அத்தியாயம் 10

ரேணு பாலா சென்ற பக்கமே பார்த்துக் கொண்டிருக்க, அவனை என்   மகன் பார்த்துக் கொள்வான். நீ கவலைப்படாதே?

அவள் பார்வதிம்மாவை ஒருவாறு பார்க்க,

எதற்காக இப்படி பார்க்கிறாய்?

உங்களுக்கு பயமாக இல்லையா?

ஆரம்பத்தில் இவன் வேலைக்கு செல்லும் போது பயமாக தான் இருந்தது. சில நேரம் காயத்துடன் தான் வருவான். நான் அழுவதை பார்த்து அவன்  என்னிடம் கூறினான். நீங்கள் வேண்டாம் என்றால் எனக்கு பிடித்த  சந்தோசத்தை கொடுக்கும் வேலையை விட தயாராக இருக்கிறேன்.

அதிலிருந்து நான் பழகிக் கொண்டேன்.

இவர்கள் பேசிக் கொண்டிருக்க, பாலா மூச்சிறைக்க ஓடி வந்தான். அவனுக்கு சட்டென தண்ணீரை நீட்டினாள். அவளை பார்த்துக் கொண்டே அவன் நீரை அருந்திக் கொண்டிருக்க, அம்மாவோ இருவரையும் பார்த்து  சிரித்துக் கொண்டிருந்தார்.

பிடித்து விட்டீர்களா? ஆர்வமுடன் ரேணு கேட்க,

இல்லை. அவனை ஒரு வண்டி விபத்துக்குள்ளாக்கி விட்டது. அவன் இறந்து விட்டான் என்றான் பாலா.

என்னடா இப்படி ஆயிற்று? பார்வதி கேட்க,

இதெல்லாம் விடுங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன் என்றான்.

உன்னுடைய குடும்பம்? பார்வதி கேட்க,

எனக்கு அம்மா, அப்பா இல்லை. அத்தை, மாமா, மித்து தான் எல்லாமே.

சார் மணி என்ன?

இரவு ஒரு மணி ஆயிற்று.

பதட்டமாக போனை எடுத்தாள். போன் அணைந்து இருந்தது. பின்  பாலாவின் போனையே பார்த்துக் கொண்டிருக்க, அவனே தானாக புரிந்து   கொண்டு போனை நீட்டினான்.

அவனிடம் போனை வாங்கி அத்தைக்கு போன் செய்தாள்.

அத்தை, மது என்ன செய்கிறாள்?

மது உன் மீது கோபமாக இருக்கிறாள்.

அவள் இன்னும் தூங்கவில்லையா? நான் அவளிடம் தூங்க சொல்லி  தானே வந்தேன்.

உனக்கு தெரியாதாம்மா. நீ இல்லாமல் அவள் எப்படி தூங்குவாள்?

மித்து எப்படி இருக்கிறாள்? அத்தை விசாரித்து விட்டு, சீக்கிரம் கிளம்பி   வீட்டிற்கு வாம்மா. என்னால் மதுவை சமாளிக்க முடியவில்லை.

இப்பொழுதே கிளம்புகிறேன் கூறி விட்டு, ஆன்ட்டி நீங்கள் வீட்டிற்கு  செல்லவில்லையா?

வீடு வெகு தொலைவில் உள்ளது பாலா சொல்ல,

நீங்கள் எங்களது வீட்டிற்கு வாருங்கள் ஆன்ட்டி. பக்கம் தான். காலையில்  வந்து ஸ்வேதாவை பார்ப்போம்.

இருவரும் தயங்கிக் கொண்டிருக்க, சார் நீங்கள் எத்தனை பெயரை  பார்ப்பீர்கள்? உங்களது அம்மா ஸ்வேதாவிற்கு சரியாகும் வரை எங்கள்  வீட்டிலே தங்கட்டும். இரவு நேரம் பாலா சார் ஸ்வேதாவை பார்த்து  கொள்ளட்டும். காலையில் நாம் பார்த்துக் கொள்வோம்.

நான் கூறுவது சரிதானே ஆன்ட்டி.

