அனைவரும் சுற்றுலா பயணம் செல்ல வேன் பிடித்து தெற்கு நோக்கி பயணித்துக் கொண்டிருந்தனர்.
ஓட்டுநர் இல்லாமல் வண்டியை மட்டும் வாடகைக்கு வாங்கிக் கொள்ளலாம். நாள் கணக்குக்கு பணம் கொடுக்க வேண்டி இருக்கும். வண்டியை செல்வாவும், லாவண்யாவின் தாய்மாமன் பழனியும் ஓட்டலாம். வண்டியை வாடகைக்கு வாங்குவதை பற்றி தான் பேசி விட்டதாக கதிர்வேலிடம் சர்வேஷ் பேசினான்.
ஆம் சரோஜாவிடம் லாவண்யாவின் குடும்பத்தையும் அழைத்து செல்லலாம் என்று சர்வேஷ் தான் கூறியிருந்தான்.
“நான் கூப்பிட்டா வருவங்களானு தெரியல தம்பி. கதிர பேச சொல்லி பாருங்க” சரோஜா மறுக்கவில்லை. ஏன் அவர்களை அழைத்து செல்ல வேண்டும் என்று கூட கேட்கவில்லை.
சர்வேஷ் சரோஜாவிடம் தான் லாவண்யாவின் வாழ்க்கையில் என்ன நடந்தது என்று கேட்டிருந்தான்.
ஏன் தம்பி கேக்குறீங்க? லாவண்யா புள்ள மேல உங்களுக்கு…” என்று சரோஜா நேரடியாகவே கேட்டாள்.
“எனக்கில்லை என் அண்ணன் செல்வாவுக்கு பொண்ணு கேட்கலாம் என்றுதான். குழந்தையோட இருந்தாலும், எதோ பிரச்சினை என்று மட்டும் தெரியுது” தான் பார்த்து புரிந்துகொண்டதை சர்வேஷ் சரோஜாவிடம் கூற, சரோஜாவும் அவனிடம் உண்மைகளை கூறியிருந்தாள்.
அதனால் தான் சுற்றுலா செல்ல லாவண்யா குடும்பத்தை அழைத்து செல்லலாம் என்று சர்வேஷ் சரோஜாவிடம் கேட்ட பொழுது மறுக்காமல் கதிர்வேலிடம் பேசச் சொன்னாள்.
ஏற்கனவே கதிர்வேல் மீது சந்தேக பார்வையை வீசிக் கொண்டிருப்பதால் அவனிடம் சென்று செல்வாவை பற்றி கூறி உதவி கேட்க வேண்டுமா? என்று யோசித்தவன், செல்வாவை பற்றி எதுவும் கூறாமல், லாவண்யாவின் வாழ்க்கையில் நடந்ததை சரோஜா கூறியதாகவும், அவளது வாழ்க்கையிலும் மாற்றம் வரட்டும் அழைத்து செல்லலாமா? சாதாரணமாக கேட்டான்.
“ஆ… நல்ல ஐடியாவாக இருக்கு. லயாவ கூட்டிட்டு போலாம். லயாவ மட்டுமில்ல. அவ குடும்பத்தையே கூட்டிட்டு போலாம். நான் பேசுறேன். எனக்கு மாட்டேன்னு சொல்ல மாட்டா” என்றான் கதிர்வேல்.
“அவ்வளவு க்ளோசா?” நாக்கு நுனியில் வந்த கேள்வியை கேட்காமல் சர்வேஷ் “வண்டி ஏற்பாடு பண்ணிக்கிட்டா வண்டியோட்ட செல்வாவும், பழனி மாமாவும் இருப்பாங்க” என்றான்.
“முன்ன மாதிரி வாடகைக்கு வண்டி எடுக்குறது அவ்வளவு லேசான காரியம் கிடையாது. வண்டி வாடகை ரொம்பவே ஜாஸ்தி. பெட்ரோல் தட்டுப்பாடு வேற இருக்குறதால, நாம ட்ரைவரோட வண்டிய எடுத்துட்டு போறதுதான் நல்லது.
வண்டிக்கு பெட்ரோல் போட, வண்டிய பாத்துக்க என்று வண்டியோட எல்லா வேலையையும் ட்ரைவர் பாத்துப்பாரு. நாம ட்ரிப்பை என்ஜோய் பண்ணலாம். பெட்ரோல் தேடி அலைய வேண்டிய தலைவலி இல்லையே” என்றான் கதிர்வேல்.
அவன் சொல்வதும் சரிதான். பெட்ரோல் பிரச்சினைக்கு இன்னும் நூறு வீதம் தீர்வு கிடைக்கவில்லை. லாவண்யாவை அழைத்து வருகிறேன் என்றானே அதுவே போதும் என்று சர்வேஷ் சுற்றுலா செல்ல தயாரானான்.
சுற்றுலா சென்று வரும் பொழுது சுரங்கணி பேராதெனிய யூனிவசிட்டிக்கு சென்று விடுவாள் என்று சுற்றுலா செல்லும் வரை சர்வேஷ் சிறிசேன முதலாளியின் கடையில் தான் தவம் இருந்தான்.
