சென்னையில் அமைந்துள்ள கலைவாணர் அரங்கம். அன்று அத்தனை அலங்காரமாக காட்சியளிக்க, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் வேறு. அந்த இடத்தை சுற்றி காவலர்கள் குவிக்கப்பட்டிருக்க, அமைச்சரின் வருகைக்காக காத்திருந்தனர் அவர்கள்.
சென்னையில் நடைபெறும் மார்கழி உத்சவத்தின் ஒரு மாலை பொழுது அது. அன்றைய தினம் ஸ்ரீகன்யாவின் கச்சேரி ஏற்பாடாகி இருக்க, விழா அமைப்பாளர்களால் அமைச்சர் முக்கிய விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். கன்யாவிற்கு நிகழ்ச்சிக்கு ஒத்துக்கொண்ட பின்புதான் அவர் வருகை தெரிய வந்திருக்க, இது அடிக்கடி நடப்பதுதான் என்பதால் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை அவள்.
அன்று அலைபேசியில் அவரிடம் கத்திவிட்டு வைத்தபிறகு இன்றுதான் அவரை நேரில் பார்க்க போகிறாள் அது மட்டுமே சிறிது உறுத்தலாக இருக்க, அதற்கு நான் என்ன செய்ய முடியும் என்று மனசாட்சியை அடக்கி விட்டவள் நிகழ்ச்சிக்கு தயாராக இருந்தாள்.
அமைச்சர் வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர்தான் ஷ்யாம் தன் பாட்டி தேவகியுடன் அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தான். முதல் வரிசையில் அவனும் அவன் பாட்டியும் அடுத்தடுத்து அமர்ந்திருக்க, அவனுக்கு அடுத்ததாக சில இருக்கைகள் காலியாக இருந்தது.
அடுத்து ஆதிநாராயணன் தன் மனைவி மற்றும் மகனுடன் அந்த அரங்கிற்குள் நுழைய, ஷ்யாமை பார்த்துவிட்டவர் மரியாதை நிமித்தமாக அவனிடம் சில வார்த்தைகள் பேச அவனும் தன் பாட்டியை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தான். பாட்டி வேதவதியுடன் பேசத் தொடங்கிவிட, அவரும் பாட்டியின் கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.
ஆதிநாராயணனுக்கு ஆச்சர்யம் தான் ஷ்யாமின் செய்கைகள். பொதுவாகவே யாரிடமும் இரண்டு வார்த்தைகளுக்கு மேல் பேசிவிட மாட்டான் அவன். அதுவும் மரியாதை நிமித்தமாகவே இருக்கும். ஆனால் இன்று வீட்டின் பெரியவரை அறிமுகம் செய்வதும், தன்னோடு சரளமாக அவன் உரையாடுவதும் அவருக்கு அதிசயமாக இருக்க, யோசித்துக் கொண்டிருந்தார் அவர்.
அதே நேரம் மேடையின் திரைகள் விலக, அங்கே அடர் ஊதா நிற பட்டுப்புடவையில், அதற்கு ஏற்றவாறு முத்து வேலைப்பாடமைந்த நகைகள் அணிந்து லேசான ஒப்பனையோடு ஜொலித்துக் கொண்டிருந்தாள் ஸ்ரீகன்யா. சுற்றிலும் குழுவினர் இருக்க நடுநாயகமாக சம்மணமிட்டு அமர்ந்து கொண்டிருந்தாள் அவள்.
நிகழ்ச்சி தொடங்கி இனிதாக நடந்து கொண்டிருக்க, அடுத்த இரண்டுமணி நேரமும் அங்கிருந்த யாரையும் அசைய விடவில்லை அவளது தேன்குரல். கர்நாடக இசைக்கச்சேரி என்று எதிர்பார்ப்பில் வந்தவர்களுக்கு திரையிசையையும் சேர்த்து அவள் விருந்து படைத்திருக்க அவள் மட்டுமே பாடிக் கொண்டிருந்தாள் அந்த இரண்டு மணிநேரமும்.
