மணிப்புறாவும் மாடப்புறாவும்-9

அத்தியாயம் 9

இன்பாவுக்கும், தர்ஷினிக்கும் திருமணம் நடக்க இருப்பதால் அவர்களிடம் லிங்கேஷ் பற்றி தான் கண்ட காட்சியை சுப்ரியா கூறவில்லை. நசீரிடம் மட்டும் கூறினாள். அவன் “இது பிரம்மை. நீ முதல்ல தனியா வீட்டுல இல்லாம ஏதாவது ஹாஸ்டலுக்கு மாறு. இல்லைன்னா உன் ஃப்ரெண்ட்ஸ் யாரோடையாவது வீட்டை ஷேர் பண்ணிக்கோ” என அறிவுரை வழங்கினான்.

சுப்ரியாவிற்கும் தான் கண்ட காட்சி நடக்குமா நடக்காதா என விளங்கிக் கொள்ள முடியாமல், குழப்பித் தவித்து, ஒருகட்டத்தில் அவளே இது மனப்பிரமை என முடிவு செய்து, விட்டு விட்டாள்.

இன்பா, தர்ஷினி இருவரது வீடுகளுக்கும் அருகில் இருந்த அம்மன் கோயிலில் புதன் காலை முதல் முகூர்த்தத்தில் திருமணம் நடப்பதாக இருந்தது. முதல் நாள் மாலையில், ரஹீம் பாய் வீட்டிற்கு வெளியில், தர்ஷினி அமர்ந்திருக்க, அவளுக்கு பஷீரின் மனைவி சிராஜ்நிஷா மருதாணி வைத்துக் கொண்டிருந்தாள்.

மருதாணி எல்லாம் வேண்டாம் என்று தர்ஷினி அடம் செய்ய, நூர்ஜஹான்தான் சமாதானப்படுத்தி அழைத்து வந்திருந்தார்.

பஷீரை பார்க்கவென அங்கே வந்தான் இன்பா. அவனைப் பார்த்தும் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள் தர்ஷினி. பஷீருடன் பேசிவிட்டு இன்பா வெளியில் வர, சிராஜ்நிஷா மருதாணி போட்டு முடித்து விட்டு எழுந்து சென்று விட்டாள்.

தர்ஷினி அங்கிருந்த வளர்ப்பு பிராணிகளை வேடிக்கை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள். அவளருகில் வந்து நின்றான் இன்பா. இவனைக் கண்டதும் எழுந்து சென்று புறாக்கூண்டுகளுக்கு அருகே நின்று கொண்டு ஃபெலிஸை பார்க்க ஆரம்பித்தாள். அங்கேயும் வந்தான் இன்பா.

“என்னடி ஓடிப்பிடிச்சு விளையாடிகிட்டு இருக்கியா?” எனக் கேட்டான்.

“உன் கூட விளையாடுறது ஒண்ணுதான் குறைச்சல்” என்றாள்.

“நம்ம கல்யாணம் முடிஞ்சதுக்கப்புறம் நம்ம ரூம்ல டெய்லி ஓடி பிடிச்சி, கண்ணாமூச்சி, கபடி இப்படி நிறைய விளையாடலாம்” என்றான்.

“கையில் மருதாணி வச்சிருக்கேன்… ஒன்னும் செய்ய மாட்டேங்குற தைரியத்தில்தானே பேசுற?”

“அட ஆமாம்ல. இப்போ நான் என்ன பண்ணினாலும் உன்னால ஒன்னும் செய்ய முடியாதுல்ல…? எனக்கு தோணல பாரேன்” என்றான்.

‘ஐயோ தர்ஷினி சும்மா வந்து நின்னவனுக்கு இப்படி ஐடியாவ நீயே கொடுக்குறியே… இப்ப என்ன பண்ணுவானோ?’ என நினைத்து தர்ஷினி நின்றிருந்தாள்.

சுற்றும் முற்றும் பார்த்தான். வெளியில் யாரும் இல்லை. பட்டென அவள் கன்னத்தில் முத்தமிட்டான். தனது தோள் பட்டையினால் இன்பா முத்தமிட்ட கன்னத்தை அழுந்த துடைத்தவள்,

“ச்சீ… போடா பொறுக்கி” என்றாள்.

