Advertisement

அத்தியாயம் – 8
சபரி அன்று பெங்களூரு கிளம்பிச் சென்றான்.  ஆதியின் சார்பில்  சபரி அலுவலகத்தில் இருக்க, ஆதி இங்கிருந்தே ஆன்லைனில் மீட்டிங், மின்னஞ்சல் வழியாக அவன் வேலைகளை செய்து கொண்டிருந்தான்.
மது பொருளாதாரம் பற்றிய ஒரு பத்திரிக்கையை புரட்டிக் கொண்டிருக்க, ஆதி வந்து அமர்ந்தான். அவள் படிப்பதைப் பார்த்து, “ ஓ, நீ எகானமிஸ்ட் கூட படிப்பியா ?”
அவனை ஒரு பார்வை பார்த்தவள், “படிக்கறதுக்குதான பத்திரிக்கை எழுதறான் ?”
“ம்ம்… ஆன உனக்கு இதுல எல்லாம் இன்ட்ரெஸ்ட் இருக்கா ?”
“என்னை வடிகட்டின முட்டாளுன்னு முடிவே பண்ணிட்டியா ?”, முறைத்தாள் மதி.
“அப்படியில்லை. நீ எதோ ஃபாஷன் டெக்னாலஜி படிச்சன்னு தெரியும். அப்பறம் அது சம்பந்தமா கொஞ்சம் நாள் வேலை பார்த்துட்டு விட்டுட்ட. அப்பறம் சும்மாதான் இருக்கன்னு சொன்னான் சபரி. பெருசா ஒரு குறிக்கோளும் இல்லைன்னவே, உனக்கு உலக பொருளாதாரம் பத்தி என்ன பெருசா இன்ட்ரெஸ்ட் இருக்கும்னு கேட்டேன்.”, ஆதியின் பார்வையில் ஒரு ஏளனம், நீயெல்லாம் எனக்கு சமமா என்று ஒரு கர்வம் இருந்தது.
“ஓ… குறிக்கோள் இல்லாத வாழ்க்கை வாழறேன். ம்ம்ம். அதுவே என் குறிக்கோளா இருந்துட்டு போகட்டுமே ?”, விட்டேற்றியாக பதில் அளித்தாள் மது.
“இதுவே ஒரு பையன் இப்படி சொல்ல முடியுமா ? இந்நேரம்,  இந்த ஊர் அவனை உருப்படாதவன், அப்பன் காசுல வெக்கமில்லாம சாப்பிடறான்னு பட்டம் குடுத்திருக்கும்.“, அலட்சிய உதட்டுச் சுழிப்புடன் சொன்னான் ஆதி.
“ஏன் ?  சொல்லேன் . நானும் என் அப்பா காசுலதான் உக்காந்து சாப்பிடறேன். “, வேண்டுமென்றே ஏற்றிவிட்டாள்.
“உண்மை அதுதானே ? அதுவும் உன் அப்பா காசுல எப்படி உன்னால முடியுது? அவர் பண்ற வேலைக்கு நான் எப்பவோ தனியா போய் என் கால்ல நின்னிருப்பேன்.”
“அவர் சம்பாரிக்கறத அனுபவிக்க மொத்த உரிமையும் இருக்கு எனக்கு. ஏன்னா, அதுக்கான விலையா என்னோட குழந்தைப் பருவத்து சந்தோஷத்தையும், ஏக்கத்தையும் கண்ணீரையும் குடுத்திருக்கேன். அதுக்கெல்லாம் ஈடு செய்ய அவர் காலம் முழுசும் உழைச்சாலும் பத்தாது. அதனால நீ என்னை எடை போடாத.  உனக்கு என்ன தெரியும் என்னை பத்தி ?”, பொரிந்தாள் மது.
