என்ன? மஞ்சு கேட்க, திரும்பி கவிதா அவளை முறைக்க, அவள் அமைதியானாள்.
அவர் என்னிடம் சாட்சிக்காக தான் பேசினார் என்று தெரியும். ஆனால் அவர் என்னிடம் பேசும் போது அக்கறையுடன் நடந்து கொண்டார். என்னிடம் எந்தவொரு ஆணும் இவ்வளவு கண்ணியமாகவும், பிரியமுடனும் பேசியது இல்லை. ஏனென்றால் எனக்கென்று யாருமில்லை. உங்களுக்கு அம்மா, அப்பா, தங்கை, சொந்த பந்தங்கள் உள்ளனர். ஆனால் எனக்கு நான் யாரென்று எனக்கே தெரியாது.
அம்மா, அப்பா, உடன்பிறந்தவர்கள் இருக்கிறார்களா? எப்படி இருப்பார்கள்? எங்கே? என்றும் தெரியாது. எந்த பாசமும் யாரும் கொடுக்காத பட்சத்தில் அவர் என்னை பார்த்துக் கொள்கிறேன் என்றார். அவர் எந்த அர்த்தத்தில் கூறினார் என்பது தெரியாது. ஆனால் அது எனக்கு பிடித்தது. அவருடன் நிறைய பேர் இருந்தனர். அதுவும் பிடித்தது. எனக்கும் பாசம் காட்ட ஆட்கள் இருப்பார்கள் என்று நினைத்து தான், நான் அந்த வீடியோ அனுப்பினேன். எடுக்காத போட்டோவை எடிட் செய்து அனுப்பியது தவறு தான். அப்படியாவது ஏற்று கொள்வார் என்று தான் அனுப்பினேன். நீங்கள் கூறியது போல் இருக்கும் பெண் நான் இல்லை.
நீங்கள் கோபக்காரர் என்பது தெரியும். ஆனால் என்னை பற்றி இப்படி நினைப்பீர்கள் என்று எதிர் பார்க்கவே இல்லை. எதுவும் பிரச்சனை இல்லை. நான் அவ்வாறாகவே இருந்து விட்டு போகிறேன் அழுது கொண்டே மனதில் உள்ளதை கொட்டி விட்டு பாட்டியிடம் சென்று, எனக்கு மிகவும் சோர்வாக உள்ளது. நாம் நாளை சந்திப்போம். அவனை பார்த்துக் கொள்ளுங்கள் என்று மருந்தை அவர் கையில் கொடுத்து விட்டு கிளம்பினாள். ராஜா அவளை தடுத்து கையை பிடித்து, என்னை மன்னித்து விடு என்றான்.
நீங்கள் கிளம்புங்கள். நான் செல்ல வேண்டும் என்று அவனது கையை எடுத்து விட்டு,அவள் கிளம்பினாள். இதற்கு மேல் அவளை தொந்தரவு செய்ய வேண்டாமென்று அவன் கிளம்ப மனமில்லாமல் அவள் பின்னை அவளுக்கு தெரியாமல் அண்ணனும், தங்கையும் செல்ல, அவளுடைய அறைத் தோழிகள் அவளை தேடி வந்து விட்டனர். பின் ஆட்டோ பிடித்து அவளை அழைத்து செல்ல, இவர்களும் வீட்டிற்கு வந்தனர். பின் ராஜா அறைக்கு மஞ்சு சென்று நடந்ததை கேட்டு தெரிந்து விட்டு,
உனக்கு அவளை பிடித்திருக்கிறதா?