அவள் திட்டினாலும் சிரித்துக்கொண்டே “ஹேய் தர்ஷினி எனக்கும் ஒன்னு கொடு” என்றான்.

“மருதாணி கலைஞ்சாலும் பரவாயில்லைன்னு ஒண்ணு தரவா?” எனக் கேட்டாள்.

அதற்கும் சிரித்தவன், “உன்னை கல்யாணம் பண்ணிக்கனும்கிறது எத்தனை வருஷ கனவு தெரியுமா?உன் மேல எவ்ளோ ஆசை வச்சிருக்கேன்னு தெரியுமா? என் மேல உள்ள கோவம் உனக்கு பின்னாடி சரியாகிடும். ஆனா இந்த செகண்ட் திரும்ப வராது. என்னை வெறுப்பேத்துறேன்னு மூஞ்சிய தூக்கி வச்சுக்காம, கொஞ்சம் சிரிசிச்சுக்கிட்டே இரு. நாளைக்கு வரையிலும் என் நினைவா இதை வச்சிக்க, அப்புறமா எல்லாத்தையும் திருப்பி தந்திடு” என இன்பா கூற, என்ன தரப் போகிறான் என தர்ஷினி பார்க்க, வேகமாய் அவள் இதழில் முத்தம் வைத்து விலகினான்.

இன்பாவின் திடீர் தாக்குதலில் திகைத்துப் போய் நின்ற தர்ஷினி, நொடியில் சுதாரித்து, “மருதாணி கலைஞ்சாலும் பரவாயில்லைடா” எனக்கூறி அவனை அடிக்க வர, நூர்ஜஹான் அங்கு வந்துவிட்டார்.

“என்ன பாப்பா இது? நாளைக்கு கல்யாணத்தை வச்சுக்கிட்டு, இன்னைக்கு ஓடிப்பிடிச்சி விளையாடிகிட்டு இருக்கீங்க?” என சிரித்துக்கொண்டே கேட்டார்.

“இவன் என்ன பண்ணினான் தெரியுமா?” என தர்ஷினி கேட்க, “என்ன பண்ணினான்?” என நூர்ஜஹான் அவளிடமே கேட்டார்.

இன்பா சிரிப்பை அடக்கிக் கொண்டே , “நான் வேணா சொல்லட்டுமா?” எனக் கேட்டான்.

கோவத்தில் பெரிய பெரிய மூச்சுகளை விட்டவள், “நான் வீட்டுக்கு போறேன்” எனக்கூறி நடக்க ஆரம்பித்தாள்.

அவள் பின்னே சென்றவன், “இன்னும் ஒரு நாள் தாண்டி… ம்ஹூம்… அரை நாள் தாண்டி… அதுக்கப்புறம் நீயே நினைச்சாலும் என்கிட்ட இருந்து ஓட முடியாது. வசமா என்கிட்ட மாட்டிக்கிட்ட” எனக் கூறினான்.

நடப்பதை நிறுத்திவிட்டு, திரும்பி நின்று அவனைப் பார்த்து சிரித்தவள், “நான் உன்கிட்ட மாட்டிக்கலடா… நீதான் என்கிட்ட மாட்டிக்க போற” என்றாள்.

“அதுக்குதாண்டி காத்துகிட்டு இருக்கேன்” என மையலாய் கூறினான் இன்பா.

அவனைப் பார்த்து நக்கலாக சிரித்து விட்டு தர்ஷினி சென்று விட்டாள்.

எளிமையாக இன்பசாகரன்- பிரியதர்ஷினி திருமணம் நடந்து முடிந்தது. திருமணம் முடிந்த பின்னும் இன்பாவை கண்டுகொள்ளாமலே இருந்தாள். ஆரம்பத்தில் தன்னை பார்க்கிறாளா… பார்க்கிறாளா… என்று அவளையே கவனித்துக் கொண்டு இருந்தவன், அவளின் பாரா முகத்தில் எரிச்சலாகி அவளைக் கவனிப்பதை நிறுத்தி விட்டான்.

