Advertisement

அத்தியாயம் – 19

இரவு உணவு அருந்திய பின் மாடியில் தஞ்சமடைந்திருந்தாள் சஹானா. மனதில் என்னவோ ஒரு குழப்பம். அப்படி இருக்கையில் வருணுடந்தான் முன்னர் பேசுவாள். ஆனால் என்னவோ இப்போது அவனை அழைக்க முடியவில்லை.

“இத்தனை வருடங்களில் எத்தனையோ குழப்பங்கள், சஞ்சலங்கள், வேதனைகள். தனியாகத்தானே சமாளித்தாய்”, என்று மனதோடு வாதிட்டாள்.

ஒரு கனைப்பு சத்தம் அவள் நடையை நிறுத்தியது. நிமிர்ந்து பார்த்தாள். பார்மல் கோட் சூட்டில் நின்றிருந்தான். கால்களில் மட்டும் வீட்டில் அணியும் காலணிகள்.

குழப்பமாக அவனைப் பார்த்தவள், “எதாவது மீட்டிங் கிளம்பறியா சுதர்ஷன்? இந்த நேரத்திலையா?”, மணியைப் பார்த்தவள் இரவு பத்து மணியை நெருங்குவது பார்த்து புருவம் சுருக்கினாள்.

“ம்ம்… ஜூம் மீட்டிங், அமெரிக்கக் கிளையன்ட் கூட. அதுதான்”, என்று தன் உடையைக் காட்டிவிட்டு, “இன்னிக்கு இங்கேயே தூங்கறதானாலும் ஓகேதான் சஹானா. எப்படியும் ஒரு மணி நேரம் மேல ஆகும் கால் முடிய. அதுதான் சொல்லிட்டு போக வந்தேன்”, என்றான்.

“ஒஹ்? இன்னும் அமெரிக்க க்ளையென்ட் கூட என்ன? அதெல்லாம் விட்டுட்டு வந்துட்டன்னு நினைச்சேன்?”

“சில ப்ளாக் செயின் அல்காரிதம் என் பேர்ல பேடன்ட் வாங்கி வெச்சிருக்கேன். அது தேவைப்படறவங்களுக்கு யூஸ் பண்ண சில மாற்றம் செய்ய ஒரு சின்ன டீம்னு அங்க ஒரு கம்பெனி வெச்சிருக்கேன்”, என்று சொன்னவன் புறப்பட யத்தனிக்க,

“நீ சொன்னது பாதிக்கும் மேல புரியலை. பட் உன் மீட்டிங்போது நானும் கூட இருக்கலாமா? எதுவும் தொந்தரவு செய்ய மாட்டேன். ப்ராமிஸ்”, என்றாள்.

என்னவோ தனியாக இருக்க விரும்பவில்லை போல என்பது வரை புரிந்தவன், “அதுக்கென்ன, வா”, என்று அழைத்துச் சென்றான்.

ஆஃபீஸ் ரூமில் இருந்த கணினியின் திரையை உயிர்ப்பிக்க, அதன் எதிர் புறம் அமர்ந்துகொண்டாள் சஹானா. கைப்பேசியில் யாருடனோ ‘தயாராக இருக்கிறீர்களா?’ என்று விசாரித்துக்கொண்டே அமர்ந்தான்.

அடுத்த ஒரு மணி நேரமும் ஆங்கிலம் பேசினார்கள் என்பது புரிந்தாலும் பேசிய பல வார்த்தைகள் புரியவில்லை. கணினித்துறையில் மிகப்பாதுகாப்பாக தகவல்களை வைக்க, அதுவும் பிட்காயின் போன்ற கிரிப்டோகரென்சி எனப்படும்  டிஜிட்டல் பணம், அதன் பரிவர்தனைகளுக்கு உபயோகிக்கப்படும் மென்பொருள் எனபது வரை கூகிள் ஆண்டவர் புண்ணியத்தில் தெரிந்துகொண்டாள்.

