புதிய உதயம் -20
அத்தியாயம் -20(1)
“ஒழுங்கா சாப்பிடாம பட்டினி கிடக்க சொல்லி சாமி வந்து உன்கிட்ட கேட்டாரா? ஏம்மா இப்படி பயமுறுத்துற?” தன் அம்மாவை கடிந்து கொண்டார் ஜெய்யின் சித்தப்பா.
“எனக்கொன்னும் இல்லை, நல்லாதான் இருக்கேன், நீதான் தேவையில்லாம ஆஸ்பத்திரிக்கு அழைச்சிட்டு வந்திருக்க? வீட்டுக்கு அழைச்சிட்டு போ முதல்ல, நீ கேட்க மாட்ட, எங்க என் தங்கம்… அவனை கூப்பிடு, டேய் அப்பா ஜனா…” பேரனை அழைத்தார் பாட்டி.
“நீயெல்லாம் திருந்தவே மாட்டம்மா” ஜெய்யின் சித்தப்பா கடிந்து கொள்ள, “என்ன ராஜாம்பா சவுண்ட் ஓவரா இருக்கு, என்ன இப்போ?” எனக் கேட்டுக் கொண்டே வந்தான் பழச்சாறு வாங்க சென்றிருந்த ஜனா.
ஜெய்யும் ஸ்ரீயும் சேர்ந்து வாழ வேண்டும் என சஷ்டி விரதம் இருக்கிறார் பாட்டி. காலையில் சாப்பிடாமல் குளித்து பூஜை செய்து நேரடியாக மதிய உணவுதான். கடந்த சில மாதங்களாகவே இந்த வழக்கத்தை கடை பிடிக்கிறார்.
இன்று காலையில் அம்மாவை பார்ப்பதற்காக ஜெய்யின் சித்தப்பா வந்திருந்தார். அவருடன் பேசிக் கொண்டிருக்கையிலேயே லேசாக தலை சுற்றுகிறது என சொல்லி படுத்து விட்டார் பாட்டி. ஜெய், ஜனா எல்லாம் வேலைகளை பார்க்க சென்று விட்டனர்.
தன் அம்மாவை சரியாக கவனித்துக் கொள்வதில்லை என துளசியிடம் குறை படித்தவர் கையோடு மருத்துவமனைக்கும் அழைத்து வந்து விட்டார். முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டும் என் சொல்லி பாட்டியை அனுமதித்து விட்டனர். துளசி மகன்களுக்கு விவரம் தெரிவிக்க ஜனா உடனே வந்து விட்டான்.
மகனிடமிருந்து பழச்சாறை வாங்கிய துளசி மாமியாருக்கு புகட்ட சென்றார்.
“பன்னெண்டு ஆச்சா பாரு, அப்பதான் பச்ச தண்ணியா இருந்தாலும் வாய்ல ஊத்துவேன்” என அடம் பிடித்தார் பாட்டி.
பதினோரு மணிதான் ஆகியிருந்தது. தன் அப்பயி பற்றி நன்கறிந்திருந்த ஜனா கைப்பேசியில் நேரத்தை மாற்றி வைத்துதான் வந்திருந்தான், அதை காண்பித்தான்.
பாட்டிக்கு இரத்த அழுத்தம் பரிசோதனை செய்ய வந்த செவிலியரும் சாப்பிட சொல்லி வற்புறுத்தினார்.
“இன்னும் பூஜை பண்ணலடா” என பேரனிடம் சொன்ன பாட்டியின் கன்னங்களை செல்லமாக கிள்ளி வைத்த ஜனா கைப்பேசியிலேயே முருகன் படத்தை காட்டினான்.
வெகு சிரத்தையாக ஏதோ முணு முணுப்பாக வேண்டிக் கொண்டே கன்னத்தில் போட்டுக் கொண்டார். தன் சுருக்கு பையை திறந்து அதில் எப்போதும் இருக்கும் விபூதி எடுத்து நெற்றியில் இட்டுக் கொண்டவர் மகனுக்கும் பூசி விட்டார்.