இல்லைம்மா மீண்டும் பார்வதியம்மா தயங்க, இப்பொழுது நிலைமை  சரியில்லை. நம்மை யாரோ கண்காணிப்பது போல் உள்ளது. புரிந்து  கொள்ளுங்கள். உங்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் ஸ்வேதாவிற்கு   பதிலளிக்க என்னால் முடியாதும்மா.

அம்மா நீங்கள் செல்லுங்கள். காலையில் உடைகளை எடுத்து வந்து தருகிறேன். ஒரு மாதம் தானேம்மா.

இருந்தாலும் பாலா….

தயவு செய்து அம்மா. ஆபத்து நிறைய இருப்பது போல் தெரிகிறது. நானும்  டென்சன் இல்லாமல் வேலையை கவனிப்பேன்.

அம்மாவும் தலையசைத்து சம்மதம் தெரிவிக்கவே, ரேணுவிடம் போன்  நம்பரை வாங்கிக் கொண்டு, வீட்டிற்கு சென்றவுடன் போனில் இடத்தை  அனுப்பி விடு.

நீங்கள் மறந்து ஸ்வேதாவை மித்து என்று அழைத்து விடாதீர்கள்.

அவன் அவளையே பார்த்துக் கொண்டிருக்க, நான் சென்று வருகிறேன். நீ  ஓய்வு எடுக்க நினைத்தால் என்னை அழை. நான் உடனே வந்து விடுவேன்.

நீங்கள் கிளம்புங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன்.

மருத்துவமனையிலிருந்து ரேணுவும், பார்வதியும் கிளம்பினார்கள்.

ரகு மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வரும் வழியில் ஸ்வேதாவின் பையை பார்த்து எடுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தான். ராஜம்மா  வருத்தமாக உட்கார்ந்திருந்தார்.

ஸ்வேதா எப்படி இருக்கிறாள் தம்பி?

ஆப்ரேசன் நடந்து கொண்டிருந்தது. அவளுடைய அம்மாவும், அண்ணாவும் என்னை கிளம்ப சொன்னார்கள். அதனால் நான் வந்து விட்டேன்.

அவர்கள் கூறினால் நீங்கள் வந்து விடுவீர்களா?

உங்களை காப்பாற்றி தான் அந்த பெண் இந்த நிலையில் இருக்கிறாள்.

நான் ஒத்துக் கொள்கிறேன். ஆனால் நான் என்ன செய்வது? அவர்கள்   என்னை போக சொன்ன பிறகு நான் அங்கே இருப்பது சரியாக  இராதும்மா. தினமும் நானும், ரியாவும் அவளை பார்த்து பேசி விட்டு வருவோம். அவளது பையை ரியாவின் அறைக்கு எடுத்துச் சென்றான்.

ரகு செல்வதை பார்த்துக் கொண்டே உங்களை நான் சேர்த்து வைத்தே  தீருவேன் மனதினுள் எண்ணிக் கொண்டே அவனை பின் தொடர்ந்து  சென்றார்.

உங்களுக்கு ஏதும் அடிபட்டதா? வினவினார்.

எனக்கு ஒன்றுமில்லைம்மா வருத்தத்துடன் பேசிக் கொண்டே, நான் சிறுவயதில் கவலையாக இருக்கும் போது உங்களது மடியில் தான்   படுத்து தூங்குவேன். இப்பொழுதும் கவலையாக உள்ளது. படுத்துக்  கொள்ளவா? தயங்க

என்ன தம்பி? நீங்கள் எனக்கு யாருமில்லாத சமயத்தில் அந்த கடவுள்  போல் வந்து உதவி செய்தீர்கள். அப்படியிருக்க நீங்கள் எனக்கு    மகனல்லவா? தாராளமாக படுத்துக் கொள்ளுங்கள்.

