மணிப்புறாவும் மாடப்புறாவும்-6

அத்தியாயம்-6

அஜந்தா தொழிற்சாலை வழக்கை இன்பா எடுத்து நடத்தப்போவதாக அறிந்ததிலிருந்து தர்ஷினி அவனை தவிர்க்க ஆரம்பித்தாள். இன்பா வந்தாலே அந்த இடத்திலிருந்து சென்றுவிடுவாள் தர்ஷினி. அவன் ஏதாவது வம்பு பேசினாலும் எப்பொழுதும் போல இவளும் வம்பு பேசாமல், எந்த பதிலும் கூறாமல் ‘நீ என்ன வேண்டுமென்றாலும் பேசிக்கொள் எனக்கு ஒன்றும் இல்லை’ என்பதாக இருந்துகொண்டாள். தர்ஷினியின் இந்த பாராமுகம் இன்பாவை பாடாய்படுத்தியது.

இந்த ஒருமுறை தர்ஷினிக்காக இந்த வழக்கில் இருந்து பின்வாங்கினால், தர்ஷினி மீண்டும் மீண்டும் தன் தொழில் விஷயத்தில் தலையிடக் கூடும் என நினைத்தான். அதோடு தவறு செய்தவர்கள், தவறை திருத்திக் கொள்வதாக கூறும்பொழுது இன்னொரு சந்தர்ப்பம் அளிப்பதில் தவறில்லை எனவும் நினைத்தான்.

இன்பா அந்த தொழிற்சாலையின் உரிமையாளர் மணிஷ்பாண்டேவை நேரடியாக சந்தித்து பேசியிருந்தான். தொழிற்சாலையை மீண்டும் திறக்க உத்தரவு வந்து விட்டால் எல்லாவற்றையும் சரிப்படுத்தி விடுவதாக உத்திரவாதம் அளித்திருந்தான். அதனால் இந்த வழக்கிலிருந்து அவன் பின்வாங்குவதாக இல்லை. தர்ஷினிக்கு எப்படியாவது புரிய வைத்துவிட வேண்டும் என்று அவளிடம் பேச முயற்சி செய்ய, அவளோ இவனை நிமிர்ந்து பார்க்க கூட தயாராக இல்லை.

தர்ஷினியின் செயலில் இன்பாவுக்கு கோவம் கூட வந்தது. ‘எவ்வளவு நாள் இப்படியே இருந்து விடுவாள்? நானும் பார்க்கிறேன். உனக்குதான் முறுக்கிக்க தெரியுமா? எனக்கும் தெரியும்’ என இன்பாவும் விட்டுவிட்டான்.

அந்த ஞாயிற்றுக்கிழமையில் நசீரின் வீட்டில் இருந்தாள் தர்ஷினி. நூர்ஜஹான் ஏலக்காய் தேநீர் கொண்டு வந்து கொடுக்க, வாங்கிக் கொண்டவள், ஃபெலிஸ் தானியங்களை கொத்தி உண்பதை பார்த்துக் கொண்டிருந்தாள்.

“செம போர் தர்ஷினி” என்றான் நசீர்.

“உனக்கு எதுக்கு இப்போ போரடிக்குது?” எனக் கேட்டாள் தர்ஷினி.

“பின்ன…? நீயும் இன்பா அண்ணனும் பேசிக்குறதே இல்லை. தெருவே ரொம்ப அமைதியா இருக்கு. பார்க்க நல்லாவே இல்லை. டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூன எப்பவும் பார்த்துக்கிட்டு இருந்த எங்களுக்கு, திடீர்னு சோக படத்தை போட்டு காமிச்சா…? அதான் போரடிக்குது” என்றான்.

அவனுக்கு பதில் கூறாமல், ஃபெலிஸை விட்டு தன் பார்வையை அகற்றவில்லை தர்ஷினி. தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் வந்திறங்கினாள் சுப்ரியா. அவள் வந்த பிறகு, ஓரளவு சாதாரணமாக இருந்தாள் தர்ஷினி.

இவர்கள் மூவரும் பேசிக்கொண்டிருக்க, ரம்யா வந்து பேட்மிண்டன் விளையாட அழைத்தாள்.

“நான் வரலை” என்றாள் தர்ஷினி.

