பஷீர் வண்டி ஓட்டிக் கொண்டிருக்க அவன் பின்னால் அமர்ந்திருந்தான் இன்பா.
“என்னடா நீ இப்படி புதுசா இவ்வளவு குடிச்சிருக்க?” எனக் கேட்டான் பஷீர்.
“மாமாவை விட்டு வந்ததுக்கப்புறம் நானா ஜெயிச்ச ஃபர்ஸ்ட் கேஸ். கொஞ்சம் எக்ஸைட்டடா இருந்தேன் டா. பேச்சு வாக்குல அளவு மீறிடுச்சு” என்றான் இன்பா.
“இன்னைக்கு தர்ஷினிகிட்ட இருக்கு உனக்கு”
“நானே அவளை நினைச்சு பயந்து போய் இருக்கேன். நீ இன்னும் பயமுறுத்தாதடா. இந்நேரம் தூங்கியிருந்தான்னா நான் பொழைச்சுக்குவேன்”
“நான் வண்டிய எடுத்துக்கிட்டு வெளியில வரும்போது கூட வீட்டுக்கு வெளியில போர்ட்டிகோலதான் உட்கார்ந்திருந்தா . நீ போற வரை தூங்க மாட்டா. உனக்கு இருக்கு இன்னைக்கு. மவனே இன்னையோட நீ குடியை மறக்க போறடா” என நக்கலாக கூறினான் பஷீர்.
வழியில் ஒரு பெட்டிக் கடையில் வண்டியை நிறுத்தச் சொன்னான் இன்பா. பேஸ்ட், பிரஸ், ஒரு தண்ணீர் பாட்டில் வாங்கிக் கொண்டான். ஓரமாக நின்று நன்றாக பல் துலக்கி வாய் கொப்பளித்தான்.
“இப்போ ஸ்மெல் வருதா பாருடா…?” என்றான்.
அவனை முறைத்த பஷீர், “நீ இன்னும் நாலு தடவை பல் விலக்கினாலும் ஸ்மெல் போகாது” என்றான்.
வாங்கி வைத்திருந்த சுயிங்கத்தை வாயில் போட்டு மென்று கொண்டே “கிளம்பு” என சோகமாக கூறினான் இன்பா.
வீடு வந்ததும் வண்டி சத்தத்தில் தர்ஷினி வெளியில் வந்து நின்றாள். இன்பா இறங்கிக் கொண்டான்.
“நண்பா எதுக்கும் உன்னை ஒரு தடவை நல்லா பார்த்துக்குறேன்” எனக் கூறி நக்கலாக சிரித்தான் பஷீர்.
இன்பா அவனை முறைக்க, “நீ வாங்க போற அடிக்கு நாளைக்கு எழும்ப முடியுமான்னு டவுட்டுதான்” எனக்கூறி அவனது வீட்டிற்கு சென்று விட்டான்.
இன்பா போர்டிகோவில் அமர்ந்து ஷூவை கழற்றி கொண்டிருந்தான்.
“உன் வண்டிக்கு என்னாச்சு? ஏன் பஷீர் அண்ணா கூட வர்ற?” என கேட்டாள்.
“வண்டி பங்க்சர்”
“இவ்வளவு நேரம் எங்க இருந்த?”
“ஒரு வேலையா இருந்தேன், நீ தூங்குன்னு சொன்னேன்ல, போ.. போய் படு” என ஜாக்கிரதையாக தள்ளி நின்று கொண்டே கூறிவிட்டு, அவளை அடுத்து பேசவிடாமல் நேரே அறைக்குள் சென்று விட்டான்.
அவன் பின்னே வந்த தர்ஷினி அவனை அணைத்துக் கொண்டாள். “நான் எவ்ளோ பெரிய ஹேப்பி நியூஸ் சொல்லலாம்னு வந்தா நீ என்னடான்னா தள்ளி தள்ளி போற…?” எனக் கேட்டாள்.
“என்ன ஹேப்பி நியூஸ்?” என வாயை நன்றாக திறக்காமல் ஜாக்கிரதையாக உதடு மட்டும் பிரித்து பேசினான்.