இங்கு முதல் வரிசையில் அமர்ந்திருந்த விருந்தினர்களில் ஒருவருக்கு கண்கள் கண்ணீரால் நிரம்பி வழிந்தது என்றால் இன்னொருவனுக்கு காதலால் நிரம்பி வழிந்தது. இரண்டு மணிநேரங்கள் சென்றதே தெரியாமல் ஓடியிருக்க, நிகழ்ச்சியை முடித்துக் கொண்டவள் சபைக்கு நன்றி தெரிவித்துவிட்டு எழுந்து விட்டாள்.
அங்கு அமர்ந்திருந்த ஷ்யாம், ஆதிநாராயணன், வேதவதி என்று அனைவரும் கண்ணில் பட்டாலும், யாரிடமும் நின்று பேச அவளுக்கு துணிவில்லை. எனவே அமைதியாக மேடையின் பின்புறம் இருந்த அறையில் முடங்கியவள் அடுத்த சில நிமிடங்களில் மாரிக்கு அழைத்திருந்தாள். அவர் வாசலில் நிற்பதாக சொல்லவும், அங்கிருந்த மற்றொரு வழியில் அவள் வெளியில் சென்று காரில் ஏற முற்பட, அவள் கையை பிடித்திருந்தான் ஷ்யாம்.
முதலில் யாரோ என்று பயந்தவள், அங்கு ஷ்யாமை காணவும் “கையை விடுங்க ஷ்யாம். எனக்கு நேரமாச்சு நான் கிளம்பனும்” என்று கூற
“பாட்டி வந்திருக்காங்க கன்யா, உன்னை பார்க்கணும் ன்னு தான் காத்திருக்காங்க. இப்படி கிளம்பி போவியா நீ. நமக்குள்ள என்ன இருந்தாலும் அது உனக்கும் எனக்கும் இடையில தான். அவங்களை வந்து பார்த்திட்டு போ ” என்று கூற
“ஷ்யாம் ப்ளீஸ், என்னால அங்கே வர முடியாது. புரிஞ்சிக்கோங்க… நான் கிளம்புறேன்” என்று அவள் அப்போதும் மறுக்க, கோபம் வந்தது அவனுக்கு.
அவளை முறைத்தவன் “என்ன நினைக்கிற கன்யா நீ, நான் இத்தனை சொல்லியும் அடம் பண்ணுவியா நீ. யார் இருந்தா உனக்கென்ன. உனக்கு நான் முக்கியம் ன்னு தோணினா நீ இதை பண்ணமாட்ட கன்யா. நான் எப்படி போனா உனக்கு என்ன? நீ கிளம்பு.” என்றவன் அவன் கையை விட்டுவிட
ஸ்ரீகன்யா அசையவே இல்லை. அவன் கையை விட்டும் கூட “ப்ளீஸ் ஷ்யாம். புரிஞ்சிக்கோங்க” என்று அவள் அதே இடத்தில நிற்க, “நான் உன் கையை விட்டுட்டேன் கன்யா.. நீ கெளம்பு… முதல்ல நீ புரிஞ்சிக்கோ என்னை.” என்றவன் இலகுவதாகவே இல்லை.
அவன் அப்படியே நிற்கவும் அவள்தான் இறங்கிவர வேண்டி இருந்தது. மாரியை திரும்பி பார்த்தவள் ஏதோ சொல்ல முற்பட, இருவரின் நிலையும் ஏதோ உணர்த்தியது போல அவருக்கு. “நீங்க போயிட்டு வாங்க பாப்பா. நான் இங்கேயே இருக்கேன்” என்று அவர் கூறிவிட
ஷ்யாமை நெருங்கியவள் “வாங்க” என்றுவிட்டு நடக்க ஆரம்பிக்க, நிச்சயம் கிளம்பிவிடுவாள் என்று நினைத்திருந்தவனுக்கு அதிசயமாக இருந்தது அவள் செய்கை. நிச்சயம் இது அவனுக்காக மட்டுமே என்று மனம் எடுத்துரைக்க, மாரியிடம் திரும்பியவன் “நீங்க கிளம்புங்க மாரிண்ணா. உங்க பாப்பாவை நான் பத்திரமா கொண்டு வந்து உங்க வீட்ல விடறேன்” என்று கூறினான்.
