அன்று இரவு கன்யாவிடம் யோசிக்க சொல்லி போனை வைத்தவன் தான் ஷ்யாம். அதன் பின் அவளை எந்த வகையிலும் நெருங்கவே இல்லை அவன். ஐந்து நாட்கள் ஓடியிருக்க தனது அன்றாட வேளைகளில் பிசியாகி விட்டான் அவன்.
அரசாங்க ஒப்பந்தம் ஒன்றில் அவன் பிசியாகி இருக்க, எதைப்பற்றியும் யோசிக்க முடியாமல் அவனை வைத்து செய்துக் கொண்டிருந்தது அவன் ஏற்றுக் கொண்ட வேலை.
அதன் பின்னால் அவன் ஓடிக் கொண்டிருக்க, இங்கு அவன் யோசிக்க சொன்னவளோ அன்று இரவு முழுவதும் பால்கனியில் தூங்காமல் கழித்தது தான் மிச்சம். அவன் ஷ்யாம் வேண்டுமா என்று யோசிக்க சொல்ல அவளோ ” நான் ஏன் இவனை மறுக்கவே இல்லை” என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.
அவன் அன்று திருமணத்திற்கு கேட்ட அன்று கூட, “திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் இல்லை, ஒத்துவராதது” என்றெல்லாம் கூறினாளே தவிர அவனை பிடிக்கவில்லை என்று அவள் கூறியிருக்கவில்லை. இப்போது அமைதியாக அவளுக்கு அவளே அவளை அலசி கொண்டிருக்க, தெளிவாக கையில் கிடைத்துவிட்டது காரணம்.
ஆனால், பாவம் ஒப்புக்கொள்ளத்தான் மனது இல்லை அவளுக்கு. ஆம் அவனை பிடித்திருக்கிறது என்ற முடிவிற்கு அந்த பின்னிரவு நேரத்திலேயே வந்திருந்தாள் அவள். ஆனால் ஏனோ அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை அவளால்.
அன்று மாலை கோவிலில் பார்த்த பத்மினியின் நினைவு வேறு வந்து இம்சிக்க, தன்னால் இதையெல்லாம் சகித்துக் கொள்ள முடியாது. அன்று அத்தனை அன்பாக பேசிய பெண்மணி இன்று மகன் என்று வரவும் மாறிவிட்டார். அவர் அப்படி நடந்துகொள்ள வேறு எந்த காரணமும் இருப்பதாக அவளால் நினைக்க முடியவில்லை.
இன்று ஒருநாளுக்கே அவரின் அலட்சியத்தை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அப்படி இருக்க வாழ்நாள் முழுவதும் என்று சிந்தித்தவளுக்கு, தலை சுற்றியது. “என்னால முடியாது ஷ்யாம்” என்று வாய்விட்டே சொல்லிக் கொண்டவள் அதற்குமேல் அவனை பற்றி சிந்திக்க தயாராக இல்லை.
எழுந்து தன் அறைக்குள் வந்தவள் கண்களை மூடி கட்டிலில் விழா மூடிய கண்களுக்குள் வந்து நின்றது ஷ்யாமின் சிரித்த முகம். அவன் அன்று நெற்றியில் முத்தமிட்டதும் நினைவு வர, தன் நெற்றிப்பொட்டை மென்மையாக வருடி வீட்டுக் கொண்டவள் அவன் நினைவுகளோடே தூங்கி விட்டாள்.
ஆனால் எந்த நொடி அவனை சிந்திக்கக்கூடாது என்று அவள் முடிவெடுத்தாளோ அந்த நொடி முதல் அவள் மனதில் விஸ்வரூபம் எடுக்க தொடங்கி இருந்தது அவன் நினைவுகள். தன்னையும் அறையாமல் அவள் அவனை பற்றிய நினைவுகளில் அடிக்கடி மூழ்கிப்போக ஆரம்பித்திருந்தாள். ஆனால் இது நடக்காது என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டவள் தன் மனதை யாரிடமும் ஏன் சம்பந்தப்பட்டவனிடம் கூட சொல்லிவிட தயாராக இல்லை.
என்னவவோ நடக்கட்டும் என்று முடிவெடுத்து விட்டாலும், அப்படி எளிதாக அவன் விட்டுவிட மாட்டான் என்றும் தோன்ற, என்ன செய்வான் என்று சிறு ஆவலும் இருந்தது மனதின் ஓரம். பார்க்கலாம் என்று விட்டுவிட்டவள் வாழ்க்கையின் ஓட்டத்தில் ஓட துவங்கி இருந்தாள். தன் இசைப்பள்ளி, ஒத்துக் கொண்ட கச்சேரிகள் என்று அவள் ஓட ஆரம்பித்திருந்தாள்.