“சும்மா சொல்ல மாட்டேன். உனக்கு ஒரு கிஃப்ட் கொடுத்துட்டுதான் சொல்வேன்” என்றவள், இன்பா எதிர்பார்க்காத நேரத்தில் அவளது இதழ்களில் முத்தமிட்டாள். மதுவின் வாடை தர்ஷினிக்கு குமட்டிக் கொண்டு வர, அவனிடமிருந்து விலக பார்த்தாள். போதையில் இருந்த இன்பாவோ அவளை விலக விடாமல், அவள் ஆரம்பித்ததை இவன் தொடர ஆரம்பித்தான். அவனிடமிருந்து போராடி அவனைத் தள்ளிக் கொண்டு குளியலறை ஓடினாள். கொட கொடவென வாந்தி செய்தாள். இன்னும் வாந்தி வருவது போலவே இருக்க, முகத்தை நன்றாக கழுவி வாயை கொப்பளித்தாள். மீண்டும் வாந்தி செய்தாள்.
இன்பா தன் தலையில் தட்டிக் கொண்டான். உள்ளே சென்று அவளை ஆதரவாக பிடித்துக்கொள்ள, “போடா… என்னை தொட்ட… கொன்னுடுவேன்” என்றாள்.
அவனது வயிற்றை அழுத்தமாக தன் கை கொண்டு கிள்ளி பற்றி இழுத்தாள்.
“ஐயோ வலிக்குது விடுடி” என்றான் இன்பா.
“போதையில் உனக்கு வலி எல்லாம் கூட தெரியுதா…?” என நக்கலாக கூறியவள், “எதுக்குடா குடிச்ச?” என கோபமாக கேட்டாள்.
“சத்தியமா வலிக்குதுடி. விடு” என அவனது வயிற்றைக் கிள்ளிக் கொண்டிருந்த தர்ஷினியின் கையை விலக்க முற்பட, மற்றொரு கையால் அவனது வலது கையை பின்பக்கமாக முறுக்கினாள்.
“ஆ…” என வலியில் முகம் சுளித்தான். அவனை ஷவருக்கு கீழே நிறுத்தி, தண்ணீரை திறந்து விட்டாள். சில்லென்ற தண்ணீர் அவன் தலையில் விழ “ஐயோ குளிருதுடி” என சத்தமிட்டான்.
10 நிமிடங்கள் அவனை ஷவருக்கு கீழே நிறுத்தியவள், பின் வெளியே வந்தாள். இன்பாவும் வெளியே வர, துண்டை அவன் முகத்தில் விட்டெறிந்தாள். எதுவும் பேசாமல் தலையை துவட்டி விட்டு உடை மாற்றிக் கொண்டான் இன்பா.
வயிற்றில் தர்ஷினி கிள்ளிய இடம் சிவந்து போயிருந்தது. கையிலும் நல்ல வலி இருக்க, “போதை இறங்க இப்படி ஒரு ட்ரீட்மெண்ட் நான் கேள்விப்பட்டதே இல்லை” என்றான்.
எதுவும் சொல்லாமல் அவனை எரிச்சலுடன் பார்த்து நின்றிருந்தாள் தர்ஷினி.
“என்னடி நல்ல விஷயம்? வாமிட் வேற பண்ற? நமக்கு கல்யாணம் ஆகி இன்னும் ஒருமாசம் ஆகலை. அதுக்குள்ள பிரக்னெண்ட் ஆகிட்டியா என்ன? அதுக்குள்ள எப்படி தெரியும்?” என கேட்டான்.
“உனக்கு அந்த ஆசை வேற இருக்கா? குடிகாரனுக்கு எல்லாம் புள்ளை பெத்து தர மாட்டேன்” என்றாள்.
“ஓவரா பேசாதடி எப்பவாவது தானே குடிக்கிறேன். க்ளையண்ட் பார்ட்டி தரும்போது மறுக்க முடியலை”
“உனக்கு குடிக்க இது ஒரு சாக்கு. ஏன் விமன் லாயர்ஸ் இல்ல… அவங்க எல்லாம் உன்னை மாதிரி தான் கேஸ்ல ஜெயிச்சா பார்ட்டி பண்றாங்களா…? என் கோபத்தை கிளப்பாம ஒழுங்கா வந்து கொட்டிக்க” என்றாள்.
