மணிப்புறாவும் மாடப்புறாவும்-7

அத்தியாயம்- 7

இன்பாவுடனான திருமணப் பேச்சை தர்ஷினி மறுத்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டன. முருகேசனின் அக்கா குணசேகரி தன் மகன் சீனுவுடன் திருவண்ணாமலையிலிருந்து வந்திருந்தார். சாதாரணமாக வரவில்லை. தன் மகனுக்கு தர்ஷினியை திருமணம் செய்வதை பற்றிப் பேசவென்றே வந்திருந்தார். முதல் நாள் இரவே இதுபற்றி தன் தம்பியிடம் பேசியும் விட்டார். முருகேசனோ எந்த பதிலும் கூறாமல் இருந்தார்.

பத்மினி கேட்டதற்கு, “தர்ஷினி இன்பாவை கல்யாணம் செஞ்சுக்க மாட்டேன்னு சொல்லிட்டா. சீனு நல்ல பையன். நல்ல வேலையில இருக்கான். அதான் அவனுக்கு செய்யலாமான்னு யோசிக்கிறேன்” என்றார்.

பத்மினிக்கு பக் என்று ஆகிவிட்டது. குணசேகரி குடும்பத்தை அவருக்கு பிடிக்காது என்பதை விட, தர்ஷினிக்கு இன்பாவை மணம் முடித்து வைக்க வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டு கொண்டிருந்தார். முருகேசன் இப்படி பேசியதும் அதிர்ச்சி அடைந்து விட்டார்.

விடியற்காலையிலேயே எழுந்து கொண்டார் பத்மினி. யாருக்கும் தெரியாமல் வீட்டிற்கு வெளியே வந்து, லட்சுமிக்கு கைப்பேசியில் அழைத்தார். குணசேகரி வந்திருப்பதன் நோக்கத்தையும், முருகேசனின் யோசனையையும் அவரிடம் கூறினார்.

“நீங்க என்ன பண்ணுவீங்களோ எனக்கு தெரியாது. எப்படியாவது இன்பாகிட்ட பேசி இந்த கழுதைய கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்க சொல்லுங்க. என்னால இவகிட்ட மல்லுக்கட்ட முடியாது” என்றார்.

“என்ன அண்ணி இப்படி சொல்றீங்க? இவன் மட்டும் சாமான்ய பட்டவனா என்ன? மனசுக்குள்ள தர்ஷினி மேல அவ்ளோ ஆசை வச்சிருக்கான். இந்த கேஸ் விஷயத்திலதான் இப்படி வீம்பா இருக்கான்” என்றார் லட்சுமி.

“நீங்க இன்பாகிட்ட இந்த விஷயத்தை சொல்லுங்க அண்ணி. இவங்க கல்யாணம் நடக்குதோ இல்லையோ, அதுக்குள்ள இந்த மனுஷன், அக்கா பையன கட்டி வைக்கிறேன்னு குழப்பம் ஏற்படுத்துறார். அதுக்காவது ஒரு முடிவு வரட்டும்” என்றார் பத்மினி.

காலையில் இருந்தே இதே யோசனையுடன் இருந்தார் லட்சுமி. ரவியும் ரம்யாவும் பள்ளிக்கு கிளம்பி சென்றுவிட்டனர். சாரங்கபாணியும் கடைக்கு கிளம்பி சென்றுவிட்டார். இன்பா நீதிமன்றம் செல்ல தயாராகி அவனது அறையிலிருந்து வெளியே வந்தான்.

அவனை வெளியே கண்டவுடனே லட்சுமி புலம்ப ஆரம்பித்துவிட்டார்.

“குணமா இப்படி ஒரு பொண்ணு தேடினாலும் எங்கேயும் கிடைக்குமா? எனக்கு கொடுப்பினை இல்லை. யாரைச் சொல்லி என்ன பண்ண? நான் பெத்தது எப்ப பாரு அந்த பொண்ணுகிட்ட வம்பு பண்ணிக்கிட்டே இருந்தா…? அதான் வேணாம்னு சொல்லிட்டா? இந்த கேஸை விட்டு தொலைச்சா என்ன? கேஸ் நடத்தி ஜெயிச்சா லட்சம் லட்சமா பணம் கிடைக்கும்? என் தங்கம் மாதிரி ஒரு பொண்ணு கிடைக்குமா?” என புலம்பிக் கொண்டிருந்தார்.

