புதிய உதயம் -2

அத்தியாயம் -2(1)

‘ஜெய் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்’ திருச்சியில் இப்போதுதான் வளர்ந்து வரும் கட்டுமான நிறுவனம். தம்பி ஜனாவையும் தன்னோடு வைத்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில்தான் அவனை சிவில் இன்ஜினியரிங் படி என சொன்னான் ஜெய்.

ஏற்கனவே அண்ணனின் கெடு பிடியில் திணறிக் கொண்டிருந்த ஜனா படிப்பு விஷயத்தில் மட்டும் அண்ணனின் பேச்சை கேட்கவில்லை. தன் பேச்சுக்கு அண்ணனை சம்மதிக்க வைக்க அம்மா, பாட்டி என இரண்டு பெண்மணிகளையும் சரணடைந்து விட்டான். அவர்களின் சிபாரிசில் தன் விருப்ப படி கலைக் கல்லூரியில் சேர்ந்து விட்டான்.

“இதை படிச்சிட்டு என்னடா பண்ண போற?” எனக் கேட்ட அண்ணனிடம், “ஆர்ட்ஸ் படிச்சிட்டு யாருமே வாழாத மாதிரி சொல்லாத ண்ணா. படிச்சி முடிச்சிட்டு என்ன பண்ணுவேன்னு அப்ப பாரு” என சொல்லி விட்டான் ஜனா.

தம்பி படிப்பில் சுமார் ரகம் என ஜெய்க்கு நன்றாக தெரியும். ஜனாவின் மறுப்பை பொருள் செய்யாமல் பதினோராம் வகுப்பில் கணிதம் மற்றும் அறிவியல் பாடப் பிரிவில் அவனை சேர்த்து விட்டிருந்தான். அனைத்துக்கும் டியூசன் வைத்து போதாத குறைக்கு தம்பியின் தேர்வு சமயத்தில் அவனுடன் இவனும் சேர்ந்து கண் விழித்து படித்து, படிப்பித்து எனதான் தேர்வுகளை எழுத வைத்தான் ஜெய்.

அப்படியும் கூட பார்டர் மதிப்பெண்கள் பெற்றே தேர்ச்சி பெற்றிருந்தான் ஜனா. ஆகவே இந்த முறை அதிகமாக வலியுறுத்தாமல் அவன் விருப்பத்துக்கே விட்டு விட்டான். என்னவோ படிக்கட்டும், நாமே பார்த்து ஏதாவது அவனுக்கு வழி செய்து விடலாம் என்ற நினைப்பில் இருந்தான்.

ஜனாவோ எதிர்கால வாழ்க்கை பற்றிய சிந்தனை இல்லாமல் உல்லாச பேர்வழியாக இருந்தான்.

ஜெயவர்தனின் அலுவலகம் அவனது வீட்டிலிருந்து சற்று தொலைவில்தான் இருந்தது. அலுவலகம் என்றால் பெரிய கட்டிடம் இல்லை, பெரிய வீடு ஒன்று மூன்று போர்ஷன்களாக பிரிக்கப் பட்டு வாடகைக்கு விடப் பட்டிருந்தது. அவற்றில் ஒற்றை படுக்கையறை கொண்ட ஒரு போர்ஷன்தான் அவனுடைய அலுவலகம்.

நகரின் மத்தியப் பகுதியில் இருப்பதால் வாடகையும் சற்று அதிகம்தான், இந்த இடம்தான் வசதி என்பதால் பணத்தை பெரிதாக நினைக்காமல் இந்த இடத்தையே அலுவலகம் ஆக்கியிருந்தான்.

நேரம் காலம் பாராமல் உழைத்து அதன் பயனாக நல்ல பெயரையும் ஈட்டியிருந்தான்.

படித்து முடித்து இரண்டு வருடங்கள் ஜம்புலிங்கம் என்பவரிடம்தான் வேலை பார்த்தான். ஏட்டுக் கல்வியில் கற்றறிந்த தொழிலை அனுபவ பாடமாக சொல்லித் தந்தவர் அவர்தான். அவரிடம் முறையாக சொல்லிக் கொண்டுதான் தனி நிறுவனம் துவங்கினான்.

