புதிய உதயம் -3
அத்தியாயம் -3(1)
வேலைக்கு வேறு இடம் பார்த்துக் கொள்ளலாம் என தன்யஸ்ரீ நினைக்கும் போதே ஜம்புலிங்கத்திடம் இருந்து அழைப்பு வந்தது.
ஜோதி வேறு வீடு மாறிப் போன போது ஜம்புலிங்கத்தின் மனைவி ஜோதிக்கு பழக்கமானார். நல்ல வாடிக்கையாளராக இருந்த திருமதி ஜம்புலிங்கம் நாளைடைவில் நல்ல தோழியாகவும் மாறிப் போனார்.
ஜம்புலிங்கம் வீடு மாறிக் கொண்டு அந்த பகுதிக்கு அப்போதுதான் வந்தார். ஆகவே ஜெய்யின் தந்தை தொழிலில் நஷ்டமடைந்து இறந்து விட்டார், ஸ்ரீயின் தந்தை குடும்பத்தை விட்டு ஓடி விட்டார் எனதான் தெரியும். இவர்கள் இருவரும் முன்னரே தெரிந்தவர்கள் எனும் சங்கதி அவருக்கு தெரியாது.
அழைப்பை ஏற்ற ஸ்ரீயிடம், “சம்பளம் கம்மியா இருக்கேன்னு கவலை படாதம்மா, உனக்கு பாதுகாப்பான இடம், வேலைய கத்துக்க, அவனே சம்பளம் உயர்த்துவான், இல்லைனாலும் ஒரு ஒரு வருஷம் ஓட்டிடு, வேற இடம் பார்த்து சொல்றேன்” என்றார் ஜம்புலிங்கம்.
இப்போது இந்த வேலை வேண்டாம் என்றால் காரணம் சொல்ல வேண்டும், அவனுக்கே என்னை வேலைக்கு வைக்க சம்மதம் எனும் போது நான் என்னவென சொல்லி மறுப்பது? இப்போது மறுத்து விட்டால் வேற வேலைக்கும் சிபாரிசு செய்ய மாட்டாரே? என்றெல்லாம் யோசித்தவள் அவரின் பேச்சுக்கு உம் போட்டுக் கொண்டாள்.
ஆர்டரை அவளின் கையில் கொடுத்து விட்டு சென்றிருந்த சசி மீண்டும் அவளிடம் வந்தான்.
“ஸாருக்கு பி ஏவும் நாந்தான் கிளர்க்கும் நாந்தான்” என வேடிக்கையாக தன்னை அறிமுகம் செய்து கொண்டான்.
அவள் புன்னகை சிந்த, அவளை பற்றி விசாரித்து அறிந்து கொண்டவன் எந்த மாதிரியான வேலைகள் இருக்கும் என மேலோட்டமாக சொன்னான்.
அறையை விட்டு வெளியில் வந்த ஜெய், “சைட்டுக்கு போறேன், பேங்க் போய் சொன்ன வேலைய பார்த்திட்டு வந்து சேர்” என சசியிடம் பணித்தான். அருகிலிருந்த ஸ்ரீயை ஒரு பொருட்டாக கூட நினைக்காமல் கிளம்பி விட்டான்.
இன்னும் இருவர் அந்த அலுவலகத்தில் இருந்தனர். அவர்களுக்கு அங்கேயேதான் வேலை, அவர்களை அறிமுகம் செய்து வைத்தான் சசி. பின் அவளை கிளம்ப சொன்னவன், “எப்படி போவீங்க? நான் வேணும்னா ட்ராப் பண்ணவா?” என நட்பாக கேட்டான்.
“இல்லை நானே போயிப்பேன், தேங்க்ஸ், நான் புறப்படுறேன்” என சொல்லி கிளம்பி விட்டாள்.
வேலையில் சேர இன்னும் ஒரு வார கால அவகாசம் இருக்கிறது. வேலை கிடைத்து விட்டதே என்ற நிம்மதி அவளிடம் இல்லை, மனம் கனத்துக் கிடந்தது.
ஜோதிக்கு உடல் நலம் கெட்ட போது அவரால் தையல் வேலை செய்ய முடியவில்லை. அவரின் கீழ் நான்கு பேர் வேலை பார்த்து வந்தனர். அவர்களை வைத்து ஸ்ரீதான் கடையை நடத்திக் கொண்டிருந்தாள்.
இப்போது அறுவை சிகிச்சை முடிந்து கொஞ்சமாக உடல் தேறிய பின்பு ஜோதியும் கடைக்கு செல்கிறார். தைக்க முடியா விட்டாலும் அவர்தான் மேற்பார்வை செய்கிறார்.