சுரங்கணி சர்வேஷ் என்ற ஒருவன் அங்கே இருப்பது அவளுக்கு தெரியவே தெரியாது என்பது போல் தான் அவள் அவளது வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தாள்.
இவனும் அவளை பார்த்தவாறே செல்வாவிடம் பேசினானே ஒழிய, அவளோடு ஒரு வார்த்தைக்கு கூட பேசவில்லை. என்ன பேச வேண்டுமோ தெளிவாக பேசி விட்டான். இனி அவள் தான் முடிவெடுக்க வேண்டும். திரும்பத் திரும்ப அவளிடம் போய் நின்று அவளை தொல்லை செய்ய அவனுக்கும் இஷ்டமில்லை.
சுற்றுலா சென்று வரும் பொழுது அவள் இருக்கவும் மாட்டாள். காலேஜ் சென்றவள் தொடர்பு கொள்ளவே இல்லையென்றால் அவளுக்கு என் மீது இஷ்டமே இல்லை என்று தானே அர்த்தம். இஷ்டமில்லாதவளை தொந்தரவு செய்ய முடியுமா? ஒருவேளை இது அவளை பார்க்க கிடைக்கும் கடைசி வாய்ப்பாக கூட இருக்கும் என்றுதான் அன்று நாள் முழுவதும் கடையே கதி என்று கிடந்தான்.
வீட்டார் எதிர்த்தால் பேசி சம்மதம் வாங்கலாம் என்று கூறினான் தான். அவர்கள் வீட்டார்கள் சம்மதிப்பார்களா இல்லையோ அவன் பெற்றோர் நிச்சயமாக எதிர்ப்பார்கள். அதுவும் தேவி அழுது ஆர்ப்பாட்டம் செய்வாள்.
இலங்கை வந்து இரண்டு மாதமாகப் போகிறது. தினமும் தேவி அலைபேசி அழைப்பு விடுப்பாள். சர்வேஷின் நலனை மட்டும் விசாரிப்பவள் மறந்தும் சரோஜாவை பற்றியோ, கதிர்வேலை பற்றியோ கேட்பதில்லை.
ஆரம்பத்தில் சர்வேஷ் சொல்ல முனைந்த போது தனக்கு வேலை இருப்பதாக அலைபேசியை துண்டித்தவள், போகப் போக “சர்வேஷ் உன் அப்பாவுக்காக, உன் மனநிம்மதிக்காக நீ அந்த குடும்பத்த பார்க்கணும் என்று சொன்ன, நானும் அனுப்பி வச்சேன். என்ன வேலையா போனியோ அத முடிச்சிட்டு சீக்கிரமா வந்துடு. அந்த குடும்பத்த பத்தி எனக்கு எதுவும் தெரிய வேண்டியதில்லை” என்று விட்டாள்.
அதன்பின் சர்வேஷ் தேவியிடம் ராஜ்பிரபுவை பற்றி விசாரிப்பானே ஒழிய இங்குள்ளவர்களை பற்றி எதுவும் சொல்ல மாட்டான்.
முன்னெச்சரிக்கையாக யாரும் அவரை தொடர்பு கொண்டு சர்வேஷை பற்றி விசாரிக்கவோ, எந்த தகவலுமோ கூறிடக் கூடாதென்று இப்பொழுது அவருக்கு முழுமையான ஓய்வு தேவை என்று அவரையும் அழைத்துக் கொண்டு தேவி கொடைக்கானலில் உள்ள தந்தையின் பண்ணை வீட்டுக்கு சென்று விட்டாள்.
ராஜ்பிரபுவை பொறுத்தவரையில் சர்வேஷ் வெளிநாட்டில் சூட்டிங் போய் இருக்கின்றான். தந்தைக்கு உடம்பு முடியாததால் சொல்லாமல் கொள்ளாமல் சென்று விட்டான். உடம்பு தேறிய பின் அலைபேசியில் மகனோடு உரையாடும்படி ராஜ்பிரபுவிடம் தேவி கூறி விட்டாள்.
சர்வேஷ் பெற்றோரிடம் பொய் உரைக்க மாட்டான். ராஜ்பிரபு ஏதாவது கேட்டால் நிச்சயமாக சர்வேஷ் தான் இலங்கையில் இருப்பதாகவும், என்ன விஷயமாக வந்துள்ளேன் என்பதையும் கூறி விடுவான். அது ராஜ்பிரபுவின் உடல்நிலையையும் பாதிக்கும். அந்த அச்சத்தையும் தாண்டி எங்கே கணவன் அந்த குடும்பத்தை பார்க்க வேண்டும் என்று கூறி விடுவாரோ என்ற அச்சம் தேவிக்குள் இருக்கவே உடம்பு நன்றாக தேறிய பின் மகனோடு அலைபேசியில் செல்லம் கொஞ்சலாம் என்று அலைபேசியை கொடுக்க மறுத்ததோடு ராஜ்பிரபுவின் அலைபேசியை அனைத்து வைத்து விட்டாள்.