அவள் பேசியதைக் கேட்ட ஆதிக்கு, தான் எல்லை மீறி அவளிடம் பேசியிருக்கிறோம் என்று புரிந்தது. அது ஏன் என்று ஆராயவில்லை அவன்.  அடுத்து அவன் பேசியதும் அவனே எதிர்பாராதது.
“சரி, நீ சொல்லு, ஏன் நீ படிச்சதுக்கு ஏத்த வேலையோ, பிசினஸோ பண்ணலை ?”, கேட்டதும், ‘என்ன இவ்ளோ அக்கறை ?”, என்று யோசித்த மனதை அடக்கி அவள் சொல்வதைக் கேட்டான்.
அவன் அமைதியாய் கேட்டது, மதுவையும் சற்று நிதானத்திற்கு கொண்டு வந்தது.
“ஒருத்தற ஒருத்தர் மிதிச்சி ஏறப் பாக்கற அந்த கலாச்சாரம் பிடிக்கலை.  வாய் சவடால்ல படம் காட்டறாங்க. மத்தவங்க திறமையை கூச்சமே இல்லாம என்னுதுன்னு சொல்லி …சீ…ன்னு ஆகிடிச்சு.”
“இது எல்லா லைன்லயும் இருக்கறதுதான் மது. அதை மீறி நம்ம திறமையை நிரூபிச்சு மேல வரதுதான் த்ரில்.”, ஆதி சிலாகிக்க, அவனை முறைத்தவள்,
“அது என்ன தேவைக்கு ? அந்த சம்பளமோ, இல்ல அதுனால வர பேரோ எனக்கு வந்து ஆகப்போறது ஒண்ணுமில்லை. என் திருப்திக்குத்தான் படிச்சேன் , வேலை பார்த்தேன். அது பிடிக்கலைன்னதும், இப்ப எனக்கு திருப்தி தர விஷயங்களை செய்யறேன்.”, தோள் குலுக்கினாள் மது.
“இப்ப அப்படி என்ன செய்யற ?”. ஏன் இவ்வளவு ஆர்வம் என்று யோசிப்பதையே விட்டிருந்தான்.
“பார்ட் டைம்மா ஒரு முதியோர் இல்லத்துல, அங்க இருக்கிற பெரியவங்களுக்கு ஆர்ட் கிளாஸ் எடுக்கறேன். அவங்களை ஊக்கப்படுத்தி, எக்ஸ்ர்சைஸ் செய்ய, இல்லை ஒரு புது முயற்சி செய்து பார்க்க உதவி செய்வேன். சில நேரம், அவங்க பேசறத கேட்க ஒரு ஆள் இருந்தாலே போறும்.  என்னோட நேரத்தை அவங்களுக்குத் தரேன்.”
“வாழ்க்கையோட ஓட்டத்துல நாளைக்கு நாளைக்குன்னு யோசிக்கறோம். அதுக்காக ஓடறோம். இன்னிக்கு, இந்த நிமிஷம் நம்ம சுத்தி இருக்கற அழகை நின்னு கவனிக்க  நேரமே ஒதுக்கறது இல்லை.  எனக்கு அப்படி நின்னு பார்க்க ரொம்ப பிடிக்கும். நிறைய படிக்க பிடிக்கும். வரலாறு, சைன்ஸ் ரெண்டும் இஷ்டம். கைல எது கிடைச்சாலும் படிப்பேன். இதுதான்னு ஒரு லிமிட் கிடையாது.”
மதுவோ, ‘எதுக்கு இவன் கிட்ட சொல்லிகிட்டு இருக்கோம்’, என்று நினைத்து நிறுத்தினாள்.
மது சொல்ல சொல்ல, ‘இது கூட கேட்க நல்லாத்தான் இருக்கு .’, என்றுதான் தோன்றியது ஆதிக்கு.
