Advertisement

அத்தியாயம் – 21

“சுதர்ஷன்….”, சஹானாவின் குரல் கேட்டு அறையிலிருந்து வேகமாக வெளியே வந்தான்.

“என்ன…என்னாச்சு?”, என்றவன், கண்கள் பளபளக்க, உதடு கடித்து சிரிப்பைக் கட்டுப்படுத்துவது தெரிந்து, சற்று இலகுவாகி… “சொல்லிட்டு  சிரி”, என்றான்.

தலையை இடவலமாக ஆட்டியவள், அவன் கை பற்றி  பாட்டியின் அறைக்கு அழைத்துச் சென்றாள். கதவைத் திறக்க, பார்த்தவன் திகைத்து நின்றான்.

அவன் முகம் பார்த்தவள் பொங்கிப் பொங்கி சிரிக்க ஆரம்பித்தாள். அறை முழுதும் பூக்களால் அலங்கரிக்கபட்டிருந்தது. ரோஜா, சம்பங்கி, முல்லைப்பூ என்று கலந்து கட்டி வாசம் தள்ளாட வைத்தது. ஒரு பக்கம், பால் ஃபளாஸ்க், பழம், ஸ்வீட் காரம் என்று சினிமாவில் காட்டப்படும் அனைத்தும் வரிசைகட்டி இருந்தது.

“சனா… ஷ்… மேலே சத்தம் கேட்கப்போகுது…”, என்றாலும் அவனுமே சிரிப்பை அடக்கப் பார்த்தான்.

“பாட்டி அல்டிமேட்ல்ல? ஒரு போனை வெச்சிகிட்டு எல்லாரையும் ஆட்டிப் படைக்கறாங்க. இரு இரு… அவங்களை ஒரு வழி பண்றேன்!”,

“ஹே… என்ன பண்ற”, என்ற சுதர்ஷனை சட்டை செய்யாது, கைப்பேசியிலிருந்து வீடியோ கால் செய்தாள். கமலம் எடுக்கவும்,

“ஹாய் பாட்டி…” என்றாள்.

“என்னம்மா… கொஞ்சம் முன்னதான பேசினோம்?”, என்றார் கமலம்.

“மஞ்சுக்கா எவ்வளவு கஷ்டப்பட்டு அலங்காரம் பண்ணிருக்காங்கன்னு தெரியவேணாமா பாட்டி ? அப்பறம் நைட் சுதர்ஷன் எல்லாத்தையும் கலைச்சிட்டா காலையில எப்படி காட்டறது? அதுதான் போன் செய்தேன்”, என்று சொல்ல, ஒரு கையால் முகத்தை மூடி  கட்டில் ஓரம் அமர்ந்தான் சுதர்ஷன்.

“பாருங்க உங்க பேரனுக்கு எவ்வளோ வெட்கம்”, என்று அவனையும் சேர்த்து ஓட்ட, “ஏய்..”, என்றவன் பல்லைக் கடித்து, “அம்மம்மா…. என்ன பண்ணி வெச்சிருக்க?”, என்று கமலத்தை திட்ட, அதற்கும் சஹானா விடவில்லை.

“பாட்டி, பூ டிசைன் எல்லாம் நீங்கதான் சொன்னீங்களா? பாவம் அவங்களுக்கு ஒரு இரண்டு மூணு மணி நேரமாச்சம் ஆகியிருக்கும். பாருங்க… சினிமால காட்டற மாதிரி ஸ்வீட், காரம் பழம் எல்லாம் இருக்கு. எல்லாம் உங்க ஏற்பாடா பாட்டி?”, வெள்ளெந்தியாக முகத்தை வைத்துக் கேட்பவளை பார்த்து திரு திருவென்று முழித்தார் கமலம்.