சுரங்கணி சம்மதம் கூறாமல் சுரங்கணியை பற்றி தேவியிடம் பேசவும் முடியாது. அலைபேசியில் பேசக் கூடிய விஷயமும் இல்லை இது. என்றுதான் கூறாமல் இருக்கின்றான் சர்வேஷ்.
“ட்ரைவர் அந்த மியூசிக் சிஸ்டத்தை கொஞ்சம் ஆன் பண்ணி விடுங்க. யாருமே பேசாம வராங்க. ஒரே மந்தமா இருக்கு” பின்னால் இருந்து குரல் கொடுத்தான் கதிர்வேல்.
ஓட்டுனரோடு வண்டியின் முன் இருக்கையில் பழனி அமர்ந்துகொள்ள, அதற்கு பின்னால் இருந்த இருக்கையில் செல்வாவும், சர்வேஷும் அமர்ந்து கொண்டனர்.
ஏதாவது தேவையென்றால், அவசரத்து கடைக்கு இறங்க வேண்டுமானால் அவர்கள்தான் பலியாடு என்று கதிர்வேல் அவர்களை முன்னாடி அமரும்படி உத்தரவிட்டிருந்தான்.
அவர்களுக்கு பின்னால் அமுதாவும், லாவண்யாவும் குழந்தையோடு அமர்ந்திருக்க, அவர்களுக்கு பின்னால் சரோஜாவும், கமலாவும் அமர்ந்திருந்தனர்.
“எங்களை யாரும் எந்த தொந்தரவும் செய்யக் கூடாது” என்று பத்மினியோடு பின்னாடி இருக்கும் இருக்கையில் போய் அமர்ந்து கொண்டான் கதிர்வேல்.
அவனை தொந்தரவு செய்யக் கூடாது என்று முன்னாடி இருப்பவர்களை ஏகத்துக்கும் தொந்தரவு செய்து கொண்டிருந்தான்.
இங்கன வண்டிய நிறுத்தி இதை வாங்கு. அதை வாங்கு என்று பயணம் ஆரம்பித்ததிலிருந்து செல்வாவையும், சர்வேஷையும் வேலை வாங்கிக் கொண்டிருந்தவன் இப்பொழுது பாட்டு கேட்க வேண்டும் என்றதும் கடுப்பானான் செல்வா.
“யோவ் கதிர் மச்சான். உன் தொல்லை தாங்கல. பேசாம நீ முன்னாடி வா”
“நாங்க தங்கள்ல பீச்சுக்கு போறோம்டா. அழாத. முதல்ல அறுகம்பே பீச்சுக்கு போலாம். போய் அங்க ரெண்டு நாள் தங்கலாம் என்று தானே பிளான் பண்ணோம். நீ என்ன புதுசா சொல்லுற?” என்று கதிர்வேல் செல்வாவை வாரினான்.
“உன்ன தூங்கத்தான் விடுவான். இன்னும் கொஞ்ச நேரத்துல ட்ரிங்க்ஸ் பாட்டில் வாங்க சொல்லுவான்” என்று சர்வேஷ் சிரித்தான்.
“உங்க அண்ணனுக்கு நீங்களே கடைக்கு போங்க” என்ற செல்வா பின்னாடி திரும்பி லாவண்யாவின் குழந்தையின் தலையணையை எடுத்து தூங்க ஆரம்பித்தான். செல்வா அனுமதி கேட்கவுமில்லை. லாவண்யா அவனை முறைத்துப் பார்த்தாலே ஒழிய அவனோடு சண்டை போடவோ, வாக்குவாதம் செய்யவோ முனையவில்லை.
கொஞ்சம் கண்ணயர்ந்திருப்பான் போலும் அமுதா செல்வாவை தட்டி எழுப்ப “என்னம்மா குழந்தையை தூங்க வைக்க பில்லோ வேணுமா” என்று செல்வா லாவண்யாவை பார்த்துக் கேட்டான்.
அமுதா தான் அவனை எழுப்பினாள் என்று செல்வாவுக்கு நன்றாகவே தெரியும். லாவண்யா முறைத்துக் கொண்டே இருக்கின்றாளே. எப்படியாவது அவளை பேச வைக்க வேண்டும் என்று வேண்டுமென்றே அவளிடம் கேட்டான்.
தன் முகத்தையே பார்த்திருந்தால் அவளும் தான் என்ன செய்வாள்? “கதிர் உங்கள கூப்புடுறான்” என்றாள் லாவண்யா.
“என்னவாம்” என்று கண்ணை கசக்கிக் கொண்டு செல்வா எட்டி கதிர்வேலை பார்த்தான்.
“ஓஹ்… தூங்கிட்டு இருந்தியா? சரி சரி முதல்ல இருந்து தூங்கு” என்று விட்டு அவன் பாட்டில் பத்மினியின் மடியில் படுத்துக்க கொண்டான்.
“அடப்பாவி இப்படி என்ன கோர்த்து விட்டானே” என்று லாவண்யா செல்வா முறைக்கிறானா என்று அவனை ஓரக்கண்ணால் பார்த்தவாறு கதிர்வேலன் சேட்டையை நினைத்து சிரிப்பை அடக்கிக் கொண்டிருந்தாள்.
