Advertisement

“திரும்பி வந்தாலும் திருந்தி வந்த மாதிரி இல்லையே பாட்டி. அதனாலதான் யோசிச்சேன். அவ பேச்சும் நடவடிக்கையும் …”, என்று குரு சொல்லிக்கொண்டிருக்கும்போதே

“உன்னை சட்டம்பிள்ளையாக்கிட்டுப் போன உங்கப்பனை சொல்லணும். நீ பார்த்து அவளுக்கு கொடுக்க வேண்டிய இடத்துல சஹானா இல்லை குரு. இந்த ரிசெப்ஷன் கூட என் பேரனே பண்ணிடுவான், ஆனா பாரு, என் பேத்திக்கு அவ அம்மா வீட்டு உரிமைன்னு இருக்கு இல்லையா? அதை விடக்கூடாதே. என்ன நான் சொல்றது?”, கமலம் போட்ட போட்டில் இளைய தலைமுறை மூன்றும் முழித்தது.

“பாட்டி…”, சஹானா தயக்கமாக பார்க்க,

“எனக்குத் தெரியாதா கண்ணு. சொத்துல நயா பைசா வேணாம்னு உங்க அப்பாக்கு எழுதி குடுத்துட்ட அதானே? அதை யாரு கேட்கறா? அதுவும் இவனா பார்த்து உனக்கு குடுக்கணும்னா தேவையே இல்லை. உங்க அம்மாவோடது உனக்குத்தானே உரிமையாகணும்? அதையும் குருவோட பொண்டாட்டிக்கு விட்டுத் தரப்போறியா?”, எங்கே தட்டினால் விழுவாள் என்று புரிந்து தட்டினார் கமலம்.

புருவம் சுருக்கி சற்று குழப்பமாக பார்த்தாள் சஹானா. “அப்படி இல்லை பாட்டி…அது..” என்று இழுக்க,

“உங்க அம்மா மேகவாணியும் வருண் அம்மா மீனாட்சியும் ஃப்ரெண்ட்ஸ் தானேமா. மீனாட்சிகிட்ட பேசினேன்”, என்று சஹானாவிடம் சொல்லிவிட்டு குருவிடம் திரும்பியவர், “குரு, சஹானாவுக்கு அவ அம்மா நகை முன்னூறு பவுன் கிட்ட இருக்கும் இல்லையா? அதைக் கொண்டு வந்து குடுத்துடுப்பா. ரிசெப்ஷனுக்கு அதுலர்ந்து பேத்தி போட்டுக்கட்டும். அம்மா இல்லைன்னாலும் அவங்க போட்டு புழங்கின நகை அவ கூட இருக்கட்டும்”, என்று கட்டளையிட்டார்.

“அது… சுதிர்… “, என்று குரு சுதர்ஷன் பக்கம் திரும்ப, ஏற்கனவே கமலம் அவனுக்குப் பாடம் நடத்தியிருந்ததால், “என்ன குரு? செக்யூரிட்டி பத்தி யோசிக்கறீங்களா? சென்னையிலேயெ ஹாண்ட் ஓவர் பண்ணாலும் பிரச்சனையில்லை. நான் பாதுகாப்பா கொண்டுவர ஏற்பாடு பண்ணிக்கறேன்”, என்றான் இலகுவாக.

சஹானா அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள். கமலம் இப்படி சொல்லவும், கண்டிப்பாக தன் அன்னையின் நகை குரு பெண்டாட்டியிடம் இருக்கக்கூடாது என்று எண்ணம் திண்ணமாகிவிட்டது.

“உனக்கு சம்மதமா சஹானா?”

”ஏன் குரு? அப்பா சொத்து முழுசும் விட்டு குடுத்தேன் அப்பவும் பத்தலையா? இந்த நகையும் உனக்கு வேணுமா? இல்லை உன் வைஃப் வித்துட்டாளா?”, நக்கல் வழிந்தோடியது சஹானாவின் குரலில்.

