இடுப்பை சுற்றி அளக்கும் போது ஜெய்யின் நாக நடனத்தில் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து விட்டாள் தீபா. அவளை முறைத்து அடக்கினாள் மஹதி.  ஜெய் வெளியேறப் போக அவனை பிடித்துக் கொண்ட ஸ்ரீ அவளே இஞ்ச் டேப் வாங்கி அளவெடுத்தாள்.

காரில் வீடு திரும்புகையில் வாய் விட்டு சிரித்தாள் ஸ்ரீ. “அந்த பொண்ணு தீபா உங்களை பத்தி என்ன நினைச்சிருக்கும்? உங்கள பத்தி விடுங்க, என்னைத்தான் ‘பாவம் இந்தக்கா எப்படித்தான் இவர் கூட குடும்பம் நடத்துதோ’ன்னு நினைச்சிருக்கும். எப்படி எப்படி…” ஜெய் நெளிந்தது போலவே செய்து காட்டி சிரித்தாள்.

முறைத்தவன், “சொல்லாம கொள்ளாம இங்க அழைச்சிட்டு வந்து உன் தங்கச்சிய விட்டு ராகிங் பண்றியா என்னை, இரு வீட்டுக்கு போய் வசிக்கிறேன் உன்னை” என்றான்.

“வீடு போக நேரமாகும், ஏன் லேட் பண்றீங்க இங்கேயே வச்சுக்கோங்க” என நக்கலாக சொன்னாள்.

அவளை அழுத்தமாக பார்த்தவன் பின் அவளின் பக்கம் திரும்பவே இல்லை, பேசவும் இல்லை.

“என்ன நடந்துச்சுன்னு இப்போ கோவம், கேட்கிறேன்ல ஏதாவது பேசுங்க…” என்றாள் ஸ்ரீ.

அவனது பாராமுகத்தில் கடுப்பானவள், “இப்படி தொட்டதுக்கெல்லாம் மூஞ்சு தூக்கி வச்சுப்பாங்களா? பேசாட்டா போங்க” என சொல்லி அவளும் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

வீடு வந்து இரவு உணவு முடியும் வரையிலுமே ஜெய்யின் இறுக்கம் குறைந்த பாடாக இல்லை. கணவனை கோவமாகவே பார்த்திருந்த ஸ்ரீயின் தோளில் தன் தோளால் இடித்த பாட்டி, “என்னடி என்ன…  ஆரம்பிச்சிட்டீங்களா ரெண்டு பேரும்?” என்றார்.

“எதுக்கு என்னை சொல்றீங்க, உங்க வீட்டு வேதாளம்தான் திரும்பவும் முருங்கை மரம் ஏறிக்கிச்சு” என்றாள்.

காதில் விழுந்தாலும் அலட்டிக் கொள்ளாமல் இருந்தான் ஜெய்.

“எடி அவன் வேதாளமா? அப்ப நீ யாருடி?” என்றார் பாட்டி.

“ஹஹான்… நானா நான்… நானும் வேதாளம்தான், ரூமுக்கு வரட்டும் உங்க பேரன், உண்டு இல்லைனு செய்றேன்” பாட்டியிடம் சிலிர்த்துக் கொண்டே மாடியேறி சென்றாள்.

“என்னடா?” ஜெய்யிடம் கேட்டார் பாட்டி.

“ரொம்ப டீஸ் பண்ணிட்டா என்னை, அதான் சும்மா… நீ போய் படு அப்பயி” என்ற பேரனை பார்த்து நெற்றியில் தட்டி அலுத்துக் கொண்டே படுக்க சென்றார் பாட்டி.

ஜெய்யின் வரவுக்காக காத்திருந்த ஸ்ரீ அவன் உள்ளே நுழைந்து கதவை அடைக்க கூட நேரம் தரவில்லை.

அவனது முன் போய் நின்று, “ஒரு சின்ன விளையாட்டு பேச்சு, அதுக்கு நீங்க நடக்கிறது ஓவர்னு உங்களுக்கே தெரியலை?” என கோவமாக கேட்டாள்.

