அத்தியாயம் 6
(ஆறு வருடங்களுக்கு முன்பு)
நானும், மித்துவும் அன்பு விடுதியில் தங்கி மூன்றாம் வருடம் தமிழ் பிரிவில் படித்துக் கொண்டிருந்தோம். என்னுடைய அத்தை, மாமா மதுரையை ஒட்டிய ஒரு கிராமத்தில் வசித்தனர். அவர்களை கஷ்டப்படுத்தக் கூடாது என சிறு வயதிலிருந்தே விடுதியில் தங்கி படித்தேன். விடுமுறையின் போது நானும் மித்துவும், அத்தை மாமா வீட்டிற்கு செல்வோம். விடுமுறை முடிந்து விடுதிக்கு வர அத்தை எங்களை விடவே மாட்டார்கள் குழந்தை போல் அடம்பிடிப்பார்கள். அவர்களை சமாதானப்படுத்தி விட்டு தான் விடுதிக்கு திரும்புவோம்.
அன்றொரு நாள் கல்லூரி முடிந்து வந்து கொண்டிருக்கும் போது, ரேணு நீ முன்னே சென்று கொண்டிரு. நான் கோவிலுக்கு சென்று வருகிறேன் என்று கூறினாள் மித்து. நான் விடுதிக்கு சென்று வெகு நேரமாகியும் அவள் வரவில்லை. அவள் போனையும் எடுக்கவில்லை. எங்களுக்கு மிகவும் பதட்டமாகவே இருந்தது. எங்களது விடுதிக் காப்பாளர் மீரா அக்காவும் அவளை தேடியும், கொஞ்ச நேரம் அங்கேயே இருந்தும் பார்த்தார்கள். அவள் வரவே இல்லை. விடுதியில் சிறுமிகள் அனைவரும் தூங்கி விட்டனர். சரியாக மணி பதினொன்றரை இருக்கும். அப்பொழுது தான் வந்தாள்.
ஒரு காரின் கதவை திறந்து வெளியே வந்து, காரின் உள்ளே ஒரு இளைஞனிடம் பேசி விட்டு, கையசைத்து உள்ளே வந்தாள்.
ஏய் மித்து, உனக்கு என்னாச்சு? எதுவும் பிரச்சனையா? கேட்டார் விடுதிக் காப்பாளர்.
அக்கா, அதெல்லாம் ஒன்றுமில்லை. நீங்கள் பயப்படாதீர்கள்.
எவ்வளவு ஈசியாக பேசுகிறாய்? மணி எத்தனை என பார்த்தாயா? இல்லையா? ரேணு கோபமாக கேட்க,
அதான் ஒன்றும் ஆகலை தானே? மித்து சொல்ல,
அப்படீன்னா, ஏதோ விபரீதம் நடந்துள்ளது தானே? என்னம்மா சேவை செய்து விட்டு வந்தாய்?
எனக்கு பசிக்கிறது, தூக்கம் வருகிறது, என அவள் பேச்சை மாற்ற,
இங்கே பாரு மித்து, நீ இவ்வளவு நேரம் கழித்து வந்தால், மோகன சுந்தரம் முதலாளியிடம் என்னால் பதில் கூற முடியாது. அவர் முதியவர், ஆதலால் நிறைய கேள்விகள் எழும். என்னால் ஒவ்வொரு முறையும் பதில் கூற முடியாமல் திணறுகிறேன் என்றார் வருத்தமாக மீரா அக்கா.
சாரி அக்கா. இனி நான் சீக்கிரமே வந்து விடுவேன். முகம் கழுவி விட்டு சாப்பிட வந்தாள். ரேணுவும் உடன் வந்தாள்.
என்ன நடந்தது, சொல்லு? உன்னை விடுதியில் இறக்கி விட்டது யார்? ரேணு ஆர்வமாக கேட்க,
நாளை காலையில் எல்லாவற்றையும் கூறுகிறேன். எனக்கு ரொம்ப சோர்வாக உள்ளது ரேணு. நாம் நாளை பேசுவோம். ஓ.கே வா என செல்லமாக ரேணுவின் கன்னத்தை தட்டினாள் மித்து.
மலையின் பின் ஒளிந்து கொண்டிருந்த கதிரவன் மீண்டெழ அனைவரும் எழுந்தனர்.
தினமும் போல் அன்றும் தயாராகி இறைவனை வழிபட வரிசையில் நின்றனர் அனைவரும் எட்டு மணியளவில். பின் சாப்பிடுவார்கள். தினசரி பட்டியலில் உள்ளபடி வேலையை கவனிப்பார்கள். பிறகு அவரவர் பள்ளி, கல்லூரி செல்வர்.
மித்ரா விடுதிக்கு நேரம் கழித்து வந்ததற்கு மறுநாள் தேனீர் பருகும் சமயத்தில் ரேணுவும், மற்றவர்களும் மித்ராவை சுற்றி வளைத்து நடந்ததை கேட்டனர்.
