Advertisement

வீடு வந்து சேரும் வேளை சஹானா எழுந்து காலை உணவையும் அருந்தி, வரவேற்பரையில் அமர்ந்திருந்தாள். அம்மம்மா வந்ததும், அவளே ஆரத்தி எடுத்து திருஷ்டி கழித்தாள். கமலத்திற்கு அத்தனை மகிழ்ச்சி.

“நான் உங்க இரண்டு பேருக்கும் அரத்தி எடுக்கணும். அதை விட்டு நீ எனக்கு எடுக்கற”, என்று சொல்லியபடியே சுதர்ஷன் கைத்தாங்கலாய் பிடித்து வர மெல்ல வந்து அமர்ந்தார்.

சண்முகம் வந்து கமலத்தை விசாரித்துவிட்டு, எஸ்டேட் சம்மந்தமாக ஏதோ வேலை சொல்ல, “ஏ சண்முகம். இப்பதான் பேரனுக்கு கல்யாணம் ஆகியிருக்கு. ஒரு நாளாவது எல்லாத்தையும் நீ பாருய்யா. அவங்க மருதமலை போகணும்”, என்று அதட்டினார்.

சுதர்ஷன், சஹானாவின் ஒருமித்த பார்வைகளை சந்தித்தவர், “அது மணக்கோலத்துல உங்களை கூட்டிட்டு வரதா வேண்டியிருந்தேன். என்னால முடியலைன்னாலும், நீங்க இரண்டு பேரும் கல்யாண டிரெஸ் போட்டு கோவிலுக்கு போயிட்டு வந்துடுங்கப்பா”, என்று வேண்டுகோள் வைத்தார்.

நேற்று இரவு அவன் மார்பில் கண்ணீர் வடித்ததிலிருந்து, சுதர்ஷனைப் பார்க்கவே சங்கடப்பட்டாள் சஹானா. யார் முன்னும் இப்படி உடைந்து அழுதது இல்லை. இந்த பத்து வருடத்தில் யாரும் அவளை இந்த அளவு புரிந்து வைத்திருக்கவில்லை. அவன் அவளைப்பற்றி, அவள் செய்த செயல்களின் நோக்கம் பற்றி சொன்னது உண்மை. என்னவோ அவன் முன் கவசம் களைந்து நிற்பது, ஆடை வடிவமைப்பாளர் முன் முதல்முதலில் அரை குறை உடையணிந்து நின்ற உணர்வைவிட சங்கடமாக இருந்தது. ‘அது பழகின மாதிரி இதுவும் பழகிடும் சஹி. என்னதான் புரிஞ்சிகிட்டாலும் இது பேர் அளவுலதான் கல்யாணமா இருக்கும். கண்டிப்பா உன்னையெல்லாம் விரும்பமாட்டான்’, என்று சென்ற எண்ணத்தை சட்டென்று கடிவாளமிட்டு நிறுத்தியவள், ‘இரு. அவன் விரும்பணும்னு நினைக்கிறியா சஹி?’ என்று மீண்டும் கேட்டுக்கொண்டாள். ‘உம்…விரும்பினா நல்லாயிருக்கும்னு சொல்றேன். ஆனா நடக்காது, அப்பறம் எதுக்கு? தர்ஷுக்கு சிம்பிளா இருந்தாலும் எல்லாம் உயர்தரமா இருக்கணும். தரங்கெட்ட நான் எப்படி அந்த லிஸ்ட்ல வருவேன்?’, கொஞ்சம் கழிவிரக்கம் ஒட்டிக்கொண்டது.

“சஹிம்மா…”, கமலம் தோள் தொட அவள் எண்ணங்களிலிருந்து  விடுபட்டு பாட்டியைப் பார்த்து முழித்தாள். கோவில் செல்லவேண்டியதைக் கூறியவர், ஒரு சின்ன சிரிப்புடன், “போய் கொஞ்சம் ரெஸ்ட் எடு கண்ணு. சாயந்திரம் ஒரு மூணு மணிக்கா கிளம்பினீங்கன்னா சரியா இருக்கும். போயிட்டு இராத்திரி அங்க நம்ம வீட்டுலேயே தங்கிடுங்க, நாளைக்கு காலையில எஸ்டேட்டுக்கு வந்தா போறும்”, என்று மீண்டும் விளக்கி அனுப்பி வைத்தார்.

அமைதியாக அவளையே பார்த்திருந்த சுதர்ஷனை ஒரு அவசரப் பார்வை பார்த்தவள், மாடிக்கு சென்றுவிட்டாள்.

