புதிய உதயம் -24

அத்தியாயம் -24(1)

ஸ்ரீயை அழைத்துக் கொண்டு அவளின் அம்மா வீட்டை வந்தடைந்தான் ஜெய். ஜோதி அப்போதுதான் தையல் கடை சென்றிருக்க வீடு பூட்டியிருந்தது. ஸ்ரீ தன்னிடமிருந்த இன்னொரு சாவி கொண்டு வீட்டை திறந்தாள்.

தன் பின்னால் நின்ற ஜெய்யை திரும்பி பார்த்தவள், “நீங்க கிளம்புங்க” என சொல்லி உள்ளே சென்று விட்டாள்.

அவளது அம்மா இருந்திருந்தால் கூட விட்டு சென்றிருப்பான், இப்போது திண்ணையிலேயே நின்றான். ஸ்ரீக்கு இப்போது தனிமைதான் தேவையாக இருந்தது.

 அத்தியாவசியப் பட்ட நேரத்தில் உடன் இல்லாதவனிடம் அழுது தீர்த்தது அவளுக்கு பிடிக்கவில்லை. இன்னும் அவனிடம் ஆறுதல் வேண்டிக் கிடந்தால் அதை விட வேறென்ன அவமானம் என நினைத்தவள் அவனை உள்ளே அழைக்கவில்லை.

அவன் வெளியிலேயே நிற்பதை பார்த்தவள் கதவை அடைக்காமல் அறைக்கு சென்று படுத்து விட்டாள்.

உள்ளே அழைக்காதது குறித்து அவனுக்கு கோவம்தான், தானாக செல்ல ரோஷம் தடுக்கிறதுதான், ஆனால் சற்று முன் காரில அவள் அழுத அழுகை இன்னுமே அவனது மனதை பிசைந்து கொண்டிருக்க மனதில் ‘உள்ளே? வெளியே?’ கேட்டுக் கொண்டு அங்குமிங்கும் நடை போட்டுக் கொண்டிருந்தான்.

‘எல்லாம் அவதான்னு வாழ்ந்தவகிட்ட போய் வெட்கம் மானம் பார்த்துக்கிட்டு!’ மனசாட்சி நல்ல பிள்ளையாக அறிவுரை சொன்னது. கால் மணி நேர தீவிர யோசனைக்கு பின் உள்ளே சென்றான்.

ஸ்ரீக்கு அழுகையெல்லாம் நின்று விட்டது. அறையை எட்டிப் பார்த்தான். சுவர் ஓரமாக படுத்திருந்தவள் அங்கிருந்த ஜன்னலின் திரை சீலையிலிருந்து பிரிந்து வந்திருந்த நூலை விரலில் சுற்றுவதும் பிரிப்பதுமாக இருந்தாள்.

சத்தமில்லாமல் சமையலறை சென்றவன் ஃப்ரிட்ஜிலிருந்து பால் பாக்கெட் தேடிக் கண்டுபிடித்து எடுத்து வந்தான். பாக்கெட்டை நறுக்கி பாத்திரத்தில் கொஞ்சம் மேடையில் கொஞ்சம் என ஊற்றியவன், ‘நான் ஒழுங்காதான் ஊத்தினேன், பாக்கெட்ல ஏதோ மிஸ்டேக்’ என தனக்கு தானே சமாதானம் செய்து கொண்டான்.

அடுப்பு பற்ற வைக்க கேஸ் லைட்டரை தேடினான் தேடினான், அவன் பொறுமையை வெகுவாக சோதித்த லைட்டர் அவன் பார்வையில் படுவேனா என்றது.

ஹால் வந்து பூஜை மாடத்திலிருந்த தீப்பெட்டி எடுத்துக் கொண்டு போனவன் அடுப்பை ஆன் செய்து விட்டு சாவகாசமாக தீப்பெட்டியை உரச ‘குப்’ என பெரிதாக பற்றிக் கொண்ட தீ அவனது முகத்தை க்ளோஸப்பில் பார்த்து விட்டு சென்றது.

“ஹையோ அம்மா!” என்ற ஜெய்யின் சத்தம் கேட்டு பதறிக் கொண்டு ஓடினாள் ஸ்ரீ.

