காரில் தன் அலுவலகத்திற்கு திரும்பிக் கொண்டிருந்த ஷ்யாமின் முகத்தில் அப்படி ஒரு மந்தகாசமான புன்னகை. ‘என்ன பண்ணிட்டு வந்திருக்கடா?’ என்று அவன் மனசாட்சி அவனை கேள்வி கேட்க, “என்ன இப்போ என் கன்யா தானே” என்று சமாதானம் கூறிக் கொண்டான் அவன்
கன்யா அவனை அடிக்காமல் விட்டது ஆச்சர்யம்தான் அவனுக்கு.அதுவும் காதல் சொல்லி அடுத்த ஒருமணி நேரத்தில் அவள் நெற்றியில் இதழ் பதித்துவிட்டு இப்போது அதை எண்ணி பார்க்க முகம் விகசித்தது அவனுக்கு.
கன்யா எத்தனை மறுத்தபோதும் உன்னை பிடிக்கவில்லை என்ற வார்த்தை அவள் வாய் வழியே வரவே இல்லை என்பதும் அவனுக்கு நம்பிக்கையை கொடுத்திருந்தது. அவள் திருமணத்தை தான் மறுக்கிறாளே ஒழிய தன்னை அவள் மறுக்கவில்லை என்று அவன் மனம் குறித்துக் கொண்டது.
எடுத்த எடுப்பில் அதுவும் அலைபேசியில் அவளிடம் அப்படி பேசியது தவறு என்று தோன்றவும் தான் அவன் அத்தனை வேகமாக அவளை தேடி சென்றது.எங்கே தவறாக நினைத்து விடுவாளோ என்று அவன் பயந்திருக்க, அவள் முகத்தை நேரில் பார்த்தவனுக்கு அந்த பயம் ஓடியே போனது.
நிச்சயம் அவளால் தன்னை தவறாக நினைக்க முடியாது என்று அவன் உள்மனம் கூற அத்தனை நிம்மதியாக இருந்தது. அதுவும் அவள் அத்தனை தெளிவாக அவள் வாதங்களை எடுத்து வைக்க தான் என்று இல்லாமல் யார் கேட்டிருந்தாலும் இந்த பதிலை தான் கூறி இருப்பாள் என்றும் தோன்ற அதன் பொருட்டே தனியாக சிரித்துக் கொண்டிருந்தான் அவன்.
ஆனாலும் அவள் சொன்ன காரணங்கள் ஒருபுறம் வலித்துக் கொண்டு தான் இருந்தது. இத்தனை தேவையான முடிவுக்கு வந்திருக்கிறாள் என்றால் எந்த அளவுக்கு அவள் பாதிக்கப்பட்டிருப்பாள் என்று தோன்ற அந்த நிமிடம் ஒரு ஆண்மகனாக ஆதி நாராயணனின் மீது எல்லையில்லாத கோபம் வந்தது .
அவர் ஒருவர் மட்டும் சரியாக நடந்து கொண்டிருந்தால் இன்று இவள் இந்த வேதனை படவேண்டியதில்லையே என்று நினைத்தவனுக்கு அவள் வழிகளை அந்த நிமிடமே போக்கிட வேண்டும் என்று வேட்கை தோன்றியதென்னவோ நிஜம். ஆனால் அது அத்தனை சுலபமாக இருக்கும் என்று அவனுக்கு தோன்றவில்லை. யார் எதிர்த்தாலும் எதிர்கொள்ளும் துணிவு அவனுக்கு இருக்கிறது ஆனால் சம்பந்தப்பட்டவளே விலகி நிற்க துடிக்கிறாள்.
இவளை சமாளித்து தன் வழிக்கு கொண்டுவர இன்னும் எவ்வளவு போராட வேண்டுமோ என்று நினைத்தவனுக்கு நினைவே கண்ணை கட்டியது. அந்த நினைவுகளோடு தன் அலுவலகத்திற்கு வந்தவன் அங்கு அமர்ந்திருந்தவனை சத்தியமாக அந்த நேரம் எதிர்பார்க்கவே இல்லை.
