புல்லாங்குழல் தள்ளாடுதே 03 14684 அத்தியாயம் 03 தன் அலுவலக அறையில் இருந்த சுழல் நாற்காலியில் அமர்ந்தபடி ஏதோ ஒரு பைலில் மூழ்கி இருந்தான் ஷியாம் கிருஷ்ணா. அப்போது கதவை தட்டிவிட்டு உள்ளே நுழைந்தான் அவன் நண்பன் மற்றும் அவனின் மேனேஜர் ராகவ். ஷ்யாமுடன் கல்லூரியில் ஒன்றாக படித்தவன் மற்றும் அவனின் உயிர்த்தோழன் தான் ராகவ். அவன் குடும்பம் பொருளாதாரத்தில் சற்றே பின்னடைந்து இருக்க, பகுதி நேர வேலைகளின் புண்ணியத்தில் படிப்பை முடித்தவன் அவன். அவன் பொறுப்பான குணத்தாலும், அவன் பழக்கவழக்கங்களாலும் ஈர்க்கப்பட்ட ஷியாம் அவனை தன் நண்பனாக்கி கொள்ள, அவன் வளமையை அறிந்து இருந்தும் அவனிடம் இன்றுவரை எந்த உதவியையும் எதிர்பார்த்தவன் இல்லை அவன். இந்த வேலை கூட அவன் திறமையை மனதில் வைத்து அவனை விட்டுவிட மனமில்லாமல் ஷியாம் அவன்மீது திணித்ததுதான். சற்றே சுயநலமான முடிவும் கூட. ஏனென்றால் கல்லூரியில் நடந்த நேர்காணலில் அவன் ஏற்கனவே நல்ல சம்பளத்தில் தான் தேர்வாகி இருந்தான். அந்த நேரம் ஷியாம் அழைக்கவும் வேறு எதுவும் பேசாமல் அவனுடன் இணைந்திருந்தான் ராகவ். சம்பளத்தை பற்றிக்கூட ஒரு வார்த்தை அவங்க பேசியது இல்லை. அவனின் சம்பளம், அலுவலகத்தில் அவனின் பொறுப்புகள் அனைத்தையும் முடிவு செய்தது ஷியாம் தான். ஆரம்பத்தில் ஆட்சேபித்த அவனின் தந்தை கூட ராகவ் வேலைக்கு சேர்ந்த ஆறு மாதங்களில் அவனின் திறமையை ஒத்துக்கொள்ள தான் வேண்டி இருந்தது. இப்போது ராகவ் அறைக்குள் நுழைந்தவன் ஷ்யாமிடம் ” சார். அந்த ராஜன் குரூப் மெட்டீரியல்ஸ் அந்த அளவுக்கு சரியா இல்லை. ஏற்கனவே ரெண்டு டைம் அவங்களுக்கு வார்னிங் கொடுத்தாச்சு. பட் இப்போ நந்தனம் சைட்ல அதே பிரச்சனை. இந்த முறையும் அவங்களை இப்படியே விடறது சரி இல்லை சார்” என்றவன் ஷ்யாமின் பதிலுக்காக காத்திருக்க அவனோ முகத்தை யோசிப்பது போல் வைத்திருந்தவன் ” அப்பா காலத்துல இருந்து இருக்காங்க, அதுக்காகத்தான் யோசிக்க வேண்டி இருக்கு ராகவ். இல்லனா டீல கேன்சல் பண்ணிட்டு போயிட்டே இருக்கலாம்” என்றதும் ” அங்கேயும் அப்பா காலத்துல பிரச்னை இல்ல சார். இப்போ தொழில் கைமாறவும் தான் சுத்தம் இல்லாம போச்சு. அதுக்காக நாம பேரை கெடுத்துக்க முடியாது இல்லையா சார். நீங்க யோசிங்க.” என்றவன் ஷ்யாமை பார்க்க, அவனோ ” நீ வேற ஏண்டா ” என்றவன் “அவனுக்கு ஏற்கனவே என்னை பார்த்தா ஆகாது. இப்போ இதுவேற, நான் வேண்டாம்னு சொன்னா பிரச்சனையை அவன் டைவர்ட் பண்ண வாய்ப்பிருக்கு. அதான் யோசிச்சேன், ஆனா அதுக்காக எல்லாம் நம்ம வேலையில காம்ப்ரமைஸ் பண்ணிக்க முடியாது. நீ அவங்களோட எல்லா ஆர்டெர்ஸ் யும் கான்செல் பண்ணி மெயில் சென்ட் பண்ணிடு. அப்பாகிட்ட நான் பேசிக்கறேன்.” என்று