புதிய உதயம் -22

அத்தியாயம் -22(1)

மஹதியின் நிச்சய விழாவிற்கு நான்கு நாட்கள் முன்னரே சென்னை வந்து விட்டாள் ஸ்ரீ. தானே டாக்சி ஏற்பாடு செய்து கொள்வதாக அம்மாவிடம் சொல்லியிருந்தாள்.

“உன் அக்காவுக்கு கொழுப்பு ரொம்பத்தான் கூடிப் போச்சு” சின்ன மகளிடம் சலித்துக் கொண்ட ஜோதி, ஜெய்க்கு அழைத்து விவரம் சொன்னார்.

“அவ வர்றது தெரியும் அத்தை, நான் பார்த்துக்கிறேன்” என சொல்லி விட்டான் ஜெய். இவனிடம் பேசிய விஷயத்தை மகளிடம் சொல்லியிருக்கவில்லை ஜோதி. முன் கூட்டியே தெரிந்தால் ஜெய்யை தவிர்க்க ஏதேனும் செய்து விடுவாளோ என்ற பயம் அவருக்கு.

நடு இரவில் சென்னை வந்தடைந்தாள் ஸ்ரீ. இரவை தங்கும் விடுதி ஒன்றில் கழித்து விட்டு காலையில் கிளம்பலாம் என திட்டமிட்டிருந்தாள். பாதுகாப்பாக எங்கு தங்கலாம் எந்த டிராவல்ஸ் மூலம் டாக்சி ஏற்பாடு செய்யலாம் போன்ற விவரங்களை ஜம்புலிங்கத்தின் மருமகள் சொல்லியிருந்தாள்.

அவள் வெளி வரவும் அவளது பயணப் பொதிகள் இருந்த டிராலியை யாரோ கைப் பற்றிக் கொள்ள திடுக்கிட்டுப் போய் பார்த்தாள்.

எதிர்பாராத நொடியில் தன் கணவனை கண்டதில் அவளுக்கு பேரதிர்ச்சி. போன போதும் சொல்லிக் கொள்ளவில்லை, வருகிறேன் எனவும் அறிவிக்கவில்லை என்பதில் எல்லாம் எரிச்சலும் கோவமும் உற்றிருந்தவன் டிராலியை தள்ளிக் கொண்டு முன்னே சென்றான்.

ஸ்ரீக்கு பட படப்பாக இருந்தது. அவனது தொனியே முன்பை விட கடினமாக இருப்பதை அவளுக்கு உணர்த்தியது.

‘உடனே அவரோடு நான் ஓடிச் செல்ல வேண்டுமோ?’ என நினைத்தவள் வேகமாக சென்று டிராலியின் மீது கை வைத்து அவனை நிறுத்தினாள்.

பார்வையாலேயே மோதிக் கொண்டனர் இருவரும்.

“விடுங்க” என்றாள்.

“ஆறு மணி நேரம் கார் ஓட்டிட்டு வந்திருக்கேன். சீக்கிரம் வந்தா காலைல ஊர் போய் சேர்ந்திடலாம்” என்றான்.

“ஊருக்கு போறத நான் பார்த்துக்கிறேன்” என அவள் சொல்லவும் டிராலியை அவளிடம் விட்டு விட்டான். அவளை ஏறெடுத்து பாராமல் அங்கிருந்த இருக்கை ஒன்றில் போய் தளர்வாக அமர்ந்து கொண்டான்.

விமான நிலையத்தின் வைஃபை சேவையை அவள் பயன்படுத்திக் கொண்டிருந்தாள். புக் செய்திருந்த டாக்சியின் டிராவல்ஸிலிருந்து வாட்ஸ் ஆப் அழைப்பு வந்தது.

அவளை ஏற்றிக் கொள்ள கார் காத்திருப்பதாக சொன்னார்கள். அவளால் ஜெய்யை அலட்சியம் செய்து விட்டு செல்ல முடியவில்லை. இவள் பக்கமாக திரும்பாமல் எழுந்தும் செல்லாமல் அழுத்தமாக அமர்ந்திருந்தான் ஜெய்.

வந்திருந்த காரை அனுப்பி வைத்தவள் அவனிடம் வந்து நின்றாள், ஆனால் பேசவில்லை. சாவகாசமாக அவளின் பக்கம் திரும்பியவன், “என்ன போலாமா?” எனக் கேட்டான்.