அதெல்லாம் இல்லை அவன் கூற,
அதற்கு மஞ்சு, இருக்கிறது. நீ எவ்வளவு பதற்றமானாய் தெரியுமா? நீ உரிமையோடு அவளை அறைந்தாய்? நீ பெண்கள் மீது கை வைத்ததே இல்லை. இது உன்னை மீறி நடந்திருக்கிறது. நீ உனக்கு தெரியாமலே அவளை காதலிக்க ஆரம்பித்து விட்டாய். அவள் பாலா அண்ணா மீது வைத்துள்ள காதலை உன்னிடம் விளக்கிய போது, உனக்கு கோபம் வந்ததை கவனித்தேன் .ஏற்கனவே கல்லூரியில் இரண்டு பேர் அவள் பின்னாலேயே சுற்றுகின்றனர். நன்றாக யோசித்து பார் என்று அவளறைக்கு செல்ல, அவன் உறங்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான்.
மருத்துவனையில் ரகு ஸ்வேதா அறைக்கு சென்றான்.
ரகு உங்களுக்கு எப்படி இருக்கிறது?
எனக்கு நன்றாக உள்ளது. நான் வீட்டிற்கு கிளம்புகிறேன்.
நீங்கள் இப்பொழுதே கிளம்புகிறீர்களா?
அவளை அவன் முறைக்க, இல்லை கிளம்புங்கள் என்று கூறினேன்.
ம்ம்ம்…
எதற்கும் கவனமாகவே இருங்கள்.கொஞ்ச நாட்கள் அதிகமாக வெளியே வராதீர்கள்! ரியாவை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள்.
நீ யார்? அந்த ரௌடிகளுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்? உங்களுக்கு நேரம் வரும் போது தெரியும்.
என்ன இவள்? புரியாத புதிராகவே இருக்கிறாள். என்னிடமும், ரியாவிடமும் அதிகமாகவே அக்கறையோடு இருப்பது போல் தெரிகிறது. இவள் யாராக இருப்பாள் மனதினுள் யோசித்தான்.
ஸ்வேதா, நீயும் கவனமாக இரு. நான் வருகிறேன் என்று ரகு வெளியே வரவும்,பாலா ரியாவை தூக்கிக் கொண்டு உள்ளே வரவும் சரியாக இருந்தது. ஸ்வேதாவிடம் ரியா கொஞ்ச நேரம் விளையாடினாள். ராஜம்மா அவளிடம் பேசி விட்டு அனைவரும் கிளம்ப அங்கே பார்வதியம்மா வந்து ஸ்வேதாவை கவனித்துக் கொண்டார்.
பாலா அவர்களை வீட்டில் விட்டு, ராஜம்மாவை பார்த்துக் கொள்ளுங்கள் கண்ணிலே சைகை காட்ட அவரும் தலையசைத்தார்.
ரேணு பாலா கூறியதை ஏற்றுக் கொண்டு, அவனுடன் பழையபடி பேச ஆரம்பித்தாள். ரேணுவும் ரகுவும் மருத்துவமனையில் சந்திக்காத வண்ணம் பாலா கவனித்துக் கொண்டான்.
மறுநாள் காலையில் ராஜா வேகமாக எழுந்து, பாலாவிடம் பேசி விட்டு மற்ற நண்பர்களிடமும் பேசினான். பாலாவும், ராஜாவும் பைக்கில் வந்தனர் வார்டனை பார்க்க, அவரிடம் பேசி விட்டு அருகே இருந்த வீட்டிற்குள் செல்ல, சுந்தரும்,சூர்யாவும் அங்கே வந்து நிற்க, பாலாவும் ராஜாவும் பேசிக் கொண்டே வெளியே வர,
டேய் மச்சான், சூப்பர்டா பெண்கள் விடுதி முன்பே பார்த்து விட்டாய். என்ன? தினமும் நன்றாக எல்லா பெண்களையும் ரசிக்கலாம் சூர்யா கூற, ராஜா கவிதாவின் அறையை பார்க்க,
சும்மா இருடா,அவனே வருத்தத்தில் உள்ளான்.