“கொஞ்சம் நிறுத்துறியா? என்னை என்ன பண்ண சொல்ற?” என கத்தினான் இன்பா.

“நீ அந்த கேஸை எடுத்து நடத்தறதாலதான் கோவப்பட்டு தர்ஷினி கண்ணு இந்த கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டா. எல்லாம் எனக்கு தெரியும்” என்றார் லட்சுமி.

“யார் சொன்னா? அவ வந்து உன்கிட்ட அப்படி சொன்னாளா?” எனக் கேட்டான் இன்பா.

“பஷீர் எல்லாம் என்கிட்ட சொல்லிட்டான். முதல்ல அந்த கேஸை நடத்த மாட்டேன்னு உன் மாமாகிட்ட சொல்லு. தர்ஷினிகிட்ட போய் மன்னிப்பு கேட்டு கல்யாணத்துக்கு சரின்னு சொல்ல வை” என்றார் லட்சுமி.

“உன் வேலையை மட்டும் நீ பாரு. நான் என்ன பண்ணனும்னு எனக்கு எதுவும் சொல்லித் தராத” என்றான் இன்பா.

“டேய் அவ அத்தைக்காரி அவ பையனையும் கூட்டிகிட்டு நேத்து நைட்டே வந்துட்டளாம். தர்ஷினிய அவ பையன் சீனுவுக்கு கல்யாணம் பண்ண கேட்கிறாளாம். முருகேசன் அண்ணாவும் செய்யலாமான்னு யோசிக்கிறாராம்” என்றார்.

“இதெல்லாம் உனக்கு யார் சொன்னது?” எனக் கேட்டான் இன்பா.

“காலையிலேயே பத்மினி அண்ணி ஃபோன் போட்டு என்கிட்ட சொன்னாங்க” என்றார்.

“என்னை என்ன பண்ண சொல்ற? உன் தங்கம்… கண்ணு… அந்த தர்பூசணி காலில் போய் விழுவ சொல்றியா?” எனக் கேட்டான்.

“நீ அவ கால்லதான் வுழுவியோ.. இல்லை குப்புறதான் வுழுவியோ… எனக்கு தெரியாது. தர்ஷினிதான் எனக்கு மருமகளா வரணும். வேற யாரையாவது கொண்டு வரலாம்ன்னு நெனச்ச… நீ என் மகனே இல்லைன்னு உன்னை ஒதுக்கி வச்சிடுவேன்” என்றார்.

“எனக்கு கோவம் வர்ற மாதிரி பேசாம ஒழுங்கா சாப்பாடு எடுத்து வை” என்றான் இன்பா.

இட்லியையும் சட்னியையும் தட்டில் எடுத்து வைத்தவர், “தர்ஷினி ஆஃபிஸ் கிளம்பி போயிடுவா. அதுக்குள்ள போய் அவளை பார்த்து பேசிடுறியா?” எனக் கேட்டார்.

தன் அன்னையை பார்த்து முறைத்தவன், “அவளுக்கு என்ன அவ்வளவு திமிரு? நான் போய் பேச மாட்டேன்” என்றான்.

டம்ளரில் தண்ணீரை ஊற்றி ணங் என்று வைத்தார், “இப்படி வீம்பு பேசி மகாலட்சுமியை வேண்டாம்னு சொல்றானே” என்றார்.

“ஒரு சந்தானலட்சுமியே என்னை இந்தப் பாடு படுத்துற… அந்த மகாலட்சுமி வேற என்னை படுத்தனுமா?” எனக் கேட்டான்.

“இன்னைக்கு பேசி முடிக்காம அந்த குணசேகரி கிளம்ப மாட்டா” என்றார் லட்சுமி.

“என்னையவே வேணாம்னு சொல்லிட்டா. அவ அத்தை பையனுக்கு மட்டும் ஓகே சொல்லிடுவாளா? அவளே எல்லாரையும் விரட்டி அடிச்சிடுவா. நீ புலம்பாம இன்னும் கொஞ்சம் சட்னி ஊத்து” என்றான்.

“நீ போய் அவகிட்ட பேசுறதுக்கு என்ன?”

