அத்தியாயம் -2(2)

புதிய கட்டுமான நிறுவனங்களுக்கு கூட வாய்ப்பு செல்லலாம் என பேச்சு அடிபடுகிறது. அந்த வாய்ப்பை அடைந்து விட முயற்சி செய்கிறான் ஜெய். ஒரு வேளை அந்த வாய்ப்பு இவனுக்கே கிடைத்து விட்டால் அவனுடைய தொழில் வாழ்க்கையில் அது அவனுக்கு நல்ல திருப்பு முனையாக அமையும்.

 ஆதலால் இப்போதைக்கு தேவையில்லை என்றாலும் சமீப எதிர்காலத்தில் தேவைப்படலாம் என கருதி ஜம்புலிங்கம் சொல்லும் பெண்ணை வேலைக்கு எடுப்பதால் நட்டமில்லை என்ற முடிவுக்கு வந்தான்.

அவனிடம் பணி செய்யும் என்ஜினீயர் சசிகுமாரை அழைத்து விவரம் சொன்னான்.

“பொண்ணா?” வியப்பாக கேட்டான் சசி.

“ஏன் இருந்தா என்ன?” எனக் கேட்டான் ஜெய்.

“சைட் ஒர்க் எல்லாம் நேரம் காலம் பார்க்காம நம்மள மாதிரி ஒரு பொண்ணால பார்க்க முடியுமா? பெரிய சிட்டிஸ்ல பார்க்கிறாங்கதான், அந்த கன்ஸ்ட்ரக்ஷன்ஸும் நம்மளோடதும் ஒண்ணு இல்லையே, நமக்குத்தான் தலைவலி”

“என்ன சொல்ல வர்ற? நம்மளோடது கத்துக்குட்டி கம்பெனி, பொண்ணுக்கு பாதுகாப்பு இல்லைனா?” கோவமாக கேட்டான் ஜெய்.

“ஐயையோ அப்படி இல்லை ஸார், அது… சரி… நீங்க சொன்னா சரிதான் ஸார்” என்றார் சசி.

அவனை அனுப்பி வைத்த ஜெய்யின் கண்கள் அவனுடைய அலுவலகத்தை வட்டமிட்டன. மிகவும் சின்ன இடம்தான்.

அலுவலகத்தை இடம் மாற்ற வேண்டும் என தோன்றுகிறது. புது அலுவலகம் வாடகைக்கு அல்லாமல் சொந்தமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்ற யோசனையும் இருக்கிறது.

‘பார்க்கலாம்’ என தனக்கு தானே சொல்லிக் கொண்டவன் அடுத்த வேலைகளை பார்க்க தொடங்கி விட்டான்.

*****

காலைக்கும் மதியத்திற்கும் சேர்த்து தன்யஸ்ரீ சமைத்து முடித்த போது டியூசனிலிருந்து வந்து விட்டாள் பதினோராம் வகுப்பு பயிலும் மஹதி. ஒற்றை சடை என்றால் தானே பின்னிக் கொள்வாள், இரட்டை சடை போட இன்னும் தெரியவில்லை.

குதிரைவால் போட்டுக் கொண்டு டியூஷன் சென்றிருந்த மஹதி தலை முடியை அவிழ்த்து விட்டுக் கொண்டு, “அக்கா டைம் ஆகிடுச்சு” என சத்தமிட்டாள்.

திருமணம் ஒன்றுக்காக தைக்க சொல்லியிருந்த பிளவுஸ் வேலைகள் முடியாததால் நேரமாகவே தையல் கடைக்கு அவரது ஸ்கூட்டரில் சென்றிருந்தார் ஜோதி.

வேகமாக தங்கைக்கு பின்னலிட்டு விட்ட ஸ்ரீ சாப்பாட்டையும் பேக் செய்து தந்தாள். இரண்டு இட்லிகளை கொறித்து விட்டு கை கழுவப் போன தங்கையை அதட்டி உருட்டி இன்னும் இரண்டு இட்லிகளை விழுங்க செய்தாள்.

பையை தோளில் மாட்டிக் கொண்டு வாசல் வரை வந்து விட்ட மஹதி நினைவு வந்தவளாக திரும்பி நின்று, “ஆல் த பெஸ்ட் அக்கா! ஈவ்னிங் வெறும் குட் நியூஸ் போதாது, ட்ரீட் வேணும்” என சொல்லி வெளியே வந்தாள்.

சென்ற ஆண்டு வரை நடந்துதான் பள்ளி, டியூசனுக்கெல்லாம் சென்று வந்தாள் மஹதி. போன பிறந்தநாளுக்கு சைக்கிள் வாங்கி தந்து விட்டார் ஜோதி. ஸ்ரீயின் கவனிப்பில் ஒரு தூசு கூட இல்லாமல் இன்னும் வாங்கியது போலவே புதிதாக இருந்தது சைக்கிள்.