“பார்த்தியா புள்ளைய கண்டதும் பேரப் புள்ளைய டீல்ல விடுற!” என்றான் ஜனா.
“நான் அவ்ளோ கூப்பிடுறேன் வர மாட்டேன்னு என் அம்மா உங்க கூடவே இருக்கு, அநியாயமா பேசாதடா ராஸ்கல்!” என திட்டினார் சித்தப்பா.
பேரனை இழுத்த பாட்டி, “அப்பனே முருகா, சீக்கிரம் கல்யாணம் ஆகி புள்ள குட்டியோட நிறைஞ்சு வாழணும் என் தங்கம்!” வேண்டிக் கொண்டே அவனது நெற்றி நிறைய நன்றாக நான்கு பட்டைகளை போட்டு விட்டார்.
“ம்மா என்ன பண்ற நீ? அவன் வெளில போறதா இல்லயா?” என கடிந்தார் சித்தப்பா.
“சாமி விஷயம்டா, சும்மா இரு” என்ற பாட்டி விரல்களில் ஒட்டிக் கொண்டிருந்த மிச்ச விபூதியை ஜனாவின் டி ஷர்ட்டை உயர்த்தி விட்டு அவனது வயிற்றில் பூசி விட்டார்.
“ராஜாம்பா கிச்சு கிச்சு மூட்டாத!” நெளிந்து கொண்டே சொன்னான் ஜனா.
“நேரா நில்லு, வயித்துக்கு ஒரு நோவும் வராது” என்ற பாட்டி அடுத்து தன் மகனை பார்க்க, அவர் அலறியடித்ததது போல வெளியே ஓடிச் சென்று விட்டார்.
சிரிப்பை அடக்கிக் கொண்டு நின்ற செவிலியர், பரிசோதித்தார். “வந்தப்ப இருந்த பிபி நல்லா குறைஞ்சிருக்கு” என சொல்லி சென்றார்.
“பார்த்தியா முருகனோட அருள? அடுத்த வருஷமெல்லாம் என் கொள்ளு பேரனால என் மடி கனக்க போகுதா இல்லையான்னு மட்டும் பாரு” என்றார் பாட்டி.
“அவ ஊர விட்டு போயி ரெண்டு வருஷம் முடிஞ்சு போச்சு, என்னவோ போங்கத்தை” என அலுப்பாக சொன்னார் துளசி.
ஜனாவின் கையை பிடித்துக்கொண்ட பாட்டி, “என் தங்கம்… நீ ஏதாவது பண்ணுடா, எனக்கு சீரியஸ்னு சொல்லியாவது அவளை இங்க வர வை” என்றார்.
“சும்மா இருங்கத்த, நல்லத பேசுங்க” என அதட்டினார் துளசி.
“அதான் முருகன்கிட்ட வேண்டியிருக்கல்ல, நடத்தி வைப்பார்” என்றான் ஜனா.
“அவரே நேர்ல வந்து செய்ற அளவுக்கு எதுவும் இல்லடா, அவர் அருளதான் உனக்கு கொடுத்திருக்கேனே, நீ செய், அந்த ஆண்டியப்பன் உனக்கு துணையிருப்பான்” என்றார் பாட்டி.
இந்த பிரிவு கூட நல்லதுதான், விரைவில் அண்ணனும் அண்ணியும் பழையதை மறந்து தானாக சரியாவர்கள் என காத்திருந்த ஜனாவுக்கும் பொறுமை போயிருந்தது.
தான்தான் ஏதாவது செய்ய வேண்டும் என தீர்மானித்துக் கொண்டான்.
ஜெய் வந்தான். நல்ல பெரிய தாடியோடு இருந்தான். பாட்டியை திட்டினான், அவரை சாப்பிட வைக்காமல் என்ன செய்தாய் என அம்மாவை திட்டினான். என்னோடு அழைத்து செல்கிறேன் என சொன்ன சித்தப்பாவை முறைத்தான்.