என்ன? என் நண்பன் வருத்தமாக உள்ளானா? ராஜாவை வைத்து அவர்கள் விளையாடிக் கொண்டிருக்க எல்லா பெண்களும் எட்டிப் பார்த்தனர். சூர்யா அவர்களை பார்த்து கை காட்ட அவனை தலையில் தட்டி, சும்மா இருடா..ராஜா அவனை திருப்ப, கவிதா துவைத்த துணியை காயப் போட வந்தவள் அவர்களை பார்த்தாள். அவள் பாலாவை பார்த்தவுடன் பயந்து ஓளிந்து கொள்ள, சுந்தர் அவள் மறைவதை பார்த்து,
யாருடா பாலா அந்த பொண்ணு? உன்னை பார்த்து மறைந்து நிற்கிறாள் கேட்க, அனைவரும் பார்க்க, கவிதாவை பார்த்து விட்டு பாலா, வார்டனிடம் சென்று கவிதாவிடம் பேச வேண்டும் என்று சொல்ல,அவரும் வேண்டாம் என்றார்.
அவளை புரிந்து கொண்டேன். இனி என்னிடம் அவ்வாறு நடந்து கொள்ள மாட்டேன் என்றாள். ஆனால் என்னை பார்க்க பயப்படுவது போல் தெரிகிறது. பேசினால் பிரச்சனை முடியும் என்றான். வார்டன் போனில் அவளை வர சொல்ல, வர மாட்டேன் என்கிறாள் பாலாவிடம் கூற,
பாலா கீழிருந்து சத்தமாக, கவிதா நீ கீழே வருகிறாயா? இல்லை நான் மேலே வரவா? அவள் எதுவும் கூறாமலிருக்க, நான் வருகிறேன் என்று கூற, அவள் வேகமாக கீழே வந்தாள்.
வாவ், சோ இன்ட்ரஸ்டிங்.. என்று சூர்யாவும் அங்கே சென்று,
ஹாய் கவிதா,என்று அவளருகே வர, அவள் பின்னாலே செல்ல பாலா அவனது சட்டையை பிடித்து இழுத்து, என்ன செய்கிறாய்? நீ போடா என…
பேச தானே வந்தேன் என்று மறுபடியும் அவளருகே சூர்யா வர, ராஜா பொறுக்க முடியாமல் அவனை தரதரவன்று இழுத்து சென்றான். பாலா பேச ஆரம்பிக்க, கவிதா ராஜாவையே பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்து தொண்டையை செறுமினான்.
அவள் கவனம் பாலா மீது விழ, வா என்று வெளியே அழைத்து வந்து அவளிடம் பேச ஆரம்பித்தான்.
நீ இப்பொழுது நன்றாக தானே இருக்கிறாய்?
ம்ம்… அவர்கள் நன்றாக இருக்கிறார்களா?
யார்?
உங்களை அன்று தடுத்தார்களே! அவர்கள்..
ஓ…ரேணுவையா? இப்பொழுது பரவாயில்லை.
அவர்களை தானே நீங்கள் காதலிக்கிறீர்கள்?
இல்லையே! அவன் கூற, எனக்கு நன்றாக தெரியும். நீங்கள் நடந்து கொண்ட விதத்திலே நன்றாக தெரிந்தது.
நான் உங்கள் காதலுக்கு இடையூறாக இருக்க மாட்டேன்.
எதற்காக என்னை பார்த்து மறைந்து நின்றாய்?
கவி தயங்கிக் கொண்டே, உங்களை காயப்படுத்தி விட்டேனே! என்ற குற்றவுணர்ச்சி தான்.
அதெல்லாம் எதுவும் இருக்க வேண்டாம். நான் எல்லாவற்றையும் மறந்து விட்டேன் அவன் கூறியவுடன், அவளுக்கு அவ்வளவு மகிழ்ச்சி. இதை பார்க்க ராஜாவிற்கு கோபம் வர ஆரம்பித்தது. இதில் சூர்யா வேற,
அந்த பொண்ணு கோபப்படுவாள். அவனிடம் பேச மாட்டாள் என்று நினைத்தால், என்னடா இருவரும் சிரிக்கிறார்கள். ஒரு வேலை பாலா அவனுடைய காதலை மறந்து இந்த பெண்ணுக்கு சரி என்று கூறி விட்டானோ! கூற, ராஜா அவர்களை முறைத்து முறைத்து பார்க்க, அவனால் முடியாமல் உள்ளே சென்றான். இதை பார்த்த சுந்தர் புன்னகையுடன் உள்ளே வந்து, இருவருடைய ஜோடியும் நன்றாக தானே உள்ளது கேட்க, நேரடியாகவே அவனை பார்த்து முறைத்தான் ராஜா.