“இதெல்லாமா போன் போட்டு காட்டுவாங்க… நீ போம்மா”, என்று  வைக்கப் போக, “அச்சோ பாட்டி, இருங்க… ஒரு டவுட் இருக்கு. பால் சொம்புலதான இருக்கணும்? கிச்சன்ல சொம்பு எங்க இருக்குன்னு சொல்லுங்க. நான் போய் அதுல மாத்திட்டு சுதர்ஷனுக்கு குடுக்கறேன். பால் குடுத்த அப்பறம் கால்ல விழணுமா இல்லை முன்னாடி விழுந்துட்டு அப்பறம் பால் குடுக்கணுமா பாட்டி?”, அவரை வைக்க விடாமல் வம்பு பண்ணுபவளைப் பார்த்து சத்தமின்றி சிரித்துக்கொண்டிருந்தான் சுதர்ஷன்.

சட்டென்று அவன் புறம் கைப்பேசியை திருப்பியவள், “ பார்த்துக்கோங்க பாட்டி… உங்க பேரனை சந்தோஷமா வெச்சிருக்கேன்”, என்று காட்டவும் கமலம் முகம் கனிந்தார்.

“டேய் பேரா… என் பேத்தியையும் சந்தோஷமா வெச்சிக்கணும்”, என்று கட்டளையிட, கண்ணில் வரும் கண்ணீரை துடைத்தவன், “அதுக்கு நீயே போதும் அம்மம்மா. நீ பண்ணி வெச்ச கூத்தைப் பார்த்து அவ சிரிச்ச சிரிப்பு மஞ்சு அக்காக்கே கேட்டிருக்கும்.”

“பாட்டி, நாளைக்கு நாங்க கிளம்பி வந்துடுவோம். அது வரைக்கும் வேற எதுவும் இன்னும் ஏற்பாடு பண்ணியிருந்தா இப்பவே சொல்லிடுங்க. நான் கொஞ்சம் உஷாராகிக்கறேன். உங்க பேரனுக்கு மேல நீங்க சர்ப்ரைஸ் குடுக்கறீங்க”, என்றவள் சுதர்ஷன் வாங்கித் தந்த கார், ஆடைகள் பற்றிக் கூறவும், கமலத்திற்கு ஏக திருப்தி.

இருவருமாக பூக்களையெல்லாம் வாரி வெளியில் போட்டு அவள் உறங்க ஏற்பாடு செய்தபின், “நாளையிலேர்ந்து என்னோட ரூம் ஷேர் பண்ணனும். குறட்டை விடுவேனான்னு கூட தெரியாது எனக்கு. இன்னிக்காவது ஃப்ரீயா தூங்கு”, என்று சொல்லிச் செல்லுபவனைப் பார்த்து ஒரு புன்னகையை உதிர்த்தாள்.

காலையில் இவர்கள் மதுரம் எஸ்டேட் போகும் முன்னரே வருண் அழைத்துவிட்டான். பங்கஜ் நேற்று இரவு கைது செய்யப்பட்டதாகவும், இன்று போலீஸ் பாண்டி பிரதர்ஸ் எஸ்டேட்டில் ரெயிடுக்கு வந்திருப்பதாகக் கூறவும், புதிதாகக் கேட்பது போல கேட்டிக்கொண்டார்கள் இருவரும்.

“வருண், அப்போ அன்னப்போஸ்டா நீதான் ஜெயிப்ப!”, சஹானா மகிழ்ச்சியுடன் சொல்ல, “அப்படியெல்லாம் சொல்லிட முடியாது சஹி. இதுக்கு முன்னவும் ரெயிட் வந்திருக்காங்க. அதெல்லாம் ஒன்னுமில்லாம பண்ணிட்டாங்க. ஒரே அட்வான்டேஜ் எலக்ஷனுக்கு இரண்டு  நாள் முன்னாடி வந்திருக்கறதுதான்”, எச்சரிக்கையாகவே பேசினான் வருண்.

சுதர்ஷன் அதற்குமேல் பேச வேண்டாம் என்பதாக தலையசைக்கவும், அவனிடம் நாக்கைத்துருத்தினாள். சுதர்ஷன், “வருண்  நீ எதுவும் ரியாக்ஷன் காட்டிக்காதே. யாரும் போன் செய்தாலும் மேலோட்டமாவே பேசு.  நீ அரேஞ்ச் பண்ண ரெயிடுங்கறமாதிரி பேச்சு திரும்பிடக்கூடாது. யார் எப்படி திரிச்சுவிடுவாங்கன்னு தெரியாது. கேர்ஃபுல்”, என்று எச்சரித்து வைத்தான்.

