பரபரப்பாக இருந்தது அந்த காலை பொழுது ரூபனுக்கு மனதில் இன்று மாலை மதுவிடம் எப்படி பேச வேண்டும் என்ற சிந்தனையிலேயே உழன்றது.ஏதேதோ எண்ண ஓட்டங்களுடன் தன் கல்லூரியை அடைந்தவன் தன் இருக்கையில் அமர அவனுக்காக காத்திருந்தது போல ஓடி வந்தான் பியூன்,
“சார்…நீங்க வந்தவுடன் உங்கள பார்க்க வர சொன்னாரு சார் ப்ரின்சிபால்…”என்று கூறிவிட்டு சென்றான்.அவன் சென்றவுடன் ப்ரீன்சிபாலின் அறைக்கு சென்றான் ரூபன்.அவனை முகம் கொள்ளா புன்னகையுடன் எதிர்கொண்டார் கோபாலன்.
“கம் யங் மேன்…கவ் ஆர் யூ…”என்று பொதுவாக விசாரிக்க அவனும் அதே புன்னகையுடன்,
“பைன் சார்…”என்றான்.அவனிடம் ஒரு கோப்பை எடுத்து நீட்டினார்.அவன் அதை வாங்காமல் அவரையே அவன் யோசனையாக பார்க்க,
“என்ன மேன் யோசனை பாரு….எல்லாம் உன் திறமைக்கு கிடைத்த வெற்றி…”என்று கூற ரூபனுக்கு சற்று புரிந்தது போல் இருக்க வேகமாக திறந்து பார்த்தவன் முகம் புன்னகையில் மலர்ந்தது.அவன் தற்போது இறுதி வருட படிப்பில் இருக்க அவனுக்கான புராஜெக்ட் செய்ய வேண்டும்.அதற்கு அவன் கட்டிட உள் அமைப்பை பற்றி அவன் செய்த புராஜெக்ட் மிகவும் அருமையாக வந்திருந்தது,ஆனால் பண நெருக்கடி காரணமாக அவன் அதை பூர்த்தி செய்ய முடியாமல் திணற அவனது உழைப்பையும் ஆர்வத்தையும் கண்ட கோபாலன் உதவ முன்வந்தார் அவர் அவனது திறமையின் மீது முழு நம்பிக்கை வைத்து அதை டெல்லியில் உள்ள ஒரு பெரிய கட்டிட கம்பெனியில் அவனது புராஜெக்ட் பற்றி கூறி அவனுக்கு அதை நிறைவு செய்ய நிதி உதவி செய்ததோடு அந்த கம்பெனிக்கு அவனின் புராஜெக்ட் பிடித்திருந்தால் தாங்களே எடுத்துக்கொள்ளவதாக கூறியிருந்த படிவத்தையும் கையில் கொடுத்துவிட்டார்.
“சார்…”என்று தன் இருக்கையில் இருந்து எழுந்தே விட்டான் ரூபன்.அவன் மனதில் என்ன உணர்கிறான் என்று அவனுக்கே தெரியவில்லை.எது இனி தன்னால் செய்ய முடியாதோ என்று இதுநாள் வரை மனதிற்குள் மருகிக்கொண்டிருந்தவனுக்கு இப்போது அவன் கையில் இருக்கு படிவத்தைக் கண்டு நம்பவும் முடியவில்லை அதே சமயம் நம்பாமலும் இருக்க முடியவில்லை.அவனது மனநிலையை உணர்ந்த கோபாலன்,
“என்ன மேன் இதுக்கே இவ்வளவு அதிர்ச்சியாகுர….நீ இன்னும் இந்த துறையில சாதிக்க நிறையா இருக்கு…உன்கிட்டேந்து நான் நல்ல அவுட்கம்ம எதிர்பார்குறேன்…”என்று மேலும் ஊக்கமளிக்க அவரை நெழ்ச்சியாக நோக்கியவன்,
“நன்றி சார்…என்மேல இவ்வளவு நம்பிக்கை வச்சதுக்கு நான் உங்க நம்பிக்கைய நிச்சயம் காப்பாத்துவேன்…”என்று கூற கோபாலனோ,
“ஐ நோ மேன்…”என்று மலர்ந்த முகத்துடன் கூறினார்.அவரிடம் மனதார தன் நன்றியை தெரிவித்துவிட்டு வெளியில் வந்தவனை அதன் பின் கல்லூரி வேலைகள் உள்ளே இழுத்துக்கொள்ள மற்ற அனைத்தையும் மறந்தான்.
