அத்தியாயம் -23(2)
பொறுக்க முடியாமல், “ம்மா!” என அதட்டலாக அழைத்தான் ஜெய்.
“என்னடா?” அவரும் அதட்டினார்.
“போ உள்ள போயி ரெண்டு தோசை ஊத்தி எடுத்திட்டு வா” கடுப்போடு சொன்னான்.
“இட்லி பொங்கல்னு இத்தனை இருக்கே, அத சாப்பிடு” என்ற துளசி, அண்ணன் மகளிடம் மேலும் பேசத் தொடங்கினார்.
“என்கிட்ட இப்படி ஏவுறானே, இவன் பொண்டாட்டியா இருந்தா அவ ஊத்தி தர்ற கனத்த தோசையை சாப்பிடவே தனி தெம்பு வேணும் இவனுக்கு. ஒரு குடும்ப வேலை கூட தெரியாதுங்கிறேன். எம் புள்ள அப்புராணி… அவன் மூக்க பேத்து வுட்ருக்கா, நிச்சயத்துக்கு ஏதாவது மிஸ் ஆகட்டும் நல்லா அவ மூக்க உடைக்கிறேன் நான்” என்றார் துளசி.
அத்தை மகனை வேண்டுமென்றே வம்பிழுக்கிறார் என சுரேகாவுக்கு மெதுவாக புரிந்து போனது. அவளால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
என்னவோ தன் மனைவியை சுரேகா குறைவாக நினைக்கிறாள் என்ற தோற்றம் ஜெய்க்கு ஏற்பட்டு விட்டது.
“வெறும் தரிசு நிலத்துல அடுக்கு மாடி கட்டிடத்தை குவாலிடியோட கட்டுற திறமை அவகிட்ட இருக்கு. நாலு பேர் முன்னாடி பயந்து பேசுற ரகமில்ல அவ, அத்தனை ஆம்பளைங்க இருக்கும் போது ஒத்த பொண்ணா எல்லாருக்கும் ட்ரில் எடுப்பா. சாதாரண எங்கேஜ்மெண்ட் ஃபங்ஷன்லாம் ஒரு மேட்டரா அவளுக்கு?” என்றான் ஜெய்.
“நாம பார்க்கதானே போறோம் சுரேகா!” துளசி கிண்டலாக சிரிக்க, சுரேகாவும் சேர்ந்து சிரித்தாள்.
இருவரையும் முறைத்துக் கொண்டே சென்று விட்டான் ஜெய். சோர்ந்து போனவராக அமர்ந்தார் துளசி.
“என்னத்த… அத்தானை ஏன் கோவ படுத்துறீங்க, ஸ்ரீ அக்கா பத்தி இப்படி பேசுற ஆள் இல்லையே நீங்க, என்ன உள் குத்து அத்தை?” என விசாரித்தாள் சுரேகா.
“அவளை பத்தி குறை சொன்னாதான் தொரைக்கு பொண்டாட்டி பத்தின நல்ல விஷயம்லாம் ஞாபகம் வரும். இப்படி பேசுறதால அவன்கிட்ட ஏதாவது மாற்றம் வராதான்னு நப்பாசைதான்” என துளசி சொல்ல அவளுக்கு பாவமாகி விட்டது. ஆறுதலாக பேசினாள்.
“முரடன் கோவக்காரன் தலைகனம் கொண்டவன்னு என்னைத்தானே என் வளர்ப்பைதானே தப்பா பேசுவாங்க? நான்தான் கவனிக்க தவறிட்டேன், இவன் வயசுக்கு மீறின பொறுப்பை ஏத்துகிட்டு இப்படி மாறிப் போயிட்டான், தக்க நேரத்துல இவனை பார்க்கல நான்” என புலம்ப ஆரம்பித்து விட்டார்.
“ஆவுறத பார்க்காம என்னடி இது? விஷேஷம் நடக்குற வீட்டுல அமைதியா இரு” என பாட்டி வந்து சத்தம் போடவும்தான் அமைதியானார்.
ஜெய்க்கு அலுவலகத்தில் ஒரு வேலையும் ஓடவில்லை. அவன் பார்க்க வேண்டிய நிச்சய வேலைகளை ஆட்கள் வைத்து பார்த்துக் கொண்டான்.
‘ரெண்டு வருஷமா ஊர்லேயே இல்லை, இப்போ நிறைய இடம் வேற மாறிப் போச்சு, எது எங்க தரமா கிடைக்கும்னு தெரிஞ்சு சரியா பார்த்து வாங்குவாளா, எப்படி போவா, இந்த ஊர் டிராஃபிக் ரூல்ஸ்லாம் நினைவு வச்சு ஒழுங்கா ஸ்கூட்டி ஓட்டுவாளா, ஐயோ ஸ்கூட்டியில் எல்லாத்தையும் எப்படி எடுத்திட்டு வருவா, கார் புடிப்பாளா, டிரைவர் ஒழுங்கா ஓட்டுவானா? பழைய படி ஆக்சிட்டெண்ட்…” ஜெய்யின் அதீத கற்பனை அவனை பதறி எழுந்து நிற்க வைத்து விட்டது.
