புதிய உதயம் -29

அத்தியாயம் -29(1)

ஜனா, மஹதியின் திருமணம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. திருமாங்கல்ய தாரணம் ஆனதும் தன்னருகில் நின்ற ஸ்ரீயின் கையை அழுத்தமாக பற்றிக் கொண்டான் ஜெய்.

என்னவென கேட்டவளிடம், “நம்ம கல்யாண நாள் நினைவு வந்துச்சு, நம்ம கல்யாணத்தை இன்னும் நல்லா சிறப்பா கொண்டாடியிருக்கலாம்னு இப்ப தோணுது” என்றான்.

“அதனால என்ன, திரும்ப இன்னொரு முறை தாலி கட்டுங்களேன், வர்றீங்களா ஜனா மஹதிய எந்திரிக்க சொல்லிட்டு நாம உட்கார்ந்துக்கலாம்” விளையாட்டு போலில்லாமல் தீவிர தொனியில் சொன்னாள் ஸ்ரீ. திகைத்து பின் சிரித்தான் ஜெய்.

“நடந்தது எதையும் சேஞ்ச் பண்ண முடியாது, இனிமே சிறப்பா வாழத்தான் போறோம்” அவனது கையில் அழுத்தம் கொடுத்து அவள் சொல்லவும் எல்லா பக்கமும் தலையை ஆட்டிக் கொண்டான்.

சுரேகாவின் அருகில் அமர்ந்திருந்தான் சியாமளன். நான்கு தினங்கள் முன்னர்தான் இருவருக்கும் எளிமையாக நிச்சயம் நடந்து முடிந்திருந்தது. ஜனாவின் திருமணம் வரை காத்திருக்கலாம் என நினைத்திருந்த ஜெய் சாதாரணமாக இப்படி என சுரேகாவின் அப்பாவிடம் சொல்லி வைத்திருந்தான்.

மகளின் வாழ்க்கை எப்போது மலரும் என காத்திருந்தவர் உடனடியாக செயல் பட்டு கல்யாணத்திற்கே நாள் குறித்து விட்டார்.

சுரேகாவுக்குள் இருக்கும் சின்ன சின்ன தயக்கங்களையும் பயத்தையும் தன் நடத்தையால் பேச்சால் கொஞ்சம் கொஞ்சமாக இல்லாமல் செய்து வருகிறான் சியாமளன்.

ஜனாவின் செட்டில் முதலில் அவனுக்குத்தான் திருமணம் நடக்கிறது, அவனுடைய மற்ற சிங்கில் நண்பர்கள் மேடையில் ஏறி கலாட்டா செய்து கொண்டிருந்தனர். எல்லை மீறிய அவர்களின் கிண்டலில் மருண்டு விட்டாள் மஹதி. ஜனா சமாளித்துக் கொண்டிருக்க மேடையேறி விட்டான் ஜெய்.

“உங்க ஃபன் எல்லாம் தனியா அவன் கூட வச்சுக்கோங்க தம்பிகளா, இப்ப சாப்பாட்டுக்கு நேரமாகுது பாருங்க போங்க” என சொல்லி அவர்களை அப்புறப்படுத்தப் பார்த்தான்.

“அண்ணா… நண்பனோட ஒரு செல்ஃபி எடுத்திட்டு கிளம்பறோம்” தலை கொள்ளா முடியை சிலுப்பிக் கொண்டு சொன்ன ஒருவன் ஜனாவை மஹதியை விட்டு தள்ளி நிற்க வைக்க இழுத்தான்.

அவனது கையை பிடித்த ஜெய், “பந்தி முடிஞ்சிடும் ப்பா கீழ போ” என்றான்.

 ஜெய்யின் பிடி கொடுத்த அழுத்தத்தில் நெளிந்தவன், “ண்ணா… நீங்க ஒரு ஸ்டீல் பாடின்னு அடிக்கடி ஜனா சொல்லுவான் அப்ப புரில, இப்ப புரிது ண்ணா, விடுங்க ண்ணா” என்றான்.

ஒரு வழியாக வானரப் பட்டாளம் தரையிறங்கியது.