“நீயும் போயேண்டா”, என்று கமலம் சொல்ல, “கொஞ்சம் அவளை ஃப்ரீயா விடுங்க. போய் நீங்க ரெஸ்ட் எடுங்க அம்மம்மா”, என்று அவர் அறைக்கு அழைத்துப் போனான். அலுவலக அறைக்கு வலுக்கட்டாயமாக சென்று அமர்ந்தாலும் சுதர்ஷனுக்கு வேலை ஒடவில்லை. சற்று  நேரப் போராட்டத்திற்குப்பின் மாடியேறினான்.

விட்டத்தைப் பார்த்தபடி நீள் இருக்கையில் சாய்வாக அமர்ந்திருந்தாள் சஹானா. கைகள் இரண்டும் அவள் வயிற்றை சுற்றியிருந்தது. அணைக்க ஆள் இல்லாது தன்னைத்தானே அணைத்துக்கொள்ள பழகிக்கொண்டிருந்தாள் போல. அவன் வந்து நிற்பதைப் பார்த்தவள்,  நிமிர்ந்து சரியாக அமர்ந்து, “ரூம் வேணுமா? நான் வெளிய இருக்கட்டுமா?”, என்று கேட்டாள் சற்று தடுமாற்றமாக.

உள்ளே வந்து அவள் அருகே இடித்துக்கொண்டு அமர்ந்தான் சுதர்ஷன். “என்ன ஆச்சு?  எவன் என்ன நினைச்சா என்னன்னு தெனாவட்டா சுத்தற சஹானா எங்க போயிட்டா?”, என்றான் அவளை வம்பிழுக்க.

“ம்ப்ச்… என்ன வேணும் உனக்கு?”, என்றாள் அரை மனதாக.

“சனா… நீ சொன்ன எதுவும் இந்த ரூமைத்தாண்டி போகாது. எப்பவும் எந்த சூழ் நிலையிலும் திரும்ப உன்னை நோக்கிப் பாயாது. வாழ்க்கையில எத்தனையோ பேர் எவ்வளவோ பாவங்களை செஞ்சிட்டு கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியே இல்லாம சுத்திகிட்டு இருக்காங்க. நீ எதுக்கு உன்னை இத்தனை தண்டிக்கற?”, அவள் கைபிடித்து தன் புறம் திருப்பினான்.

“ஊஃப்…நான் என்னைப் பத்தி யோசிக்கலை. என்னால உன் பேர் கெட்டுபோயிடக்கூடாதுன்னுதான் பயப்படறேன். எவ்வளவு சீக்கிரம் பிரியறோமோ பெட்டர் சுதர்ஷன்”, என்றாள் சீரியசாக.

சற்று அதிர்ந்தாலும், “நேத்துதான் கல்யாணம் பண்ணியிருக்கோம். அதுக்குள்ள பிரிய ப்ளான் பண்ற. நான் சின்ன பிள்ளையில்லை சனா. என் பேரையும் அதோட உன் பேரையும் காப்பாத்தத் தெரியும். உன்னை மாதிரி டிடெக்ட்டிவ் வேலை பண்ணலைங்கறதனால நான் டம்மி பீஸ் இல்லை. நீ செய்யறது பிடிக்காம, உன்னை நிறுத்தவும் வழி தெரியாம பல்லைக் கடிச்சிட்டு அமைதியா இருந்தேன். அவனுங்களை எப்படி சமாளிக்கணும்னு தெரியாமலா எலக்ஷன்ல எதிர்த்து நிப்போம்?”, சுதர்ஷன் கேட்கவும், உதடு சுழித்தவள், “தெரியலையே. ஒரு தகவலையும் நீ உருப்படியா கலெக்ட் பண்ணலை. எல்லாம் நான் தான் சேகரிச்சேன். அப்ப நான் அப்படி நினைக்கறது தப்பில்லையே!”, என்று வாதிட்டாள்.

“நான் என்ன அவனுங்களை ஜெயில்ல போடறதுக்கா ப்ளான் பண்ணேன்? எலக்ஷன்ல எப்படி வோட்டு வாங்கறதுன்னுதான் வியூகம் பண்ணோம். நீ தடாலடியா இடையில புகுந்து அவனுங்களை உள்ளே அனுப்ப ரெடி பண்ணிருக்க . இதுக்கு எதிர்வினை எப்படி இருக்குமோ? இதுல யாரும் உன்னை லிங்க் பண்ணாம இருக்கணுமேன்னு நான் யோசிச்சிட்டு இருக்கேன். மஞ்சுனாத் கவனமா இருக்கச் சொன்னாரே”, அவள் தலையைப் பிடித்து லேசாக ஆட்டினான். அவன் கையை தட்டிவிட்டவள்,

“அதுதான் சொல்றேன், என்னை சீக்கிரம் பத்தி அனுப்பு. என்னால உனக்கு தேவையில்லாத தலைவலிதான்”, என்று ஆரம்பித்த இடத்திற்கே வந்தாள்.