சர்வேஷ் சத்தமாகவே சிரித்திருக்க, செல்வாவுக்கு கதிர்வேலை அடிக்க வேண்டும் என்ற அளவுக்கு கோபம் பொங்கி எழுந்தது. லாவண்யா சிரிப்பதை பார்த்து “என் நேரம்” என்று முன்னாடி திரும்பினான்.
“டேய் செல்வா தூங்காத. ரோட்டை கவனமா பாரு. எங்கயாச்சும் பெட்டிக்கடை தெரிஞ்சா நிறுத்து சோப் வாங்கணும்” பின்னாடி இருந்து மீண்டும் கத்தினான் கதிர்வேல்.
“யோவ் வாயில நல்லா வருது. வரும் போது சோப்பு வாங்கிட்டு வர மாட்டியா? என் சோப்ப தரேன் கொஞ்சம் மூடிட்டு வாய்யா?” கடுப்பில் உச்சத்தில் இருந்த செல்வா சர்வேஷ் முறைக்க, முறைக்க கதிர்வேலை வாய்யா, போயா என்று பேசலானான்.
“டேய் அறிவு கெட்டவனே. நீ இங்கதான் பொறந்தியா இல்ல நீ செவ்வாய் கிரகத்துல இருந்துதான் வந்தியா? போன மாசம் வித்த சோப் விலை இந்த மாசம் ரெண்டு மடங்கா கூடிப் போச்சு. பெட்டிக்கடைகள்ல இன்னும் பழைய விலைல சோப் இருக்கும். அதான் பார்க்க சொல்லுறேன். மூடிக்கிட்டு சொல்லுறத மட்டும் செய்” என்றான் கதிர்வேல்.
சிறிசேன முதலாளியின் கடைக்கு வருபவர்களும் பழைய சோப் இருக்கா என்று செல்வாவிடம் கேட்டிருக்கிறார்கள். இவனுக்குத்தான் வாடிக்கையாளர்கள் ஏன் அவ்வாறு கேட்கிறார்கள் என்று தெரியாதே. ஏதாவது உள்குத்தாக இருக்குமோ என்று “இல்லங்க எல்லாம் புது சோப்புதான்” என்று கூறியது ஞாபகத்தில் வந்தது.
“அட பாவிங்கள ஒரு சோப்புக்கு இம்புட்டு அக்கப்போறா? சோப் விலை அதிகம்னா ஒன்னு பண்ணலாம். சோப்ப வாங்கிட்டு போய் குளிச்சிட்டு திருப்பி கொண்டு வந்து கடைல கொடுத்து நிறுத்து எவ்வளவு கரைஞ்சி போச்சு அந்த கிராம் கணக்குக்கு காசு கொடுக்க சொல்லவா?” செல்வா நக்கலடித்தான்.
“உங்களுக்கு எங்க கஷ்டம் நக்கலா தெரியுதா? குடும்பம் குட்டி என்று இருந்தா எங்க கஷ்டம் புரியும்” லாவண்யா பின்னால் இருந்து கூற,
“நா வேணா உங்க கஷ்டத்துல கொஞ்சம் பங்கு போட்டுக்கவா” என்று கேட்டு அவள் முறைப்பை பெற்றுக் கொண்டான்.
“கிண்டல் பண்ணா பதிலுக்கு கிண்டல் பண்ணுங்க. இப்படி முறைக்காதீங்க” செல்வா சாதாரணமாக சொல்ல, லாவண்யாவின் முகம் சுணங்கியது.
செல்வா அன்று பேசியதை கேட்டு ஓடிச் சென்று ஓவென அழுதாள் லாவண்யா.
“என்ன ஆச்சு?” பதறியவாறே கேட்டாள் அமுதா.
தான் விக்னேஷோடு சேர்ந்து அக்காவை கிண்டல் செய்ததால் தான் விக்னேஷ் மனதில் தப்பான எண்ணங்கள் உருவாகக் காரணம் தான் தான் தப்பானவள் என்று புலம்ப ஆரம்பித்தாள்.
அமுதா அவளை சமாதப்படுத்தினாள்.
எப்படி இருந்த தான் இப்படி மாறி விட்டோம் என்று லாவண்யாவுக்கு நன்றாகவே புரிந்தது. தெரிந்தவர் தெரியாதவர் என்று யாரை பார்த்தாலும் எரிந்து விழுவாள். அதுவும் ஆண்கள் என்றால், அதிலும் வாலிபர்கள் என்றால் அவள் வார்த்தைகள் நரசமாகத்தான் ஒலிக்கும்.
“பொண்ணா இது பிசாசு” என்று திட்டி விட்டு போனவர்களும் உண்டு, தெறித்து ஓடியவர்களும் உண்டு. யாரும் செல்வாவை போல் அவளை திருப்பி பேசியதில்லை.
செல்வா அவளை பேசிய பின்தான், தான் பேசியதில் மற்றவர்களின் மனம் எவ்வளவு புண்பட்டிருக்கும் என்று உணர்ந்து கொண்டாள்.
