அத்தியாயம் -20(2)
மஹதி தீபவை பார்க்க அவள் உள் அறைக்கு சென்று விட்டாள்.
“பரவாயில்லை, நான் தனியா பேசணும்னு சொல்றதுக்கு முன்னாடியே புரிஞ்சுக்கிட்டு அவங்கள உள்ள அனுப்பி வச்சிட்ட. குட், இப்போல்லாம் உன் மெச்சூரிட்டி ஸ்கை லெவலுக்கு இருக்கு” என்றான்.
“ஹையோ! உள்ள இண்டக்ஷன் ஸ்டவ், மில்க் பவுடர், டீ காபி பௌடர் எல்லாம் இருக்கு. சூடா டீ இல்லனா காபி… ஆமாம் உங்களுக்கு என்ன வேணும்?” எனக் கேட்டாள்.
“என் வயிறு இப்போதைக்கு நல்லா இருக்கு, அப்படியே இருக்கட்டுமே, அதுல உனக்கு என்ன கஷ்டம்?”
“என்ன?”
“பால் பவுடர் சேராது எனக்கு”
“அப்படியா, எனக்கு தெரியாது”
“இனிமே என்னை பத்தி எல்லாமே தெரிஞ்சுக்கலாம், ஐ மீன்… நீ… உனக்கு இன்ட்ரெஸ்ட் இருந்தா. ஆமாம் வந்தவங்க எல்லாருக்கும் இந்த டீ காபி சர்வீஸ் உண்டா?”
“எல்லாருக்கும் இல்லை, எங்களுக்கும் முக்கியபட்டவங்களுக்கு மட்டும்”
“நான் முக்கியமானவன்னு சொல்லி வச்சிருக்கியா?”
“அப்படி இல்லை, யார் வந்தாலும் கண்ணால அவகிட்ட சொல்லிடுவேன். அவ புரிஞ்சுக்குவா. ஐயோ நாங்க டீ சாப்பிட்டோம், தீபா போடுறது வேஸ்ட் ஆகிட போகுது, தீ…” தீபாவின் பெயரை சொல்லி அழைக்கும் முன் அவளின் வாயை மூடினான்.
“நான் தனியா பேசணும், அவங்க டீ போடட்டும் இல்லை அது போடற சாக்குல ஓ பி கூட அடிக்கட்டும். கூப்பிடாத” என்றான்.
அமைதியடைந்தவள் என்ன பேச வேண்டுமென விசாரித்தாள்.
“அண்ணா அண்ணிய பத்தி யோசிக்கிறதே இல்லயா நீ?” எனக் கேட்டான்.
“என்ன கேள்வி இது? பாட்டி சஷ்டி விரதம் இருக்க மாதிரி நானும் வியாழக் கிழமையெல்லாம் பாபாக்கு விரதம் இருக்கேன்” என்றாள்.
“சரியா போச்சு… அவர்தான் அதான் உன் பாபாதான் என்னை உன்கிட்ட அனுப்பி வச்சிருக்கார்”
“ஐய உளறாதீங்க”
“அப்புறம் என்ன அவரே உன்கிட்ட வந்து என்ன வரம் வேணும்னு கேட்பாரா?”
“வந்த விஷயம் என்னன்னு சொல்லுங்க, இல்லைனா டீ போட்டுட்டு வந்திடுவா தீபா. மல்லுகட்டி உங்களை குடிக்கவும் வைப்பா, அவளுக்கு எதுவும் வேஸ்ட் ஆகறது பிடிக்காது” என மஹதி சொல்லிக் கொண்டிருக்கும் போதே தேநீரோடு வந்து விட்டாள் தீபா.
“ரொம்ப பெரிய ஆர்டர் ஒண்ணு புடிக்க மஹதிய அழைச்சிட்டு போறேன். இந்த டீ வேஸ்ட் ஆகாம நீங்களே குடிச்சிடுங்க” என்றவன் மஹதியிடம் கண் காட்டி விட்டு வெளியே சென்றான்.