என்னடா மச்சான், விழுந்து விட்டாய் போல,….
யார் என்ன செய்தால் எனக்கென்ன?
ஓ….அப்படியா….சரி அவர்களை சேர்த்து வைக்க வேண்டியது தான் கூற,
அவனை தடுத்து, ஏதும் செய்து விடாதே! ஏற்கனவே என் மீது கோபமாக இருக்கிறாள்.
கோபமாக இருக்கிறாளா? அப்படியென்றால் காதல் இன்னும் ஆரம்பிக்கவே இல்லையா?
இல்லை. நானே நேற்று தான் உணர்ந்தேன்.
என்ன?
அவள் மீது நான் வைத்துள்ள காதலை நேற்று தான் உணர்ந்தேன்.
நீ முதலில் நடந்ததை கூறு. அவனும் அனைத்தையும் கூறி முடித்தான்.
ஏன்டா, உன் கோபத்தை அவளிடமும் காண்பித்து விட்டாயா? உன் முதல் எதிரியே உன் கோபம் தான்.அதனை முற்றிலுமாக தவிர்க்க பார். நீ முதலில் இருந்தே அவளை காதலிப்பது போல் தெரிகிறது. அவளுக்காக தானே அந்த கைதியை காயப்படுத்தினாய். அவளை யாரும் தவறான பெண்ணாக பார்க்க கூடாது என்பதற்காக பாலா குடும்பத்தினர் முன் திட்டி இருக்கிறாய். தற்கொலை முயற்சி செய்கிறால் என்று கோபப்பட்டு அடித்திருக்கிறாய்.
நன்றாக தான் கவனித்து கொள்கிறாய். என்ன! உன்னுடைய கோபத்தால் வேலையையும், காதலையும் விட்டு விடாதே!
அவளுக்கு தான் என்னை பிடிக்கவில்லையே?
எதையும் நீயே முடிவெடுத்து விடாதே! பெண்களை புரிந்து கொள்ள யாராலும் முடியாது. எந்நேரத்தில் காதல் உதயமாகும் என்பது யாருக்கும் தெரியாது. சூர்யா உள்ளே வந்து, என்னடா செய்கிறீர்கள்?
சுந்தர், ராஜாவை வெளியே அழைத்து வர, பாலாவும் கவிதாவும் பேசி விட்டு இவர்கள் அருகே வர,
தேங்க்ஸ் சார் என்று அவளது போனை பாலாவிடம் கொடுக்க, அவனும் வாங்கி நம்பரை பதிவு செய்து கொடுத்தான்.மீண்டும் ஒரு முறை தேங்க்யூ சொல்லி விட்டு சிரித்துக் கொண்டே சென்றாள்.
பாலா வந்து ராஜாவின் தோளில் கையை போட்டுக் கொண்டு நிற்க, ராஜாவிற்கோ கடுப்பாக இருந்தது. சுந்தர் அவனை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான். பின் கைதியை இரவு நேரத்தில் தான் அழைத்து வர வேண்டும் பேசி விட்டு, உயர் அதிகாரிக்கு போன் செய்து பாலா அவனை வேரொரு இடத்திற்கு மாற்ற போவதாக கூறினான்.
அவனுக்கு மருந்திட செவிலியர் தேவை என்று கூறி இருக்கலாமே? சுந்தர் பாலாவிடம் வினவ, யாரையும் நம்ப முடியாது. நம் ராஜாவும் அவனும் மட்டுமே இருப்பார்கள். நாமே அதற்கான ஆளை ரெடி செய்வோம் என்று ரேணுவின் மாமாவிடம் நம்பிக்கையான ஒரு பெண்ணை கேட்க போவதாக நண்பர்களிடம் கூறினான்.
