Advertisement

“ப்ரோ… அவ பர்த்டேதான் என் போனுக்கும் வெச்சிருக்கேன். முதல் போன் வாங்கினதுலர்ந்து எப்பவும் இதுதான் வைக்கற பழக்கம்”, கைகளை தூக்கினான்.

வேகமாக போனை ஆராய்ந்த சுதர்ஷன், “ரேகா எப்படி சண்டைபோடாம இருக்கா?”, என்று கேட்க, புன்னகைத்த வருண்,

“அவ கை-ரேகை வெச்சுதான் என் போன் திறப்பா. நம்பர் அவளுக்குத் தெரியாது. சொல்லிடாதீங்க”, என்றான்.

“நீயும் நானும்தான் கூப்பிட்டிருக்கோம்டா. கடைசியா ரேகாகிட்ட பேசியிருக்கா. வேற போன் எதுவும் வரலை. மெசேஜ் எதுவும் வித்தியாசமா இல்லை. நீ பாரு”, வருணும் வாங்கிப் பார்த்தான் ஆனால் எதுவும் தோன்றவில்லை.

வாட்ச்மேனை இருவருமாகப் பிடித்து உலுக்கியதில் ஒரு அரை மணி நேரம் பக்கம் இயற்கை அழைப்பு, தம் என்று சென்றதாக ஒப்புக்கொண்டான். அந்த நேரம் வெளியே சென்றாள் என்று வைத்துக்கொண்டால் இப்போது கிட்டதட்ட மூன்று மணி நேரமாக சஹானாவைக் காணவில்லை. நடந்துதான் சென்றிருக்க வேண்டும்.

“இவ வாக்கிங் போற நேரம் அந்த தண்டா குரூப், பங்கஜ், பாண்டி பிரத்ர்ஸ், இல்ல இராஜ வேல், அந்த மும்பை நாயிங்கன்னு யார் வேணா தூக்கியிருக்கலாமேடா” , சுதர்ஷன் தலையில் இரு பக்கமும் கையை அழுத்திப்பிடித்தான்.

“யாரு மும்பை நாயிங்க?”

“ம்ம்… உன் ப்ரெண்டு அங்க கடைசியா உரண்டை இழுத்துட்டு வந்தவங்க. ஒருத்தன் இங்க தேடி வரவும் தாடையை பேர்த்து அனுப்பி வெச்சேன்”, காஃபி சாப்பிட்டேன் என்பது போல சுதர்ஷன் சொல்லவும் வாயடைத்துப் போனான் வருண்.

“ஹ… அடிச்சீங்களா? இது எப்போ?”

“டேய்…”, சுதர்ஷன் பல்லைக் கடித்தான். “இப்ப போலீஸ் போகலாமா? எனக்கு பயமா இருக்கு. போனை வெச்சிட்டு போற டைப் கிடையாது சஹானா. இப்படி சொல்லாம போறவளும்…”, கிடையாது என்று சொல்லப்போனவன் நிறுத்தி மீண்டும் வருணைப் பார்த்தான். “வெறும் பர்ஸ்சும் போட்டிருந்த ட்ரெஸ்சோட போயிருக்கா”, என்று சந்தேகமாக இழுத்தான்.

வருண் யோசனையானான். “இருங்க சுதிர். நேத்து எதுவும் சண்டையாச்சா உங்களோட? எதுவும் ஹார்ஷா பேசினீங்களா?”

புருவம் சுருக்கிய சுதர்ஷன், “இல்லைடா.  அப்படியெல்லாம் எதுவும் இல்லையே.  நீயும் ரேகாவும் கிளம்பிப் போகவும் பாட்டி கூட பேசிட்டு இருந்தா. நான் கொஞ்சம் மெயில் பார்த்துட்டு என் ரூமுக்குப் போனேன்.  நேற்றைய காட்சி நினைவிலாட முயன்று கவனம் வைத்தவன், சாதாரணமா பேசிட்டு, டீ-ஷர்ட் மாத்திட்டு வந்தேன். படுக்க போறேன்னா. ம்ம் எதோ மாடலிங் பத்தி சொன்னா. காலையில நான் குளிச்சிட்டு கிளம்பி வர வரைக்கும் தூங்கிட்டுத்தான் இருந்தா” என்று சென்சார் செய்து சொன்னான்.

என்ன யோசித்தும் தான் எதுவும் தப்பாக பேசிவிடவில்லை என்பது சுதர்ஷனுக்கு உறுதியாகத் தெரிந்தது.

