அத்தியாயம் -26(2)

“ஆமாம் அதான் எல்லாத்துக்கும் சேர்த்து வச்சு உன்னை என்கிட்டருந்து பிரிச்சு விட்டுட்டாரே, உனக்கு அவர் கொடுத்த தைரியம்தானே அங்க போவ வச்சது? அவர்தான் டி அவர்தான் உன்னை என்கிட்ட அனுப்பி வச்சார். இல்லைனா நான் நிம்மதியா இருந்திருப்பேன். ஒரு கிராதகிய என்கிட்ட அனுப்பி வச்சார். பாவி சிறுக்கி என் மனசை கெடுத்து ராப்பகலா அவளையே நினைக்க வச்சா” தன் மனதில் உள்ளதெல்லாம் ஜெய் புலம்பிக் கொட்ட தலையில் கை வைத்துக்கொண்டு ஓரமாக அமர்ந்து விட்டாள் ஸ்ரீ.

“என்னைய டெரர் பீஸ்னு ஒர்க்கர்ஸ் பேசிக்குவாங்க, அந்த டெரரை சாச்சபுட்டாடி அந்த ராங்கி, நானும் எவ்ளோதான் ஸ்டடி ஸ்டடின்னு சொல்லிக்கிறது” என்றவன் அடுத்து நெஞ்சில் வேகமாக அடித்துக் கொண்டு, “உள்ள வந்து ஜம்முன்னு உட்கார்ந்துகிட்டா” என கூறி சிரித்தான்.

“ஆமாம் உட்கார்ந்தேன் அப்புறம் காலை நீட்டி படுத்தேன். இப்போ நீங்க பேசாம படுக்க போறீங்களா இல்லயா?” கத்திக் கேட்டாள்.

“ஆமாம் அப்படி என்ன உன்னை கொடுமை பண்ணினேன்னு என்னை விட்டு போன ஸ்ரீ? உன்னை தள்ளி வச்சிட்டேன்னு அதையே சொல்லாத, அதால நீ ஹர்ட் ஆனது இப்பதானே எனக்கு தெரியும்? எந்த விதத்திலேயும் உன்னை நெக்லெட் பண்ணினதா எனக்கு ஞாபகமே இல்லையேடி. நான் கோவமா பேசினப்பலாம் அப்படியே வாய மூடிட்டு என் கால கட்டிகிட்டு பதவிசா குடும்பம் பண்ணின மாதிரி பேசாத. ஒரு வார்த்தைக்கு ரெண்டுன்னு திருப்பி திருப்பி கொடுத்ததானேடி? நான் மட்டும்தான் கோவக்காரன், நீ… நீ ஹையோ நீ வாயில்லா புள்ளபூச்சி, அப்புராணி எம்போண்டாட்டீ அப்பிராணி…” கடைசி வாக்கியத்தை சத்தமாக சொன்னான்.

“என்கிட்ட கோவ படுறத கூட விடுங்க. தேவையில்லாம எல்லார்கிட்டேயும் கோவ படுறீங்க. லாஸ்ட்டா நமக்குள்ள சண்டை வந்தப்போ சியாம்கிட்ட மோசமா நடந்துகிட்டீங்க, மஹதிய பொண்ணு பார்க்க வந்தன்னிக்கு அவன் கூட நான் பேசிட்டு இருந்தப்பதான் உங்க மூஞ்சிய பார்த்தேனே, அவன் என்கிட்ட சொல்லலைன்னாலும் எனக்கு தெரியும், ஏதாவது அவனை பேசாமலா இருந்திருப்பீங்க?” அவனின் நிலை தெரிந்தும் அதற்கு மேல் வாயை மூடியிருக்க முடியாமல் அவனது தவறை சுட்டிக் காட்டினாள்.

அவளது முகத்தை உற்றுப் பார்த்தவன், “எது நடு ராத்திரில அவன் கூட பேசுவியா?” எனக் கேட்டான்.

“பேசினா என்ன தப்பு? தெரியாமத்தான் கேட்கிறேன் பகல்ல பேசுறதுக்கும் நைட்ல பேசுறதுக்கும் என்ன பெரிய வித்தியாசம்?”

“நான் பேசவா அப்படி?” என அவன் கேட்கவும் பேசுங்களேன் என அவளால் சொல்ல முடியவில்லை. பார்ட்டியில் சற்று நேரம் அவன் ஒருத்தியிடம் பேசியதற்கே இவளுக்கு நாலு பாட்டில் ஜெலூசில் குடிக்கும் நிலையாகி விட்டது.