இன்பாவுக்கு மனம் கனன்று கொண்டிருந்தது. வாழ்க்கையில் திருமணம் என்பது எவ்வளவு முக்கியமான நிகழ்ச்சி. தன்மனம் கவர்ந்தவளின் பாராமுகம் இன்பாவின் மனதை வெகுவாக பாதித்தது. மணமக்கள் இருவரும் மணமகன் வீட்டிற்கு சென்றனர். தெருவில் இருந்தவர்களுக்கு மட்டும் சொல்லியிருந்தனர். அங்கேயே ஆட்கள் வைத்து விருந்து தயாராகிக் கொண்டிருந்தது.

லட்சுமியை எந்த வேலையும் செய்ய விடாமல், பத்மினி, பூரணி, நூர்ஜஹான் ஆகியோரே எல்லா வேலைகளையும் செய்தனர். குணசேகரி தனது மகன் சீனுவுடன் வந்திருந்தார். எதிலும் பட்டுக் கொள்ளாமல் ஒரு ஓரமாய் அமர்ந்து கொண்டார் குணசேகரி. சம்பந்தமே இல்லாமல், சீனுவை காண நேரிட்ட போதெல்லாம் இன்பா அவனை முறைத்துக் கொண்டிருந்தான்.

தர்ஷினி ரம்யாவின் அறையில் இருக்க, சிராஜ்நிஷா, சுபாஷினி, சுப்ரியா ஆகியோரும் அங்கேதான் இருந்தனர். ஆண்கள் கூடத்தில் அமர்ந்திருந்தனர். பத்மினி பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்குமாறு தர்ஷினியிடம் கூறினார்.

“போய் அவன்கிட்ட சொல்லு, வந்ததும் வரேன்” என்றாள் தர்ஷினி.

“ரெண்டு போட்டேன்னா பாரு. எப்பவும் போல வாடா போடான்னு எல்லாம் பேசாதே. மரியாதை கொடுத்து பேசு” என்றார் பத்மினி.

தர்ஷினி பத்மினியை முறைக்க, “நீங்க போய் இன்பாவை கூப்பிடுங்கம்மா. நான் இவளை அழைச்சிட்டு வரேன்” என்றாள் சுப்ரியா.

மணமக்கள் முதலில் அவர்களின் பெற்றோர்களிடத்தில் ஆசிர்வாதம் வாங்கி கொண்டனர். பின்னர் ரஹீம் பாய், நூர்ஜஹான் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க, அவர்கள் இருவரையும் வாழ்த்தி மோதிரங்கள் அணிவித்தனர். பிரபஞ்சன் பூரணி தம்பதிகளிடம் ஆசிர்வாதம் வாங்கினர். பிரபஞ்சன் இருவருக்கும் தங்க சங்கிலிகள் பரிசளித்தார்.

குணசேகரியிடம் ஆசீர்வாதம் வாங்க தர்ஷினி செல்ல, இன்பா காலில் விழாமல் நின்றுகொண்டான். தர்ஷினி இன்பாவை பார்த்து முறைக்க, இன்பா முகம் திருப்பிக் கொண்டான். குணசேகரியும் தர்ஷினிக்கு மட்டும் குங்குமம் இட்டார்.

சீனு கிஃப்ட் ஒன்றை அவளிடம் கொடுத்தான். சிரித்துக்கொண்டே வாங்கிக்கொண்டாள் தர்ஷினி.

“என்னன்னு பிரிச்சி பாரு” என்றான் சீனு.

தர்ஷினி சுற்றியிருந்த வண்ண காகிதத்தை பிரித்து பார்க்க, அவள் பிறந்தது முதல் இன்று வரை உள்ள அவளது பல படங்கள் கொலாஜ் செய்யப்பட்ட ஃபோட்டோ அது.

“ரொம்ப நல்லாயிருக்கு சீனு. தேங்க்ஸ்” என முகமலர்ந்து கூறினாள் தர்ஷினி.

சீனுவை பார்த்து முறைத்துக் கொண்டே அதை கையில் வாங்கிய இன்பா, அருகில் நின்றிருந்த சுபாஷினியிடம் கொடுத்தான். “இதை மாட்ட இந்த வீட்டு சுவத்துல இடம் இல்லை. உங்க சொந்தக்கார குட்டி சுவரு கொடுத்ததை உன் வீட்லேயே மாட்டி வச்சிடு” என குட்டி சுவரு எனும் போது சீனுவை பார்த்து கொண்டே கூறினான்.