தன்னை விட்டு சென்றாள், அழைக்க சென்ற போதும் தன்னை மதிக்கவில்லை, இப்போதும் தன்னிடம் வராமல் அம்மா வீட்டுக்கு போய் விட்டாள் என பல கோவங்கள் அவள் மீதிருக்க தானாக அவளுக்கு அழைக்கவும் மனம் வரவில்லை.
சசி ஏதோ ஃபைல் தூக்கிக் கொண்டு வந்தான். பின்னர் பார்ப்பதாக ஓரமாக வைத்து விட்டான். வேலை சம்பந்தமாக ஏதோ முடிவு கேட்டதற்கு பிறகு யோசித்து சொல்வதாக சொன்னான்.
“ஸார், நீங்க ஆள் சரியில்லை ஸார், என்ன ஸார் ஏதும் டைஜஷன் பிராப்லமா ஸார்?” எனக் கேட்டான் சசி.
“ஹ்ம்ம்… கேஸ் ட்ரபிள்” கடுப்போடு சொன்னான்.
“என்ன ஒத்துமை பாருங்க நமக்குள்ள, எனக்கும் அதே தொந்தரவுதான் ஸார், என்கிட்ட மருந்து இருக்கு ஸார், வேணுமா உங்களுக்கு?” எனக் கேட்டான் சசி.
அவனை சலிப்பாக பார்த்த ஜெய், “முக்கியமான வேலையா வெளில போறேன். எதுவா இருந்தாலும் கால் பண்ணு, நான் எடுக்கலைனா மெசேஜ் பண்ணு” என சொல்லி கிளம்பி விட்டான்.
ஜோதி மூலமாக ஸ்ரீ மார்க்கெட் சென்றதை அறிந்து கொண்டு அங்கு சென்றான். அவளது கைப்பேசி எண் இப்போது மாறிப் போயிருந்தது, மாமியார் மூலமாக அந்த எண்ணை பெற்றிருந்தாலும் அழைக்காமல் அவ்வளவு பெரிய மார்க்கெட்டில் அவளை கண்களால் தேடிக் கொண்டிருந்தான்.
ஒரு பூக்கடையில் நின்றிருந்தாள். அங்கு பூ மாலைகள் ஆர்டரின் பெயரில் செய்து தரப்படும். மாதிரிகளின் படங்கள் இருந்த கேடலாக்கை பார்த்துக் கொண்டிருந்தவளின் அருகில் வந்து நின்றான்.
அவனை எதிர் பார்க்காதவள், “என்ன இங்க?” என வியப்பாக கேட்டாள்.
“இந்த மார்க்கெட்டை வேற இடம் மாத்திட்டு இங்க மால் ஒண்ணு கட்ட பிளான், அதான் பார்த்திட்டு போக வந்தேன்” என்றான்.
“என்ன ஸார் சொல்றீங்க, இது என் கடை, கடன உடன வாங்கி போன வருஷம்தான் சொந்தமாக்கினேன். யார் இருக்கா இந்த அநியாயத்துக்கு பின்னால” ஜெய்யின் பேச்சை காதில் வாங்கியிருந்த கடைக்காரன் பொங்கினான்.
“ஹையோ அண்ணா, இவர் விளையாடுறார். உங்க கடைக்கு ஒரு ஆபத்தும் இல்லை” என கடைக்காரனை சமாதானம் செய்தாள் ஸ்ரீ. அவன் ஜெய்யை முறைக்க, ஜெய் பதிலுக்கு அவனை முறைத்தான்.
“அச்சோ உங்களோட…” சலித்துக் கொண்டே ஜெய்யின் கையை பற்றி அவனை இழுத்துக் கொண்டு தள்ளி சென்றாள்.
“நாம பேசுறத ஒட்டு கேட்டது அவன் தப்பு, உன்கிட்ட ஏதோ சொன்னா அவன் ஏன் லுக் விடுறான்? அவன் மேலதான் தப்பு” என்றான் ஜெய்.
“ஆமாம், அவர் மேலதான் தப்பு. நீங்க ஏன் இங்க வந்தீங்க, என்ன விஷயம்?”