“வாக்கா அண்ணன் வீட்டில் இல்லை. எங்களுக்கு படிச்சி படிச்சி ரொம்ப ஸ்ட்ரெஸா இருக்கு. ப்ளீஸ் வாக்கா” என கெஞ்சுதலாய் அழைக்க, மூவரும் சென்றனர். அவர்கள் விளையாட தொடங்கிய சில நிமிடங்களில் இன்பா வீட்டிற்கு வந்து விட்டான். தர்ஷினி அவனை பார்க்காமல் விளையாட்டில் கவனமாக இருந்தாள்.

வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சுபாஷினி தான் விளையாட விரும்புவதாக கூற, அவளிடம் ராக்கெட்டை கொடுத்துவிட்டு விலகினாள் சுப்ரியா. இன்பா சற்று தள்ளி ஒரு நாற்காலியில் அமர்ந்து தினசரியை கையில் வைத்துக் கொண்டிருந்தான். யாரும் கவனிக்காத சமயத்தில் தர்ஷினியை பார்த்துக்கொண்டிருந்தான்.

சுப்ரியா இன்பாவின் அருகில் இருந்த மற்றொரு நாற்காலியில் வந்தமர்ந்தாள்.

“வாங்க உங்க நியூஸ் பேப்பர்தான் படிக்கிறேன். உங்க ஆர்டிகல்தான். வெரி இம்ப்ரெஸிவ்” என்றான் இன்பா.

“தேங்க்யூ… நான் உங்களை விட சின்ன பொண்ணுதான். நீ வா போன்னே பேசுங்க” என்றாள் சுப்ரியா.

சிரித்துக் கொண்டே “ஓகே” என்றான் இன்பா.

“நீங்க அந்த கெமிக்கல் ஃபேக்டரி கேஸை…” என சுப்ரியா ஆரம்பிக்க,

“ஆமாம். உன் ஃப்ரெண்ட் அதான் என்கிட்ட முகம் கொடுத்து கூட பேசுறது இல்லை. இது என்னோட ப்ரொஃபெஷன். நீ அவளுக்கு எடுத்து சொல்லு” என்றான்.

“ப்ரொஃபெஷனல் எத்திக்ஸ் எதுவும் உங்களுக்கு கிடையாதா?” என கேட்டாள்.

“கண்டிப்பா இருக்கு. ஒரு காய்ன்க்கு இரண்டு சைட் இருக்கும். அது உங்களுக்கு புரிய மாட்டேங்குது” என்றான்.

“அப்போ நியாயமான முறையில்தான் வாதாடுவீங்களா?” என சுப்ரியா கேட்க, “கண்டிப்பா என்னோட வேலைக்கு நியாயமாதான் இருப்பேன்” என்றான்.

“அதை விட உங்க மனசாட்சிக்கு நியாயமா இருக்கிறது முக்கியம் இல்லையா?”

“இதுவரைக்கும் என் மனசாட்சி உறுத்துற மாதிரி எதையும் நான் செஞ்சது இல்ல” என்றான்.

“இனிமேல்….?”

சிரித்த இன்பா, “தி ட்ரூத் ரிப்போர்ட்டர்னா சும்மாவா…? இப்ப நீங்க என்னை இன்டர்வியூ பண்றீங்களா என்ன?” எனக் கேட்டான்.

“இல்லை கண்டிப்பா இல்லை” என சிரித்தாள் சுப்ரியா.

“அப்போ சொல்றேன். கேஸ்ல ஜெயிக்க, சில தகிடுதத்தம் வேலைகள் செய்ய வேண்டிதான் இருக்கும். உண்மையைப் பேசிதான் ஜெயிக்கிறேன்னு எல்லாம் சொல்ல மாட்டேன். என்ன பண்றது…? தீர்ப்பு கொடுக்கிற ஜட்ஜ்க்கே உண்மை தெரிஞ்சாலும், ஆதாரம் இல்லாமல் அவரால கூட சரியான தீர்ப்பு கொடுக்க முடியாது. உண்மை ஜெயிக்க கூட பல சமயங்களில் பொய்யோட துணை தேவைப் படுது” என்றான்.

“இது ஏன் இப்படி இருக்கணும்? மாத்த முடியாதா?”

“நிரபராதிகள் யாரும் தண்டிக்கப்படக்கூடாது அப்படிங்கிறதால இது இப்படிதான் இருக்கும். சரியான ஆதாரம் இல்லாம யாருக்கும் தண்டனை வாங்கி கொடுக்க முடியாது”

“நல்லா பேசுறீங்க” என்றாள்.

