அத்தியாயம் 2
ரகு மாளீகைக்குள் நுழைய மாளீகையிலிருந்து வாட்ச்மேன் வேகமாக ஓடி வந்தார். ரகு அய்யா நீங்கள் வருவது முன்பே தெரிந்திருந்தால் கார் அனுப்பி வைத்திருப்போம்.
பரவாயில்லை முத்துச்சாமி அண்ணே.
வீட்டைச் சுற்றி தோட்டம் அமைத்து வீடே பசுமையாய், எழிலாய் காட்சியளித்தது. தன் குழந்தை ரியாவின் கையை பிடித்துக் கொண்டு உள்ளே நுழைந்தான்.
வாயெல்லாம் பல்லாக சிரித்துக் கொண்டு இன்முகமாக வரவேற்றாள் ராஜம்மா. அந்த வீட்டில் வேலை செய்பவள் என்றாலும் ரகுவிற்கு அடுத்த அம்மாவாக நன்றாக கவனித்தவள் அவனது சிறு வயதில்.
தம்பி எப்படி இருக்கீங்க? மித்ராம்மா இறந்துட்டாங்கன்னு செய்தி வந்தது என்று ராஜம்மா கூற, கண்கலங்கினான் ரகு.
அதை கவனித்த ராஜம்மா, அவளுடைய பேச்சாலேயே ரகுவை தேற்றினாள். பிறகு ரியாவை பார்த்து,
ஏய் குட்டி எப்படி இருக்க? உன்னோட அப்பாவை சின்ன வயசுல பார்த்த மாதிரியே இருக்க என ரியாவின் கன்னத்தை வருடினாள் ராஜம்மா.
தம்பி உங்க பொண்ணு முகலட்சனமாக அழகாக இருக்கிறாள்.
இனிமே தானே பார்க்கப் போறீங்க அவளோட வால்தனத்தை என்றான்.
உங்களை மாதிரியா தம்பி?
எனக்கும் மேலம்மா.
நீங்களும் கூட முதல்ல மாதிரி துறுதுறுன்னு இருந்தீங்கன்னா ரொம்ப சந்தோசமாக இருக்கும் என்றார்.
என்னால் முடியாது அம்மா. இப்பொழுது நான் இருப்பதே என்னோட ரியாக்காக தான் என கூறி விட்டு எனக்கு உங்களுடைய கையால டீ குடிக்கணும் போல இருக்கு. ரொம்ப நாள் ஆயிற்று உங்க டீ குடித்து.
தம்பி, நன்றாகவே பேச்சை மாற்றுகிறார் என மனதினுள் நினைத்தார் ராஜம்மா.
அம்மா, என்னோட லக்கேஜை எடுத்து அறையில் அடுக்கி விட்டு வர்றேன். நீங்கள் ரியாவை பார்த்துக்கோங்க என்றான்.
தாராளமாக தம்பி, இனி இது தான் என்னுடைய முதல் வேலை என பேசிக் கொண்டே ரியாவை தூக்கினாள்.
ரியா கண்ணு சாப்பிடுறியா? உனக்கு என்ன வேணும்? என சிரித்துக் கொண்டே கேட்டார் ராஜம்மா.
ராஜம்மாவின் பேச்சும், சிரிப்பும் ரியாவிற்கு பிடித்து விட்டது. அவருடன் ஒட்டிக் கொண்டாள்.
உங்களை பாட்டீன்னு கூப்பிடவா?
தாராளமாக கூப்பிடு கண்ணு.
பாட்டி, நான் தினமும் பல் துலக்கி விட்டு தான் சாப்பிடுவேன் என கூறிக் கொண்டு “ஈ” என்று பல்லை காட்டி, என் பல்லை பாருங்கள் என்றாள்.
அம்மாடியோவ், பல்லை பாரேன். அதில் ஏதோ உள்ளது என்று விளையாட்டாக கூறிய ராஜம்மாவை பார்த்து சிரித்துக் கொண்டே ரியா “ஆவ் ஆவ்” வலிக்குதே..வலிக்குதே..என நடிக்க, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர். ராஜம்மா ரியாவை “கிச்சு கிச்சு” மூட்டினார். உடனே ரியா, அம்மாவும் என்னை எப்பவுமே இப்படி தான் “கிச்சு கிச்சு” மூட்டுவார்கள் என்றாள் ஏக்கத்துடன்.