அதற்காக அவள் யாரிடமும் சென்று மன்னிப்பு கேட்க நினைனைக்கவில்லை. தன் இயல்பை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று எண்ணினாள்.
கதிர்வேல் விக்னேஷுக்கு நண்பன். சின்ன வயதில் இருந்தே லாவண்யாவுக்கு அவனை நன்றாகவே தெரியும்.
நிர்மலாவின் இறப்புக்கு பின் ஒருநாள் லாவண்யாவே கதிர்வேலிடம் “விக்னேஷ் அத்தான் உன் பிரெண்டு தானே. அவர் மனசுல என்ன இருக்கு என்று சொல்லி இருப்பாரே” என்று ஆரம்பித்தாள்.
“இங்க பாரு லாவண்யா என்னதான் ப்ரெண்டா இருந்தாலும் குடும்பத்துல பிரச்சினை வர்றது போல முடிவுகள்ல நான் ஹெல்ப் பண்ண மாட்டேன். இல்லனா பொண்ண தூக்கி கட்டி வைக்கிறது எல்லாம் பெரிய விஷயமா? நீயே அவனை விரும்பி இருந்தாலும் உன் அக்காவோட வாழ்க்கையை பத்தி யோசிக்க சொல்லி நானே உன் கிட்ட சொல்லி இருப்பேன்” என்றான் கதிர்வேல்.
கதிர்வேலை அவள் பல தடவை கேலி, கிண்டல் செய்திருக்கிறாள். அவனும்தான். அந்த மட்டில் இருந்த அவர்களின் உறவில் கதிர்வேல் மீது அன்று லாவண்யாவுக்கு நம்பிக்கை வந்திருந்தது.
விக்னேஷ் வந்து பிரச்சினை செய்யும் பொழுது கதிர்வேல் வீட்டில் இருந்தால் விக்னேஷை உள்ளே விடாது பேசி அனுப்பி வைப்பான்.
தனக்கு ஒரு அண்ணன் இருக்கான் என்ற தைரியம் லாவண்யாவுக்குள் எழ ஆரம்பித்தது. அதனால்தான் கதிர்வேல் அழைத்த உடன் மறுக்காமல் சுற்றுலா செல்ல வந்து விட்டாள்.
இடமாற்றம், மனமாற்றத்தைக் கொடுக்கும். மற்றவர்களை போலாலது செல்வாவின் பேச்சு அவளை சீண்டிக் கொண்டே இருக்க, பழைய லாவன்யாவாகத்தான் அவனை முறைப்பாள். என்ன தானும் அவனை திருப்பி கிண்டல் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தான் அவளுக்குள் இன்னும் வரவில்லை. தன்னை நினைத்துதான் அவள் முகம் சுணங்கினாள்.
himi unu oba mata ahimi wela
kohomada wawa ganne maa
aadare… paa aadare…….
nidi nathi raya oba ganama sitha
mathakaya para kandulu sala
jeewithe…. me jeewithe……
sithuwe na pahasara sina
kuriru vee hara yai kiya…
“என்ன அவன் ஒப்பாரி வச்சிக்கிட்டு இருக்கான். டேய் அந்த பாட்ட மாத்துடா” கதிர்வேல் பின்னால் இருந்து கத்த
“ஆமா ட்ரிப்பு போகும் போது காதல் தோல்வி பாட்ட கேட்கணும்” என்று செல்வாவும் எட்டி பாட்டை மாற்றினான்.
Hey dola re dola re dola re dola
Hey, I swayed, I moved, I circled
Haai dola dil dola mann dola re dola
Oh, my heart swayed, my mind circled
Hey dola re dola re dola re dola
Hey, I swayed, I moved, I circled
Haai dola dil dola mann dola re dola
Oh, my heart swayed, my mind circled
Lag jaane do najariya, gir jaane do bijuriya
Let gazes get struck on me, let the lighting fall
Bijuriya, bijuriya, gir jaane do aaj bijuriya
Lighting, lighting, let the lightning fall today
Lag jaane do najariya, gir jaane do bijuriya
Let gazes get struck on me, let the lighting fall
Baandhke main ghunghroo
Strapping on my jingling anklets
Pahenke main paayal
Wearing my anklets
Oh, baandhke main ghunghroo
Strapping on my jingling anklets
Pahenke main paayal
Wearing my anklets
Ho jhoomke naachoongi ghoomke naachoongi
Oh, shaking I will dance, spinning I will dance
Dekho ji dekho dekho kaise yeh jhankaar hai
Look now, look what sort of jingling is this
Inki aankhon mein dekho piyaji ka pyaar hai
Look in her eyes, there is the lover for her beloved
Inki aawaaz mein haai kaisi thanadaar hai
Look how her soft voice is also filled with command
Piya ki yaadon mein yeh jiya beqaraar hai
In the memories of her beloved, this heart is restless
அடுத்த பாட்டு ஓடவும் கதிர்வேல் “என்ன பாட்டு இது? ஹிந்தி தெரியாதுடா..? இதுங்க வேற ஹைபிச்சுல கத்திக்கிக்கிட்டு. டேய் செல்வா பாட்ட மாத்து” என்றான்
“இவர் பெரிய சூப்பர் சிங்கர் இல்ல. பாட்டு பிடிக்கலையாம்” கதிர்வேலை திட்டியவாறே பாட்டை மாற்றினான்.
போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்
உன்னோடு வாழ்ந்த காலங்கள் யாவும்
கனவாய் என்னை மூடுதடி
யரென்று நீயும் எனை பார்க்கும் போது
உயிரே உயிர் போகுதடி
கல்லறையில் கூட
ஜன்னல் ஒன்று வைத்து
உந்தன் முகம் பார்ப்பேனடி
“என்னடா சோக கீதமா பாடுது. டேய் செல்வா பாட்ட மாத்து” கதிர்வேல் மீண்டும் கத்த, கடுப்பான செல்வாவோ சீடியை வெளியே எடுத்து வண்டிக்கு வெளியே தூக்கி எறிந்தான்.
“டேய் என்னடா பண்ணுற?” சர்வேஷ் சிரிப்பை அடக்க முடியாமல் கேட்க,
“பாட்டும் வேணாம் ஒரு மண்ணும் வேணாம். பேசாம படுங்க. தங்கச்சி பத்மினி உன் புருஷன் கொஞ்ச நேரம் பேசாம பார்த்துக்க” செல்வா பின்னாடி திரும்பாமல் கூற, பத்மினி கதிர்வேலை திட்டுவது மெதுவான குரலில் கேட்டது.
இந்த ஒருவாரமாக கதிர்வேலை கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றான் சர்வேஷ். பத்மினியோடு ரொம்பவே அந்நியோன்யமாக தான் நடந்து கொள்கின்றான்.
மணிக்கு பயிற்சி கொடுத்தால் எப்படியோ அப்படி பத்மினியிடம் அடங்கியிருக்கின்றான்.
பாசத்தால் தான் அடங்கியிருக்கின்றானா? அல்லது அவளை ஏமாற்றுகின்றானா? என்ற குழப்பம் சர்வேஷுக்குள் இருந்தது.
அவன் பத்மினியின் மீது வைத்திருக்கும் அன்பில் எந்த பொய்யுமில்லை. காலையில் விழித்ததிலிருந்து முதல் தூங்கும் வரை அவன் வாயில் “பத்து” என்ற நாமம் மட்டும் தான்.
அவள் எது சொன்னாலும் மறுத்து பேச மாட்டான். அவள் சொல்வது எல்லாமே சரி என்பது போல் தான் பேசுவான் நடந்துகொள்வான். அது பத்மினிக்கு கதிர்வேல் தன் மேல் வைத்திருக்கும் காதலாக தெரியும்.
ஆனால் சர்வேஷின் பார்வையில் கதிர்வேல் பத்மினியை தன் பக்கம் சாய்த்துக்கொள்ள, அவளை ஏமாற்றுவது போல் தான் தோன்றியது.
உண்மையான அன்பு இருந்தால் ஒரு நாளும் கதிர்வேல் பத்மினியை ஏமாற்ற நினைக்க மாட்டான். அவள் மீது கோபம் வந்தால் கோபப்படுவான். தப்புப் பண்னினால் திட்டுவான். உணர்ச்சிகளை மறைத்து நடிக்க மாட்டான்.
சொந்த மனைவியிடமே நடிக்க வேண்டிய அவசியமென்ன?
வாழ்க்கை முழுக்க நடித்துக் கொண்டிருக்க முடியுமா?
உண்மையிலயே ரமேஷுக்கு, அண்ணிக்கும் நடக்க இருந்த திருமணத்தை நிறுத்தியது அண்ணனா என்று தெரியவில்லை. அண்ணன் அதை பண்ணியிருந்து அண்ணி அதை கண்டு பிடித்து விட்டாள் என்ன ஆகும்?
உண்மையை கூறினால் கோபப்பட்டாலும் அண்ணி அண்ணனை காதலிப்பதால் மன்னித்து அவரை ஏற்றுக்கொள்வாள். அணியே உண்மையை கண்டு பிடித்தால் அவர்களின் வாழ்க்கை பல சிக்கல்களை சந்திக்க நேரிடும்.
உண்மையையே எவ்வாறு கண்டு பிடிப்பது? என்று சிலநேரம் யோசிப்பவன். இல்லை வேண்டாம் இப்படியே விட்டு விடலாமா? என்று என்று சில நேரம் யோசிப்பான் சர்வேஷ்.
வண்டி முன்னோக்கி பயணிக்க சர்வேஷின் மனதுக்குள் கதிர்வேலன் எண்ணங்களே ஓடிக் கொண்டிருந்தது.
ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தி வீட்டில் தயார் செய்து எடுத்து வந்த மதிய உணவை முடித்துக் கொண்டு மீண்டும் பயணத்தை தொடர்ந்தவர்கள் முதலில் வந்தது அறுகம்பே கடற்கரைக்கு.
