அதிகாலை விமானத்தைப் பிடித்து கோவை வந்த மது, விமான நிலையத்தின் அருகிலேயே காலை உணவையும் முடித்து, குன்னூர் செல்ல ஒரு வாடகை காரை ஏற்பாடு செய்து ஏறி அமர்ந்தாள்.
தோழியின் பொட்டீக்கிற்கான வேலையை முடித்த கையோடு கிளம்பியிருந்தாள். இரண்டு நாட்கள் முன்னர் நவனீதனுக்கு போன் செய்தாள்.
“அங்கிள், நான் மது பேசறேன். எப்படி இருக்கீங்க?”
“அட மது. நல்லா இருக்கேன் மா. நீ எப்படி இருக்கே? “
“நல்லாருக்கேன் அங்கிள்.”, என்றவள், சற்று தயங்கவும்,
“என்னம்மா? என்ன விஷயமா கூப்பிட்ட?”, என்று ஊக்கினார். இவர் மது என்றதும் அருகிலிருந்த சங்கரி காதைத் தீட்டியிருந்தார்.
“அது… பாட்டி வீடு இன்னும் இடிக்கலைன்னு சபரி சொன்னான். அதான் கொஞ்ச நாள் வந்து தங்கலாமான்னு… கேட்க கூப்பிட்டேன் அங்கிள்.”
“ஆமாம்மா… சரியான ஆள் கிடைக்கலை. கதவு ஜன்னல் எல்லாம் நல்ல தேக்கு. அதுக்கான சரியான விலை அமையலை. பார்த்துகிட்டு இருக்கேன். ஆனா வீடு காலி செய்துட்டேனேமா. எல்லா ஃபர்னிசர்ரும் எடுத்தாச்சு. சுப்பு மட்டும் ஒரு ரூம்ல இருக்கான். வீட்டை பார்த்துக்க. நீ எப்படி தங்குவ?”, யோசனையாய்க் கேட்டார்.
“பரவாயில்லை அங்கிள். நான் ஒரு சிங்கிள் பெட் வாங்கி கீழ போட்டுக்கறேன். ஒரு வாரம் இருந்துக்கறேன் அங்கிள். “, என்றதும்,
“சரிமா. நீ வா. நான் ஸ்டோரேஜ்லர்ந்து எதுவும் எடுக்க முடியுமான்னு பார்க்கறேன்.”, என்று அவள் வரவைக் குறித்து கேட்டுக்கொண்டவர், போனை வைத்தார்.
“என்னங்க, மதுவா பேசினது? என்ன சொன்னா?”, ஆர்வத்தை அடக்கி சாதாரணமாக விசாரிப்பதுபோல கேட்டார் சங்கரி.
“ம்ம்… இங்க வராளாம் நாளன்னிக்கு. குரலே சரியில்லை. என்ன அந்த பொண்ணுக்குன்னு தெரியலை. ஒரு வாரம் பாட்டி வீட்ல தங்கிக்கறேன்னு சொல்லுச்சு. இந்த தனம்மா அந்த பிள்ளைங்க இரண்டுத்துக்கும் வீட்டை எழுதி வெச்சிருக்கலாம். நான் சொல்லி கூட, இல்லை அவங்க கல்யாணம் செய்யலைன்னா இடிச்சிடுங்கன்னு ஒரே பிடியா நின்னாங்க. “
“உக்கார ஒரு நாற்காலி கூட இல்லையே. எப்படி தங்குவா?”
“ம்ம்.. நீ ஸ்டோரேஜ்க்கு சுப்புவோட போய் ஒரு வண்டியில கட்டில் மெத்தை சோஃபா எடுத்துட்டு போய் போட்டுடு நாளைக்கு. ஸ்டோரேஜ்லயே நான் வண்டி, ஆள் ஏற்பாடு செய்ய சொல்லிடறேன்.”, என்று அடுத்து ஆக வேண்டியதைக் கூறினார்.
மறுனாள் ஸ்டோரேஜ் சென்று கையெழுத்திட்டு மதுவின் அறையிலிருந்த கட்டில், நாற்காலி, ஹாலில் சோஃபா , மேசை என்று எடுத்து கொடுத்துவிட்டு வண்டியில் ஏற்றும் போது சுப்புவுடன் பேசிக்கொண்டிருந்தார்.
“என்ன சுப்பு? மது வரதுல சந்தோஷமா? “
“ஆமாங்கம்மா. என்ன ஆதி தம்பியும் மதுமாவும் கல்யாணம் செய்து குடும்பமா வந்திருந்தாங்கன்னா ரொம்ப சந்தோஷமா இருந்திருக்கும். ஊருக்கு போனதும் ஒரு நாள் மதுமா பேசினாங்க. அதுக்கப்பறம் பேசவேயில்லை.”, என்றார் சுப்பு.