முதல் பணியே அவர் வாங்கித் தந்ததுதான். இப்போதும் அவர்களுக்குள் நல்ல உறவு நிலை இருந்தது. ஜம்புலிங்கம் மேல் அளவு கடந்த மரியாதை வைத்திருந்தான் ஜெய்.

வெகு நாட்களுக்கு பிறகு அவனுக்கு ஜம்புலிங்கத்திடமிருந்து அழைப்பு வந்தது.

அவருக்கு தெரிந்த பெண் சிவில் இன்ஜினியரிங் முடித்திருப்பதாகவும் இவனுக்கு கீழ் வேலை செய்ய வைத்துக்கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.

ஜம்புலிங்கத்திற்கு இரண்டு மக்கள், ஆறு மாதங்களுக்கு முன்புதான் இருவரும் வெளிநாட்டில் செட்டில் ஆகியிருந்தனர். சமீபத்தில்தான் அவரது நிறுவனத்தை விற்றிருந்தார். இவரும் இவரது மனைவியும் கூட வெளி நாட்டு வாழ்க்கைக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார். ஆகவேதான் அந்தப் பெண்ணுக்காக ஜெய்யிடம் பரிந்துரை செய்தார்.

“ரொம்ப வேண்டியப் பட்ட பொண்ணு ஜெய், நல்ல படிப்பாளி, திறமைசாலியும் கூட. என்ன… வசதி குறைச்சலான குடும்பம், சென்னைல நல்ல வேலை கிடைச்சு அஞ்சாறு மாசம் போயிட்டிருந்தது, அப்பன்னு பார்த்து அந்த பொண்ணோட அம்மாக்கு பைபாஸ் பண்ண வேண்டியதா போச்சு. வேலைய விட்டுட்டு இங்கேயே வந்திடுச்சு. திரும்ப சென்னை போலாம்னா இங்க விட்டுட்டு தெரியாத ஊருக்கு போய் எப்படி பொழைக்கன்னு அது அம்மா கவலை படுறாங்க. அதுவும் சரிதானே, அதனாலதான் உங்கிட்ட வேலைக்கு எடுத்துக்க சொல்றேன். என் பொண்ணு மாதிரிப்பா, வேலைக்கு எடுத்துக்க” என நீளமாக பேசியிருந்தார் ஜம்புலிங்கம்.

அவர் எது சொன்னாலும் மறுக்கும் இடத்தில் இல்லை ஜெய், இத்தனை உறுதியாக அவர் சொல்ல எப்படி மாட்டேன் என்பான்.

பெரிதான சம்பளம் எதிர் பார்க்க கூடாது, திறமையிருந்தால் நானே கூட்டித் தருவேன் என அவரிடம் சொன்னவன் அந்த பெண்ணை நாளையே தன்னை பார்க்க வரும் படி சொல்லி கைப்பேசியை வைத்தான்.

ஆரம்பத்தில் ஜெய் மட்டுமே பணியாட்கள் வைத்து செயல்பட்டு வந்தான். ஆறு மாதங்களில் இரண்டு வீடுகளை முடித்து நல்ல படியாக கொடுக்கவும் சில நல்ல வாய்ப்புகள் அடுத்தடுத்து தேடி வந்தன.

ஒரே நேரத்தில் நான்கைந்து இடங்களில் வேலை நடக்க, இவனால் தினமும் எல்லா இடங்களுக்கும் நேரில் செல்ல முடியவில்லை. வேலையாட்கள் சில குளறுபடிகள் செய்ய ஆரம்பித்தனர். வாடிக்கையாளருக்கும் இவனுக்கும் மனஸ்தாபம் ஆகும் நிலையெல்லாம் நேரிட்டது. நடந்த தவறுகளை சரி செய்யும் போது நட்டமும் உண்டானது.