தன் அக்காவை பற்றிய விவரம் ஏதோ என நினைத்த மஹதியும் கிளம்பினாள்.
கொஞ்சம் நெரிசல் மிகுந்த இடத்தில் இருந்த காபி கடைக்கு அழைத்து சென்றான்.
“திருச்சியிலே பெஸ்ட் காபி டீ இங்கதான் கிடைக்கும். உனக்கு…” என அவன் கேட்கும் முன் வேண்டாம் என்றாள்.
இருவருக்கும் மசாலா பொறி வாங்கி வந்து அமர்ந்தான்.
“விஷயத்தை சொல்லுங்க ப்ளீஸ்” என்றாள் மஹதி.
“அண்ணிய இங்க வர வைக்க நல்ல ஐடியா என்கிட்ட இருக்கு, நீ கோஆபரேட் செஞ்சா அண்ணி கண்டிப்பா வந்திடுவாங்க” என்றான்.
பொறியை சாப்பிட்டுக் கொண்டே, “அக்காவும் மாமாவும் சேர்வாங்கன்னா என்ன வேணா செய்வேன்” என்றாள்.
“சும்மா அடிச்சி விட்டுட்டு அப்புறம் ஜகா வாங்க கூடாது”
“அக்கா லைஃப்தான் எனக்கு முக்கியம்”
“சூப்பர், அப்ப நீ ரெடி?”
“எதுக்கு?”
“என்னை கல்யாணம் பண்ணிக்க” என அவன் சொல்லவும் விழிகள் தெறிக்க அவனை பார்த்தாள்.
“எனக்கு கல்யாணம் நடந்தா அண்ணி வருவாங்கன்னு யோசிச்சேன். உனக்கு கல்யாணம் நடந்தாலும் வருவாங்க. இன்னும் டீப்பா யோசிக்கும் போதுதான் ஒண்ணு தெளிவா புரிஞ்சுது, என்னன்னா நாம வேற யாரையோ கல்யாணம் பண்ணிக்கிட்டா அண்ணி வருவாங்க, ஆனா அண்ணனும் அண்ணியும் சேருவாங்களா தெரியாது. அதுக்கு நாம ரெண்டு பேரும் மேரேஜ் பண்ணிக்கிட்டா கண்டிப்பா அவங்க சேர்வாங்க” என்றான்.
அவன் கொடுத்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் வெளி வந்திருக்கவில்லை மஹதி.
“என் கல்யாணத்துக்கோ உன் கல்யாணத்துக்கோ அண்ணனும் அண்ணியும் சும்மா கெஸ்ட் மாதிரி வராம இருக்க நாம கல்யாணம் செய்துக்கணும், அந்த கல்யாணத்தை நடத்தற பொறுப்பை அவங்க ரெண்டு பேர்கிட்டேயும் கொடுத்திட்டா அவங்க ஒருத்தரை ஒருத்தர் பார்த்துதான் ஆகணும் பேசித்தான் ஆகணும்” என்றான்.
அவன் சொல்லிக் கொண்டிருப்பதை கிரகித்துக் கொண்டவள் தண்ணீர் எடுத்து பருகினாள்.
“ரெண்டு பேருக்கு இடைல இருக்க அந்த ஐஸை பிரேக் பண்ணனும்னா ரெண்டு பேரும் நெருங்கி பழகுற வாய்ப்ப ஏற்படுத்தி தரணும் மஹதி. என்ன… என்னை கல்யாணம் பண்ணிக்க ஓகேவா?”
அவளால் உடனே எந்தப் பதிலும் சொல்ல முடியவில்லை, நன்றாக விழித்தாள்.
“மசாலா பொறி நல்லாருக்குல்ல?” எனக் கேட்டான்.
அவள் ஆம் என தலையாட்டினாள். தன்னுடையதையும் அவளிடம் தள்ளி வைத்தவன், “நான் இப்படித்தான், உனக்காக என்ன வேணா செய்வேன்னு டயலாக் பேசாம அப்ப அந்த நிமிஷம் உனக்கு வேணுங்கிறது என்கிட்ட இருந்தா செல்ஃபிஸா இல்லாம கைல கொடுத்திடுவேன்” என்றான்.
