Advertisement

அத்தியாயம் – 22

எலக்ஷன் நாள் சாதாரணமாகவே விடிந்தது. வழமை தவறாது ஏழு மணிக்குக் கிளம்பிவிட்டான் சுதர்ஷன். அதுவரையில் படுக்கையில் கண் மூடிப் படுத்திருந்த சஹானா மெல்ல விழித்தாள். சுதர்ஷனோடு பேசும் தைரியம் இல்லை. நேற்று இரவு நடந்ததே மனதில் ஓடியது.

“முட்டாள் சஹி… அரைவேக்காடு சஹி… அறிவே இல்லை”, மனம் மீண்டும் மீண்டும் சாடியது. “மனைவி மாதிரி பார்த்துக்கலை அவன். எந்த பெண்ணா இருந்தாலும் அதே கேர் எடுத்திருப்பான். பாட்டி வளர்ப்பு அப்படி! லூசு, நீதான் தப்பு தப்பா புரிஞ்சிகிட்டு இருக்க!”

“ஆஹ்ஹ்…”, என்று முனகியவள் புரண்டு படுத்து தலையணையுள் முகத்தைப் புதைத்துக்கொண்டாள். ஆனாலும் காட்சி விரிந்தது.

திட்டமிட்டு எதுவும் நடக்கவில்லை… ஆனால் நடந்ததை இவள் நீட்டித்ததுதான் தவறு. குளித்துவிட்டு ஒரு துண்டை லேசாக சுற்றியபடி குளியலறையிலிருந்து வெளியே வந்தாள் சஹானா. சோஃபாவில் அமர்ந்திருந்த சுதர்ஷனை எதிர்பார்க்கவில்லை. அதுவரை எதார்த்த நிகழ்வுதான்.

“ஓஹ்… பாத்ரூம் யூஸ் பண்ண வெயிட் பண்ணிட்டு இருந்தியா தர்ஷ்? கதவை தட்டியிருக்கலாமே?”,

எழிலோவியமாக நின்றிருந்தாள் சஹானா. அந்த டவல் வேறு மைக்ரோ-மினிஸ்கர்ட் அளவாவது மூடிவிட திணறிக்கொண்டிருந்தது. மேல் புற டவலை அவள் ஒரு கை பிடித்திருக்க, அடுத்த அடி எடுத்து வைக்கும்போது, துண்டின் இரு முனைகளும் சேராது இருக்க வாய்ப்பு இருந்தது.

“ஹ்ம்ம்… இல்லை, டீ-ஷர்ட் மாத்த வந்தேன், நடுல மெசேஜ் வரவும் அப்படியே உட்கார்ந்தேன். இதோ எடுத்துட்டு போறேன்”, என்று எழுந்து உடை இருக்கும் அந்த மரவேலைப்பாடு கொண்ட சிறிய அறைக்குள் சென்றான்.

அதுவரையில் கூட தப்பு சொல்ல முடியாத ஒரு எதார்த்த நிகழ்வு என சொல்லலாம். அப்போதுதான் சஹி தோளில் சைத்தான் ஏறிக்கொண்டது. ‘நிஜமாகவே என் மேல ஒரு இது இருக்கா இவனுக்கு? பார்த்துடலாம்’, என்று அவனைப் பின் தொடர்ந்து அந்த சிறிய அறைக்குள் சென்றாள்.

லாவகமாக முதுகுபுறம் சற்றே துண்டினை சரிய விட்டு அவளது புறம் இருக்கும் ட்ராயரை திறந்து பார்க்கும் சாக்கில் ஒரு கால் சற்றே முன் புறம் துருத்தி, மெல்ல அவன் புறம் கழுத்தைத் திருப்பிப் பார்த்தாள். சஹானாவிற்கு அட்சர சுத்தமாகத் தெரியும் அவள் நிற்கும் விதம் கவர்ச்சியானது. கண்டிப்பாக ஆளை சுண்டியிழுக்கும்.

காரியமாக அவன் டீ-ஷர்ட்டை தேடிக்கொண்டிருந்தான். வேண்டுமென்றே, “நான் இருக்கறது டிஸ்டர்ப் பண்ணுதா தர்ஷ்? ஒரு  நிமிஷம் தா, ட்ரெஸ் போட்டுக்கறேன்”, என்றாள் காந்தக்குரலில்.