“அதுதானே தொழிலே” என்றான் இன்பா.

“உங்க ஃபேமிலியை பார்த்தா எனக்கு கொஞ்சம் பொறாமையா இருக்கு” என்றாள்.

“நசீர் சொல்லித்தான் உன்னை பத்தி எனக்கு தெரியும். உன்னை பத்தி தெரிஞ்சதுக்கு அப்புறம் கொஞ்சம் கஷ்டமா கூட இருந்துச்சு. எப்படி திடீர்னு உன் பேரண்ட்ஸ் இறந்தாங்க?”

“ஆக்ஸிடெண்ட்ல இறந்துட்டாங்க” என்றவள், “நான் இதுவரைக்கும் இந்த விஷயத்தை யார்கிட்டயும் சொன்னது இல்லை. உங்ககிட்டதான் ஃபர்ஸ்ட் டைம் சொல்லப் போறேன்” என்றாள்.

தினசரியை மூடி வைத்துவிட்டு, அவள் என்ன சொல்ல போகிறாள் என ஆர்வமாக பார்த்தான்.

“என் பேரண்ட்ஸ் இறக்கிறதுக்கு முன்னாடி, அவங்க ரெண்டு பேரும் ஆக்ஸிடெண்ட்ல இறக்கிறதை என் கண்ணால பார்த்தேன்” என்றாள்.

“கனவு கண்டியா?” எனக் கேட்டான்.

“இல்லை… அது கனவு இல்லை. ஒருநாள் ஈவ்னிங் வானத்தை பார்த்து நின்னுகிட்டு இருந்தேன். உண்மையிலேயே என் கண் முன்னாடி நடக்கிற மாதிரி அதை என்னால பார்க்க முடிஞ்சது. ஜஸ்ட் ஃபார் ஃப்யூ செகண்ட்ஸ். அப்போ என்னால எப்படியும் நினைக்க முடியலை. பயமா இருந்திச்சி. என் அப்பாகிட்ட கூட சொன்னேன். அது பிரம்மைன்னு இக்னோர் பண்ணிட்டார். நானும் அப்படியே விட்டுட்டேன். அது உண்மையாவே நடந்துடுச்சு” என்றாள்.

“இது என்ன…? இ எஸ் பி ன்னு சொல்லுவாங்களே எக்ஸ்ட்ரா சென்சரி பெர்சப்ஷன் அதுவா…?”

“தெரியலை” என்றாள்.

“அதுக்கு முன்னாடியோ இல்ல அதுக்கு அப்புறமாவோ இப்படி வேற ஏதாவது நடந்து இருக்கா?” எனக் கேட்டான்.

“இல்ல அப்படி எல்லாம் எதுவும் இல்லை” என்றாள்.

“அப்போ அது உன் அப்பா சொன்ன மாதிரி மனப்பிரம்மையா கூட இருக்கலாம்” என்றான்.

“அப்படித்தான் இருக்கணும்” என கூறினாள் சுப்ரியா.

இதை ஏன் அவள் நண்பர்களிடம் கூட கூறாமல் என்னிடம் பகிர்ந்து கொள்கிறாள் என யோசனையாக அவளை பார்த்து, அடுத்து என்ன பேசுவது என தெரியாமல் அமைதியாக இருந்தான் இன்பா.

சுப்ரியா திரும்பிப் பார்த்தாள். யாரும் இவர்களை கவனிக்கவில்லை. விளையாட்டில் ஒன்றிப்போய் இருந்தார்கள்.

“எனக்கு உங்களை உங்க ஃபேமிலில எல்லாரையும் ரொம்ப பிடிச்சிருக்கு” என்றாள்.

இவள் என்ன சொல்ல வருகிறாள் என அதிர்ந்து போய் அவளை பார்த்திருந்தான் இன்பா.

“என்னையும் உங்க குடும்பத்துல ஒருத்தியா… ஐ மீன்… என்னை நீங்க…”என சுப்ரியா திணறிக் கொண்டிருக்க,

“சுப்ரியா நீ என்ன கேட்க வரேன்னு எனக்கு புரியுது” என்றான்.

சுப்ரியா அவனைப் பார்க்க முடியாமல் தலை குனிந்து அமர்ந்திருந்தாள்.