அவளுக்குமே பயங்கர அசதி. விவாகரத்து கேட்பவன் இவ்வளவு தூரம் வரமாட்டான் என புரிந்து கொண்டாள். தங்கை அன்று ஜனாவுடன் பேசிக் கொண்டதில் தனக்கு புரிதலின்மை இருக்கலாம் என நினைத்தாள்.

பிரச்சனைகள் பேசித் தீர்க்கப் படாமல் இருக்க அவன் இழுப்புக்கு செல்லவும் மனம் வரவில்லை. எல்லாமே அவளின் அனுமானம், என்ன நடக்கிறது அவர்களுக்குள் அடுத்தது என்ன என எதுவும் சரியாக புரிபடாத நிலை.

இந்த நேரம் ஏதும் வம்பாக பேசாமல் இவனுடனே ஊர் சென்று விடுவது, மற்றதை அங்கு வைத்து பார்த்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தாள்.

“ரூம் புக் பண்ணிருக்கேன், ரெஸ்ட் எடுத்திட்டு காலைல போலாம்” என்றாள்.

சில நொடிகள் யோசித்தவன், “எந்த ஓட்டல்?” எனக் கேட்டுக் கொண்டே எழுந்தான்.

அவள் விவரம் சொன்னாள். அதன் பின் அங்கிருந்து கிளம்புவதில் கவனமாகினர்.

காரில் செல்லும் போது அவளே, “இன்னொரு ரூம் புக் பண்றேன் உங்களுக்கு” என்றாள்.

“ஓ அது ரொம்ப தேவையா?” கிண்டலாக கேட்டான்.

“என்னோட ஒரே ரூம்ல இருக்க வேணாமே உங்களுக்கு” அவளும் நக்கலாக சொன்னாள்.

அவன் புருவம் நெறிக்க, “நான் கடைசியா உங்க வீட்ல இருந்த நாள் நினைவிருக்கா? அவ்ளோ பெரிய வீட்ல இடமே இல்லாத மாதிரி நைட் ஆஃபிஸ்ல இருந்தீங்களே ஏன்? என் கூட இருக்க விருப்பம் இல்லாமதானே ஓடிப் போனீங்க? அதை நான் மதிக்கிறேன், இந்த தனி ரூம் உங்க கம்ஃபோர்ட்க்குத்தான்” என்றாள்.

கொட்டாவி விட்டுக் கொண்டே தலை கோதிக் கொண்டவன், “நீ ரூம் போய் ரெஸ்ட் எடுத்திட்டு வா, இந்த கார்ல இருக்க இடம் போதும் எனக்கு. எதுக்கு அனாவசியமா செலவு பண்ணிக்கிட்டு?” என்றான்.

“நல்லா சம்பாதிக்கிறேன், செலவு பத்தி கவலை பட வேணாம்”

“அந்த திமிருதான் இப்படியெல்லாம் பேச சொல்லுது என்ன?”

“உங்க கண்ணுக்கு திமிரா தெரிஞ்சா… ஓ திமிருன்னே வச்சுக்கோங்களேன், என்ன இப்போ கெட்டுபோச்சு?” என்றாள். ஆனால் அவள் நேரத்துக்கு அந்த விடுதியில் வேறு அறைகள் காலி இல்லை.

அதை சொன்னவள் வேறு விடுதியில் அறை எடுக்கவா என கேட்டாள்.

“நிறைய சம்பாதிக்கிறியே, அந்த ஓட்டல விலை பேசுவேன்ல நினைச்சேன்!” இளக்காரமாக சொன்னான்.

அவள் எரிச்சலோடு வேறெங்கோ பார்த்தாள். அந்த விடுதியில் காரை நிறுத்தியவன் அவளது பொதிகளை உள்ளே வைக்க உதவினான். அறையில் அவளை விட்டவன் பாதுகாப்பாக இருக்கிறதா என சோதனை செய்தான்.

அவனுக்கு எல்லாம் திருப்தியாக இருக்க, “காலைல ரெடி ஆனதும் கால் பண்ணு” என சொல்லி வெளியேறி விட்டான்.

எங்கு போய் தங்குவான் என அவளுக்கு கவலையாகி விட்டது. வேகமாக வெளியே சென்றவள் காரிடாரில் வைத்து அவனை பிடித்து விட்டாள்.

“எங்க போவீங்க?” எனக் கேட்டவளை, ‘பார்டா அக்கறையை!’ என்பது போல பார்த்தான்.