ராஜம்மா ரியாவை அணைத்துக் கொண்டார். ஒண்ணும் இல்லைடா கண்ணு கவலைப்படாதே. பிள்ளை தன் தாய் மீது வைத்திருக்கும் பாசத்தை நினைத்து, இருவரையும் பிரித்து விட்டாரே அந்த கடவுள். ரியாவை நினைத்து ராஜம்மாவிற்கு கடவுள் மீது வெறுப்பு வருவது போல் தான் இருந்தது. பிறகு ரியாவை சமாதானப்படுத்தி விட்டு,
சமையற்கட்டிற்கு சென்று, என்னோட கண்ணுக்கு பால் வேணுமா? கேட்டார் ராஜம்மா.
ம்ம்ம்…..என்றாள் ரியா.
ரியா ஹாலில் உட்கார்ந்து பால் குடித்த பிறகு, குளித்து விட்டு சாப்பிட ரகு கீழே வந்தான்.
“ கருவின் உருவமாய்
பெற்றெடுத்த
தாயின் பிரிவே
குழந்தையின்
ஏக்கமாகும்.
தாய் இல்லாத
வாழ்வே
குழந்தையின்
இருளாகும்
வாழ்வே மாயமானது
குழந்தைக்கு.”
சாப்பாட்டை டைனிங் டேபிளில் அடுக்கிக் கொண்டிருந்தார் ராஜம்மா.
ஹாலில் ரியாவுடன் யாரோ பேசுவதை கேட்டவுடன் வேகமாக வந்தான் ரகு.
அங்கு ஸ்வேதா உட்கார்ந்திருந்தாள். வந்ததே கோபம் ரகுவிற்கு. அவனது நடையில் கோபமும், சீறலும் நன்றாகவே தெரிந்தது. ரியாவை பார்த்ததும் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு,
நீ எதற்காக வந்தாய்? எப்படி வந்தாய்? என கோபத்தை மனதில் அடக்கியபடி சாதாரணமாக கேட்டான்.
நான்..நான்..என இழுத்தாள்.
எங்களை பின் தொடர்ந்து வந்தாயா? அப்படிபட்டவள் தானே நீ என அவள் பேசாமல் திணறியதை கண்டு கோபமாக பேசினான்.
நான் ஆட்டோவில் தான் வந்தேன் என அவளுடைய மனதை மறைத்துக் கொண்டு கிண்டலாக அவனை பார்த்து குறுஞ்சிரிப்போடு கூறினாள்.
ஏன் தம்பி, இவ்வளவு கோபப்படுகிறீர்கள்? ராஜம்மா கேட்க,
இல்லம்மா, இவளை பற்றி உங்களுக்கு தெரியாது ரகு சொல்ல ,
அப்படியா! உங்களுக்கு என்னை பற்றி தெரியுமா சார்? என்றாள் நக்கலாக.
அவன் முகம் வெளிறி கோபம் அதிகமானது .
தம்பி, நீங்கள் பொறுமையாக இருங்கள். இவள் நமக்கு உதவி செய்ய தான் வந்திருக்கிறாள்.
என்ன! இவள் உதவுவாளா? என்றான் ஏளனச் சிரிப்போடு.
தம்பி, நான் சொல்வதை முழுதாக கேட்டு விட்டு அப்புறம் நீங்கள் அந்த பெண்ணிடம் பேசுங்கள்.
நீங்கள் உங்கள் அறைக்கு சென்று விட்டீர்கள்.
ம்ம்ம்….
நான் ரியாவிற்கு பாலை கொடுத்தேன். அவள் குடித்துக் கொண்டிருந்தாள். மறுபடியும் சமையற்கட்டிற்கு சென்று விட்டேன். வீட்டிற்குள் பூரான் ஒன்று விறுவிறுவென்று வருவதை பார்த்து பால்தம்ளரை கீழே போட்டு விட்டு, ரியாவும் கீழே விழுந்தாள். இந்த பெண் தான் இதோ இந்த கட்டையை வைத்து பூரானை அடித்துக் கொன்றாள். ரியா இந்த பெண்ணை அணைத்தபடி நின்றாள். அப்போது தான் சத்தம் கேட்டு வெளியே வந்தேன். எல்லாம் ஒரே விநாடியில் நடந்து முடிந்தது. உங்களுடைய அறைக்கு சத்தம் கேட்காது அறை உயரத்தில் இருப்பதனால்.
இந்த பொண்ணு இவ்வளவு பெரிய உதவி செய்திருக்கிறது. நீங்கள் இப்படி கோபப்படுகிறீர்களே?
ரியாவிற்கு எதுவும் அடிபடலை தம்பி என்றார் ராஜம்மா.