“லைஃப்ல இப்பதான் ண்ணா எனக்கு ஃபேவரா ஒரு விஷயத்தை பண்ணிருக்க” என்ற தம்பியை முறைத்த ஜெய், மஹதியிடம், “இவன் சேட்டை பண்ணினாலும் சொல்லு, நல்லா வெளுத்து விடுறேன்” என சொல்லி இறங்கினான்.

“அவர்கிட்ட மண்டைய இப்படி ஆட்டுறியே மங்குனிஸ் மனைவி, என்ன… இவர்கிட்ட நீ சொல்லிக்கிற மாதிரியா உன்கிட்ட நான் சேட்டை பண்ணுவேன்? நானெல்லாம் வேற ரகம், பொண்டாட்டிஜி ரெடிதானே?” என ஜனா கேட்ட விதத்தில் வெட்கத்தால் சிவந்தாள் அவள்.

பாட்டி, துளசி, ஜோதி மூவருக்கும் இந்த திருமணமும் இதை இணைந்து நடத்தித் தந்த ஜெய் ஸ்ரீயின் இணக்கமும் மன நிறைவை தருவதாக இருந்தது.

அன்றைய இரவின் தனிமையில் ஆசையாக காத்திருந்தான் ஜனா. படபடப்போடு வந்து சேர்ந்தாள் மஹதி.

வியர்த்து விட்டிருந்த அவளது முகத்தை கவனித்தவன், பால் கிளாசை வாங்கிக் கொண்டு சோஃபாவில் போய் அமர்ந்து விட்டான். அவள் படுக்கையில் அமர்ந்து கொண்டாள்.

சின்ன வயதில் பழைய வீட்டில் இவர்கள் இருந்த போது நிகழ்ந்தவை, பள்ளிக்காலத்தில் நடந்தவை என பேச ஆரம்பித்தான். அவளும் இயல்பாக அந்த உரையாடலில் ஒன்றி விட்டாள்.

உறங்கி சிறிது நேரம் கழித்து கழுத்தில் வலிக்கவும்தான் விழிப்படைந்தான் ஜனா. ஏனோ தானோவென சோஃபாவிலேயே உறங்கிப் போயிருக்கிறான். மஹதியின் பாதி உடம்பு படுக்கையிலும் கால்கள் இரண்டும் படுக்கையிலிருந்து தொங்கிக் கொண்டும் இருக்க அவளும் அப்படியே உறங்கிப் போயிருந்தாள்.

“ஆத்தி… இன்னும் ஒண்ணுமே நடக்கலையா?” வாய் விட்டு சொல்லிக் கொண்ட ஜனா கழுத்தை பிடித்து விட்டுக் கொண்டே நேரத்தைப் பார்த்தான்.

நொடி முள் நிற்காமல் நகரும் சுவர்க் கடிகாரத்தையும் அழகின் உருவாக உறங்கிக் கொண்டிருக்கும் மஹதியையும் மாறி மாறிப் பார்த்தான்.

சில நிமிடங்கள் சென்று மஹதியை எழுப்பி விட்டான். லேசாக விழித்தவள் எரிந்த கண்களை கசக்கி விட்டுக் கொண்டாள்.

ஆங்காங்கே கலைந்திருந்த அவளது சேலை ஜனாவை நிலை தடுமாற வைத்துக் கொண்டிருந்தது.

மஹதிக்கு நன்றாக விழிப்பு வந்து விட மலங்க மலங்க பார்த்துக் கொண்டே எழுந்தமர்ந்தாள். நேரம் ஐந்தை கடந்திருக்க இருவரும் ஒருவரையொருவர் பாவமாக பார்த்துக் கொண்டனர்.

“மறக்க முடியாத ஃபர்ஸ்ட் நைட் இல்ல?” என இறங்கிப் போன குரலில் கேட்டான் ஜனா.

தலையாட்டிய மஹதிக்கு சிரிப்பு வந்து விட்டது.