ராஜம்மா மடியில் படுத்த ரகு, மித்து அவளுடைய டைரியில் எங்களுக்கு  ஏதோ ஆபத்து உள்ளது என்று எழுதியிருந்தாள். யாரால் ஆபத்து? எதற்காக? என்ற குறிப்பு ஏதும் இல்லை. நான் பெங்களூரு செல்ல  இருப்பதை சொன்னவுடன் அவளது முகம் மாறியது. கிளம்பும் பொழுதும்  ரொம்பவே வருத்தமாக தான் இருந்தாள். திரும்பி வரும் போது அவள்  இறந்து இருந்தாள். அனைத்தையும் வைத்து பார்த்தால் அவளுக்கு ஏதோ  நடந்திருக்குமோ என்று தோன்றுகிறது.

தம்பி, நீங்கள் ரொம்ப யோசிக்காதீர்கள். எனக்கு என்னமோ நீங்கள்   எதிர்பாராத ஏதோ நடப்பது போல் தோன்றுகிறது.

ஆமாம்மா, நம்மை சுற்றி ஏதோ ஒன்று நடப்பது போல் தோன்றுகிறது.

முதலில் நீங்கள் ஓய்வெடுங்கள். மற்றதை அப்புறம் கவனித்துக்   கொள்வோம்.

சிறு வயதிலிருந்தே என்னுடைய அம்மாவிற்கு பிறகு நீங்கள் தான்  என்னை நன்றாக கவனித்துக் கொண்டீர்கள். மித்துவிடம் உங்களை பற்றி  பேசிக் கொண்டே இருப்பேன். ஆனால் இப்பொழுது அவள் என்னுடன்  இல்லை அழ ஆரம்பித்தான். ராஜம்மாவிற்கோ உண்மையை சொல்லி  விடுவோமா யோசித்தார். பின் நாம் அவ்வாறு செய்தால் காரியமே  கெட்டு விடும் என ஸ்வேதா பேசியதை நினைத்து விட்டு, எதை  பற்றியும் யோசிக்காமல் தூங்குங்கள் ரகுவை ஆறுதல் படுத்த, அவனும்   கண்ணை மூடி தூங்கினான்.

எனக்கு யாருமில்லை என்கிற கவலையை போக்கிய உங்களுக்காக   எதையும் செய்வேன் மனதினுள் நினைத்துக் கொண்டு மடியில்   இருந்தவனை படுக்கையில் படுக்க வைத்து போர்வையை போர்த்தி   விட்டு அங்கிருந்து அகன்றார்.

தன்னை காப்பாற்றியது மட்டுமில்லாமல் தன்னை அம்மாவிற்கு   அடுத்தபடியாக வைத்து பார்ப்பதையும் நினைத்து மனம் நெகிழ்ந்தார். உங்களையும், மனைவியையும் கண்டிப்பாக சேர்த்து வைத்து நீங்கள்   மகிழ்ச்சியோடு இருப்பதை காண்பேன்.

ரேணுவும், பார்வதியும் வீட்டினுள் நுழைய ஓர் அழகான குட்டிப்   பொண்ணு ஓடி வந்து ரேணுவை கட்டிக் கொண்டாள்.

மது, உன்னை தூங்க தானே சொன்னேன். நீ என்ன செய்து   கொண்டிருக்கிறாய்? ரேணு செல்லமாக கோபிக்க,

நீ இல்லாமல் நான் எப்படி தூங்குவேன் அக்கா? கண்களை கசக்கிய படி நிற்க, அவளை தூக்கிக் கொண்டு, உள்ளே வாருங்கள் ஆன்ட்டி.

மகாஅத்தை அவர்களை, நீங்கள்..? கேட்டார்.

 அவர்கள் ஸ்வேதாவின் அம்மா கூற,மகா அத்தை அவர்களை வரவேற்று   உபசரிக்க ஆரம்பித்தார்.

 மித்ரா அவளது வாழ்க்கையில் ரொம்பவே கஷ்டப்பட்டுக்   கொண்டிருக்கிறாள். இந்த நேரத்தில் அவளுக்கென்று உறவுகள்   கிடைத்தது மிகவும் சந்தோசமாக உள்ளது.

அத்தை, ஆன்ட்டி நான் பாப்பாவை தூங்க வைத்து விட்டு வருகிறேன். இருவரும் தலையசைத்தனர்.

