாளைக்கு அவனுக்கு ஒரு பிரச்னை அப்படின்னா வந்து நிக்கவா போறாங்க..?” என்றார் பாக்கியம்.

“அப்படியில்லை அத்தை.. நாளைக்கு இதுவே ஒரு தடையாகிட கூடாது இல்லையா?” மருமகன் குமாரவேலும் சொல்ல, அப்போது அது ஒரு பெரிய விசயமாய் பாக்கியத்திற்கு தெரியவில்லை.

என் மகனுக்கு என்ன குறை?

அவனுக்கு பெண் வேண்டும் என்றால், நீ நான் என்று போட்டி போட்டு வருவர் என்று எண்ணினார். ஆனால் நல்லசிவம் மறைந்து, அனைத்து பொறுப்புகளும் தனரூபன் தலைமீது விழுந்து, அவனது இயல்பிலும் குணாதிசயங்களிலும் சிறு சிறு மாற்றங்கள் ஏற்பட, பாக்கியத்திற்கு இப்போது மனதிற்குள் பயம் வரத் தொடங்கியிருந்தது.

“துக்கம் நடந்த வீட்ல ஒரு நல்லது நடக்கனும்னு சொல்லுவாங்க… சீக்கிரம் ஏதாவது பரிகாரம் செஞ்சு, தனரூபனுக்கு ஒரு நல்லது செய்யவேண்டியது தானே…“ என்று தனலட்சுமியின் மாமியார் கூட சொல்லிட, பாக்கியம் மகன் முகம் பார்த்தார்.

“அப்பா இறந்து ஒரு வருஷம் கூட ஆகலை… ஒருவருஷம் முடியட்டும்…” என்று முடித்துவிட்டான்.

என்னவோ அவனுக்கு இன்னமுமே நித்தீஸ் திருமணத்தின் போது நடந்த சம்பவங்கள் எல்லாம் மறக்கவே இல்லை.

‘ஏதாவது குறை இருக்குமோ?’

‘என்ன தோஷமோ?’

‘ஒருவேளை அவங்க அப்பாரு மாதிரி எதுவும்…’ என்ற பேச்சுக்கள் எல்லாம் இன்னமும் அவன் மனதில் ஆறாத காயமாய் அப்படியே இருந்தது.

    

  

 

 

 

                       

      

         

    

                               

 

 

Advertisement