“அவனை தூக்கி உள்ள வெச்சா, டிஸ்குவாலிஃபை ஆகிடுவான் இல்லையா தர்ஷ்?”

“இல்ல, குற்றவாளின்னு முடிவாச்சுன்னா பதவியிலிருந்து தூக்கிடலாம். இல்லாட்டி அவங்களே ரிசைன் பண்ணணும். இப்ப ஜெயிச்சாதானே அதெல்லாம். பார்த்துக்கலாம்”, என்று எஸ்டேட்டிற்குள்  நுழைந்தான் சுதர்ஷன்.

மதியம் அனைவருமாக சாப்பிட அமர, “சஹிமா… உங்க அண்ணன் பேசினான் மா.  நாளைக்கு  நம்மளையெல்லாம் பார்க்க வீட்டுக்கு வரதா சொன்னான்”, என்று மெல்ல பேச்சை ஆரம்பித்தார்.

புருவம் சுருக்கியவள், “எதுக்கு வரணும் பாட்டி? நீங்கல்லாம் பேச சொன்னீங்க. சரின்னு நான் போன் பண்ணி கல்யாணம் முடிச்ச தகவல் சொன்னேன். தர்ஷும் பேசிட்டார். அப்பறம் என்ன? எனக்கு யாரையும் பார்க்க இஷ்டமில்லை பாட்டி”, என்றாள் வேகமாக.

“சரி கண்ணு.  நானே பேசும்போது குருவை மட்டும்தான் வீட்டுக்கு வரச் சொன்னேன். உனக்குப் பிடிக்கலைன்னா, வான்னு சொல்லிட்டு நீ இரண்டு  நிமிஷத்துல ரூமுக்கு போயிக்கோ. என்னதான் சொல்றான்னு பார்க்கலாம்”, என்றார் இலகுவாக.

இரவு உணவிற்குப் பின் புடவை, சல்வார், டீஷர்ட் என்று கோவையில் வாங்கியவற்றை காட்டிக்கொண்டிருந்தாள் சஹானா. “நீ எல்லா ட்ரெஸ்லையும் அழகாத்தான் இருப்ப கண்ணு. ஆனாலும் வகை வகையா  நீ டிரெஸ் போட்டு பார்க்கணும்னு ஆசையா இருக்கு”, என்று கமலம் சொல்லவும்,

“அதுக்கென்ன, இப்பவே பார்க்கலாம் பாட்டி”, என்று அருகில் வந்தவள் கைப்பேசியில் எதையோ தேடி பின் அவரிடம் காட்ட ஆரம்பித்தாள்.

கேட்லாக் மாடலாக விதவிதமான உடைகளில் சில நூறு புகைப்படங்கள் இருந்தன. சில வற்றைப் பார்த்துக்கொண்டே வந்தவர், “ஷிஃபான் புடவைங்கள்ல ரொம்ப அழகுடி செல்லம்”, என்று நெட்டி முறித்தார்.

“நீங்க தூங்கற டைம் வந்தாச்சு பாட்டி. அவ போட்டோ எல்லாம் இங்கதான் இருக்கும். அப்பறமா பார்ப்பீங்களாம்”, என்றபடியே வந்தான் சுதர்ஷன்.

புகைப்படங்களை பார்த்துக்கொண்டே வந்தவர் ஓரிடத்தில் “அம்மாடியோ!‘, என்றவர் ஒரு நமுட்டுச் சிரிப்புடன் சுதர்ஷனைப் பார்த்து, “எட்டு மணிக்கு என்னை படுக்க அனுப்பறதுல ஏன் குறியா இருக்கன்னு புரியுதுடா”, என்றவர் சஹானா புறம் திரும்பி, “பார்த்துடிம்மா… என் பேரன் பத்திரம்”, எனவும் இருவருமே சற்று குழப்பமாக எதைப் பார்த்து இப்படி பேசுகிறார் என்று அருகே வந்தார்கள்.