எந்த அலட்டலும் இல்லாது, கேள்விகளை சந்தித்து, எளிதாக விவரங்களை அளித்து, ஒரு முறை கூட விவரம் சரிபார்க்கிறேன், கேட்டு சொல்கிறேன் என்றில்லாமல் சரளமாக வந்து விழுந்தன தகவல்கள்.

ஒரு மணி நேரம் க்ளையண்ட்டோடு பேசிக்கொண்டிருந்தாலும், சஹானாவையும் பார்வையில் வைத்திருந்தான் சுதர்ஷன். சில நேரம் கைப்பேசிக்குள் முகத்தைப் புதைத்திருந்தவள், பின் அதை ஒரு ஓரம் போட்டுவிட்டு, அவனைத்தான் பார்த்துக்கொண்டிருந்தாள். என்னடா இது இப்படி பார்த்துக்கொண்டிருக்கிறாள் என்ற லேசான அசௌகரியம் இருந்தாலும் பெரிதாகக் காட்டிக்கொள்ளவில்லை.

கிளையன்ட்டுடனான மீட்டிங் முடிந்ததும், அவனிடம் வேலை செய்யும் மூவரை மீண்டும் அழைத்தவன், நடந்த காணொளிபற்றியும், அடுத்து செய்ய வேண்டியது பற்றியும் பேசிவிட்டு, எதிர்புறம் இருந்த சஹானாவை அழைத்தான்.

“:கைய்ஸ்…உங்களுக்கு ஒருத்தரை அறிமுகம் செய்யப் போறேன்”, என்று ஆங்கிலத்தில் சொல்லி “வா சனா”, என்று அழைத்தான்.

முகத்தில் இருந்த திகைப்பை சற்று மறைத்து, அவன் அருகில் வந்து நிற்க, “என் மனைவி சஹானா”, என்று அவர்களுக்குச் சொல்லி, அவர்களை சுட்டிக்காட்டி “மீட் ரே, காலின்ஸ், ரேஷ்மி” என்று இரண்டு ஆண்கள், ஒரு பெண்ணையும் அறிமுகப்படுத்தினான்.

அழகானதொரு புன்னகையுடன், அவர்களிடம் ஹலோ சொன்னவளை இன்முகமாக வாழ்த்தியவர்கள்,

“எப்போ சுதிர் கல்யாணமாச்சு? சொல்லவே இல்லை?”, என்றும் விசாரித்தும், வாழ்த்துக்கள் சொல்லியும் அடுத்த சில நிமிடங்கள் சென்றன.

ரேஷ்மி, “பாஸ், கல்யாண நாள் அதுவுமா இப்படி அவங்களை போர் அடிக்காதீங்க. போங்க போங்க, எல்லாம் நாங்க பார்த்துக்கறோம்”, என்று அழைப்பை துண்டித்தாள்.

சில நொடி அமைதிக்குப்பின், “ஏன் சுதர்ஷன் என்னை இன்ட்ரோ குடுத்த?” என்று கேட்டாள்.

கணினியை ஷட்டவுன் செய்து கொண்டிருந்தவன், “ஏன் சனா. அவங்க என் கூட வேலை பார்க்கறவங்க. செய்யத்தானே வேணும்? அம்மம்மா வந்தப்பறம் எஸ்டேட்ல இருக்கறவங்களைக் கூப்பிட்டும் எதாவது செய்யணும்”, என்றான்.

“நாளைக்கு நாம பிரிஞ்சா, எல்லாருக்கும் திரும்ப சொல்லணும். எதுக்கு?”, என்றாள் தயக்கமாக.

எழுந்து நின்றவன், “பிரியும்போதுதான? அப்பவும் நாந்தான சொல்லணும்? உனக்கு என்ன பிராப்ளம் சனா?”, கோட்டைக் கழட்டி கையில் எடுத்துக்கொண்டவன், அவள் கையையும் பிடித்துக்கொண்டு ஆஃபீஸ் அறையை விட்டு வெளியே வந்தான்.