“நான் பேச வேண்டியது எல்லாம் பேசிட்டேன். திருப்பி திருப்பி போய் பேசினா என் வயித்திலேயே குத்தினாலும் குத்திடுவா. ரொம்ப பிகு பண்ணுவா. நீ அமைதியா இரு. அவ தானா வழிக்கு வருவா” என்றான்.

“டேய் அவ அத்தையும், அத்தை பையனும் அவளை பொண்ணு கேட்டு வந்திருக்காங்கடா”

“எவன் வந்தா எனக்கென்ன?” என்றவன் இன்னும் இரண்டு இட்லிகளை சாப்பிட்டுவிட்டு, தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு கிளம்பினான். அவன் தர்ஷினியின் வீட்டை தாண்டிதான் செல்ல வேண்டும். சரியாக அதே நேரத்தில் தர்ஷினியும் அலுவலகம் செல்ல ஆக்டிவாவை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள்.

தர்ஷினியின் வண்டியை லேசாக இடித்து தனது வண்டியை நிறுத்தினான் இன்பா. திரும்பி பார்த்து அவனை முறைத்தாள் தர்ஷினி.

“எவண்டி அவன்…? உன்னை பொண்ணு பார்க்க திருவண்ணாமலையில் இருந்து வந்திருக்கவன்? சொல்லிவை அவன்கிட்ட.. கை, காலை உடைச்சிடுவேன்னு” என்றான் இன்பா.

“உடைப்ப… உடைப்ப.. நீ உடைக்கிற வரைக்கும் அவன் என்ன வேடிக்கை பார்த்துட்டு நிப்பானா…? உன் எலும்பை அவன் எண்ணிடுவான்” என்றாள்.

“ஓ… அவ்வளவு பெரிய அப்பாடக்கரா அவன்? வரச்சொல்லடி அவனை” என்றான் இன்பா.

“சீனு… சீனு…” என வீட்டை பார்த்துக்கொண்டே கூவி அழைத்தாள் தர்ஷினி. வாட்டசாட்டமாக ஜிம் சென்று முறுக்கேறிய உடலுடன் வெளியே வந்தான் சீனு. இவனை இதற்கு முன்பும் பலமுறை இன்பா பார்த்திருக்கிறான். இப்போது ஆளே மாறிப் போயிருந்தான்.

தர்ஷினியின் அழைப்பில் சீனு மட்டுமில்லை குணசேகரியும் பத்மினியும் சேர்ந்தே வெளியில் வந்தனர். முருகேசன் குளித்துக் கொண்டிருந்தார்.

“என்ன பிரியா?” எனக் கேட்டான் சீனு.

“நீ கடைக்கு போகணும்னு சொன்னியே… வா உன்னை போற வழியில ட்ராப் பண்ணிட்டு போறேன். அப்பா வந்து உன்னை கூப்பிட்டுகுவார்” என அழைத்தாள்.

சீனுவை விட குணசேகரிக்கு வாயெல்லாம் பல்லாகி விட்டது.

“போடா” என சீனுவை பார்த்து குணசேகரி கூற, சீனுவும் மகிழ்வுடன் கிளம்பினான். பத்மினி தர்ஷினியை முறைத்துக் கொண்டு நின்றிருந்தார்.

வண்டியை விட்டு கீழே இறங்கிய இன்பா, தர்ஷினியின் ஆக்டிவாவில் இருந்த சாவியைப் பார்த்தான். நொடியில் வண்டியை பூட்டி சாவியை சட்டைப் பைக்குள் போட்டுக் கொண்டான்.

“சாவியைக் கொடுடா” என்றாள் தர்ஷினி.

“ஏய்… என்னடா வம்பு பண்றியா?” எனக் கேட்டான் சீனு.

“ஆமாண்டா வம்புதான் பண்றேன். என்ன பண்ணுவ?” என்றான் இன்பா.

“சீனு நீ உள்ள போய் கப்போர்ட்ல இன்னொரு சாவி இருக்கும் எடுத்துட்டு வா” என்றாள் தர்ஷினி. அவள் கூறிய உடனே சீனுவுக்கு முன் உள்ளே சென்ற பத்மினி சாவியை எடுத்து அவரது கையில் வைத்துக்கொண்டார். சீனு சாவியை தேடிக்கொண்டிருந்தான்.