சரி வாருங்கள் கிளம்புவோம் என்று பாலா, ராஜாவின் பைக்கில் ஏற, நான் மஞ்சுவை கல்லூரிக்கு அழைத்து செல்ல வேண்டும் என்று பாலாவின் பதிலை கூட எதிர்பாராது கிளம்பி விட,
டேய் நில்லுடா,…..பாலா கத்திக் கொண்டிருக்க, ராஜா பாலாவை விட்டு செல்வதை பார்த்தாள் கவிதா. மற்ற நண்பர்கள் பாலாவை பார்த்து சிரிக்க,
அவனுக்கு என்னடா ஆயிற்று?
அவனுக்கு…அவனுக்கு… சுந்தர் சிரிக்க, பாலா எரிச்சலுடன்..போதும் நிறுத்துகிறாயா? சூர்யா பைக்கில் ஏறி கிளம்பினார்கள்.
வீட்டிற்கு வந்து மஞ்சுவை அழைத்து, கல்லூரியில் விட்ட பின், ஒரு நிமிடம் நில்லேன். மாலையில் நாம் வெளியே எங்காவது செல்வோமா? உன்னிடம் பேச வேண்டும் என்று சோகமாகவும்,அமைதியாகவும் பேசினான். கவிதாவும் கல்லூரி வந்தாள்.
டேய் அண்ணா, உனக்கு என்ன ஆயிற்று? காய்ச்சல் ஏதும் இருக்கிறதா? என்று அவனது நெற்றியில், கழுத்தில் கை வைத்து பார்த்துக் கொண்டிருக்க, கவிதா பார்த்துக் கொண்டே சென்றாள். அவன் அவளது கையை எடுத்து விட மஞ்சு கவிதாவை பார்த்து விட்டு,
கவி இரு. நானும் வருகிறேன் என்று அவளை நிறுத்த ராஜாவும் அவளை பார்க்க, அவளும் அவனை பார்க்க, நாம் கல்லூரி முடிந்தவுடன் பேசலாம் என்று மஞ்சு கூறி விட்டு செல்ல, ராஜா வண்டியிலிருந்து இறங்கி மஞ்சு கத்திக் கொண்டே அவர்கள் அருகே வந்து, கல்லூரி பையை கொடுக்க,
தேங்க்ஸ்டா அண்ணா, இன்று எங்களுடைய செயல் திட்டத்தை ஆரம்பிக்க போகிறோம். என்ன கவி,…
ம்ம்…அவள் கூற, நல்ல வேலையாக கொடுத்து விட்டாய் மறந்து சென்றால் இன்றும் ஆரம்பிக்க முடியாமல் போயிருக்கும்.
அவன் அவளை ஏக்கத்தோடு பார்க்க, அவளோ சென்று விட்டாள்.
அன்று உயர் அதிகாரி அழைத்தார் என்று நண்பர்கள் அனைவரும் அவரை பார்க்க செல்ல, பாலா ராஜாவிடம் என் மீது என்னடா கோபம் உனக்கு?
அதெல்லாம் ஒன்றுமில்லை ராஜா மழுப்ப,
எனக்கு தெரியும்டா மச்சான்,…பாலா கூற,
என்ன தெரியும் உனக்கு?
நீ கவிதாவை காதலிக்கிறாய் தானே! ராஜா திரும்பி சுந்தரை முறைக்க,
டேய், நான் எதையும் கூறவில்லை அவன் கூற,
உனக்கும் தெரியுமா? பாலா சுந்தரிடம் கேட்க, அவன் ஏதும் கூறாமல் ராஜாவை பார்த்தான்.