“ரொம்ப நம்பிக்கை வைக்காதே தர்ஷ். வருண் மேல உயிரையே வெச்சிருந்தேன், அப்படியும் அவனை தூக்கிப்போட்டுட்டு போயிட்டேன்”, என்றாள் வருத்தத்துடன்.

“ஹ்ம்ம்… விடு அவனுக்கு ஒரு ரேகா வந்தா மாதிரி எனக்கு ஒரு சுரேகா வருவா, உன்னைப் பிரிஞ்ச துயரை அவ துடைப்பா”, என்று சொல்லி, அவளிடம் ஒரு முறைப்பையும், ஒரு கிள்ளையும் வாங்கிக்கொண்டான்.

முகத்தை திருப்பியவளை நிறுத்தி, தன் புறம் பார்க்க வைத்தவன், “எங்களுக்கு வேற ஒருத்தி வந்தாலும், உன் கிட்ட யாரையும் வரவிடமாட்ட இல்லை சனா?” , ஊடுறுவும் சுதர்ஷனின் கண்களை சந்திக்க முடியாமல் பார்வையை வேறு புறம் திருப்பினாள் ஆனால் பதில் இல்லை.

அதற்கு மேல் அதைப் பற்றிப் பேசாமல், “எப்ப உன் அண்ணங்கிட்ட என்னை அறிமுகப்படுத்தப்போற சனா?” மாடிப்படிகளில் ஏறியபடியே கேட்டான்.

உதடு கடித்தவள், “ஹ்ம்ம்… சொல்லணும். பொறுமையா சொல்லிக்கலாம்”, என்று பின் வாங்கினாள்.

வருண் ஏற்கனவே குருவிடம் பேசிவிட்டதாக குறுஞ்செய்தி அனுப்பியிருந்தான்.

“நல்லா இருக்காது சனா. வருண் தகவலை சொல்லிட்டான்.  நாளைக்கு நீ ஒரு வார்த்தை பேசிட்டு என் கிட்ட குடு. மிச்சம் நான் பார்த்துக்கறேன்”, என்று சொல்லவும் ஒரு உதட்டி சுழிப்பு மட்டுமே பதிலாக வந்தது. “அதிகப்பிரசங்கி!”, என்று வருணை வாய்க்குள் திட்டினாள்.

அவன் அறை வாசலுக்கு வந்தவன், அவளை பார்த்து நிற்க, தோள்களை நிமிர்த்தியவள், “நான் உன் ரூம் பார்க்கலாமா? எப்படியும் நாளையிலர்ந்து இங்க இருக்கணும்னு சொல்லியிருக்க”, என்றாள்.

“வா”, என்று முன்னால் செல்ல பின் தொடர்ந்தாள் சஹானா. விசாலமான அறையை வட்டமிட்டது கண்கள். அவனைப் போன்றே, எளிமையான அத்தியாவசியப் பொருட்கள் மட்டும் இருந்தது ஆனால் அத்தனையும் மிகத் தரமானதாக இருந்தது பார்த்தவுடன் விளங்கியது.

கோட்டை எடுத்து, அவன் உடை மாற்றும் அறைக்கு செல்ல, அந்த கதவைப் பார்த்தவள், “வாவ்”, என்று அருகே வந்து, பின் தயங்கி நிற்க,

“யா… ரொம்ப ரசனையா டிசைன் பண்ணியிருக்காங்க. உள்ள போய் பார்”, என்று வழிவிட்டான். உள்ளே நுழைந்தவள் தேக்கு அலமாரியின் கதவுகள், அதன் குமிழ்களில் இருந்த நுணுக்கமான வேலைப்பாடுகள் என்று ரசித்துப் பார்த்தாள்.

“அந்த பக்கம் இருக்க ஒரு கப்போர்ட் காலியாத்தான் இருக்கு. நீ யூஸ் பண்ணிக்க. அப்பறம் என்னோடது இன்னும் காலி பண்ணித் தரேன்”, என்று சாதாரணமாகத்தான் கூறினான். ஆனால் ஏனோ அது சஹானாவை ஆழமாகத் தாக்கியது.