அது முகத்தில் தெரிந்ததோ என்னவோ, “ உனக்கெல்லாம் ஒரே நாள்ல போர் அடிச்சிடும்.  நீ எப்பவும் பரபரப்பா இருக்கறதைத்தான் விரும்புவ. அதுக்காக அமைதியை விரும்பற நான் வினோத பிறவியும் இல்லை, முட்டாளும் இல்லை.”, என்றாள் மது நக்கலாக.
சிரித்தவன், “சாரி. உன்னைப் பத்தி தப்பா நெனச்சதுக்கு.  வழக்கமா அப்படி கேள்வி படற விஷயங்களை மட்டும் வெச்சு ஒரு முடிவுக்கு வரமாட்டேன். என்னவோ, உன் விஷயத்துல அப்படியாகிடுச்சு.”, தன் தவற்றை ஒத்துக்கொண்டான்.
“பரவாயில்லை, உங்கிட்ட இப்படி உடனே ஒரு மன்னிப்பு நானும் எதிர்பார்க்கலை. என்னதான் தப்பு உன் பக்கமிருந்தாலும், நீதான் சரின்னு வாதாடுவன்னு நெனச்சேன். சரி இனி நம்மளா இப்படித்தான்னு நினைக்காம, கேட்டு தெரிஞ்சிக்குவோம்.  ஃப்ரெண்ட்ஸ் ?”, கை நீட்டினாள் ஒரு சிறு புன்னகையோடு.
கை பற்றிக் குலுக்கியவன். “ யா… ஓகே.”, சொல்லவுமே ஆதியின் கைப்பேசி அழைக்க, அதைப் பார்த்தவன், “கடமை அழைக்குது, நீ கண்டின்யூ பண்ணு.”, என்று அவள் பக்கத்திலிருந்த பத்திரிக்கையைக் காட்டிவிட்டுச் சென்றான்.
விட்ட இடத்திலிருந்து மது படிக்க ஆரம்பித்தாள். மதியம் சுப்பு சாப்பிட அழைத்தார். மதுவும் சங்கரியும் வர, ஆதியைக் காணவில்லை.  நவனீதன் பெரும்பாலும் பகல் பொழுது வீட்டுக்கு வருவதில்லை.
சாப்பிட அம்ர்ந்தவள், “எங்க மாமா ஆதியைக் காணலை ?”, என்று கேட்டாள்.
“ஆதி தம்பி எதுவோ ஆபிஸ் வேலை முக்கியமா இருக்கு. சாப்பாட்டுக்கு அப்பறமா வரதா சொன்னாரு மதுமா.”, என்ற வாறே பரிமாறினார்.
“ஆமாம் மது, ஆபிஸ்ல எதோ ப்ராப்ளம் போல. சத்தமா பேசிகிட்டிருந்தது கேட்டுச்சு, அந்த ரூம் தாண்டி வரும்போது.”, என்றார் சங்கரி.
“சரி.”, என்றவள் சங்கரியுடன் வேறு விஷயங்கள் பேச ஆரம்பித்தாள். பாட்டியின் புடவைகளைப் பிரித்து சில முதியோர் இல்லங்களுக்கு தந்துவிட்டு வருவது பற்றி முடிவு செய்தவாறே சாப்பிட்டு முடித்தார்கள்.
அதுவரையிலுமே ஆதி வராதது கண்டு, “ சுப்பு மாமா, தாளிச்சு தயிர் சாதமா கொஞ்சம் ரெடி பண்ணித்தாங்க. பாட்டி சொல்லிருக்காங்க ஆதிக்கு பிடிக்குமாமே ? அதை குடுப்போம். இப்பத்திக்கு ஆதி சாப்பிட வர மாதிரி தெரியலை. கலந்துட்டு, கடைசியா கொஞ்சம் கேரட், வெள்ளரிக்கா துருவி மேல போட்டு எடுத்துட்டு வாங்க”, என்றாள் மது.
“சரிம்மா.”, என்று சென்ற சுப்பு தயிர் சாதம் தாளித்து, இஞ்சி, கறிவேப்பிலை வாசம் தூக்க கலந்து எடுத்து வந்தார்.