அத்தை, ஆன்ட்டியை ஓய்வெடுக்க விடுங்கள். பிளேடு போடாதீர்கள்.

அடி ராஸ்கல் என அத்தை எழ, பார்வதி அவர்களை பார்த்து சிரித்துக்   கொண்டிருந்தார். பின் இவர்களும் உறங்க சென்றனர்.

சூரியன் உதயமானது. ரேணு எழுந்து குளித்து விட்டு, சமையலறைக்கு  சென்று காபி போட்டு அனைவரிடமும் கொடுத்து விட்டு சாப்பாடு   செய்ய தயாரானாள்.

சாப்பாடு செய்தவுடன் அதனை எடுத்து வந்து அனைவருக்கும் பரிமாறி   விட்டு, மதுவை தேடி சென்றாள். மது தோட்டத்தில் பட்டுப்பூச்சியை  பிடிக்க ஓடிக் கொண்டிருந்தாள்.

மதுக்குட்டி, எங்கே இருக்கிறீர்கள்?

அக்கா…

என்ன செய்றீங்க பட்டு?

உஷ்……பட்டுப்பூச்சி.

சாப்பிட்டு வந்து பிடிப்போமா?

சரிக்கா. மதுவை தூக்கிக் கொண்டு உள்ளே வந்தாள். ரேணு மதுவிற்கு   பூரி ஒன்றை வைத்து ஊட்டி விட்டு, நீ விளையாடு கூறி விட்டு சாப்பிட வந்து உட்கார்ந்தாள்.

பார்வதி அவளருகே வந்து, அந்த பொண்ணு யாரும்மா?

 நான் விடுதியில் தங்கி இருந்தபோது ஒரு நாள் இரவு ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டது. வெளியே வந்த போது யாரோ குழந்தையை கீழே போட்டு சென்றுள்ளார்கள். அவளை முதல் முதலாக பார்த்ததும் நான்  தான். அப்பொழுது தான் எனக்குள் ஓர் எண்ணம் உதிர்த்தது. அவளை  வளர்க்க முடிவெடுத்தேன். நானே தான் அவளுக்கு பெயரும் வைத்தேன்.

இதை பற்றி ஏதும் அவளுக்கு தெரியாது. அவள் முன்னே இதை பற்றி   நாம் பேச வேண்டாம்.

பாப்பாவை பார்த்துக் கொண்டிருந்தால், உனக்கு எப்படி கல்யாணம்  நடக்கும்?

எனக்கு கல்யாணத்தில் பெரியதாக விருப்பமில்லை. இதை பற்றி பேச வேண்டாமே?

ஆண் துணையில்லாமல் எப்படியம்மா வாழ முடியும்?

ரேணுவோ சட்டென, மித்துவும் ரகு அண்ணாவும் கல்யாணம் செய்து  அவளை பாதுகாப்பாகவா பார்த்துக் கொண்டார்.

அதுவேற பிரச்சனை, இது வேறம்மா….

தயவுசெய்து இதை பற்றி பேச வேண்டாமே!

மகா அங்கே வர, ரேணு பேசியதை பற்றி பார்வதி கூற,நானும்  எவ்வளவோ சொல்லி பார்த்து விட்டேன். எங்கே கேட்கிறாள்? சோகமாக  சொல்ல,

அவள் கூறினால் விட்டு விடுவதா?

அவளை பார்க்க வருபவர்களிடம் பிரச்சனை செய்து விடுகிறாள்.

ஆன்ட்டி, அத்தை நாங்கள் மித்துவை பார்க்க சென்று வருகிறோம்.

 நானும் வாரேன்மா பார்வதி கூற,

ஆன்ட்டி, நீங்கள் இங்கேயே இருங்கள். நான் சென்று பாலா சாரை   அனுப்புகிறேன். அவருடன் நீங்கள் வாருங்கள். மதுவை அழைத்து  செல்கிறேன்.