“நீங்க பேசலைன்னா, அப்ப அதுக்கு முன்னாடி நாமெல்லாம் பேசிட்டிருந்தோம். அப்பவும் அவ பெரிசா பேசலை இல்லையா? ரிசெப்ஷன் டேட் பேசும்போது கூட வேற ஏதோ யோசனையில இருந்தா”, நிகழ்வுகளை மீண்டும் மனதில் ஓட்டிக்கொண்டிருந்தான் வருண்.

அவன் எண்ணவோட்டத்தைப் படித்த சுதர்ஷனும், “ஹ்ம்ம்…கல்யாணம் பண்ணும்போதும் அவளுக்கு கொஞ்சம் பயம்தான். அதுதான் அவ பத்திரம் எழுதணும்னு சொன்னபோதும் தடுக்கலை. அப்பறமும் நல்லாதான் இருந்தா. அடாப்ட் ஆகறான்னுதாண்டா நினைச்சேன்”, நெற்றியை தேய்த்துக்கொண்டிருந்தான்.

“குரு…குரு எதுவும் சொன்னானா சுதிர்? இந்த ரேக்ஸ் வேற நந்தினி எகிறினதைப் பத்தி எதுவும் பேசினாளா? ஆனா..” வருண் இழுக்க,

“அதேதான்… சொன்னாந்தான். ஆனா, அவங்க சொன்னதையெல்லாம் இனிமேலும் சட்டை பண்ணுவான்னு நினைக்கற? பாட்டி நகை கேட்டபோதும் அவங்களைத்தான் கட்டிபிடிச்சிட்டு, உங்க மாதிரி ஒரு பாட்டியாவது எனக்கு இருந்திருக்கலாம்னு சொல்லிகிட்டு இருந்தா.”

“என்ன சொன்னான் குரு? அப்படியே சொல்லுங்க”, என்றான் வருண்.

ஒரு நொடி யோசித்த சுதர்ஷன், “ம்ம்.. ஒரு வருஷம் இரண்டு வருஷம் கழிச்சு கல்யாணத்துல விருப்பம் இல்லைன்னு ஓடிட்டா..ன்னு சொல்லி எதுக்கு இவ பேர்ல சொத்து எழுதணும்னு கேட்டான். அதுக்குத்தான் அம்மம்மா சரியா திருப்பிக்குடுத்தாங்க”, சஹானாவின் மனதில் என்ன ஓடிக்கொண்டிருக்கும் என்று யோசிக்க முனைந்தாலும் முடியவில்லை.

“வா கார் எடுத்துட்டு ஒரு ரவுண்டு போவோம். எங்கேயாவது விழுந்து வெச்சிருந்தா?”, என்று கிளம்பினான். உட்கார இருப்பு கொள்ளவில்லை.

வருண் சண்முகத்தை சாலை விபத்து எதுவும் நடந்திருக்கிறதா என்று விசாரித்து சொல்லச் சொல்லிவிட்டு வந்தான்.

“டேய்… கிரீஷ். சனாவைக் காணோம், கிட்டதட்ட மூணு மணி நேரமாச்சு. எனக்கு பயமாயிருக்கு”, என்ற சுதிர் இதுவரை அவனுக்குத் தெரிந்ததை சொல்லிக்கொண்டிருந்தான்.

“வாய்ப்பு கம்மி சுதிர். திமிங்கலத்தை தூக்கிட்டு வந்த போது எங்க மீன் ஒன்னை விட்டுட்டு வந்தோம். இப்போதைக்கு திமிங்கலத்தை தேடறதுலதான் அதுங்க கூட்டத்தோட கவனம் இருக்கு. எதுக்கும் நான் விசாரிச்சிட்டு சொல்றேன்.நீ சொல்றதை வெச்சுப் பார்த்தா பக்கத்துல எங்கயாவது போயிருக்காங்களான்னு முதல்ல பாரு”, என்ற பதிலில் முனகிக்கொண்டே எழுந்தான்.

சாலையில் வண்டியை  மெல்ல ஓட்டிக்கொண்டு வந்தவர்கள் ஊட்டி செல்லும் பிரதான சாலை வந்து சேர, எதிர் புறம் இருந்த டீ கடையில்  நிறுத்தி விசாரித்தார்கள். கடை முதலாளிக்குத் தெரியவில்லை ஆனால் டீ கிளாஸ் கழுவிக்கொண்டிருந்த அவரின் விடலை மகன்,  “ஆமாம் நான் பார்த்தேன். செம்மையா இருந்தாங்க. ஏதோ சீரியல் நடிகை ஷூட்டிங் வந்திருக்காங்களோன்னு நினைச்சேன். தனியா போயிட்டிருந்தாங்க. அந்தப்பக்கமா”, என்று மலை மேல் புறமாகக் கைகாட்டினான்.