குணசேகரி கோவமாக தன் தம்பியைப் பார்க்க, முருகேசனும் சங்கடத்துடன் நின்றிருந்தார். தர்ஷினி இன்பாவிடம் சண்டைக்கு செல்ல தயாரானாள்.

நிலைமை ஏதும் விபரீதமாகி விடுமோ என லட்சுமியும் பத்மினியும் பார்த்துக்கொண்டிருக்க,

“நேரமாயிடுச்சி வாங்க எல்லாரும் சாப்பிடலாம். தெருக்காரங்க எல்லாம் எவ்வளவு நேரம் காத்துகிட்டு இருப்பாங்க. பஷீர், நசீர், ரவி எல்லாரும் வாங்க… ஹெல்ப் பண்ணுங்க… சீனு நீயும் வாப்பா” என எல்லோரையும் அழைத்து நிலைமையை அழகாய் சமாளித்தார் ரஹீம் பாய்.

விருந்து முடிந்த கையோடு குணசேகரி சீனுவை அழைத்துக்கொண்டு கிளம்பிவிட்டார். பிரபஞ்சன் பூரணியை அங்கேயே விட்டுவிட்டு அவர் மட்டும் கிளம்பிவிட்டார். அன்று இரவே மருத்துவமனையில் லட்சுமி அட்மிட் ஆக வேண்டும் என்பதால் அவருக்கு தேவையானதை நூர்ஜஹானும், பத்மினியும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தனர்.

“நான் சொன்னா கேட்டீங்களா? கல்யாணம் முடிஞ்ச அடுத்த நாளே ஆபரேஷன் வச்சிட்டீங்க. புள்ளைங்களுக்கு சடங்கு எல்லாம் எப்படி செய்யறது?” என கவலையாய் கூறினார் லட்சுமி.

“உங்களுக்கு உடம்பு முடியாம இருக்கும் போது, இந்த சடங்குக்கு எல்லாம் ரெண்டு பேருமே ஒத்துக்க மாட்டாங்க அண்ணி. நீங்க உடம்பு தேறி வாங்க. எல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்” என்றார் பத்மினி.

பட்டுப் புடவையை மாற்றிக்கொண்டு சாதாரண புடவை அணிந்த தர்ஷினி ரம்யாவின் அறையிலேயே படுத்து விட்டாள். தர்ஷினி தன்னுடன் இழைய வேண்டும் என இன்பா எதிர்பார்க்க விட்டாலும், இப்படி தன்னை தவிர்ப்பது அவனுக்கு வேதனையாக இருந்தது. ‘சின்ன சிரிப்பு கூட வேண்டாம், நான் கவனிக்காத பொழுதாவது தன்னை கவனிக்கலாம் இல்லையா?’ என்று ஏங்கியது அவனது மனம்.

பெரியவர்கள் இவர்கள் இருவரையும் கவனித்தாலும், லட்சுமியின் அறுவை சிகிச்சை முடியட்டும். இப்பொழுது எதுவும் பேச வேண்டாம் என்று இருந்து விட்டார்கள்.

மாலையில் லட்சுமி மருத்துவமனை புறப்பட, சாரங்கபாணி, நூர்ஜஹான், ரஹீம் பாய், பூரணி ஆகியோர் புறப்பட்டனர். பத்மினியும் முருகேசனும் பிள்ளைகளை பார்த்துக்கொள்ள வீட்டில் இருந்து கொண்டனர். இன்பாவும் உடன் வர, “நீ எங்கடா வர…? நீ இங்கேயே இரு” என்றார் லட்சுமி.

“உன் கூட நான் வராம வேற யாரு வருவா? ஒன்னும் பேசாத நான் வருவேன்” என்றான் இன்பா.

“இதுக்குதான் நான் சொன்னேன்… உடனே ஆபரேஷன் வைக்க வேண்டாம்னு… பாருங்க இவனை. கல்யாணம் ஆன அன்னைக்கே என்கூட ஆஸ்பத்திரிக்கு வர்றான்” என சாரங்கபாணியிடம் குறைபட்டுக்கொண்டார் லட்சுமி.