என் நண்பனை பற்றி எனக்கு தெரியாதா? பாலா ராஜாவின் தோள் மீது கையை போட,
நீ தவறாக நினைத்துக் கொண்டாய் .அவள் ரேணுவிடம் காதலை சொல்ல உதவி செய்கிறேன் என்றாள். அதனால் தான் நம்பரை கொடுத்தேன். உன்னுடையதையும் சேர்த்து…
என் நம்பரை வாங்கிக் கொண்டாளா?
ஏன்டா பைத்தியம், ஒரு பெண்ணை கை நீட்டி அடிக்கலாமா? பாலா கேட்க
உன்னை பற்றி பேசிய போது, பயங்கரமாக உன்னை திட்டுகிறாள். உன் மேல் அவளுக்கு கோபம் நிறையவே உள்ளது. நீ அவளிடம் தன்மையாக நடந்து கொண்டால், உன்னுடன் அவள் பேச வாய்ப்புள்ளது. முதலில் உன்னுடைய கோபத்தை கட்டுப்படுத்தி வை.
என்னை மன்னித்து விடு. நான் தவறாக எண்ணிக் கொண்டேன்.
அந்த பொண்ணை காதலிக்கிறாயா?சூர்யா கேட்க,
ஆமாம் என்றான்.
அட நண்பா, நான் முயற்சி செய்யலாம் என்று நினைத்தேன்.
ராஜா அவனை முறைக்க, சரி சரி .நீயே முயற்சி செய். பேசி விட்டு அதிகாரியின் அறைக்குள் நுழைந்தனர்.
வாருங்கள். உங்களுக்காக தான் காத்திருக்கிறேன். முக்கியமான வேலை ஒன்றை உடனே முடிக்க வேண்டும்.
ராஜாவை பார்த்து, நீ எதற்காக வந்தாய்? நீ அந்த கைதியையும், உன்னையும் சரி செய்து விட்டு உன் வேலையை தொடரு. முதலில் அவனை நன்றாக பார்த்துக் கொள். அவன் உயிரோடிருந்தால் தான் உனக்கு வேலை என்பதை மறந்து விடாதே! என்றும் கூற, அவனுக்கு மனது கனமாக அமைதியாக அங்கிருந்து சென்றான். அதிகாரி இருப்பதால் மற்றவர்களும் ஏதும் பேசவில்லை.
அதிகாரியிடம் பேசி விட்டு வெளியே வந்து பார்த்தால், ராஜா இல்லை. அனைவரும் அவனை தேட, மருத்துவமனையிலிருந்து பாலாவிற்கு போன் வந்தது. ஸ்வேதாவை யாரோ கொல்ல முயற்சி செய்ததாகவும், அங்கிருந்த காவலர்கள் அவளை காப்பாற்றியதாகவும் கூற, நண்பர்களிடம் ராஜாவை தேடி விட்டு பார்த்தால் கூறுங்கள் அங்கிருந்து வேகமாக கிளம்பினான்.
மருத்துவர் பாலாவிடம், நீங்கள் உங்கள் தங்கைக்கு வீட்டில் வைத்து சிகிச்சையை மேற்கொள்ளுங்கள். அவர்களால் மற்ற நோயாளிகளும் பயப்படுகிறார்கள். அவர் ஓரளவு சரியாகி விட்டார். மெதுவாக எழுந்து நடக்கலாம். பிரச்சனை இல்லை. அடுத்த ஒரே வாரத்தில் பூரணமாக சரியாகி விடுவார். சத்தான ஆகாரங்களை ஒரு மாதத்திற்கு கொடுத்து வாருங்கள். உடலும் பழைய படி சரியாகும்.
இப்பொழுதே கிளம்புகிறோம் என்று அம்மாவிடம் அனைத்தையும் கூற, பார்வதியம்மா,ரேணு, அத்தை அனைவரும் மருத்துவமனைக்கு வர, எல்லாவற்றையும் எடுத்து வைத்து விட்டு, ஸ்வேதாவை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். பாலா வீட்டிற்கு வந்தவுடன் அமைதியாக உட்கார்ந்திருக்க,
பார்வதியம்மா அவனிடம் வந்து பேசினார்.