“நீ விட்டுக்குடுத்தியா? திமிர்ல அழிஞ்ச”, என்று பேச ஆரம்பிக்க,

“அதை நீயும் உன் பொண்டாட்டியும் நல்லா யூஸ் பண்ணிகிட்டீங்க.  அதைப் பத்தி பேச வேணாம். நடக்க வேண்டியதை மட்டும் பார்ப்போம். ரிசெப்ஷன் செலவா ஒரு பத்து லட்சமும், அந்த நகையும் அடுத்த வாரத்துல கொண்டு வந்துடு குரு. அப்பறம் அவ அம்மா பேர்ல மேட்டுப்பாளையம் தாண்டி ஒரு பத்து ஏக்கர் பக்கம் தோப்பு,  கோயம்புதூர்ல எட்டு கிரவுண்டு மனை இரண்டும் சஹானா பேர்ல மாத்தி குடுத்துட ஏற்பாடு பண்ணு. இல்லை பத்திரத்தை குடு, நான் ஏற்பாட்டை பண்ணிக்கறேன். சொத்து சொகத்தோட புகுந்த வீட்டுக்கு வந்தா பேத்திக்கும் சந்தோஷம். ஊர் உறவும், குரு எல்லா சொத்தையும் ஆட்டையை போட்டுட்டு அவன் தங்கச்சியை ஏமாத்திட்டானாம்னு  நாளைக்கு உன்னை ஒரு சொல் சொல்லிடக்கூடாது பாரு”, கமலம் அவன் பேச முடியாதபடி ரவுண்டு கட்டியடித்தார்.

தேனீர் வரவும், உபசரித்தார்.

“சொத்து குடுக்கறதைப் பத்தி ஒன்னும் இல்லை பாட்டி. சஹானா இங்க பொருந்தி உங்களோட இருப்பாள்னா பிரச்சனை இல்லை. சுதர்ஷன் சொத்தை கட்டிக் காப்பாத்திடுவாருன்னு தெரியும். அவ ஒரு வருஷம், இரண்டு வருஷம் கழிச்சு கல்யாணம் வேணாம்னு சொல்லி கிளம்பிட்டா..”, என்று சொல்லிக்கொண்டிருக்க, இடைமறித்தவர்,

“என் பேரனுக்கு ஜீவனாம்சமா எழுதிவெக்க சொல்றேன். அது எங்க பாடு. எது எப்படி இருந்தாலும் உன் கொழுந்தியா ஸ்கூல் ஆரம்பிக்க வேற இடம் பார்த்துக்கச் சொல்லு. இல்லைன்னா பாவம் கோர்ட்டு கேஸ்ன்னு அலையறதுலதான் நேரம் போகும், பள்ளிக்கூடம் நடத்தமுடியாது”, கமலம் முடிக்கவும் குரு முகத்தில் ஈயாடவில்லை.

சஹானாவிற்கு சிரிப்பு வந்தது கமலத்தின் அட்டகாசத்தில். கமலம் தனக்குப் பாட்டியாக இருந்திருந்தால் தன் வாழ்க்கை திசை மாறி  போயிருக்காதே என்று நினைத்து பார்த்திருந்தாள்.

பத்து நிமிடங்களிலேயே குரு கிளம்பிவிட்டான். எங்கே இருந்தால் கமலம் இன்னும் சொத்து கேட்பாரோ என்ற பயம் கூட ஒரு காரணமாக இருக்கலாம்!

கமலத்தைக் கட்டிகொண்டு தோள் சாய்ந்தவள், “ம்ப்ச்… அம்மா இல்லைன்னாலும் உங்க மாதிரி ஒரு பாட்டியாவது எனக்கு இருந்திருக்கலாம். அதுக்கூட எனக்கு அதிர்ஷ்டம் இல்லை பாட்டி”, என்று முணுமுணுத்தாள்.

“போனதெல்லாம் போகட்டும், அதுதான் இப்ப நான் இருக்கேனே கண்ணு. இனி எப்பவும் சந்தோஷமா இரு”, என்று ஆறுதல் சொல்ல, லேசான பொறாமை கொண்டு முறைத்தான் சுதர்ஷன்.

“ஹே… இது என் அம்மம்மா. நீ வேற பாட்டி ஏற்பாடு பண்ணிக்கோ!”, என்று கமலத்தின் மறுபுறம்  வந்து அமர்ந்த சுதர்ஷன் தானும் கமலத்தை அணைத்தான்.

“டேய் பிள்ளைங்களா!, என்னை கட்டிப்பிடிக்கறதை விட்டுட்டு, நீங்க கட்டிப்பிடிச்சாதான் நான் விளையாட ஒரு பிள்ளை வரும். போங்கடா!”, என்று கலாய்த்தார்.

“வர வர உங்களுக்கு வெட்கம் விட்டுப்போச்சு பாட்டி!”, சஹானா சிரிக்க, நெட்டி முறித்தார் கமலம்.

மாலை வருண் ரேகா மதுரம் எஸ்டேட் வந்தார்கள்.

“பாட்டி, சஹானா அம்மாவோட நகையெல்லாம் வேணும்னு கேட்டீங்களாம்? நந்தினி பொங்கு பொங்குன்னு பொங்கறா.  காத்து வாக்குல சேதி வந்தது. அவ விடற சாபம் பலிச்சிடாம இருக்க எதாவது செய்ங்க”, என்றபடியே கமலத்தின் அறைக்குள் நுழைந்தாள் ரேகா.

