“டேய் எரும என்ன நீயும் உங்க அப்பனும் ரொம்பத்தான் பண்ணுறீங்க போன் பண்ணா எடுக்க மாட்டாராமா அவரு, என்னவாம் ஹ்ம்ம்…”போனில் வளவனைக் கடிக்க.எதிர்புறம் மௌனம் மட்டுமே பதிலாக.
“இப்போ பேசப் போறியா இல்லையா “
அதற்கும் வளவன் மௌனம் சாதிக்கச் சோர்ந்து போனாள் பேரிளம் பெண்.இயலாமையில் கண்ணீர் வந்தது அது விசும்பலாக மாறிப் போன் அணைக்கப் பட்டது அடுத்தப் பத்தாவது நிமிடத்தில் வந்து சேர்ந்தான் வளவன்.
அவளது கண்ணீர் துடிக்கச் செய்தது. உள்ளே வந்தவன் எதுவும் பேசாமல் நேராக மூர்த்தியிடம் சென்று மடியில் படுத்து கொண்டான்.அவன் கண்ணிலும் நீர் நிரம்பி வழிந்தது.
வித்தியாசமான மனிதன் இவன் எதார்த்தவாதி.அவனுக்கும் கோட்பாடுகள் கட்டுப்பாடுகள் உண்டு தான்.அதுக்கும் ஓர் வரையறை நியாயம் வைத்திருந்தான். எழுத்தாளரின் மகனுக்கு இத்தனை தெளிவு ஆகாது.
மனித உணர்வுக்கு மதிப்பளித்து வாழும் உன்னத மனிதனாக வளவன் அதனால் தான் என்னமோ தந்தையை அக்கு வேறு ஆணிவேராகப் படித்திருந்தான்.அவரது உணர்வு உயிர்ப்புக் கொள்ளுமிடம் தனது காஞ்சனை தாயிடம் மட்டுமே என்ற உண்மை அறிந்தவன் அவன் ஒருவனே.
அதனால் தான் காஞ்சனையின் முடிவை ஏற்க முடியவில்லை.சிறு பிள்ளை போல் சுருண்டு படுத்திருக்கும் பேரனின் தலையை வாஞ்சையுடன் வருடியவாரே, தங்களைப் பார்த்துக் கொண்டு நிற்கும் கஞ்சனையை முறைத்தார் எல்லாம் உன்னால் தான் என்பது போல்.
நின்ற கண்ணீர் மீண்டும் துளிர்க்க அறைக்குள் சென்று கதவை அடைத்து கொண்டாள்.கொண்டவன் மீது இன்னும் கோபம் வந்தது “பிடிவாதம்! பிடிவாதம்!………..”
மீண்டும் வாமனனுக்கு அழைக்க இந்த முறை அழைப்பு எடுக்கப் பட்டது ஆனால் பேச்சுக்கள் இல்லை தளர்ந்து போனவள் “எழுத்தாளரே முடியல என்னால வாங்க” மொட்டையாகச் சொல்ல அந்தப் பக்கம் பதற்றம் “என்ன உடம்புக்கு”.
“ப்ச்… நல்ல தான் இருக்கேன், ஆனா முடியல நீங்க வாங்க உங்கிட்ட பேசணும்”
“இனி பேச என்ன இருக்கு அதான் எல்லாம் பேசிட்டியே”
“என்ன பேசுனேன் கோபமா தள்ளி விட்டு போயிட்டீங்க. ஒரு வார்த்தை கேட்டீங்களா ஏன் நான் அப்புடி சொன்னேன்னு?”
“என்ன காரணம் வேணாலும் இருக்கட்டும் எப்புடீ, நீ அந்த வார்த்தை சொல்லலாம்”.
“சரி தப்புதான் வாங்க எழுத்தாளரே!”
“முடியாதுடி”
“இங்க பாருங்க ரொம்பப் பண்ணுறீங்க எனக்குக் கோபம் வரும் அப்புறம் நானும் ரொம்பப் பண்ணுவேன் பாத்துக்கோங்க”
“என்ன வேணாலும் பண்ணுடி”
“வாமனன் என்ன ஒன்னும் பண்ண மாட்டேங்கிற தைரியமா ஸ்ட்ரைக் பண்ணுவேன்”
“ஹலோ! நான் எப்போ அப்புடி சொன்னேன். என்ன விளையாடுறிங்களா என்னால சாப்பிடாம,தூங்காம முடியாது அதெல்லாம் நான் ஏன் பண்ணனும் இது வேற மாதிரி எழுத்தாளரே”.