நிரந்தர தீர்வு வேண்டி ஜம்புலிங்கத்திடம்தான் சென்று நின்றான்.

“தொழில் ஆரம்பிச்ச புதுசுலேயே நிறைய பேர் வாய்ப்பு தர்றாங்கன்னா சாதாரணம் இல்லை ஜெய். உன் திறமையை தாண்டி ஏதோ உனக்கு அதிர்ஷ்டமும் வேலை செய்யுது. இப்ப போயி பேரை கெடுத்துக்குவியா? பேசாம இன்னும் ரெண்டு பேரை கூட வச்சுக்க” என யோசனை சொன்னார்.

இன்ஜினியர்களை வேலைக்கு வைத்துக் கொண்டால் அவர்களுக்கு சம்பளம் என்றே பெருந்தொகை கொடுக்க வேண்டி வருமே என மிகவும் தயங்கினான். இன்னும் சில வருடங்கள் சென்றால் பரவாயில்லை, இப்போது என்றால் அவனுக்கு சிரமம்தான்.

தற்சமயம் அவனுடைய பணத்தை முதலீடாக போட்டுத்தான் கட்டிடங்கள் எழுப்புகிறான். குறிப்பிட்ட தொகையை மட்டும் முன் பணமாக கொடுத்து ஒப்பந்தம் போட்டுக் கொள்வார்கள் வாடிக்கையாளர்கள். பாதி வேலை முடிந்து குறிப்பிட்ட தொகை, முழு வேலை முடிந்த பின் மிச்ச பணம் எனதான் செட்டில் செய்வார்கள்.

இதிலேயே லேபர் கான்ராக்ட், மெட்டீரியல் கான்ராக்ட் என இரண்டு விதங்கள் இருந்தன. முதல் வகையில் கட்டிடம் எழுப்பி தருவதோடு முடிந்தது, டைல்ஸ் போடுவது, மின்சாரம் மற்றும் பிளம்பிங் பணிகள், பெயிண்டிங் வேலை என மற்ற வேலைகள் வராது. இரண்டாவது வகையில் அனைத்தையும் முடித்து தர வேண்டும்.

இரண்டையுமே செய்கிறான் ஜெய். சரியாக கணக்கிட்டு செய்தால் மெட்டீரியல் கான்ட்ராக்ட் முறையில்தான் அதிக லாபம் பெறலாம். சிக்கல் என்னவென்றால் காலம் தாழ்த்தக் கூடாது.

வேலை ஆரம்பித்த மூன்று மாதங்களுக்குள் முடித்துக் கொடுத்து விட்டால் நல்ல லாபம், இல்லையென்றால் கட்டுமான பொருட்களின் விலை மாற்றங்களால் நட்டம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

ஜெய்யே நேரடியாக என்றால் சரியாக பார்த்துக் கொள்ள முடியும், மற்றவர்களுக்கு இந்த நெளிவு சுழிவையெல்லாம் புரிய வைத்து ஒழுங்காக செயல்படுத்த வைக்க வேண்டுமென்றால் அவர்களுடன் நேரம் செலவிட வேண்டும்.

விரைவாக கற்றுக்கொண்டால் பரவாயில்லை, மந்தமாக இருந்தால் அதுவே அவனுக்கு தொல்லையாக மாறும்.

காரணங்களை அவன் அடுக்க, “டேய் டேய் இவ்ளோ சொல்ற, இதையெல்லாம் நான் பார்த்திருந்தா உன்னை வேலைக்கு எடுத்திருக்க முடியுமா?” எனக் கேட்டார் ஜம்பு.

பதில் அவருக்கே புரியும் என்பதால் அமைதியாக நின்றான்.

“சரிதான், நீயும் மத்தவங்களும் ஒண்ணு இல்லைனு சொல்றியா? இருக்கட்டும் ஜெய், நாலு பக்கம் கரை இருக்க குளம் இல்லடா நீ, கரை காணாத சமுத்திரம். உன்னால துரு புடிச்ச தகரத்தையும் பள பளப்பாக்க முடியும். எல்லாத்தையும் சமாளிப்ப நீ, பண விஷயத்துக்கும் நான் வழி சொல்றேன், தயங்காம ஆள சேர்த்துக்க” என தீர்மானமாக கூறினார் ஜம்பு.

