புதிய உதயம் -23
அத்தியாயம் -23(1)
ஸ்ரீயை பார்ப்பதற்காக அம்மாவையும் பாட்டியையும் அழைத்துக் கொண்டு வந்திருந்தான் ஜனா. அக்காவுடன் நேரம் செலவிட எண்ணி மஹதியும் வீட்டில்தான் இருந்தாள்.
இரண்டு வருடங்களுக்கு பின் பார்ப்பதால் பாட்டியும் துளசியும் குறையாக ஏதும் பேசாமல் நேர் மறையாகவே ஸ்ரீயிடம் பேசினார்கள். அவர்களுக்கு வாங்கி வந்தவற்றை கொடுத்து விட்டு அமெரிக்கா கதைகளை முன்னரே கைப்பேசியில் சொல்லியிருந்தாலும் இப்போது நேரில் சொன்னாள்.
முன்பெல்லாம் ஜனாவோடு இயல்பாக பேசி பழகும் மஹதிக்கு இப்போது நேரில் அவனை காணவே வெட்கமாக வந்தது.
“ஃபோன்ல நல்லாத்தானே பேசுற, அதே ஜனாதான் நான், இப்போ எதுக்கு உன் ஐ பால் தரையை நோக்கியே இருக்கு, புதையல் ஏதும் இருக்கா?” என மற்றவர்கள் அறியாமல் மஹதியை கிண்டல் செய்தான் ஜனா.
“ஆமாம், தங்க காசும் வைர காசுமா நிலத்துக்கு அடியில இருக்கு, நான் போறேன் தோண்டி எடுத்துக்கோங்க” என்றாள்.
“ஐயைய எவனுக்கு வேணும் அதெல்லாம்? உன் நிறத்துக்கு ஈடாகுமா அந்த தங்க காசு, உன் கண்ல இருக்க ஜொலிப்புக்கு ஈடாகுமா அந்த வைர காசு?” என்றான்.
அவள் வெட்கமாக சிரிக்க, “இந்த பளீர் சிரிப்பு இருக்கே, இது வெள்ளிக்காசு!” என்றான்.
“ஓட்டினது போதும்!” என்றாள்.
“ஹஹா! ஓட்டவே ஆரம்பிக்கல நான் இன்னும். நீ போட்ருக்கியே ப்ளூ கலர் ட்ரெஸ், உஜ்ஜாலால முங்கி எழுந்து வந்த மாதிரி இருக்க. கைல போட்ருக்கியே ரெட் கலர் வளையல்… க்ரீன் சிக்னல் கொடுத்த பின்னும் வேணுமா இந்த ரெட் லைட்னு கேட்க தோணுது. ஒத்த கால்ல கட்டியிருக்கியே கருப்பு கயிறு… கலர் காம்பினேஷன்ல உனக்கிருக்க அறிவுல எந்த காத்து கருப்பு அண்ட போகுதுன்னு அத்தைக்கு பயம்? நெயில் பாலிஷ்…” ஜனாவின் பேச்சில் உச்ச பட்ச எரிச்சல் அடைந்தவள் உள்ளே சென்று விட்டாள்.
தள்ளி இருந்துதான் பேசியிருந்தார்கள், என்ன ஏதென மற்றவர்களுக்கு தெரியவில்லை, ஆனால் மஹதி முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு சென்றதை பார்த்தனர்.
“ஏன்டா நீயுமாடா?” சலிப்பாக கேட்டார் துளசி.
“ஹேய்… உன் மஹாமுனி மவனோட என்னை கம்பேர் செய்யாதம்மா” என்றான் ஜனா.
“அப்புறம் அவ ஏன் கோச்சுக்கிட்டு போறா?” எனக் கேட்டார் பாட்டி.
“அது சும்மா செல்ல சண்டை, அத நான் பார்த்துக்கிறேன், அதுக்காக கரண்ட் கம்பத்தோடு கம்பேர் பண்ணுமா அம்மா?” என்றான் ஜனா.
“என்ன ஜனா பேச்சு இது? உன் கிண்டல் அளவுக்கு மீறி போகுது” கண்டித்தாள் ஸ்ரீ.
“ஹையோ அண்ணி உங்க பக்கம்தான் நான், அதான் அந்த உஷணக் காத்து உர்ராங்குட்டான…”
“நீ எதுவும் சொல்ல வேணாம், இந்த விளையாட்டு பேச்சுதான் நாளைக்கு எல்லார் முன்னாடியும் வரும். எதுவுமே அளவுக்கு மீறினா கசந்து போகும் ஜனா, இப்பவே சொல்றேன் மஹதிய கிண்டல் பண்றேன்னு அளவுக்கு மீறி போகாத, அவ ரொம்ப சென்சிடிவ், நீங்க நல்லா இருக்கணும்னுதானே கல்யாணம் பண்றோம், கவனமா இரு” என்றாள் ஸ்ரீ.