“ஹ்ம்ம்… பாட்டிக்கு முப்பது அன்னிக்குத்தான் என்னவோ நடந்திருக்கு சுப்பு. அதுக்கு முந்தின நாள் வரைக்கும் நல்லாத்தான் இருந்தாங்க. ஆனா பூஜை அன்னிக்கு முகம் கொடுத்து பேசிக்கவேயில்லை இரண்டு பேரும். ஆதி கிளம்பும் போதும் மது இருக்கலை.”
“அன்னிக்கு, கொல்லையில தீ மூட்டி பேசிகிட்டு இருந்தாங்க. அப்பறம் மதுமா வந்துடுச்சு. ஆதி தம்பி மட்டும் ரொம்ப நேரம் இருந்தாரு.”
“மதுவும் அன்னிக்கு சரியாவே பேசலை, முகமும் எப்படியோ இருந்துச்சு. சாயந்திரம் நாலு மணிக்கு கிளம்பறேன் ஆன்ட்டி, கார் வந்துடுச்சுன்னு ஆயிரம் தாங்க்ஸ் சொல்லிட்டு போயிட்டா. என்னதான் ஆச்சோ, யார்கிட்டயாச்சம் சொன்னாத்தானே. ”, என்று அவர் பங்குக்கு சங்கரியும் வருத்தப்பட்டார்.
மது வந்து இறங்கவும், சுப்பு ஓடி வந்து கதவைத் திறந்தார்.
“சுப்பு மாமா. நல்லாயிருக்கீங்களா?”, என்று விசாரித்தபடியே காருக்கான வாடகையை கொடுத்துவிட்டு திரும்பினாள்.
அதற்குள் டிக்கியிலிருந்த அவளது சிறிய பெட்டியை எடுத்து வைத்தவர் அப்போதுதான் மதுவைப் பார்த்தார்.
“ஐயோ…மதுமா…என்ன இப்படி இளைச்சு போயிட்டீங்க? என்னாச்சு உடம்புக்கு?”, என்றார் திகைப்பாக.
“ஒண்ணுமில்லை..பதறாதீங்க மாமா.”, புன்னகையுடன் அவர் கைபிடித்து உள்ளே சென்றாள்.
“இப்படி கழுத்தெலும்பெல்லாம் தூக்கி, கன்னம் ஒட்டி, அடையாளமே தெரியலை. என்னாச்சுமா?”, அக்கறையாய் கேட்கும் அவரைப் பார்க்க கண்ணில் நீர் கோர்த்தது மதுவிற்கு.
“எங்கம்மா…இப்பதான் டயட்ல இருக்கியா? ஒல்லியாகி இருக்க, கூட எக்சர்சைஸ் செய் வெரி குட்ன்னு சொல்றாங்க. நீங்க வர்ணிச்சதைப் பார்த்தா…”, என்று மது இழுக்கவும்,
“மதுமா விளையாடாதீங்க. சாப்பிடறீங்களா இல்லையா?உங்கம்மா சொல்றது ஒரு பேச்சா? ஒரு வாரம் பத்தாது, இன்னும் ஒரு வாரம் இருங்க. நான் நல்லா சமைச்சு போட்டு உங்க உடம்பை தேத்தறேன்.”, உரிமையாக சுப்பு கோபித்துக்கொண்டது மனதுக்கு சற்று இதமாக இருந்தது மதுவிற்கு.
அவரை ஒரு வழியாக அனுப்பிவிட்டு கட்டிலில் படுத்தாள்.
அவள் தந்தையும் கேட்டார் ஓரிரு முறை. “என்னம்மா ஏன் டல்லா இருக்க? “, என்று. வேலை என்று சமாளித்து விட்டாள். அன்றொரு நாள் தீடிரென்று, “மதுமா யாரையாவது விரும்பறயா? இஷடம்னா சொல்லுமா நான் பேசறேன் கல்யாணத்துக்கு.” என்றார்.
அதற்கும் இல்லை என்று ஒரேடியாக சாதித்துவிட்டாள். ஓரிருமுறை அவர் சுற்றி வளைத்துக் கேட்கவும், “ நாந்தான் கல்யாணம் செய்யப்போறதில்லைன்னு சொல்லிட்டேனேப்பா? அப்பறம் எதுக்கு சும்மா இதையே கேக்கறீங்க? ஒரு மண்ணாங்கட்டியும் வேண்டாம் எனக்கு. இப்படியே விடுங்க. அது போதும்.”, என்று வள்ளென்று விழுந்தபின் அதைப் பற்றி பேசவில்லை. அவர் கடமை முடிந்தது என்று பிசினஸ், ட்ரிப் என்று கிளம்பிவிட்டார்.