அவள் முறைக்க கிண்டலாக சிரித்தவன், “ஓகே, உன் பக்கம் தள்ளி வச்சிடுவேன்” என்றான்.
அவள் எழ எத்தனிக்க, “ஹேஹேய்… சும்மா, ப்ளீஸ் உட்காரு” என கெஞ்சலாக சொல்லி அவளை அமர வைதான்.
“என்னை பல வருஷமா பார்க்கிற, நல்ல பையன்னு நான் சொல்லித்தான் தெரியனுமா உனக்கு? அஃப்கோர்ஸ் நிறைய சைட் அடிச்சிருக்கேன், ரெண்டு பொண்ணுங்கள லவ் பண்ணலாம்னு சீரியஸா ரூட் விட்ருக்கேன்” என அவன் சொல்லிக் கொண்டிருக்க அவள் வியப்பும் வினோதமுமாக பார்த்தாள்.
“பயப்படாத, ஒண்ணும் செட் ஆகல, அதனால கடந்த ஒன்னே முக்கா வருஷமா முரட்டு சிங்கில் கேட்டகரிலதான் இருக்கேன். ஃப்ரெண்ட்ஸ் கம்பெல் பண்ணினதால ஒரு முறை லிக்கர் சாப்பிட்டிருக்கேன்” அவன் சொல்ல அவள் கோவமாக பார்த்தாள்.
“குடிச்ச ரெண்டு மணி நேரத்துல குடலே வெளில வர்ற அளவுக்கு வாந்தி, சிகரெட் கூட பழகினேன், கருமம் அந்த நாத்தம் சுத்தமா சகிக்கல. பால் பவுடர் மட்டுமில்லை லிக்கர், சிகரெட் கூட எனக்கு சேராதுன்னு நான் தெளிவா தெரிஞ்சுகிட்டேன். அதனால மட்டுமில்ல என் அண்ணங்கிட்ட ஏச்சு பேச்சும் அடியும் வாங்குற அளவுக்கு ஸ்டராங் பாடிதான்னாலும் அவர் எனர்ஜிய வேஸ்ட் பண்ண விரும்பாத பாச உடன்பிறப்பு நான். அதனால தம்மு தண்ணி எக்ஸட்ரா எக்ஸட்ரா எல்லாத்துக்கும் இண்ட் மார்க் போட்டுட்டேன்”
அவள் இடையிடவே இல்லை, அவனை பேச விட்டு கேட்டுக் கொண்டிருந்தாள்.
“என்ன சொல்ல வர்றேன்னா சினிமா ஆரம்பிக்கிற முன்னாடி பயமுறுத்துற மாதிரி நோ ஸ்மோக்கிங் ஆட் போடுவாங்களே, அத பார்க்கும் போது நீ பயப்பட தேவையில்லை. அதுக்கான ரிஸ்க் ஃபேக்டர்ஸ் எதுவும் எனக்கு இல்லை” என்றவன் தன் கைப்பேசி எடுத்து தன் வங்கிக் கணக்கின் இந்த மாத பரிவர்த்தனைகளை காட்டினான்.
“வெறும் டிகிரி படிச்சிட்டு வட்டிக்கு வுடுற வேலை பார்க்கிறான்னு நினைப்பீல, அதான் இத காட்டுறேன். உனக்கு நான் ஓகேன்னா மட்டும் இத ஞாபகம் வச்சுக்க, இல்லைனா மைண்ட்லேருந்து டெலீட் பண்ணிடு. சைலன்ட்டா போய் ஐடி ரெய்டுக்கு ஆள் அனுப்பிடாத” என அவன் சொல்லவும் செல்லமாக முறைத்தாள்.