“உன்னாலதான் டா எங்கம்மாவுக்கு முடியாம போகுது. பொண்டாட்டியோட ஒழுங்கா குடும்பம் பண்ணாம வயசான காலத்துல என் அம்மாவை போட்டு ஏன் படுத்துற?” என திட்டினார் சித்தப்பா.
“எங்க வீட்ல அப்பயிதான் எல்லாம். அந்த வீட்டோட எஜமானி, அதே நிலைல அப்பயிய வச்சுக்க முடியும்னு சொல்லிட்டு அழைச்சிட்டு போங்க” சித்தப்பாவிடம் சீறிய ஜெய், “அப்பயிய அழைச்சிட்டு போலாம்னு சொல்லிட்டாங்க, நீ அழைச்சிட்டு போ” என தம்பியிடம் சொல்லி விட்டு புறப்பட்டு விட்டான்.
“அவனுக்கு சித்தப்பன் தானேடா நீ? நல்லா கேள்வி கேட்டு வெளுத்து விடாம அவன் குரல் உசத்தவும் வாய மூடிட்டு நிக்கிற” தன் மகனை கடிந்தார் பாட்டி.
“உன் முரட்டு பேரன் என்ன பேசுவான் பண்ணுவான்னு தெரியாது. என் மரியாதையை நானே கெடுத்துக்கவா? இன்னொரு முறை உனக்கு முடியாம போனா எவங்கிட்டேயும் கேட்டுட்டு இருக்க மாட்டேன் குண்டு கட்டா தூக்கிட்டு போயிடுவேன். நீ எஜமானியா இருக்க வேணாம், இருந்தா போதும்” கடைசி வாக்கியத்தை துளசியை பார்த்து சொன்னவர் கிளம்பி விட்டார்.
ஜனாதான் பாட்டிக்கும் அம்மாவுக்கும் ஆறுதல் சொல்லி வீட்டிற்கு அழைத்து சென்றான்.
ஸ்ரீ தன் கணவன் மீதிருந்த கோவத்தாலும் ஒரு மனமாறுதலுக்காகவும் அமெரிக்கா வந்தாள். ஜம்புலிங்கம் அவரது மகளை போல பார்த்துக் கொண்டார், தன் மகன் மூலமாகவே வேலை பெற்றுத் தந்தார்.
அங்கு அவளுக்கு பிடித்திருந்தது. கணவனை தவிர அனைவரோடும் கைப்பேசி வாயிலாக பேசிக் கொண்டிருக்கிறாள். யாரும் இங்கு வா என ஏதாவது அழுத்தி பேசினால் ஒரு வாரம் அவர்களோடு பேச மாட்டாள்.
படிப்பை முடித்து விட்ட தங்கைக்கு அவள் ஆசை பட்ட படி சொந்தமாக ‘பொட்டிக்’ வைத்துக்கொள்ள உதவியது அவள்தான்.
அங்கும் சில நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள், ஜம்புலிங்கத்தின் மருமகள்கள் நல்ல நட்போடு பழகினார்கள். ஸ்ரீக்கு நல்ல மாற்றம்தான். அப்படித்தான் அங்குள்ளவர்கள் நினைத்திருந்தனர்.
இரவில் படுக்கையில் விழுந்த பின் அலை போல பொங்கி எழும் ஜெய்யின் நினைவுகள் இன்னும் அவளை விட்டு நீங்கியிருக்கவில்லை. இங்கு வந்த ஆரம்பக் காலத்தில் அழுவாள், இப்போது அழுகை நின்றிருக்கிறது, மற்றபடி அவனது நினைவுகள் எப்போதும் போல அவளை சுற்றி வளைத்துக் கொள்கிறது.
அவனோடு வாழ்ந்த காலங்களில் நடந்த ஒவ்வொன்றையும் அசை போட்டுக் கொண்டே படுத்திருப்பாள். அப்படியே உறங்கிப் போவாள்.