ஜம்புலிங்கத்தின் தயவால் அவருக்கு கட்டுமான பொருட்கள் வழங்கும் பெரிய நிறுவனங்கள் ஜம்புக்கு கொடுக்கும் சலுகைகளை இவனுக்கும் கொடுத்தன, அவர் பணம் வாங்கல் கொடுக்கல் வைத்திருக்கும் இடங்களில் அவரது பெயரை சொல்லி அவசரத்திற்கு எந்த அடமானமும் இல்லாமல் பணம் கடனாக பெற்றுக் கொண்டான்.

ஜம்புலிங்கமும் வேறு யாருக்கும் இப்படியான உதவிகளை செய்வது கிடையாது. ஜெய்யின் திறமையை தாண்டி ஏதோ அவன் மேல் அபிமானமும் பிரியமும் அவன் மீது கொண்டிருந்தார். சிலர் மீது ஏற்படும் பாசப் பிணைப்புக்கு காரணமே சொல்ல முடியாது, அப்படித்தான் அவருக்கும் ஜெய் மீது அப்படியொரு பாசம்.

ஜெய்யும் அவரது நம்பிக்கையை சிதைக்காத வண்ணம் நடந்து கொண்டான். அவரின் பெயருக்கு இழுக்கு ஏற்படாத வண்ணம் கொடுக்கல் வாங்கலில் மிகவும் நாணயமாக நடந்து கொண்டான்.

இன்று அவரது பெயர் இல்லாமல் ஜெய்யின் பெயரை கொண்டே எல்லாம் நடக்கிறது. ஆனாலும் ஆரம்ப காலத்தில் அவர் செய்த உதவிதான் அடிப்படை.

தன் தொழிலில் புதிதாய் முளைத்த போட்டி என நினைக்காமல் எத்தனை பேர் இப்படி இருப்பார்கள்? ஆகவே ஜம்புலிங்கத்தின் வார்த்தைக்கு ஜெய்யிடம் மிகுந்த செல்வாக்கு உண்டு, அவனது சுய விருப்பு வெறுப்புகளை தாண்டி அவர் சொன்னால் செய்து விட வேண்டும் என்பதில் வெகு நிச்சயமாக இருந்தான்.

சில மாதங்களுக்கு முன்பு உடல்நிலை முடியாமல் இரண்டு வாரங்கள் மருத்துவமனையில் இருந்தார் ஜம்புலிங்கம். பிள்ளைகளும் உடனில்லாமல் அவரது மனைவி மிகவும் பயந்து போய் விட்டார். தன் வேலைகளை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு அவர் குணமாகி வீடு வரும் வரை உடன் நின்றது ஜெய்தான்.

அப்போதிலிருந்து அவனை ஜம்புவின் மனைவிக்கும் மிகவும் பிடிக்கும்.

இப்போது ஜெய்யிடம் இருக்கும் ஆட்களே அவனுக்கு போதும். நகரின் மையப் பகுதியில் பிரபலமான ஜவுளி நிறுவனத்தின் கிளை ஆரம்பிக்க பட போகிறது. அவர்களுக்கு நெருக்கமான கன்ஸ்ட்ரக்ஷனிடம் பணி போகாது என கேள்வி பட்டான்.

விஷயம் என்னவென்றால் அந்த பிரபல ஜவுளி நிறுவன குடும்பத்துக்குள் சொத்து தகராறு. இப்போது வரப் போகும் கிளையே குடும்பத்தின் உட் பூசலில்தான் ஆரம்பிக்க படுகிறதாம். அந்த கிளையை நிர்வகிக்க போவது ஸ்தபான முதலாளியின் இரண்டாம் தாரத்து வாரிசாம்.