அவன் கையில் ஒரு நூறு ரூபாய்த் தாளைத் திணித்தான் வருண். மூச்சு சற்று எளிதாக வருவதுபோலிருந்தது நண்பர்கள் இருவருக்கும்.

“பஸ் ஸ்டான்ட் பக்கமாதான் போயிருக்கணும். அங்க கேட்போம் சுதிர்”, என்று காருக்கு விரைந்தான் வருண்.

“கார் எடுத்துட்டு போகாம, பஸ்ல எதுக்குடா போவா? எங்க போவா? அயத்தானாவுக்கும் வரலைங்கறார் சாமிநாதன்”, குழப்பம், பயம் கலந்திருந்தது சுதர்ஷன் குரலில்.

“சஹியை நிஜமாவே லவ் பண்றீங்க சுதிர்”, என்று ஒரு விரிந்த புன்னகையை வருண் உதிர்க்க, கடுப்பாய் அவனைப் பார்த்தான் சுதிர்.

“ம்ம்… மலையில பெருசா பானர் கட்டி வைக்கறேன்”, சுதிர் அவனைக் காய்ந்துவிட்டு, “எங்கடா போயிருப்பா உன் ஃப்ரெண்டு? ஒரு வேளை குரு நந்தினிகிட்ட சண்டை போட போயிருப்பாளா?”, சட்டெனத் தோன்றிய எண்ணத்தில் திகைத்துக் கேட்டான்.

வண்டியை ஓட்டிக்கொண்டிருந்த வருண், “குரு பெண்டாட்டிக்காக பயப்படறீங்களா இல்லை சஹிக்காகவா?”, சிரித்தவன், “அப்படியிருந்தா அடுத்த நிமிஷம் குரு போன் செய்திருப்பான். நல்ல யோசனைதான் ஆனா அங்க போகலை…”, பேசிக்கொண்டிருந்தவன் சட்டென்று ஏதோ யோசனை தோன்ற வாக்கியத்தை முடிக்காமல் இழுத்தான்.

“என்னடா, வேற என்ன ஐடியா தோணுது?”, சுதிர் உந்தினான்.

மாலை மயங்க காரின் ஹெட்லைட்டுகளை எரியவிட்டவன், வெளியே பார்த்துக்கொண்டே, “இல்ல சுதிர், ரொம்ப டிஸ்டர்ப் ஆனா ஊட்டி தொட்டபெட்டாக்கு கொஞ்சம் முன்னாடி ஒரு உச்சிப் பாறை ஒன்னு இருக்கு. அங்க போய் உட்கார்ந்துக்குவா…ஆனா இருட்டுல….”

“என்னது உச்சிப் பாறையா? போ போ அங்கேயும் போய் பார்த்துடுவோம். எதுக்குடா இருக்க எடத்தையெல்லாம் விட்டுட்டு பாறை புண்ணாக்குன்னு யோசிக்கறீங்க?”, புலம்பலாய் வந்தது சுதிரின் குரல்.

வேகத்தைக் கூட்டிய வருண், “சின்ன வயசுலர்ந்து அந்த பழக்கம். சில நேரம் அங்க போனா எல்லாரையும் விட தான் மேல, பெஸ்ட்டா உணர்றதா சொல்லுவா. சில நேரம் இந்த மலை, பாறையெல்லாம் எத்தனை மனுஷங்க சோகம் சந்தோஷம் எல்லாம் பார்த்துட்டு சைலன்ட் விட்னெசா இருக்குடா. நம்ம சோகமெல்லாம் இதுங்களுக்கு ஜுஜுபில்லன்னு தத்துவம் பேசுவா”, வருண் பேசப்பேச ஒரு பதின்வயதுப் பெண்ணின் தடுமாறும் மன நிலைகளை உணர்ந்தான் சுதர்ஷன்.

மேலும் பேசும் முன் ரேகா அழைத்திருந்தாள், “இல்லை ரேக்ஸ், இன்னும் எதுவும் தெரியலை.”, அழைப்பை ஸ்பீக்கரில் போட்டு பேசிக்கொண்டிருந்தான். இரு கைகளுமே வண்டியை கையாள்வதில் வேலையாக இருந்தது.

“வருண்…எதுக்கும் உங்க உச்சி  பாறைக்கு ஒரு எட்டு போய் பாருங்களேன்? உங்களுக்கும் உங்க பெஸ்டிக்கும் கிறுக்கு பிடிச்சா அங்கதான போய் உட்கார்ந்துக்குவீங்க?”, ரேகா சொன்னதில் சுதிருக்குமே கவலை மறைந்து சற்று புன்னகை பூத்தது.