இரண்டு நாட்கள் அறுகம்பேயில் தங்கி இருந்து அடுத்த நாள் காலை கிழக்கு நோக்கி பயணிப்பது தான் இவர்களின் திட்டம். அங்குதான் நிலாவெளி கடற்கரை இருக்கிறது.
இவர்களின் பயணமே வினோதமானது.
தென்மேற்கில்தான் பெந்தொட்டை கடற்கரை இருக்கிறது. தேர்மேற்கில் பயணித்து அங்கிருந்து ஒவ்வொரு கடலிலும் குளித்து இறுதியாக நிலாவெளியை அடைந்திருக்கலாம்.
அநேகமாக கடற்கரையோரங்களிலையே வீடுகள் வாடகைக்கு கிடைப்பதில்லை. ஆதலாத்தான் முதலில் அறுகம்பே கடற்கரைக்கு செல்லலாம். அங்கு இரண்டு நாட்கள் இருந்து விட்டு கிழக்கு நோக்கி பயணித்து மீண்டும் தெற்கு நோக்கி வரலாம்” என்றிருந்தான் கதிர்வேல்.
“பெட்ரோல் இல்லாத நேரம் இந்த சுத்து சுத்தணுமா? உங்கண்ணன் கேரக்டரையே புரிஞ்சிக்க முடியல” என்றான் செல்வா.
“என்னாலையும் தான்” சர்வேஷ் இன்னொரு அர்த்தத்தில் கூறினான்.
சுற்றுலா பயணிகளை கவர்ந்த கடற்கரைகளில் அறுகம்பே கடற்கரையும் பிரதான இடத்தை வகிக்கிறது.
மாலை வந்தடைந்தவர்கள் முதலில் கடற்கரையோரமாக தங்கிக்கொள்ள ஒரு வீடு பார்த்தனர்.
மூன்று அறைகளோடு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்திருக்க, பத்மினியும், கதிர்வேலும் ஒரு அறையில் தங்கிக்கிக்கொள்ள, ஆண்கள் ஒரு அறையிலும், பெண்கள் ஒரு அறையில் என்று தங்கிக் கொண்டனர்.
வந்தது சுற்றுலா அதனால் எந்த பிரச்சினைகளையும் பற்றி சிந்திக்காமல் ஓய்வெடுக்கும்படி கதிர்வேலன் உத்தரவு.
அன்றிரவு இரவு உணவை ஹோட்டலில் ஏற்பாடு செய்தாயிற்று. அங்கு தங்கியிருக்கும் இரண்டு நாட்களுக்கும் அந்த ஊரை சேந்த சமயல்காரரை ஏற்பாடும் செய்தாயிற்று. காலையிலிருந்து வேலைக்கு வந்து விடுவார்.
இவர்கள் சமைப்பது சாப்பிட்டு, கடலில் குளித்து அனுபவிக்க வேண்டியது மட்டும்தான்.
வந்த உடனே சர்வேஷும் செல்வாவும் கடலில் குதித்திருந்தனர்.
சினிமாவில் நுழைந்த பின் சர்வேஷால் இவ்வாறு சுதந்திரமாக வெளியே சென்று வாழ்க்கையை அனுபவிக்க முடியவில்லை.
எல்லோருக்கும் எல்லாம் கிடைத்து விடாது. பணம் இருந்தாலும் சிலதை வாங்க முடியாது. சந்தோஷமும், சுதந்திரமும் அது போல் ஒன்றுதான். வாழ்க்கையில் சிலதை இழந்தால் தான் சிலதை பெற முடியும். சர்வேஷ் சுதந்திரத்தை இழந்துதான் புகழை அடைந்திருக்கின்றான்.
அனுபவிக்க கிடைத்த சந்தர்ப்பத்தை விட்டு விடுவானா? எல்லாவற்றையும் மறந்து கடலே கதி என்று கிடந்தான்.
பத்மினி கடலுக்குள் இறங்க அச்சப்பட்டுக் கொண்டிருக்க, கதிர்வேல் அவளை பத்திரமாக அலைகளில் விளையாட விட்டு கடலில் இறக்கியிருந்தான்.
அவள் முகத்தில் இருந்த சந்தோசம் விலைமதிப்பில்லாதது. கதிர்வேல் அவளுக்கு விளையாட்டிக் காட்டியவாறு அவளை விட்டு விலகாமல் அவளை சுற்றியே குளித்துக் கொண்டிருந்தான்.
சர்வேஷும் செல்வாவும் இவர்களை தொல்லை செய்யாமல் வேறு பக்கமாக குளித்துக் கொண்டிருந்தனர்.
“நாளைக்கு காலைல நாம நிலாவெளி பீச்சுக்கு போறதா சொன்னாங்கள்ல” என்று கேட்டான் செல்வா.
“ஆமா. கல்குடா, மிரிஸ்ஸ, உனவடுன, தங்கள்ல பீச்,மஹதுவரம், பெந்தொட, ஹிக்கடுவ, இன்னும் எங்க இருக்கோ எல்லா இடத்துக்கும் போறோம், பத்து நாளானாலும் பரவால்ல. ஒரு நாள் ஒரு பீச் போதும் தானே” என்றான் சர்வேஷ்.