“ஐ ஆம் சாரி. உனக்கு இப்படி தோன்ற மாதிரி நான் ஏதாவது நடந்துகிட்டேனா?” எனக் கேட்டான்.

“இல்லை உங்க மேல எந்த தப்பும் இல்லை. சொல்லப்போனா இது நடக்காதுன்னு எனக்குள்ள ஒரு இன்ட்யூசன் இருந்துச்சு. பின்னாடி எப்பவாவது கேட்டு பார்த்திருக்கலாமோன்னு நான் ரெகக்ரெட் பண்ணக்கூடாது இல்லையா…? அதான் கேட்டுட்டேன். என்னை மாதிரி ஒரு ஆர்ஃபனை…”

“ப்ளீஸ் சுப்ரியா… இப்படி எல்லாம் பேசாத. இந்த ஆர்டிகள் எழுதின சுப்ரியாவா இப்படி பேசுறது? இது வேண்டாம்னு நான் மறுக்கிறத்துக்கு காரணம், என் மனசுல வேற ஒரு பொண்ணு இருக்கா… ரொம்ப வருஷமா. இன்னும் அவ கிட்டயே நான் சொல்லலை” என்றான்.

பின்னால் மீண்டும் திரும்பி பார்த்த சுப்ரியா இன்பாவைப் பார்த்து சிரித்தாள். “எனக்கு யாருன்னு கூட ஒரு கெஸ் இருக்கு” என்றாள்.

“உன்னோட கெஸ் 100% கரெக்ட்”

“எனக்கும் டவுட் இருந்துச்சு. ஆனா ரெண்டு பேரும் எப்பவும் சண்டை போட்டுக்கிட்டே இருக்கவும், நான் இப்படி யோசிக்கலை. அவளும் என்கிட்ட எதுவும் சொன்னது கிடையாது” என்றாள்.

“ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் சொல்லிக்கிட்டது கிடையாது”

“தர்ஷினி உங்களை லவ் பண்றாளா..? கண்டிப்பா தெரியுமா?” எனக் கேட்டாள் சுப்ரியா.

“சில சமயம் லவ் பண்றான்னு தோணும். சில சமயம் எனக்கும் டவுட்டாதான் இருக்கும்”

“நீங்க அவகிட்ட சொல்லிடுங்க. என்னன்னு இப்பவே தெரிஞ்சிடும்” என்றாள்.

“இப்போ நிலைமை ரொம்ப மோசமா இருக்கு. இப்ப சொன்னேனா… நான் பல வருஷமா தண்ணி ஊத்தி வளர்த்துக்கிட்டு வர்ற என் காதல் செடிய வேரோடு பிடுங்கி எறிஞ்சிடுவா” என விளையாட்டாகக் கூறினான் இன்பா.

சுப்ரியா சிரித்தாலும் அவளது முகத்தில் வேதனையின் சாயல் தெரிய, “சுப்ரியா எப்பவும் நீ எங்க குடும்பத்துல ஒரு ஆள்தான். இந்த விஷயத்தை நாம மறந்துடலாம்” என்றான்.

“கண்டிப்பா… ஆல் த பெஸ்ட் ஃபார் யுவர் லவ். சீக்கிரம் சொல்லிடுங்க” என்றாள்.

பின் சிறிது நேரத்தில் விளையாட்டை முடித்து விட்டு ரவி, ரம்யா, சுபாஷினி ஆகியோர் படிக்க சென்று விட்டனர். சுப்ரியாவும் கிளம்பிவிட்டாள். நசீர் தொலைக்காட்சியில் கிரிக்கெட் பார்க்க சென்றுவிட்டான்.

தர்ஷினி நெட்டை அவிழ்த்து கொண்டிருக்க அவளை நோக்கி நடந்து சென்றான் இன்பா.

தர்ஷினி ஒரு புறத்தில் இருந்து நெட்டை அவிழ்த்து கொண்டிருக்க மறுபக்கம் நின்று அவிழ்த்தான் இன்பா. நெட்டை மடித்து வைக்க உதவி செய்தான். தர்ஷினி எடுத்துக்கொண்டு உள்ளே செல்ல அவளது கையைப் பிடித்து நிறுத்தினான்.

“கையை விடு” என்றாள் தர்ஷினி.

“என்னை அவாய்ட் பண்ணாதடி.. கஷ்டமா இருக்கு” என்றான்.

“நீ பண்றதெல்லாம் மட்டும் எனக்கு சந்தோசமா இருக்கு” என்றாள்.