“அக்கா… அவர் சும்மாதான் விளையாடினார். நானும் விளையாட்டுக்குத்தான் கோவமா வர்ற மாதிரி வந்தேன், அவரை பேசாத” நிதானமான குரலில் சொன்னாள் மஹதி.
“அதுதான் மஹதி, இந்த விளையாட்டு பேச்சு ஒரு கட்டத்துல…”
“எதுவும் ஆகாதுக்கா, அப்படியே ஆனாலும் அவரை விட்டுட்டுலாம் போயிட மாட்டேன். எனக்கு என் லைஃப் விட மத்தவங்க நிம்மதி முக்கியம்” என்ற மஹதியை அதட்டினார் ஜோதி.
“அவளை பேசாத, சரியாத்தானே சொல்றா. நாமதானே இப்போ நிம்மதி இழந்து நிக்கிறோம். இவன் கல்யாணத்தை சந்தோஷமா செய்ய முடியுதா?” அங்கலாய்த்தார் பாட்டி.
மௌனமாகி விட்ட ஸ்ரீயின் முகம் இறுக்கமாகி விட்டது.
“விடுங்க த்தை, நல்ல விதமா பேசிட்டு கிளம்பலாம்னுதானே இருந்தோம்?” என்றார் துளசி.
ஸ்ரீயை தூண்டி விட்டு ஜெய்யோடு அவளை சேர வைக்க சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சரியாக பேசி விட வேண்டுமென ஜோதியை தவிர மற்றவர்கள் ஏற்கனவே பேசி வைத்ததுதான். இப்போது அண்ணியை பார்க்கவும் ஜனாவுக்கு பாவமாகி விட்டது.
மற்றவர்களை அமைதி படுத்தியவன், “இனிமே அண்ணனை கிண்டலா ஏதும் நான் பேசலை அண்ணி” என்றான்.
அதற்கும் அவள் மௌனமாக இருந்தாள்.
“இவன் பேசுற அளவுக்கு கிடையாது ஜெய், உனக்கு நடந்த ஆக்ஸிடெண்ட்க்கு அப்புறம்தான் இவ்ளோ மோசமான கோவக்காரனா மாறிட்டான்” என்றார் பாட்டி.
“நீங்களே சொல்றீங்க அது ஆக்சிடெண்ட்னு, எம்மேல என்ன தப்பு? அந்த நேரம் அவர் என் கூட இருந்திருக்கணுமா இல்லயா பாட்டி?” குழந்தையின் நினைவு வந்து விட்டதில் லேசாக குரல் கமறக் கேட்டாள் ஸ்ரீ.
“அதனாலதான் நீ உன் அம்மா வீட்டுக்கு கிளம்பி வந்தப்போ தடுக்காம விட்டேன். அதுக்காக அமெரிக்கா வரை போவியா நீ? அது இன்னும் அவனை முரடனா மாத்தியிருக்கு. என்னதான்டி உன் முடிவு, காலமும் வயசும் காத்திட்டு இருக்காது” என்றார் பாட்டி.
அக்காவை பார்க்க பாவமாகிப் போக, “நீங்க மாமாகிட்டேயும் பேசலாம்தானே பாட்டி?” எனக் கேட்டாள் மஹதி.
“அவன்கிட்ட பேசாதத நீ வந்து பார்த்தியாடி? உட்கார்ந்து பேச வேண்டியது இவங்கதான். ஆறப் போட்டு பேசுவாளாக்கும்னு பார்த்தா ஒரேயடியா தூர போட்டுட்டு போயிட்டா” பாட்டி சொல்லிக் கொண்டிருக்க எழுந்து அறைக்குள் சென்று விட்டாள் ஸ்ரீ.
ஜோதி சங்கடமாக பார்த்தார்.
“அவளும் என் பேத்திதான், விடு. என்னமோ மனசு கேட்காம பேசிட்டேன் இன்னிக்கு. எனக்கு வயசாகிடுச்சு, என் மருமகளுக்கு உடம்பு நோவு. உன்னாலேயும் தனியா என்ன பண்ண முடியும்? இவ சோகத்தை மெல்ல கொண்டாட சொல்லு, நிச்சய வேலைய எப்படியோ நாங்க பார்க்கிறோம், ஒழுங்கா லட்சணமா கல்யாணத்தை நல்லா நடத்தி வைக்க சொல்லு” ஸ்ரீயின் காதில் விழும் படி சத்தமாகவே சொன்னார் பாட்டி.
சற்று நேரத்தில் ஸ்ரீயாகவே வெளியில் வந்தாள். பழைய படி சாதாரணமாக பேசிக் கொண்டனர்.
மிச்சமிருக்கும் நிச்சய வேலைகளை பட்டியலிட்ட ஸ்ரீ தானே பொறுப்பெடுத்தக் கொள்வதாகவும் ஜனாவை உதவ வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டாள்.