கொஞ்சம் நில்லு..என உள்ளே சென்று ஸ்வேதாவிற்கும், மாமாவிற்கும்   இதை கொடு. சாப்பாடு கொடுத்தார்.

மாமா வரவில்லையா?

மாமா இரு வாரத்திற்கு வெளியே செல்ல போகிறார். மதியமே  கிளம்பணுமாம். சரிங்க ஆன்ட்டி கூறி விட்டு இருவரும் கிளம்பினார்கள்.

மருத்துவமனைக்குள் வந்தவுடன் பாலா ரேணுவின் கண்ணில் பட்டான். அவனிடம் ஒரு காவலர் பேசிக் கொண்டிருந்தார்.

அவனருகே இருவரும் வந்து, ஆன்ட்டி உங்களை வீட்டிற்கு வரச்   சொன்னார்கள்.

அவனோ அவரிடம் பேசிக் கொண்டே மதுவை பார்க்க, அவரிடம் விசாரித்து விட்டு போன் பண்ணுங்கள் எனக் கூற, அவர் சென்றார்.

இந்த பொண்ணு யாரு? உனக்கு கல்யாணம் முடிந்ததா? யார் அவன்?  வினாக்களை பாலா தொடுக்க,

ஏன் இப்படி கேள்விக் கணைகளை தொடுக்கிறீர்கள்?

நான் கேட்டால் பதில் கூற வேண்டியது தானே?

உங்கள் கேள்விகளுக்கு நான் ஏன் பதில் கூற வேண்டும்?

கூறித்தான் ஆகணும்.

என்னால் கூற முடியாது. இருவரும் மாறி மாறி சண்டையிட    குழந்தை இருவரையும் பார்த்துக் கொண்டு, அக்கா எனக்கு கால்  வலிக்கிறது. என்னை தூக்கு கையை விரித்துக் காட்ட,

இருவரும் பேச்சை நிறுத்த, ரேணுவை அக்கா என்று கேட்டவுடன் தான்  பாலாவிற்கு அப்பாடா என்றது.

ஸ்வேதா சிகிச்சை முடிந்து நன்றாக இருக்கிறாள் என்று ரகு  அண்ணாவிடம் கூறி விட்டீர்களா?

நீ எதற்காக அவனை பற்றியே கேட்கிறாய்?

ஸ்வேதாவிற்கு அவரால் தான் அடிபட்டது என்று தான் நினைத்து வருந்தி கொண்டிருப்பார். அதனால் தான் கேட்டேன்.

நான் ரகுவை சந்திக்க செல்வேன். அப்பொழுது கூறி விடுகிறேன்.

நீங்கள் வீட்டிற்கு சென்று ஓய்வு எடுத்து விட்டு வாருங்கள்.

உனக்கு என் மேல் அவ்வளவு அக்கறையா?

சார், நீங்கள் அதிகமாகவே யோசிப்பது போல் உள்ளது. நீங்கள் சரியாக   தூங்கி இருக்க மாட்டீர்கள் என்று ஆன்ட்டி வருத்தப்பட்டார்கள். அதனால் தான் கூறினேன்.

 ஓ……அப்படியா? இதற்கு காரணம் வேற வைத்திருக்கிறீர்கள் போல,

அவள் கோபமாக செல்ல, அவளை கூப்பிட்டு சும்மா தான் பேசினேன். கோபப்படாதீர்கள்.

அவள் திரும்பி அவனை முறைத்துக் கொண்டு செல்ல, அவன் அவளை   கண்டு ரசித்துக் கொண்டிருந்தான்.

மதுவை, ஸ்வேதாவிடம் அழைத்து சென்றாள் ரேணு.

மது ஸ்வேதாவை பார்த்தவுடன், ஆன்ட்டி..என்று அவளருகே சென்றாள்.

அவளது வயிற்றில் கட்டை பார்த்து, ஆன்ட்டி கீழே விழுந்து   விட்டீர்களா? வலிக்கிறதா?

அதெல்லாம் இல்லைடா பாப்பா. எனக்கு ஒன்றுமில்லை. வலிக்கவில்லை.