மொத்தத்தில் இருவருமே அடுத்தவர் என்ன சொல்வார்? என்ன செய்வார் என்று யோசித்து நிற்க, நாட்கள் யாருக்கும் நிற்காமல் ஓட தொடங்கி இருந்தது.
மேலும் இரண்டு மூன்று நாட்கள் ஓடி இருக்க, அன்று காலை உணவுக்காக கீழே இறங்கி வந்திருந்தான் ஷ்யாம். அன்று ஞாயிற்று கிழமையாக இருக்க சற்றே தாமதமாக கிளம்பி இருந்தான் அவன். அவன் உணவு மேசையில் அமர பத்மினி அவனுக்கு உணவை வைத்தவர் அவன் முகத்தையே அவ்வபோது பார்த்துக் கொண்டிருக்க அவன் பாட்டி ஹாலில் இருந்த சோஃபாவில் அமர்ந்திருந்தார்.
தன் அன்னை ஏதோ சொல்ல தயங்குவதை உணர்ந்தவன் ” என்னம்மா, என்ன விஷயம்? என்ன சொல்லணும்?” என்று கேட்க, பத்மினி மகனிடம் “தரகரை வர சொல்லி இருக்கேன் ஷ்யாம்.” என்றுமட்டும் சொல்ல, ஷ்யாம் கேள்வியாக அன்னையை பார்த்தவன் ” எதுக்கு” என்று ஒற்றைவார்த்தையாக கேட்க
” தரகரை எதுக்கு வர சொல்லுவேன் ஷ்யாம், உனக்கும் வயசாகிட்டே போகுது. கல்யாணத்தை பண்ணிட்டு அப்புறம் என்னவோ பண்ணு. எப்போ கேட்டாலும் ஏதாவது சொல்லி என் வாயை அடைச்சிடற. அப்பாவோட பிரெண்ட் மகளையும் வேண்டாம்ன்னு சொல்லிட்டோம். அப்புறம் என்ன பண்ணட்டும் ஷ்யாம்.”
” இந்த வருஷத்தோட உனக்கு குருதிசை முடியுது, அதுக்குள்ள உனக்கு கல்யாணம் பண்றது ன்னு நான் முடிவு பண்ணிட்டேன். அதுக்குதான் தரகர் வராரு” என்று அவர் வேகமாக கூறி முடிக்க
“என்னவோ பண்ணிக்கோங்க ” என்று பார்த்து வைத்தவன் எதுவுமே பேசாமல் எழுந்து சென்றுவிட்டான். அவன் அன்னை வைத்ததில் பாதிக்கூட உண்டிருக்கவில்லை அவன். அவன் அன்னை அவனை கூப்பிட கூப்பிட நிற்காமல் சென்றுவிட்டான். அத்தனை கோபத்தையும் தன் வண்டியில் காட்டியவன் அத்தனை வேகமாக அலுவலகத்தை அடைந்திருந்தான்.
“நிச்சயம் இது தந்தையின் பாடம்தான் அன்னைக்கு” என்று புரிந்தே இருந்தது அவனுக்கு. பெண் பார்க்கிறார்களாம் யாருக்கு? என்று நினைத்துக் கொண்டவன் ” முதல்ல யார் பார்க்கப்போறா” என்று சொல்லிக் கொண்டான். தன்னைப்பற்றி நன்கு தெரிந்தும் கூட தன் தந்தை இவ்வாறு நடந்து கொள்வது அவனுக்கு எரிச்சலை கொடுக்க, கொதிநிலையில் தான் இருந்தான் அன்று முழுவதும்.
அந்த நாள் அப்படியே கழிய, நிச்சயம் காலையில் தான் உண்ணாமல் வந்ததற்கு இன்னும் ஒரு மாதத்திற்காவது இதைப்பற்றி அன்னை பேசமாட்டார் என்று அவன் யோசித்திருக்க, அன்று மாலையே அவன் வீட்டிற்கு வந்ததும் மணப்பெண்ணின் புகைப்படம் என்று ஒரு போட்டோவை அவன் கையில் திணித்தார் அவன் அன்னை.