அதற்குள் இன்பா அங்கு கிடந்த ஆணி ஒன்றை எடுத்து தர்ஷினியின் ஆக்டிவாவின் பின்பக்க டயரை பங்க்சர் செய்தான்.

“அறிவு இருக்காடா உனக்கு?” என கேட்டாள் தர்ஷினி.

“உனக்கு இருக்காடி? இருந்தா அந்த தடியனை வண்டியில வச்சு கூப்பிட்டுகிட்டு போவேன்னு நிப்பியா?” எனக் கேட்டான் இன்பா.

“நான் என்ன வேணா பண்ணுவேன். நீ யாருடா கேட்க?” என்றாள் தர்ஷினி.

“உன்னை கட்டிக்கப் போறவண்டி” என்றான் இன்பா.

“நீயாவே சொல்லிக்குவியா?”

“ சரி நீ சொல்லு” என்றான்.

“சாவியைக் காணோம்” என கூறிக்கொண்டே வந்தான் சீனு. இன்பா அவனது சட்டைப்பையில் இருந்த சாவியை எடுத்து தர்ஷினியிடம் கொடுத்து “இப்ப இந்த தடியனை வச்சி கூட்டிட்டு போ” என்றான்.

“யாரைப் பார்த்துடா தடியன்னு சொன்ன?” என சீறினான் சீனு.

“உன்னைதாண்டா சொன்னேன்” என்றான் இன்பா.

சீனு அவனை அடிக்க செல்ல தர்ஷினி சீனுவின் கைகளை பிடித்துக் கொண்டாள்.

“நீ விடு தர்ஷினி. அவனை உண்டு இல்லைன்னு பண்றேன்” என கத்தினான் சீனு. குளித்து விட்டு வந்த முருகேசனும் சத்தம் கேட்டு வீட்டிற்கு வெளியில் வந்தார். அதற்குள் ரஹீம்பாய், பஷீர் இருவரும் அங்கு வந்து விட்டனர். இன்பா அசையாமல் நின்று கொண்டிருந்தான். அவனது பார்வை சீனுவை பிடித்துக் கொண்டிருந்த தர்ஷினியின் கைகளில் நிலைபெற்றிருந்தது.

இன்பாவையும் அவன் பார்வை சென்ற இடத்தையும் பார்த்த ரஹீம் பாய் “கொஞ்சம் அமைதியாக இருப்பா” என சீனுவிடம் கூறி, தன் பக்கம் இழுத்து நிறுத்தினார். அவன் அமைதியானான்.

“என்ன பேட்டி பிரச்சனை?” என தர்ஷினியிடம் ரஹீம் கேட்க, “இவன் என் வண்டியை பங்க்சர் பண்ணிட்டான்” என்றாள் தர்ஷினி. முருகேசனும் அங்கு வந்துவிட்டார்.

“என்ன இன்பா இதெல்லாம்?” என ரஹீம்பாய் கேட்க, எல்லோரும் பார்க்க தர்ஷினி வண்டியின் முன் டயரையும் பங்க்சர் செய்தான்.

யாரும் எதுவும் செய்யாமல் அவனை பார்த்து நின்றனர். சீனுவுக்கு கோவம் வந்தாலும், மாமாவே ஒன்றும் கூறாமல் இருக்கும் பொழுது தான் எதுவும் கூறினால் நன்றாக இருக்காது என்று அமைதியாக நின்று கொண்டான்.

முருகேசனிடம் வந்த இன்பா, “உங்க வீட்டுக்கு சொந்தக்காரங்களா யார் வேணும்னாலும் வரலாம். தர்ஷினிய பொண்ணு கேட்டு யாராவது வந்தா, நான் பார்த்துக்கிட்டு சும்மா இருக்க மாட்டேன்” என்றான்.

“என்னடா பண்ணுவ?” என எகிறினாள் தர்ஷினி.

“நான் சாயந்திரம் திரும்பி வரும்போது இந்த ஜிம் பாடி இங்கே இருக்கக் கூடாது. நான் என்ன பண்ணுவேன்னு கேட்டல்ல. இவனை இருக்க சொல்லு. நீயே தெரிஞ்சுக்குவ” என்றான்.