“கோயிலுக்கு போக டைம் ஆச்சு. அதுக்கு முன்ன அயத்தானா போய் ரிசைன் பண்ணணும். சீக்கிரம் லன்ச் சாப்பிட்டு கையோட கிளம்பணும். கல்யாண சேலை எடுத்துக்கோ. அங்க வீட்டுக்குப் போய் மாத்திகிட்டு அப்பறம் மருதமலை போகலாம்”, கத்தரித்தார்போலப் பேசியவன், வெளியேறிவிட்டான்.

அயத்தானாவில் விடை பெறும்போது டேனியும் இருந்தான். எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை. சுதர்ஷன், “ரிசெப்ஷன் வெக்கும்போது பர்சனலா எல்லாரையும் இன்வைட் பண்றோம்”, என்று பெண்களைக் கவர்ந்தான்.

மூன்று மணியளவில் அவினாசி சாலையில் இருந்த ஒரு பிரபலமான கார் ஷோரூமில் சுதர்ஷனும் சஹானாவும் அமர்ந்திருந்தார்கள்.

“இப்ப எதுக்கு கார் வாங்கணும்னு அடம்பிடிக்கற சுதர்ஷன்? இருக்கறப்போற கொஞ்ச நாளுக்கு எதுக்கு வேஸ்ட் பண்ற?”, சலித்தாள்.

“அது என் பிரச்சனை, உனக்கென்ன? நீதான் புரியாம பேசற.  உனக்குன்னு ஒரு கார் கூட வாங்கலைன்னா உன் பெஸ்டியும், என் பாட்டியும் என்னை சும்மாவா விடுவாங்க? இது என் கல்யாண கிஃப்ட். அதுதான் போகும்போது உனக்கு எதுவும் வேணாம்னு எழுதி குடுத்திட்டியே. அப்பறம் என்ன?”, சுதர்ஷனின் சுள்ளென்ற பேச்சில் அவனை உறுத்து விழித்தவள்,

“ஓஹ்… கல்யாண கிஃப்ட்டா தர்ஷ்?”, என்று கண்கள் படபடவென் அடிக்க, “ஆஹா, ஃபார்முக்கு வந்துட்டாடா வந்துட்டா”, என்று வடிவேலின் பின்னணிக்குரல் கேட்டது சுதர்ஷனுக்கு.

நேராக அங்கே அவர்களையே பார்த்திருந்த ஒரு சேஸ்ஸ் மேனை கைவிரல் ஆட்டி அழைத்தவள், இன்னும் அமர்ந்திருக்கும் சுதிரைக் காட்டி என்னவோ கொஞ்சு மொழி பேச, அந்தப்பிள்ளை அவள் கைபொம்மையானான். கையோடு அழைத்துச் சென்று ஒவ்வொரு மாடலாக அந்த கியா ஷோரூமில் இருந்தவற்றைக் காட்டினான். விடாது பேசிக்கொண்டிருந்தான்.

வேண்டுமென்றே இருப்பதிலேயே மிகவும் விலை உயர்ந்த ஈ.வி மாடலை சுற்றிச் சுற்றி வந்தாள். சுதர்ஷனிடம் அவள் எதிர்பார்த்த எதிர்வினை எதுவும் வராததில்,  அடுத்து கியா சோனேட் முன் வந்து நின்றாள். இருப்பவற்றில் விலை சற்று குறைவானது. மெல்ல எழுந்து வந்தான் சுதர்ஷன். அவள் கைபிடித்து இழுத்துச் சென்று நிறுத்தியது கியா ஸ்போர்டேஜ். சோனெட்டைவிட நாலு மடங்குக்கும் மேல் விலை. அப்போதுதான் வெளியாகியிருக்கும் புது மாடல் வகை.

“ஈ.விக்கு இன்னும் ஊட்டி ரெடியாகலை. அப்பறம் வாங்கிக்கலாம். இப்போ இது பாரு. உனக்கான ஸ்பீட், சேஃப்டி எல்லாமே நல்லாயிருக்கும்”

அதைப் பார்த்த சேல்ஸ்மேன் கண்ணெல்லாம் ஒளியாக, “பாருங்க மேடம். சாரும் என்னை மாதிரியே நினைக்கறார்”, என்று மீண்டும் அதன் வேகம் , பாதுகாப்பு அம்சம் என்று ஒப்பிக்க ஆரம்பித்தான்.