“ஒரு காபி போட வுடுறீங்களா ஹ்ஹேஹே…” அடுப்பு மற்றும் பால் பாத்திரத்திடம் கடுப்படித்துக் கொண்டிருந்தான்.

ஆறிப் போனதை சூடு செய்யக் கூட வராது அவனுக்கு, சமையல் வேலையெல்லாம் அவனை பொறுத்த வரை பெரும் சாகசம்.

பாத்திரத்தை அடுப்பில் வைத்தவன் நகத்தை கடித்துக் கொண்டு பால் பொங்கி வரும் நேரத்துக்காக அதை வெறிக்க பார்த்துக் கொண்டிருந்தான்.

மௌனமாக அவனை வேடிக்கை பார்த்தாள் ஸ்ரீ.

பால் பொங்கி வரும் போது தீயை குறைக்காமல் என்ன செய்வது என்ற பதற்றத்தில் லோட்டாவில் இருந்த தண்ணீரை கையில் ஊற்றி பால் பாத்திரம் மீது தெளித்தான், இல்லையில்லை ஊற்றினான். அதிகப் படியான தண்ணீர் ஸ்டவ்வின் பர்னரையும் குளிப்பாட்டி தீயை அணைத்து விட்டது.

பாத்திரத்தை அடுத்த அடுப்பிற்கு மாற்றி வைத்தவன் அணைந்த அடுப்பை பற்ற வைக்க முனைய அது ‘ஸாரி பாஸ் நான் காயுற வரை உன் பேச்சு கா’ என சொல்லி விட்டது.

இன்னொரு அடுப்பில் பாத்திரம் இருக்க அதை ஆன் செய்து விட்டு பொறுமையாக தீப்பெட்டியை உரசப் போனான்.

“கேஸ் இந்நேரம் வெளில ஸ்ப்ரெட் ஆகியிருக்கும், அறிவில்லாம அதோட விளையாடாதீங்க” என சொல்லிக் கொண்டே ஓடி வந்து அடுப்பை அணைத்தாள் ஸ்ரீ.

கீழே நிற்க முடியாமல் மேடையிலிருந்து வழிந்த பாலும் தண்ணீரும் அவளது காலில் பிசு பிசுக்க அவனை கோவமாக பார்த்தாள்.

“நீ போ ஸ்ரீ, நான் சூடா காபி போட்டு எடுத்திட்டு வர்றேன்” ஒரு அசட்டு சிரிப்புடன் சொன்னான்.

“எங்க சர்க்கரை காபி பவுடர்லாம் எடுங்க” கைகளை கட்டிக் கொண்டு சொன்னாள்.

கொழுப்பு குறைய கருஞ்சீரகம் சாப்பிடலாம் என அதை பொடி செய்து வைத்திருந்தார் ஜோதி. அதை கையில் எடுத்தவன் திறந்து பார்த்து விட்டு, “இதானே காபிதூள்?” எனக் கேட்டான்.

அவள் ஒன்றும் சொல்லாமல் முறைக்க, “இது இல்லயா?” எனக் கேட்டு காபி தூள் இருந்த டப்பாவை சரியாக எடுத்தான். இதுதான் என உறுதி செய்து கொள்வதற்காக வாயில் வைத்துப் பார்த்தவன் அதன் கசப்பில் முகம் சுளித்தான்.

அங்கு வெள்ளை சீனி உபயோகிப்பது இல்லை. மல்லி தூளை எடுத்து நுகர்ந்து பார்த்தவன் அடுக்கடுக்காக தும்மினான்.

“எதுக்கு ஸ்ப்ரே பண்றீங்க இப்போ?” கடிந்து கொண்டாள் ஸ்ரீ.

“ஹேய் ரொம்பத்தான், எட்றீ சர்க்கரைய” என்ற ஜெய்க்கு அடுத்தும் ஒரு தும்மல் வந்தது.

அவனை விலக்கி விட்டவள் அவளே காபி கலந்தாள். அவனிடம் ஒரு கப் கொடுத்தவள் தனக்கானதை மூடி வைத்து விட்டு மேடையை துடைத்து தரை ஈரத்தையும் துடைக்கப் போனாள்.

“உன் கடமை உணர்ச்சிக்காக யாரும் அவார்ட் தர போறதில்லை. சூடு ஆறிடும், காபிய குடி” என்றவன் அவளுடைய காபியை எடுத்து நீட்டினான். வாங்கிக் கொண்டவள் பின் பக்கம் போய் நின்று கொண்டாள்.