என்னடா?
அவரது மடியில் படுத்துக் கொண்டு, ராஜாவை பற்றியும், ஸ்வேதா பற்றியும் நினைத்து கவலைப்பட,
என்னை நினைத்து நீ கவலைப்படவே வேண்டாம் என்று அவளாகவே மெதுவாக நடந்து வந்தாள்.
எப்படி தனியாக நடக்கிறாய்?
ரகு சென்ற பொழுதே அங்கிருந்த செவிலியர்கள், என்னால் இங்கே நிறைய பிரச்சனை நடக்கிறது என்று பேசினார்கள். அன்றே நடக்க ஆரம்பித்து விட்டேன்.
ஏன்மா, உன்னை நீயே இவ்வளவு கஷ்டப்படுத்திக் கொள்கிறாய்?
அதெல்லாம் ஒன்றுமில்லை.பாலாவை பார்த்து, அண்ணா! ரொம்ப சோர்வாக இருப்பது போல் தெரிகிறது.
ரேணு காபி எடுத்து வர, வேலை ஒன்று வந்துள்ளது. அதை கவனிக்க வேண்டும் என்று காபியை குடித்து விட்டு, போனை எடுத்து அவனை பார்த்து விட்டீர்களா?
கடற்கரையில் தான் இருக்கிறோம்.சீக்கிரம் வா என்று பாலாவை வரவழைக்க, அவன் வந்து ராஜாவை கண்டபடி திட்டி விட்டு, பின் அதிகாரி அவனையும் ரகசியமாக சேர்த்துக் கொள்ள சொன்னார் என்று கூறியவுடன், பாலாவையும், சுந்தரையும் கட்டிக் கொண்டு ராஜா மகிழ்ச்சியடைய,
சூர்யாவோ….டேய் என்னை மட்டும் விட்டு விட்டீர்கள் என்று அவனும் கட்டிக் கொண்டான். பின் அனைவரும் ராஜா வீட்டிற்கு வந்து அந்த கைதியை பார்க்க, பாலா ஏற்கனவே ரேணு மாமாவிடன் கூறி விட்டான் போல. அவர் போன் செய்து வந்தனா என்று செவிலியரை பற்றி கூறினார். அதனை தன் நண்பர்களிடம் கூறினான்.
ஏன்டா ராஜா. அந்த வீட்டில் ஓர் அறை தானே உள்ளது. கைதி, அந்த பெண், நீ எப்படி தங்குவீர்கள்?
அறையில் அந்த பெண்ணும், நடுப்பகுதியில் நாங்கள் இருவரும் தங்குவோம் என்று கூற, ஒரு பெண்ணை வைத்துக் கொண்டு நீ உள்ளே தங்கினால் நீ காதலிக்கும் பெண் தவறாக எண்ண மாட்டாளா? அருகில் வேறு இருப்பாள்.
அட ஆமாம்டா எந்த பெண்ணாலும் இதை ஏற்றுக் கொள்ள முடியாது சூர்யா கூற,
சும்மா இருங்கடா. அவனே பார்த்துக் கொள்வான் பாலா கூறினான். பின் நமக்கான வேலை எம் எல் ஏ பெண்ணை கடத்தி விட்டார்கள். யார்? என்ன பிரச்சனை? தெரியவில்லை. இரண்டு நாட்கள் தான் நமக்கான நேரம். இந்த கடத்தல் கேஸை முடித்து விவரங்களை தயார் செய்து அதிகாரியிடம் சப்மிட் செய்யணும்..பாலா கூற
எப்பொழுது? எங்கே? ராஜா கேட்க,
இன்று காலை தான்..கடத்தல் என்று சரியாக தெரியவில்லை. அவளது வீட்டிற்கு சுந்தர், நீ சென்று அவளுடைய தினசரி பட்டியலை வாங்கி வா…பாலா கூற, அவன் சென்றான். சூர்யா நீ கல்லூரிக்கு சென்று அவளை பற்றி விசாரித்து வா,… அவனும் கிளம்பினான். நாம் இருவரும் கொஞ்சம் காத்திருப்போம் சுந்தர் வரும் வரை….