“ப்ச், பரவாயில்லை வாங்க அந்த ரூம்லேயே ஸ்டே பண்ணிக்கோங்க” என்றாள்.

“ரொம்ப பெரிய மனசுதான் உனக்கு. நீ பெர்மிஸன் தந்துதான் உன் கூட வந்து நான் தங்கணும்ங்கிற நிலை இன்னும் வந்திடல. நான் தள்ளிப் போறேன்னா என் கோவத்தை தாங்குற சக்தி உனக்கில்லைனு தெரிஞ்சதால. இன்னிக்குன்னு இல்லை இதுக்கு முன்ன கூட அதனாலதான் உன்னை வுட்டுட்டு ஓடிப் போயிட்டேன், இன்னிக்கும்…” என்றவன் அவளை அழுத்தமாக பார்த்து விட்டு முன்னே நடந்தான்.

அவனுடைய இந்த விளக்கம் அவளுக்கு ஏற்புடையதாக இல்லை. பழையதை பற்றி தர்க்கம் செய்ய இந்த நேரம் உகந்ததாகவும் கருதவில்லை. ஆகவே மற்றொருமுறை இங்கேயே தங்கும் படி சொன்னாள்.

காதில் வாங்கிக் கொள்ளாதவன் சென்று விட்டான். எங்கு போவான் என கவலையுற்றாலும் அதற்கு மேலும் என்ன சொல்வது அவனிடம் என நினைத்தவள் அறைக்கு சென்று விட்டாள்.

அருகில் வேறு ஓட்டல் என்ன இருக்கிறது என ஜெய் கைப்பேசியில் பார்த்திருந்தான். அந்த விடுதியிலேயே ஏற்கனவே புக் செய்யப் பட்டிருந்த அறை ஒன்றை கேன்சல் செய்து விட்டதாக கூறினார்கள். நல்லது என அந்த அறையிலேயே தங்கிக் கொண்டான்.

ஓட்டலின் வைஃபை உபயோகித்துக் கொண்டவள் தங்கைக்கு தன்னை பற்றிய விவரத்தை வாட்ஸ் ஆப் செய்து விட்டு ஆடை மாற்றிக் கொண்டு படுத்தாள்.

காலை ஏழு மணிக்கெல்லாம் விழித்து விட்டவன் அவள் உறங்கட்டும் என தொந்தரவு செய்யாமல் மெதுவாக தயாராகி காலை உணவு சாப்பிட்டான். பத்து மணி வரை காத்திருந்தவனுக்கு அதற்கு மேல் லேசான பயம் வந்தது. அவளை தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப்பில் முயற்சித்தான். அழைப்பை அவள் ஏற்கவில்லை.

அறையின் அழைப்பு மணி வேலை செய்யவில்லை, கதவை தட்டிப் பார்த்தும் பயனில்லை, கீழ் தளம் சென்று அழைப்பு மணி பற்றி கூறி விடுதி பணியாளரை கடிந்து கொண்டான். இண்டர்காம் மூலமாக அழைத்து பார்த்தார்கள், அழைப்பு ஏற்கப்படவில்லை.

பணியாளர்களும் கதவை தட்டி பார்த்தனர். ஜெய்க்கு பதற்றம் அதிகரித்து விட்டது.

“கதவ உடைங்க” என சத்தம் போட்டான்.

அவனை சமாதானம் செய்து கீழே அழைத்து வந்தனர். அறையின் இன்னொரு சாவியை எடுத்தான் மேனேஜர். தன்னிடம் தரும் படி கேட்டான் ஜெய். மேனேஜர் மறுப்பாக பார்த்தான்.

தான்தான் ஸ்ரீயின் கணவன் என சொன்னான் ஜெய். பின் ஏன் வேறு வேறு அறையில் தங்குனீர்கள் என கேள்வி கேட்டான் மேனேஜர்.

“அவளுக்கு என்னாச்சோன்னு டென்ஷன்ல இருக்கும் போது நீயும் இரிடேட் பண்ணாதய்யா!” சீறிய ஜெய், வெடுக் என சாவியை பறித்துக் கொண்டான்.

யார் திறந்தால் என்ன எனும் நிலைக்கு வந்து விட்ட மேனேஜர் ஜெய்யின் பின்னால் நடந்தான்.