மஹதி புறப்பட்டதும் ஸ்ரீயும் குளித்து இஸ்திரி செய்யப் பட்ட சுடிதார் அணிந்து, இடுப்பை தாண்டி நீண்டிருந்த கருங்கூந்தலை சலித்துக் கொண்டே பின்னலிட்டாள். முடியை அளவாக வெட்டிக் கொள்ளலாம் என்றால் கொலைக்குற்றம் போல பார்க்கிறார் ஜோதி.

தயாரானவள் தெரு முக்கத்தில் இருக்கும் விநாயகருக்கு வேலை கிடைத்து விட வேண்டும் என மனமுருக வேண்டி விளக்கு போட்டு விட்டே காலை சாப்பாட்டை முடித்தாள்.

அம்மாவுக்கு அழைத்து சொல்லி விட்டு பேருந்து வரும் நேரத்தை கணக்கிட்டுக் கொண்டு வீட்டிலிருந்து நடை போட்டாள் ஸ்ரீ.

வழக்கம் போல பேருந்து நிறுத்தத்தில் நின்றான் தீபன். அடுத்த தெருதான், எப்படித்தான் இவள் போகும் இடமெல்லாம் தெரிந்து தொலைக்கிறதோ, வேறு வேலை வெட்டி இல்லாமல் வந்து விடுகிறான். சென்னையிலிருந்த சில காலம் இவனது தொல்லை இல்லாமல் நிம்மதியாக இருந்தாள்.

இங்கு வந்த பிறகு மறுபடியும் ஆரம்பித்து விட்டான். ஒரு நாள் யாருமில்லாத சமயத்தில் இப்படி வராதே என எச்சரிக்கை கொடுத்தும் விட்டாள். விடா முயற்சி பலன் தரும் என்ற நம்பிக்கையில் அவளை சுற்றிக் கொண்டே இருக்கிறான்.

தீபனை கண்டு கொள்ளாமல் வந்த பேருந்தில் ஏறிக் கொண்டாள். ஜன்னலோர இருக்கை கிட்டியதில் இதமாக உணர்ந்தாள்.

அரை மணி நேரத்தில் வந்த நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டவள் ஜம்புலிங்கம் சொல்லியிருந்த முகவரிக்கு அவரே வழி சொல்லியிருந்தாலும் அங்கிருந்த கடை ஒன்றில் கேட்டு தெளிவு படுத்திக் கொண்டாள்.

ஐந்து நிமிட நடைக்கு பின் ஜெய் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் போர்ட் அவளின் கண்ணில் பட்டது.

பரவாயில்லை வீட்டிலிருந்து போய் வர வசதியாகத்தான் இருக்கிறது என திருப்தி பட்டுக் கொண்டே அலுவலகத்திற்குள் நுழைந்தாள்.

அங்கிருந்த கனிணி முன் அமர்ந்திருந்த பெண்ணிடம் விவரம் சொல்லவும் ஸ்ரீயை அமர சொன்ன அந்த பெண் உள் அறைக்கு சென்று விட்டு வந்தாள்.

உடனே அழைப்பு வரவும் எழுந்த பதட்டத்தை வெளிக் காட்டாமல் மனதை ஒருமுகப் படுத்திக் கொண்டே உள்ளே சென்றாள் ஸ்ரீ.

கண்ணியமான தோற்றத்தில் முகத்தில் அமைதியும் தெளிவும் பளிச்சிட வந்த ஸ்ரீ முதல் பார்வையிலேயே ஜெய்யிடம் நல்ல மதிப்பை பெற்றாள். எதையும் காட்டிக் கொள்ளாமல் அவளை அமர சொன்னவனுக்கு அந்த முகத்தை முன்னெப்போதோ எங்கேயோ பார்த்த நினைவு.

சில நொடிகள் ஆழ்ந்து யோசித்துப் பார்த்தான், ம்ஹூம் பலனில்லை. சிந்தனையுடன் அவளது பெயரை கேட்டுத் தெரிந்து கொண்டும் யாரென புரிபடவில்லை.

அவளது பயோடேட்டா வாங்கிப் பார்த்த பின்தான் இன்னாரென விளங்கியது. எதிரில் இருந்தவளுக்கோ அவனை இன்னும் யாரென அடையாளம் தெரியவில்லை.

‘என்ன திண்ணக்கம் இருந்தால் என்னிடமே வேலைக்கு வந்திருப்பாள்?’ கொதித்தது அவனது மனம்.

பள்ளிப் பருவத்திலேயே தன்னிடம் எல்லை மீற பார்த்தவள் என்ற நினைப்பும் அவனிடம் உண்டுதானே? இப்போதும் திட்டமிட்டுத்தான் தன்னிடம் வேலைக்கு சேர வந்திருக்கிறாளோ என சந்தேகித்தான்.

என்ன சொல்லி அவளை காயப்படுத்தியிருப்பானோ? அப்படி அவன் பேசும் முன் ஜம்புலிங்கம் அழைத்தார். தன்யஸ்ரீ வந்து விட்டாளா, பணி அமர்த்திக் கொண்டாயா என விசாரித்தார்.