“ம்மா… டைம் ஆயிடுச்சு கிளம்பலாமா?” என கேட்டுக் கொண்டே வீட்டிற்கு வெளியில் முதல் ஆளாய் வந்து நின்றுவிட்டான் இன்பா.

மருத்துவமனையில் லட்சுமியை அனுமதித்துவிட்டனர். அடுத்த நாள் அறுவை சிகிச்சை என்பதால் அன்று இரவிலிருந்து லட்சுமியை எதுவும் சாப்பிடக்கூடாது என கூறிவிட்டனர்.

இருவருக்கு மேல் தங்க அனுமதி இல்லை என மருத்துவ நிர்வாகம் கூறிவிட, பூரணி தங்கி கொள்வதாக இருந்தது. அவருடன் இன்னும் ஒருவர் தங்கிக்கொள்ள சாரங்கபாணிக்கும் இன்பாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் ரஹீம்பாய்தான் “நாளைக்கு ஆபரேஷன் முடிஞ்சதும் நீ தங்கிக்கலாம். இன்னைக்கு தங்கச்சி தூங்கதான் போகுது வா” எனக்கூறி இன்பாவை அவருடன் அழைத்து சென்றார்.

காலையில் வந்து விடுவதாக தன் அன்னையிடம் கூறிவிட்டு இன்பாவும் கிளம்பினான்.

வீட்டிற்கு வரும்போது நேரம் 10 ஆகியிருந்தது. அசதியில் அனைவரும் உறங்கி இருப்பார்கள் போலும், எந்த சத்தமும் இல்லாமல் அமைதியாக இருந்தது. அழைப்பு மணி அடித்தால் எல்லோரும் எழுந்து விடுவார்கள் என்றெண்ணி தர்ஷினிக்கு கைப்பேசியில் அழைத்தான். அவள் எடுத்துப் பேச கதவை திறக்குமாறு கூறினான்.

சில நொடிகளில் கதவு திறக்கப்பட, தூங்கிய முகத்துடன் தர்ஷினி நின்றுகொண்டிருந்தாள்.

“அத்தையை தனியா விட்டுட்டு நீ ஏன் வந்த?” என கோவமாக கேட்டாள்.

“ரெண்டு பேருக்கு மேல தங்க கூடாதுன்னு சொல்லிட்டாங்கடி. அப்பா அவர்தான் இருப்பேன்னு ரொம்ப அடம் பண்ணிட்டார். சரி நாளையிலிருந்து இருந்துக்கலாம்ன்னு நானும் வந்துட்டேன்” என்றான்.

பேசிக்கொண்டே இன்பா உள்ளே வர, சோபாவை சுவற்றின் ஓரமாக நகர்த்தி போட்டுவிட்டு, அங்கேயே படுக்கை விரித்து, சுபாஷினியும் ரம்யாவும் உறங்கிக் கொண்டிருந்தனர். ரம்யாவின் பக்கம் கொஞ்சம் தள்ளி ரவி உறங்கிக்கொண்டிருந்தான். சுபாஷினிக்கும் ரம்யாவுக்கும் நடுவில் ஒரு ஆள் படுத்து எழுந்த அடையாளம் இருந்தது. அங்குதான் தர்ஷினி படுத்திருப்பாள் போலும் என்று நினைத்துக் கொண்டான்.

ரம்யாவின் அறையில் பத்மினி உறங்கிக் கொண்டிருந்தார்.

“மாமா எங்க?” எனக் கேட்டான்.

“கல்யாணம் நடந்த வீட்ல யாரும் இல்லாம இருக்க வேண்டாம்னு அவர் மட்டும் அங்கே இருக்கார்” என்றாள் தர்ஷினி.

“குடிக்க கொஞ்சம் சுடுதண்ணி போட்டு தாடி” என கேட்டுவிட்டு அவனது அறைக்குள் சென்று விட்டான்.

சுடுதண்ணீர் போட்டவள், ‘இங்கேயே இருந்து குடிக்காம ரூமுக்கு எதுக்கு அதுக்குள்ள போனான்? ஏதோ பிளான் பன்றான் இந்த காட்டுபூச்சி’ என எரிச்சல் பட்டுக் கொண்டே அறைக்குள் சென்றாள்.