“ஹம்? சேச்சே அதெல்லாம் இல்லை. மாலிபூ பீச்சுல அரை மணி நேரம் இருந்தா பழகிடும்”, அவளை ஒரு அரைகுறை பார்வை பார்த்தவன் இன்னும் தலையை ஹாங்கர்களின் உள்ளே விட்டு தேடிக்கொண்டிருந்தான்.

“ம்ஹூம்… அமெரிக்கா ரிட்டர்ன் பேசுது! கரெக்ட், பிக்கினி ஸ்விம் சூட் விட என் டவல் கொஞ்சம் அதிகமாவே கவர் பண்ணுதுதான்”, பல்ப் வாங்கிய வலியில் நக்கலடித்தாள்.

இறுதியாக அவன் தேடியது கிடைத்துவிட்டது போல, ஒரு கருப்பு டீ-ஷர்ட்டை உருவியவன், “உனக்கு கஷ்டமா இருக்கப்போது. நீ ஃப்ரீயா மாத்திக்கோ. நான்.. “, என்றவனை இடைமறித்து,

“நான் மாடல் சுதர்ஷன். வெக்கமெல்லாம் போயாச்சு. உயிருள்ள ஒரு பொம்மை மாதிரி நிக்கவெச்சு, தோள்பட்டை சரிவு சரியில்லை. இன்னும் கொஞ்சம் ஸ்ட்ரெயிட்டா இருந்தா, என் ட்ரெஸ் அழகா உட்காரும்னு பேசிகிட்டு இருப்பாங்க. இடுப்பு வளையாம கொஞ்சம் நேரா இருந்தா பெட்டரா இருக்கும். ஹவர்-க்ளாஸ் ஃபிகர் இருந்தா என் ட்ரெஸ்சோட ஷேப் எடுத்துக் குடுக்கும்னு, உடம்புக்கு ஏத்த துணியை தைக்காம, இவன் இஷ்டத்துக்கு ஒன்னை தைச்சிட்டு அதுக்கு ஒரு பாடி ஷேப் தேடுவானுங்க. ஆனா நாம முகத்துல எதையும் காட்டாம கை தூக்கி, காலை துருத்தி சொல்றதை செய்யணும்”, தன்னை மீறிப் பொங்கியவளை ஒரு நொடி பாவமாகப் பார்த்தான்.

“அந்த டவலுக்கு பதிலா சாக்கு பையை சுத்தியிருந்தாலும் நீ கனகச்சிதமான அழகுதான் சனா. டவுட்டே இல்லை”, என்று ஒரு புன்னகையுடன் வெளியேறினான்.

மாடலாய் நின்ற பொழுது அவள் அங்கங்களை மெச்சியும் குறை கூறியும் பேசியபோதெல்லாம் எழாத ஒரு கழிவிரக்கம், அவன் பாவமாகப் பார்த்த ஒரு பார்வையிலும், நீ அழகுதான் ஆனால் அது என்னை பாதிக்கவில்லை என்பதாக சென்றதும் பொங்கியது.

“தெரியுதா இப்போ? விளங்குதா உன் மரமண்டைக்கு? அவனுக்கு உன் மேல் எந்த எண்ணமும் இல்லை. அவனை நீ கொஞ்சம் கூட ஈர்க்கலை. நீ மட்டும்தான் அவங்கிட்ட மனசை பறிகொடுத்துட்ட.  அவன் அதை சீண்டக்கூட இல்லை. ஐயோ பாவம்னு உன் மேல இரக்கம் மட்டும்தான்.”, என்று உள் மனம் உரக்கக் கத்தியது.

“ஒரு அல்ப ராம்ப் வாக்குக்காக உன்னையே அடகு வெச்சியே அது தெரிஞ்ச அப்பறமும் கூட அவன் எப்படி உன்னை மனைவியா பார்ப்பான்? நீ நடிக்கற நாடகத்துக்கு தேவையான செட் ப்ராபர்ட்டிதான் காரும், இந்த ட்ரெஸ் எல்லாமும். கொஞ்சமாவது மான ரோஷமுள்ள பொண்ணு இந்த மாதிரி டவலோட நின்னு அவங்கிட்ட பேசியிருப்பாளா? இதுல வெக்கம் போச்சு. நான் நிக்க நாலு பேர் என்னை வர்ணிப்பாங்கன்னு வேற பேசற. அப்பறம் எப்படி உன் மேல ஃபீலிங்க்ஸ் வரும்? ச்சீன்னு தான் தோணும். அதை முகத்துல காட்ட முடியாம ஓடிட்டான்”, மேலும் மேலும் தன்னைத்தானே வார்த்தையால் குத்திக் கிழித்துக்கொண்டாள்.