இவன் தந்தையின் அறையை கடந்து தான் இவன் அறைக்கு செல்ல வேண்டும் அவர்கள் அலுவகத்தில். அவர் அறைக்கு சற்று முன்னதாக வரவேற்பு பகுதி அமைந்திருக்க, அங்கிருந்த இருக்கையில் அமர்ந்திருந்தான் தீரஜ். அவனை கண்ட ஷியாம் ஒருநொடி யோசனையாக நின்றாலும் பின் எதுவுமே காட்டிக்கொள்ளாமல் தன்னறைக்கு விரைந்து விட்டான்.
மொபைலில் கவனமாக இருந்த தீரஜ் தன்னை யாரோ கடக்கவும் யாரென்று நிமிர்ந்து பார்க்க, அப்போது அவன் கண்டது அவன் தந்தையின் அறைக்குள் நுழைந்து கொண்டிருந்த ஷ்யாமை தான். ஏற்கனவே அவன் தந்தை அவனை அங்கே அமர்த்திவிட்டு உள்ளே அவர்மட்டுமே சென்றிருக்க அந்த கடுப்பில் இருந்தவன் இப்போது ஷியாம் உள்ளே செல்வதை காணவும் உள்ளுக்குள் வெந்து போனான்.
இவர்கள் நிறுவனத்தின் முக்கியமான, மற்றும் பெரிய வாடிக்கையே கிருஷ்ணா குரூப்ஸ் தான். அதுவும் அவர்களின் கட்டுமான நிறுவனம் ஒரே நேரத்தில் பல இடங்களில் தனித்தனி ப்ராஜெக்ட்களை மேற்கொண்டிருக்க அத்தனை பொருட்களும் சிமெண்ட்,மணல், கம்பிகள் போன்ற முக்கியமான அனைத்தும் ராஜனின் பொறுப்புதான்.
அப்படி இருக்க இன்று அவர்கள் தொழில் உறவை முறித்துக் கொண்டால் பாதிப்பு இவர்களுக்கு தான். அவர்களிடம் தொழில் செய்ய பலர் தயாராக இருந்தனர் இன்றைய நிலைக்கு.அதிலும் ஷியாம் கிருஷ்ணா பொறுப்பேற்றது முதல் அத்தனையும் ஏறுமுகம் தான் கிருஷ்ணா குரூப்ஸ் நிறுவனத்திற்கு.
அப்படியிருக்க ராஜனை பொறுத்தவரை அவர்கள் போன் முட்டையிடும் வாத்து போல. அவர்களை இழக்க ராஜன் தயாராக இல்லாததால் தீரஜ்ஜை இழுத்து வந்திருந்தார் ஷ்யாமின் அலுவலகத்திற்கு.
தந்தையின் அறைக்குள் நுழைந்த ஷ்யாமை பார்த்த ராஜன் அத்தனை பல்லும் தெரிய புன்னகைக்க, அவரின் குணம் தெரிந்தவன் என்பதால் லேசான தலையசைப்பை கூட கொடுக்காமல் தந்தையின் புறம் திரும்பி விட்டான் அவன்.