ஆனாலும் சியாமளன் விஷயம் அப்படி இல்லையே, ஆகவே, “அங்கதான் நைட், இங்க பகல். எனக்கு ஹெல்ப் பண்றதுக்காக வந்தவன் அவன்” என விளக்கம் மட்டும் சொன்னாள்.

“அதான், அதான்டி என் கோவம். புருஷன் நான் என்ன செத்தா போயிட்டேன்? கருமம் புடிச்ச எனக்கு உன்னை எவன் கூடவும் பக்கத்துல பார்த்தாலே பத்திகிட்டு வருது, என்னை விட்டுட்டு அவன் கூட பேசினா அவன்கிட்ட உதவி கேட்டா எனக்கு கோவம் பொத்துக்கிட்டு வரலைனா நான் ஜெய் இல்லைனு நீயே சொல்லிடுவ. பர்த் டிஃபெக்ட்ட்றீ, என்னை என்ன பண்ண சொல்ற? என்னை அவாய்ட் பண்ணிட்டு அவன் கூட பேசுவியான்னு உன்கிட்டதான் கோவ பட்ருக்கணும், கைக்கு கிடைச்சவன் அவன்தான், அதான் அவன்கிட்ட காட்டினேன்” என்றான்.

“அப்ப அது சரி?”

“தப்புன்னே வச்சுக்க, என்ன செய்யலாம் அதுக்கு? சொல்லு என்ன செய்யலாம். கோர்ட்ல ஏத்து கூண்டுல நிக்க வை”

“ஹையோ அவ்ளோலாம் வேணாம். அவன்கிட்ட ஸாரி கேட்கணும், முடியுமா உங்களால?”

“உன்கிட்டயே அத கேட்டதில்லை நான்”

“இந்த அரகன்ஸிதாங்க பய படுத்தது”

“ஹேய் சும்மா என்னையவே ஏதாவது நொட்டம் சொல்லிக்கிட்டு. என்கிட்ட இருக்க நல்லது எதுவுமே கண்ணுக்கு தெரியாதா?” என்றவன் இரு கைகளையும் நெஞ்சோடு சேர்த்து வைத்துக்கொண்டு பெண் பேசுவது போல குரலை கொஞ்சமாக மாற்றி, “யாருமே இல்லாதவங்க நாங்க, எங்களுக்கு நாங்களேதான் பார்த்துக்கணும்” என்றான்.

அவள் விழிக்க, “அது நீ பேசுற வசனம்தானே? அப்படிப்பட்டவ ஸ்கூல் முடிச்சு காலேஜ் சேர்ந்த பொண்ணுக்கு என்ன விவரம் வந்திட்டுன்னு மஹதிய விட்டுட்டு போன?” எனக் கேட்டான். அவனது கண்களை அவளால் சந்திக்க முடியவில்லை.

 “ரெண்டு வருஷமா உன் தங்கச்சிய உன் இடத்திலேருந்து பார்க்கலையா நான்?” எனக் கேட்டான்.

“ஜனா, சியாம்கிட்டலாம் பார்த்துக்க சொல்லிட்டுதான் போனேன்” சின்ன குரலில் சொன்னாள்.

“அவங்களாம் ஏதாவது ஒண்ணுன்னாதான் போய் நிப்பாங்க. மஹதி ரொம்ப சென்சிட்டிவ், சின்ன பிரச்சனைனா கூட ஓவர் அப்செட் ஆவா. ஹையோ சின்ன பொண்ணுக்கு எந்த சங்கடமும் வந்திடக் கூடாதுன்னு கருத்தா பார்த்துகிட்டது நான்தான், உன் மச்சானும் உன் பிர…ர…ண்டும் இல்லை. காலேஜ்ல அவளுக்கு ஏதாவது பிரச்சனை வர விட்ருப்பேனா? பிரச்சனை வர்ற மாதிரி இருந்தாலே மஹதிக்கு கூட தெரியாம அதை சரி பண்ணிருக்கேன்” என்றவனை நம்பாத பார்வை பார்த்தாள்.

“எப்படி நம்புவ, நான் கோவக்காரன் ஆத்திரக்காரன் என்ன வேணா செய்வேன் அதான் தெரியும். பொம்பள புள்ளைங்க விஷயத்துல அவங்க பேர் வெளில வராம பார்த்துக்கிற அளவுக்கு பொறுப்பானவன்னு என்னை நினைக்கிற அளவுக்கு நான் நடந்துக்கலதான். நம்பினா நம்பு நம்பாட்டி போ… போடி!” என்றான்.