அவன் ஹால் சென்று அமர்ந்து கொண்டான். சில நிமிடம் சென்று ஹால் வந்தவள், “நீங்க கிளம்பலையா?” எனக் கேட்டாள்.

“என்ன விரட்டி விடுறியா என்னை? உங்கம்மாக்கு ஃபோன் போடு. இங்க இருக்க எனக்கு உரிமை இருக்கா இல்லையான்னு அவங்ககிட்ட கேட்கிறேன்” என்றான்.

அவனிடம் வாய் வளர்க்காமல் மீண்டும் படுக்க சென்று விட்டாள்.

அவனுக்கு சசி அழைத்து ஏதோ பேசினான், பின் அவனே யாருக்கோ அழைத்து பேசினான். ஓய்வறை சென்று வந்தான். டிவியில் ஏதோ சேனலை கண்டு பிடித்து வைத்தான். ‘மங்கையர் திலகம்’ கருப்பு வெள்ளை படம் ஓடிக் கொண்டிருந்தது, அந்தப் படத்தை பார்த்துக்கொண்டு சட்டமாக அமர்ந்து விட்டான்.

ஸ்ரீக்கு தொந்தரவாக இருக்க கூடாது என சத்தத்தை குறைத்து வைத்திருந்தான்.

மதிய உணவு நேரம் வந்து விட்டது. அம்மா வர மாட்டார் என்பதை கேட்டறிந்து கொண்டாள். தானேதான் இவனை சமாளித்தாக வேண்டுமா என நொந்து கொண்டே அவள் எட்டிப் பார்க்க அமர்ந்த வாக்கில் உறங்கிக் கொண்டிருந்தான் ஜெய்.

இன்று தயிர் சாதம்தான் செய்து வைத்து விட்டு சென்றிருந்தார் ஜோதி. தொட்டுக் கொள்ள வடகம் துவையல்.

ஜெய் சாதத்தில் தயிர் போட்டு சாப்பிடுவான், கலந்து தரும் தயிர் சாதத்தில் கை வைக்க மாட்டான், அதுவும் குழம்பு சாதத்திற்கு பின் கொஞ்சமாக சாப்பிடுவான். போக சொல்லியும் வீம்பாக இங்கேயே இருப்பவனை இனியும் கிளம்ப சொன்னால் கோவம் கொள்வான், அதை விட காயப்பட்டு போவான் என புரிந்து என்ன செய்வதென யோசித்தாள்.

மனம் ஓய்வை நாட சமைக்கும் எண்ணமும் ஏற்படவில்லை. குக்கரில் சாதம் வைத்தவள் கதவை வெறுமனே சாத்தி விட்டு தயிர் பாக்கெட் வாங்க சென்று விட்டாள். தான் வந்த பிறகுதான் விசில் வரும் என நினைத்திருந்தாள்.

நல்ல உறக்கத்தில் இருந்தவன் திடீர் குக்கர் விசிலில் அலறியடித்துக் கொண்டு எழுந்தான். வீட்டில் அவள் இல்லாததால் அவளின் கைப்பேசிக்கு அழைப்பு விடுத்தான். அதற்குள் வந்து விட்டாள்.

“எங்க போன நீ, சொல்லிட்டு போவ மாட்டியா? குக்கர் பாட்டுக்கும் சத்தம் போடுது. எப்ப ஆஃப் பண்ணணும்னு தெரியாம டென்ஷன் ஆயிட்டேன்” என்றான்.

“எத்தன விசில் வந்துச்சு?” எனக் கேட்டாள்.

“விசில் கவுண்ட் பண்ண சொல்லிட்டு போனியா நீ?” என கேட்டவனுக்கு பதில் தராமல் இன்னும் இரண்டு விசில் வரவும் அணைத்து விட்டாள்.

உணவு தயாரிக்கிறாள் என புரிந்து கொண்டவன் டிவியின் சத்தத்தை அதிகப் படுத்தினான். “தேவா சதா சோக திருநாளா…” என பத்மினி அழுது கொண்டிருந்தார்.