“அச்… அது… பாட்டி”, என்று சுதாரித்து போனை பறிக்க, அதற்குள் சுதர்ஷன் கைப்பற்றியிருந்தான். பார்த்தவன் இதயம் ஒரு நொடி நின்று துடித்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

இத்தனைக்கும் அந்த புகைப்படத்தில் ஒரு சாதாரண் டீஷர்ட் அணிந்து, முடியை தூக்கிக் கட்டியிருந்தாள். ஆனால் கண்கள், போதையூட்டும் விழிகள் என்பார்களே அதுபோல, பளபளக்கும் ரோஸ் நிற இதழ்கள் லேசாய் குவித்து முத்தமிட வா என்று அழைப்பது போல ஒரு க்ளோசப் கவர்ச்சி போட்டோ.

“பாட்டி… அது சும்மா ஒரு ஃப்ரெண்டு எடுத்தது பாட்டி. அவளும் நானும் ஒரு ஐஸ்-க்ரீம் ஆட் ஷூட்ல இருந்தோம். இந்த போட்டோல இருக்க மாதிரி  அதுல நடிக்க வேண்டிய மெயின் மாடலை பண்ணச்சொன்னா அவளுக்கு வரலை. டைரக்டர் கடுப்பாகி ப்ரேக் விட்ட போது, நானும் அவளும் மாத்தி மாத்தி அதுமாதிரி லுக் சும்மா ட்ரை பண்ணோம். அந்த போட்டோதான்”, அவசரமாக பாட்டியிடம் விளக்க, அவள் முகத்தை ஆதுரமாக வருடியவர், “இதலென்ன கண்ணு? உன் திறமை தெரியாதது அவங்களுக்குத்தான் நட்டம். விடு”, என்றார்.

“நீயும் ரூம்முக்கு போ சனா. நான் கொஞ்சம் வேலை பார்த்துட்டு வரேன். பாண்டி பிரதர்ஸ் இரண்டு பேரையும் அரெஸ்ட் பண்ணிட்டாங்கன்னு வருண் சொன்னான். அவனோட பேசிட்டு அப்படியே இன்னும் கொஞ்ச பேர்கிட்டயும் பேசிட்டு வரேன்”, என்று சொல்லவும்,  அமைதியாக அவள் உடைகளை சேகரிக்க சுதர்ஷன் நிதானித்தான்.

“டயர்டா இல்லைன்னா என் கூட ஆஃபீஸ் ரூம்ல இருக்கியா? “

அவனைப் பார்த்தவள், “வேணாம். எனக்கு தனியா இருந்து பழக்கம்தான் சுதர்ஷன். நீ உன் வேலை பாரு”, என்றாள்.

“ப்ச்… உனக்கு ஸ்பேஸ் வேணுமோன்னுதான் சொன்னேன். தனியா இருக்க அவசியம் இல்லாத போது எதுக்கு இருக்கணும்?”, அவளுடன் சேர்ந்து உடைகளை பைகளில் போட்டவன், செம்பருத்தியை அழைத்து மேலே வைக்கச் சொல்லிவிட்டு, கையோடு சஹானாவை அழைத்துச் சென்றான்.

பாட்டிக்கு பாலை கொடுத்து, மாத்திரையை தரச் சென்ற செம்பருத்தி “உங்க பேரன் விட்டா காணாமப் போயிடுவாங்களோன்னு பொண்டாட்டி கையை பிடிச்சிட்டே சுத்தறார். இப்போ ஆஃபீஸ் ரூமுக்கு கூட்டிட்டு போயாச்சு. நிம்மதியா படுங்க பாட்டிமா. பத்து மாசத்துல கொள்ளுப்பேரனை பார்த்துக்க தெம்பு வேணாமா”, என்று பேசுவதைக் கேட்டால் என்ன சொல்லியிருப்பானோ சுதர்ஷன்.

மறு நாள் பின் காலைப் பொழுது, வருணுடன் பேசிவிட்டு கைப்பேசியை வைக்கவும், சுதர்ஷன் ஆஃபீஸ் ரூமிலிருந்து அழைத்தான்.

