Advertisement

அத்தியாயம் – 20

‘அனுப்பி வைத்தவனுக்கே இந்த தண்டனை என்றால்,  கௌரவ் கதி?’, என்ற சுதர்ஷன் எண்ணத்தை முகத்தில் படித்தவள்,

“அவன் பணம் தானே இப்படி பொண்ணுங்களை சீரழிக்க வெக்கற தைரியத்தைக் குடுக்குது? அந்த இடத்துலர்ந்து அவனை இறக்கணும்னு முடிவு பண்ணேன். மத்த வேலையெல்லாம் விட்டுட்டு வெறியா இதுல இறங்கினேன்.

அவன் பெண்டாட்டி சோனாலி மூலம்தான் இவனுக்கு இத்தனை காசு பணமெல்லாம்னு தெரிஞ்சுது. அவ வழக்கமா போற ஒரு ஜிம்ல இருக்க ட்ரெயினரை ஃப்ரெண்டு பிடிச்சு, ஒரு நாள் அவளை அங்க சந்திச்சேன். உனக்குத் தெரிஞ்சுதான் உன் புருஷன் சின்ன சின்ன பொண்ணுங்களை மாடலிங் சான்ஸ் தரேன்னு ஏமாத்தி, ரூம் போட்டு அனுபவிக்கறானான்னு கேட்டேன். முதல்ல நம்பலை, திட்டினா. அவன் வேற ஒரு பொண்ணோட ரூமுக்கு ஈஷிகிட்டு போற போட்டோ, வீடியோ காமிச்சேன்.”

வீடியோவைப் பார்த்த சோனாலி, முகத்தில் சலனமில்லை. “பணம் கேட்டு பிளாக்மெயில் பண்ணப் பாக்கறியா?”, என்று சஹானாவைப் பார்த்துக் கேட்டாள்.

“இல்லை. இது உனக்குத் தெரியும்னா நான் போயிகிட்டே இருப்பேன். என்னைக் கூட இதே சாக்கு சொல்லி ஏமாத்தி அனுபவிச்சான். ஆனா பாரு, அவன் கூட போன அந்த பொண்ணுக்கு மிஞ்சி போனா பதினேழு வயசுதான் இருக்கும். உன் பொண்ணும் டீனேஜர்தானே?”, என்று நிறுத்தினாள்.

சோனாலி பதில் சொல்லவில்லை. சஹானாவின் கைப்பேசி எண்ணைக் கேட்டாள்.

“நான் தரலைன்னாலும் உனக்கு என்னை கண்டுபிடிக்கறது ஒன்னும் கஷ்டமா இருக்காது. அதனால் நானே தரேன்”, என்று எண்ணை பகிர்ந்துகொண்டாள் சஹானா.

“என்னால உனக்கு ஒரு ஆபத்தும் வராது.  நம்பலாம்”, என்றதோடு சோனாலி கிளம்பிவிட்டாள். மறு நாள் ஒரு அழைப்பு வந்தது. அவளை வரச் சொன்ன இடம் ஒரு லாயர் அஃபீஸ்.

சுதர்ஷன் புருவம் உயர்த்த, “ஹ்ம்ம்…ரொம்ப பணக்கார இடம் மாதிரி இருந்தது. அந்த லாயர் எங்கிட்ட பேசினார். நான் எடுத்த வீடியோவெல்லாம் சரியில்லை. அவங்க தர காமெரா வெச்சு எடுத்துத் தரணும். வேற சில விஷயமெல்லாம் கலெக்ட் பண்ணனும், முக்கியமா தேவைபட்ட சாட்சி சொல்லவும் கோர்ட்டுக்கு வரணும்னு கண்டிஷன். இதுக்காக  நான் அவன் கூட மறுபடியெல்லாம் போக முடியாதுன்னு சொன்ன போது, இல்லை பதினெட்டு வயசுக்கு கம்மியா இருக்கற பொண்ணு போகும்போது செய்யணும். அதுக்கு எனக்கும், அந்த பொண்ணுக்கும் என்ன பணமோ அது பேசிக்கலாம்னு டீல் போட்டாங்க. விவாகரத்துக்குத்தான் கேட்கறாங்கன்னு உறுதி பண்ணிகிட்டேன். மைனர் பொண்ணுன்னா போலீஸ் கேஸ் ஆச்சுன்னா, அவ விவரம் வெளிய வராது ஆனா போக்சோ சட்டத்துல அவன் கம்பி எண்ணணும். அதைச் சொல்லி மிரட்டியே அவனை வெட்டி விடறதுதான் அவங்க திட்டம். டிவோர்ஸ்ல அவனுக்கு பெரிசா எதுவும் பணம் கிடைக்காதுன்னு தெரிஞ்சதும் இறங்க முடிவு பண்ணேன். போலீஸ்க்கு நான் தனியா போறதைவிட இதுதான் எனக்கும் சரின்னு பட்டுது.”