“எப்படி தூங்கினோம் மஹதி, நாம நார்மல் கபிள்தானே, நம்ம ஹார்மோன்ஸ் எல்லாம் ஒழுங்கா வேலை செய்யுதா இல்லயா?” எனக் கேட்டான்.

“டயர்ட் ஆகியிருப்போம், அதான் தூங்கிட்டோம் போல” என்றாள்.

“அதான் மஹதி, டயர்ட் ஆகுற அளவுக்கு நமக்குள்ள எதுவும் நடக்கலையே அப்பறம் எப்படி?”

“நீங்கதான் பேசிட்டே இருந்தீங்க…” என யோசித்தவள், “கடைசியா உங்க ஸ்கூல் ஃபைனல்ஸ் ஃபேர்வெல் பத்தி பேசிட்டிருந்தோம்… அப்புறம்… அப்புறம்தான் தூங்கிட்டோம் போல” என்றாள்.

“நீதான் ஏதோ சிங்கத்தோட குகைக்கு தனியா வந்தவ மாதிரி முழிச்சிட்டிருந்த, சரி உன்னை காஷுவல் ஆக்கலாம்னு நினைச்சு நான் ஏதோ பேசப் போய்… ச்ச… மொத ராத்திரிய மோசம் பண்ணிட்டோமே!” என்றான்.

“ஹையோ விடுங்களேன், இன்னிக்கு பகல் போனா திரும்பவும் நைட் வரும்தானே?” அவனை பார்க்க முடியாமல் வெட்கத்தோடு சின்ன குரலில் சொன்னாள்.

“அதெப்படி மஹதி ஃபர்ஸ்ட் நைட் ஆகும்? இன்னிக்கு நைட் செகண்ட் நைட் இல்லயா? இப்படி இன்னிக்கு போய் நாம குறட்டை அடிச்சது லைஃப் முழுக்க பெரிய குறை ஆகிடாதா?” என ஜனா தீவிர தொனியில் கேட்க, அவளும் ‘அப்படியா?’ என்பதாக பார்த்தாள்.

“போ மஹதி, பெரிய தப்பு நடந்து போச்சு, என்ன பரிகாரம் பண்ணியாவது இதை சரி பண்ணிடனும், எல்லாம் உன்னாலதான்”

“நான்… அது… எல்லா பொண்ணுங்களுக்கும் பயம் இருக்க மாதிரிதான் எனக்கும். நீங்க ஏன் என்னை தூங்க விட்டீங்க?”

“அப்படியா? உன்னை தூங்க விடாம ஏதாவது பண்ணியிருந்தா சரியான காட்டுமிராண்டி ரேஞ்சுக்கு பார்த்திருக்க மாட்ட என்னை?” இடுப்பில் கை வைத்துக்கொண்டு கேட்டான்.

“இல்லை…” என்றவள் குரலை செருமி சரி செய்து கொண்டு, “நான் எல்லாம்…” என சொல்லி அடுத்து எதுவும் சொல்லாமல் அவனை தயக்கமாக பார்த்தாள்.

“என்ன மஹதி… நிலைமையோட சீரியஸ்னஸ் தெரியாம இப்ப போய் கோடிட்ட இடங்களை என்னை ஃபில் பண்ண சொல்ற? கம்ப்ளீட் பண்ணு” என்றான்.

“நான் எல்லாத்துக்கும் மனசை பிரிப்பேர் பண்ணிட்டுதான் ரூம் வந்தேன். சாதாரண டென்ஷன்தான் எனக்கு, நீங்கதான் பெருசா எடுத்துக்கிட்டு…” பட படவென சொன்னவள், “உங்களை யாரு சும்மா பேசிட்டே இருக்க சொன்னது?” என உள்ளே போன குரலில் கேட்டாள்.

“அப்ப எம்மேலதான் தப்பா?”

“அது… அப்படியில்லை… ஆனா… ஆமாம் கொஞ்சம் அப்படித்தான்” என்றாள்.

மந்தகாச புன்னகையோடு அவளின் பக்கத்தில் நெருக்கமாக அமர்ந்து கொண்டான். கவிழ்ந்திருந்த அவளின் முகத்தை தன்னை பார்க்க உயர்த்தினான்.