“எனக்கு ஒன்னும் வேண்டாம். நீ கோவமா சாப்பிட கூப்பிடுற. சிரிச்சுக்கிட்டே கூப்பிடு” என்றான்.
“என்ன ஹேப்பி நியூஸ்?” என இன்பா கேட்க, தர்ஷினி பார்த்த பார்வையில் தானாக வாயை மூடிக் கொண்டான்.
இன்பா அமைதியாக வந்து டைனிங் டேபிளுக்கு அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டான். அவனுக்கு சாப்பாடு வைத்தவள் இரண்டு நாற்காலிகள் தள்ளி அமர்ந்து கொண்டாள். சாப்பிட்டு முடித்தவுடன் கை கழுவிக் கொண்டு அவளையே பார்த்து நின்றிருந்தான். எல்லாவற்றையும் எடுத்து உள்ளே வைத்தவள் அவனைக் கவனிக்காமல் அறைக்குள் சென்று விட்டாள். இவன் உள்ளே செல்ல கீழே போர்வையும் தலையணையும் போட்டாள்.
“நீ ஏண்டி கீழே படுக்குற?” என இன்பா கேட்க, பார்வையாலேயே அவனை மேலே பேச விடாமல் தடுத்தவள் “இது எனக்கு இல்ல… உனக்கு” என்றாள்.
“நான் உன்னை எதுவும் பண்ண மாட்டேன். ஒரு ஓரமா படுத்துக்குறேன்” என்றான்.
“இங்க படுக்குறியா… இல்ல வெளியில படுக்குறியா..?” என கேட்க அமைதியாக போர்வையை விரித்து படுத்து கொண்டான்.
“என்னடி அந்த ஹேப்பி நியூஸ்?” என படுத்துக்கொண்டே கேட்டான்.
தர்ஷினியிடமிருந்து பதிலே வரவில்லை. “இரண்டு அடி கூட வைடி… ப்ளீஸ் பேசுடி” என்றான்.
“தொண தொணங்காம படு. இல்லைனா நான் ரம்யா ரூம்க்கு போய்டுவேன்” என்றாள்.
அதற்கு மேல் பேசாமல் இன்பா கண்களை மூடிக் கொண்டான். காலையில் இன்பா எழும்போது தர்ஷினி எப்பொழுதோ எழுந்து சென்றிருந்தாள். காலைக் கடமைகளை முடித்து விட்டு இன்பா வெளியில் வர தர்ஷினியின் குரல் சமையல் அறையில் இருந்து கேட்டது.
“தர்ஷினி டீ கொடு” என சத்தமாக கேட்டான். லட்சுமி வந்து கொடுத்தார்.
“என் பொண்டாட்டி கொடுத்தாதான் குடிப்பேன்” என்றான்.
“நீ என்ன பண்ணி வச்சியோ… அவ டீயே கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டா. போனா போகுதுன்னு நான்தான் போட்டு எடுத்துட்டு வந்தேன். வேணாம்னா போ” என்றார் லட்சுமி.
“ஒன்னும் சொல்லலை. டீ தர மாட்டேன்னு மட்டும் சொன்னா. நானா ஏதோ சண்டைன்னு தெரிஞ்சுகிட்டேன்” என்றார்.
“நைட் குடிச்சிட்டு வந்தேன்” என்றான்.
“அறிவு இருக்காடா உனக்கு? இந்த விஷயம் தெரிஞ்சிருந்தா நானும் உனக்கு டீ கொடுத்திருக்க மாட்டேன். நான் எல்லாம் சமாதானம் பண்ண முடியாது. நீயே சமாளி” என கூறிவிட்டு உள்ளே சென்று விட்டார். ரம்யாவும் ரவியும் வீட்டிற்கு வெளியில் படித்துக் கொண்டிருந்தனர். இன்பா சமையலறை வந்தான். தர்ஷினி சப்பாத்திக்கு மாவு பிசைந்து கொண்டிருந்தாள்.
“சரி… வந்துட்டாரான்னு நீ போய் கேட்கிட்ட நின்னு பாரு” என்றான்.
“வந்தா வீட்டுக்குள்ள தானே வருவார். வேணும்னா நீ போய் பாரு” என்றார் லட்சுமி.