“நான் வேதாளமா?” அவளது உதடுகளை அதிகம் வலித்து விடாமல் அதே சமயம் கொஞ்சம் இறுக்கமாவே பிடித்துக் கொண்டு கேட்டான்.

அவனது கையை தட்டி விட்டு, “ஆமாம்” என்றாள்.

“நீதான் என் முருங்கை மரம்” அவளை திருப்பி விட்டவன் பின்னாலிருந்து அணைத்துப் பிடித்துக்கொண்டான்.

அவள் உச்சு கொட்ட, “அப்படியே கால தரையிலேருந்து தூக்கி என் பாரத்தை உம்மேல கொடுத்தேன்னு வை…” என மிரட்டினான்.

அவள் மீண்டும் உச்சு கொட்ட நிஜமாகவே அவளின் முதுகில் பாரத்தை கொடுத்தான். சில நொடிகள் கூட அவனது எடையை சுமக்க முடியாமல், “விழுந்திடுவேன், விடுங்க” என்றாள்.

அவளை மேலும் சிரம படுத்தாமல் விலகிக் கொண்டான். தோளை அழுத்தி விட்டுக் கொண்டிருந்தவளை தன் பக்கம் திருப்பியவன், “ம்ம்… சொல்லு நான் வேதாளமா?” எனக் கேட்டான்.

மறுப்பாக தலையாட்டியவள், “சரியான நெல்லு மூட்டை!” என்றாள்.

“என்ன செஞ்சாலும் அடங்க மாட்ட நீ” அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, “சரியான வானரம்!” என்றாள்.

ஒரு விரல் காட்டி அவன் மிரட்ட, “நெருப்பு பழம்” என்றாள்.

“இதென்னடி புதுசா?”

“நெருப்பு மாதிரி இருக்க பழம். சொல்லுங்க என்ன கோவம், ஏன் பேச மாட்டேங்குறீங்க. தப்பா பேசிட்டேனா நான், ஹர்ட் பண்ணிட்டேனா?” பொறுமையாக கேட்டாள்.

“நல்ல வேலை ஞாபக படுத்தின”

“எதை?”

“கார்ல என்ன சொன்ன என்கிட்ட… நீ பாவம்னு அந்த பொண்ணு நினைச்சுக்குமா? நீ மெஸர்மெண்ட் எடுத்தப்ப ஒழுங்காதான நின்னேன்? எங்க நீ இப்போ ஒழுங்கா நில்லுடி” என்றவன் அவனது சட்டைப் பையிலிருந்து இஞ்ச் டேப் ஒன்றை வெளியில் எடுத்தான்.

அவள் விழிக்க  முறைத்துக் கொண்டே அவளை நெருங்கினான். குழப்பத்தை விட்டு அவனது குறும்பு புரிந்தவளாக இரு கைகளையும் இடுப்பில் வைத்துக்கொண்டு திமிராக நின்றாள்.

“நான் எப்படி அளவெடுத்தாலும் அசையவே கூடாது, ஒரு இஞ்ச் இங்க அங்க நகர்ந்தாலும் நான் சொல்ற படிதான் கேட்கணும், என்ன?” என்றான்.

‘இதென்ன பிரமாதம்?’ என்பது போல அலட்சிய பார்வை பார்த்து வைத்தாள்.

முதலில் அவளது பிறை நெற்றியை அளவீடு செய்தான்.

“ரொம்ப முத்தி போயிடுச்சா உங்களுக்கு, ட்ரெஸ் தைக்க யாராவது நெத்திய அளப்பாங்களா?” எனக் கேட்டாள்.

“ட்ரெஸ் தைக்க அளக்கிறேன்னு சொன்னேனா நான்?” அவளது காதோரத்தில் உதடுகள் உரச கேட்டான்.