அவராவது கவனித்துக் கேட்டார். அம்மாவிற்கு அது கூட தெரியவில்லை. அதிசயமாக அவள் காலையில் சாப்பிடுவதாக பேர் பண்ணிக்கொண்டு இருக்கையில், ஒரு நாள் வந்து அமர்ந்தார் பரிமளா. அவர் வழக்கமாக அருந்தும் ப்ரோட்டீன் ஷேக் வந்தது. அருந்தியவர்,
“மது, டயட் செய்யரீயா? இப்பதான் கன்னம் கம்மியாகி சீக் போன் தெரியுது. குட். ஆனா முகம் டல்லடிக்குது பாரு. ஸ்பா, ஃபேசியல் செய், அப்பதான் பளிச்சுன்னு இருக்கும். கூடவே எக்ஸசர்சைஸ் செய், உடம்பு குறையும்போது டோன் செய்யணும். “, என்று பேச,
“இல்லைமா. நான் இப்ப கொஞ்சம் பிசி. நான் பார்த்துக்கறேன்.”, என்று விட்டாள்.
பெற்றவர்கள் கடமை முடிந்தது என்று நினைத்தவள் முகத்தில் ஒரு வறண்ட புன்னகை ஓடியது.
எழுந்து வீட்டை சுற்றி வந்தவள், இப்படி எல்லாம் காலியாக இருந்ததைப் பார்த்து வலித்தது. என் வாழ்க்கைமாதிரி நோனா வீடும் காலியா இருக்கு என்று நினைத்தவளின் மனமோ, ‘எங்க காலியா இருக்கு மனசு பூரா ஆதிதான இருக்கான்?’, என்று குத்திக்காட்டியது.
சோஃபாவில் சென்று அமர்ந்தவள் காலை வேளைகளில் அவனுடன் வாக்கிங் செல்ல காத்திருந்த இனிமையான பொழுதுகள் நினைவுக்கு வந்தது. மறுக்காமல் அவற்றை அனுபவித்தாள். மதியம் சுப்புவின் கவனிப்பில் உண்டவள், “நான் ஊட்டி வரை போயிட்டு வரேன் சுப்பு மாமா. “, என்றாள்.
“எப்படிமா போகப் போற?”
“மணி அண்ணங்கிட்ட சொல்லி ஒரு கார் அனுப்ப சொல்லிருக்கேன். வந்துடும் மாமா. நான் இருக்க வரைக்கு வெச்சிருக்கேன்னு சொல்லிட்டேன். பே பண்ணிக்கலாம்.”, என்றதும் சரிமா பத்திரம் என்று தலையாட்டி சென்று விட்டார்.
ஊட்டி ஏரியைப் பார்த்தபடியே ஆதியுடன் படகில் சென்ற நினைவுகளில் மூழ்கியிருந்தாள்.
‘எதுக்கு இப்படி பைத்தியம் மாதிரி இங்க வந்து உட்கார்ந்திருக்க? இல்லை, வேண்டாம்னு முடிவு செய்த அப்பறம் அதை விட்டு வெளிய வரதை விட்டுட்டு இப்படியே கற்பனையில இருக்கப் போறியா? ஆதி என்ன நீ இல்லைன்னதும் இப்படித்தான் உருகிக் கிடக்கறானா? அவன் வாழ்க்கையைப் பார்த்துகிட்டு போகலை? இதுல உன்கிட்டருந்து பழகிக்கிட்ட பர்ட் வாட்சிங்கும் செய்யறான். நீதான் இப்படி தேங்கியிருக்க. ‘, என்று அறிவு சரமாறியாக கேள்வி கேட்டது.
‘என்ன செய்தாலும் அவனை வெளியே தள்ள முடியாமத்தான தவிக்கறேன். எனக்கென்ன வேண்டுதலா, இப்படி கரைஞ்சு உருக? ‘, மனம் தர்க்கம் செய்தது.
‘அப்ப போய் உன் லவ்வ சொல்லு அவங்கிட்ட, கல்யாணம் செய்துக்க. அந்த கட்ஸ் இருக்கா?’, என்ற கேள்விக்கு பதிலில்லை.
‘வேணாம் அந்த ரிஸ்கே வேணாம். ஊர் உலகத்துல லவ் ஃபெலியர் கேஸ் எல்லாம் வாழலையா என்ன? கொஞ்சம் டைம் எடுக்குது. போக போக பழகிடும்.’, தன்னை தானே தேற்றிக்கொண்டு கிளம்பினாள்.