“நான் அந்த ஃபேக்டரி ஓனர்கிட்ட தெளிவா பேசிட்டேன். எல்லாத்தையும் சரி செஞ்சுடுவான்” என்றார்.

“அப்படியா?” என ஏளனமாக சிரித்தாள் தர்ஷினி.

“நான் செய்றது பிடிக்கலைன்னா வாய்விட்டு திட்டு, சண்டை போடு, இப்படி பண்ணாத… ஹர்ட்டிங்கா இருக்கு…” என்றான்.

“உனக்கா…? இன்னும் கொஞ்ச நாள்ல பெரிய பெரிய கேஸை எடுத்து நடத்தி பெரிய கோடீஸ்வரனா மாறப்போற. நான் உன் ஞாபகத்துல கூட இருக்காத பத்திரிக்கையில் வேலை பார்க்குற சாதாரண ரிப்போர்ட்டர். சிட்டியோட லீடிங் கிரிமினல் லாயரா மாறப்போறவர் நான் பேசாம போனா ஹர்ட் ஆவாரா என்ன?” எனக் கேட்டாள்.

“ஏன் உனக்கு தெரியாதா…?”

“உன்னைப் பத்தி இப்பதான் தெரிஞ்சிகிட்டேன். கையை விடு” என்றாள்.

அப்போது தர்ஷினியின் பெற்றோர் பத்மினியும் முருகேசனும் வர, அவர்களைப் பார்த்ததும் இன்பா தர்ஷினியின் கையை விட்டான். தர்ஷினி உள்ளே சென்றுவிட்டாள். இருவரையும் வரவேற்று அவர்களுடனே இன்பாவும் உள்ளே சென்றான்.

இன்பாவையும் உட்கார வைத்துக் கொண்டே பெரியவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். தர்ஷினி லட்சுமியின் அருகில் அமர்ந்திருந்தாள்.

“தர்ஷினிக்கு வயசு 24 ஆகுது. இப்ப இவளுக்கு கல்யாணம் பண்ணினாதானே அடுத்தவளுக்கு சேர்க்க முடியும். இப்ப வேண்டாம் இன்னும் ரெண்டு வருஷம் போகட்டும்னா என்ன அர்த்தம்? கொஞ்சம் அவகிட்ட சொல்லுங்க” என்றார் பத்மினி.

“ஆமாம் நீங்க சொன்னா கேட்டுப்பா” என லட்சுமியை பார்த்து கூறினார் முருகேசன்.

“கல்யாணம் பண்றதா முடிவு பண்ணிட்டீங்களா?” என கேட்டார் லட்சுமி.

“ஆமாம்” என்றார் பத்மினி.

“நான் ஒன்னு சொல்லட்டுமா?” என கேட்டார் லட்சுமி.

“என்ன அண்ணி? தயங்காம சொல்லுங்க” என்றார் பத்மினி.

“நான் இன்னும் இன்பா அப்பாக்கிட்ட கூட இதைப்பத்தி சொல்லலை” என பீடிகை போட்டார் லட்சுமி.

எல்லோரும் அவரையே பார்த்திருக்க, “தர்ஷினிய ஏன் வேற இடத்தில கொடுக்கணும்? நம்ம இன்பாவுக்கும் தர்ஷினிக்குமே கல்யாணம் பண்ணி வச்சா என்ன?” என கேட்டே விட்டார்.

இன்பாவே இதை எதிர்பார்க்கவில்லை. பத்மினி லட்சுமியின் கைகளை மகிழ்ச்சியுடன் பிடித்துக்கொண்டார்.

“எனக்கு கூட ஆசைதான் அண்ணி. இவ கல்யாணத்துக்கு சம்மதம்ன்னு சொல்லிட்டா நானே கேட்கலாம்னு இருந்தேன்” என்றார்.

முருகேசனும் சாரங்கபாணியும் கூட மகிழ்ச்சியாக இருந்தனர்.

“இது நம்மளுக்கு தோணலை. இவங்களுக்கு தோணியிருக்கு பாருங்களேன் முருகேசன்” என்றார் சாரங்கபாணி.

“ஆமாம் தள்ளிப்போட வேண்டாம். நாள் பார்த்திடலாமா?” என்றார் முருகேசன்.

“அப்பா…” என ஆட்சேபிக்கும் குரலில் அழைத்தாள் தர்ஷினி.