“சுதர்ஷன். ப்ளீஸ். இரு. நான் உனக்கு சொல்ல வேண்டியது சிலது இருக்கு. ரூமும் கப்போர்டும் ஷேர் பண்ணப்போறோமா இல்லையான்னு அதுக்கப்பறம் டிசைட் பண்ணலாம்”, என்றாள் சட்டென்று ஒரு முடிவெடுத்தவளாக.

“உன் இஷ்டம்”, என்று சொல்லி, அங்கிருந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்தான்.சஹானாவுக்கும் அருகில் இன்னொரு இருக்கை இருந்தது. ஆனாலும் அதில் உட்காராமல் மெல்ல நடை பயின்றாள்.

“மும்பைக்கு போனப்பறம் பல முறை வாழ்க்கை  நான் எவ்வளவு பெரிய முட்டாள்னு காமிச்சிருக்கு. இன்னமும் காட்டிகிட்டு இருக்கறதும் ஆச்சரியம். உன் வாழ்க்கையில் எத்தனை சாதிச்சிருக்க. நிஜமாவே நீ பிரில்லியன்ட். ஆனால் அதை பெருசா காட்டிக்கவேயில்லை. அத்தனையும் எவ்வளவு ஈசியா நான் கலைச்சிருப்பேன்? நீ யூ.எஸ் போகப்போறங்கறதெல்லாம் அப்போ எனக்குத் தெரியாது. நான் ரொம்ப ரொம்ப ஸ்ட்ரெஸ்ல இருந்த நேரம் நீயும் பெரிய புடுங்கி மாதிரி வந்து அழுத்தம் கொடுக்கவும், தப்புன்னு தெரிஞ்சும் அப்படி பழி போட்டேன். நீ என்னை மட்டும் மாட்டிவிட்டிருந்தா நான் எதுவும் சொல்லியிருக்க மாட்டேன். வருணுக்காகத்தான் செஞ்சேன். ஆனாலும் அப்படி ஒரு பழி, கண்டிப்பா மன்னிக்க முடியாதுதான்.  உனக்கு இருந்த அதே பத்து வருஷம் எனக்கும். ஆனா ஒன்னுமே சாதிக்காம, பல இழப்புகளோட ஒரு பெரிய ஜீரோவா நிக்கறேன். இதுல எவ்வளவு திமிர், ஆட்டியூட் எனக்கு? ஆனா அதுவும் இல்லைன்னா நான் என்னாவேன்னு தெரியலை”,தன்னைத்தானே அவன் முன்னிலையில் தோலுரித்துக்காட்டுபவளை அணைத்து ஆறுதல் சொல்ல மனம் விழைந்தாலும் ஒன்றும் பேசாது அமைதியாக பார்த்திருந்தான்.

சஹானா அவன் பதிலை எதிர்பார்த்தது போலவே தெரியவில்லை. மும்பை சென்றதற்கான நெருக்கடியை வருணிடம் முன்பு சொல்லியதை சுதர்ஷனிடம் சொல்லிக்கொண்டிருந்தாள். ஆனால் இம்முறை வருணிடம் சொல்லாத மும்பைக் கதையும் வந்தது.

“ஃப்ரெண்டு குடுத்த விவரம் வெச்சு வந்துட்டேன். முதல் சில மாசம் அவ உதவியோட கொஞ்சம் லிங்க்ஸ் கிடைச்சுது. முதல்ல ஒரு ஏஜென்சில காட்லாக் மாடலா சேர்ந்தேன். ஒரு நாளைக்கு இருவது முப்பது ட்ரெஸ் போட்டு போட்டோ எடுக்கணும். அது புடவை , ட்ரெஸ் கவர்ல பிரிண்ட் போட போகும்.