முடித்துவிட்டான். இதுதான் ஷியாம் என்பதுபோல் புன்னகைத்த ராகவ் அங்கிருந்து வெளியேற அப்போதுதான் நேரத்தை பார்த்தான் ஷியாம். அவன் அன்னை இன்று கோயிலுக்கு செல்ல வேண்டும் என்று இவனை வீட்டிற்கு அழைத்திருக்க அவர் சொன்ன நேரத்திற்கு மேலாக அரைமணி நேரம் ஓடி இருந்தது. அடித்து பிடித்து கிளம்பியவன் காரை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு ஓடியிருந்தான். இல்லையென்றால் அவன் அன்னையிடம் யார் வாங்கி கட்டுவது?? ஷ்யாம் கிருஷ்ணாவின் கார் வீட்டை அடைய, வாயிலில் இருந்த காவலாளி கேட்டை திறக்கவும் காரை உள்ளே செலுத்தினான் அவன். அந்த பெரிய மாளிகை போன்ற வீட்டின் முன் இருந்த போர்டிகோவில் காரை நிறுத்தியவன் சாவியை கூட எடுக்காமல் உள்ளே ஓட அங்கே அவன் அன்னை பத்மினி முறைப்பாடு வாசலை பார்த்துக் கொண்டிருந்தார். இவன் உள்ளே நுழையவும் எழுந்தவர் அவர் பாட்டுக்கு சமயலறைக்கு செல்ல, அவரின் பின்னால் ஓடினான் அவரது செல்ல மகன். ” ம்மா… ப்ளீஸ்மா. கொஞ்சம் ஒர்க் டென்ஷன் மா, அதான் லேட்டாகிடுச்சு. பத்தே நிமிஷம் போய்டலாம். என் செல்லமில்ல ” என்றவன் அவரை தொடப்போக கையிலிருந்த கத்தரிக்கோலால் அவன் கையை தட்டிவிட்டவர் மீண்டும் முறைக்க, ” ஓகே ஓகே தொடல. குளிச்சிட்டு வந்துடறேன் பத்துமா.. பத்தே நிமிஷம்” என்று ஓடிவிட்டான். அவன் நகர்ந்ததும் மகனின் செயலில் புன்னகைத்துக் கொண்ட பத்மினி பாலை பிரித்து அடுப்பில் இருந்த பாத்திரத்தில் ஊற்றி தன் மகனுக்கு காபி கலக்க ஆரம்பித்தார். மகனுக்கு பி[இடித்த வகையில் டிகாஷன் இறக்கி அவர் காபி வைக்க, அந்த நேரம் அங்கே வந்து சேர்ந்தாள் அவரது மருமகள் வசுமதி. ஷியாம் கிருஷ்ணாவின் அண்ணன் கோகுல கிருஷ்ணனின் மனைவி. வரும்போதே ” என்ன அத்தை பையனுக்கு ஸ்பெஷல் காஃபியா ?? ஹ்ம்ம் நானும் என்ன பண்ணாலும் இந்த டேஸ்ட் வரவே இல்ல அத்தை.” என்று புலம்பிக்கொண்டே வர, அவள் முடிக்கும் நேரம் ஆவி பறக்க காபியை அவள் கையில் கொடுத்திருந்தார் பத்மினி. தன் அத்தையின் செயலில் புன்னகைத்தவள் அங்கே இருந்த டைனிங் டேபிளில் வந்து அமர்ந்துவிட,பத்மினியும் தனக்கான காபியை எடுத்துக் கொண்டு வந்து அங்கே அமர்ந்தார். வசுமதியும், அவரும் கோவிலுக்கு கிளம்பி இருக்க அவர்களை அழைத்துச் செல்லவே ஷ்யாமை அழைத்திருந்தார் அவர். வசுமதியின் கணவன் வேலை விஷயமாக மும்பை சென்றிருக்க, வசுமதி இப்போது எட்டுமாத கர்ப்பிணி. இன்றைய வேண்டுதலும் அவளுக்காக தான். காபியை குடித்தவள் முகத்தை அஷ்டகோணலாக சுளிக்க, அதைக் கண்டவர் ” உனக்கு காபி கொடுத்ததே பெரிசு. வயித்துபிள்ளைக்காரி ஆசைப்படறியேன்னு கொடுத்தா, சர்க்கரை வேற முழுசா கேட்குதா.” என்று கண்களை உருட்ட அவரை பார்த்து செல்லமாக