மாரி ஆட்சேபனையாக பார்க்க “என்கூட பாட்டி இருக்காங்க மாரிண்ணா. நான் பார்த்துக்கறேன் அவளை. நீங்க கிளம்புங்க” என்று கூறியும் அவர் கன்யாவை பார்க்க, அவளோ மறுப்பாக ஷ்யாமை பார்த்தாள். அவன் கண்டுகொள்ளாமல் போக ‘அவர் இருக்கட்டும் ஷ்யாம். வாங்க ” என்றுவிட்டவள் முன்னால் நடந்துவிட்டாள்.
ஆனால் உள்ளுக்குள் ஏதோ முரண்டியது. அன்று அவன் அன்னை நடந்துகொண்டது நினைவில் வர, ”அவரே புரிந்து கொள்ளவில்லை. இவரோ அவரைவிட ஒரு தலைமுறை மூத்தவர்.இவனோடு இந்த நேரத்தில் காரில் வந்தால் இவர் என்ன நினைப்பார் என்று யோசிக்க மாட்டானா ?” என்று கோபமாக வந்தது அவளுக்கு.
அந்த கோபத்தில் பின்னால் வந்தவனை கண்டுகொள்ளாமல் அவள் நடக்க, அவள் கையை மீண்டும் பற்றிக்கொண்டான் அவன். அவள் விலக நினைக்கையில் அத்தனை அழுத்தமாக இருந்தது பிடி. அவனை நிமிர்ந்து பார்க்க “தேங்க்ஸ்…” என்று அவள் விரல்களில் அவன் முத்தமிட, பதட்டத்துடன் சுற்றிலும் பார்த்தாள் அவள்.
பிரத்யேக வாயில் என்பதால் அங்கே கூட்டம் ஏதுமில்லை. இருந்த ஓரிருவரும் ஏதோ வேலையாகி இருக்க இவர்களை கண்டுகொள்ளவில்லை. இவள் பார்வையை உணர்ந்தவன் “யாரும் பார்த்தா என் பொண்டாட்டி ன்னு சொல்லிடுவேன். கவலைப்படாத வா ” என்றவன் அவள் கைகளை விடாமல் அழைத்து சென்று விட்டான்.
பெரியவர்கள் அருகில் வந்ததும் அவள் கையை அவன் விட்டுவிட, அங்கே அவள் எதிர்பார்த்தது போலவே அமைச்சரும் அவர் குடும்பமும் அமர்ந்திருந்தனர், ஷ்யாமின் பாட்டியுடன்.
என்னதான் அவர்கள் யாருமில்லை தனக்கு என்று சொல்லிக் கொண்டாலும், அவர்கள் முன்னால் ஷ்யாமுடன் இப்படி வருவது ஏனோ தவறாகவே பட்டது அவளுக்கு. வேதவதி ஏதும் கேட்பாரோ என்று அவள் அவரை பார்க்க, அவரும் மகளின் முகத்தை தான் கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தார்.
ஒரு தாயாக மகளின் தடுமாற்றம் லேசாக புரிந்தது அவருக்கு. தீரஜ்ஜை அவள் மறுத்ததிற்கான காரணம் இவன்தானோ என்று அவர் மனம் கணக்குப்போட, மகள் அருகில் வரவும் மற்றவை மறந்து அவளை அருகில் அழைத்து அமர்த்திக் கொண்டார். ஷ்யாமின் பாட்டி அருகில் இருக்க அவர்கள் முன்னால் அவளை தனித்து நிறுத்த அவருக்கு விருப்பமில்லை.
தன் மகள் என்றே அவர் தேவகியிடம் ஸ்ரீகன்யாவை அறிமுகம் செய்ய ஷ்யாம் ஆச்சர்யமாக அவரை பார்த்தான். அவர்கள் குடும்பத்தின் உள்விஷயங்களை அறிந்திருந்த தேவகிக்கும் வேதவதியின் வார்த்தைகள் ஆச்சர்யம் தான்.