“என்னடா பூச்சாண்டி காட்டுறியா? என்னடா சாய்ந்திரம் வரையிலும்….? இப்பவே காட்டு… என்னடா பண்ணுவ?” என்றான் சீனு.

கோவமாக இன்பா அவனை நோக்கி வர, ரஹீம்பாய் அவனை பிடித்துக் கொண்டார். அவனிடமிருந்து இன்பா விலக, பஷீர் வந்து பிடித்துக்கொண்டான். சத்தம் கேட்டு லட்சுமியும் வந்துவிட்டார். தெருவில் போவோர் வருவோர் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றனர்.

“என்னடா பண்ற நீ? உன்னை தர்ஷினிகிட்ட பொறுமையாதானே பேச சொன்னேன். திரும்பவும் வம்பு பண்றியா? நீ திருந்தவே மாட்டியா?” என்றார் லட்சுமி.

“கொஞ்ச நேரம் சும்மா இரு தங்கச்சி” என்றார் ரஹீம்பாய்.

“இன்பா உனக்கு நேரம் ஆகுது. நீ கிளம்பு” என அவனை வண்டியில் ஏற வைத்து அனுப்பி வைத்தார்.

“பஷீர் நீ தர்ஷினியை அவளோட ஆஃபீஸ்ல விட்டுடு” என கூறி, நசீர் ஏற்கனவே அலுவலகம் சென்று விட்டதால், தர்ஷினியை பஷீருடன் அனுப்பி வைத்தார். லட்சுமியிடம் வந்து பத்மினி ஏதோ காதில் கூறிக்கொண்டிருந்தார்.

“என்னடா தம்பி இதெல்லாம்? உன் கண்ணு முன்னாடியே அந்த பையன் இப்படி தர்ஷினிகிட்டயும், சீனுகிட்டயும் வம்பு பண்ணிட்டு போறான். நீ அமைதியா வேடிக்கை பார்த்துட்டு நிக்குறியே…! இதெல்லாம் சரியா படலை. நீ சரின்னு சொல்லு. அடுத்த முகூர்த்தத்திலேயே தர்ஷினிக்கும் சீனுவுக்கும் கல்யாணத்தை முடிச்சிடலாம். உன் மாமா வேற ஃபோன் மேல ஃபோன் போட்டுக்கிட்டே இருக்கார்” என்றார் குணசேகரி.

பதில் கூறாமல் உள்ளே சென்றுவிட்டார் முருகேசன்.

குணசேகரியும் பின்னாலேயே செல்ல, “ இருங்கண்ணி நான் போய் என்னன்னு பார்க்கிறேன். நாம அப்புறமா பேசலாம்” எனக்கூறி பத்மினியும் உள்ளே சென்றார்.

“என்ன தம்பி மாமாவுக்கு நான் என்ன பதில் சொல்லட்டும்? நாள் பார்க்குறியா?” எனக் கேட்டார் குணசேகரி.

“இல்லக்கா ஒரு ஆறு மாசம் போகட்டும். எதா இருந்தாலும் அப்புறம் பேசிக்கலாம்” என்றார் முருகேசன்.

குணசேகரி ஏதோ பேச வாய் திறக்கப் போக, “என்னங்க உங்ககிட்ட சொல்ல மறந்துட்டேன். கடையில ஒரே கூட்டமா இருக்காம். கடையில வேலைக்கு இருக்கிற பையன் ரெண்டு மூணு தடவை ஃபோன்ல சொல்லிட்டான். நீங்க சீக்கிரம் கிளம்புங்க. டிஃபன் கட்டித் தர்றேன். அங்கயே போய் சாப்பிட்டுகுங்க” எனக் கூறி அவரை வெளியேற்றினார்.

வந்த வேலை நடக்காமல் ஏமாற்றத்துடன் குணசேகரியும் சீனுவும் அன்றே திருவண்ணாமலை பயணமாகி சென்றனர்.

தர்ஷினி இன்பாவின் வீட்டிற்கு வருவதையே நிறுத்திவிட்டாள். இன்பாவும் அதற்குப்பின்னர் தர்ஷினியிடம் எதுவும் பேசவில்லை.