“உன் நல்லதுக்குதான் சொல்றேன். எனக்கென்ன… இரு. அப்புறமா பொண்டாட்டி கால்ல போய் இப்படி விழுவுறான்னே என் பிள்ளை… அப்படின்னு கஷ்டமெல்லாம் படக்கூடாது” என்றான்.
“அவன் உன் கால்ல விழுந்தாலும் மன்னிக்காத” என தர்ஷினியிடம் கூறி விட்டு வெளியே சென்றார் லட்சுமி.
“இனிமே குடிக்க மாட்டேன்டி… பேசுடி” என்றான் இன்பா.
பதில் பேசாமல் சப்பாத்தி மாவை பாத்திரத்தில் தூக்கி அடித்துக் கொண்டிருந்தாள்.
“என்னடி நீ. கோவத்துல என்னை திட்டுவ, அடிப்ப, சண்டை போடுவேன்னு நெனச்சேன். இப்படி பேசாம இருக்கியே…?” எனக் கேட்டான்.
மாவை சிறு சிறு உருண்டைகளாக்கி தேய்க்க ஆரம்பித்தாள். எல்லா சப்பாத்திகளையும் தேய்த்து முடித்துவிட்டு கல்லிலும் போட்டு எடுத்து விட்டாள். இன்பா விதவிதமாக கெஞ்சிப் பார்த்தான். தர்ஷினி வாயைத் திறக்கவே இல்லை.
சமையலறையில் இருந்து வெளியில் வந்து “அத்தை… அத்தை…” என குரல் கொடுத்தாள். லட்சுமி உள்ளே எட்டிப்பார்க்க, “நான் ஆஃபீஸ் கிளம்பனும். நீங்க எல்லாருக்கும் சாப்பாடு பாக் பண்ணிடுங்க” எனக்கூறிவிட்டு அறைக்குள் சென்றாள்.
“என்னடா கால்ல விழுந்தியா இல்லையா? இன்னும் அவ மலை இறங்கின மாதிரி தெரியலை” என கேட்டுக்கொண்டே இன்பாவை கடந்து சமையலறைக்கு சென்றார் லட்சுமி.
அறைக்குள் வந்தான் இன்பா. தர்ஷினி குளிக்க செல்வதற்காக அவளது ஆடைகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.
“இனிமே சத்தியமா குடிக்க மாட்டேன். இதுக்கு என்ன வேணா தண்டனை கொடு. பேசாம மட்டும் இருக்காத. என்கிட்ட பேசு” என்றான்.
“ஏன் நைட் குடிக்க மாட்டேன்னு ஒரு வார்த்தை சொல்றதுக்கு என்ன?” எனக் கேட்டாள்.
“ஹப்பா… ஒருவழியாக சமாதானம் ஆகிட்ட. அதுக்குள்ள எனக்கு நுரை தள்ளிட்டு” என்றான்.
“இன்னொரு முறை நீ குடிச்சிட்டு வந்த உன்கிட்ட ஜென்மத்துக்கும் பேச மாட்டேன்” என்றாள்.
“ஒத்த நாள் நீ தள்ளி வச்சதுலேயே என் உசுரே போச்சு டி. இனியும் அப்படி செய்ய நான் என்ன முட்டாளா? சாரி டி செல்லம். ஜென்மத்துக்கும் நான் குடிக்க மாட்டேன்” என்றான்.
“சரி பொழைச்சு போ” எனக்கூறி தர்ஷினி குளிக்க சென்றாள். அவளை போக விடாமல் தடுத்து “என்னடி குட் நியூஸ்?” என கேட்டான்.
தர்ஷினி மணிப்புறா என்ற பெயரில் வாரா வாரம் எழுதப் போவதை பற்றி கூறினாள்.
“அப்போ ஞாயிற்றுக்கிழமையாவது செங்கதிர் பத்திரிக்கையில உண்மை செய்தியை எதிர்பார்க்கலாமா?” எனக் கேட்டான்.
“உண்மை செய்திகள் மட்டும் இல்லை. திடுக்கிடும் பல பயங்கரமான தகவல்களை எதிர்பார்க்கலாம்” என்றாள்.
“என்ன பேய் நியூஸா போடப் போற?” என இன்பா கேட்க, அவனை முறைத்துவிட்டு குளியலறை சென்று விட்டாள்.