காஞ்சனையை நன்கு கணித்தவராக அவள் சொன்ன தினுசில் எதோ வில்லங்கம் என்று எண்ணியவர் “என்னடீ பண்ணி வச்ச”
“வெரி குட் கண்டு புடுச்சுட்டீங்களே நாளைக்கி ஹாட் நியூஸ் பேப்பர்ல என்ன தெரியுமா? பிரபல எழுத்தாளர் மற்றும் தொழில் அதிபரான வாமனனின் காம லீலைகள் காணக் கிடைக்காத காட்சி.
ஐம்பது வயதிலும் வயகரா உதவி நாடாமலே களியாட்டம் போடும் மனிதரின் சிறப்புப் பக்கங்கள்” இப்போது விற்பனையில் என்ற ரீதியில் அவள் சொல்ல திகைத்துப் போனார்.
“ஏய் விளையாட்டு தனமா எதையாவது பண்ணி வைக்காதடி”
“அப்போ உடனே வாங்க இல்லாட்டி போட்டோஸ் நெட்டுல போட்டுருவேன்”
“என்னடி விளையாடுறியா வந்தேன்னு வை”
“ப்ச் எழுத்தாளரே பேசிக்கிட்டே இருந்தா வேலைக்கு ஆகாது வரீங்களா போடவா”
“என்னடி இது” நொந்து போனார் மனிதர் ‘சரியான வாலு இத்தனை வருஷம் இருந்தும் இவள பத்தி தெரியாம போச்சே ஐயோ! என்னத்த அப்புடி போட்டோ எடுத்து வச்சான்னு தெரியலையேப்’ புலம்பியவரே மனிதன் ஓடினார்
அவர் பதட்டமாகக் கிளம்புவதைப் பார்த்த ரமேஷ் குழம்பி போனான். ‘ஏன் இப்புடி ஓடுறாரு என்னனு கேட்போமா’ ஒரு நொடி தான் யோசித்தான் பின்பு தெளிந்து ‘வேணாம்டா சாமி இவுங்க குடும்பச் சங்காத்தமே வேணாம்’ என்ற நல்ல முடிவுடன் வேலையைத் தொடர்ந்தான்.
*******************************************
அறக்க பறக்க வந்தவர் பார்த்தது சோபாவில் சோர்ந்து படித்திருக்கும் மகனை தான் மாமனார் அவரைச் சிறு தலை அசைப்புடன் வரவேற்று அருகில் அமர செய்து மௌனமாக இருந்தார்.
“கண்ணா” தந்தையின் அழைப்புக்கு எழுந்தவன் அவரிடம் நெருங்கி அமர தோளோடு அணைத்துக் கொண்டார் “என்ன கண்ணா இது சின்னப் பையனா நீ ” மகனது சோர்வு கண்டு செல்லமாகக் கடிந்து கொண்டார்.
காஞ்சனை அவர்களைப் பார்த்தவரே மதிய உணவினை எடுத்து வைத்துக் கொண்டு இருந்தாள் “சாப்பிட வாங்க” பொதுவாக அழைப்பு விடுத்து நிற்க.
யாரும் அவளைக் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை, தந்தையும் அவர்களுடன் சேர்ந்து அலும்பு பண்ண கொதித்துப் போனாள் காஞ்சனை.
“என்ன இப்போ நான் குழந்தை பெத்துக்குறேன் போதுமா வந்து சாப்பிடுங்க அப்புறம் பேசலாம்” அதானே வேணும் என்பது போல் மொழிந்துவிட்டு போக.
அதுவரை இருந்த கலக்கம் மறைந்து போக முதல் ஆளாகச் சென்று அமர்ந்தான் வளவன். அவனைத் தொடர்ந்து மூர்த்தியும் வாமனனும் சந்தோசத்தை மனதுக்குள் மட்டுமே வைத்து வெளியில் விறைப்பாக மூன்று ஆண்களும். அவர்கள் பண்ணும் போராட்டத்தைப் பார்த்துச் சிரிப்பு தான் வந்தது காஞ்சனைக்கு.
எந்தவிதமான பேச்சுகளும் இல்லாமல் சாப்பாடு முடிந்து பிடிவாதமாக மூர்த்திக்கு மருந்து கொடுக்கப் பட்டு அவர் அறைக்கு அனுப்பி .வளவனையும் அவருடன் ஓய்வுக்கு அனுப்பியவள் தனது எழுத்தாளரை தள்ளி கொண்டு தனது அறைக்குச் சென்றாள்.
முதல் முதலாக அவளது அறைக்கு வருகிறார் மனிதர் இலகு உடையை எடுத்து கொடுத்து மாத்த சொல்ல அது பறந்து போய் ஓர் முலையில் விழுந்தது. தலையை இடமும் வலமுமாக ஆட்டி கொண்டாள் பேரிளம் பெண்.