“அவங்க கிடக்கறாங்க விடுமா. ஆகாவெளிப் பயலுங்க சாபமெல்லாம் நமுத்துபோன பட்டாசு”, அவளைப் பிடித்துக்கொண்டே வரவேற்பறைக்கு வந்து அமர்ந்தார்.

“அம்மா அவங்களுக்கு ஞாபகம் இருந்த நகையெல்லாம் எழுதியிருக்காங்க பாட்டி”, கமலம் பாட்டியிடம் ஒரு தாளை நீட்டினான் வருண். அதை வாங்கி ஒரு பார்வை பார்த்தவர், தன்னிடமே வைத்துக்கொண்டார்.

“ரேகா, மீனாட்சி இப்படி ஒரு லிஸ்ட் எழுதி எங்கிட்ட குடுத்திருக்கா ஆனா அதுல என்ன இருந்ததுன்னு உனக்குத் தெரியாது அப்படிங்கறமாதிரி செய்தி நந்தினிக்குப் போக ஏற்பாடு பண்ணு. அந்த பயத்துலேயே பெரிய நகை எதுலையும் கையை வைக்க மாட்டா”, கமலம் சொல்ல தலையாட்டினாள் ரேகா.

“குருவோட மாமா அவங்கிட்ட் பேசிட்டு எங்கிட்டேயும் பேசினார் பாட்டி.  கொஞ்சம் கழிச்சு நானும் குருவுக்கு பேசினேன்.”

“ஹ்ம்ம்… என்ன சொல்றான்?”

“நந்தினி, பாட்டி நகையில அவ பொண்ணுக்கும் பங்கு வேணும்னு கொஞ்சம் சண்டையடிக்கறாளாம். ஆனாலும், நான் பாட்டி கேட்டதை குடுக்கறேன்ன்னு குரு சொல்லிட்டான். நானும் கொஞ்சம் பேசியிருக்கேன்”, என்று வருண் சொல்ல,

“அம்மம்மா…எதுக்கு அவங்கிட்ட கேட்கணும் ? அதெல்லாம் ஒரு பொருட்டேயில்லை”, என்றான் சுதர்ஷன் முகம் சுளித்து.

“டேய்… என்ன பேசற? சஹி அம்மாவோடது, அவ உரிமை. அதுக்கு விலை கிடையாது. குருகிட்ட காசு பணம் இல்லைன்னா பரவாயில்லை. அட சஹானாக்கு வேணுங்கறப்போ உதவி பண்ணியிருந்தாக்கூட பெருந்தன்மையா விட்டுக்குடுத்திருக்கலாம். எதுவும் இல்லாதப்ப எதுக்குடா விடணும்?”

எல்லோரும் பேசுவதைக் கேட்ட சஹானாவிற்கு தொண்டை அடைத்தது. தனக்காக தான் மட்டும்தான் என்று பல வருடங்களாகக் உருப்போட்டு வந்த மனது, இப்படி தன் நலனுக்காக பார்ப்பவர்களைக்கண்டு தடுமாறி  நின்றது. ரேகா, மீனாட்சி ஆன்ட்டி , அவள் சிறுவயதில் எப்போ பார்த்திருந்த மாமா, சில வாரங்கள் மட்டுமே அறிந்த கமலம் பாட்டி, சுதர்ஷன் எல்லோர் முன்னும் மிக மிகச் சிறுமையாக உணர்ந்தாள்.

சுதர்ஷனைத் தவிர மற்ற அனைவருமே மனமொத்து இந்தத் திருமணத்தில் இருக்கிறாள், இருக்கப்போகிறாள் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அனைவரின் நம்பிக்கையும் தகர்த்து தன்னால் வெளியேறிட முடியுமா என்று பயம் சூழ்ந்தது. ‘வருண் சத்தியமாக மீண்டும் ஒரு முறை மன்னிக்க மாட்டான். கமலம் பாட்டியுடன் நாளுக்கு நாள் நெருக்கம் கூடிக்கொண்டுதான் இருக்கிறது. அறுத்துவிட்டு எளிதில் சென்றுவிட முடியுமா? எல்லாவற்றையும் விட சுதர்ஷன். வேறொரு நபரிடம் இந்தப் புரிதலை கண்டிப்பாக எதிர்பார்க்கவே முடியாது. அதுவே அவள் தளைகளை எல்லாம் மீறி அவளை அவன் புறம் ஈர்க்கிறது. இன்னும் காலம் செல்லச் செல்ல அவனை தள்ளிவைக்க முடியும் என்று தோன்றவில்லை. ஆனால் அவன் எண்ணமும் புரியவில்லை. பிரிகிறேன் என்றாலும் சரியென்கிறான். அதே நேரம் அவளைப் பார்த்துப் பார்த்து கவனித்து, அவ்வளவு இலகுவாக, மனைவியாகவே பாவிக்கிறான்’, என்று ஓடிக்கொண்டிருந்த எண்ணத்தில், ‘ம்ம்.. ஒரு விஷயம் தவிர’ என்று எடுத்துக்கொடுத்தது மனசாட்சி.