அவனது கண்கள் சொன்ன செய்தியில் திகைத்தவள், “கொஞ்ச நேரத்துல நல்ல வெளிச்சம் வந்திடும், நம்ம ரூம் கதவை தட்டி திறக்க வச்சிடுவாங்க” என சொல்லி மறுப்பாக தலையாட்டினாள்.

“இப்ப விடிஞ்சிடும்ங்கிறதுதானே உன் கவலை?” என அவன் கேட்டதற்கு ஆம் என்றாள்.

“கவலை படாத அஞ்சு மணி நேரத்துக்கு அப்புறமா விடிய சொல்லி சூரிய பகவானுக்கு கட்டளை போட்டிடுறேன்” என்றான்.

அவள் முறைத்து வைத்தாள். “நிஜமா மஹதி, சூரியனை இன்னும் கொஞ்ச நேரம் தூங்க சொல்லிட்டா போச்சு” என சொல்லி கண்களை சிமிட்டினான்.

“விளையாடாதீங்க, தலைக்கு குளிக்கணும், டைம் ஆகிடுச்சு. இங்க வந்த முத நாளே எம்பாரஸ் ஆகி நிக்க எனக்கு இஷ்டம் இல்லை” என சொல்லி எழுந்து கொண்டாள்.

அவளின் கை அவனது பிடியில் இருக்க, விட சொல்லி கெஞ்சலாக பார்த்தாள்.

“டைம் இப்போ ஒண்ணு ஒண்ணே கால் இப்படித்தான் இருக்கும், கிளாக்ல டைம் மாத்தி வச்சிட்டுதான் உன்னை எழுப்பி விட்டேன்” என்றவனை நம்பாமல் பார்த்தாள்.

தன்னிடம் இழுத்துக் கொண்டவன், “எதுவும் நடக்கலைனா அது எவ்ளோ பெரிய தப்புனு உனக்கு புரிய வைக்க வேற வழி தெரியலை மஹதி, நிஜமா டைம் ஒன் தேர்ட்டிக்குள்ளதான்” என்றவன் அதை நிரூபிக்க கைப்பேசியை தேடினான்.

“சும்மா சொல்லாதீங்க, அதிலேயும் டைம் மாத்தி வச்சிருப்பீங்க” என்றாள்.

“புருஷனை முழுசா நம்பனும் மஹதி” என்றவனுக்கு என்ன பதில் சொல்ல என தடுமாற்றமாக பார்த்தாள். அவனை ஏமாற்றவும் மனமில்லை, நேரம் கழித்து சென்றால் தன்னை பற்றி யாரும் ஏதும் நினைப்பார்களோ என சங்கடமும் அடைந்தாள்.

அவளின் மன நிலையை தெளிவாக புரிந்து கொண்டவன் அவளை அழைத்துக் கொண்டு பால்கனி சென்றான்.

 வானில் தெரிந்த அரை வட்ட நிலவை காட்டி, “எனக்கு தெரிஞ்சு அஞ்சு மணிக்கு மேல நிலா தூங்க போயிடும், இங்க பார்த்தியா எவ்ளோ சூப்பரா ராத்திரியோட ரொமான்ஸ் பண்ணிட்டு ஊர் சுத்திட்டு இருக்கு?” எனக் கேட்டான்.

“அப்ப நிலாவோட லவ்வர் சன் இல்லயா?” என சந்தேகம் கேட்டாள்.

“அதெப்படி இருக்க முடியும்? அப்படியிருந்தா ரெண்டு பேரும் டிஸ்டன்ஸ் ரிலேஷன்ஷிப்லதான் இருக்க முடியும். நிலா ராத்திரியோட காதலிதான்” அவளின் முகத்தை ஒற்றை விரல் கொண்டு வருடி விட்டுக் கொண்டே சொன்னான்.

அவனிடம் வம்பு செய்ய நினைத்தவள், “காலேஜ் ஃபேர்வெல் பத்திலாம் இன்னும் சொல்லலையே?” எனக் கேட்டாள்.