“என் கிட்ட ஒரு வார்த்தை கேட்க மாட்டீங்களா? நீங்களே எல்லாத்தையும் முடிவு பண்ணிப்பீங்களா? எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லை” என்றாள்.

“சும்மா எடுத்தோம் கவிழ்த்தோம்ன்னு பேசாத தர்ஷினி. உன் லட்சுமி அத்தை வீட்ல அவங்க மருமகளா இருக்க உனக்கு கசக்குதா?” எனக் கேட்டார் பத்மினி.

“நீ இன்பா வம்பு பண்ணிக்கிட்டே இருக்கான்னு நினைக்காதடா. கல்யாணத்துக்கு அப்புறம் எந்த வம்பும் பண்ணமாட்டான். அப்படி பண்ணினா அவனுக்கு சோறு போட வேண்டாம்” என்றார் லட்சுமி.

“ஆமாம் இன்பா மட்டும்தான் வம்பு பண்றானா? உங்க மருமக ஒண்ணுமே செய்றது இல்லையா?” என்றார் பத்மினி.

“சரின்னு சொல்லுடா” என அவள் கன்னத்தைப் பிடித்துக் கொண்டு கேட்டார் லட்சுமி.

“இல்ல அத்தை எங்களுக்குள்ள எதுவும் ஒத்துப்போகாது” என்றாள் தர்ஷினி.

இன்பா தர்ஷினியைதான் பார்த்துக் கொண்டிருந்தான்.

“என்னம்மா இப்படி சொல்ற? கொஞ்சம் யோசிச்சு சொல்லுமா” என்றார் சாரங்கபாணி.

“இல்ல மாமா இதுல யோசிக்க எதுவும் இல்லை. எனக்கும் உங்க பையனுக்கும் எப்போதுமே ஒத்துவராது. என்னை வற்புறுத்தாதீங்க” எனக் கூறி எழுந்து வெளியே சென்று விட்டாள்.

அவள் பின்னாலேயே கோவமாக எழுந்து சென்றான் இன்பா.

வேகமாக நடந்து கொண்டிருந்த அவளை தடுத்து நிறுத்தினான்.

“எங்க என்னை பார்த்து சொல்லுடி என்னை பிடிக்கலைன்னு” எனக் கேட்டான்.

அவனது முகத்தை நேருக்கு நேராக பார்த்து தெளிவாக “பிடிக்கலை போதுமா?” எனக் கூறினாள்.

“நான் உனக்கு வேண்டாமா?” என கேட்டான்.

“வேண்டாம்”

“போடி… நீ என்ன என்னை வேணாம்னு சொல்றது. நான் சொல்றேன், நீ எனக்கு வேண்டாம். வேண்டவே வேண்டாம்” என்றான்.

“ச்சீய் போடா”

“நீ போடி”

“போகத்தான் போறேன் கையை விடு”

தான் பிடித்துக் கொண்டிருந்த அவளது கையை பார்த்தான். கோவமாக இருந்ததில் வேகமாக மூச்சுகள் வெளியே வந்தன.

கையை விடாமல் இறுக்கிப் பிடித்தான்.

“விடுடா”

“ஐ லவ் யூ தர்ஷினி” என்றான்.

தர்ஷினி கோவமாக இன்பாவை முறைத்துக் கொண்டு நின்றிருந்தாள்.

“நான் உன்னை லவ் பண்றேன். அதுக்காக நீ சொல்றதெல்லாம் கேட்க முடியாது” என்றான்.

“ஐ ஹேட் யூ” என்றாள்.

“பொய். எனக்கு தெரியும். நீயும் என்னை லவ் பண்ற”

“அப்படின்னு நீயா நினைச்சுக்கிட்டா..? உன்னை எனக்கு பிடிக்கல. என் கையை விடப் போறியா இல்லையா?”

அதற்குள் பெரியவர்கள் எழுந்து வெளியே வந்துவிட்டனர்.

“என்னடா பண்ற.. திருப்பி வம்பு பண்றியா அவகிட்ட? கையை விடு முதல்ல” என்றார் லட்சுமி.

கையை விட்டவன் முருகேசனிடம் வந்தான்.

“மாமா உங்க பொண்ணுக்கு என்னை பிடிக்கலையாம். மத்தபடி கல்யாணம் செஞ்சுக்க ஒத்துக்கிட்டா” என்றான் இன்பா.