ரேணுவின் கண்ணில் நீர் கோர்த்தது

எதற்கு ரேணு அழுகிறாய்? எனக்கு சீக்கிரமே சரியாகிவிடும்.

உனக்கு தான் இப்படி அடுக்கடுக்காய் பிரச்சனைகள்.

அட ஒன்றுமில்லை ரேணு. அவளை சமாதானப்படுத்தினாள் ஸ்வேதா.

பாப்பா நீ ஆன்ட்டி கூடவே இருக்கிறாயா? என்னால் தனியாக இருக்கவே   முடியவில்லை.

நான் உனக்கு ரகசிய விளையாட்டு சொல்லித் தரவா?

சொல்லுங்க ஆன்ட்டி..சொல்லுங்க…ஆர்வமுடன் மது கேட்டாள்.

என்னுடைய பெயரை யாரிடமும் கூறக் கூடாது. மீறி சொல்லி விட்டால்   நீ தோற்று விடுவாய்.

நான் சொல்ல மாட்டேன். இந்த விளையாட்டில் நான் வெற்றி பெறுவேன்.

என்னால் உன்னுடைய தனிமையை கூட போக்க முடியவில்லை.

நீ எப்பொழுதும் என்னுடன் இருக்க முடியாது என்று எனக்கு தான்  தெரியுமே? நீ அதை நினைத்து கவலைப்பட தேவையில்லை. எனக்கு   ஒன்றும் ஆகாது. நீ உன் மனதை போட்டு குழப்பிக் கொள்ளாதே!

மித்து, ரகு அண்ணாவிற்கு உன்னை பற்றி தெரிந்து விடுமோ என்று  பயமாக உள்ளது.

கண்டிப்பாக தெரிய வாய்ப்பில்லை. அவரை பொறுத்தவரை ஸ்வேதாவிற்கு தன்னால் தான் அடிபட்டது என்று அவர் கஷ்டத்தில்   இருப்பார். அங்கும் அவரை பார்த்துக் கொள்ள ராஜம்மா இருக்கிறார். அவரிடம் நான் எல்லாவற்றையும் சொல்லி விட்டேன்.

எல்லாவற்றையும் கூறிவிட்டாயா? அவர் ரகு அண்ணாவின் அம்மாவிற்கு   சாதகமாக இருந்தால் என்ன செய்வது?

கண்டிப்பாக இல்லை. அவர்களுக்கு ரகு மகன் மாதிரி. நாங்கள் சேர்ந்து  வாழ்ந்த போதே ராஜம்மாவை பற்றி அவர் நிறைய பேசுவார்.

நல்லவராக இருந்தால் நல்லது தான். நீ ஓய்வெடு. நான் வெளியே  இருக்கிறேன்.

மது என்னுடனே இருக்கட்டும்.

மதுவை கட்டிலில் உட்கார வைத்து விட்டு ரேணு வெளியே வந்தாள்.

ரகு, ராஜம்மா, ரியா வந்து கொண்டிருந்தனர். உடனே ரேணு மறைந்து கொண்டாள். அவர்கள் உள்ளே சென்றவுடன் ரேணு மாமாவை பார்க்க  கிளம்பினாள்.

ஸ்வேதா..ஸ்வேதா….கூப்பிட்டுக் கொண்டே ரியா ஓடி வர,

ஹே, என்னோட ரியாகுட்டி வந்துட்டா என உணர்சி வசப்பட்டு எழுந்து,  அம்மா…..சத்தத்துடன் படுத்தாள்.

ஏன்மா, இவ்வளவு அவசரப்படுற?

 ரகுவை கவனிக்காத ஸ்வேதா, ரியாவை பார்க்கணும் போல் இருந்தது. அதனால் தான் அவசரப்பட்டு விட்டேன். பேசும் போது ரகுவை பார்த்ததும்  அமைதியானாள்.

ஸ்வேதா, உனக்கு என்ன ஆயிற்று? ரியா கேட்க,

ஒன்றுமில்லைடா. ரியாவை தூக்க முயன்று தோற்றவளுக்கு உதவி செய்தான் ரகு. ரியாவும், மதுவும் கட்டிலில் ஸ்வேதா அருகே உட்கார்ந்து   இருந்தனர்.