இன்பா மேலாடை எதுவும் இன்றி, வெறும் வேஷ்டியுடன் அமர்ந்திருந்தான். எப்பொழுதும் மேலாடை இல்லாமல் வீட்டில் இருக்கவே மாட்டான். அறையில் இருப்பதால் அவ்வாறு இருந்தான்.

தர்ஷினி உள்ளே வரவும், அவள் நினைத்தது போல இன்பா வம்பு எதுவும் செய்யவில்லை. தண்ணீரை வாங்கிக் கொண்டான். அவனது சோர்ந்து போன முகத்தை பார்த்த தர்ஷினி,

“என்ன செய்து ஏன் இப்படி இருக்க?” எனக் கேட்டாள்.

“நேத்து சரியா தூங்கலை. இன்னைக்கும் பகல்ல தூங்கலையா…? தலை வலிக்குது” என்றான். பதில் எதுவும் சொல்லாமல் வெளியில் சென்றுவிட்டாள்.

‘இதுக்கு எதுக்கு இவ்ளோ அக்கறையா கேட்கணும்?’ என மனதில் நினைத்துக் கொண்டான். சில நொடிகளில் தர்ஷினி மீண்டும் உள்ளே வந்தாள்.

“இந்தா இந்த தைலத்தை தடவிக்க… தலைவலி சரியாகிடும்” எனக் கூறி அவனிடம் தைல பாட்டிலை நீட்டினாள்.

“நீயே தடவி விடேன்” என்றான் இன்பா. அவனை முறைத்தாலும் மறுக்காமல், “படுத்துக்க” எனக் கூறினாள்.

இன்பா படுத்துக் கொள்ள, அவனது தலை மாட்டில் அமர்ந்து கொண்டவள், அவனுக்கு தைலம் தடவி விட்டாள். தர்ஷினியின் பார்வை இன்பாவின் இடதுபக்க நெஞ்சில் இருந்தது. அங்கே இரண்டு அங்குலத்தில் இருந்தது தீக்காய தழும்பு ஒன்று. இன்றுதான் தர்ஷினி பார்க்கிறாள். அந்த தழும்பு ஏற்பட்ட நாளை நினைத்து கொண்டாள். தர்ஷினி அதே சிந்தனையில் அவனுக்கு தைலத்தை தடவி முடித்தாள்.

செல்லலாம் என நினைத்து அவள் எழும்ப பார்க்க, இன்பாவின் தலை அவளது மடியில் இருந்தது. எப்பொழுது இங்கு படுத்தான் என நினைத்துக்கொண்டே…

“தள்ளிப்படுடா” என்றாள் தர்ஷினி.

“ப்ளீஸ் டீ” என்றான் இன்பா.

“நீ செய்ற வேலைக்கு எல்லாம் உன்னை ப்ளீஸ் வேற பண்ணனுமா…? முதல்ல தள்ளிப்படு நான் போகணும்” என்றாள்.

இன்பா எழுந்து கொள்ளாமல், அவள் வயிற்றோடு கன்னம் அணைத்து, இரு கைகளால் இடுப்பை சுற்றி வளைத்தான். தர்ஷினிக்கு ஏற்பட்ட குறுகுறுப்பில் ஒரு நொடி நிலை தடுமாறினாலும், உடனேயே தன்னிலை அடைந்து, அவனை வலுக்கட்டாயமாக பிரித்து படுக்கையில் தள்ளி எழுந்து கொண்டாள்.

“போனா போகுதுன்னு ஹெல்ப் பண்ணினா நீ உன் புத்திய காமிச்சிட்டீல்ல…?” என சீறினாள்.

“என்னடி பண்ணிட்டேன் இப்போ? உன்னை காதலிக்க ஆரம்பிச்சு பல வருஷம் ஆகுது. என்னைக்காவது எல்லை மீறி நடந்திருக்கேனா? தலைவலி, மனசும் சரி இல்லை. நான் எதுவும் பிளான் பண்ணி பண்ணலை. நீ பக்கத்துல இருக்கவும் மடியில் தலை வைச்சுக்கிட்டேன். எனக்கு பெட்டரா ஃபீல் ஆச்சு. எங்க எழுந்து போய்ட போறியோன்னு நினைச்சு, உன்னை புடிச்சுக்கிட்டேன். இதுல என்ன என் புத்தியை நான் காட்டினேன்?” என்றான் இன்பா.