அதில் சாப்பிட ஏதுவாக கறிவேப்பிலை , பச்சை மிளகாய் எல்லாம் கவனமாகப் பொறுக்கிவிட்டு, ஒரு கிண்ணத்தில் சாதமும், ஓரமாக மாங்காய் ஊர்காயும் வைத்து, ஒரு ஸ்பூன் போட்டு எடுத்துக் வைத்தாள்.
அதைப் பார்த்த சங்கரி, “ஏன் மது கறிவேப்பிலை எடுத்துப் போட்டுட்ட ?” என்று கேட்க, என்னை மாதிரியே ஆதியும் கறிவேப்பிலையை  சாதத்தோடு சேர்த்து சாப்பிட மாட்டான்னு பாட்டி சொல்லிருக்காங்க.  ஸ்பூன்ல சாப்பிடும் போது ஒதுக்கி ஒதுக்கி சாப்பிடணும். அதான் ஆண்ட்டி.”, என்று ஒரு பாட்டில் குளிந்த நீரையும் எடுத்துக்கொண்டு ஆதியைத் தேடிச் சென்றாள்.
அவள் அக்கறையைப் பார்த்த சங்கரி, சுப்புவிடம், “இவ்வளவு அக்கறையா இருக்கா. ரெண்டு பேரும் ஏன் கல்யாணம் பண்ணிக்க விருப்பப்படலை  சுப்பு ?”
“ம்ம்… அம்மா உயிரோட இருந்த வரைக்கும் இவங்க ரெண்டு பேருக்கும் பொருத்தம், ஏனோ ஒரே நேரம் வர மாட்டேங்கறாங்க சுப்பு. இவங்க கல்யாணம் பண்ணிகிட்டா அதைவிட சந்தோஷம் எனக்கு வேற ஒண்ணும் இல்லை. ஆனா ரெண்டும் எங்கிட்ட ஒரு பிடி குடுத்தே பேச மாட்டேங்குதுங்க. இதுல கூட ரெண்டுத்துக்கும் பொருத்தம் பாருன்னு சொல்லிகிட்டு இருப்பாங்க.”, என்று தனம் பாட்டியின் ஆசையை விவரித்தார்.
இவர்களைப் பற்றி பேசிகொண்டிருப்பது தெரியாமல், மது ஆதியின் அறைக்குள் கதவை லேசாகத் தட்டிவிட்டு உள்ளே செல்ல, ஆதி காதில் மாட்டிய ஹேட் போனில் பேசியவாறே, லாப்டாப் திரையில் தெரிந்த எண்களில் கண்ணைப் பதித்திருந்தான்.
மெதுவாய் , கிண்ணத்தை மேஜையின் ஓரம் வைத்தவள், உண்ணுமாறு சைகை புரியவும், அவளிடமிருந்து பார்வை கிண்ணத்திலிருந்த தயிர் சாதத்தில் பதிந்தது. ஆதிக்கு ஒரு நிமிடம் அவன் அம்மா ஞாபகம் வந்தது. மும்முரமாய் படிக்கும்போது, இப்படித்தான் கலந்து கொண்டு வந்து வைத்துவிட்டு ஜாடை செய்வார்.
ஆதிக்கு சட்டென்று நாவில் நீர் ஊற, வயிறும் நான் காய்ந்து போயிருக்கிறேன் என்று சத்தமிட்டது. கட்டைவிரலை உயர்த்தி ஒரு புன்னகைப் பூத்தவன், ஹெட் போனை ம்யூட் செய்து, “தாங்க்ஸ் மது.”, என்றுவிட்டு சாப்பிட்டவாறே, மீண்டும் யாரோ பேசுவதில் கவனம் கொள்ள, மது சிறு தலையசைப்புடன் வெளியே வந்தாள்.