சற்று தனியே அழைத்து வந்தவள், “ம்ப்ச்…சுதர்ஷன்… இந்த சில வருஷம் நான் பெருசா கார் ஓட்டலை. இங்க இருந்தப்போ ஓட்டினதுதான்”, என்று மறுத்தவளை மேலும் பேச விடாது, “கலரை மட்டும் சொல்லு. நீ கார் ஓட்டுற வேகம் நானே பார்த்திருக்கேன். அந்த குட்டி மாருதியிலேயே என்ன அட்டகாசம்? இரண்டு நாள் ஓட்டினா தானே பழகிடும். சும்மா வெத்து ரீசன் சொல்லிட்டு இருக்காதே. சீக்கிரம் என்ன கலர்னு சொல்லு. புக்கிங் போட்டுட்டு கிளம்பணும். முருகர் வெயிட் பண்றார்”, என்று சேல்ஸ்மேனிடம் இழுத்துவந்தான்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் அவர்களின் கோயம்புதூர் வீடு வரவும், மேல் வீட்டிலிருந்து வந்து ஆரத்தி எடுத்தார்கள்.

“எதுக்கு மஞ்சுக்கா இதெல்லாம்?”, என்று சுதர்ஷன் கேட்கவும், “அதெப்படி சும்மா விடமுடியும்? கல்யாணம் முடிச்சு பூர்வீக வீடு வந்திருக்கீங்க. கமலம்மா காலையிலேயே போன் போட்டு சொல்லிட்டாங்க”, என்று பேசி, சுதர்ஷன் கதவு திறக்கவும் அவர்களோடே வந்து,

“மருமகளே, உன் மாமனார் மாமியாரை கும்பிட்டு, விளக்கு ஏத்தும்மா”, என்றார்.

பாட்டி உட்கார்ந்த இடத்திலிருந்தே என்னவெல்லாம் யோசிக்கிறார்கள் என்று அவர் பாசத்தில் நெகிழ்ந்திருந்தாள் சஹானா. அதானாலேயே, சேலை மாற்றி வருவதாகக் கூறி வேகமாக வந்து நின்றாள்.

“அட… இந்த காலத்துப் பொண்ணு, இவ்வளவு சீக்கிரம் இத்தனை அழகா கட்டியிருக்கியே”, என்று அதிசயப்பட்டவர்,  சுதர்ஷன் வந்ததும் பூஜை அறைக்கு அழைத்துச் சென்றார்.

“சேலை கூட கட்டத்தெரியுமா?”, என்று கிசுகிசுத்தான் சுதர்ஷன்.

அவனைப் பார்த்து உதடு சுழித்தவள், “காட்லாக் மாடலா இருந்தேன்னு மறந்துட்டியா? ஒரே நாள்ல பத்து பதினைஞ்சு சேலை கட்டணும். யாராவது வந்து கட்டிவிடணும்னா நேரமெடுக்கும். சீக்கிரமே டிரிக்ஸ் கத்துகிட்டா நாமே கட்டி ரெடியாகிடலாம்”, என்று பதில் கூறிக்கொண்டே வந்து நின்றாள்.

பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு அழகாக இருந்தது. “நல்லாயிருக்கா? நாந்தான் வந்து எல்லாம் ரெடி பண்ணேன்”, என்ற அந்த அக்காவை சஹானாவிற்கு பிடித்தது. வெள்ளந்தியாக இருந்தார்.

அவர் சொல்படி விளக்கேற்றி வணங்கி, அடுப்பில் பால் காய்ச்சினாள். வீட்டிற்கு சிற்றுண்டி சாப்பிட அழைத்துவிட்டு அவர் ஒரு வழியாகக் கிளம்பினார்,

“இதெல்லாம் செய்ய செய்யதான் நிஜமாவே கல்யாணம் பண்ணியிருக்கோம்னு பயம் வருது சுதர்ஷன்”, என்று லேசான கலவரத்துடன் அவனைப் பார்த்தாள். சஹானாவிற்குள் இருக்கும் அந்த  நியாயவாதிக் குட்டிப் பெண் எட்டிப் பார்க்கவும் சுதர்ஷன் முகம் புன்னகை பூசியது.

“கல்யாண ரெஜிஸ்ட்டர்ல கையெழுத்து போடும்போதும் நான் தாலி போடும்போதெல்லாம் வரலையா? இதுக்குத்தான் வெள்ளைக்காரங்க மாதிரி கல்யாணம் ஆனதும் முத்தம் குடுக்கணும் போல”, என்று கலாய்த்தான்.