கோவிலுக்கு சென்று நடந்து வரும் போது காட்டுப்பகுதியில் யாரோ முணங்கும் சத்தம் கேட்டது. நான் ஓர் இடத்தில் ஒளிந்து கொண்டு , என்ன நடக்கிறது என கவனித்துக் கொண்டிருந்தேன்.
ஏய், உன்னால் இதற்கு மேல் வேகமாக நடக்க முடியாதா? ஒரு தடியன் சிறு பிள்ளையிடம் பேசினான்.
அந்த பிள்ளை அழுது கொண்டே சென்றது. அவன் அவளை இழுத்துச் சென்றான். அவன் கண்ணில் படாதவாறே அவனை பின் தொடர்ந்து சென்றேன்.
தயவு செய்து, என்னை விட்டு விடுங்கள். நான் என் அம்மாவிடம் செல்ல வேண்டும் அழுதாள் அந்த பிள்ளை.
உன் அம்மாவிடம் செல்ல முடியாது. சத்தம் போடாமல் வா. இல்லை அறுத்து விடுவேன் என அவன் கத்தியை நீட்டினான். அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் பிள்ளை சிரமப்பட, மீண்டும் மிரட்டினான்.
பெருமூச்சுடன்.. வந்து விட்டோம் என்றான் அவன். அங்கே பழைய தொழிற்சாலை இருந்தது. அந்த பிள்ளையை உள்ளே இழுத்துச் சென்றான். பேச்சு சத்தம் அதிகமாகவே கேட்டது. பின் பக்கத்தில் சிறிய துவாரம் இருந்தது. அதன் வழியாக பார்த்தால், நான்கைந்து தடியன்கள் பத்து பெண்களை கட்டி வைத்திருந்தனர்.
நான் பின்தொடர்ந்து வந்தேனே அவன், டேய் இவள் ரொம்ப படுத்தி எடுக்கிறாடா. இவளை இப்பொழுதே ஏதாவது செய்யணும்.
சும்மா இருடா. பாஸ்க்கு விஷயம் தெரிந்தால் நம்ம எல்லாரையும் கொன்னுடுவாரு. இவர்களை பார்த்தால் சரியில்லை என தோன்றியது எனக்கு.
முதலில் இடத்தை சுற்றி பார்த்தேன். செடிகள் மட்டுமே இருந்தது. என் மனதில் ஓர் எண்ணம் உதித்தது. கீழே கிடந்த நிறைய கற்களை எடுத்து,தொழிற்சாலை மேலுள்ள சில்வர் தகட்டில் கற்களை எறிந்து கொண்டே சுற்றி ஓடி வந்தேன். அது எல்லா பக்கமும் ஒலி எழுப்பியது. அதனால் தடியன்கள் அனைவரும் என்ன சத்தம் என பார்க்க சென்றனர்.
இது தான் நேரம் என்று உணர்ந்து, அங்கிருந்த பெண்களை வெளியே வர வைக்க முயற்சி செய்தேன். அவர்களும் வெளியே வந்தனர். எங்களை ஒருவன் பார்த்து விட்டு, மற்றவர்களை அழைக்க பெண்கள் அனைவரும் ஓட ஆரம்பித்தனர். தடியன்கள் துரத்தினார்கள்.
ஓடிக் கொண்டிருக்கும் போதே, ஒரு சிறுமி கீழே விழுந்தாள். நான்
அவளை தூக்கி விட்டு ஓட, மற்ற பெண்கள் அங்கங்கு ஒளிந்தனர். அனைவரும் ரோட்டை தாண்டிய காட்டிற்குள் ஒளிந்தனர். எந்த இடத்தில் உள்ளனர் என அனைவரையும் கவனித்துக் கொண்டு தான் ஓடினேன். அந்த சிறுமியும், நானும் மாட்டிக் கொண்டோம்.
சரியாக ரோட்டருகே வந்து தான் மாட்டினோம் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என கத்தினோம். யாருமே இல்லை.
இங்கே யாரும் வர மாட்டார்கள் என என்னை இழுத்து, உனக்கு எவ்வளவு தைரியம்? ஓங்கி அறைந்தான் அந்த ரெளடி. அந்த வழியாக கார் ஒன்று வந்தது. மறுபடியும் நான் கத்தினேன்.என் வாயை பொத்தினான் ஒருவன், அவன் கையை கடித்து விட, அவனே கத்தி விட்டான். அந்த கார் நின்றது. அதிலிருந்து ஒரு இளைஞன் வெளியே வந்தான்.
என்னை மறுபடியும் அவர்கள் அடிக்க வர,
ஓய்,….என ஒரு சத்தம், மஞ்சள் நிற காரின் ஒளியோடு இவர்களை நோக்கி அந்த இளைஞன் வர, அந்த சிறுமி அவளை பிடித்திருந்த தடியனை தட்டி விட்டு, அந்த இளைஞன் அருகே சென்று, அவன் கையை பிடித்துக் கொண்டு தயவு செய்து எங்களுக்கு உதவுங்கள் என அழ ஆரம்பித்தாள்.