ஜெய்யை பற்றிக் கேட்டால் அவன் அவளுக்கும் மேல். முந்தைய கோவத்தை தாண்டி எப்படி என்னை விட்டு சென்றாள் என்பதில் நிற்கிறது அவன் மனம். அவளின் அந்த செய்கையை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
பணம் சேர்ப்பதற்காக அல்லாமல் வேறெந்த நினைவும் தன்னை ஆக்ரமிக்க கூடாது என்பதற்காகவே அத்தனை பிஸியாக தன்னை வைத்துக் கொள்கிறான். அவனுக்கும் இரவு வருகிறது. அந்த இரவின் தனிமை அச்சுறுத்துகிறது. அவள் தன்னை விட்டு முழுவதுமாக பிரிந்து விடுவாளோ என்ற பயம் பாடாய் படுத்துகிறது.
ஆமாம் பயம்தான், நினைத்த உடன் பார்க்கும் தொலைவில் அவள் இருந்த போது வராத அந்த பயம் தற்போது வருகிறது, இப்போதும் அவனால் அவளை பார்க்க செல்ல முடியாது என்றில்லை. அவனது கூடவே பிறந்த அகங்காரம் அவனது நிலையை விட்டு அவனை அசைய விடாமல் பிடித்து வைத்திருக்கிறது.
ஜம்புலிங்கத்திற்கும் இப்போது ஸ்ரீயை நினைத்து கவலை. “அப்போ பிரச்சனைனு வர வச்சுக்கிட்டோம், அதுக்குன்னு இங்கேயே வச்சுக்க முடியாதுங்க, சின்ன வயசு, வாழற நேரத்துல இப்படி இங்க இருக்கிறது சரியில்லை. சில சமயம் நம்ம தப்பு பண்ணிட்டோமோன்னு கூட தோணுது” என புலம்பினார் அவரின் மனைவி.
“அப்படிலாம் விட்ற மாட்டேன். ஜெய்கிட்ட பேசிட்டு ஸ்ரீயை அங்க அனுப்பி வைக்கிற வழிய பார்க்கிறேன்” என்ற ஜம்புலிங்கம் ஜெய்யிடம் பேசவும் செய்தார்.
அவனுக்கு அவர் மீதும் கோவம். அவரால்தான் அவள் அங்கு சென்றாள், கொஞ்ச நாளில் அறிவு சொல்லி அனுப்பி வைக்காமல் இரண்டு வருடங்களாக அங்கேயே இருக்க வைத்து விட்டார் என நினைப்பவன் அவரிடம் சரியாக பேசவில்லை. அவனின் பேச்சில் அவர் துணுக்குற்றாலும், பேச வேண்டிய விஷயத்தை பேசினார்.
“என்ன நடந்தது யார் தப்பு அதெல்லாம் கேட்கல ஜெய், இப்படியே இருக்க கூடாது, ஒரு முறை ஸ்ரீகிட்ட பேசு” என்றார்.
“ஏன் உங்க வளர்ப்பு பொண்ணு உங்க பேச்சை கேட்க மாட்டாளா? என்கிட்ட பேசுற நீங்க அவகிட்ட பேசாமலா இருந்திருக்க போறீங்க? என்ன சொன்னா அவ, நான் தேவையில்லைனு சொல்லிட்டாளா?”
“ஏய் என்னப்பா நீ ஏதேதோ பேசுற, ஸ்ரீ அப்படியாப்பட்ட பொண்ணு கிடையாது. உன்கிட்ட பேசிட்டுதான் அதுகிட்ட பேச இருந்தேன்”
“அப்ப பேசுங்க, பேசி அனுப்பி வைங்க. அத விட்டுட்டு என்கிட்ட கேள்வி கேட்டு எந்த பிரயோஜனமும் இல்லை ஸார்” என்பவனிடம் மேலும் பேசப் பிடிக்காமல் அழைப்பை துண்டித்து விட்டார்.