பாலகிருஷ்ணன் அந்த நேரத்தில் ஷ்யாமை எதிர்பார்க்காதவர் என்ன என்பதுபோல் அவனை பார்க்க அவனோ “ஒண்ணுமில்ல பா. நாம சிமெண்ட், மணல் வாங்குறதுக்காக புது டீலர்ஸ் கிட்ட பேசி இருந்தோம் இல்லையா. இதுவரைக்கும் நாலு பேர் கொட்டேஷன் அனுப்பி இருக்காங்க, நான் பைனலிஸ் பண்ண போறேன். அதான் உங்ககிட்ட சொல்லிட்டு செய்வோம் ன்னு வந்தேன்” என்று அவன் தந்தையிடம் கூற
பாலகிரிஷ்ணனுக்கு தான் தலையிடியாக இருந்தது. எதிரில் அமர்ந்திருப்பவர் இவர்கள் தொழிலின் ஆரம்ப காலத்தில் இருந்து இவர்களுடன் பயணித்தவர். இன்று இந்த சறுக்கலுக்காக அவர் மன்னிப்பும் கேட்டிருக்க, யோசித்துக் கொண்டு தான் அமர்ந்திருந்தார் அவர். இதோ இப்போது மகன் அவன் முடிவை தெளிவாக கூறிவிட்டான். இதற்குமேல் வெளிமனிதரிடம் அவனையும் விட்டு கொடுக்க முடியாது என்னதான் செய்வது என்று அவர் யோசனையில் மூழ்க அந்த நேரம் தான் ராஜன்
“ஏன் தம்பி ஏதோ ஒருமுறை தப்பு நடந்துடுச்சு.அதுக்காக தொழிலையே முறிச்சுக்கணுமா. நாம எல்லாம் எவ்ளோ காலமா இந்த தொழில்ல இருக்கோம். நமக்குள்ள என தம்பி ” என்று ஷ்யாமிடம் கேட்க
“என்ன ஒருமுறையா, அப்போ இவ்ளோ நாள் கோமால இருந்திங்களா நீங்க. இது நாலாவது தடவை உங்க மகன் இப்படி பண்றது. அதோட முதல் முறையே இதை பண்ணி இருக்கணும். வெளியே எங்களுக்குன்னு ஒரு பேர் இருக்கு. உங்களால நாங்க ஏன் அதை கெடுத்துக்கணும். அதோட எங்களை நம்பி வர்ற கஸ்டமர்ஸ் உயிரோட எங்களால விளையாட முடியாது சார். அதுக்காகத்தான் இந்த முடிவு.” என்று அழுத்தம் திருத்தமாக கூற
“அட என்னத்தம்பி நீங்க, பிடிச்ச பிடியிலேயே நிற்கிறீங்களே! கொஞ்சம் முன்னபின்ன இருக்கறதுதானே.அதுவும்கூட உங்க விஷயத்துல நாங்க எப்போவும் சரியாதான் நடந்திட்டு இருக்கோம் தம்பி. இந்த ஒருமுறை தவறிப்போச்சு. அதுக்காக எங்க தொழிலையே முடக்கணுமா?” என்று கேட்க
“ஏன் எங்களை நம்பியா ராஜன் குரூப்ஸ் இருக்கீங்க. எங்களைவிட்டா ஆளே இல்லைங்கிற நிலைமை ராஜன் குரூப்ஸ்க்கு இல்லையே.” என்று பதில் கொடுத்தான் ஷியாம்.
“நீங்க ரொம்ப வேகமா இருக்கீங்க தம்பி. உங்க வயசு அப்படி, நீங்க இருங்க நான் உங்க அப்பாகிட்ட பேசிக்கறேன்.அவர்தானே கம்பெனி md.” என்றுவிட
பாலகிருஷ்ணனுக்கு எங்கிருந்துதான் அத்தனை கோபம் வந்ததோ “போதும் ராஜன். இந்த கம்பெனிக்கு பெயரளவில் தான் md. மத்தபடி முடிவெல்லாம் எப்போவோ என் மகன் கையில கொடுத்தாச்சு. தொழிலே இப்போ அவன்தான் முழுசா பார்க்கிறான். கோகுலும், ஷ்யாமும் தான் இங்க எல்லாமே.”
“இனி நீங்க என்ன பேசணும்ன்னாலும் பசங்க கிட்டயே பேசிக்கோங்க.” என்றவர் தன் இருக்கையிலிருந்து எழுந்துவிட்டார். “நான் வீட்டுக்கு கிளம்புறேன் ஷியாம். கோகுல ரிஸீவ் பண்ண ஈவினிங் ஏர்போர்ட் போகணும் மறந்துடாத.” என்று ஷ்யாமிடம் கூறியவர் அவன் தலையசைக்கவும் கிளம்பிவிட்டார்.