“என் விஷேஷத்துக்கு நானே பார்க்கணுமா அண்ணி? நல்ல கதையா இருக்கே” என்றவன் பின் நல்ல பிள்ளையாக முகத்தை வைத்துக்கொண்டு அவனுடைய நிறுவனத்தில் வேலைப் பளு அதிகமாக இருப்பதாக சொன்னான்.
சியாமளனை கேட்டுப் பார்க்கலாம் என எண்ணி அவனுக்கு செய்தி அனுப்பி கேட்டாள். பகல் பொழுதில் வர இயலாது மாலைக்கு மேல் முடிந்தால் பார்க்கிறேன் என பதில் அனுப்பினான், அவன்தான் மஹதியை பெண் பார்த்த அன்று ஜெய் நடந்து கொண்டதில் சுதாரித்து விட்டானே.
யாரும் தேவையில்லை நானே பார்த்துக் கொள்வேன் என தீர்மானித்துக் கொண்டாள்.
ஜனா வீட்டினர் சென்று விட்டனர். மண்டபத்தை தயார் படுத்துவது, சமையல், மேளக் கச்சேரி, இன்னிசை கச்சேரி எல்லாம் ஜெய் பார்த்துக் கொண்டான். மற்ற சடங்கு சம்பிரதாயங்களுக்கும் வரிசை தட்டுகள் வைக்க தேவையானவையும் தான் பார்த்துக் கொள்வதாக மாமியாருக்கு அழைத்து சொன்னாள் ஸ்ரீ.
வீட்டில் வேலையாள் இருக்க, லிஸ்ட் போட்டு கொடுத்தால் அனைத்தும் வாங்கி வந்து விடுவார்கள், மருமகளே செய்யட்டும் என விட்டு விட்டார் துளசி. உடையவர்கள் பார்த்து வாங்குவது போல வேலையாட்கள் செய்ய மாட்டார்கள் என ஸ்ரீக்கு எண்ணம்.
ஜெய் காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் வேளையில், ஸ்ரீ பேசியதை சொன்ன துளசி, “என்னமோ புதுசா பொறுப்பா பேசுறா, என்னத்த செஞ்சு கிழிக்கிறான்னு பார்க்கிறேன்” என்றார் துளசி.
சுரேகாவும் சாப்பிட்டிக் கொண்டிருக்க அவளின் முன்னிலையில் அம்மாவை நேரடியாக கடியவும் முடியவில்லை, மனைவியை பற்றி சுரேகாவின் காது பட அம்மா பேசியதை அவனால் பொறுத்துக்கொள்ளவும் முடியவில்லை.
சுரேகாவுக்கு அத்தையின் இப்படியான பேச்சு புதிது, கடந்த இரண்டு வருடங்களில் ஒரு நாள் ஒரு பொழுது கூட ஸ்ரீயை பற்றி குறை பேசி பார்த்ததே இல்லை அவள். சொல்லப் போனால் யாரை பற்றியுமே குறை பேசாதவர். ஸ்ரீயோடு நல்ல முறையில் பேசிக் கொண்டிருப்பதையும் கவனித்திருக்கிறாள்.
சில சமயங்களில் துளசி அத்தையை தன் முன்னால் மாமியாருடன் ஒப்பீடு கூட செய்து பார்ப்பாள். சீச்சி அவ மனுஷியே கிடையாது, அத்தையோட கால் தூசிக்கு கூட இணையாக மாட்டா எனவும் மனதுக்குள் திட்டியிருக்கிறாள்.
ஜெய் கூட ஸ்ரீயோடு பேசா விட்டாலும் அவளின் நினைவாகவே இருப்பதை புரிந்து வைத்திருக்கிறாள்.
இப்போதைய அத்தையின் பேச்சு அதிர்ச்சி என்றால் ஜெய்யின் முக பாவங்கள் பயத்தை கொடுத்தது. மிகவும் சங்கடமாக உணர்ந்தாள்.
“கடைசி நேரத்துல அத மறந்தேன் இத மறந்தேன், அப்படி செய்யணுமா எனக்கு தெரியாது, அப்படி இப்படினு என்னென்ன கதை சொல்வான்னு நீயும் பார்க்கத்தானே போற சுரேகா. கல்யாணம் பண்ணி வந்த நாள் முதலா புக்கை தூக்கிட்டு திரிஞ்சா அப்புறம் கொழுப்பு கூடிப் போய் வெளிநாட்டுக்கு போனா, வந்தவ எப்படி இருக்காங்கிற, முடிய வெட்டிக்கிட்டு பார்க்கிற பார்வையே மேதாவி தனமா… புகுந்த வீட்டுல வந்து என்ன ஏதுன்னு பார்க்க முடியலை, அவ அம்மா வீட்ல இருந்தே இங்க இருக்க ஒட்டடைய தட்டுவாளாம்” தன் மகனை வெகுவாக வெறுப்பேற்றிக் கொண்டிருந்தார் துளசி.