மாலை ரூபனின் கல்லூரியின் எதிரில் உள்ள பூங்காவில் காத்திருந்தாள் மது.மனது முழுவதும் ரூபனிடம் எப்படி தன் மனதில் உள்ளதைக் கூற வேண்டும் என்று யோசனையிலேயே இருக்க நிமிடத்திற்கு ஒருமுறை அவளது கண்கள் அவன் வருகிறானா என்று பூங்கா வாயிலையே நோக்கியது.அப்போது அவளின் காலில் ஒரு பந்து விழவே இதை எடுப்பதற்காக ஓடி வந்தது ஒரு வாண்டு.கொழுகொழு கன்னங்களுடன் தத்தித்தி நடந்து வர அந்த குழந்தைக் கண்ட மதுவிற்கு சுற்றம் மறக்க அந்த குழந்தையிடம் தன் காலின் அடியில் கிடந்த பந்தை எடுத்துக் கொடுத்தாள்.தனக்கு தேவையான பொருள் கிடைத்த சந்தோஷத்தில் தன் பொக்கை வாயைத் திறந்துக் கொண்டு சிரிக்க அதன் அழகில் உலகம் மறந்தாள் மதுமிதா.இவ்வாறு அவள் குழந்தையுடன் சிறிது நேரம் விளையாட சற்று நேரம் கழித்து குழந்தையும் கிளம்ப அப்போது தன்கைகடிகாரத்தை பார்க்க அது மணி ஏழ என்று காட்ட இவ்வளவு நேரமா நாம விளையாடிட்டோம் என்று நினைத்தவளுக்கு அப்போது தான் வந்ததன் காரணம் பிடிபட ரூபன் ஏன் வரவில்லை என்று அவனுக்கு மனதில் அர்ச்சனை செய்தபடி தன் வீட்டிற்கு வந்தாள்.
தன் அறையில் புகுந்து கொண்ட மதுமிதாவிற்கு மனது சொல்லானா வலி தான் அவ்வளவு தூரம் கூறியும் ரூபன் வரவில்லை என்பது அவளது மனதை காயப்படுத்தியிற்க படுக்கையில் விழுந்தவளுக்கு கண்களில் கண்ணீர் ஆறாக பெருக தன் தலையணைக்குள் முகம் புதைத்து அழுதவள்,பின் ரூபனை விடுவதில்லை என்ற முடிவுடனே அந்த இரவைக் கழித்தாள்.
ரூபனோ தனக்கு கிடைத்த வெற்றியை தன் அன்னையிடம் பகிர வேண்டும் என்ற எண்ணத்திலே இருந்தவன் மது தன்னை அழைத்தைக் கூட மறந்திருந்தான்.தன் வேலைகள் எல்லாம் முடித்து வேகமாக வீடு திரும்பியவன் தன் தாயிடம் விஷயத்தைக் கூற அவரோ அகமகிழ்ந்து போனார்.பின்னே அவரும் தன் மகனின் எதிர்காலம் பற்றிய கவலையில் இருந்தவருக்கு இப்போது ரூபன் கூறிய செய்தி சற்று நிம்மிதியைத் தந்தது.பின் தாத்தா,பாட்டியிடமும் கூறி ஆசிர்வாதம் வாங்கினான்.