சென்னையில் இவள் வேலை செய்த போது அவளுக்கு கிடைத்த சம்பளத்தை விட மும்மடங்கு வருமானம் தருகிறது தையல்கடை. வேறு பள்ளி மாறலாமா என கேட்டாளே மஹதியின் முகம் சுருங்கி விடுகிறது. இவளுக்கும் அம்மாவை தனியே விட்டு செல்ல மனமில்லை.
அம்மாவுக்கு நிரந்தர ஓய்வு தர எண்ணுகிறாள் ஸ்ரீ. கொஞ்சம் பொறுத்தால் இவளே மெனெக்கேட்டு வேறு இடத்திற்கு வேலைக்கு செல்லலாம்தான், ஆனால் அதுவரைக்கும் அவளது அம்மா கஷ்ட பட வேண்டுமே என நினைத்தவள் இப்போதைக்கு இங்கேயே சேர்ந்து கொள்வது என முடிவெடுத்துக் கொண்டாள்.
பேருந்து பிடித்து வீட்டிற்கு வந்தவள் முதல் வேலையாக அம்மாவுக்கு அழைத்து தனக்கு வேலை கிடைத்து விட்டதை பகிர்ந்தாள். இந்த மாதத்திலிருந்து வீட்டிலேயே இருக்க வேண்டும் என அம்மாவுக்கு கட்டளை போட்டாள்.
ஜோதிக்கு அப்படி நிரந்தர ஓய்வு கொள்ள விருப்பமில்லை. தனக்கு சுகக் கேடு ஏற்பட்டதுமே தன் மகள்களை நினைத்துதான் கவலை கொண்டார். பெரிய மகளுக்காவது திருமணத்தை முடித்து விட்டால் அவள் பொறுப்பாக இருந்து அடுத்த பெண்ணை கரை சேர்த்து விடுவாள் என நம்பினார்.
இதுநாள் வரை சம்பாதித்தது எல்லாம் பெண்களை நன்றாக படிக்க வைப்பதற்கும் அவருடைய வைத்திய செலவுக்கும் சரியாக இருந்தது.
நகைகள் என பார்த்தாலும் சொற்பமாகத்தான் சேர்த்திருந்தார். கல்யாணம் என்றால் சின்ன காரியமில்லையே, நிறைய சேமித்தாக வேண்டுமே, ஆகவே அதுவரை தையல் கடையை விடுவதாக இல்லை அவர். இருப்பினும் மகளிடம் எதிர்த்து எதுவும் பேசாமல் அவளை ஒத்தே பேசியிருந்தார்.
மஹதியும் அக்காவை போலவே படிப்பில் படு சுட்டி. ஆனால் இன்னும் பொறுப்பு வந்திருக்கவில்லை, அந்த வயதுக்கே உரிய விளையாட்டுத் தனத்தோடு இருந்தாள்.
“வேலை கிடைச்சிடுச்சுல்ல… ஒரு ஐஸ் க்ரீம் கூட கிடையாதா?” என நச்சரித்து அக்காவை கடைக்கு கூட்டி வந்திருந்தாள். வீட்டிலிருந்து நடந்தேதான் வந்திருந்தனர்.
ஐஸ்க்ரீம் கடை செல்வதற்கு முன் வீட்டுக்கு தேவையானவை என அம்மா வாங்க சொல்லியவற்றை வாங்க சூப்பர் மார்க்கெட் அழைத்து சென்றாள் ஸ்ரீ.
அதில் மஹதிக்கு கோவம், ஆகையால் கடையின் உள்ளே வராமல் வெளியிலேயே நின்று கொண்டாள். உள்ளே அழைத்து அழைத்து பார்த்த ஸ்ரீ, “வர வர உன் பிடிவாதம் டூ மச்சா இருக்கு. இங்கேயே நில்லு, ஐஸ் க்ரீம் கேட்டு அடம் பிடிக்க சின்ன பப்பாவா நீ” என திட்டி விட்டு அவள் மட்டும் உள்ளே சென்றாள்.
கடை வாசலில் வைத்து அக்கா திட்டியதில் மஹதிக்கு ரோஷமும் கூடவே அழுகையும் பொத்துக் கொண்டு வந்தது. சொல்லாமல் கொள்ளாமல் வீடு செல்ல நடந்து விட்டாள்.
சாலையை கடக்கும் போது மஹதியிடம் கவனமே இல்லை. வாகனம் ஒன்றில் மோதி விட்டாள்.
வேகமாக சாமான்களை வாங்கி முடித்த ஸ்ரீ பில் போடும் போதே வெளியில் தங்கையை காணாமல் பதற்றமானாள். பார்வையிலிருந்து தள்ளி நிற்கிறாள் போல என எண்ணிக் கொண்டே பணம் செலுத்தி விட்டு வெளியில் வந்தவள் தங்கையை அங்கே எங்கேயும் காணாமல் அதிர்ச்சி அடைந்தாள்.