முறைத்துக் கொண்டே அவள் காபியை குடிக்க, அந்த நேரம் இறங்கி வந்தான் ஷ்யாம். ” என்ன அண்ணி, என்ன சொல்றான் ஜூனியர் கோகுல்.” என்று கேட்க ” இன்னிக்கு கோவிலுக்கு கூட்டிட்டு போறேன்னு சொல்லி லேட்டா வந்த அவன் சித்தப்பாவை திட்டிட்டு இருக்கான்.” என்று கூற ” இது அவன் சொன்னமாதிரியே தெரியலையே. நீங்க திட்டிட்டு அவனை சொல்றிங்களா?” என்று கேட்க அவளும் சளைக்காமல் ” என் பையன் அவன் அப்பாவை மாதிரி. அம்மா என்ன நினைக்கிறேனோ அதைத்தான் அவனும் செய்வான் ” என்று பெருமையாக கூற ” நீங்க பெருமைப்படறீங்களா இல்ல அம்மா கோந்துன்னு எங்க அண்ணனை திட்டறிங்களா ” என்றதும் பதட்டமானவள் ” ஐயோ அத்தை. நான் நல்லவிதமா தான் சொன்னேன், இவங்க உங்ககிட்ட மாட்டிவைக்க பார்க்கிறாங்க. ” என்று வேகமாக கூற பத்மினி அவன் தலையில் கொட்டியவர், எழுந்து சென்று அவனுக்கான காஃபியை கொண்டுவர, அவன் குடித்து முடித்ததும் மூவரும் கோவிலுக்கு கிளம்பினர். திருவல்லிக்கேணி ஸ்ரீ அருள்மிகு பார்த்தசாரதி பெருமாள் திருக்கோயில். சென்னையின் பழைமையான அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் இந்த திருக்கோயில் ஆறாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. மேலும் பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்த கோவில் ஆழ்வார்களால் பாடப்பட்ட பெருமையையும் தன்னகத்தே கொண்டு இன்றும் நிமிர்ந்து நின்றது. அன்று சனிக்கிழமை என்பதால் கோவிலில் வழக்கத்தைவிட கூட்டம் நிரம்பி காணப்பட, ஷ்யாம் ஒருபுறமும், அவன் அன்னை ஒருபுறமும் பிடித்தவாறு பாதுகாப்பாகவே அழைத்து வந்தனர் வசுமதியை. பத்மினி அடிக்கடி அங்கு வருவதால் அங்கிருந்த நிர்வாகிகளும் அவருக்கு பழக்கமாகவே இருக்க, நேராகவே இறைவனின் சன்னதிக்கு சென்று நின்றனர் மூவரும். அங்கு பெருமாள் பார்த்தனுக்கு சாரதியாய், நட்புக்கு இலக்கணமாய், அநீதிக்கு ஆபத்தாய், உலகிற்கு பரமாத்மாவாய் அத்தனை அழகாக கொலு வீற்றிருக்க, விசேஷ நாள் என்பதால் அவருக்கான அலங்காரமும் ப்ரத்யேகமாகவே இருந்தது. பச்சை பட்டுடுத்தி ஸ்வாமி அத்தனை சாந்தமாக அமர்ந்திருக்க, அவர் அழகை காண கண்கோடி வேண்டும் என்பதுபோல் இருந்தது அவர் முகம். பத்மினி கண்களை மூடி முழுதாக அவனை சரணடைந்தவர் தன் வீட்டு வாரிசுக்காகவும், தன் மகனின் திருமணத்திற்காகவும் பிரத்யேகமாக வேண்டுதலை வைத்துக் கொண்டிருக்க, வசுமதியோ அவரின் அழகில் மெய்மறந்து அவர் முகத்தை கண்களில் நிரப்பிக் கொண்டிருந்தாள். ஷ்யாமும் கண்மூடி இருநிமிடங்கள் நின்றவன் பின் பெண்களை அழைத்துக் கொண்டு வெளியே வர, மூவரும் பிரகாரத்தை வலம்வர ஆரம்பித்தனர். இவர்கள் முதல் சுற்றை முடிக்கும் நேரம் அங்கிருந்த மண்டபத்தில் ஏதோ நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்க, வசுமதி அதை வேடிக்கை பார்த்துக் கொண்டே நடந்து வந்தவள் எதிரே வந்த பெண்ணின் மீது மோதிக்கொள்ள பார்க்க, கடைசி நேரத்தில் பத்மினி அவளை இழுத்து நிறுத்தி இருந்தார். அந்த பெண்ணை பார்த்த வசுமதி ” சாரி.. சாரி நான் வேடிக்கை பார்த்ததில உங்களை கவனிக்காம வந்துட்டேன்” என்று வேகமாக கூற ” அச்சோ பரவால்ல, எதுக்கு சாரி எல்லாம்.” என்றவள் புன்னகைக்க, வசுமதி அவளின் புன்னகையை பார்த்தவள் ” சிரிக்கும்போது ரொம்ப அழகா இருக்கீங்க” என்றவுடன் புன்னைகை பெரியதாக விரிய ” நீங்களும் ரொம்ப அழகா இருக்கீங்க. அதுவும் உங்க குட்டியோட.” என்றவள் லேசாக அவள் வயிற்றை தொட பத்மினி அருகில் நின்றிருந்தவர் அந்தப்பெண்ணிடம் “உன் பேர் என்னம்மா” என்று கேட்க “ஸ்ரீகன்யா ஆண்ட்டி ” என்றவள் அவரை பார்த்து புன்னகைக்க அவரும் புன்னகைத்து ” நான் பத்மினி. இவ என்னோட மருமக வசு. இது என்னோட மகன் ஷ்யாம் ” என்று அருகில் நின்றவனையும் சேர்த்தே அறிமுகப்படுத்த அவன் அசைந்தால் தானே. அவன்தான் அவளை பார்த்த நொடியே சிலையாக மாறி இருந்தானே. இப்போது வசு அவன் கையை இழுக்கவும், தெளிந்தவன் எதிரில் இருந்தவளை பார்த்து புன்னகைக்க, அவளும் ஒரு அறிமுகமற்ற புன்னகையை சிந்தினாள். “அய்யகோ” அவளுக்கு அவனை நினைவே இல்லை. ஏதோ முதல் முறையாக சந்திக்கும் ஒருவரை பார்க்கும் அறிமுகமற்ற புன்னகைதான் அவளிடம். ஷியாம் எதை நினைத்திருந்தாலும் சத்தியமாக இதை எதிர்பார்க்கவில்லை. அவள் தன்னை மறந்துவிட்டது ஏனோ அவனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவன் அதே சிந்தனையில் இருக்க, இங்கு பெண்கள் மூவரும் சில நிமிடங்களில் சரளமாக பேசத் தொடங்கி இருந்தனர். இதற்குள் ஒரு சிறுபெண் ஸ்ரீகன்யாவை அழைக்க இவர்களிடம் சொல்லிவிட்டு அவளுடன் நடந்தாள் அவள். அந்த நேரம் அங்கு வந்த கோவில் நிர்வாகி, “அவங்க பிள்ளைகளோட கச்சேரி தான்மா இன்னிக்கு. இங்க கோவில் மண்டபத்துல தான் நடக்குது.” என்று கூற ” அவங்க டீச்சரா ” என்று வசுமதி கேட்க ” என்னம்மா.இப்படி கேட்டுட்டீங்க, அந்த ஸ்கூலே அவங்களோடதுதான். அதுவும் அவங்களும் நல்லா பாடுவாங்க. சினிமால கூட பாடி இருக்காங்க சமீபமா ” என்று அவர் அறிந்ததை கூற வசுமதி அத்தையிடம் ” கொஞ்சம் கூட தெரியவே இல்லை அத்தை. இவ்ளோ சாதாரணமா இருக்காங்க. நல்ல பொண்ணு இல்லத்த ” என்று கேட்கவும், பத்மினி தலையசைத்து புன்னகைத்தார். மேலும் வசுமதி அவள் நிகழ்ச்சியை பார்க்க ஆசைப்படவே அவளை அழைத்துக் கொண்டு இவர்கள் கோவில் மண்டபத்துக்கு செல்ல, அங்கே நிகழ்ச்சி தொடங்கி இருந்தது. அங்கு குழுவினர் மக்களை பார்த்து அமைந்திருக்க அவர்களுக்கு இடதுபுறத்தில் அவர்கள் புறம் லேசாக