அந்த நொடி வெடித்துவிட்டான் அவன்.” ம்மா, என்ன நினைச்சிட்டு இருக்கீங்க நீங்க. நான் நீங்க சொல்றதைக் கேட்டு இந்த பொண்ணை கட்டிக்குவேன்னு எதிர்பார்க்கிறிங்களா. இந்நேரம் உங்க வீட்டுக்காரர் எல்லா விஷயத்தையும் உங்ககிட்ட சொல்லி இருப்பாரு ன்னு எனக்கு தெரியும்மா. நான் மட்டும் ஏன் தெரியாதமாதிரி நடிக்கணும். நானும் சொல்லிடறேன், என் விஷயம் இல்லையா?? எனக்கு கன்யாவை பிடிச்சிருக்குமா.
” கல்யாணம் ன்னு ஒன்னு பண்ணிணா அது அவளோடதான். உங்களால முடிஞ்சா பண்ணி வைங்க. இல்ல என்னை இப்படியே இருக்க விடுங்க. இந்த பொண்ணு போட்டோ, தரகர் இதெல்லாம் பேசி என்னை டென்சன் பண்ணாதீங்க. புரியுதா,”
“உங்களை மீறி எப்பவும், எதுவும் செய்யமாட்டேன் நான். அந்த வகையில நீங்க என்னை நம்பலாம். ஆனா நீங்க சொல்ற எல்லாத்தையும் செய்வேன்னும் எதிர்பார்க்காதிங்க. உங்களுக்கு என்னைப்பத்தி நல்லாவே தெரியும்மா.” என்றவன் கையிலிருந்த புகைப்படத்தை அந்த டீப்பாயின் மீது போட்டுவிட்டு தன்னறைக்கு செல்ல பார்க்க, “ஷ்யாம்” என்று அவனை சத்தமாக அழைத்திருந்தார் அவனின் பாட்டி.
அவர் குரலை மீற முடியாமல் அவன் அறைக்குள் நுழைய கட்டிலில் அமர்ந்துகொண்டிருந்தார் அவர். ஷ்யாம் சென்று அவர் அருகில் அமர்ந்தவன் அவர் மடியில் தலைவைத்து படுத்துக்க கொள்ள “என்ன பேசிட்டு இருந்த உன் அம்மாகிட்ட.” என்று மெதுவாக அவர் கேட்க
தன் பாட்டியின் மீது இருந்த நம்பிக்கையில் கன்யாவை முதல்முறை பார்த்ததுமுதல், இப்போது வெளியில் அம்மாவிடம் சத்தம் போட்டது வரை பள்ளிகுழந்தையாக அவரிடம் ஒப்பித்து விட்டவன் அவர் முகம் பார்க்க, தேவகி அவன் தலையை வாஞ்சையாக கோதிவிட்டவர்
“இன்னும் அவ ஒத்துக்கவே இல்லை, எந்த நம்பிக்கையில உன் அம்மா கிட்ட சத்தம் போட்டுட்டு இருக்க, ஒருவேளை அவ முடியவே முடியாது ன்னு சொல்லிட்டா என்ன பண்ணுவ ஷ்யாம்” என்று கேட்க
” அவ கண்டிப்பா முடியாது ன்னு சொல்லமாட்டா பாட்டி. எனக்கு தெரியும்.” என்று உறுதியாக கூற “நான் பார்க்கணுமே உன் கன்யாவை ” என்று கேட்டுவிட்டார் தேவகி. எழுந்து அமர்ந்தவன் “என்கூட வாங்க, கூட்டிட்டு போறேன்” என்றுவிட்டு வருவாரா என்பதுபோல் பார்க்க, அவன் முகத்திலிருந்த ஆர்வத்தை பார்த்த தேவகி “நேர்ல நாளைக்கு பார்ப்போம். இப்போ அவ படம் இருந்தா காட்டு” என்று கேட்க அவன் மொபைலிலிருந்த அவள் புகைப்படத்தை அவரிடம் நீட்டினான் அவன்.
அது அந்த விழாமேடையில் எடுத்திருந்த நிழற்படம். ஏனோ தேவகிக்கு பார்த்தக்கணமே கன்யாவை பிடித்துவிட, அவள் குடும்பத்தை பற்றி பேரன் சொல்லி இருந்த விஷயங்கள் பின்னுக்கு போனது. அவர் அனுபவத்திற்கு பார்த்த ஒரே பார்வையில் கணித்து விட்டார் கன்யாவை.
பேரனின் ஆர்வமும், அவள் இயல்பான முகமும் தேவகிக்கு பல கதைகள் சொல்லியது. இப்போதும் அவள் ஒத்துக் கொள்ளவில்லை என்றதும், அதற்காக அவள் கூறிய காரணங்களும் அவள் மீது தானாகவே பாசம் சுரந்தது அந்த பெரிய மனுஷிக்கு.