அடிபட்டதில் மஹதிக்கு சிறு சிறு சிராய்ப்புகள். உடனேயே மருத்துவமனை அழைத்து சென்று முதலுதவி செய்திருந்தான் ஜெய். ஆமாம், அவனது பைக்கின் குறுக்காகத்தான் போய் விழுந்து விட்டாள்.
தவறு மஹதியின் மீதுதான் என்ற போதும் சின்ன பெண்ணாக இருக்கவும் திட்டாமல், வீட்டில் சென்று பார்த்துக் கொள்கிறேன் என அவள் சொன்னதையும் பொருட்படுத்தாமல் மருத்துவமனை அழைத்து வந்திருந்தான்.
யார் என்ன என விசாரிக்கையில் யாரெனவும் தெரிந்து கொண்டவனுக்கு அதுவரை இருந்த இளக்கம் மறைந்து விட்டது.
அவனது மனசாட்சியே, ‘சின்ன பெண்ணிடம் வெறுப்பு காட்டும் அளவுக்கு நஞ்சாகி போனாயா?’ என கண்டிக்க, தன் கைப்பேசியை அவளிடம் கொடுத்து அம்மாவுக்கோ அக்காவுக்கோ அழைத்து சொல் என்றான்.
“அம்மாக்கு ஷாக் நியூஸ்லாம் சொல்லக் கூடாது, அக்காட்ட நான் சொன்னா கோவ படுவா. நீங்களே சொல்லுங்க அங்கிள்” என்றாள் மஹதி.
அவளது ‘அங்கிள்’ என்ற அழைப்பில் திகைத்துப் போனான் ஜெய்.
“என்ன அங்கிள் நம்பர் சொல்லட்டுமா?” எனக் கேட்டாள் மஹதி.
‘என்னவோ சொல்லிக் கொள்’ என தெளிந்தவன் ஸ்ரீயின் கைப்பேசி எண் கேட்டறிந்து அழைப்பு விடுத்தான்.
தங்கையை காணாமல் கண்களில் முட்டிக் கொண்டிருந்த நீரோடு நின்றிருந்த ஸ்ரீ அழைப்பை ஏற்று பேசினாள்.
தான் யாரென சொல்லிக் கொள்ளவே இல்லை ஜெய். என்னவோ அவனது குரலை வைத்தே அவனை அவளுக்கு அடையாளம் தெரிந்து விடும் என்ற எண்ணம் போல.
“உன் சிஸ்டர் வழில வர்றப்போ என் பைக்ல மோதிட்டா. பெரிய அடிலாம் இல்லை, நல்லா இருக்கா” என சொல்லி மருத்துவமனையின் பெயர் சொல்லி வாசலில் நிற்கிறோம் வந்து அழைத்து செல் எனவும் கூறினான்.
ஸ்ரீக்கு கட்டுக்கடங்காமல் கோவம் பீறிட்டது.
“ரோட்டை ஒழுங்கா பார்த்து பைக் ஓட்ட மாட்டீங்களா? எவ்ளோ அலட்சியமா பேசுறீங்க?” என சிடு சிடுத்தாள்.
“வந்து உன் தங்கச்சிக்கு ட்ராஃபிக் ரூல்ஸ் பத்தி கிளாஸ் எடு, என்கிட்ட பேசும் போது ஒவ்வொரு வார்த்தையும் பார்த்து பேசலைனா ரொம்ப வருத்த படுவ நீ” என அவனும் சீறினான்.
“ஐயோ அங்கிள், அக்காவை திட்டாதீங்க” என்றாள் மஹதி.
“ஆமாம் உன் அக்காவை திட்டணும்னு ரொம்ப ஆசை பாரு எனக்கு, இந்தா நீயே பேசி வர சொல்லு” என்றவன் மஹதியிடம் கைப்பேசியை கொடுத்து விட்டு தள்ளிப் போய் நின்று கொண்டான்.
தன் மேல்தான் தவறு என மஹதி சொல்லவும் தங்கையை திட்டியவள் உடனே மருத்துவமனைக்கு விரைந்தாள்.
சில நிமிடங்களில் மருத்துவமனை வந்தடைந்த ஸ்ரீ அங்கே ஜெய்யை எதிர் பார்த்திருக்கவில்லை. தங்கையை கண்களால் அளந்து அவள் நன்றாக இருப்பதை உறுதி செய்து கொண்டவள் தயக்கமாக அவனது பக்கம் பார்த்தாள்.
அதீத எரிச்சலோடு அவளை பார்த்தவன், “சரியான ஸ்பெசிமன்ஸ்” என முணு முணுத்து விட்டு முறையான விடை பெறுதல் இல்லாமல் பைக்கை எடுக்க போனான்.
அவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டி அவன் பின்னால் ஓடினாள் ஸ்ரீ. அரவம் உணர்ந்து திரும்பியவனிடம் மூச்சிரைக்க, “ஸாரி” என்றாள்.