தலையில் கை வைத்த சுதர்ஷன், “இது எவ்வளவு பெரிய ஆபத்துல கொண்டுபோய் விடும்னு தெரியுமா சனா?”, அவன் செய்கையில் ஒரு வறண்ட புன்னகையை சிந்தியவள்,

“ஹ்ம்ம்…ஆனா அப்ப  நான் செத்தே போனாலும் கவலைப்படலை தர்ஷ். என் வேலையை மொத்தமா விட்டுட்டு அவங்ககிட்ட வேவு பார்க்கறதுக்கு பயிற்சி வேணும்னு கேட்டு எடுத்துகிட்டேன். அவன் கூட ரூம் போற பொண்ணுங்க சாட்சியெல்லாம் சேகரிச்சேன். எனக்கு தெரிஞ்ச ஒரு சின்ன பொண்ணு, எல்லா அட்ஜஸ்ட்மென்ட்டும் பண்ணியும் பெரிசா எதுவும் தேரலை. அவகிட்ட பேசினேன். அவளுக்கான பணமும், எனக்கு லாயர் தரப்போறதா சொன்ன பணத்தையும் சேர்த்து அவளுக்கே தரேன்னு சொல்லவும், சரின்னு ஒத்துக்கிட்டா. பணம் வந்ததும் அவ ஊருக்கே போயிடறதா சொன்னா. வீடியோ எல்லாமே அவனை மிரட்டி டைவர்ஸ் பேப்பர்ல கையெழுத்துப் போடத்தான். வெளிய வராதுன்னு லாயருங்க சொன்ன தைரியத்துல எல்லாத்தையும் அந்த பொண்ணும் அவனோட போய் சேகரிச்சுக் குடுத்தா.”

கதை போல சஹானா சொன்னாலும், அதில் அவள் சொன்னதும், சொல்லாமல் விட்ட ஆபத்துகளும் உணர்ந்தே இருந்தான் சுதர்ஷன்.

“இவ்வளவு தூரம் இதுல இறங்கியிருக்கணுமா சனா?”

உதடு கடித்தவள், “அந்த யோசனையெல்லாம் இல்லை தர்ஷ். அவனை அழிக்கணும். அது மட்டும்தான் வெறி. முழுசா மூணு மாசம் இதே வேலைதான். அப்பறம் சோனாலி விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினாங்க. அந்த பொண்ணோட வீடியோ வாக்குமூலமும் பதிவு பண்ணியிருந்தாங்க. ஒரு மறைவான இடத்துல எங்களை வெச்சிருந்தாங்க. கௌரவ் எதுவுமே பண்ண முடியாத அளவு சாட்சியங்கள் இருந்துச்சு. அவன் பசங்களுக்காக வேண்டி, மாசா மாசம் ஜீவனாம்சம் மட்டும்,வேற எதுவும் கிடையாதுன்னு துரத்திவிட்டாங்க. தீர்ப்பு வந்ததும் எங்க பணத்தை செட்டில் பண்ணி அனுப்பிட்டாங்க”

“அப்பறம் என்னாச்சு?”, ஒரு அயர்வுடன் கேட்டான் சுதர்ஷன்.