என்ன இப்போ அவ குடும்பத்தையா கட்டிக்க போறான்? அவளைத்தானே கட்டிக்க போறான். தாலி கட்டி இந்த வீட்டுக்கு வந்துட்டா அவ என் மருமகளா ஆகிட்டு போறா. என் குடும்பம்தானே அவ குடும்பமும். இதுல அவ யார் மகளா இருந்தா நமக்கு என்ன? என்று யோசித்தவருக்கு பேரனின் கண்களில் தெரிந்த கனவுதான் பிரதானமாக இருந்தது.
பொறுப்பான பிள்ளை அவன். இதுவரை யாரும் ஒரு சொல் அவனை கைநீட்டி சொல்லும்படி வைத்துக் கொண்டதே இல்லை ஷ்யாம். தனக்காக பார்ப்பதை விட குடும்பத்திற்காக அதிகம் யோசிப்பவன். அப்படிப்பட்டவன் இந்த பெண்தான் வேண்டும் என்று பிடிவாதமாக நிற்கிறான் என்றால் அதிலேயே அவன் மனம் புரிய வேண்டாமா ??
அவன் மனதை விடவா மற்றதெல்லாம் முக்கியம் ? என்று அவரின் மனம் பேரனுக்கு சாதகமான காரணங்களை அடுக்கி கொண்டிருக்க, தனக்குள் யோசனையில் மூழ்கி இருந்தவர் குனிந்து பேரனின் முகத்தை பார்க்க, அத்தனை ஆர்வமாக அவரை பார்த்துக் கொண்டிருந்தான் ஷ்யாம். அவனை ஏமாற்ற விரும்பாமல் ” நான் உன் கன்யாவை பார்த்து பேசணும். கூட்டிட்டு போ, அதுக்குப்பிறகு உன் அப்பன்கிட்ட பேசி பார்ப்போம்.” என்று அவர் கூறிவிட
அவர் கன்னங்களை பிடித்து கொஞ்சியவன் “தேங்க் யூ பாட்டி” என்று அவர் கன்னத்தில் முத்தமிட, “உன் அப்பனை நம்ப முடியாது கண்ணா, எதுக்கும் தயாராவே இரு. நான் அவன்கிட்ட பேசுவேன் கண்டிப்பா, ஆனா ஒருசில விஷயங்கள்ல அவன் யார் பேச்சையும் கேட்கமாட்டான். அதையும் யோசிக்கணும்.”
“பார்ப்போம். ஆனா அதுக்கெல்லாம் மொதல்ல இவளை உன் வழிக்கு கொண்டு வரணும். அப்போதான் நீ மத்தவங்களை சமாளிக்க முடியும்.அதை நியாபகத்துல வச்சுக்கோ ” என்று அவர் கூறி முடிக்க, ஆமோதிப்பாக தலையசைத்தான் அவன்.
அவனை புன்னகையோடு பார்த்தவர் “போய் குளிச்சிட்டு சாப்பிடு. முகமே வாடி போயிருக்கு பாரு” என்று அவர் கூற, தலையசைத்தவன் எழுந்து கொண்டான். அவன் அறைக்கே உணவை அனுப்பி விடுமாறு வேலையாளிடம் கூறிவிட்டவன் தன்னறைக்கு சென்றுவிட, அங்கு சோஃபாவில் அமர்ந்திருந்த அன்னையை அவன் கண்டுகொள்ளவே இல்லை..
இவன் நிலை இப்படி இருக்க, இவனின் காதலியோ தன் எதிரில் அமர்ந்திருந்த தீரஜ்ஜை முறைத்துக் கொண்டிருந்தாள் அங்கே. அவன் கன்யாவை தேடி இசைப்பள்ளிக்கே வந்துவிட்டிருக்க எரிச்சல் தான் அவளுக்கு. அதுவும் அவள் வகுப்பில் இருக்கும் நேரம் வந்திருந்தவன் அவளையே பார்ப்பதுபோல் வாசலில் நின்றுவிட்டிருக்க, அவனின் அந்த பார்வையை சகித்துக் கொள்ளவே முடியவில்லை அவளால்.