“பிரிய போறோம்னு எல்லாரும் செம ஃபீலிங்ஸ்ல இருந்தாங்க. நான் மட்டும் ஸ்கூல் காலேஜ் அப்படினு படிப்பு முடிஞ்சு போச்சு, இனிமே நம்மாளு எங்க இருக்கான்னு சல்லடை போட்டு தேட வேண்டியதுதான்னு முடிவு பண்ணிக்கிட்டேன்” என சொல்லிக் கொண்டே அவளின் கன்னங்களை ஆசையாக வருடிப் பார்த்தான்.

கூச்சத்தில் நெளிந்தவளை தன்னருகே இழுத்தவன், “இன்னிக்கு சிலபஸ் காலேஜ் ஃபேர்வெல் இல்லைடா கண்ணு, நம்ம சிலபஸ் என்னன்னா…” என்றவன் அவளின் காதில் ஏதோ கிசு கிசுத்தான்.

சூடேறிய செவியோரத்தை தொட்டுப் பார்த்தவள் அதீத நாணத்தில் அவனிடமிருந்து விலக முற்பட்டாள்.

தன்னிடமிருந்து அவளை விடாதவன் “பக்கத்திலேயே இருந்திருக்க, இது தெரியாம பல வருஷத்தை வேஸ்ட் பண்ணிட்டேன் பாரேன்” என்றான்.

“தெரிஞ்சிருந்தா மட்டும் என்ன பண்ணிருப்பீங்களாம்?” என ஆர்வமாக கேட்டாள்.

“ப்ச் தெரியலை. என்ன வேணா பண்ணியிருப்பேன்” என்றவன் அவளின் இதழ்களை நோக்கி குனிந்தான்.

அவளின் இனிமையான பட படப்பை அனுபவித்து ரசித்துக் கொண்டே விலகியவன் அவளின் கை பிடித்துக்கொண்டு அறைக்குள் சென்றான்.

நிலவு தன் காதலனுடன் உலா முடித்து அலுத்து உறங்க செல்லும் வேளையில்தான் இருவரும் கண் அயர்ந்தனர்.

ஜனா மஹதியின் திருமணம் முடிந்து ஒரு வாரமாகியிருந்தது. தேனிலவுக்கு சிம்லா செல்ல ஏற்பாடு செய்து கொடுத்தான் ஜெய். இன்னும் சற்று நேரத்தில் புது மணத் தம்பதிகள் புறப்படுகிறார்கள்.

“கல்யாணம் ஆகிடுச்சுடா, பொறுப்பா இருக்கணும். விளையாட்டு பண்றேன் வேடிக்கை காட்டுறேன்னு மஹதிகிட்ட ஏதாவது வம்பு செஞ்சேன்னு என் காதுக்கு வந்துச்சு…” தம்பிக்கு அறிவுரை சொல்கிறேன் என மிரட்டிக் கொண்டிருந்தான் ஜெய்.

“அண்ணி!” என அலறினான் ஜனா.

உள்ளிருந்து ஸ்ரீ மஹதி இருவரும் வெளியில் வந்தனர். அண்ணியின் கையை எடுத்து அண்ணன் கையில் கொடுத்த ஜனா, “ஒழுங்கா பார்த்துக்க ண்ணா, வந்ததும் அண்ணிகிட்ட விசாரிப்பேன், உம்மேல ஏதாவது கம்ப்ளைண்ட் வந்துச்சு…” ஒரு விரல் காட்டி மிரட்டினான்.

ஜெய் கோவமாக பார்க்க, ஸ்ரீ சிரிப்பை அடக்கிக் கொண்டாள்.

என்னவென தன் கணவனிடம் கண்களால் கேட்டாள் மஹதி. “நம்மள சின்ன பசங்கன்னு நினைச்சுக்கிட்டார். விட்டா அவரும் நமக்கு துணைக்கு வருவார் போல. அதான் உங்க வாழ்க்கைய என்ஜாய் பண்ணி வாழுங்கன்னு அவருக்கு புரியுற மாதிரி சொன்னேன்” என்றான் ஜனா.

“டேய்!” என அதட்டினான் ஜெய்.