“டேய் இன்பா இனிமேல் கேஸை எடுத்து நடத்தறதுக்கு முன்னாடியே நீங்க பார்ட்டி கொடுத்தா நான் வர மாட்டேன்னு சொல்லிட்டு எடுக்கணும்” என அவனுக்கு அவனே எச்சரிக்கை போல சொல்லிக்கொண்டு ஹாலிற்கு வந்தான். ரம்யா, ரவி இருவரும் பள்ளி கிளம்பி சென்றிருந்தனர்.
டிவியை ஆன் செய்து செய்தி சேனலை வைத்தான். ‘நகைச்சுவை நடிகர் லிங்கேஷ் தற்கொலை செய்து மரணம்’ என்ற செய்தி ஓடிக்கொண்டிருந்தது. அதிர்ந்துபோய் இன்பா பார்த்துக்கொண்டிருக்க, அவசரமாக நசீர் உள்ளே வந்தான்.
சுப்ரியா தன்னிடம் லிங்கேஷ் பற்றி கண்ட காட்சியை கூறியதை இன்பாவிடம் பகிர்ந்தான். இருவரும் பேசிக்கொண்டிருக்க தர்ஷினி குளித்து வந்து விட்டாள்.
அவளும் லிங்கேஷ் மரணச் செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தாள். “அவர் எப்படி சூசைட் பண்ணியிருப்பார்? எனக்கு எழுதின லெட்டர்ல கூட சீக்கிரமா புதுப்பட அறிவிப்பு வரும்னு எழுதியிருந்தாரே…?” என்றாள்.
“ஆமாம் அவர் அமெரிக்காவில் இருக்கிற ஒரு டீ அடிக்ஷன் சென்டருக்கு போயிருக்கிறதா கூட வதந்திகள் எல்லாம் வந்துச்சு” என்ற நசீர், சுப்ரியா கூறியதை தர்ஷினியிடமும் கூறினான்.
இன்பாவும் சுப்ரியா ஏற்கனவே தன் பெற்றோர் பற்றி கண்ட காட்சியை கூறினான். தர்ஷினிக்கு ஆச்சரியமாக இருந்தது.
“சுப்புக்கு ஏதாவது சூப்பர் நேச்சுரல் பவர் இருக்கா?” என நசீர் கேட்டான்.
“அப்படி சொல்ல முடியாது. அவளுக்கு எப்படியோ முன்னாடி நடக்கப்போகிறது தெரியுது. இதைப்பத்தி தெரிஞ்சவங்க கிட்ட பேசினா தான் நமக்கும் ஏதாவது ஐடியா கிடைக்கும்” என்றான் இன்பா.
கைப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருப்பதாக செய்தி வர, “நசீர் வா.. நம்ம போய் சுபரியாவை பார்த்துட்டு வந்துடலாம்” என்றாள்.
“நானும் வரேன்” என்றான் இன்பா.
சுப்ரியாவின் கைப்பேசி சார்ஜ் இல்லாமல் அணைந்து போயிருந்தது. சுப்ரியாவோ பிரமை பிடித்தவள் போல அமர்ந்திருந்தாள். அழைப்பு மணி ஒலிக்க, கதவைத் திறந்தாள். சரவண பாண்டியன் வந்திருந்தான்.
உள்ளே வந்தவன் சுப்ரியாவின் முகத்தை பார்த்துவிட்டு, “ஏன் ஒரு மாதிரி இருக்க.. என்ன நடந்தது?” என கேட்டான்.
முகத்தை மூடிக் கொண்டு அழ ஆரம்பித்தாள் சுப்ரியா.
சரவணனுக்கு ஒன்றும் புரியவில்லை. “அழாம விஷயத்தைச் சொல்லு” என்றான்.
பயந்துபோய் இருந்தவளுக்கு வார்த்தைகள் எதுவும் வரவில்லை. அவளை சோபாவில் அமரச் செய்தான். அருகில் அமர்ந்து கொண்டவன், அவன் தோளில் சாய்த்துக் கொண்டான். “என்னென்னு சொன்னாதானே எனக்கு தெரியும். எதா இருந்தாலும் பயப்படாத” என்றான். அவனது ஆறுதல் சுப்ரியாவுக்கு தேவையாக இருந்தது. சில நொடிகளில் ஓரளவு தெளிந்தவள், அவனிடமிருந்து விலகி எல்லாவற்றையும் கூறினாள்.