அவர் கிளம்பவும் ஷ்யாம் நக்கலாக ராஜனை பார்த்தவன் “அப்புறம் சார்.வேற எதுவும் இருக்கா, இல்ல கிளம்புறீங்களா?? ஏன் கேட்கறேன்னா உங்களுக்கு நிறைய வேலை இருக்கும், இப்போ வேற முக்கியமான கஸ்டமர்ஸ் எல்லாம் கிடைச்சிருக்காங்க.” என்று கூற
“என்ன சொல்ற ஷ்யாம். எப்பவுமே உங்களுக்கான முக்கியத்துவத்தை நான் கொடுக்காம விட்டதே கிடையாது. அப்படியிருக்க நீ ஏன் இதை திரும்ப திரும்ப சொல்லணும்.” என்று கேட்க
“உங்க மகன்கிட்ட கேளுங்க சார்.” என்றவன் அதோடு தன் மொபைலை எடுத்துக் கொண்டு அமர்ந்துவிட்டான். இனி அவன் பேசமாட்டான் என்பதை உணர்ந்தவராக கோபத்துடன் வெளியேறினார் ராஜன். அவரின் மொத கோபமும் அவர் மகன் மீதுதான் இப்போது.
ஷ்யாமை பற்றி நன்கு அறிந்தவர் என்பதால் தான் அவனிடம் பேசாமல் பாலகிருஷ்ணனை சந்திக்க வந்தார் அவர். அப்படியிருக்க அங்கும் ஷியாம் அவன் வேலையை காட்டிவிட அவரால் ஒன்று ம்செய்ய இயலாமல் போனது. ஆனால் ஷியாம் தேவையில்லாமல் இந்த அளவுக்கு செல்லமாட்டேன் என்பதையும் அவர் உணர்ந்தே இருக்க, இவன் என்ன செய்து வைத்தானோ என்று குமைந்து கொண்டிருந்தார் அவர்.
அங்கு அமர்ந்திருந்த தன் மகன் எங்கே சென்றான் என்றுகூட யோசிக்காமல் அவர் கோபமாகி வெளியேற அங்கு காரில் அவருக்காக காத்திருந்தான் தீரஜ். அவர் முகமே முடிவை சொல்லிவிட “இதுக்குதான் அவனை தேடி போகாதீங்க ன்னு சொன்னேன்.என் பேச்சை கேட்டிங்களா நீங்க.இது தேவையா, இவனை விட்டா ஆளே இல்லையா நமக்கு” என்று அவன் பொரிய
“முட்டாள்,முட்டாள் நீ எல்லாம் படிச்சிருக்கேன்னு வெளியே சொல்லிடாத. அவனை என்ன நம்மளை மாதிரி நெனச்சியா. பரம்பரை பணக்காரன். அவனோட இந்த கன்ஸ்ட்ரக்க்ஷன் கம்பெனியோட மதிப்பே உன் மொத்த சொத்தைவிட அதிகம்.
“போனது அவன் பிசினஸ் மட்டும்ன்னு நெனச்சியா. இவனால் தான் பல பெரு இன்னிக்கும் ராஜன் குரூப்ஸ தேடி வராங்க.இப்போ இவன் வெளியே போனது தெரிஞ்சா நம்ம கான்ட்ராக்ட்ஸ் நம்ம கைய விட்டு கொஞ்சம் கொஞ்சமா போய்டும். புரியுதா உனக்கு” என்று ஆத்திரமாக அவர் கேட்க
அப்போதுதான் நிலைமையின் தீவிரம் புரிந்தது தீரஜ்க்கு. தன்னை இந்த நிலையில் நிற்கவைத்த ஷ்யாமை நினைத்துதான் அப்போதும் கோபப்பட்டான் அவன்.அவன் தவறை பற்றி அப்போதும் அவன் சிந்திக்கவே இல்லை.
அந்த பொறியியல் கல்லூரியின் வாசல் முன்பாக கிட்டத்தட்ட அரைமணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தான் ஸ்ரீதர். அவன் தேடி வந்து நபர் கல்லூரியிலிருந்து இன்னும் வெளிப்படாததால் ஏகக்கடுப்பில் இருந்தான் அவன். அந்த கல்லூரி வாசலே பார்த்துக் கொண்டு நின்றிருந்தவன் அந்த கல்லூரியின் முன்னாள் மாணவன்.