“அபப்டியே இங்க கொஞ்சம் சுத்தி பாரேன், ஏதாவது ரெண்டு கேர்ள்ஸாவது என்னை பார்ப்பாங்க, என் முகவெட்டு அப்படி” அவன் சொல்ல, கிண்டலாக பார்த்தாள்.
‘என்ன?’ என அவன் பார்க்க, “நீங்கதான் சொல்லணும் எத்தனை பொண்ணை நீங்க பார்த்தீங்க?” எனக் கேட்டாள்.
அவள் கேட்ட பிறகு சுத்தி பார்த்தான். “இந்த செகண்ட் இந்த கடைல செம ஃபிகர் நீதான், கார்னர் டேபிள்ல இருக்க க்ரீன் கலர் டாப் போட்ட பொண்ணு கொஞ்சம் சுமார் ரகம், கடை வெளில லெஃப்ட் சைட்ல பூக்கடைல இருக்கும் பாரு ஒரு பொண்ணு, ப்பா… செம தெய்வீகம்” சொல்லிக் கொண்டிருந்தவன் அவளின் கண்டன பார்வையில் பேச்சை நிறுத்தினான்.
குரலை செருமிக் கொண்டவன், “பிராமிஸா கல்யாணத்துக்கு அப்புறம் வேற யாரையும் பார்க்க மாட்டேன். நான் கட்ட போற தாலிதான் எனக்கு வேலி. கல்யாணம் எனக்கு கால் கட்டு மட்டுமில்ல அது என்னோட கண் கட்டும்தான்” என்றான்.
‘மேலே சொல்’ என்பது போல கையால் சைகை செய்தாள்.
“அண்ணன் மாதிரிதானே இவனும் இருப்பான்னு பயப்படாத. ஒரே பாத்திரத்துல செஞ்ச பாயாசத்த ரெண்டு தனித்தனி கப்ல ஊத்தி வச்சது போல நாங்க ஒரே மாதிரிதான், பாயசத்துல இருக்க இனிப்பு அளவுக்கு அவருக்கு ஈகோ, எனக்கு அந்த ஈகோ கழுதையெல்லாம் பாயாசத்துல போடுற சால்ட் அளவுக்குதான் இருக்கு”
“ம்ஹூம்!?”
“ராகு கேது செவ்வான்னு நவ கிரகத்துல பாதி என் ஜாதகத்துல தோஷம் இல்லாத இடத்துல கம்முன்னு உட்கார்ந்திருக்கு. என்னை மாதிரியே என் ஜாதகமும் சுத்தம்!”என அவன் கூற உதடுகளை கடித்து சிரிப்பை அடக்கினாள்.
“உன் ஜாதகம் கைல இல்லன்னா கூட நம்ம ரெண்டு பேரோட பெயர் பொருத்தம் பார்த்திட்டேன். வாட் அ மிராக்கிள்! அவ்ளோ அமோகமா எண்பது பெர்சண்ட் பொருந்திப் போகுதுன்னு ஆன்லைன் ஆஸ்ட்ரோ டாட் காம் சத்தியம் பண்ணி சொல்லுது”
“ஏன் ஹண்ட்ரட் பெர்சண்ட்னு சொல்லலையா?” கன்னத்தில் கை வைத்து பொய்யான வியப்போடு கேட்டாள்.
“ப்ச் அதான் பாஸ் மார்க் போட்டுடிச்சே, நூத்துக்கு நூறு வாங்கினா மெடலா கொடுக்க போறாங்க? அப்பப்ப கொஞ்சம் சண்டை போட்டுக்கலாம், கவலை படாத, சமாதானம் செய்ற டிபார்ட்மெண்ட் என்னோடது”
“அப்புறம்?”
“அப்புறம் நீதான் சொல்லணும், நல்லா யோசி, இப்படி எல்லா விதத்திலேயும் ஃபர்ஸ்ட் கிளாஸ் மாப்ள எவன் கிடைப்பான் உனக்கு?” என அவன் கேட்க, “ம்ம்ம்…” என அழுத்தமாக ம் போட்டாள்.