என்னவோ மாடலா ஆகிட்ட மாதிரியே ஒரு ஃபீல். அடுத்து ஒரு ஆறு மாசத்துக்கெல்லாம் ஒரு ஃபாஷன் ஹவுஸ்ல வேலைக்கு சேர்ந்தேன். இன்-ஹவுஸ் மாடல். அங்க இருக்கற டிசைனர்ஸ் ரெடி பண்ற ட்ரெஸ்செல்லாம் மாடல் பண்ணனும். அப்போதான் அப்பா வந்து கூப்பிட்டார். என் வாழ்க்கை ரொம்ப நல்லா போயிட்டு இருந்ததுன்னு எனக்கு நினைப்பு. இதோ அடுத்த ஸ்டெப் பெரிய மாடலகிருவேன். பெரிய டிசைனர்ஸ், ஃபேஷன் ஹவுஸஸ்க்கு ராம்ப் வாக் போக ஆரம்பிப்பேன்னு கனவு.”

நடை பழகுவதை நிறுத்தவில்லை சஹானா. அவளை அறியாமலேயே மாடலைப்போலத்தான் சீரான நடை. முதுகு நிமிர்ந்து, தோள்கள் சாய்ந்தோ குறுக்கியோ இல்லாது சமமாக இருக்க, கைகள் காற்றில் அளையாத போது பக்கவாட்டில் இருந்தது. முயன்று அவள் பேசுவதில் கவனம் வைத்தான்.

“அதுவரைக்கும் பொண்ணுங்களை இரையா பார்க்கற ஓநாய்கள்கிட்ட சிக்காம நீந்திகிட்டு இருந்தேன். அந்த உலகத்துல ஆண்களை விரும்பற ஆண்கள் இருக்கவும், வெளியே அந்த விஷயம் தெரிய விரும்பாதவங்களுக்கு கேர்ள்-ஃப்ரெண்டா இருந்தா போதும், தேவையான பாதுகாப்பு கிடைக்கும். ஆனா, பெரிய மாடலாக மாற நிறைய அதிர்ஷ்டமும், கனெக்ஷனும் தேவைன்னு புரிஞ்சுது. அதோட முக்கியம் முகத்தில் ஒரு தனித்தன்மை இருக்கணும், என் அழகெல்லாம் சாமானிய அழகுன்னு ஒதுக்கப்பட்டதுதான் ஏராளம்”, என்று சொல்ல, அவனையும் மீறி “ஹான்?”, என்று கேள்வி எழுப்பினான்.

“ஹ்ம்ம்… எல்லாம் அளவா இருந்தா அதை அழகுன்னு கொண்டாடறதெல்லாம் மாறிப்போச்சு. கண்ணு கொஞ்சம் பெரிசாவோ, இல்லை வாய்  நீளமான்னு எதாவது ஒரு விஷயம் வித்தியாசப்படணும்னு நினைச்சாங்க. சில பேர், மாடல் அழகாயிருந்தா அவளைத்தான் பார்ப்பாங்க, அவங்க ப்ராடெக்ட் அங்க கண்ணைக் கவராதுன்னு சுமாரான முகம்தான் வேணும்னுகூட கேட்பாங்க”, இதுதான் என் உலகம் என்பதுபோல ஒரு ஏளனச் சிரிப்பு சிரித்தாள்.

எல்லாத்துக்கும்மேல அட்ஜஸ்ட்மென்ட் தேவைப்பட்டது. அதுக்கு சம்மதிக்காம என் திறமையை மட்டும் வெச்சு முயற்சி பண்ணிகிட்டேயிருந்தேன்.ஒரு சில சின்ன ஷோஸ், அட்வர்டைஸ்மென்ட் சான்ஸ் கிடைச்சுது, பட் பெருசா எதுவும் கிளிக் ஆகலை.  வயசு ஏறுது. நான் பார்த்து வந்த பொண்ணுங்க தாண்டி போயிகிட்டு இருந்தாங்க. பிரவீன்னு ஒரு மாடலிங் ஏஜென்ட்”, அவன் பேரைச் சொல்லும்போதே சஹானவின் முகம் இறுகியது. சுதர்ஷன் எங்கே செல்லப்போகிறது இந்தக் கதை என்று யூகித்திருந்தாலும்கூட மனம் சுருக்கென்று தைத்தது.

Advertisement