இங்கே சாதம் சரியாக வேகாததால் எரிச்சல் கொண்டவள் ஹாலை எட்டிப் பார்த்து விட்டு, முணு முணுப்பாக கணவனை திட்டிக் கொண்டே சாதத்தில் இன்னும் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி மீண்டும் விசில் வைத்தாள்.

‘ஏதோ தடபுடலா செய்றா போல’ என்றெண்ணிக் கொண்டவன், “ரெஸ்ட் எடுக்காம எதுக்கு சிரம படுற?” எனக் கேட்டான்.

பாக்கெட் தயிரை கின்னத்துக்கு மாற்றிக் கொண்டிருந்தவள், “தயவுசெஞ்சு டிவிய ஆஃப் பண்றீங்களா?” என சிடு சிடுத்தாள்.

அவளிடம் வந்தவன், “நல்ல படம்தான், நான்தான் தூங்கிட்டேன், நீ பார்த்திருக்கியா, நல்லாதான் இருந்துச்சு அவங்க ஃபேமிலி, திடீர்னு ஏன் சோகமா பாடுறாங்க பப்பிம்மா? உனக்கு இந்த ஸ்டோரி தெரியுமா?” எனக் கேட்டான்.

உச்ச பட்சமாக கடுப்பானவள் அருகிலிருந்த கத்திரிக்கோலை எடுத்து அவனை குத்துவது போல காட்டினாள்.

 ஓரடி பின்னால் நகர்ந்தவன், “தெரியலைன்னா தெரியலைன்னு சொல்லு, அதானே எதையும் தெரியாதுன்னு எங்க ஒத்துக்கிட்டிருக்க, உனக்கு தெரியாததை கேட்டதால இந்த கோவமா?” அவளின் மன நிலையை சரி செய்ய எண்ணி மொக்கை போட்டுக் கொண்டே கத்திரிக் கோலை வாங்கி தாள்ளி வைத்தான்.

உணவை ஹாலுக்கு எடுத்து வந்து வைத்தாள். தட்டில் குழைந்து போன சாதத்தை வைத்தவள் தயிர் ஊற்றி துவையலும் ஊறுகாயும் வைத்தாள். நல்ல பசியில் இருந்தவன் கொலை வெறியோடு அவளை பார்த்தான்.

“என்ன?” என அதட்டல் போட்டாள்.

விழிகளை மேலே உயர்த்தி பெரிய மூச்சாக விட்டவன், “ஒண்ணுமில்ல… ஒண்ணுமே இல்லைமா” என்றான்.

“சாப்பிடுங்க” என அவள் சொல்லவும் உடனே அமர்ந்து விட்டான்.

அவனுடைய அப்பா இறந்த சமயத்தில் வீட்டில் நல்ல கஷ்டம் அல்லவா, அப்போது அடிக்கடி தயிர், ரசம் சாதம்தான். இவன் வேலைக்கு சென்ற பிறகு போட்ட முதல் கட்டளையே வீட்டில் குழம்பு, குறைந்தது இரண்டு காய்கள் என நல்ல சாப்பாடு இருக்க வேண்டும் என்றுதான்.

முகத்தை உர் என வைத்துக் கொண்டவன் சாதத்தை பிசைந்து சாப்பிட்டான். அடுத்த வாய் சாப்பிட போனவனிடம், “துவையல் ஊறுகாய்லாம் தொட்டுக்கோங்க” என்றாள்.

“எனக்கு பிடிக்கல”

“சாப்பிட்டு பார்க்காமலே பிடிக்காம போகுமா?”

“ஏன் டி படுத்துற? மூஞ்சு வீங்குற அளவுக்கு அழுதவளை தனியா விட மனசில்லாம இங்க இருந்ததுக்கு பனிஷ்மென்ட்டா இது?”

“இத பாருங்க, நானே ரொம்ப கஷ்ட பட்டு சமைச்சேன், உங்களுக்கு பனிஷ்மென்ட்டா தெரியுதா? அதானே என்னிக்கு என்னைய புரிஞ்சிருக்கீங்க?” என அவள் கேட்கவும் ஒரு கை காட்டி அவளை நிறுத்த சொன்னான்.

‘சாப்பிடணும்தானே, சாப்பிட்டுக்கிறேன்’ என சைகையால் சொன்னவன் எல்லாம் தொட்டுக் கொண்டு சாப்பிட்டான்.