“கீழ வா சஹானா. குரு வர நேரமாச்சு”

“ப்ச்… வரேன்”, என்றவள் பொறுமையாக ஐந்து  நிமிடம் கழித்து இறங்கிச் சென்றாள். குருவை வரவேற்று ஹாலில் அமர சொல்லிக்கொண்டிருந்தான் சுதர்ஷன். அவன் அருகே அமைதியாக வந்து நின்றாள் சஹானா.

“எப்படி இருக்க சஹானா?”, குருவே விசாரிக்க,

“ம்ம்… நீ?”, என்றவள் அப்போதுதான் முழுமையாக குருவைப் பார்த்தாள். கிட்டதட்ட அவள் தந்தையின் சாயல் இருந்தது. சிறுவயதில் அவளை தோளில் சுமந்து அவள் அன்னையோடு தோட்டத்தை சுற்றி வரும் காட்சி நினைவிலாடியது.

குரு எதோ பேசுவதும், சுதர்ஷன் பதில் சொல்வதும் பதியவில்லை. சுதர்ஷன் கைபிடித்து அருகில் அமர வைக்கவும் அமர்ந்து கொண்டாள்.

செம்பருத்தி, கமலத்தை மெல்ல அழைத்து வர, குரு எழுந்து வணக்கம் வைத்தான்.

“நீங்க ஏன் பாட்டி கஷ்டப்படறீங்க?”, என்று குரு கேட்க,

“நடந்து பழகினாத்தானே நாளைக்கு என் கொள்ளுப் பேரனுக்கோ பேத்திக்கோ விளையாட்டு காட்ட முடியும்?”, என்று சொல்லியபடியே அமர்ந்தார்.

“வீட்டுக்கு வந்தவங்களை வாங்கன்னு கேட்டியா சஹிம்மா?”, கமலம் கேட்டதற்கு சஹானா எதுவும் பதில் சொல்லும் முன்னரே,

“அதெல்லாம் அவளுக்கு பழக்கமில்லை பாட்டி. மாப்பிள்ளை கேட்டார்”, என்றான் குரு.

கண்ணாடியை உயர்த்தி குருவை ஒரு பார்வை பார்த்த கமலம், “வழமை தெரியாதவ இல்லை என் பேத்தி. சில பேர பார்த்தா கேட்க தோணாது. அதனாலயா இருக்கும்”, பாவனையின்றி வந்த கமலத்தின் பதிலில் அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் முழித்தான் குரு.

“சாரி… உங்ககிட்ட கல்யாணத்துக்கு முன்னாடியே சொல்ல அவகாசம் இல்லை”, என்று சுதர்ஷன் பேச்சை சற்று திசை திருப்ப,

“கல்யாண செலவை மிச்சப்படுத்தினேடா, ஆனா குரு, ரிசெப்ஷன் கிராண்டா பண்ணிடணும்”, என்று ஆரம்பித்தார் கமலம்.

“பாட்டி…அப்பாக்கு சஹானா அப்படி போனது ரொம்ப கஷ்டம். எப்பவாவது திரும்ப வந்தா அவளை விட்டுடாதேடா. ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சு வேணுங்கறதை பார்த்து பண்ணுன்னு சொல்லிட்டுத்தான் போனார். அவர் போனதை சொல்லக் கூட எங்ககிட்ட அவ நம்பர் இல்லை. அவளும் இறப்புக்கு வரலை”, என்று ஆரம்பித்தான். சஹானாவிற்கு எரிச்சல் மண்டியது.

“ஓ… அதுதான் அவ திரும்ப வந்த அப்பறம் அவ தங்கிக்க பங்களா ஏற்பாடு பண்ணிக் கொடுத்தியோ? வரன் எல்லாம் தேட ஆரம்பிச்சியா என்ன?”, கமலம் அப்பாவி முகத்தோடு கேட்க, பாட்டி அவர் வயதுக்கு தன்னை நக்கலடிக்கிறார்களா என்ன என்று யோசித்தான்.

Advertisement