நீ செய்த உதவிக்கு ரொம்ப நன்றி. நீ எதற்காக இப்போது இங்கே வந்திருக்கிறாய்?
ஸ்வேதா தன் கையில் வைத்திருந்த பையை காண்பித்து, இது ரியாவுடையது. ரொம்ப முக்கியமானது. அதனை தன்னிடம் கொடுத்த ரியா வாங்க மறந்து விட்டாள். இதை கொடுக்க தான் உங்களது ஆட்டோவை பின் தொடர வேண்டியதாயிற்று. சாரி சார்.
இது ரியா அம்மாவோட போட்டோ என ராஜம்மாவின் கையில் போட்டோவை கொடுத்தாள்.
தம்பி இந்த பெண்ணை யாரோ ஒரு பெண் தாக்க முயற்சி செய்ததாகவும் போலீஸ் காப்பாற்றியதாகவும், அவருடன் சேர்ந்து தான் நீங்கள் வந்த ஆட்டோவை பின் தொடர்ந்து வந்து இருக்கிறாள் என கூறி முடித்தார் ராஜம்மா.
“ஐ அம் வெரி சாரி” மிஸ் ஸ்வேதா என்றான் ரகு.
இட்ஸ் ஓ.கே சார்.
வாம்மா..நீயும் சாப்பிட வா ராஜம்மா கூற
இல்லைம்மா நான் கிளம்புகிறேன். நான் வந்த வேலை முடிந்தது. ரியா “பை பை” செல்லக்குட்டி என குழந்தையிடமும், வாரேன்மா என ராஜம்மாவிடமும் கூறி விட்டு திரும்பி கூட பார்க்காமல் சென்றாள். ஸ்வேதா கண்ணிலிருந்து அகலும் வரை வெளியே நின்று “பை பை“ என கையை ஆட்டிக் கொண்டிருந்தாள் ரியா.
ஸ்வேதா அவனிடம் மட்டும் சொல்லாமல் சென்றது அவனுக்கு ஏதோ மனம் கனமாகிப் போனது. ஸ்வேதாவை பார்த்த நொடியிலிருந்து, ரகுவிற்கு ஏதோ பழகிய உணர்வு தாக்கியது போலவே இருந்தது. அதனால் தான் அவளை பார்த்தவுடன் நெருக்கமான உணர்வு தோன்றக் கூடாது என்பதற்காகவே அதனை கோபமாகவே வெளிப்படுத்துகிறான்.
தம்பி, அந்த பொண்ணு யாரு? அவள் நம்முடைய ரியாவிடம் இவ்வளவு அன்பாக இருக்கிறாள். அந்த பெண்ணை பார்த்தவுடன் எனக்கு என்ன தோன்றியது தெரியுமா? ஒரு குழந்தைக்கு தேவையான பாதுகாப்பை அம்மா மட்டும் தான் தர முடியும். இருவரும் அணைத்துக் கொண்டிருந்த சமயம் அவர்களது முகபாவனைகள் அம்மா-பிள்ளை போல் இருந்தது.
அம்மா! என்னம்மா சொல்றீங்க?
இவளை போய் என்னோட மித்து இடத்தில் வைத்து பேசுகிறீர்களே? இவள் என்னோட மித்து இடத்தை நிரப்ப முடியாது. அவளும், என்னோட ரியாவும் நெருங்கி பழகுவதை கூட என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. தம்பி, எனக்கு தோன்றியதை கூறினேன் அவ்வளவுதான்.
ரியாம்மா நாம் டைனிங் டேபிளில் உட்கார்ந்து சாப்பிடுவோமா? என வாசலில் நின்ற தன் குழந்தையை வாரி அணைத்து தூக்கிக் கொண்டு, அம்மா சாப்பாடு எடுத்து வையுங்கள் என சாப்பிட ஆரம்பித்தனர்.
“ உன் முகம்
சிவக்க
என் அன்பு
உனக்கு……..வேறென்ன
உனக்கு
வேணுமடி
பொற்க்கொடியே!
என் உயிரே
உனக்குத்தானடி பெண்ணே!”