“நீ எதுக்கு வந்திருக்கியோ அதுக்குத்தான்”
“நிச்சய வேலையா வந்தேன், இதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்னு சொல்லிட்டேன். நீங்க…”
“படுத்தாத ஸ்ரீ. தனியா என்ன பண்ணுவ? ஆட்டோல வந்ததா அத்தை சொன்னாங்க. என்னென்ன வாங்கணும்னு சொல்லு, நான் அழைச்சிட்டு போறேன்”
“ஐயோ வேணாம் சாமி. போற இடமெல்லாம் பொருள வாங்காம ஏதாவது வம்பைத்தான் வாங்குவீங்க, என்னால சமாளிக்க முடியாது”
“ஹேய் சும்மா பெரிய சண்டியர் ரேஞ்சுக்கு நீயே பில்டப் கொடுக்காத. எங்கேயும் வாய் தொறக்கல, போதுமா?”
“உங்களுக்கு ஏன் சிரமம்? உங்க வேலைய…”
“அடியே இன்னிக்கு தேதிக்கு எனக்கு ஒரு வேலையும் இல்ல, டிரைவர் வேலை போட்டு கொடு”
“நான் பார்த்துக்கிறேன்”
“என்னத்த பார்ப்ப? நீ ஏதாவது சொதப்பினாலும் சரி உனக்கு ஏதாவது ஆனாலும் சரி பாதிக்க பட போறது என் தம்பி ஃபங்ஷன். அப்படிலாம் உன்னை நம்பி விட முடியாது” என்றவனை கடினமாக பார்த்தாள்.
“உன்னை தனியா விட்டுட்டு வேலை ஓட மாட்டேங்குது ஸ்ரீ” தணிவாக சொன்னான்.
அவள் ஏதோ உள் அர்த்தத்தோடு பார்த்தாள்.
“அப்போ உன்னை தனியா விடல, என் அம்மா அப்பயிகிட்டதான் விட்டுட்டு போனேன். போன நானும் ஜாலி பண்ணிகிட்டு இல்லை, வா நேரம் ஆவுது. வேற பெரிய கடைக்கா போகலாம்”அவளின் கையை பிடித்து இழுத்தான்.
“கடை பெருசா இருந்தா என்ன சின்னதா இருந்தா என்ன? இங்க நல்லா செய்து தருவாங்கன்னு என் ஃப்ரெண்ட் லீலா ரெஃபர் பண்ணினா. இங்கதான் வாங்க போறேன்” அடமாக அவள் சொல்லவும் அவள் விருப்பத்துக்கே விட்டு விட்டான்.
சொன்னது போல நல்ல பிள்ளையாக அமைதியாக நின்று கொண்டான். ஸ்ரீக்கு மூன்று வித பூமாலைகள் பிடித்திருந்தன. ஜனாவுக்கும் மஹதிக்கும் அனுப்பி எது வேண்டும் என கேட்டாள். இவளின் விருப்பம் என சொல்லி விட்டனர்.
தேர்வு செய்ய குழம்பியவள் ஜெய்யை பார்த்தாள். அவளின் எண்ணவோட்டம் புரிந்தாலும் அவளாக அழைக்கட்டும் என காத்திருந்தான். மிகுந்த தயக்கத்துக்கு பிறகு அவனது அபிப்ராயம் கேட்டாள்.
அவன் ஒரு மாலையை சொன்னான்.
“அவங்க ட்ரெஸ் கலர் ப்ளூ ஷேட், இது போட்டா ஃபோட்டோஸ்க்கலாம் அவ்ளோ எடுப்பா இருக்குமா?” எனக் கேட்டாள்.
உடனே அவன் இன்னொன்றை சொன்னான். அதைப் போல ஒரு மாலை தயாராகிக் கொண்டிருக்க கையில் வாங்கிப் பார்த்தவள் எடை கூடுதலாக இருக்குறது என அதையும் வேண்டாமென சொல்லி விட்டாள்.
மூன்றாவதாக இருந்த மாலை அவளுக்கு திருப்தியாக இருக்க அதையே ஆர்டர் செய்தாள்.
“இதுக்கு எதுக்கு என்கிட்ட ஒப்பீனியன் கேட்கணும்?” என சலித்தான்.
“டிஸ்கஸ் பண்ணினாத்தானே ஒரு ஐடியா கிடைக்கும்” என்றாள்.
“அவங்க மனசுல ஏற்கனவே முடிவெடுத்து வச்சிட்டுதான் கேட்பாங்க ஸார், நாம சரியா அத கேட்ச் பண்ணி சொல்லணும். ஆனா பாருங்க அந்த கலை உலகத்துல எந்த புருஷனுக்கும் இல்லை” என்றான் கடைக்காரன்.
“ஆமாம் பொண்ணுங்க மட்டும் உங்க கண் பார்வை வச்சே ஓடி ஓடி செய்யணும் எல்லாம். இந்த கடை சரியில்ல வாங்க போலாம்” என்றாள் ஸ்ரீ.
“ஐயையோ இருங்க தங்கச்சி!” என்ற கடைக்காரன், ஜெய்யை பார்த்து “தங்கச்சி ரொம்ப கருத்தா இருக்காங்க ஸார்” என பாராட்டினான்.