நெடு நேரம் வரையிலும் சுதர்ஷன் அறைக்கு திரும்பவில்லை. எப்போது வந்தானோ, இல்லை வரவேயில்லையோ. காலையில் குளியலறையில் தண்ணீர் விழும் சத்தம் கேட்டு முழித்தாள். டவலோடு வருகிறானா என்று அரைக்கண்ணில் பார்த்திருந்தாள். கெண்டைக்கால் வரை மூடியிருந்த பாத்ரோப் அணிந்து வந்து கடுப்பேற்றினான். கண்களை இறுக மூடிக்கொண்டவள், அவன் உடை அணிந்து, சென்ட்டை அடித்துக்கொண்டு வெளியேறும் வரை புலன்கள் அனைத்தையும் பொத்தி வைத்திருந்தாள்.

தேயிலை உற்பத்தியாளர்கள் சங்கத் தேர்தல் சிறப்பாகவே நடந்து முடிந்தது. பாண்டி பிரதர்ஸ் சார்பாக அவர்களின் மேலாளர் வந்திருந்தார். எல்லோருக்குமே அவர்கள் கஞ்சா பயிரிட்டதும் தற்போது வகையாக சிக்கியிருப்பதும் தெரிய வந்திருந்தது. அவர்கள் கோஷ்டி ஆட்களே கூட சற்று விலகியே இருந்தனர். தேர்தல் ஒரு சம்பிரதாயமாக நடந்து முடிய, அடுத்த ஒரு மணி நேரத்தில் வருண் அனேக வாக்குகளைப் பெற்று தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தான். ரேகாவும் மீனாட்சியும் வந்திருக்க, வருண் பொறுப்பேற்க வேண்டிய சம்பிரதாயங்களைப் பார்த்துக்கொண்டிருந்தான், உடன் சுதர்ஷன்.

கிடைத்த சில நிமிடங்களில், சுதர்ஷன் ரேகாவிடம், “எங்க சனா? ஜெயிச்சாச்சுன்னு சொல்ல போன் பண்ணா ரிங் போகுது, எடுக்கலை”, எனவும்,

“ஓஹ்…எங்கிட்ட பேசினாளே சுதிர், வின் பண்ணியாச்சான்னு கேட்டுட்டு, அவனை இப்ப தொந்தரவு செய்யலை, நீயே என் வாழ்த்தை சொல்லிடு. நான் அப்பறம் வரேன்னு சொன்னா. ஒரு வேளை ட்ரைவ் பண்ணிட்டு வராளோ?”, என்றாள்.

கார் பழகவேண்டும் என்று அம்மம்மா காரை எடுத்து ஓட்டினாள் நேற்று. ஒரு வேளை ட்ரைவர் வேண்டாம் என்று வருகிறாளோ என்னவோ என்று சமாதானமாக வருணோடு சென்று சேர்ந்துகொண்டான். அடுத்த கட்ட கமிட்டீ, மெம்பர்கள், மீட்டிங் என்று பார்க்க வேண்டியது இருந்தது.

நாலு மணி போலத்தான் சற்றே ஓய, சஹானா வந்திருப்பான் என்று ரேகாவை தேடிக்கொண்டு வந்தார்கள் இருவரும்.

“அத்தை கிளம்பிட்டாங்க”, என்ற தகவலை அளித்த ரேகாவிடம், “சஹி எங்க? பார்க்கவே இல்லை”, என்றான் வருண்.

“ம்ம்..வருவான்னுதான் நினைச்சேன். ஆனா வரலையே?”, என்று தோள் குலுக்கினாள் ரேகா.

அதிசயமாகப் பார்த்த சுதர்ஷன், தன் கைப்பேசியைப் பார்க்க ஒரு போனும் வரவில்லை. இவன் அழைக்க, மீண்டும் ரிங் அடித்து ஓய்ந்ததுதான் மிச்சம். கையோடு முத்தண்ணாவிற்கு அடித்தான்.

“மேலதான் இருக்காங்கபோல தம்பி. மதியம் சாப்பாடு பாட்டிகூட பன்னெண்டு மணிக்கே சாப்பிட்டாங்க. அப்பறம் மாடிக்கு போனாங்க. வந்த மாதிரி தெரியலையே!”, என்றார்.

“செம்பருத்தியை அனுப்பி பாருங்க. போன் ரிங் போகுது எடுக்கலை. பார்த்துட்டு எனக்கு கூப்பிடுங்க”, என்று வைத்தான்.