“எழுத்தாளரே! கொஞ்சம் நான் சொல்லுறத கேளுங்க அப்புறம் நீங்க என்ன வேணாலும் பண்ணலாம் சரியா” அதற்கும் அவர் மௌனம் சாதிக்க.
தனது மொபைலை எடுத்து அவர் முகத்திற்கு நேராக நீட்டினாள் என்ன என்று முதலில் புரியாமல் பார்த்தவர் மீண்டும் அதனை உத்து பார்க்க வித விதமான புகைப்படங்கள் படும் கவர்ச்சியாக எழுத்தாளர் மெல்லிய துணி மட்டுமே ஆடையாகக் கொண்டு அதிர்ச்சியில் “ஏய் என்னடி இது”
“தெரியல நீங்க தான் எழுத்தாளரே சும்மா சொல்ல கூடாது செம……யா இருக்கீங்க”
“அடிங்க கொழுப்பே எப்போடி எடுத்த”
“அதுவா முதல் பகலுல எடுத்தது” அவர் புரியாமல் முழிக்க.
“அதான் அந்த அசோக் புறம் வீட்டுல கோபமா இழுத்துட்டு போயி……… அப்போ போர் அடுச்சுது அதான் எடுத்தேன் எப்பூடி” என்றவளை கொலைவெறியோடு பார்த்தவர்
“அறிவு இருக்காடி உனக்குப் போன கொடு”
“இதெல்லாம் காவியம் பேச உதவும் போங்க வரலாறு முக்கியம் எழுத்தாளரே” கண்கள் சிமிட்டி சொல்ல.
“நல்லா வந்துரும் வாயில கொடுடி”
“முடியாது எழுத்தாளரே”
“காஞ்சனை” கோபம் மிகுதியில் எழுத்தாளர் கத்த அவரைப் போலவே அவளும்
“வாமனன்”
“ஒரு டீல் நான் சொல்லுறத காது கொடுத்து கேளுங்க” என்றவள் அவரிடம் கட்டிலில் அமர்ந்தாள்.
விளையாட்டுத் தனத்தைக் கையை விட்டவள் மெதுவாகத் தனது தரப்பு நியாயத்தைச் சொன்னாள் “நமக்குக் கல்யாண வயசுல பையன் இருக்கான் இப்போ நமக்குக் குழந்தை தேவையா என்ன.
நாள பின்ன நம்பச் சமூகத்துல யாரு பொண்ணு கொடுப்பா அவனுக்கு யோசுச்சுப் பாருங்க. என்னதான் பணம் இருந்தாலும் சில பேச்சுக்களை இந்தச் சமுதாயத்துல நிறுத்த முடியாது” அவர் பார்க்கவே.
“நீங்க என்ன நெனைக்கிறீங்கனு தெரியும் உங்களுக்கு யாரை பத்தியும் கவலையில்ல.நான் அப்படி இருக்க முடியாது எழுத்தாளரே நம்பச் சொந்தமே பேச வாய்ப்புகள் இருக்கு யோசிங்க.அப்படியும் நமக்குக் குழந்தை வேணுனா நான் அதுக்குச் சில கண்டிஷன்ஸ் போடுவேன் நீங்க ஒத்துக்கனும்”
“சொல்லு பார்ப்போம்”
“நான் உங்க கூடப் பொது இடத்துக்கு வர மாட்டேன் வெளில உங்கள அடையாளம் கட்டிக்குவேனே தவிர எந்தச் சுப காரியத்துக்கும் வர மாட்டேன் நான் சொல்ல வரது புரியும்னு நினைக்குறேன்” என்ற பேரிளம் பெண் சொல்லவே அவளை ஆழ்ந்து பார்த்தவர் “எனக்கு என் குழந்தை தான் முக்கியம்” சொல்லி விட்டு கண் மூடி கட்டிலில் படுத்து விட்டார்.
அவருக்குக் காஞ்சனையின் மனம் புரிந்தாலும். எந்த விதமான சமாதானமும் சொல்லவில்லை.குழந்தை மட்டுமே இப்போது முதன்மை என்ற அளவில் இருந்தார் எழுத்தாளர் பக்கா சுயநலவாதியாக.
*************************************
அதன் பின் வளவனும் வாமனனும் காஞ்சனையை மிகவும் கவனமாகப் பார்த்துக் கொண்டனர். தூக்கத்தில் தொடங்கி உணவு பழக்கம் வரை அத்தனையிலும் மாற்றம் கொண்டு வந்தனர். அவர்களது அக்கப்போரை தாங்க முடியாமல்.