லட்சுமிக்கு மாதவிடாய் தொந்தரவு அதிகமாகி ஒருநாள் மயக்க நிலைக்கு சென்று விட்டார். எதேச்சையாக அன்று வீட்டிற்கு வந்திருந்த பூரணி அவருக்கு பருக பழச்சாறு கொடுத்து, கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி மருத்துவமனை அழைத்துச் சென்றார். செல்லும் வழியிலேயே தன் அண்ணனுக்கும் அண்ணன் மகனுக்கும் அழைத்து சொல்லிவிட்டார். இவர்கள் மருத்துவமனையை சென்றடையும் முன்னர் சாரங்கபாணியும் இன்பாவும் வந்துவிட்டனர்.

லட்சுமியை பரிசோதித்த மருத்துவர், அவருக்கு ஃபைப்ராய்டு யூட்ரஸ் அதாவது கர்ப்பப்பையில் கட்டி இருப்பதாக கூறினார். அதன் காரணமாகத்தான் இவ்வாறு வலியும் உதிரப் போக்கும் ஏற்படுவதாகவும் கூறி, அறுவை சிகிச்சை மூலமாக கர்ப்பப்பையை அகற்றி விடவேண்டும் என்றும் அறிவுறுத்தினார். இன்னும் இன்பா தன் சந்தேகங்களை எல்லாம் தெளிவாக்கிக் கொண்டு, அடுத்த வாரத்திலேயே அறுவை சிகிச்சை வைத்துக் கொள்ளலாம் என முடிவு செய்துவிட்டு அங்கிருந்து அனைவரையும் அழைத்துக் கொண்டு கிளம்பினான்.

பள்ளியில் இருந்து வீடு திரும்பிய ரம்யாவும் ரவியும் வீட்டில் அன்னை இல்லாமல் ரஹீம் பாய் வீட்டிற்கு சென்றனர். அவர் கைப்பேசியில் அழைத்து கேட்க, அப்பொழுதுதான் அவர்களுக்கு விவரம் தெரிந்தது. அவர் மூலமாக பத்மினிக்கும் விவரம் தெரிந்தது.

வீட்டிற்கு வந்த லட்சுமி அறுவை சிகிச்சை செய்து கொள்ள மாட்டேன் என்று இன்பாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

“எனக்கு நீ மட்டும்தான் பிள்ளையா? இன்னும் ரெண்டு பிள்ளைங்க இருக்காங்க. அவங்களை நான் கரை சேர்க்க வேண்டாமா? இந்த ஆப்ரேஷன்ல எனக்கு எதுவும் ஆகிட்டுன்னா அவங்க கதி என்னாகிறது?” என்றார் லட்சுமி.

“அதெல்லாம் ஒன்னும் ஆகாது. இந்த ஆப்ரேஷன் இப்போ எல்லாம் சர்வசாதாரணமா நடக்குது. உயிருக்கு எல்லாம் ஆபத்து இல்லை” என்றான் இன்பா.

“நீ சொல்லுவடா. பக்கத்து தெரு ராமசாமி தாத்தா கிட்னியில் கல் இருக்குன்னு ஆஸ்பத்திரிக்கு போனாரு. திரும்பி பொணமாதான் வந்தார். நான் ஆப்ரேஷனுக்கு எல்லாம் ஒத்துக்க மாட்டேன்” என்றார் லட்சுமி.

“அம்மா உனக்கே அவர் தாத்தான்னா அவர் வயசு என்ன? அவருக்கு ஆப்ரேஷன் எல்லாம் பண்ணவே இல்லை. அதுக்கு முன்னாடியே ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டார். அவரோட உன்னை நீ கம்பேர் பண்ணாதே. இந்த ஆப்ரேஷன் பண்ணலைன்னாதான் உனக்கு ஆபத்து” என்றான்.

“இருந்துட்டு போவுது. அந்த ஆபத்து உடனே வராதுல்ல. அது வரைக்குமாவது என் புள்ளங்களை நான் பார்த்துக்கிட்டு இருந்துக்குறேன்” என்றார் லட்சுமி.

“சும்மா உளராத. ஆப்ரேஷனுக்கு சரின்னு சொல்லு” என்றான் இன்பா.