“ம்ம்… நாம எங்க போனாலும் குளிக்கிறோம். இந்த லாவண்யா புள்ளகி தண்ணில கண்டம் போல கடல்ல இறங்கவே இல்ல” என்றான் செல்வா.
லாவண்யா குழந்தையோடு வந்து கடற்கரையில் மணல் வீடு கட்டி விளையாடி விட்டு செல்வாளே ஒழிய கடலில் குளிக்க நினைக்கவே இல்லை. அதை சொல்லத்தான் நாம் இங்கிருந்து கிளம்பப் போகிறோம் என்று ஆரம்பித்திருந்தான்.
ஆரம்பத்தில் செல்வா என்ன சொல்ல விழைகிறான் என்று புரியாமல் பார்த்த சர்வேஷ் சத்தமாக சிரித்தான்.
“நீ கூப்பிட வேண்டியது தானே. வர மாட்டேன் என்றா தூக்கிட்டு வந்து கடல்ல தொப்பென்று போட்டிருக்கணும்” என்று சர்வேஷ் கிண்டல் செய்ய
“அந்த அளவுக்கெல்லாம் நாம இன்னும் நெருக்கமாகல” வளமை போல் தன் பதிலால் அசரவைத்தான் செல்வா.
அன்று பிடித்த மீனை உடனே வாங்கி வந்து சமைத்து சாப்பிட்டதில் ஆகா, ஓஹோ என்று புகழ்ந்து கொண்டிருந்தான் பழனி.
“அப்போ நைட் பிஷ் பாபிகிவ் போட்டுட்டு வேண்டியது தான்” என்று கடற்கரை ஓரத்தில் மீனை சுட்டு சாப்பிட ஏற்பாடு செய்தான் கதிர்வேல்.
அனைவரும் மீன் சாப்பிட்டுக் கொண்டிருக்க, கதிர்வேல் பத்மினியின் காதுக்குள் ஏதோ கூற அவள் வெக்கப்பட்டு சிரித்தாள்.
“வா நாம மெதுவா இங்கிருந்து எஸ் ஆகலாம்” கதிர்வேல் பத்மினியை அழைத்துக் கொண்டு அங்கிருந்து அறைக்கு நகர்ந்தான்.
அதை கவனித்த செல்வா “நீங்க ரெண்டு பேர் மட்டும் எங்க கிளம்புறீங்க?” என்று கேட்டான்.
குடும்பத்தார் அனைவரும் வந்த சுற்றுலா என்றாலும் கதிர்வேலுக்கும், பத்மினிக்கும் தேனிலவு தானே. அவர்களுக்கு தனிமை அவசியம் அதனால் செல்கிறார்கள் என்று புரிந்துகொள்ளாமல் குடும்பத்தார் எல்லோரும் இங்கிருக்க, இவர்கள் மட்டும் எங்கே செல்கிறார்கள் என்று புரியாமல் கேட்டுவிட்டான் செல்வா.
“ஆ… நாங்க சுவாசபாசம் பழக போறோம். உனக்கு கல்யாணமான நீ உன் பொண்டாட்டி கூட ட்ரை பண்ணு. கேக்குறான் கேன கரடி” அங்கே இருப்பார்களே கண்டு கொள்ளாது செல்வாவை திட்டி விட்டு பத்மினி முறைக்க முறைக்க அவள் கையை பிடித்து அழைத்து சென்றான் கதிர்வேல்.
“இப்போ நான் என்ன கேட்டுட்டேன்?” பொங்கிய செல்வாவோ “ஆமா சுவாசபாசம் என்றா என்ன? தம்பிசார்” என்று சர்வேஷிடம் கேட்டான் செல்வா.
“இங்கிதம் கொஞ்சம் கூட இல்ல. புதுசா கல்யாணமானவங்க ஏதோ பேசிக்கிறாங்க அதப்போய் ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு. எப்பவும் கேலி கிண்டல் பண்ணிகிட்டே இருக்குறீங்களே. எதையும் சீரியஸா எடுத்துக்க மாட்டீங்களா?” பதில் லாவண்யாவிடமிருந்து வந்தது.
“உன் விஷயத்துலயாவது நான் சீரியஸ்ஸா இருக்கலாமென்று யோசிக்கிறேன். முடிவ நீ தான் சொல்லணும்” என்று அவளை பார்த்து கண்சிமிட்டினான்.
“நான் என்ன கேட்டா நீங்க என்ன பேசுறீங்க? இப்பவும் காமடி பண்ணுறீங்க” செல்வாவை முறைத்த லாவண்யா அங்கிருந்து எழுந்து சென்றாள்.
“ஏய் புள்ள நான் சீரியஸாதான் பேசுறேன்” செல்வா கத்த,
“எத பேசினாலும் ஒரே மாடுலேஷன்ல பேசுறது, ஒரே மாதிரி மூஞ்ச வச்சிக்கிட்டு பேசுறது. சரியான காமடி பீஸ் செல்வா நீ” சத்தமாக சிரித்தான் சர்வேஷ்.