அவனை துரத்திவிடும் எண்ணத்தில் தான் அவள் எழுந்து வந்தது. ஆனால் அவன் அவளிடம் பேச வேண்டும் என்று நிற்க, அங்கு நின்று அனைவரின் பார்வைக்கும் விருந்தாக விரும்பாமல் தன் அறையை நோக்கி நடந்துவிட்டாள். அவளை தொடர்ந்து வந்தவன் அவளுக்கு முன்னால் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்தான்.
அவனாக பேசுவான் என்று சில நொடிகள் காத்திருந்தவள் அவன் பேசாமல் போகவும் “என்ன விஷயம் தீரஜ். நீங்க சொல்லிட்டு கெளம்புனீங்க ன்னா நானும் வீட்டுக்கு கெளம்புவேன்” என்று வெளிப்படையாகவே கூறிவிட
அவனோ அதை உணராதவனாக “நம்ம வீட்ல நமக்கு கல்யாணம் பேசி இருக்காங்க கன்யா. நான் உன்னை மீட் பண்ண வந்திருக்கேன். இனி என்ன பேசணும் ன்னு நீதான் சொல்லணும்” என்று கூறிவிட
அவளுக்கு பேரதிர்ச்சிதான் அவன் கூறியதில். எத்தனை திமிராக என்னிடமே கூறுவான் என்று கனன்றவள் “எனக்கு வீடுன்னு ஒண்ணே முதல்ல கிடையாது, அப்புறம் எப்படி வீட்ல கல்யாணம் பேசுவாங்க. அப்படியே அவங்க பேசினாலும் எனக்கு உங்களை பிடிக்கல, போதுமா.
“இனிமே இங்க வராதீங்க” என்று அவள் அழுத்தம்திருத்தமாக கூறிவிட
“ஹ்ம்ம்.. உன் அப்பா மேல உனக்கு இருக்க கோபம் நியாயமானது.ஆனா அவர் செய்றது எல்லாமே தப்பா இருக்கனும்ன்னு இல்லையே. உனக்கு என்னைமாதிரி ஒருத்தனை கல்யாணம் பண்ணி வச்சா உன் அம்மாவோட விஷயங்கள் மறைஞ்சி போய்டும் கன்யா. நீ என்னோட வைப் ன்னு தான் இந்த சொசைட்டி உன்னை பார்க்கும்” என்று அவள் மனநிலையை அறியாமல் அவன் பேசிக்கொண்டிருக்க கன்யாவிற்கு வந்ததே கோபம்.
” எழுந்து வெளியே போங்க முதல்ல. யார் நீங்க? நான் ஏன் என் அம்மாவோட அடையாளத்தை மறைக்கணும். என்ன பண்ணிட்டாங்க அவங்க. முதல்ல உனக்கு என்ன எனக்கு வாழ்க்கை கொடுக்கறதா நினைப்பா? என் அம்மாவை பத்தி பேச உனக்கெல்லாம் தகுதியே கிடையாது. வெளியே போ” என்று கத்தி இருந்தாள்.
அவன் நகராமல் மீண்டும் ” என்ன சொன்ன? வெளியே போகணுமா. என்னையே வெளியே போக சொல்வியா நீ ” என்று அவன் எகிற, தன் கையிலிருந்த மொபைலில் மாரியை அவள் அழைத்துவிட,அடுத்த நிமிடம் உள்ளே வந்துவிட்டார் அவர். “சாருக்கு வெளியே போகணுமாம். அனுப்பி விடுங்க” என்றுவிட்டவள் அவனை கண்டுகொள்ளாமல் தன் தந்தையின் தனிப்பட்டஎண்ணுக்கு அழைத்தாள். மாரி அவனை இழுத்துக்கொண்டு வெளியே சென்றுவிட்டார் இதற்குள்.
அவர் அந்தப்புரம் அழைப்பை எடுக்கவும் “என்ன நினைச்சிட்டு இருக்கீங்க நீங்க, உங்களை யார் எனக்கு மாப்பிளை பார்க்க சொன்னது. மொதல்ல நீங்க யார் எனக்கு ? நான் கேட்டேனா உங்களை? உங்களால கண்டவன் எல்லாம் என் அம்மாவை பத்தி பேசுறான். இவன் இனி ஒரு வார்த்தை என் அம்மாவை பத்தி பேசினான், அவனை கொலையே பண்ணிடுவேன்.”
“தயவு செஞ்சு இனி என் வாழ்க்கையில தலையிடாதிங்க, எனக்கு நீங்க வேண்டவே வேண்டாம்” என்றவள் கதறி அழ, எதிர்முனையில் ஸ்தம்பித்து நின்றிருந்தான் ஸ்ரீதர்.