“தூங்கியிருப்பாளா? ஆனா போன் அடிக்கறது கூடவா தெரியாம இருக்கும்?”, ரேகாவின் கேள்விக்கு பதிலில்லை. மீண்டும் வருண் அழைத்த அழைப்பும் எடுக்காமலேயே போனது.

அடுத்த சில நிமிடங்களில் முத்தண்ணா அழைத்தார். “தம்பி போன் ரூம்லதான் இருக்கு. ஆனா மேடத்தை காணலைங்கறா செம்பருத்தி”

கைப்பேசியை செம்பருத்தியிடம் தரச்சொன்ன சுதர்ஷன், “மேல எல்லா ரூமும் நல்லா பார்த்தியா செம்பருத்தி?”

“பார்த்தேன் ஐயா. அக்கா இல்லை. முத்தண்ணன் வாட்ச்மேனைக் கேட்க போயிருக்கார். பாட்டிகிட்ட கேட்கவா?”

“சாதாரணமா கேளு. அவங்க கவலைப் படப்போறாங்க”

“பாட்டி… அக்கா எதுவும் வெளிய போறதா சொன்னாங்களா? “, அவள் கேட்பது இங்கே கேட்டது. கமலம் பதில் சொல்வது தெளிவாகக் கேட்கவில்லை

“இல்லை பாட்டி, காஃபி எதுவும் வேணுமான்னு கேட்கத்தான் கேட்டேன். சரி  நான் மேல போகலை. அவங்களே வரட்டும்”, என்ற செம்பருத்தி, போனில்,

“பாட்டிகிட்ட, நேத்து தூக்கம் சரியில்லை. தூங்கப் போறேன் பாட்டின்னு சொன்னாங்களாம். ஆனா ரூம்ல இல்லீங்களே! காரு இரண்டுமே இங்கதான் இருக்கு.”, சற்று குழப்பமாக வந்தது செம்பருத்தியின் குரல்.

அடுத்த சில நொடிகளில், சுதர்ஷன் வீட்டை நோக்கிக் கிளம்பியிருந்தான். என்னவோ ஒரு பதட்டம். அவர்கள் அறையை அலசினான். அவளது பர்ஸ் போட்டு வைக்கும் ஒரு சிறிய தோள்பை மட்டும் காணவில்லை. மற்ற படி மேக்கப் சாமான் முதற்கொண்டு எல்லாம் இருந்தது. போன் மெத்தையின் மேல் இருந்ததாக செம்பருத்தி கூறினாள், வாட்ச்-மேன் எதுவும் பார்க்கவில்லை. எப்போது சென்றாள் என்பது தெரியவில்லை.

அவளது போன் லாக்கானதில் யாரும் அழைத்திருந்தார்களா என்பதை பார்க்கமுடியவில்லை. வருண் ரேகாவை வீட்டில் விட்டுவிட்டு வந்திருந்தான். முகம் சுண்டிப்போய் சஹானாவின் போனை இறுகப்பிடித்துக்கொண்டு வந்த சுதர்ஷனைத்தான் பார்த்தான் வருண்.

இருவருமாக ஆஃபீஸ் ரூம் சென்று அமர, “என்னால யோசிக்க முடியலை வருண். எங்க போயிருப்பா? இல்லை யாரும் மிரட்டி வெளிய வரவெச்சு தூக்கியிருப்பாங்களா?”, மனதில் சுழலும் கேள்விகளைக் கேட்டான் சுதர்ஷன். வீட்டையும் அருகில் உள்ள தோட்டத்தையும் பார்த்துவிட்டார்கள், சஹானாவை யாரும் பார்க்கவில்லை என்று தகவல் சொன்னார் சண்முகம்.

“போன்ல செக் பண்ணியா சுதிர்”

“லாக்காகி இருக்கு. பாஸ்வேர்ட் தெரியலை”, சுதர்ஷன் சொல்லவும், வருண் அவன் கையில் கைப்பேசியை வாங்கி எதோ எண்களை போட்டான்.

“ஹ்ம்ம்… திறந்திடுச்சு சுதிர்”

வேகமாக அவன் புறம் சென்ற சுதிர், “அவ பாஸ்வேர்ட் தெரியுமா உனக்கு? என்னது?”

“என் பிறந்த நாள்”, என்று வருண் பெருமையாகச் சொல்ல அவனை ஒரு பார்வை பார்த்தான் சுதர்ஷன்.

Advertisement