சரவணனுக்கும் நம்ப முடியவில்லை. மீண்டும் ஒரு முறை கேள்விகள் கேட்டு, தெளிவு படுத்திக் கொண்டான்.
“நான் பார்த்த மாதிரியே இவரும் ஹேங்க் பண்ணிதான் சூசைட் பண்ணியிருக்கார். ஒருவேளை நான் எச்சரிக்கை செய்திருந்தா இவரை காப்பாத்தி இருக்கலாமோ..? இந்த மாதிரி காட்சி எல்லாம் எனக்கு ஏன் தோணுது? எனக்கு ரொம்ப பயமா இருக்கு” என்றாள்.
“பயப்படாத. நம்ம இது சம்பந்தமா யாராவது ஒரு ஸ்பெஷலிஸ்ட் கிட்ட கன்சல்ட் பண்ணுவோம். இனிமேலும் உன்னை தனியா விட முடியாது. எப்ப என்னை கல்யாணம் பண்ணிக்கிற?” என கேட்டான்.
“நான் என்ன மனநிலையில் இருக்கேன்? இப்ப போய் என்ன கேட்குறீங்க?” என்றாள்.
“நான் சரியாதான் கேட்கிறேன். நீ ஆல்ரெடி பயந்து போய் இருக்க. இங்க தனியா இருந்தா உனக்கு இன்னும் டிப்ரஷன் ஆகும். உனக்கு தேவையான நேரத்தில் நான் உன்கூட இருக்கணும். கல்யாணம் பண்ணிக்காம நம்ம ரெண்டு பேரும் ஒண்ணா இருக்க முடியுமா? அதான் சொல்றேன்” என்றான்.
சுப்ரியா மௌனமாக இருந்தாள்.
“என்னை கல்யாணம் பண்ணிக்க என்ன பிரச்சனை? என் வேலையை பிடிக்கலைன்னு சொல்லாத… வேற ஏதாவது காரணம் இருந்தா சொல்லு. உனக்காக எவ்வளவு நாள் வேனும்னாலும் வெயிட் பண்ண நான் தயாராதான் இருக்கேன். ஆனா இப்ப உன்னை தனியா விட என்னால முடியாது. அதனாலதான் கல்யாணத்துக்கு உன்னை கம்பெல் பண்றேன்” என்றான்.
சுப்ரியா யோசித்துக் கொண்டிருந்தாள்.
“சரி” என மெல்லிய குரலில் சொன்னாள். சரவணன் அவளை சந்தோஷமாக பார்க்க, அழைப்பு மணி ஒலித்தது. சரவணன்தான் சென்று கதவைத் திறந்தான். மூவரும் சரவணனை பார்த்து ஆச்சரியமாக நின்றிருந்தனர். சரவணனுக்கு அவர்களை தெரிந்திருந்தது. அவர்களைப் பார்த்ததும் சுப்ரியா எழுந்து நின்றாள். சரவணனை ஏ சி பி என அறிமுகம் செய்து வைத்தாள்.
“ஏசிபி மட்டும் இல்லை சுப்ரியாவோட வருங்கால கணவன்” என்று கூறினான் சரவணன். மூவரும் சுப்ரியாவின் முகத்தை பார்க்க, அவளது முகம் சரவணன் கூறியதை ஆமோதிப்பது போல இருந்தது.
தர்ஷினி சரவண பாண்டியனிடம் நேர்முகத்தேர்வில் கேள்விகள் கேட்பது போல கேட்டாள். ஒரு கட்டத்தில் மற்றவர்களுக்கு சிரிப்பே வந்துவிட்டது. இன்பாதான் அவளை அடக்கினான்.
“சுப்ரியா என்ன சின்ன பொண்ணா? அவளுக்கு அவ லைஃப் பார்ட்னரை செலக்ட் பண்ண தெரியாதா? நீ ஓவரா குடையாத. இவரைப் பத்தி நான் கேள்வி பட்டிருக்கேன். நம்பி சுப்ரியாவை கல்யாணம் பண்ணி கொடுக்கலாம்” என்றான்.