“எதுக்கும் இன்னும் ஒரு ஆறு மாசம் மறைஞ்சே இருப்போம்னு கையில் காசு இருக்கற வரை ஊர் ஊரா சுத்திகிட்டு, சின்ன சின்ன வேலை பார்த்துக்கிட்டு இருந்தேன். நினைச்சதை செஞ்சு முடிச்சேன். ஆனா பாரு அந்த நேரத்து திருப்தியைத் தாண்டி எனக்கு நிம்மதி கிடைக்கலை. இவங்களுக்குக் குடுத்த மாதிரி எனக்கும் நான் தண்டனை குடுக்கணும்தானே? நானும்தானே தப்பு பண்ணேன். அதுதானே நியாயம்? எல்லாம் தோத்துட்டு இங்க வர பயந்தேனே அதையே என் தண்டனையா நினைச்சு திரும்ப வந்தேன். ஏளனம், பச்சதாபம், இளப்பம், அவமானம், வன்மம், நக்கல்னு பலதரப்பட்ட ரியாக்ஷன்ஸ். வேணும்டி உனக்குன்னு ஒவ்வொரு வாட்டியும் சொல்லிக்குவேன். ஆனா எத்தனை கீழ்த்தரமா போனேன்னு உனக்கு மட்டுமே தெரியும்”, என்று சஹானா சொல்லி முடிக்கும்போது குரல் கம்மி தேய்ந்து போயிருந்தது.

“சனா… “, சுதர்ஷன் தன்னை மீறி எழுந்து அவளருகே சென்றிருந்தான்.

“உனக்கு நான் வேணாம் சுதர்ஷன்.   நீ நல்லவன், ப்ரில்லியண்ட், என்னை மாதிரி ஒரு பொண்ணெல்லாம் உனக்கு தேவையில்லாத பாரம். இந்த முறை அந்த கௌரவ்வை அடிச்சு அனுப்பிட்டோம். கொஞ்ச மாசம் அடங்கியிருப்பான். ஆனா திரும்ப வருவானான்னு யாருக்குத் தெரியும்?  வந்து அங்க பேசின மாதிரி திரும்ப பேசினா, உன் பேரும் சேர்ந்து கெட்டுப்போகும். இதெல்லாம் வேணாம். எந்த நேரம் நான் என்ன செய்வேன்னு சொல்ல முடியாது. எதுக்கு நீ ரிஸ்க் எடுக்கற?”

அவன் புஜம் பற்றி கண்ணில் நீர் ததும்ப பேசுபவளைத்தான் பார்த்திருந்தான்.