“நீ தர்ஷினிய கல்யாணம் பண்ணிக்க. நான் ஒத்துக்குறேன்”

“அதுக்கும் ஆப்ரேஷனுக்கும் என்ன சம்பந்தம்?”

“ஆப்ரேஷன்ல்ல எனக்கு ஏதாவது ஒன்னு ஆகிட்டாலும் தர்ஷினி என் பிள்ளைங்களை பார்த்துக்குவா. அவளை கல்யாணம் பண்ணிகிட்டீன்னா நான் கவலைப்படாம ஆப்ரேஷன் பண்ணிக்குவேன். அப்படியே எதுவும் ஆனா கூட எனக்கு கவலை இல்லை” என்றார்.

“நீ சொல்றது லூசு தனமா இருக்கு. அப்படியே கல்யாணம் பண்ணனும்னாலும் நானா மாட்டேன்னு சொல்றேன். அவதான முடியாதுன்னு சொல்றா” என்றான் இன்பா.

இன்பா ஆற்றாமையுடன் திரும்பிப்பார்க்க, அங்கே தர்ஷினியின் குடும்பமும் ரஹீம் பாயின் குடும்பமும் நின்றுகொண்டிருந்தது.

பூரணி பத்மினியிடம் எல்லாவற்றையும் கூறினார்.

“அண்ணி ஆப்ரேஷன் பண்ணலைன்னா பெரிய பிரச்சனை ஆகப்போகுது ஒத்துக்கங்க” என்றார் பத்மினி.

“நல்லா எடுத்து சொல்லுங்க” என்றார் சாரங்கபாணி.

தர்ஷினியின் முகத்தை பார்த்து விட்டு லட்சுமி அழுதுகொண்டே முகத்தை திருப்பிக்கொள்ள, அவர் அருகில் சென்று அமர்ந்தாள் தர்ஷினி. அவரது கன்னம் பற்றி தன் பக்கம் திருப்பி, “நான் உங்க பையனை கல்யாணம் பண்ணிக்கிறேன். நீங்க ஆப்ரேஷனுக்கு சரின்னு சொல்லுங்க” என்றாள்.

“உண்மையாதான் சொல்றியா?” எனக் கேட்டார் லட்சுமி.

“நிஜமா” என தர்ஷினி கூற, அவளை கட்டிப்பிடித்துக் கொண்டார் லட்சுமி.

“இந்த வாரத்திலேயே நல்ல நாள் பாருங்க. கோயில்ல வெச்சு கல்யாணம் பண்ணிடலாம். அதுக்கப்புறம் நான் ஆப்ரேஷன் பண்ணிக்கிறேன்” என்றார் லட்சுமி.

“அத்தை முதல்ல உங்க ஆப்ரேஷன் நல்லபடியா முடியட்டும். அப்புறம் கல்யாணத்தை வச்சுக்கலாம்” என்றாள் தர்ஷினி.

“ஹ… அந்த கதை எல்லாம் சொல்லாதே. உங்க ரெண்டு பேர் கிட்டயும் போராட இனிமே எங்ககிட்ட தெம்பு இல்ல. உங்க கல்யாணம் முடிஞ்சாதான் நான் ஆஸ்பத்திரிக்கே வருவேன்” என்றார் லட்சுமி.

“இவ்ளோ அவசரமா கல்யாணம் பண்ணினா.. எப்படி நல்லா பண்ண முடியும்?” என கவலையாக கேட்டார் முருகேசன்.

“நீங்க வேற… இப்போ விட்டா இதுக ரெண்டுகிட்டயும் நம்மளால மல்லுக்கட்டிக்கிட்டு நிக்க முடியாது. கல்யாணம் சிம்பிளா நடந்தா என்ன? எப்படியோ கல்யாணம் நடந்தா சரி” என்றார் பத்மினி.

“ஆமாம் இதுதான் சரி. இல்லைனா ரெண்டு பிள்ளைகளையும் சமாளிக்க முடியாது” என்றார் நூர்ஜஹான்.

இருவரது கல்யாணத்தை பற்றியும் பெரியவர்கள் பேச ஆரம்பிக்க, அங்கே இருக்க பிடிக்காமல் தர்ஷினி எழுந்து வெளியே சென்றாள். அவளுக்கு முன்னரே வெளியேறியிருந்தான் இன்பா.