தனது புராஜெக்ட்டை முடிக்க இன்னும் இரு மாதங்களே உள்ள நிலையில் அதை எவ்வாறு முடிக்க வேண்டும் என்ற வேலைகளில் இறங்கி விட்டான்.தன் வேலைகளை தொடங்கியவன் முடிக்கவே இரவு வெகு நேரமாகிருக்க அதற்கு மேல் முடியாது என்று யோசித்தவன் மீதியை நாளை பார்க்கலாம் என்று எடுத்துவைத்துவிட்டு படுக்கையில் விழ.வெகு நாட்கள் கழித்து நிம்மதியான உறக்கம் அவனுக்கு.இது நாள் வரை எதிர்காலம் பற்றிய கவலையில் இருந்தவனுக்கு இப்போது வந்திருக்கும் வாய்ப்பு மிகுந்த நம்பிக்கை அளித்திருந்தது.அதை எப்படியாவது நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற சிந்தனை மட்டுமே அதனால் மதுமிதா பின்னுக்கு சென்றாள்.
நீண்ட நாட்களுக்கு பிறகு ரூபனுக்கு அந்த காலைப் பொழுது ரம்மியமாக விடிந்தது.எப்பொழுதும் போல் தன் கல்லூரிக்கு வந்துக் கொண்டிருந்தான்.அப்போது அவனது எதிரில் ஸ்கூட்டியுடன் வந்து நின்றாள் மதுமிதா.சிவந்த கண்களுடன் முகத்தில் கோபம் கொப்பளிக்க நின்றவள்,
“என்ன அத்தான் இவள எங்க பார்த்தோம்னு யோசிக்கிரீங்களா….”என்று மூச்சு வாங்க கேட்க ரூபனுக்கு அப்போது தான் நேற்று அவள் தன்னை சந்திக்க அழைத்ததே நியாபகத்திற்கு வர,
“சாரி நான் மறந்துட்டேன்…ரொம்ப நேரமா வெயிட் பண்ணியா…”என்று கேட்டது தான் தாமதம்,
“என்ன மறந்துட்டீங்களா…எப்படி மறக்கும் இல்ல எப்படி மறுக்கும்னு கேட்குறேன்…என்னை எப்படி நீங்க மறக்கலாம்…”என்று படபட பட்டாஸாய் மதுமிதா பொரிய ரூபனுக்கு,”இவ என்ன ஏதேதோ பேசுறா இது சரியில்லையே…”என்று மனதில் அலாரம் அடிக்க அவளை எப்படி தடுப்பது என்று யோசனைக்கு செல்ல மதுவோ அவனை கண்டபடி திட்ட ஆரம்பிக்க ரோட்டில் சிலர் இவர்களை ஒரு மார்க்கமாய் பார்க்க ஆரம்பித்தனர்.அவர்கள் பார்பதை உணர்ந்த ரூபன்,
“ஏய் போதும் விட்ட ஏதாவது பேசிட்டே இருப்பியா…இன்னக்கி சாய்காலம் பார்க்கலாம் இப்ப கிளம்பு…”என்று கூற மதுவோ,
“என்னது சாய்காலமா இதுவரைக்கும் எல்லாம் என்னால வெயிட் பன்ன முடியாது…நீங்க இன்னக்கி காலேஜ் லீவு சொல்லிட்டு வாங்க…”என்று அசால்ட்டாக கூற மதுவின் அதிரடியில் ரூபன் தான் திணறி போனான்.அவளை எப்படி கிளப்ப என்று யோசித்தவன்,
“இன்னக்கி நான் கண்டிப்பா வரேன்…நீ இப்ப கிளம்பு…”என்று கூற,
“நான் எப்படி உங்கள நம்புறது…உங்க நம்பர் தாங்க நானே நியாபகப்படுத்துறேன்….”என்று இந்த சூழ்நிலையை பயன்படுத்தி அவள் அவனது நம்பர் கேட்க ரூபனோ,
“நம்பர் எல்லாம் எதுக்கு…நான் கண்டிப்பா வரேன்…”என்று கூற மதுவோ முடியவே முடியாது என்பது போல நிற்க வேறு வழியில்லாமல் நம்பரை தந்தவன் விட்டால் போதும் என கல்லூரிக்கு சென்றுவிட்டான்.