அவரின் பேச்சில் தன் தனிப்பட்ட கோவத்தை தள்ளி வைத்தான். மனமே இல்லைதான், இருப்பினும் வேறு வழியில்லாமல், “நீங்களே சொன்னதுக்கப்புறம் வேலை கன்ஃபார்ம் ஆனது மாதிரிதானே ஸார்?” என்றான்.

சிரித்துக் கொண்டவர், “ஒரு விஷயம் ஜெய், சம்பளம் கூட இன்னும் கொஞ்சம் சேர்த்து தரலாம், டேலண்ட்டான பொண்ணுப்பா” என்றார்.

எதிரில் இருப்பவளின் பார்வை மரியாதையுடனும் ஆவலுடனும் இவனையே பார்த்திருக்க, இவனுக்குத்தான் அக்னி சுழலில் சிக்கியது போல இருந்தது.

“பார்க்கிறேன் ஸார்” என்றான் ஜெய்.

சரியென சொல்லாமல் இப்படி சொன்னதில் ஜம்புலிங்கத்துக்கு அதிருப்தி ஏற்பட்டாலும் காட்டிக் கொள்ளாமல் மேலும் இரண்டு நிமிடங்கள் பொதுவாக பேசி விட்டு உரையாடலை முடித்துக் கொண்டார்.

தன் மனக் கொதிப்பை வெளிப்படுத்தாமல் அவளை நேர்காணல் செய்தான். அறிவு செறிந்த பக்குவமான பெண் என்பதை அவனது புத்தி உணர்ந்து கொண்டது. ஆனாலும் அவளின் பின்புலம் அவன் உணர்ந்து கொண்டதை ஒன்றுமே இல்லாமல் செய்து கொண்டிருந்தது.

வேலை கற்றுக் கொடுப்பது இரண்டாம் பட்சம்தான், காதல், கன்றாவி என்றெல்லாம் தன்னிடம் வாலாட்ட நினைத்தால் என்ன நடக்கும் என்பதை சிறப்பாக படிப்பிக்கிறேன் என கறுவிக் கொண்டான்.

பணிக்கு எடுத்துக் கொண்டேன், சம்பளம் இவ்வளவு என்றவன், “ஸார் சொன்னார், ரொம்ப இன்டெலிஜென்ட், ரொம்ப டேலண்ட் அப்படி இப்படின்னு” அடுத்து எரிச்சல் சுமந்த பார்வையோடு எங்கேயோ பார்த்தான்.

ஸ்ரீயின் பார்வையும் அவனது பார்வையின் திசைப் பக்கம் சென்றது. சுவரில் பல்லி ஒன்று பூச்சியை பிடிக்கும் காட்சி தென்பட்டது.

அவனே பேசட்டும் என அமைதி காத்தாள்.

தன்னை தன் கோவத்தை கட்டுப்படுத்திக் கொண்டவன், “உண்மையும் நேர்மையும் இல்லைனா என்கிட்ட ஒரு நாள் கூட தாக்கு பிடிக்க முடியாது, மத்தது என் ஸ்டாஃப் சொல்வாங்க” என சொல்லி வெளியில் அனுப்பி வைத்தான்.

ஸ்ரீக்கு ஏதோ அசாதாரணமாக பட்டது. இந்த சூழல் ஒவ்வாமை ஏற்படுத்துமோ என்ற ஐயமும் எழுந்தது. ஆனால் இப்போது அவளுக்கு ஒரு வேலை அதுவும் உள்ளூரிலேயே பார்க்கும் வேலை அதி அவசியமாகிற்றே.

அந்த வாரத்தில் ஒரு நல்ல நாளில் வேலையில் சேர்ந்து கொள்ளும் படி அறிவுறுத்திய அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் அவளிடம் கொடுக்க பட்டது. அப்போதுதான் ஜெயவர்தன் எனும் அவனுடைய பெயரை முழுமையாக படித்தாள்.

மறக்க கூடிய பெயரா இது? சில வருடங்களுக்கு முன் அவளுக்கு தெரிந்த துளசி அத்தையின் மகனையும் அவனே பின்னாளில் எதிரியாக மாறிப் போனதையும் நினைத்துப் பார்த்தாள்.

ஒல்லியாக மனதில் பதிந்து போன அவனது அப்போதைய உருவத்துக்கும் இப்போதிருக்கும் திடகாத்திர உடலமைப்புக்கும் வித்தியாசம் இருந்தது. ஆதலால்தான் பார்த்த உடனே அவளால் அவனை அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை.

இப்போது அவன் யாரென தெரிந்து போனதில் அவளும் அதிர்ந்து போனாள்.

‘இந்த அவசரக்கார சிடுமூஞ்சி சிங்காரத்திடமா வந்து வேலைக்கு சேர வேண்டும்? ஐயையோ!’ மனதுக்குள் பலமாக அலறினாள்.

‘இவனிடமேதான் வந்து நீ அகப் பட்டுக் கொள்ள வேண்டும், மீள முடியா சிறை போல இவனது கைகளில் சிக்கித் தவிக்க வேண்டும்’ என அவளின் தலையில் எழுதியிருக்க பாவம் அவளும் என்னதான் செய்வாள்?