‘தனிமையில் கூட அத்துமீறி ஒரு சின்ன செயலோ, பார்வையோ இல்லை. சிறப்பான ஒரு ரூம் மேட் போலத்தான் இருக்கான்’

“சஹி, உன்னைத்தான். எத்தனை வாட்டி கூப்பிடறது”, என்று வருண் தோள் தட்டவும், திடுக்கிட்டு நிகழ்விற்கு வந்தாள் சஹானா.

“ஹ்ம்ம்?”, என்று முழிக்க,

“அது சரி… மாலைப் பொழுதின் மயக்கதிலே கனவு கண்டேன் தோழின்னு பாடுவபோலருக்கே பேத்தி”, என்று கமலம் சொல்ல எல்லோர் முகத்திலும் சிரிப்பு.

“ரிசெப்ஷன் டேட்ஸ் பத்தி பேசிகிட்டு இருந்தோம் சனா. உனக்கு ஓக்கேவா பார்த்து சொன்னா, நானும் வருணும் ஹோட்டல், மண்டபம் தோது பார்ப்போம்.”, சுதர்ஷன் சொல்லவும் இன்னும் சங்கடமானாள்.

பாட்டியும் ரேகாவும் மும்மரமாக பேசிக்கொண்டிருக்க, சுதர்ஷன் ஆஃபீஸ் ரூம் வந்தார்கள் வருணும் சஹானாவும்.

தனிமை வந்ததும் பேச்சு பாண்டி பிரதர்ஸ் பற்றி வந்தது. “இந்த முறை நிஜமாவே மாட்டுவாங்க போலருக்கு சுதிர்.  கஞ்சா பயிர் வெச்சிருந்ததை பார்த்துட்டாங்களாம் போலீஸ். எதோ புது ரகமாம், இந்த கிளைமேட்ல நல்லா வளரும் போல. அந்த இராஜ வேலை வேறக் காணோமாம். ஆனா அவன் ட்ரைவரை பிடிச்சு வெச்சுருக்காங்களாம். இராத்திரியோட இராத்திரியா அந்த பங்கஜை அரெஸ்ட் பண்ணப்பறம் எங்க கூட்டிட்டு போனாங்கன்னே தெரியலைன்னு சொல்றார் இன்ஸ்பெக்டர்.  தனி ஃப்ளைட்டல போனாங்களாம். என்னவோ மர்மமா இருக்கு. இதுல எதைப்பத்தியும் கவலையே படாம நீ மூக்கை நுழைச்சிருக்க சஹி”, என்று தகவல்களை அடுக்கிய வருண் அவளை முறைத்தான்.

இதில் சிலது அவர்களுக்கு தெரிந்திருந்தாலும். பங்கஜ் தனி விமானத்தில் கொண்டு செல்லப்பட்டது செய்தி. அதுவே சொல்லியது அவன் சிக்கியதன் தீவிரத்தை.

“பாண்டி ப்ரதர்ஸ் விசாரிச்சாலே எம்.எல்.ஏ வரைக்கும் இருக்கற லிங்க் தெரியணுமேடா?”, சஹானா கேட்க,

“அப்ரூவராக டீல் பேசுவாங்களா இருக்கும். நமக்கெதுக்கு அதெல்லாம்? இப்பதான் கல்யாணம் ஆகியிருக்கு. இதுல கவனம் வை சஹி. எந்த வம்புக்கும் போகாம இரும்மா ப்ளீஸ்”, கெஞ்சினான் அவள் நண்பன்.

“ஏன் மேன் கவலைப்படற? என்னை சொல்றது இருக்கட்டும். எலெக்ஷன் முடிஞ்சாச்சு. ரேகாவோட டைம் ஸ்பென்ட் பண்ணு. குழந்தை பெத்துக்கற வழியைப் பாருங்க முதல்ல. ஆன்ட்டிகிட்டருந்து விடுதலை கிடைச்சாலே அவ சரியாகிடுவா” என்று சஹியும் பேச,

“டேய்…உங்க பாசமழைக்கு ஒரு அளவில்லையாடா?”, என்று சுதிர் கலாய்த்தான்.

மறுதினம் எலக்ஷன். மதியம் ஓட்டெடுப்பு முடிய, மாலை சஹியைக் காணவில்லை.

Advertisement