குழந்தைகள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்க,

உனக்கு எப்படி உள்ளது? ரகு கேட்டான்.

“இட்ஸ் மச் பெட்டர்”

“ஐ அம் சாரி”, எல்லாமே என்னால் தான்.

அதெல்லாம் ஒன்றுமில்லை சார். நீங்கள் உங்களை எதற்காக  காரணமாக்கி கொள்கிறீர்கள்? நான் வலிமையானவள். எனக்கு சீக்கிரம்  சரியாகி விடும்.

அவன் சிறுபுன்னகையை உதிர்த்து விட்டு, நான் உனக்கு ஆறுதல் கூற  வந்தேன். நீ எனக்கு கூறுகிறாய்?

வெகு நாட்களுக்கு பின் அவன் சிரிப்பை பார்த்த மித்துவிற்கு பயங்கர   சந்தோசம். அவனையே பார்த்துக் கொண்டிருக்க, ராஜம்மா புரிந்து   கொண்டு,

சாப்பிட்டாயாம்மா?

இதோ…சாப்பிடணும்.

அம்மா, அப்பா இல்லாம இருக்கிறது எவ்வளவு கஷ்டம்ன்னு தெரியுமா? என் நிலைமை ரியாவிற்கு வரக்கூடாது என்று யோசித்து தான் உங்களுக்கு உதவி செய்தேன்.

அதற்காக உயிரையே கொடுப்பாயா?

அதில் என்ன தவறு உள்ளது?

தவறு என்று கூறவில்லை.

அவள் பதில் ஏதும் கூறவில்லை. தவறாக ஏதும் பேசி விட்டோமோ? ரகு  மனதில் நினைக்க, நீங்கள் தவறாக ஏதும் கூறவில்லை.

நான் மனதில் நினைத்தது ?

உங்களது முகபாவனை வைத்தே அறிந்து கொண்டேன்.

அவன் அதிர்ச்சியுடன் அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.

மதுவை  பார்த்து, இந்த பொண்ணு யார்? கேட்டான் உரிமையாக

எனது தோழியின் தங்கை.

உனக்கு யாருமில்லை என்று தானே கூறினாய்?

மாமாவை பற்றி கூறி, இதே மருத்துவமனையில் தான் வேலை  செய்கிறார் என்றும் கூறினான்.

உன்னுடைய தோழி எங்கே?

ஒரு வேலையாக வெளியே சென்றிருக்கிறாள்.

அவன் அமைதியானான்.

ஸ்வேதா விளையாடுவோமா? ரியா கூப்பிட,

ஆன்ட்டி, நானும் என்றாள் மது. ரியாவின் வயது தான் மதுவிற்கும்.

கண்டிப்பாக விளையாடலாம். ஆனால் இப்பொழுது அல்ல. நீங்கள் இருவரும் தோழிகளாகி கொள்ளுங்கள்.

எங்கே கையை கோர்த்துக் கொள்ளுங்கள். அவர்களும் கோர்த்துக்   கொண்டனர். இருவரும் எப்பொழுதும் ஒற்றுமையாக இருக்க  வேண்டும். சரியா? கேட்டாள்.

ரியாவும், மதுவும் பார்த்து சிரித்துக் கொண்டே, சரி என்று தலையசைத்தனர். வா….நாம் விளையாடுவோம். இவர்கள் பேசுவதை  கேட்டு அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர்.

                “தடைகள் தாண்டி

                  உனை

                  தேடி வந்தேன்

                  மனமுடைந்து

                  பின்

                  நகர்ந்து சென்றேன்

                  என்னுயிர் தந்து

                  எப்போதும்

                  உன்னுயிர் காப்பேன்.

                   கண்ணுக்கு கண்ணாய்

                   உயிருக்கு உயிராய்

                   நேசிப்பேன்

                   காதலுக்காக

                   பல

                   ஜென்மம்

                   காத்திருப்பேன்”.