இருட்ட ஆரம்பிக்கவும், திரும்பி வர அன்று ஆதியுடன் இரவில் இதே வழியில் பைக்கில் வந்த இனிய நினைவுகள் தானே வந்து சூழ்ந்துகொண்டது.
இப்படி சோகமாய் இருப்பது பிடிக்காமல், முயன்று உற்சாகமாய் காரை பார்க் செய்ய, சுப்பு அவள் வரவுக்காக பார்த்திருந்தது போல உடனே கதவைத் திறந்தார்.
அவருடன் இயல்பாக பேசி, ஃபரெஷ் செய்து உணவருந்த வந்தவள் அவளது விருப்ப ஆப்பம், குருமா, சப்பாத்தி என்று இருப்பதைக் கண்டு புன்னகையுடன் அமர்ந்தாள்.
அவருடன் வம்பு வளர்த்தபடி அவர் திருப்திக்காக சாப்பிட்டாலும் நிறைவாகவே உண்டாள்.
“மதுமா. நாளைக்கு கொஞ்சம் அவசரமா மேட்டுப்பாளையம் பக்கத்துல எங்க சித்தப்பாவை பார்த்துட்டு வரணும். ரொமப் உடம்புக்கு முடியாம இருக்காருன்னு தாக்கல் வந்தது. போயிட்டு வந்துடவா? காலைக்கும் மதியத்துக்கும் சமைச்சி வெச்சிட்டு போறேன். சாயந்திரம் வந்துடறேன்.”, சுப்பு கேட்கவும்,
அவர் கொஞ்சம் சங்கடமாய் இருப்பதாகப் பட , மது , “ஓ… சரி மாமா. நீங்க பார்த்துட்டு வாங்க. முடிஞ்சா சமையல் செய்ங்க. இல்லை நான் வெளிய கூட பார்த்துக்கறேன்.”
“அதெல்லாம் வேணாம் மதுமா. நான் செஞ்சு வெச்சிடறேன். ஒரு எட்டு எட்டரை பக்கம் கிளம்பறேன்.”,
“சரி. நான் சங்கரி ஆன்ட்டி கிட்ட பேசிட்டு தூங்க போறேன்.”, என்று விடை பெற்றாள்.
மறுனாள், அவள் ஆறு மணிக்கெல்லாம் குடையுடன் இயற்கையை அனுபவிக்க கிளம்பிவிட்டாள். சுப்புவை தனக்காக காத்திருக்க வேண்டாம் என்றும் அப்போதே விடை கொடுத்து பணமும் கொடுத்துவிட்டாள்.
ஆதியின் நினைவுகளுடனே அந்த சிறு தூரலில் சுற்றி முடித்து திரும்புகையிலேயே மணி ஒன்பதைத் தாண்டியிருந்தது. மெதுவே வீட்டை திறந்துகொண்டு உள்ளே வந்தவள் அதிர்ச்சியாய் நின்றாள்.
இருவருக்குமாக அவனே தட்டுகளை எடுத்து வந்து வைக்க, முகத்தை தூக்கி வைத்தபடியே சென்றவள் சில நிமிடங்களில் ஃப்ரெஷ் ஆகி வந்து அமர்ந்தாள். அதற்குள் மனம் அவனைக் கண்ட அதிர்ச்சியிலிருந்து மீண்டிருந்தது. இன்னும் ஃபிட்டாகி அழகாயிருந்தான். ‘நாந்தான் பஞ்சத்துல அடிபட்ட பரதேசி மாதிரி ஆகிட்டேன். சே.. ‘, என்று தன்னைத்தானே நொந்து கொண்டு வந்து அமர்ந்தாள்.
அமைதியாக பொங்கல், சட்னி சாம்பார் என்று வைத்ததும், ஒரு ஸ்பூனுடன் இருவரும் கைகளில் தட்டை ஏந்தி சோஃபாவில் சாய்ந்து அமர,
“அத்தை எப்படி இருக்காங்க?”, என்றாள். மெதுவாக பேச்சு பொதுவானவற்றைப் பற்றி சென்றது. ஒரு பக்கம் உள்ளம் குமுறிக்கொண்டிருந்தது. ‘பாவி சலனமே இல்லாம பொங்கலை ஒரு கட்டு கட்டறானே. ஒரு வாரம் அப்படி உருகினான். எல்லாம் நடிப்பா? ‘ என்று திட்டிக்கொண்டே கஷடப்பட்டு பொங்கலை உள்ளே தள்ளினாள்.