“உலகத்துல யாருமே புள்ள பெத்துக்கலையா எழுத்தாளரே அப்பனும் மகனும் என்ன இந்தப் பாடு படுத்துறீங்க சரியில்ல சொல்லிட்டேன் அதுவும் அந்தச் சின்ன நாயி ஊறுகா இல்லாம சாப்பிடச் சொல்லுறான். எந்த ஊர் நியாயம் இதெல்லாம் நான் எங்க அப்பா வீட்டுக்குப் போறேன்” பொங்கிவிட்டாள்.
அவளது கோபத்தில் சிரிப்பு வந்தாலும் அதனை அடக்கி “என் பொண்ணுக்கு எதாவது ஆயுடுச்சுனா என்ன பண்றது அதான் சொல்லி இருப்பான்.நீ டயட் கடைபிடி அப்போதான் என் பொண்ணு ஆரோக்கியமா இருப்பா”
புசு புசுவென மூச்சு விட்டவள் “போடா” என்று சென்று விட்டாள்
போகும் அவளை என்ன செய்வதென்று பார்த்துக் கொண்டு இருந்தார் வாமனன் தினமும் அவர் முழித்தவுடன் செய்யும் முதல் வேலை தனது குழந்தையின் வருகைக்கு இன்னும் எத்தனை நாட்கள் என்று பார்ப்பது தான். வளவனும் அதே போலத் தான் நாளுக்கு நாள் காஞ்சனையைச் சமாளிக்க முடியவில்லை இருவராலும்.
அவர்கள் மேட்டுக்கு இழுத்தால் புண்ணியவதி பள்ளத்துக்கு அல்லவா இழுக்கிறாள் சற்றுக் கண்டிப்பு காட்டி கடிந்து பேசினால் அன்று முழுவதும் உண்ணா விரதம்.
சேட்டையான சேட்டை வாமனன் நொந்து போகும் அளவுக்கு அவள் எல்லை மீறினால் பொறுக்க முடியாமல் வாமனனும் சற்று எல்லை மீறி விடுவார் வேறு வழி.
************************************
இன்று முக்கியமான கூட்டம் என்றதால் வாமனனும் வளவனும் பணி பெண்களிடம் சொல்லிச் சென்று இருக்க அன்று பார்த்து காஞ்சனைக்கு ரத்தம் அழுத்தம் அதிகமாகி உணவு அனைத்தும் வெளியே வந்து விட,மயங்கி சரிந்தாள் பேரிளம் பெண்.
கூட்டத்தில் இருப்பதால் தந்தை மகன் போனை எடுக்கவில்லை சிறுதும் தாமதிக்காமல் மூர்த்திக்கு அழைத்து வேலையாள் விடயத்தைச் சொல்ல அடித்துப் பிடித்து ஓடி வந்தார் மனிதர்.ஒரு பெண்ணைப் பெற்று அல்லோல்படும் அப்பாசாமியாகப் பாவம்.
வந்தவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல சுமார் அரை மணி நேரம் உள்ளே சென்ற மருத்துவரை காணவில்லை என்ன ஏதென்று தெரியாமல் தவித்துப் போனார்.அவரை சற்றுத் தவிக்க விட்டு மேலும் முப்பது நிமிடங்கள் கடந்தே வந்தார் மருத்துவர்.
வந்தவர் அவரை முறைத்துக் கொண்டே “என்ன வேலை இது சரியா கவனிக்க மாட்டிங்களா அவுங்களுக்குத் தான் அறிவில்ல நீங்க பெரியவர் தானே”
மேலும் சில பல திட்டுகளைத் திட்டியவர் எதனால் என்ற காரணத்தை மட்டும் சொல்லாமல் சென்றுவிட்டார்.அவர் போன பின்பு அறைக்கு விரைந்த மூர்த்தி “என்னம்மா பண்ணி வச்ச அந்தம்மா என்ன அப்புடி திட்டிட்டு போகுது”
“அதுப்பா..” என்றவள் ட்ரிப்ஸ் போடாத கையை ஆட்டி ஆட்டி காரணத்தைச் சொல்ல மூர்த்திக்கு எங்கயாவது போய் முட்டிக் கொள்ளலாம் போல் வந்தது.
“உன்னைய புள்ளை யா பெத்ததுக்கு எனக்கு இந்த வசவெல்லாம் பத்தாது.எனக்கு வந்து வாச்சு இருக்கு பாரு” மேலும் அவளைத் திட்டி திட்டி மயங்கும் நிலைக்குச் சென்றார் மூர்த்தி.