ஒரு வழியாய் ஐந்து மணிபோல ஆதி வெளியே வர, மது வரவேற்பறை டீப்பாயில் ஜிக்சா புதிருக்கான சிறு சிறு துண்டுகள் இரைந்திருக்க, ஒரு பக்கம் அதை ஒரு படத்தைப் பார்த்து அடுக்கிக் கொண்டிருந்தாள்.
சுப்பு, டீயுடன் வரவும், எடுத்துக்கொண்டே, “ சுப்புண்ணா, தாங்கஸ். நீங்க தயிர் சாதம் குடுத்தனுப்பாட்டி, மதியம் பட்டினிதான். அதுவும் அதுல காரட் எல்லாம் போட்டு அட்டஹாசமா இருந்துச்சு.”, என்றான்
“இல்ல தம்பி, மதுமாதான் அப்படி செய்ய சொல்லிச்சு. இல்லாட்டி, நீங்க வருவீங்கன்னுதான் நான் காத்திருந்திருப்பேன். உங்களுக்கு கறிவேப்பிலை பிடிக்காதுன்னு எடுத்து போட்டு, மாங்காய் ஊர்காய் வெச்சது வரைக்கும் எல்லாம் மதுமாதான் செஞ்சது.”, என்று கூறிச் சென்றார்.
“தாங்கஸ் மது. எனக்கு கறிவேப்பிலை பிடிக்காதுன்னு எப்படி தெரியும் ?”, என்று கேட்டான்.
“ம்ம்… நானும் தனியாதான் எடுத்து வெச்சிட்டு சாப்பிடுவேன். அப்ப பாட்டி சொல்லும்.”, என்று மீண்டும் அவள் வேலையில் கவனமானாள்.
சிறிய அமைதிக்குப் பின், “என்ன பிரச்சனை. இவ்ளோ நேரம் பேசிட்டு இருந்த ? முடிஞ்சுதா ?”, என்று கேட்டு அவனைப் பார்த்தான். முகத்தில் ஒரு அயர்ச்சி தெரிந்தது.
“ம்ச்ச்… டைம், க்வாண்டிடி, மணி மூணுத்துல எதாச்சம் ஒண்ணு ஸ்லிப் ஆகும். எது , எவ்வளவுன்னு முடிவு செய்யணும். அதான் யோசனை. எந்தப் பக்கம் போனாலும் உதைக்குது.”, என்று சோர்வாய் புன்னகைத்தான்.
ஆதியைப் பார்த்தவள், “ யோசிச்சதையே திரும்ப திரும்ப யோசிக்காத. என்னோட சேர்ந்து இந்த பசில் (puzzle) போடு.”, என்றாள்.
“விளையாடாத, இன்னும் ஒரு மணி நேரத்தில டிசைட் பண்ணி சபரி கிட்ட சொல்லணும்.”, என்றான் ஆதி.
“பாரு, மூணி, நாலு மணி நேரமா இந்த விஷயத்தைத்தான் பேசிகிட்டு இருந்த. உன் மைண்ட் கொஞ்சம் அமைதியாகட்டும். அப்பதான் சரியான முடிவு எடுக்க முடியும். “, அவள் சொல்லுவதில் இருந்த உண்மை ஆதிக்குமே தெரிந்ததுதான்.
“சரி, சொல்லு. என்ன செய்யணும் ?”, என்று கேட்டவாறே எதிரே அமர்ந்தான்.
மெல்லிதான வார்த்தை பறிமாற்றம் தவிர்த்து, இருவரும் புதிரின் துண்டுகளை சேர்ப்பதில் மும்முமரமானார்கள். அப்போது மது, அவளிடம் இருந்த சிலதை அவனிடம் காட்டி, “இதுல எல்லாம் ரெட் இருக்கு, உன்னோட மரத்துக்கு செட் ஆகுமா பாரு.”, என்று கொடுக்கவும், செய்து கொண்டிருந்த வேலைய விட்டு, அதை வாங்கிப் பார்த்தான்.