சிரித்த வருண், “கொழுப்பு ரேக்ஸ் உனக்கு. பட் எனக்கும் இப்பதான் தோணுச்சு. அங்கதான் போயிட்டிருக்கோம்”, என்றான்.

“பார்த்து பத்திரமா ஏறுங்க இரண்டு பேரும். இறங்கினதும் எனக்கு ஒரு மெசேஜ் போடுங்க. போன மகராசி கையில் போனை எடுத்துட்டு போயிருக்கலாம்!”, அங்கலாய்த்தபடியே அழைப்பை துண்டித்தாள்.

“நானும் ரேகாவும் உங்ககிட்ட வந்து சிக்கிட்டோம்டா. கிடைக்கட்டும் அவ. அப்பறம் பேசிக்கறேன். இருட்ட ஆரம்பிச்சிடுச்சு. டார்ச் வெச்சிட்டு இருக்காளான்னுகூட தெரியலை”, சுதிர் இத்தனை புலம்பி வருண் பார்த்ததில்லை. ஏனோ ஒரு வகையில் ஆறுதலாய் இருந்தது. அவன் சஹியை சுதிர் பார்த்துக்கொள்வான் என்ற நம்பிக்கை வலுப்பெற்றது. அதே நேரம் சஹானாவின் மேல் கோவமும் வந்தது. அருமையான ஒரு துணை கிடைத்திருக்க, இந்தப் பெண் மனதில் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை.

கையில் டார்ச்சுடன் சாலையிலிருந்து பிரிந்த ஒரு மண் பாதையில் வருண் முன்னே செல்ல, சுதிர் பின் தொடர்ந்தான். ‘சனா அங்க நல்லபடியா இருக்கணும் மருதமலை முருகா. இன்னும் என்னை அலையவிடாதே. அவளோட 108 முறை உன் கோவிலை சுத்தி வரேன்”, என்று வேண்டுதலை வைத்தபடியே நடந்தான்.

வருண் காட்டிய பாதையில் கவனமாக ஏறி சற்று வளைந்து திரும்ப, எதிரே இருந்த பாறையில் கோட்டோவியமாகத் தெரிந்தாள் சஹானா. திரும்பி இறங்கிக்கொண்டிருந்தாள். இங்கிருந்து பார்த்தவனுக்குத்தான் நெஞ்சு தொண்டைக்குழிக்கு வந்திருந்தது. சற்று தப்பினாலும் சர்வ நிச்சயமாக எலும்புகளை பொறுக்கித்தான் எடுக்க வேண்டும்.

அவனையும் அறியாமல் சத்தம் எழுப்பியிருப்பான் போல. “ஷ்ஷ்…இப்ப அவ கவனம் கலைக்க வேணாம் சுதிர். கையில் பென் டார்ச் வெச்சிருக்கா. குட். வரட்டும்”, என்று கிசுகிசுத்தான்.

அவளைக் கண்டுவிட்ட மகிழ்வு, பத்திரமாக வரவேண்டுமே என்ற பயத்தில் உறைந்திருந்தது.

“ரேகா சொன்ன மாதிரி நீயும் உன் ஃப்ரெண்டும் சரியான கிறுக்குங்கடா… மெண்டல்! கோச்சிட்டு போய் உட்கார இடம் பார்த்து வெச்சிருக்காங்க பாரு… லூசுங்க”, சுதிரின் அடக்கப்பட்ட குரலில் வந்த அர்ச்சனையில் சிரிப்பை அடக்கப் பாடுபட்டான் வருண்.

சஹானா சமதளம் தொடவும், “சஹி…. இங்க”, என்று குரல் கொடுத்தான் வருண்.

அவனைக் கண்டு கொண்டவள் சற்றே வேகமாக நடந்து வர, வருணைத் தாண்டி அவள் முன் வந்து நின்றான் சுதர்ஷன்.

“இன்னொரு முறை இங்க தனியா வந்தன்னு தெரிஞ்சுது, காலை உடைச்சு வீட்ல படுக்க வெச்சிடுவேன். புரியுதா?” கர்ஜித்தபடியே அவள் தோள்கள் இரண்டையும் பிடித்து ஒரு உலுக்கு உலுக்கினான் சுதர்ஷன்.

“ஐயையோ…. சிங்கத்தை சீண்டறானே… இப்படி சொன்னா வேணும்னே வருவாளே!” என்று வருண் மனதுக்குள் அலறினான்.

Advertisement