“உன் வாயால நீ நல்லவன்னு சொன்னா… இன்னும் நல்லா விசாரிக்கனுமே.. “ என தர்ஷினி கூற, சரவணன் என்ன நினைப்பானோ என நினைத்து இன்பா சங்கடமாய் அவன் முகத்தை பார்த்தான். அவனோ சிரித்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.
“நான் வீட்டுல அம்மாகிட்ட நல்ல நாள் பார்க்க சொல்றேன். எனக்கும் இன்பாவுக்கும் கல்யாணம் நடந்த கோயிலிலேயே கல்யாணம் வச்சுக்கலாம். அதுவரைக்கும் சுப்ரியா தனியா இருக்க வேண்டாம். எங்க கூட இருக்கட்டும்” என்றாள் தர்ஷினி.
எல்லோருக்கும் அதுவே சரி எனப்பட்டது.
தர்ஷினி லிங்கேஷை பற்றி கூறி, “அவர் தற்கொலை பண்ணிக்க சேன்சே இல்லை. அவருடைய மரணத்துல ஏதோ மர்மம் இருக்கு” என்றாள்.
“ஒரு பெரிய செலிபிரிட்டி இறந்திருக்கும்போது போலீஸ் என்னென்னு விசாரிக்காம இருப்பாங்களா? சீக்கிரமாவே அவர் ஏன் இறந்தார்ன்னு தெரியவரும்” என்றான் சரவண பாண்டியன்.
சுப்ரியா மாலையில் தர்ஷினியின் வீட்டிற்கு வருவதாக கூற, அவர்கள் கிளம்பி விட்டனர். சரவணனும் சுப்ரியாவும் மட்டும் இருந்தனர்.
“எனக்கு லேட் ஆகுது சுப்ரியா. நான் கிளம்பட்டுமா?” எனக் கேட்டான் சரவணன்.
தயக்கமாக அவனை பார்த்தவள், “உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்” என்றாள்.
“சொல்லு” என்றான்.
“ஏற்கனவே நான் ஒருத்தரை லவ் பண்ணினதா சொன்னேனே…. அது யாருன்னு நீங்க தெரிஞ்சுக்க வேண்டாமா?”
“எனக்கு தெரிஞ்சுக்கணும்னு இல்லை. உனக்கு சொல்லியே ஆகணும்னா சொல்லு” என்றான்.
“தர்ஷினியோட ஹஸ்பெண்ட் இன்பாதான் அது” என்றவள் அவனிடம் காதல் சொல்லியது.. அவன் மறுத்தது என எல்லாவற்றையும் கூறிவிட்டாள். சொல்லி முடித்து அவன் முகத்தை சுப்ரியா பார்த்திருக்க, அவளருகில் வந்தவன், அவள் தலையை கோதி விட்டு, “என்கிட்ட சொல்லிட்டீல… வேற எதுவும் சொல்லனுமா?” என கேட்டான்.
இல்லை என்பதாய் தலையாட்டினாள். அவள் கன்னத்தை ஒருகையால் ஆதரவாய் பற்றியவன் “நமக்கு கல்யாணம் முடிஞ்சதும் நம்ம வீட்டுக்கு போயிடலாம். உன் முக்கியமான திங்ஸ் மட்டும் பாக் பண்ணி வச்சிடு. கல்யாணத்துக்கு அப்புறமா எல்லாத்தையும் எடுத்துட்டு வீட்டை காலி பண்ணிடலாம். எதையும் போட்டு குழப்பிக்காத. நான் இருக்கேன் உனக்கு” என்றவன் கிளம்பி சென்றான்.
சரவணன் கதவு வரை வந்து விட, அவனையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள் சுப்ரியா. கதவில் கை வைத்தவன், திறக்காமல் சுப்ரியாவை திரும்பிப் பார்த்தான்.
“ஐ திங்க் யூ நீட் அ ஹக் ஃப்ரம் மீ” என்றவன் அவளை நெருங்கி வந்து மென்மையாக அணைத்தான். அந்த ஒற்றை அணைப்பு சுப்ரியாவுக்கு பாதுகாப்பையும், நம்பிக்கையையும் தருவதாக இருந்தது.
சரவணன் அங்கிருந்து கிளம்பி செல்லும்பொழுது, சுப்ரியாவின் மனமும் அவன் பின்னோடு சென்றது.