ரியாவின் பையை அவளுக்கு கொடுக்க வேண்டும் என தீர்க்கமான முடிவுடன் வேகமாக ஸ்டேஷனுக்கு வெளியே நடந்தாள் ஸ்வேதா. ஆட்டோக்காரருடன் ரகு பேசிக் கொண்டிருப்பதை கவனித்து, அவனை நோக்கி வந்த சமயம் ஒரு துப்பாக்கியிலிருந்து குண்டு வெளிப்பட்டு ஸ்வேதாவை நோக்கி வந்தது. அவளுடைய கவனம் முழுவதும் ரகு மீதே இருந்தது. அதனால் கவனிக்காமல் நடந்த ஸ்வேதாவை ஒரு இளைஞன் கீழே தள்ளி விட்டான். அவள் கீழே விழுந்தாள். குண்டு மரத்தில் பட்டு கீழே விழுந்தது.
எழுந்து “தேங்க்யூ சார்” என்றாள்.
கீழே தள்ளி விட்டதற்கு “தேங்க்யூ”வா? அந்த இளைஞன் கிண்டலாக.
முறைத்த அவள் நழுவ முயற்சித்தாள். ஆனால் அவன் அவள் வழியை மறைத்து நின்று, மேலும் கீழூமாய் பார்த்தான்.
என்ன சார்? என்றாள் முகம் சுளித்தவாறு.
நீ என்னை..நீ என்னை..தயங்கியவாரே, மறுபடியும் நீ என்னை..என இழுத்தான்.
என்ன? என்று முகத்தை கோபமாக அவள் வைத்திருக்க,
கண்ணை மூடிக் கொண்டு, நீ என்னை அண்ணனாக ஏற்றுக் கொள்வாயா? என கேட்டான்.
இதை எதிர்பார்க்காத ஸ்வேதா பதில் கூறாமல் அமைதியாக இருந்து விட்டு பின்,
அண்ணனாகவா?
ம்ம்…..தலையசைத்தான்.
எனக்கு ஒரு முக்கியமான வேலை உள்ளது. அப்புறம் பார்த்துக் கொள்வோமே என்றாள் அவசரமாக ரகுவை பார்த்துக் கொண்டே.
ரகு ஆட்டோவில் ஏறியவுடன், வேறொரு ஆட்டோவை கை காட்டி அழைத்து ஏறினாள். அந்த இளைஞன் தானும் உடன் வருவதாக கூறினான்.
இவனுடன் வாக்குவாதம் மேற்கொண்டால் ரியாவின் பையை கொடுக்க முடியாதே என நினைத்து, அவனையும் தன்னுடன் அழைத்துச் சென்றாள்.
என்ன நடக்கிறது? எதற்காக இவள் இவ்வளவு பரபரப்பாக இருக்கிறாள்? என மனதில் நினைத்துக் கொண்டு, அவளை மேலும் தொந்தரவு செய்யாமல், இவள் வேலை முடியட்டும். பிறகு பேசலாம் என நினைத்தான் அவன்.
ஆட்டோவில் யாரோ ஒரு இளைஞன் தன்னுடன் வருவதை பற்றி கூட யோசிக்காமல், ரியாவை பற்றியே நினைத்துக் கொண்டு இருந்தாள் ஸ்வேதா பயணத்தின் போதும்.
சுய நினைவு வந்தது போல், என்னை துப்பாக்கியால் சுட்டவர் யார்? என அந்த இளைஞனிடமே விசாரித்து, ராசாத்தி பற்றிய விசயங்களையும், அந்த இளைஞன் போலீஸ் எனவும் அறிந்து கொண்டாள்.
என் பெயர் பாலா. நான் ஏ2 போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் ஆக இருக்கிறேன் என்றான்.
என்ன! இவர் போலீசா? இவர் எதற்காக என்னை தங்கையாக ஏற்றுக் கொள்ள நினைக்கிறார் என பாலாவை பற்றியும் சிறு கண்ணோட்டப் பார்வையை உதிர்த்தாள்.
ரகுவுடைய மாளீகை வந்த பின்பு, நீங்கள் இங்கேயே இருங்கள். நான் சென்று வருகிறேன்.உள்ளே நுழைந்தாள்.
“என் காதல்
உன்னோடு தான்
உன் கரம் பிடிப்பேன்
கூடவே நடப்பேன்
என்றும்
உன்னுடன் தான்
என் வாழ்வு எந்நிலையிலும்”
ஸ்வேதா ரகுவின் வீட்டில் நடந்ததை யோசித்துக் கொண்டே வெளியே வந்தாள். அப்போது அந்த போலீஸ்காரன், ஆட்டோக்காரனிடம் பேசிக் கொண்டிருந்தான்.
இவன் உண்மையிலே போலீஸ்காரன் தானா? என பாலாவை பற்றி யோசித்தாள், சந்தேகித்தாள்.