“தெரியலையே சனா. என் கண்ணுக்கு என்ன தெரியுதுன்னு சொல்லவா? தன்னால ஒருத்தன் வாழ்க்கை பாழாகிடுமோன்னு கிளம்பிப்போன ஒரு சின்ன பொண்ணு. அந்த வயசுல அறியாத ஊர்ல, ஒரே ஒரு ஃப்ரெண்டை நம்பிப்போய், மாடலிங்ன்ற ஒரு பெரிய உலகத்துல தைரியமா நுழையறா. வெறும் காலேஜ் லெட்டர் மட்டும் எடுத்துக்கிட்டு அமெரிக்கா போன எனக்குத் தெரியும் அந்த நிலைமை. எனக்காவது தனியா ஃபீல் பண்ணும்போது போன் பண்ணி பேசிக்க தாத்தா பாட்டி இருந்தாங்க. அதுகூட இல்லாம தன்னை மட்டுமே நம்பி, எல்லாத்தையுமே அந்த சின்னப் பொண்ணு ஹாண்டில் பண்றா. இதை செய்யலாம் இதை செய்யக்கூடாதுன்னு அவளுக்கே சில கொள்கைகள். வேற சில பொண்ணுங்க அட்ஜஸ்ட் செஞ்சாலும், என் திறமையால வருவேன்னு நிக்கறா. எத்தனை சொத்து, எல்லாத்தையும் வேண்டாம்னு தூக்கிப் போடறா. அவ அப்பாவும் அண்ணனும் அவளுக்காக நிக்க வேண்டிய நேரத்துல நிக்கலை. கைவிட்டுட்டாங்க. அந்த வலியும் வேதனையும் பார்த்தவளுக்கு காசு ஒரு பொருட்டேயில்லை. வருஷக்கணக்கா போராடி, கட்டக்கடைசி முயற்சியா அவளுக்கு ஒப்பாத விஷயத்தையும் செய்யறா. அவளுக்குத் தெரியலை. அது மூலமா அவ எதிர்பார்த்திருந்த பெரிய வாய்ப்பு கிடைச்சிருந்தாலும், அவளுக்கு அது சந்தோஷத்தை தந்திருக்காது. ஏமாந்துட்டோம்னு தெரியவந்த போதும், அழுது, சாபமிட்டு, கடவுள் பார்த்துப்பான்னு விடாம ஏமாத்துனவங்களை கிழிச்சு எறிஞ்சா. பழிவாங்கலுக்காக அந்த மைனர் பொண்ணு உதவினான்னு மட்டும் அவ பங்கு காசை அவளுக்குத் தரலை. அவங்ககிட்டருந்து வந்த எந்த பணமாயிருந்தாலும் தொட்டிருக்க மாட்டா, அவளுக்கு வேண்டியவங்ககிட்ட ரொம்ப ரொம்ப நியாயவாதியா இருக்கற பொண்ணு தனக்குன்னு வரும்போது ரொம்ப ரொம்ப கண்டிப்பா இருப்பா. அவளுக்குன்னு எந்த சலுகையும் எடுத்துக்கமாட்டா. செஞ்சது தப்புன்னு நினைச்சா எத்தனை வருஷம் கழிச்சும் அதை ஈடு கட்ட நினைப்பா”, சுதர்ஷன் சொல்லச் சொல்ல  சஹானா கண்ணில் நீர் வழிந்தது.

“இவ்வளவு கண்டிப்பு தேவையில்லை சஹானா. உன்னை நீ இன்னும் கொஞ்சம் மன்னிச்சிக்கலாம். அதே மாதிரி, எப்பவும் தனியாவே நின்னு போராடணும்னு இல்லை. நம்பிக்கையான ஒன்னு இரண்டு பேர் மேல் கொஞ்சம் நேரம் சாஞ்சிக்கலாம். தப்பில்லை”, என்று கைகளை விரிக்க, ஒரு விம்மலுடன் சுதர்ஷனைக் கட்டிக்கொண்டாள்.

அழுகை அழுகை அப்படி ஒரு அழுகை. சஹானவே நிறுத்த முயன்றும் நிற்கவில்லை. சுதர்ஷன் இருக்கையில் அமர்ந்து அவளை அருகே அமர்த்தி அணைத்திருந்தான். வருண் அப்போது சொன்னது பிடிபட்டது. “நான் இருக்கேன்னு ஒரு ஹக். அவ்வளவுதான் செய்ய முடிஞ்சது”, என்று அவன் சொன்னதுதான் இன்று சுதர்ஷனும் செய்துகொண்டிருக்கிறான். அவள் கடந்து வந்த துயரங்களை அது தரும் வலியை அவனால் என்ன செய்து போக்க முடியும்? அழுது அழுது, அப்படியே உறங்கியிருந்தாள்.

மெல்ல எழுந்தவன், அவளை அந்த நீள் இருக்கையிலேயே படுக்க வைத்தான். தலைக்கு தலையணையும், மேலே ஒரு போர்வையையும் போர்த்தினான். படுக்கையில் தூக்கி வந்து படுக்கவைப்போமா என்று ஒரு நொடி யோசிக்க, “ம்ஹூம் வேணாம். காலையில உன்னை யாருடா தூக்கச் சொன்னதுன்னு சண்டைக்கு வந்தா கஷ்டம்”, என்று நினைத்து, படுக்கையில் சென்று படுத்தான்.