அதற்குள் மஞ்சுவை அழைத்து வீட்டில் விட்டு வருகிறேன் கூற, பாலாவும் அவனை அனுப்பி வைத்து விட்டு வீட்டிற்கு சென்றான்.
மதுவும்,ஸ்வேதாவும் விளையாட மதுவை தூக்கி வைத்து அவளுடன் பேச ஸ்வேதாவும் அருகே வந்து அமர்ந்தாள்.
வேலை இருக்கிறது என்றாய்..அதற்குள் வந்து விட்டாய்?
விசாரணை நடக்கிறது. முடிந்தவுடன் கிளம்பி விடுவேன்.
சுந்தர் போன் செய்து பட்டியல் தயாராக உள்ளது. மற்றபடி அந்த பெண் வீட்டில் எல்லாரிடமும் நன்றாக தான் பேசி இருக்கிறாள். இங்கே சந்தேகப்படும் அளவிற்கு ஏதும் இல்லை என்றான்.
நீ வீட்டிற்கு செல். நான் கூப்பிட்டவுடன் வா என்று கூறி போனை துண்டித்தான்.
ராஜா மஞ்சுவை அழைத்து செல்ல கல்லூரிக்கு வந்தான். அங்கே கவிதாவும் நின்று கொண்டிருந்தாள். அவளை பார்த்தவுடன் மனதினுள் மகிழ்ச்சி. வெளிகாட்டிக் கொள்ளாமல்,வா செல்லலாம் என்று மஞ்சுவை கூப்பிட,
எங்கே போகலாம்? அவள் கேட்க,
வந்து…..வந்து…..ராஜா இழுக்க,
சொல்லி தொலைடா மஞ்சு கோபப்பட, ஒரு வேலை உள்ளது. உனக்கு தான் இப்பொழுது ஏதும் இல்லையே! ரகசிய வேலை…
ரகசியமாது? மண்ணாது?என்று அவனை திட்டிக் கொண்டே வீட்டிலாவது இறக்கி விடுவாயா?
அதற்கு தான் வந்தேன்…கூற, வா கவி என்று அவளை அழைக்க,
நாம் வீட்டிற்கு தானே செல்ல போகிறோம் என்று அவன் கேட்க,
ஆமாம்,அவளையும் வீட்டிற்கு தான் அழைத்து செல்ல போகிறேன் மஞ்சு கவியை கூப்பிட அவள் ராஜாவை பார்த்து வண்ணம் இருக்க, நாங்கள் முதலில் செல்கிறோம் வாணி நீங்களும் சீக்கிரம் வந்து விடுங்கள் கூறி விட்டு, கவியை முதலில் ஏற சொல்ல, அவளோ! நீ முதலில் ஏறு ….
யாராவது முதலில் ஏறுங்கள் அவன் கூற, கவிதா ஏறிய பின் மஞ்சுவும் ஏறினாள். தன்னுடைய திட்டத்தில் ஒன்றாவது நடக்கட்டும் என்று புன்னகையுடன் ஏறினாள் மஞ்சு.
இதற்கு முன் எப்படி அவனை பிடித்திருந்தாளோ அவ்வாறே பிடித்திருக்க,இருவரும் நெருக்கமாக இருந்தனர். ராஜாவின் போன் அழைக்கவே வண்டியை நிறுத்தி விட்டு பேச, அவள் அப்பொழுதும் விடாமல் பிடித்திருந்தாள். பாலா ராஜாவை அழைக்க, வீட்டிற்கு சென்று கொண்டிருக்கிறேன். இவர்களை வீட்டில் இறக்கி விட்டு வந்து விடுகிறேன். வீடு வரவே வீட்டில் இறக்கி விட்டு, திரும்பி ஒரு முறை கவிதாவை பார்த்து விட்டு சென்றான்.