இப்போது ஆறு மாதமாக தந்தையுடன் சேர்ந்து அவன் அலுவலகத்திற்கு செல்ல ஆரம்பித்திருக்க, இந்த காத்திருப்பு அவ்வபோது நடப்பது தான். எப்போதும் தந்தையுடன் சுற்றிக் கொண்டிருப்பதால் அவன் முகம் மீடியாவிலும் பரிட்சையமாக இருக்க, கட்சிக்காரர்களுக்கு அவனை நன்கு தெரியும்.அதனால் தான் காரைவிட்டு இறங்காமல் காரிலேயே காத்திருந்தான் அவன்.
அவனை மேலும் ஒரு அரைமணி நேரம் காக்க வைத்துவிட்டே வெளியே எட்டிப்பார்த்தது அவனின் நிலவு. ஆம் அப்படித்தான் அவன் சொல்லிக்கொள்வான். இவன் கடைசி வருடம் படிக்கும்போது அந்த கல்லூரியில் முதல் ஆண்டு மாணவியாக சேர்ந்திருந்தாள் அனுபமா.
யாரையும் மதிக்காமல் மந்திரியின் மகன் என்ற மிதப்பிலேயே எப்போதும் திரிபவனை தன் பின்னால் சுற்ற வைத்திருந்தாள் அவள்.அவளிடம் முதலில் காதல் சொன்னவனும் இவன்தான், இறுதி ஆண்டு முடிக்கும் நேரத்தில் இதற்குமேல் பார்த்துக் கொண்டு மட்டும் இருக்கமுடியாது என்று தோன்றிவிட, என்ன நினைத்தானோ அவளிடம் கூறிவிட்டான் அவன். அவளும் முதலில் மறுத்தவள் ஒரு கட்டத்திற்கு மேல் ஸ்ரீதரை விரும்ப ஆரம்பித்திருக்க, அதை அவளும் அவனிடம் தெரிவித்து மாதம் மூன்றாகிறது.
இருவருக்குள்ளும் காதல் குவிந்து கிடந்தாலும் பெரும்பாலும் வெளிகாட்டிக் கொண்டதில்லை இருவரும். அடிக்கடி இருவரும் சந்திக்கவும் அனுபமா ஒத்துக் கொள்ளவில்லை.இவனும் இப்போதுதான் அலுவலகத்திற்கு செல்ல ஆரம்பித்திருக்க, மாதத்திற்கு ஒருமுறை இருவரும் சந்தித்து கொள்வது என்று முடிவு செய்து கொண்டிருந்தனர்.
பெரும்பாலும் ஸ்ரீதர் அவன் தந்தையுடன் இருப்பதால் அலைபேசியில் அந்த அளவு பேசிக்கொவது கிடையாது. அந்த வகையில் பொறுப்பை உணர்ந்த காதலர்கள் தான். எப்போது அவளிடம் காதலை சொல்லிவிட்டானோ அந்த நொடியே அவள்தான் மனைவி என்று முடிவு செய்துவிட்டவனுக்கு இந்த இடைவெளி ஒரு விஷயமாகவே இல்லை.
அவளும் அவளிடம் காதல் சொன்னவனை முழுமையாக நம்பி இருக்க, அந்த நம்பிக்கையில் ஒளிர்ந்து கொண்டிருந்தது அவர்களின் காதல். இப்போது இவன் காத்திருப்பதும் அவர்களின் இந்த மாத தவணைக்காக தான்.
இவன் யோசனையாக காரில் அமர்ந்திருக்க, இவன் காரை தொலைவிலேயே கண்டுவிட்டவள் நேராக வந்து காரில் ஏறி இருந்தாள். அவள் தோழிகள் இருவருக்கும் இவள் விஷயம் தெரியுமென்பதால் ஒரு நக்கலான சிரிப்பு மட்டுமே அவர்களிடம். ஸ்ரீதரை காணும் ஆர்வத்தில் அவர்கள் நக்கலை கண்டுகொள்ளாமல் பறந்திருந்தாள் அவள்.