பாலா சார், உங்களை நான் அண்ணனாக ஏற்று கொள்கிறேன். ஆனால்.. என பேச வந்த வார்த்தைகளை மென்று விழுங்கினாள்.
என்ன! என் மேல் நம்பிக்கை இல்லையா? புன்னகை நிரம்பிய குரலில் கேட்டான்.
இல்லை.. தயங்கி கொண்டு, ஆமாம் என்றாள்.
நான் என்னுடன் வேலை செய்யும் சுந்தர் என்பவருக்கு போன் செய்து தருகிறேன். நீயே என்னை பற்றி என்ன கேட்க வேண்டுமோ, கேட்டு தெரிந்து கொள் என்று நம்பரை அழுத்தி அவளது கையில் கொடுத்தான்.
ஹலோ, ஏ2 போலீஸ் ஸ்டேஷன் சுந்தர் ஸ்பீக்கிங், நீங்கள் யார்?
இன்ஸ்பெக்டர் இருக்கிறாரா?
சார் இல்லை. அவர் ரொம்ப பிஸி. நீங்க யாரு?
அவர் எங்கே போய் இருக்கிறார்?
சாரி மேடம். வேலை விஷயத்தை வெளியே சொல்ல முடியாது. உங்களுடைய பிரச்சனையை என்னிடம் கூறுங்கள்.
போனை துண்டித்தாள்.
அவள் பேசுவதை ஒரு குழந்தை வேடிக்கை பார்ப்பதை போல் பார்த்துக் கொண்டிருந்தான்.இடையிடையே சிரிப்பு வேற அவனை தொட்டுச் சென்றது.
ஏன் சிரிக்கிறீர்கள்?
எப்பவுமே நாங்கள் தான் மற்றவர்களை விசாரிப்போம். ஆனால் நீ என்னை பற்றியே விசாரிக்கிறாயே? சிரித்துக் கொண்டே கேட்டான்.
சாரி அண்ணா .
என் அன்பு தங்கையே! என் மேல் உள்ள சந்தேகம் முழுவதும் தீர்ந்தது தானே?
ஆம் அண்ணா என பாலாவின் கையை பிடித்துக் கொண்டாள். வாருங்கள் செல்லலாம்.
நீ எங்கே செல்ல வேண்டும்? யாரை பார்க்க வந்தாய்? உன்னை பற்றி கூறு?
எனக்கு இந்த ஊர்ல யாரையும் தெரியாது. ஏதாவது ஒரு ஹாஸ்டலில் தங்கி வேலை செய்ய வந்தேன். எனக்கு என்று யாருமே இல்லை. சிறு வயதிலிருந்தே ஹாஸ்டல் தான் எனக்கு எல்லாமே .
அவனும் கூற ஆரம்பித்தான்.
எனக்கு அம்மா தவிர யாருமே பெரிசு இல்லை. உறவுக்காரர்கள் நிறைய பேர் உள்ளனர். அப்பா இறந்த பொழுது நான் ரொம்ப சின்ன பையன். என் அம்மாவிற்கு உதவ யாருமே முன் வரலை. என் தங்கைக்கு வயது ஒன்று தான். அம்மா தனியாகவே ரொம்ப கஷ்டப்பட்டு எங்களை வளர்த்தார்கள். மீதியை அப்புறம் சொல்றேன். ரொம்ப பசிக்கிறது. நீ எங்களுடைய வீட்டிற்கு வா. போகலாம்.
அம்மா ஏதாவது கூறுவார்களா? என்னை ஏற்றுக் கொள்வார்கள் தானே?
அதெல்லாம் ஒன்றுமே கூறமாட்டார்கள். தயவுசெய்து சீக்கிரம் வா ரொம்ப பசிக்கிறது.
இங்கேயே ஏதாவது சாப்பிடலாமா? ஸ்வேதா கேட்க,
வேண்டாம்மா. அம்மா ஆசையா ஏதாவது செய்து வைத்திருப்பார்கள். உன்னை பார்த்தால் ரொம்ப சந்தோஷப்படுவார்கள்.
அப்படியா அண்ணா!
நீ வந்தே பாரு என்றான் பாலா.
பாலா பார்ப்பதற்கு மிடுக்காக இருப்பான். சிவந்த தோல். தேஜஸ்ஸான கட்டுடல். போலீஸ் மீசை. கண்ணில் மை தேய்த்தாற்போல் அப்படியொரு கருமை. போலீஸ் உடையில் இல்லாமல் சாதாரண ஆடையில் இருந்தான்.