இதையெல்லாம் சொல்லிக் காட்டி தன்னை அவளிடம் உயர்வாக காட்டிக் கொள்ளும் எண்ணம் அவனிடம் துளியும் இல்லை. இன்று உள்ளே சென்றிருக்கும் பானம் அவனை மீறி பேச வைத்துக் கொண்டிருந்தது.

அவள் அமைதியாக இருந்தாள்.

 “நீ போயிட்டேன்னு உம்மேல உள்ள கோவத்துல அவங்கள எங்கேயும் எப்பவும் விட்டு கொடுத்தேனா?” எனக் கேட்டான்.

மஹதியின் படிப்பு முடியும் வரை அவளுக்கான கல்வி கட்டணமெல்லாம் அவன்தான் கட்டினான். அவளுக்கு பொட்டிக் வைக்க இடம் பார்த்தது கூட இவன்தான். அக்கா செய்கிறாள் என மஹதி சொன்ன போது கூட அதனால் ஸ்ரீக்கு மகிழ்ச்சி கிடைக்கும் என்பதால்தான் விட்டு விட்டான், இல்லையென்றால் அதற்கான செலவையும் அவனே ஏற்றிருப்பான்.

“உடம்பு முடியாதவங்கள விட்டுட்டு போக கூடாதுன்னு கம்மி சம்பளத்துக்கு என்கிட்ட வேலைக்கு சேர்ந்த. அவங்களதான் தனியா விட்டுட்டு போன நீ? ஜனாவை அனுப்பி அவங்கள ஒழுங்கா ஹாஸ்பிடல் அழைச்சிட்டு போய் கவனிக்கலையா நான்?” எனக் கேட்டான்.

அண்ணன் சொல்லித்தான் அத்தையை மருத்துவமனை அழைத்து சென்று வந்தேன் என ஜனா சும்மா சொல்லவில்லை உள்ளதைத்தான் சொல்லியிருக்கிறான் என்பதை புரிந்து கொண்டவள் அமைதி காத்தாள்.

 “சொல்லி காட்டுறேன்னு கூட நினைச்சிக்க, சொல்ல வச்சிட்டடி நீ. லவ் பண்றேன் கல்யாணம் பண்ணி வைன்னு வந்து நிக்கிறான் ஜனா. உனக்கு தெரியும்தானே அவன்னா எனக்கு எப்படின்னு, அவன் ஒண்ணு ஆசை படும் போது கூட அவனை மட்டும் பார்க்காம மஹதிக்கு விருப்பமான்னு உறுதி பண்ணிகிட்டுதான் மேல எடுத்து செஞ்சேன். பார்த்து பார்த்து செய்றவனை விட்டுட்டு வேறொருத்தன்கிட்ட நீ ஹெல்ப் கேட்ப, அவன் என் மாமியார் வீட்டுல நட்ட நடுவுல நின்னுகிட்டு நாட்டாமை செஞ்சா கோவ படுவேன்தான், அது தப்பு, நான் கெட்டவன்னா… சொல்லிக்கடி, அப்படியே இருந்திட்டு போறேன்” என்றான்.

“சியாம் பத்தி தப்பா பேசாதீங்க! அவன் நல்லவன்”

“ஆமாம் அவன் நல்லவன் ஜனா நல்லவன் ஜம்பு ஸார் நல்லவர் சைலேஷ் நல்லவர். நான் மட்டும் கெட்டவன்டி உனக்கு!” இடது உள்ளங்கையில் முஷ்டி மடக்கிய வலது கையால் வேகமாக குத்திக் கொண்டே சொன்னான்.

“சிரிச்சி சிரிச்சி பேசுறவன்தான் நல்லவன்னா…ஹேய் நான் கெட்டவனாவே இருந்திட்டு போறேன்டி!” சீற்றமாக சொன்னான்.

“நான்… எனக்கு என்னென்ன ஆச்சு தெரியுமா? என் வலி…” அழுகையோடு பேசியவளை இடை மறித்தான்.

“உனக்கு நோவு, அப்ப உன்னை விட்டுட்டேன் தள்ளி போயிட்டேன், மனச கொன்னுட்டேன்னு குறையா அடுக்குடி. நீ கஷ்ட படுறத பார்த்து எனக்கும் குளு குளுன்னு இல்லை. வாங்கிக்க முடிஞ்சா உன் வலியையும் வேதனையையும் நான் வாங்கியிருந்திருப்பேன். உன் எதிர்பார்ப்ப புரிஞ்சுக்க முடியாத முட்டாளா இருந்திட்டேன்” நெற்றியில் அறைந்து கொண்டவனை பார்த்து பயந்து போனாள்.