கலவரமாக பார்த்தாள் அவள். அடுத்து அவளது நாசியை அளந்தவன், “உன் நீள அகலமெல்லாம் எனக்கு அத்துப்படிதான், இப்போ ஆளு சும்மா கும்முன்னு திரும்பி வந்திருக்கியா? அக்யூரேட்டா உன்னை அப்டேட் செஞ்சு வச்சுக்கலைனா அப்பறம் நானென்னல்லாம் என்ன நல்ல புருஷன்?” புருவங்கள் உயர்த்தி ஒரு மார்க்கமாக கேட்டான்.

இதழ்களை தொட்ட இஞ்ச் டேப்பை பிடுங்கி தூரப் போட்டாள்.

“ஏன் அது வேணாமா? விடு, என் விரல் ரெண்டைரை அங்குலம். அங்குலம் அங்குலமா அளத்துக்குறேன் உன்னை” என்றவன் செயல்படுத்தவும் செய்தான்.

அவனது விரலை லேசாக கடித்து வைத்தாள். அவளை தன்னோடு வளைத்து இழுத்துக் கொண்டவன், “ஏன் அப்படி வேணாமா? என் உதட்டால அளக்கணுமா?” அவன் கேட்ட விதத்தில் மிரட்சியாக பார்த்தாள்.

அவளது கழுத்தில் உதடுகளை பதித்து அவளை ஒரு வழி செய்தான்.

கதவு சாத்தப் படாமலிருப்பது அவனுக்கு நினைவு வர சட்டென விலகினான். அவனது பிடரியை பிடித்து தன்னை விட்டு விலகச் செய்யாதவள், “நான் ஒழுங்கா அசையாமதான் இருக்கேன், ஆரம்பிச்ச வேலைய ஒழுங்கா முடிங்க” என்றாள்.

“தனியா இருக்கப்ப கூட என்னை வெட்க பட வைப்ப. டோரை அடைச்சிட்டு உன் வாயையும் அடைக்க வர்றேன் இரு” முகத்தில் வெட்கம் வழிய, ஆனாலும் மறைத்துக் கொண்டு மிரட்டுவது போல சொல்லி சென்றான்.

அவனை பார்வையால் அளந்து கொண்டே படுக்கையில் அமர்ந்து கொண்டாள்.

“கண்ணாலேயே சாப்பிடுறதுன்னு சொல்வாங்களே அது இதானா?” உல்லாசமாக கேட்டுக் கொண்டே அவளை உரசிக் கொண்டு அமர்ந்தான்.

“என்ன இன்னிக்கு திடீர்னு?” அவனது சட்டைப் பொத்தானை திருகிக் கொண்டே கேட்டாள்.

“ஏன் உனக்கு டைம் வேணுமா?” அப்படியெல்லாம் ஏதும் கேட்டு விடாதே என்ற தொனியில் பாவமாக கேட்டான்.

அவனது நெஞ்சில் சாய்ந்து கொண்டாள். சில நொடிகளுக்கு பின், “உங்களை விட்டுட்டு போயும் உங்களைதான் எப்பவும் தேடினேன். உங்க மேலதான் ரொம்ப கோவம் உங்க மேலதான் ரொம்ப…” என்றவள் அவனது சட்டையை லேசாக விலக்கி வெற்று மார்பில் அழுந்த முத்தமிட்டு விட்டு அவனது முகத்தை பார்த்தாள்.

ஜொலித்த அவளது இரு கண்களும் மின்காந்தம் போல அவனை ஈர்த்தன.

“நான் பெர்ஃபெக்ட் இல்லை, உனக்கு பிடிக்காத குணங்கள்  என்கிட்ட இருக்கலாம், ஆனாலும் என்னை உனக்கு ரொம்ப பிடிக்கும்னு எனக்கு தெரியும்”

“இல்லை உங்களுக்கு டவுட் இருக்கும்”

“ப்ச் அதெல்லாம் இல்லை. ஆனா உன் வாயால கேட்டுக்க பிடிக்கும். நீ சொல்லேன்… இந்த ஜெய்க்கு ஸ்ரீயை பிடிக்குமா… ஹ்ம்ம்?”