பார்த்தவன் பார்வை ஒரு நிமிடம் நிலை குத்தி நிற்க, சட்டென்று, “ யெஸ்..”, என்று தொடையில் தட்டி, எழுந்தான். கைபேசியில் சபரியைப் பிடித்து,
“டேய், போன முறை இவங்க டிசைன் , கலர் ஆர்டர்ல இருந்து கொஞ்சம் மாறிடுச்சுன்னு ப்ரெச்சனை பண்ணாங்க இல்லை ?” என்று கேட்க, சபரியின் பதிலில்,
“குட். நீ என்ன பண்ணு, இப்ப இருக்கறதல அவங்க ஆர்டர்ல ஒரு  பர்சென்ட் அளவுக்கு பாக் பண்ணி ஏர்ல அனுப்பு.”, சபரி ஏதோ கேட்க,
“ஏனா ?  எப்படியும் எதாவது மாத்த சொல்லுவாங்க. கூட கொஞ்சம் டைம் வாங்கலாம். அப்பா கேட்டா , போன வாட்டி மாதிரி ஆகக்கூடாதுன்னு அனுப்பறோம்னு சொல்லு. அவனுங்ககிட்ட…”
சபரி பேசியதைக் கேட்டு சிரித்த ஆதி, “அதேதான், மானே தேனே எல்லாம் போட்டு ஈமெயில் அனுப்பிடு.  மூணு வாரம் டிலே அட்ஜஸ்ட் பண்ணிடலாம். ஷிப்பிங்ல சங்கர ரெடியா இருக்க சொல்லு.”
சபரி மீண்டும் ஏதோ சொல்ல, “இல்ல மது கூட  பசில் போட்டுகிட்டு இருந்தேன். அப்பதான் தோணிச்சு. ஐடியால பாதி கிரெடிட் அவளுக்குதான் சொல்லணும். “
சபரி அங்கே கலாய்த்திருக்க வேண்டும். “ வேலய பாருடா. இங்க ஒரு கலவர நிலவரமும் இல்லை. “, என்று அழைப்பை துண்டித்து,சாதித்த புன்னகையோடு அமரவும், அவனை குறு குறு வென்று பார்த்திருந்த மது,
 “ கஸ்டம்ர் மெயில்ல மானே தேனே எல்லாம் எப்படி போடறது ?”, என்று கேட்டாள்.
“ஹாஹ்ஹா…அது சபரியோட ஸ்லாங். கஸ்டமர குளிர்விக்கற மாதிரி, நீங்க எங்களுக்கு ரொம்ப முக்கியமானவர். உங்க பிஸ்னசை நாங்க ரொம்ப மதிக்கறோம். நம்மது நீண்ட நாள் பழக்கம், உங்க குட்வில் எங்களுக்கு அவசியம் அப்படில்லாம் சேர்த்து எழுதுவான்.”
“ஹ்ம்ம்ம்… குல்லா மாட்டறீங்க. சரி உன் ப்ரச்சனை முடிஞ்சுதா ? ”, சின்ன சிரிப்புடன் கேட்டாள் மது.
“ஹ்ம்ம்… அனேகமா. இல்லாட்டியும் டிலே கொஞ்சம் கம்மியாகும்.  தாங்க்ஸ் மது. நீ தந்த அந்த சாம்பிள் பார்த்துதான் இந்த ஐடியா வந்துச்சு.”
எப்போதும் போல தோளை குலுக்கியவள், “ நான் சாதாரணமாத்தான் தந்தேன். பட், அது உனக்கு உபயோகபட்டுதுன்னா நல்லதுதானே.”
அன்றிரவு, இருவரும் படுக்க செல்லும் வரையிலுமே சுமூகமாகவே பேசிச் சென்றார்கள். மறு நாள் வரை கூட இது தாங்காது என்று தெரியவில்லை பாவம்.

Advertisement