“நான் தண்ணி எடுத்துகிட்டு வருவேன்னு தெரியும் இல்ல. அப்புறம் ஏண்டா இப்படி அரையும் குறையுமா இருந்த?”

இதழ்க்கடையோரம் சிரிப்பு எட்டிப்பார்த்தது இன்பாவுக்கு. “நான் தூங்குறதுக்கு முன்னாடி இப்படித்தான் இருப்பேன். சிலசமயம் இதுகூட இல்லாம…” என வேஷ்டியை அவன் தொட்டுக்காட்டி கூறி பேசிக்கொண்டிருக்க, தலையணையை தூக்கி அவன் முகத்தில் விட்டெறிந்தாள் தர்ஷினி.

“ஹேய்… ச்சீய்… லூசு… வேஷ்டி இல்லாம சாட்ஸ் போட்டுகிட்டு இருப்பேன்னு சொல்ல வந்தேன்டி. நீ நினைச்ச மாதிரி இல்ல, வேணும்னா… நீ ஆசைப்பட்டீன்னா….” என இன்பா கூறி கொண்டிருக்க, இன்னொரு தலையணையையும் எடுத்து அவன் மீது விட்டெறிந்தாள்.

“ஹேய்…. மறுபடியும் தப்பா நினைக்கிறடி. நீ ஆசை பட்டீன்னா வேஷ்டி கட்டாம இனிமேல் லுங்கி கட்டிக்கிறேன்னு சொல்லவந்தேன்” என்றான். இன்பாவின் முகத்தில் ஏகத்துக்கும் பரிகாசம் வழிந்தது.

“இவனைப் பத்தி தெரிஞ்சும், இவனுக்கு போய் ஹெல்ப் பண்ண வந்த பாரு… உனக்கு இது தேவைதாண்டி தர்ஷினி” என தன் முகத்திற்கு நேரே தன்னுடைய சுட்டு விரலை நீட்டி கூறிக்கொண்டவள் கோவமாக வெளியேறினாள்.

இன்பா எழுந்து கூடத்திற்கு வந்து பார்க்க, சுபாஷினிக்கும் ரம்யாவுக்கும் இடையில் படுத்திருந்தாள் தர்ஷினி. அவள் படுப்பதற்காகவே காத்திருந்தது போல, சுபாஷினி அவளது கையை தர்ஷினியின் மேல் போட்டுக்கொண்டாள். ரம்யாவும் அவளது காலை தூக்கி தர்ஷினியின் மேல் போட்டுக்கொண்டாள்.

தன் தங்கையின் மீதும், தன் மனைவி தங்கையின் மீதும் பொறாமையாக வந்தது இன்பாவுக்கு. இருவரையும் விலக்கி, தர்ஷினியை அப்படியே அள்ளிக் கொள்ள வேண்டும் என்ற ஆசை மனதிற்குள் எழ, ‘ஏய் அவ உன் பொண்டாட்டிடா. உன்கிட்டதானே வரப்போறா. பாவம் சின்ன பிள்ளைங்க. ஆசையா படுத்திருக்காங்க. உன் ஆசையை ஓவரா பொங்கவிடாம கொஞ்சம் தூங்கி எழுந்திரு. காலையில ஹாஸ்பிடல் போகணும்’ என மனசாட்சி குரல்கொடுக்க, மீண்டும் ஒரு முறை தர்ஷினியை ஆழ்ந்து பார்த்துவிட்டு தன் அறைக்கு சென்றான். தர்ஷினி விட்டெறிந்த தலையணைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் கிடக்க, ஒரு தலையணையை தலைக்கு வைத்து, மற்றொன்றை தனக்கு துணைக்கு வைத்து கண்களை மூடி, தன் மனக் கண்களால் தன் மனதிற்கு இனியவளை பார்த்துக்கொண்டே உறங்கிப் போனான் இன்பா.

என்ன கனவு வந்ததோ உறக்கத்திலேயே சிரித்துக் கொண்டிருந்தான் இன்பா.