அவன் சிரித்துக் கொண்டே, சிறுமியை ஓரமாக நிற்க வைத்து விட்டு என் பக்கம் வர, என்னை பிடித்திருந்த தடியன் எனது கையை இறுக்கமாக பிடிக்க,
டேய், கையை விடுடா என நான் அவனை அடிக்க,
என்னங்கண்ணா! ஒரு பொண்ணோட கையை இறுக்கமாக பிடிக்கலாமா? என்ன செய்றீங்க? அந்த பெண்ணை விடுங்கள். நாம விளையாடுவோம் என்றான் நக்கலாக,
விட முடியாதுடா. நீ என்ன செய்வ?
நீ உன் வழியே பார்த்து போய் விடு எச்சரித்தான் மற்றொருவன்.
அவனை பொருட்படுத்தாது, அந்த இளைஞன் அவன் கையை பிடித்து இறுக்கவே, அவன் என்னுடைய கையை விடுவித்தான்.
என்னுடைய கையை, அந்த இளைஞன் பிடித்துக் கொண்டு, அவ்விடம் விட்டு நகர, அவனது முதுகிலே தடியன் ஒருவன் அடிக்க,
அட என்னடா, சண்டை தானே போடணும். பக்கா ரெடி நான் என..எனது கையை விடுத்து, சண்டை போட ஆரம்பித்தனர்.
நான் அவரை பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த சமயம், உன்னால் தான் இவ்வளவு பிரச்சனை தடியன் என்னை அடிக்க, நான் மயங்கி விட்டேன்.
அந்த சிறுமி தான் கூறினாள் மீதியை. அந்த இளைஞன் கோபத்தில் உங்கள் வீரத்தை என்னிடம் காட்டுங்கடா என சண்டையிட்டதில் தடியன்களில் இருவர் அங்கேயே சுருண்டு படுத்து விட்டனர். மற்றவர்கள் ஓடி விட்டனர். உடனே போன் செய்து போலீசை அங்கே வர வைத்து அந்த தொழிற்சாலையை காட்ட, தேவையான தகவல்களை சேகரித்துக் கொண்டனர். இவர்களை தானே அவர்களது வீட்டில் விடுகிறேன் என கூறி விட்டு, என் அருகே வந்து என் மயக்கத்தை தெளிய வைத்தான்.
என்ன அக்கா, எங்களுக்கு உதவ வந்து உங்களுக்கு இப்படி ஆகி விட்டதே?
மற்ற பெண்களும் அங்கே வந்து, எனக்கும், அந்த இளைஞருக்கும் நன்றி கூறினார்கள்.
இவர்களுடன் நீ வரவில்லையா?
இந்த அக்கா தான் உதவினார்கள் என நடந்ததை விளக்கினார்கள் அனைவரும் அந்த இளைஞரிடம்.
தைரியமான பெண் தான் நீ..என என்னை கையில் வைத்தவாறே என்னை பார்த்து சிரித்தார். அவர் தலையில் அடிபட்டிருந்தது. மருத்துவமனை செல்ல சொன்னேன். அவர் தலையில் கட்டு போடுவதற்கான அனைத்தையும் காரிலே வைத்திருந்தார். நான் தான் கட்டு போட்டு விட்டேன். அனைவரையும் காரிலே அவர்களது வீட்டில் இறக்கி விட்டோம்.
நீங்கள் எங்கே போகணும்?
நான் விடுதி முகவரியை கூறினேன்.
விடுதியா?
ஆம்.
அம்மா, அப்பா?
எனக்கு யாருமே இல்லை. சிறுவயதிலிருந்து இப்பொழுது வரை விடுதி தான் எல்லாமே.
வேறு எதுவும் பேசவில்லை.
விடுதி வந்ததும் கீழே இறங்கினேன்.
தேங்க்ஸ் மிஸ்டர்..
“மிஸ்டர் ரகு” என்றான் சிரித்தவாறே,
“தேங்க்ஸ் ரகு சார்”
ஓ.கே என்று காரை விரட்டினான்.
போதும்மா. எனக்கு டீ ஆறிடுச்சு? மித்து கூற
மித்துக்கா, உனக்கு சூடான டீ நான் கொண்டு வருகிறேன் குட்டி ராஜீ ஓடினாள்.
என்ன மித்து, நீ மாறவே மாட்டிக்கிற. உனக்கு ஏதாவது ஆனால் என்னால தாங்கவே முடியாது. தயவு செய்து இது போல் செய்யாதே. அந்த ரகு சாருக்கு தான் நான் தேங்க்ஸ் சொல்லணும் என்றாள் ரேணு.
சரிம்மா..மித்து கிண்டலாக ரேணுவை பார்த்தாள்.
“பார்த்தேன் தீரனை
மயங்கினேன் நான்!
மயங்கினேன் நான்!
கனவினுள் நுழைந்தாய்
காதல் கள்வனாய்!
காதல் கள்வனாய்!
மனமெங்கும் பரவசம்
பரவசமே!
பரவசமே!
உடலினுள் சிலிர்ப்பு
சிலிர்ப்பாகுதே!
சிலிர்ப்பாகுதே!”