ஸ்ரீயின் வாழ்க்கை தன்னால் தனியாகவே நின்று விடுமோ என பயந்து போய் விட்டார் ஜம்புலிங்கம். அவளிடம் பேசினார், பதற்றத்தில் சரியாக பேசத் தெரியாமல், “அவன்கிட்ட பேசிப் பார்த்தேன், வீம்பு இன்னும் கொஞ்சம் கூடிப் போயிருக்கே தவிர குறையல. அழுத்தக்காரன் என்கிட்ட ஏன் பேசுறீங்கன்னு என்னையவே கேட்குறான். அவன் இறங்கி வரமாட்டான்மா, நீ நேர்ல போனா ஒரு வேளை…” என சொல்லிக் கொண்டிருந்தார்.
“எங்கேயும் நான் போகலை ஸார், நான் இங்க இருக்க வேணாம்னு உங்களுக்கு தோணினா சொல்லிடுங்க, சிரமம் தராம வேற எங்கேயாவது போயிடுறேன்” அவரை முடிக்க விடாமல் சொன்னவளை அவரால் திகைப்போடு பார்க்க மட்டும்தான் முடிந்தது.
ஜனாவின் நிதி நிறுவனம் நன்றாக போகிறது, ஓரளவு பெயர் ஈட்டியிருந்தான். சுரேகா அங்குதான் வேலை செய்கிறாள். அத்தையின் வீட்டில்தான் தங்கியிருக்கிறாள்.
அன்றைய அலுவல்களை முடித்த ஜனா கிளம்பாமல் அங்கேயே இருந்தான். எப்போதும் முன்னேரமாக கிளம்பி விடும் சுரேகா ஏதோ கணக்கு வழக்கை முடிக்க வேண்டி தாமதமாகத்தான் இருக்கையிலிருந்து எழுந்தாள்.
யோசனையோடிருக்கும் ஜனாவிடம் என்னவென விசாரித்தாள்.
“என்னத்த பெருசா யோசிக்க போறேன்? அண்ணிய இங்க வரவைக்கணும், வந்த பிறகு உன் அகங்கார அத்தானோட சேர்த்து வைக்கணும். எப்படின்னுதான் ஒண்ணும் புரில” என்றான்.
“செவனேன்னு நீ கல்யாணம் பண்ணிக்க ஜனா, உன் கல்யாணத்துக்கு கண்டிப்பா அவங்க வருவாங்கதானே?” எனக் கேட்ட சுரேகா விடைபெற்றுக் கொண்டு கிளம்பி விட்டாள்.
சுரேகா சொன்னதை பற்றி தீவிரமாக யோசித்த ஜனாவுக்கு திடீரென வேறொரு யோசனை. இரண்டு நாட்கள் அதன் சாதக பாதகங்கள் பற்றி அலசி ஆராய்ந்தவன் போய் நின்றது மஹதியின் முன்னால்தான்.
மஹதிக்கு இன்னும் பெரிதான ஆர்டர்கள் வர ஆரம்பித்திருக்கவில்லை. உதவிக்கென தீபா என இன்னொரு பெண் இருக்கிறாள். இருவருமாக சேர்ந்து ஆண்களுக்கான மேலங்கி ஒன்றை வடிவமைத்துக் கொண்டிருந்தனர்.
ஜனாவை பார்த்ததும் வரவேற்றவள், “வாங்க வாங்க… இப்போதான் வழி தெரிஞ்சுதா, உங்களுக்கெல்லாம் ஃபிஃப்டி பெர்சண்ட் ஆஃபர் உண்டு, ஒரு முறை ட்ரெஸ் வாங்கினா கண்டிப்பா அடுத்த முறையும் இங்கதான் வருவீங்க” என்றாள்.
“பரவாயில்லை, நல்லா கவர் பண்ணி பேசுற. ஆனா வேற ஆள்கிட்ட இதை முயற்சி பண்ணு, நான் பேச வந்த விஷயம் வேற” என சொல்லிக் கொண்டே இருக்கையில் அமர்ந்தான்.