“ஹையோ…கலாய்க்கக்கூட வருதா உனக்கு. வருண்கிட்ட சொல்லி போஸ்ட்டர் ஒட்ட சொல்றேன்”, என்று நக்கலடித்தாள்.

மருதமலை சென்றதுமே, ஒருத்தர் ஓடி வந்தார். “அம்மா சொல்லியிருந்தாங்க தம்பி. வாங்க. எல்லாம் ரெடியா இருக்கு”, என்று சன்னிதானம் அழைத்து சென்று நிற்க வைத்தார். அர்ச்சனை செய்து, ஆரத்தி காட்டி, முருகனிடமிருந்து இரு மாலைகளை கொண்டு வந்து கொடுத்து மாற்றிக்கொள்ளச் செய்தார் பூசாரி.

பிரசாதம் வாங்கிக்கொண்டு கோவில் சுற்றி வரும்போது, “என்ன சனா, தீவிரமா என்ன வேண்டின?”, என்று கேட்டான்.

“அது…முருகர்கிட்ட சாரி கேட்டேன். சும்மா கல்யாணம் ஆன மாதிரி ஆக்ட் பண்ணத்தான போறோம். இப்படி அவர் முன்ன மாலையெல்லாம் மாத்திட்டு நிஜ கல்யாணம் மாதிரி நிக்க ஒரு மாதிரி இருந்துச்சு”, என்று தடுமாறினாள்.

அவள் கைபிடித்து சென்றுகொண்டிருந்தவன், ஒரு நொடி நின்று, “சனா, சட்ட ரீதியாவும், சாமி, உறவுக்காரங்க மத்தியிலும் நீ என் மனைவிதான். நாம பண்ணது நிஜ கல்யாணம்தான். இதை அடுத்த ஸ்டெப் எடுத்துட்டு போய் வாழப்போறமா இல்லையான்றது மட்டும்தான் பாக்கி இருக்கு.  அது  நிதானமா பார்த்துக்கலாம். இதுல உனக்கு எந்த சங்கடமும் வேணாம். புரிஞ்சுதா?”

அவனது பார்வையை எதிர்கொண்டவள் மெல்ல தலையசைத்து சரியென்றாள். அவள் மனசாட்சி சலனப்படுவதை சரியாகக் கணித்து அவள் தேடும் அந்த ஒப்புதலை தருபவனை தவிர்க்கமுடியாது தவித்தாள்.

பின் மாலைப் பொழுது, ஷாப்பிங் மாலில் சுற்றிக்கொண்டிருந்தார்கள் இருவரும். என்ன தடுத்தும் கேட்காமல் அவளுக்கு ஆடைகளை வாங்கிக்கொண்டிருந்தான்.

“தர்ஷ்… எல்லாம் ஒரே நேரத்துல ஒரே மாதிரி கடையில வாங்கினா எப்படி? எனக்குப் புரியுது. ஆனா கொஞ்சம் டைம் எடுத்து வாங்கிக்கறேன். இப்போதைக்கு இது போதும்”, என்று ஒரு வழியாக அவனை நிறுத்தினாள்.

“நைட் ட்ரெஸ்?”, சுதர்ஷன் கேட்க, “இருக்கறதே போதும். அதை யார் பார்க்கப்போறாங்க?”

“நான்?”

“ஹ்ம்ம்… நைட் பான்ட், டிஷர்ட்தான் போடுவேன். கவலைப்படாதே உன்னை டிஸ்டர்ப் பண்ணாது”, என்றாள் உதட்டுச் சுழிப்புடன்.

ஒரு புருவம் உயர்த்தியவன், “அன்னிக்கு மாதிரி டிசைனர் கவுன்ல இருந்தாதான் அழகுன்னு இல்லை. நீ சாக்குமூட்டையை சுத்தினாக்கூட அழகாதான் இருப்ப சனா”, என்றான் இலகுவாக. கேட்டவளுக்குத்தான் உள்ளே ஒரு சின்ன மகிழ்வு.

இரவு மேல் வீட்டில் உணவை முடித்துவிட்டு கீழே இறங்கினார்கள். “பாட்டி ரூம் நீ யூஸ் பண்ணிக்கோ சனா. நான் என் ரூம்ல இருக்கேன். எதுவும் வேணும்னா கூப்பிடு”, என்று சென்றுவிட்டான். முழித்து நின்றதென்னவோ சஹானாதான் !

Advertisement