அத்தனை துள்ளலுடன் அவள் நடந்துவர அதுவரை இருந்த கோபம் காணாமல் போக, ஆவலாக அவளை கண்களில் நிரப்பிக்கொண்டான் ஸ்ரீதர். புன்னகையுடன் அவனை பார்த்துக்கொண்டே வந்தவள் காரை திறந்து அவன் அருகில் அமரவும், காரை கிளப்பியவன் நேராக சென்று நின்றது கடற்கரைதான்.
அவள் கல்லூரி கேளம்பாக்கத்தில் இருக்க,அருகிலேயே கோவளம் கடற்கரை. தினமும் கல்லூரி வாகனத்தில் சென்று வருபவள் இன்று இவன் வரவும் உடன் கிளம்பி இருந்தாள். காரை நிறுத்தியவன் தன் நிலவை இடையில் கைகோர்த்து தன்னுடன் இழுத்தணைத்துக்கொள்ள புன்னகையுடன் அவன் மேல் சாய்ந்து கொண்டவள் சில நிமிடங்களில் விலகி அமர்ந்து கொண்டாள்.
அவள் செயலில் சிரித்துவிட்டு “ரொம்ப பண்றடி. உன்னை கடத்திட்டு போகப்போறேன் பாரு” என்று கூற
“ஏன் கடத்திட்டு போகணும், கூப்பிட்டாளே நாந்தான் கூட வருவேனே” என்றாள் அவள். அவள் பதிலில் அவன் சிரித்துவிட்டு “நீயும் ரெடியா தான் இருக்க, சீக்கிரமே தூக்குறேன்…… “என்றவன் அவளை பார்த்துக்கொண்டே இழுக்க, அவன் பார்வை சொன்ன செய்தியில் அவன் தோளில் பட்டென்று அடித்தவளை மீண்டும் அவன் தன்னோடு இறுக்கி கொள்ள, அவனை விட்டு விலகி அவன் கைகளோடு கைகளை கோர்த்துக் கொண்டாள் அவள்.
அவளை புரிந்தவனாக அவள் உச்சியில் முத்தமிட்டவன் காரில் இருந்து இறங்கி அவளை அழைத்துக் கொண்டு கடற்கரைக்கு செல்ல, அத்தனை அமைதியாக இருந்தது அந்த கடற்கரை. காதலர்களுக்கு ஏற்ற இடம்தான்.
அவர்களுக்கான அந்த தனிமையை எல்லை மீறாமல் பயன்படுத்தி கொண்டவர்கள் சிறிது நேரத்திற்கு பின் அங்கிருந்து கிளம்பி இருந்தனர். அவளை அழைத்துக் கொண்டு அருகிலிருந்த உணவகத்திற்கு சென்றவன் அவளுக்கான உணவை ஆர்டர் செய்ய, அவள் கேள்வியாக பார்க்கவும் “அப்பாவோட ஒரு லஞ்ச்க்கு போயிருந்தேன். அங்கேயே சாப்பிட்டுட்டேன்” என்று சொல்ல, தலையசைத்தாள் அவள்.
உணவு வரவும் அமைதியாக அவள் உண்ண எதிரில் அமர்ந்திருந்தவன் அவள் அருகில் மாறி அமர தனது இடது கையை அவன் கையுடன் கோர்த்துக் கொண்டு புன்னகையுடன் உண்டு முடித்தாள் அவள். அவள் உணவை முடிக்கவும் இருவரும் கிளம்ப அவளை கொண்டுவந்து அவள் வீட்டருகில் இறக்கிவிட்டவன் அவள் வீட்டினுள் நுழையும்வரை தூரமாக நின்று கவனித்துவிட்டே அங்கிருந்து கிளம்பினான்.
இருவர் முகமும் வேறு வேறு புறம் இருந்தாலும், அவர்கள் முகத்தில் பொதுவாக நிறைந்திருந்தது காதலும், புன்னைகையும் தான். இவர்கள் தங்களை காதலால் நிறைத்திருக்க இருவருமே ஒருவருக்காக மற்றவர் உருகும் நிலையில்தான் இருந்தனர். ஆனால் விதி இவர்களுக்கு என்ன வைத்திருக்கிறதோ ???