“உன் ஸாரிய தூக்கி…” சுற்றிலும் பார்த்தவன் “அதோ அந்த சாக்கடைல போடு. சரியான தலைவலி குடும்பம்” ஆணவமாக சொன்னவன் பைக்கில் ஏறி அமர்ந்து விட்டான்.
“தப்பு எம் பேர்லங்கிறதாலதான் ஸாரி கேட்டேன், சின்ன மிஸ் அண்டர்ஸ்டான்டிங், அதுக்காக என் ஃபேமிலிலாம் இழுத்து பேசணுமா?”
“ஆமாம் ரொம்ப நல்ல ஃபேமிலி உன்னோடது, அப்பன் ஒரு கழிசடை, படிக்கிற சின்ன வயசுலேயே எல்லை மீறி நடக்குற…” ஏதோ ஓர் தவறான வார்த்தைதான் சொல்ல இருந்தான், ஆனாலும் கடைசி நொடியில் சுதாரித்து எதுவும் சொல்லாமல் பைக்கை விருட் என எடுத்துக் கொண்டு சென்று விட்டான்.
அவன் மீதான கோவத்தை விட அதிகமாக காயப்பட்டு போனது அவளின் மனம்.
வீட்டிற்கு வந்ததிலிருந்து கோவத்தில் ஏறிய சிவப்பு குறையாமல் உர் என இருந்த அக்காவை பார்க்க பார்க்க மஹதிக்கு சங்கடமாக இருந்தது. யோசித்து பார்த்ததில் தான் அவளிடம் சொல்லாமல் வந்தது பெரும் தவறு என புரிந்தது.
இரவு சமையலுக்கு தயார் செய்து கொண்டிருந்த அக்காவை பின்னாலிருந்து அணைத்துக் கொண்டே, “ஸாரிக்கா” என்றாள்.
தங்கையிடம் எரிச்சல் படாமல் அவளை முன்னால் இழுத்து நிறுத்தி இனிமேல் இப்படி சொல்லாமல் செல்லக் கூடாது என்றாள்.
“பிராமிஸ் இனிமே அப்படி செய்ய மாட்டேன், ஸாரி க்கா” அக்காவை அணைத்து கன்னத்தில் முத்தமிட்டாள்.
“ச்சீ என்னடி இது?” கோவம் குறைந்த சின்ன சிரிப்போடு சொன்னாள் ஸ்ரீ.
“நீ ஏன் அந்த அங்கிள்கிட்ட ஏதோ போல பேசிட்டு நின்ன, அங்கிள் என்ன சொன்னார் உங்கிட்ட? அவர் மூஞ்சு ஹாலோவீன் மாதிரி இருந்துச்சு, ஏன் அப்படி இருந்தார்?” என விசாரித்தாள் மஹதி.
“யாருடி அந்த பைக் ஆசாமியையா அங்கிள்னு சொல்ற? அவர்கிட்ட என்னன்னு சொல்லி பேசின?”
“அங்கிள்னுதான்” சட்டென மஹதி சொன்னதிலும், இவளது அங்கிள் என்ற அழைப்பில் எப்படி உணர்ந்திருப்பான் அவன் என்ற நினைவிலும் ஸ்ரீக்கு கட்டுப்படுத்த முடியாமல் சிரிப்பு வந்தது.
“என்னக்கா ஏன் சிரிக்கிற?” என கேட்டுக் கொண்டே தங்கையும் அக்காவின் சிரிப்பில் இணைந்து கொண்டாள்.
இன்னும் குழந்தை முகம் மாறாமல் மனம் விட்டு சிரிக்கும் தங்கை ஸ்ரீயின் மனதை லேசாக்கினாள்.
“இன்னும் கொஞ்ச நாள் போனா நானும் உனக்கு ஆன்ட்டி ஆகிடுவேனா பட்டு?”
“அவர் என்னை விட பெரியவர்தானேக்கா?”
“அப்ப அண்ணன்னு சொல்றதுக்கென்னடி?”
“அவர் அண்ணன்லாம் இல்லை, நல்ல ஹைட், பெரிய மீசை, ரொம்ப பெரிய ஆள், எனக்கு அங்கிள்தான் அவர்”
“அதான் அவருக்கு கோவம்? நீ அங்கிள்னு கூப்பிட்டதால வெக்ஸ் ஆகி பேசினார்”
“நான் அங்கிள் சொன்னதுல வெக்ஸ் ஆகியிருக்கலாம், ஆனா உங்கிட்ட கோவமா பேசினார், எனக்கு ஒரு மாதிரி ஆகிடுச்சு. நீ என்னவோ மறைக்கிற என்கிட்ட, இட்ஸ் ஓகே” என்றாள் மஹதி.