அவளின் அந்த பாவனையில் ஒரு நொடி யோசித்து சுதாரித்தான். ‘டிராக்க மாத்துடா’ என மூளை எடுத்து சொன்னது.
“ஒரு முறை பார்த்தாலே திரும்பி திரும்பி பார்க்க ஆசை படற அழகி நீ! கண்ணு கூசுற கலர்ல ட்ரெஸ் போட்டுட்டு இருந்த நீ இப்போ சிட்டியோட ஃபேமஸ் ஃபேஷன் டிசைனர்! உன்னோட இந்த அண்ட பிரம்மாண்ட வளர்ச்சி என்னை பம்ம வைக்குது… ச்சீ… ஸாரி அதென்ன… ஹஹான் பிரமிக்க வைக்குது. எங்க தேடினாலும் எனக்கு இப்படியொரு பொண்ணு கிடைப்பாளா, சொல்லு?” என்றான்.
மஹதியால் அதற்கு மேல் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. அருகில் உள்ளவர்கள் வேடிக்கை பார்க்கும் படி சத்தமாக சிரித்தவள் அவர்கள் கவனிப்பதை உணர்ந்து வாயை மூடிக் கொண்டாள்.
“சிரிக்க தோன்றப்போ யாரை பத்தியும் எத பத்தியும் கவலை படாம சிரி. நம்ம சந்தோஷத்தை ஸ்டாப் பண்ண அவங்க யாரு?” எனக் கேட்டவன் வாயை மூடியிருந்த அவளின் கையை நாசூக்காக விலக்கி விட்டான்.
சிரிப்பால் கண்ணோரம் திரண்டிருந்த கண்ணீரை துடைத்துக் கொண்டவள், “இப்படி பேசினா சீரியஸா பேசுறீங்களா விளையாடுறீங்களான்னு டவுட் வருது” என மனதில் நினைத்ததை சொன்னாள்.
“எதுவுமே சீரியஸ் பிஸ்னஸ் கிடையாது மஹதி. நிஜமாதான் கேட்கிறேன், என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா? இப்படி சிரிக்கும் போது மட்டும் கண் கலங்கறாப்ல பார்த்துக்கிறேன்” என்றான்.
அதற்கும் சிறிதாக சிரித்தவள் “ரெண்டு நாள்ல சொல்லவா?” எனக் கேட்டாள்.
“தாராளமா?” என்றான்.
வந்து வெகு நேரம் ஆகி விட்டதால் ஆளுக்கொரு காபி குடித்தனர். இன்னும் சற்று நேரம் பேசினார்கள். அழைத்து வந்ததை போலவே பைக்கில் அழைத்து சென்று அவளின் கடையில் விட்டான்.
இறங்கியவள், “நீங்க சொன்னது நடந்தா அக்கா லைஃப் சரியாகிடும்தானே?” எனக் கேட்டாள்.
மேலும் கீழும் தலையாட்டினான். சரியென்பது போல் தலையாட்டிக் கொண்டு சென்றாள்.
இரண்டு நாட்களாக மஹதிக்கு அவனை பற்றி ஒரே யோசனைதான். ஜனா நல்ல பையன் என தெரியும், அதை மீறி அவன் மீது எந்த விதமான எண்ணங்களும் இல்லை. அவனுக்குமே அப்படித்தான் என்பதும் இவளுக்கு திண்ணம்.
எந்த வித ஈர்ப்பும் இல்லாமல் திருமண பந்தத்தில் இணைந்தால் சரியாக வருமா என யோசித்தாள். ஜனா பேசியதெல்லாம் நினைவு வர தானாக புன்னகை பூத்தாள்.
‘ஓகே’ என அவனுக்கு செய்தி அனுப்பி வைத்தாள்.
‘விரைவில்’ என எழுதி அடுத்து ஒரு பூ மாலையின் படத்தை போட்டு ‘வருகிறேன்’ என அவன் பதில் செய்தி அனுப்பி வைத்தான்.