“இவன் பொய் சொல்றான். வக்கீல் சார் கிட்ட சொல்லுங்க, கோர்ட்ல மட்டும் பொய் பேச சொல்லி” என்றாள் தர்ஷினி.

“அப்போ அவளுக்கு வேற மாப்பிள்ளை பாருங்க” என்றான் இன்பா.

முருகேசன் தர்ஷினியின் முகத்தைப் பார்க்க, “இன்னும் ரெண்டு வருஷத்துக்கு எனக்கு கல்யாண பேச்சே எடுக்கக்கூடாது” எனக் கூறிவிட்டு அங்கிருந்து செல்ல திரும்பினாள்.

“நான் உன் மனசுல இருக்கிறதாலாதானே இப்போ கல்யாணம் வேண்டாம்னு சொல்ற?” எனக் கேட்டான் இன்பா.

அவள் அப்பாவிடம் வந்து, “எனக்கு இன்னும் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கு. அதுக்கப்புறம்தான் கல்யாணம். மத்தபடி இவன் நினைக்கிற மாதிரி எதுவும் இல்லைன்னு அவன்கிட்ட சொல்லிடுங்க” என்றாள்.

“இதெல்லாம் சும்மா மாமா. அவ மனசுல நான்தான் இருக்கேன். என் மேல கோவமா இருக்கிறதால வேண்டாம்னு சொல்றா. என்னைத் தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க அவளால முடியாது. அதான் இப்போதைக்கு கல்யாணமே வேண்டாம்ன்னு சொல்றா” என்றான் இன்பா.

“இங்க பாருடி. நம்ம எல்லாம் மிடில்க்ளாஸ் குடும்பம். காலாகாலத்துல எல்லாத்தையும் பண்ணி வச்சாதான் அடுத்தடுத்து என்னன்னு நாங்க பார்க்க முடியும். கல்யாணத்துக்கு சரின்னு சொல்லு” என்றார் பத்மினி.

“அவனை கல்யாணம் பண்ணிக்கிட்டு இந்த வீட்டுக்கு வந்திடு. எப்படி அவன் நீ சொல்றதை கேட்காம போவான்னு நானும் பார்க்கிறேன்” என்றார் லட்சுமி

“ம்மா… நீ கொஞ்ச நேரம் எதுவும் பேசாம இருந்தா நல்லா இருக்கும்” என்றான் இன்பா.

“எனக்கு கல்யாணம் வேண்டாம். மீறி எல்லாரும் வற்புறுத்தினா நான் ஏதாவது ஹாஸ்டல் போயிடுவேன்” எனக்கூறிவிட்டு அங்கிருந்து வேகமாக சென்றாள் தர்ஷினி.

“எல்லாம் இவனாலதான். அந்த கேஸை எடுத்து நடத்தாமல் இருந்தாதான் என்னவாம்?” எனக் கோவமாகக் கேட்டார் லட்சுமி.

“இப்போ இதை வேண்டாம்னு சொல்லுவா? அப்புறமா ஒன்னொன்னா வேண்டாம்னு சொல்லி, கடைசில வக்கில் வேலையே வேண்டாம் விட்டுடுன்னு சொல்லுவா. அவ பேச்சுகெல்லாம் என்னால் ஆட முடியாது. உங்களுக்கெல்லாம் கல்யாணத்துக்கு இப்ப என்ன அவசரம். கொஞ்சநாள் அமைதியா இருங்க” எனக் கூறிவிட்டு உள்ளே சென்று விட்டான் இன்பா.

கோவமாக வெளியேறிய தர்ஷினி ரஹீம் பாய் வீட்டின் வெளியே நின்றிருந்தாள். ஃபெலிஸ் பறந்து வந்து அவள் தோள் மீது அமர்ந்து கொள்ள, தன் புறங்கையில் எடுத்துக் கொண்டு முகத்திற்கு நேராக வைத்துக்கொண்டாள்.

தர்ஷினியின் கண்கள் கலங்கிப் போயிருந்தன.

“லவ் யூ… ஐ லவ் யூ ஃபெலிஸ்… லவ் யூ ஸோ மச் ஃபெலிஸ் ” என்றாள்.

ஃபெலிஸ் பறந்து சென்றது. அது பறந்து செல்வதை வெறித்துப் பார்த்து நின்று கொண்டிருந்தாள் தர்ஷினி.