திரும்பியவாறு கையில் வீணையுடன் அமர்ந்திருந்தாள் ஸ்ரீகன்யா. பொறுப்பான ஆசிரியையாக அவள் மாணவர்களை அறிமுகப்படுத்தியவள் அவர்களை கொண்டே நிகழ்ச்சியை தொடங்கினாள். அங்கிருந்தவர்களில் மிகவும் சிறிய ஒரு எட்டுவயது வாண்டு வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள் வீணை செய்யும்.. வீணை செய்யும் ஒலியில் இருப்பாள் வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள் என்று சரஸ்வதியை வணங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைக்க நிகழ்ச்சி தொடர்ந்து கொண்டிருந்தது. அடுத்தடுத்து பாடல்கள் தொடர, இங்கு கீழே அமர்ந்திருந்த ஷ்யாம் அவளை வாய்த்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் அந்த மாணவர்களை அறிமுகப்படுத்தும் விதம், பாடலுக்கு கொடுக்கும் முன்னுரை, பாடலை பற்றிய தரவுகள் அனைத்துமே ரசிக்கும்படியாக இருக்க அவளை ரசித்துக் கொண்டிருந்தான் அவன். அவன் மட்டுமில்லாமல் அங்கிருந்த அனைவருமே ஏதோ ஒரு சக்திக்கு கட்டுப்பட்டவர்கள் போல் கட்டுண்டு தான் இருந்தனர் அந்த குழுவின் ஜாலத்தில். வழக்கமான இசைக்கச்சேரிகளை போல வளவள வென்று இழுக்காமல் இவர்கள் புதுமையாகவும், அதே சமயம் அந்த பாடல்களின் ஜீவனை அழிக்காமலும் இனிமையாக ஏதோ மாயம் செய்ய வேடிக்கை பார்க்கவென சில நொடிகள் நின்றவர்கள் கூட அமர்ந்து ரசித்து விட்டே சென்றனர். பத்மினியும், வசுமதியும் சொல்லவே வேண்டாம் என்பது போல ஸ்ரீகன்யாவையே பார்த்திருக்க, அங்கு நிறைந்திருந்த பக்திமணத்தில் மூழ்கி போயிருந்தனர். பத்மினியின் கவனம் மேடையில் இருந்தாலும் தன் மகனின் மீதும் ஒரு பார்வையை வைத்திருந்தவர் அவன் பார்வை மாற்றத்தில் ஆச்சரியமாக அவனை பார்க்க, அவனோ முதலில் அவர் பார்ப்பதை கூட அறியாமல் அவளை பார்த்திருந்தவன் பின்பே சுற்றம் உணர்ந்து தெளிந்து கொண்டான். சற்றே நிமிர்ந்து அமர்ந்தவன் எப்போதும் போல இயல்பாகிவிட பத்மினிக்கு தான் பார்த்தது பொய்யோ எனும் சந்தேகமே எழுந்துவிட்டது. ஒருவழியாக நிகழ்ச்சி இறுதியை எட்டிவிட ஸ்ரீகன்யா நிறைவுப்பாடலாக குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா குறை ஒன்றும் இல்லை கண்ணா குறை ஒன்றும் இல்லை கோவிந்தா என்று தொடங்கியவள் தொடர்ந்து கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி நிலையாகக் கோவிலில் நிற்கின்றாய் கேசவா கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி நிலையாகக் கோவிலில் நிற்கின்றாய் கேசவா குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா யாதும் மறுக்காத மலையப்பா யாதும் மறுக்காத மலையப்பா உன் மார்பில் ஏதும் தர நிற்கும் கருணைக் கடல் அன்னை என்றும் இருந்திட ஏது குறை எனக்கு என்றும் இருந்திட