“நான் இங்க இருக்கேன்னு உனக்கு தெரியுமா? இல்லை நீ எதேச்சையாத்தான் வந்தியா?”, என்று மது தன்னுள் குடைந்துகொண்டிருந்த கேள்வியை இதற்கு மேல் பொறுக்க முடியாது என்று கேட்டாள்.
“ம்ம்.. நீ வந்திருக்கன்னு தெரிஞ்சுதான் வந்தேன். உன் கூட கொஞ்சம் பேச வேண்டியதிருக்கே..அதான்.”, அலட்டிக்கொள்ளாமல் ஆதி பதில் சொல்லவும், பற்றிக்கொண்டு வந்தது.
“எங்கிட்ட என்ன பேச இருக்கு? இந்த ஒரு மாசமா இருக்கேனா செத்தேனான்னு தெரியாது உனக்கு. என்ன திடீர்னு?”, மது பொரிய,
“ம்ம்… நீதான மது சொன்ன, ரொடீன் லைப் திரும்பியாச்சுன்னா இந்த ஈர்ப்பு மறைஞ்சுடும்னு? அதான் மறையுதா இல்லையான்னு பார்க்க ஒரு மாசம் டைம் கொடுத்தேன். உனக்கெப்படி? மறைஞ்சுதா?”, ஆதி அவளைப் பார்த்து கேட்க
‘இவன் என்ன கிண்டலடிக்கறானா?’, என்று நினைத்தவள், தோளைக் குலுக்கி, “ ரொட்டீன் எப்பவும் போலதான இருக்கு? உனக்கும் சரி எனக்கும் சரி. அப்ப நான் சொன்ன மாதிரிதான ஆச்சு?”, என்றாள்.
“ஓ…அப்பறம் எதுக்கு இப்படி பாதியா கரைஞ்சு போயிருக்க?” அவன் சாதாரண கேள்வியாகவே கேட்டதால் அதில் கோபபபடமுடியாமல்,
“அது…அது… வேலை. போடீக்குக்கு டிசைன் பண்ணதுல பிசி. அதான் ரிலாக்ஸ் செய்ய இங்க வந்தேன்.”, என்றாள் மது தோளை குலுக்கியபடி.
“ஓஹ்.. அப்ப நேத்து எங்க போன?”, தட்டை டீப்பாயில் வைத்து தண்ணீர் பாட்டிலை எடுத்தவாறே கேட்க,
“இதென்ன இத்தனை கேள்வி? ஊட்டிக்கு ரிலாக்ஸ் செய்ய வரவங்க எல்லாம் அங்கையும் போவாங்கதானே?”, எரிச்சல் வரவும் மது கேட்க,
“ஓஹ்.. அப்ப நாம் போன போட் ரைட் நினைச்சு நீ வருத்தப்படலை?”, கொஞ்சம் நக்கல் தொனிக்கவும்,
“லுக்… நான் ஏரிக்கு போனா உனக்கென்ன எரிமலைக்கு போனா உனக்கென்ன? எதுக்கு இத்தனை கேள்வி? உன்னை ஒண்ணும் நினைச்சு போகலை. போறுமா? ஜஸ்ட் ஒரு ட்ரைவ் போனேன். சும்மா கற்பனை செய்யாதே.”, தோளைக் குலுக்கி அலட்சியப்பார்வை பார்த்தாள் மது.
“அப்போ இதென்ன? முகமே இருண்டு, வாழ்க்கையில இருக்க அத்தனை சோகமும் எனக்குத்தாங்கற மாதிரி உட்கார்ந்திருக்க?”
அவன் காட்டிய வாட்ஸப் போட்டோவை அதிர்ந்துப் பார்த்தாள் மது?
“நீ நீ…என்னை ஃபாலோ செய்தியா? ஹௌ டேர் யூ?”, தட்டை மேஜையில் போட்டு எழுந்து நின்று முறைத்தாள் மது. ‘எதையாவது சொல்லி சமாளிடி..’என்று அலறியது அவள் மனம்.
அப்படியெல்லாம் சமாளித்தால் சரியென்று போகக்கூடியவனா ஆதி. ‘பேசுடி பேசு’, என்ற பாவனையில் அமர்ந்திருக்கிறான் என்று புரிந்தது மதுவிற்கு.
அவள் அறியாதது, இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது என்ற முடிவில் அல்லவா அவளை கார்னர் செய்ய வியூகம் அமைத்து வந்துள்ளான். ஆனால் ஆதியின் கான்ஃபிடென்ஸ் ஓவர் கான்ஃபிடென்ஸ் ஆகிடுமோ…