அவனது மார்பில் வலிக்க குத்தியவள், “சொல்ல மாட்டேன். நீங்களும் பதில வாயால சொல்லக்கூடாது” பார்வையில் சவால் விட்டுக் கொண்டே சொன்னாள்.

“நான் சொல்லிட்டே இருக்கேன்னுதான் நினைக்கிறேன், இல்லயா உனக்கு புரியலையா?”

“ம்ம்ம்… ஆனா பர்ட்டிகுலரா இன்னிக்கு என்ன வந்தது? என்னை இவ்ளோ நெருக்கமா பிடிச்சு வச்சுக்க எது தூண்டிச்சாம்?”

“என் பிராட் மைண்ட் பொண்டாட்டி கண்ணுல இன்னிக்கு அப்பட்டமா ஒரு பொறாமையை பார்த்தேன். ரொம்ப அழகா… ரொம்ப நிறைவா… ரொம்ப பெருமையா இருந்துச்சு” கிண்டலாக சொன்னான்.

அவளிடம் ஒரு அசட்டு சிரிப்பு.

“எல்லா நாளும் ஆசையிருக்கும்தான். அது இன்னிக்குத்தான் அளவுக்கு மீறிப் போச்சு போல” அவளது கன்னங்களை கன்னங்களால் அளந்து கொண்டே சொன்னான். தன் மோகத்தை வெளிப் படுத்தும் விதமாக அவளது வலது கன்னத்தில் பல் தடம் பதித்தான்.

அவளின் முகம் சுருங்கியது. “என்ன ஸ்ரீ, ஹார்ஷா நடக்கிறேனா?” தவிப்பாக கேட்டான்.

“ஸாஃப்ட்டா இருங்கன்னு நான் சொன்னேனா?” மோகனமாக அவள் கேட்ட விதத்தில் மொத்தமாக அவள் மீது பித்தானான்.

வேகமாக அவளை படுக்கையில் சாய்த்தான். கால் நொடி கூட வீணாக கூடாது என்பது போல அவன் செயல் பட்டான். இடறி அவளது இடுப்பில் அழுத்தமாக விழுந்த அவனது கை  கொடுத்த அழுத்தத்தில் ஆ என சத்தமிட்டாள்.

நிதானித்து அவளது முகத்தை பார்த்தான். அவனது கன்னத்தை தாங்கிக் கொண்டவள், “நம்ம பிரிவை எல்லாம் நான்… நாம மறந்து போகணும். இனிமே நமக்கு புது லைஃப்” என்றாள்.

அவளது கூற்றை அங்கீகரிப்பது போல அவளது உச்சியில் முத்தமிட்டான். முத்தங்கள் தொடர்கதையானது. நீண்டதொரு பிரிவுக்கு பின்னரான அவர்களின் ஆத்மார்த்த சங்கமத்தில் மிச்ச மீதியிருந்த பழைய கசடுகள் கூட கரைந்து போய் விட்டன.

சக்தியெல்லாம் வடிந்த பின் இளைப்பாறலாக படுத்திருந்தனர்.

ஆள் அரவமற்ற இடத்திலிருக்கும் சலனமற்ற குளத்து தண்ணீர் நிலவொளியில் காயும் இதம் நிரம்பியிருந்தது இருவருள்ளும்.

அவனது மார்பு சுட்ட அவளது கண்ணீர் சொன்னது எத்தனை அவனை தேடியிருக்கிறாள் என்பதை. அவளது கரத்தை கோர்த்திருந்த அவனது கரத்தின் இறுக்கம் சொன்னது அவனது ஆதாரம் அவள்தான் என்பதை.

அடர்ந்த இருளுக்கு பின் வெளிச்சம் வந்துதானே ஆக வேண்டும்?

புதிதாய் பூத்தது அவர்களின் அடுத்த உதயம்!