ஏது குறை எனக்கு ஒன்றும் குறையில்லை மறை மூர்த்தி கண்ணா ஒன்றும் குறையில்லை மறை மூர்த்தி கண்ணா மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா என்று கோவிந்தனை துதிபாடி முடிக்க, நிகழ்ச்சி அத்துடன் முடிந்தது. அவர்களின் பொருட்களை எடுத்து வைக்கும் வேலையில் அவர்களுடன் வந்திருந்த ஆசிரியர்களும், மற்றவர்களும் ஈடுபட்டிருக்க, ஸ்ரீகன்யாவும், ஆவலுடன் இன்னொரு பெண்ணும் அங்கிருந்த மாணவர்களின் பெற்றோர் உடன் அவர்களை அனுப்பி வைத்துக் கொண்டிருந்தனர். அந்த மண்டபத்திற்கு கீழே அமர்ந்திருந்த மூவரும் நிகழ்ச்சி முடியவும் எழுந்து கொண்டவர்கள் நேரத்தை பார்க்க, அது பத்தை கடந்திருந்தது. பத்மினி அலறியவர் மகனை பார்க்க, அவன் நக்கலாக தன் அன்னையை பார்த்தான். அவன் பார்வையில் வீட்டிலிருக்கும் மாமியாரின் நினைவு வர திட்டிவிடமாட்டார் என்றாலும் ஒரு வயதான பெண்மணியை இவ்வளவு நேரம் மறந்திருந்தது அவருக்கு குற்றவுணர்வாக இருக்க முகம் வாடிவிட்டது அவருக்கு. இத்தனைக்கும் வீட்டில் அத்தனை வேலையாட்கள் வேறு இருக்க, அப்படியும் அவர் மனது ஆறவில்லை. அவரின் வாட்டத்தை பொறுக்காத ஷியாம் “ம்மா.. அப்பாக்கு கால் பண்ணி சொல்லிட்டேன். பாட்டியும் சாப்பிட்டுட்டு தூங்க போய்ட்டாங்க, அதோட அவங்களும் உங்களை தப்பா நினைக்கல. உங்களை பத்திரமா கூட்டிட்டு வரச்சொல்லி தான் என்கிட்டே சொன்னாங்க மா. ப்ரீயா விடுங்கமா” என்றதும் தான் அவர் முகம் தெளிந்தது. அதன்பிறகே அவனும் “கிளம்பலாமா” என்று கேட்க, வசுமதி சற்று தொலைவில் நின்றிருந்த ஸ்ரீகன்யாவை பார்த்து கையசைக்க முதலில் பார்க்காதவள், இவர்களை கவனித்ததும் அருகில் வந்தாள். வசுமதி அவள் கையை பிடித்துக்கொண்டு வாழ்த்து சொல்ல, அதற்கும் புன்னகைதான் அவளிடம். பத்மினியும் அவளை வாழ்த்தியவர் மேலும் சிலநிமிடங்கள் பேசிக் கொண்டிருக்க, அதற்குள் அங்கு வந்திருந்தார் மாரி. ஸ்ரீகன்யாவின் கார் டிரைவர், அவளின் பாதுகாவலர், அவள் வீட்டிற்கு வாயில்காரர், அவளின் மாரிண்ணா. இன்னுமின்னும் சொல்லிக்கொண்டே போகலாம் அவர்களின் உறவைப்பற்றி. அவர் வந்து நிற்கவும் பத்மினியிடம் சொல்லிக்கொண்டு அவள் புறப்பட தயாராக இவர்களும் விடைபெற்று காரில் ஏறிக் கிளம்பினர். கடைசி வரை ஷ்யாமை அவள் கண்டுகொள்ளவே இல்லை. ஏன் முன்பே தெரிந்தவனாக ஒருபார்வை கூட இல்லை. அதிலும் அவள் தவிர்த்தது போல் கூட தோன்றவில்லை, ஆனால் தெரிந்ததாகவும் அவள் காட்டிக்கொள்ள வில்லை என்பதைவிட அவளுக்கு அவனை தெரியவே இல்லை என்பதே அந்த இடத்தில பொருத்தமாக இருக்க, அவனால் அதை அப்படியே விட்டுவிட முடியவில்லை. அவள் முகம் வேறு கண்முன் தோன்றி இம்சித்துக் கொண்டிருக்க, எப்படியோ வீடு வந்து சேர்ந்தான் அவன்.