ஆனால் நொடியில் ஆச்சர்யத்தை தனக்குள் மறைத்துக் கொண்டவர் கன்யாவிடம் “நல்லா பாடினம்மா. கடவுளே இறங்கி வந்திருப்பாரு உன் கீர்த்தனைக்கு.” என்று மனதார பாராட்ட, புன்னகைத்தாள் அவள்.
மேலும் அவர் “ஸ்கூல் நடத்திட்டு இருக்க ன்னு என் பேரன் சொன்னான். ஆனா நீ பேசவே யோசிக்கிறியே. பிள்ளைகளை எப்படி சமாளிப்ப ” என்று கேட்க
“ஸ்கூல் நான் நடத்தல பாட்டிம்மா. அது என் அம்மாவோடது, இப்போதைக்கு நான் பார்த்துக்கறேன் அவ்ளோதான்.” என்றுவிட
” ம்ம்ம்… நல்லதுமா.” என்றவர் மேலும் சிறிது நேரம் கன்யாவுடன் பேசிக் கொண்டிருந்தார். பத்மினி அன்பாக பேசினார் என்றால் இவர் குரலில் ஒரு கம்பீரம் இருந்தது. தானாகவே ஸ்ரீகன்யா அவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கொடுத்துக் கொண்டிருக்க இருவரையும் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் ஷ்யாம்.
ஆதிநாராயணனுக்கு எதுவோ புரிவதை போலிருக்க, அமைதியாக அமர்ந்துவிட்டார் அவர். ஸ்ரீதருக்கு தான் அங்கு நடப்பவற்றை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அவன் அம்மா வேறு கன்யாவை மகள் என்று கூறியிருக்க அதுவேறு அவன் கோபத்தை அதிகரித்து இருந்தது.
மேலும் ஷ்யாமையும் அவனுக்கு பல்லவியின் அண்ணனாக தெரிந்திருக்க, ஏனோ இந்த ஷ்யாம்- கன்யாவின் நெருக்கம் அவனுக்கு பிடிக்கவே இல்லை. தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தான் அவன்.
சிறிது நேரம் பேசி முடிக்கவும் கன்யா தேவகியிடம் “நான் கிளம்புறேன் பாட்டி, மாரிண்ணா வெயிட் பண்ணிட்டு இருக்காரு” என்று கூற
தேவகி ” இந்த நேரத்துல நீ எப்படி தனியா போவ. இரு நானே உன்னை வீட்ல விட்டுட்டு போறேன்.” என்று கூறிவிட, ஸ்ரீகன்யா உடனடியாக வேதவதியை தான் பார்த்தாள். எத்தனைமுறை இப்படி அவர் அழைத்திருப்பார். இன்றுவரை இசைந்ததில்லை அவள்.
அப்படியிருக்க இன்று தேவகி கேட்கவும் “இல்ல பாட்டி.. மாரிண்ணா பார்த்துப்பாங்க நான் அவங்களோடவே கிளம்புறேனே.” என்றவள் ஷ்யாமை பார்க்க, அவன் எதுவுமே பேசவில்லை.
தேவகி மீண்டும் “அவர் கார்ல பின்னாடி வரட்டும்டா. நன் உன்கூட துணைக்கு வரேன். ஏன் ஒருநாள் என்கூட வரமாட்டியா” என்று அந்த பெரியவர் கேட்க, மறுக்க மனமில்லை அவளுக்கு. ஆனாலும் வேதாவின் முகத்தை பார்க்க, அந்த நொடி பெருமைதான் வேதாவிற்கு.
“அவ வருவா அம்மா. நீங்களே கூட்டிட்டு போங்க” என்றவர் “நான் மாரியை கிளம்ப சொல்றேன்” என்று ஸ்ரீகன்யாவிடமும் கூறிவிட, ஏனோ தன்னை சுற்றிலும் ஏதோ தளைகள் கட்டப்படுவதை போல ஒரு எண்ணம் கன்யாவிற்கு.
அவள் அமைதியாகிவிட, நேரம் ஆவதை உணர்ந்து அனைவரும் எழுந்துகொள்ள தேவகி அனைவரிடமும் சொல்லிக்கொள்ளவும், கன்யா வேதாவை பார்த்து தலையசைத்தவள் வேறு யாரையும் பார்க்கவில்லை. ஷ்யாம் ஆதிநாராயணனிடம் சொல்லிக்கொண்டு கிளம்ப இவர்கள் மூவரும் கிளம்பும்வரை ஒரு வார்த்தை கூட அவள் ஆதிநாராயணனிடம் பேசியிருக்கவில்லை என்பதை தேவகியின் மனம் குறித்துக் கொண்டது.
இவர்கள் மூவரும் கிளம்பும்வரை ஆதிநாராயணன் அவர்களை பார்த்துக் கொண்டே நிற்க, அவர்கள் கிளம்பியதும் தன் பாதுகாப்பு வாகனங்களுடன் கிளம்பினார். தான் தகப்பன் என்று இருந்தும் பெண் மற்றவரோடு செல்வது உறுத்திக் கொண்டிருந்தது அவரை.
எப்போதும் போல் போலவே தான் ஒரு நல்ல கணவனும் இல்லை, நல்ல தந்தையுமில்லை என்ற எண்ணம் அவரை ஆட்டி வைக்க, மனது ஒருநிலையில் இல்லை. காரிலும் கூட மௌனமாகவே வந்தவர் நேராக சென்று தன் அலுவலக அறையில் முடங்கிவிட்டார்.
அவரை புரிந்தவராக வேதவதி அவரை தனித்துவிட, ஸ்ரீதருக்கு அத்தனை ஆத்திரம் வந்தது ஸ்ரீகன்யாவின் செயலில். ஏன் இவள் காரில் செல்லவேண்டியது தானே ? என்று அவள் செய்யாத குற்றத்திற்கு அவளை திட்டிக் கொண்டிருந்தான் அவன்.
அன்றொரு நாள் அவள் தந்தையின் எண்ணில் கதறியதை கேட்டபோது அவனுக்கும் லேசான உறுத்தல் தான். ஏன் அவள் மீது ஒரு நல்லெண்ணம் கூட வந்தது. ஆனால் அதற்காகவெல்லாம் அவளை ஏற்றுக் கொள்ளவே முடியாது என்று நினைத்துக் கொண்டவனுக்கு தன் அன்னையின் முகம் நினைவு வர தன் மனதை இறுக்கிக் கொண்டான்.
ஆனால் இன்று ஷ்யாமுடன் அவளை பார்த்த கணம் அனுவின் முகம் தான் நினைவு வந்தது அவனுக்கு. ஏனோ தான் பெண்ணெடுக்கும் அதே வீட்டில் கன்யா வாழ்வதை அவன் மனம் விரும்பவே இல்லை. அவள் உறவே வேண்டாம் என்று நினைப்பவனை கடவுள் காலம் முழுவதும் அவனோடு பிணைக்க நினைத்தால் என்ன தான் செய்வான் அவன்.??
இந்த வலியை காலம் முழுவதும் சுமக்க முடியாது என்று முடிவு செய்தவன் அனுவிடம் பேச வேண்டும் என்று தனக்குள்ளாகவே முடிவு செய்து கொண்டான். என்னால் இது முடியாது என்பதில் அவன்வரை அவன் தெளிவாக இருக்க அவன் அனு என்ன செய்ய காத்திருக்கிறாளோ??
இங்கு ஷ்யாமுடன் வந்து கன்யாவை அவள் வீட்டில் இறக்கிவிட்டு மேலும் சில வார்த்தைகள் பேசிவிட்டே கிளம்பினார் தேவகி. ஷ்யாம் கிளம்பும்போது அவளிடம் “நைட் தூங்கிடாத” என்றுவிட்டு கிளம்பி செல்ல, இரவு அழைப்பான் என்று புரிந்தது அவளுக்கு.
அவள் நினைத்தது சரியே என்பதுபோல் அவள் சாப்பிட்டு முடித்து படுக்கையில் விழும் நேரம் அழைத்திருந்தான் அவன். அவள் அழைப்பை எடுக்கவும் “கன்யா ” என்று காதலாகவே அவன் அழைக்க, அவளும் வழக்கம் போல் “ம்ம்ம் ” என்றே பதில் கொடுத்திருந்தாள்.