உறக்கம்தான் வருவேனா என்றது. சஹானா சொன்னதே மனதில் உழன்றது. உடல், பொருள் ஆவி என்று அனைத்தையுமே மாடலிங் துறைக்குக் கொடுத்தும், அவள் ஆசை நிறைவேறவில்லை என்பது கேட்டு வருத்தமாக இருந்தது. அத்தனைக்குப் பின்பும், இங்கே வந்திருக்க வேண்டியதில்லை. இவளுக்கு தண்டனையைக் தந்துகொள்ள வேண்டும் என்று அவசியமே இல்லை. அப்படியும் மனசாட்சிக்காக செய்திருக்கிறாள். இப்படி வருண் ஜெயிக்க வேண்டும் என்று ஒரே குறியாய் இருப்பதும், அவனை விட்டுச் சென்றதற்கும், ரேகாவிற்கு செய்த குற்றத்தினை ஏதோ ஒரு வகையில் ஈடு செய்ய வேண்டும் என்ற உந்துதலால்தான் என்பதும் புரிந்தது.

இப்போது அம்மம்மவிற்காக இந்த திருமணமும், அவனுக்கு செய்த தீங்கினை சரி செய்யத்தான். ஒரு வேளை அவள் மனதிற்கு அவள் செய்த பாவங்களின் கணக்கை தீர்த்துவிட்டால் அடுத்து என்ன செய்வாள்? சென்றுவிடுவாளா?

யோசனையினோடே உறங்கியவன் வழக்கமான நேரத்திற்கு முழித்துவிட்டான். சஹானா அடித்துப்போட்டது போல உறங்கிக் கொண்டிருந்தாள். ஏதோ ஒரு வகையில் மன பாரம் குறைந்திருக்க வேண்டும். அவளை தொந்தரவு செய்யாமல் ரெடியாகிக் கிளம்பி கீழே வந்தவன் முத்தண்ணாவிடம்,

“மேலே யாரும் போக வேணாம் முத்தண்ணா. சஹானா நல்லா தூங்கிட்டு இருக்கா. அவளே எழுந்து வரட்டும். நான் ரவுண்ட்ஸ் போயிட்டு வரேன்”, என்று கிளம்பிவிட்டான். அவர்கள் எல்லோரும் இவன் கல்யாண இரவைக் கொண்டாடியிருப்பான் என்ற நினைப்பில் இருப்பார்கள் என்று அப்பாவி சுதர்ஷனுக்குத் தெரியவில்லை.

சுதர்ஷன் சொன்னது சண்முகம் மூலம் கமலத்திற்கும் தெரிய வர, பாட்டிக்கு முகம் கொள்ளாப் புன்னகை.

வீட்டிற்கு வந்தவன் சஹானா எழுந்திருக்கவில்லை என்றதும், காலை சிற்றுண்டியுடன் கமலத்தைப் பார்க்கக் கிளம்பிவிட்டான்.

“வாடா கண்ணா!”, என்றவரைப் பார்த்தால் நேற்றா அப்படி பயமுறுத்தினார் என்பது போல இருந்தது.

“நல்லாயிருக்கீங்களா அம்மம்மா. டாக்டரைப் பார்த்து டிஸ்சார்ஜ் பத்திக் கேட்டேன். கிளம்பலாம்னு சொல்லிட்டார்”, எனறான்.

“பேத்தி எப்படி இருக்கா? வரலையா?”, என்றார் கமலம்.

“தூங்கிட்டு இருக்கா பாட்டி. டயர்ட் போல”, என்றபடியே பாட்டியைப் பார்த்தவன், அவரது நமுட்டுச் சிரிப்பை புருவம் சுருக்கிப் பார்த்துக்கொண்டிருந்தான்.

‘என்ன சொலிட்டேன்னு இப்படி பார்க்கறாங்க? ஓஹ்… ஓஹ்…ஷிட்’ பல்ப் எரிந்துவிட்டது.

“அம்மம்மா… நீயா மறுபடி எதுவும் நினைக்காதே”, ஒரு விரலால் நெற்றிப் பொட்டை நீவியபடியே கூறினான்.

“நல்லதுடா. வேற யார்கிட்டயும் இப்படி உளறி வைக்காதே”, என்று அவனை மேலும் அசிங்கப்படுத்தினார்.

Advertisement