சில நொடிகளுக்கு பின், “நல்லா தெரிஞ்சுக்க தள்ளித்தான் இருந்தேன் உன்னை விட்ரல நான். ஆனா நீ என்னை விட்டுட்டு போயிட்ட, இப்பவும் மொத்தமா விட்டுட்டு போற ஐடியாலதான் இருக்க” என்றான்.

“வருவீங்க வருவீங்கன்னு ஏமாந்து போய்… ஒரு கட்டத்துல இங்க இருந்தா பைத்தியம் புடிச்சிடும்னு பயந்து போய்தான் போனேன். நீங்கதான் காரணம்” என குற்றம் சுமத்தினாள்.

 “என் மனசுக்கு நடந்தத அக்செப்ட் பண்ணிக்க டைம் தேவை பட்டுச்சு. உன் எக்ஸாம் முடியற வரை ஃப்ரீயா இருக்கட்டும்னு உன்னை உன் அம்மா வீட்லேயே விட்டேன். அப்புறமும் நான் சரியாகாம இருந்ததால இன்னும் வெயிட் பண்ணினேன். நைட் கண்ண மூடினா என் புள்ள அழற சத்தம்தான் கேட்கும். உனக்கு மட்டும்தான் குத்த உணர்ச்சியா? ஹையோ அன்னிக்கு ஒரு நாள் அவ கூட இருந்திருந்தா எம்புள்ள என் கைல இருந்திருக்குமே பச்ச புள்ளைய வுட்டுட்டேனேன்னு நான் தவிச்ச தவிப்ப உன்கிட்ட சொல்லி புரிய வைக்க தெரியலைடி” என்றவனின் குரல் கமறியது.

ஸ்ரீ அடுத்து பேச முடியாமல் இருக்க, அவன் அழ ஆரம்பித்து விட்டான். வெறும் கண்ணீர் வடிக்காமல் குலுங்கி குலுங்கி அழுதான். அவள் பார்த்தே இராத காட்சி.

“அந்த கேடு கெட்டவனை எதுக்கு பார்க்க போனான்னு உம்மேல கோவம், என்கிட்ட சொல்லாம போயிட்டியே அதை சொல்ற அளவுக்கு நான் நடந்துக்கலையேன்னு எம்மேல கோவம்” அழுகையின் இடையே சொன்னான்.

“நான்… அந்த…”

“எவனோ என்னமோ சொனன்னான்னு போவியா? என்கிட்ட சொல்லியிருந்தா உன்னை அப்படி என்ன செஞ்சிருப்பேன்னு தானா போன? போச்சே… புள்ள போச்சே…” நெஞ்சில் அடித்துக் கொண்டான்.

“எனக்கில்லையா வருத்தம் எனக்கில்லையா சோகம். சுமந்தவ நான்தான் என்னை விட உங்களுக்கு…”

“ஆமாம் உன்னை விட எனக்கு வேதனை பாதிப்பு எல்லாமே அதிகம்தான்! இன்னும் மனசு விட்டு போகாத அளவுக்கு துக்கம்தான்” சீற்றமாக சொல்லவும் அவனது கண்களில் தெரிந்த கோவத்தில் தலையை பின்னுக்கு இழுத்துக் கொண்டாள்.

சில நிமிடங்கள் மௌனமாக கரைய அவனே வாய் திறந்தான்.

“உனக்கு எல்லாம் முடிச்சிட்டு என்கிட்ட கொண்டு வந்து காட்டினாங்க அவனை, தாங்கியிருக்க மாட்டடி நீ… தாங்கிருக்க மாட்ட. ஆம்பள புள்ள ஸ்ரீ. நம்ம புள்ள அது…” என்றவன் மேலே பேசப் பிடிக்காமல் கை முஷ்டியை மடக்கி வாயில் வைத்து அழுத்திக் கொண்டான்.

அவனது கையும் உதடுகளும் நடுங்கிக் கொண்டிருந்தன. அவனது கண்கள் கண்ணீரை நிறுத்தவே இல்லை. அவனருகில் செல்ல முடியாத அளவுக்கு ஸ்தம்பித்துப் போயிருந்தாள் ஸ்ரீ.

அவளிடம் மட்டுமல்ல யாரிடமும் எப்பொழுதுமே பகிர நினைத்திராத ஒன்றை சுய நினைவில்லாமல் சொல்லி விட்ட ஜெய் அன்றைய சோகத்தை இப்போது அனுசரித்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.