“இந்த ம்ம்ம் சொல்றதை எப்போ நிறுத்த போற கன்யா” என்று அவன் கேட்க
“வேற என்ன பேசுறது”
“என்ன வேணும்னாலும் பேசலாம். உனக்கு முழு உரிமையும் இருக்கு.” என்று அவன் சட்டென்று கூற
“உங்களுக்கு எல்லாமே ஈஸியா இருக்கு ஷ்யாம்… ஆனா அப்படி இல்ல” என்று அவளும் சொல்லிவிட
“என்ன உன் கைய பிடிச்சதா? இல்ல கிஸ் பண்ணதா? எதுவுமே ஈஸி இல்ல. இந்த கன்யா எப்போ கன்னம் பழுக்க ரெண்டு கொடுக்க போறாளோ ன்னு பயத்தோட தான் செஞ்சேன்”
” நீங்க பேச்சை மாத்தறீங்க ஷ்யாம். உங்களுக்கு தெரியும் நான் என்ன சொல்றேன் ன்னு” என்று அவள் விடாமல் கேட்க
“வேணும் ன்னு தான் பண்ணேன் கன்யா. உன் அப்பாவுக்கு நம்ம விஷயம் தெரியணும் ன்னு நெனச்சேன். அப்போதான் மாப்பிள்ளை ன்னு எவனையும் கொண்டு வந்து நிறுத்தாம இருப்பாரு. நாந்தான் மாப்பிள்ளை ன்னு அவரும் தெரிஞ்சிக்கணும் இல்லையா” என்று கேட்க
சிரிப்பு வந்துவிட்டது அவளுக்கு.”நான் இன்னும் உங்களுக்கு ஓகே சொல்லவே இல்ல. அதுக்குள்ள நீங்க அவருக்கு மாப்பிள்ளையாக போறிங்களா…. குட் ஜோக்..”
“கண்டிப்பா ஜோக்தானா கன்யா… உனக்கு அப்படி தோணுதா” என்று அவன் கேட்கவும் சட்டென மௌனமாகிவிட்டாள் அவள். அந்த மௌனம் அவனுக்கான பதிலை கொடுத்துவிட சத்தமாக சிரித்தவன் “நீ எதுவுமே சொல்ல வேண்டாம்… அமைதியா இரு போதும்…நான் எனக்கு பிடிச்ச பதிலா எழுதிக்கறேன்..ஓகே” என்று அவன் கூறி சிரிக்க
“நம்பிக்கை தான் ஆனா என்மேல இல்ல என் குட்டிப்பொண்ணுமேல. ஒருத்தன் பார்வை சரி இல்லாம போனாலே அவனை விட்டு விலகி நிற்கிற என் குட்டிப்பொண்ணு, என்கிட்டே மட்டும் ஒட்டிக்கிறாளே அந்த நம்பிக்கைதான். நான் கைய பிடிச்சதும் என் பூனைக்குட்டி அமைதியா என்னோட நடந்து வராளே….
உன்னால வேற யாரையும் என் இடத்துல நிறுத்த முடியாது கன்யா. உனக்கு எப்போ தோணுதோ அப்போ ஒத்துக்கோ. நான் அதுக்குள்ள நம்ம கல்யாணத்துக்கான எல்லா வேலையும் முடிச்சிடறேன்” என்று இலகுவாக கூறியவன் போனிலேயே முத்தமிட, லேசாக உடல் சிலிர்த்தது அவளுக்கு.
பின் அவனே “டைம் ஆச்சு கன்யா.. தூங்கு. மார்னிங் கூப்பிடறேன்… குட்நைட்” என்று விட்டு அழைப்பை துண்டித்தான். அவன் வார்த்தைகளில் புன்னகை தான் கன்யாவிடம். இதுவரை அவள் பெரிதாக நினைத்திருந்த அனைத்தும் அவன் வார்த்தைகளில் அத்தனை இலகுவாக தோன்றியது. “நடந்துவிடுமோ ??” என்று சிறிய நப்பாசை ஒரு ஓரம் எட்டிப்பார்க்க, “நிச்சயம் நடத்திவிடுவான் அவன்” என்ற நம்பிக்கையும் அங்கே ஒருங்கே துளிர்த்தது.