“இந்தாளு என்னய்யா தாடியும் பல்க் பாடியுமா பார்க்க ஒரு மார்க்கமா இருக்கான். நிஜமாவே புருஷன் பொண்டாட்டிதானோ, இவங்களுக்குள்ள சண்டை வந்து அந்தம்மா ஏதும் பண்ணிக்கிடுச்சோ” தன்னருகில் வந்து கொண்டிருந்த பணியாளரிடம் மேனேஜர் சின்ன குரலில் சொன்னது ஜெய்யின் கூர்மையான காதுகளில் விழுந்து விட்டது.

சட்டென திரும்பி மிரட்டும் பார்வை பார்த்த ஜெய்க்கு ஸ்ரீயை பற்றிய கவலையே பிரதானமாக இருக்க தற்காலிகமாக மேனேஜரை விட்டு சென்றான். லிஃப்டில் செல்லும் அளவுக்கு பொறுமை இல்லாமல் போக மாடிப் படிகளில் ஏறி விரைந்தான்.

மேனேஜரும் இன்னொரு பணியாளும் லிஃப்ட் மூலமாக அறை வாசலுக்கு வந்து விட்டனர், அவர்களுக்கும் என்னவோ ஏதோ என பயம்தான்.

“டோர் ஓபன் பண்ணிட்டு நான் மட்டும் போறேன், எதுவும்னா நானே கூப்பிடுறேன்” என்றான் ஜெய்.

“அதெப்படிங்க ஸார்?” என்ற மேனேஜரை முறைத்தான். நீ என்ன பார்த்தாலும் என்னை அது பாதிக்காது எனும் படி மேனேஜர் நிற்க, கதவை திறந்து உள்ளே சென்றான் ஜெய்.

ஏசியின் குளிர் அறையை நிறைத்திருக்க முகம் வரை போர்த்திக் கொண்டு படுத்திருந்தாள் ஸ்ரீ. அவளருகில் அமர்ந்தவன் அவளின் போர்வையை முகத்திலிருந்து மட்டும் விலக்கி நாசியில் கை வைத்து பார்த்து நிம்மதியடைந்தான்.

“என்ன ஸார் உயிர் இருக்குதானே?” எனக் கேட்டான் மேனேஜர்.

“யோவ் நல்லதா பேச வராதா உனக்கு? கண்டதையும் பேசிக்கிட்டு, போங்க நான் பார்த்துக்கிறேன்” என கோவமாக சொன்னான் ஜெய்.

“மேடம் கண்ணு முழிக்கட்டும் ஸார், அவங்க சொல்லட்டும் நீங்க இங்க இருக்கலாம்ங்கிறதை. ஏதாவது ஒண்ணுன்னா நான்தான் பதில் சொல்லியாகணும்” என்ற மேனேஜர் அங்கிருந்து செல்வதாக இல்லை.

ஸ்ரீயின் கன்னத்தில் அடித்து எழுப்பி பார்த்தான் ஜெய். அசைந்தாலும் விழிகளை திறக்க மறுத்தாள். தண்ணீர் எடுத்து முகத்தில் ஊற்ற போனான் மானேஜர்.

“யோவ் ஜெட் லாக் ஆகி தூங்குறா அவ, தண்ணியெல்லாம் ஊத்தாத” என்ற ஜெய் விரல்களை தண்ணீரில் நனைத்து அவளின் கண்ணிமைகளை ஈரப் படுத்தினான். மீண்டும் கன்னங்களை தட்டினான்.

விழித்துக் கொண்டவள் கண் எரிச்சலில் முகத்தை சுருக்கினாள்.

“மேடம் நல்லா இருக்கீங்கதானே? ஒண்ணும் பிராப்லம் இல்லையே?” என விசாரித்தான் மேனேஜர்.

அந்நிய ஆடவர்கள் தன்னறையில் இருக்கவும் சிறு பயமும் குழப்பமுமாக அனிச்சையாக தன் போர்வையை இறுக்கிப் பிடித்துக்கொண்டாள்.

ஜெய் அவளின் கையை பற்றிக் கொண்டான், மேனேஜர் மீண்டும் அவளின் நலனை விசாரிக்க, எழுந்து அமர போனாள். அவளின் முகமே அவளுக்கு முடியவில்லை என்பதை ஜெய்க்கு உணர்த்தியிருந்தது.

“படு படு, நான் யார் என்னன்னு சொல்லிடு போயிடுவாங்க அவங்க” என ஜெய் சொல்லவும் அப்போதும் புரியாமல் பார்த்தாள்.