அத்தியாயம் -19(3)
சுரேகா ஓய்வறை செல்வதாக சொல்லி செல்ல இவன் உடனே மாமியாருக்கு அழைத்து விட்டான்.
அவர் விவரம் சொல்லவும், “அவ சொன்னான்னா தனியா அனுப்புவீங்களா அத்தை? எனக்கு சொல்ல வேண்டியதுதானே?” சற்றே கோவமாக கேட்டான்.
‘என்னடா இது?’ என விழித்த ஜோதி, “ஐயோ தம்பி சாதாரண செக் அப்னு அனுப்பிட்டேன்” என்றார்.
“இனிமே இப்படி பண்ணாதீங்கத்தை, உங்களால முடியலைன்னா அம்மா பாட்டி யாரையாவது அனுப்பி வச்சிருப்பேன்” என்றான்.
“பெரியம்மாவால எப்படி வர முடியும், அண்ணிக்கு கூட ஏதோ உடம்பு முடியலைன்னு சொன்னாங்க. ஸ்ரீதான் தானா போயிப்பேன்னு சொன்னா” என்றார்.
நெற்றியில் தட்டிக் கொண்டவன் அழைப்பை துண்டித்து விட்டு எழுந்தான். மிகுந்த தயக்கம்தான், ஆனால் மனம் கேட்கவில்லை. ஸ்ரீயிடம் செல்ல நான்கு தப்படிகள் வைத்திருப்பான், அதற்குள் சுரேகாவை அழைத்தார்கள்.
சுரேகாவும் வந்து விட கையை பிசைந்து கொண்டவன் சுரேகாவையே அழைத்துக் கொண்டு சென்றான். அங்கு விவரம் சொல்லி கவுன்சிலிங்கில் அவளை அமர வைத்து விட்டு வேகமாக வெளியே வந்தான்.
ஸ்ரீ அங்கே இல்லை. மருத்துவமனையை விட்டு வெளியே ஓடி வந்தான். ஸ்ரீ ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தாள். அவனை அறியாமல் கைப்பேசியை வேகமாக எடுத்தவன் ஸ்ரீயின் எண்ணை எடுத்து அழுத்தப் போனான். அதற்குள் எந்த பேய் வந்து அவன் மூளையில் புகுந்ததோ, அவளுக்கு அழைக்காமல் உள்ளே சென்று விட்டான்.
அதற்கு பின் ஸ்ரீயிடம் வீம்பு கூடி விட்டது. ஜெய்யின் மீது கோவமான கோவம்.
ஸ்ரீயின் வகுப்புத் தோழி லீலாவுக்கு திருமணம் ஏற்பாடாகியிருந்தது. தன் நண்பர்கள் அனைவருக்கும் பெரிய உணவகத்தில் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தாள். மதிய உணவு முடியவும் அனைவரும் சேர்ந்து திரைப்படம் செல்வதாக இருந்தனர்.
எல்லாம் முடிந்து வீட்டுக்கு புறப்பட இரவாகி விட்டது, ஆட்டோ பிடிக்க முயன்றாள் ஸ்ரீ.
“நைட்ல என்ன ஆட்டோ? மழை வேற வரும் போல இருக்கு. நான் ட்ராப் பண்ணிடுறேன்” என்றான் சியாமளன். ஸ்ரீயும் சரியென சொல்லி விட்டாள்.
வழியில் அவனது பைக் நின்று விட்டது. அந்த வழியாக வந்து கொண்டிருந்த ஜெய் அவர்களை பார்த்து விட்டு பைக்கை நிறுத்தி விட்டான்.
ஸ்ரீ அவனை பார்த்தாலும் அவனிடம் செல்லாமல் முகத்தை திருப்பிக் கொண்டாள். ஜெய்யும் அவன் நின்ற இடத்திலேயேதான் கல் போல நின்றிருந்தான்.
தன்னோடு ஸ்ரீ வருவதை ஜெய் விரும்ப மாட்டான் என்பது சியாமளனுக்கு தெரியும், அவர்களின் இப்போதைய சண்டை பெரிதாகி விடாமல் இருக்க வேண்டுமே என்ற கவலை அவனுக்கு. ஆகவே அவனே ஜெய்யிடம் சென்றான்.
“பைக்ல என்ன ஃபால்ட்னு தெரியலை. அரை கிலோ மீட்டர்ல மெக்கானிக் ஷாப் இருக்கு, நான் போய் பார்க்கிறேன். ஸ்ரீய அழைச்சிட்டு போயிடுங்க ஸார்” என்றான் சியாமளன்.
நேரம் ஒன்பதை கடந்திருக்க, “எங்கேருந்து வர்றீங்க?” ஒரு வித அழுத்தத்தோடு கேட்டான் ஜெய்.
உண்மையை சொன்னால் ஜெய்க்கு கோவம் வருமோ என பயந்த, பொய்யே சொல்லியிராத சியாமளன் முதல் முறையாக, “எங்க கிளாஸ் மேட்க்கு உடம்பு சரியில்லை, பார்த்திட்டு வர்றோம் ஸார்” என்றான்.
“எந்த ஃப்ரெண்ட், எங்க இருக்கு அவங்க வீடு?” கண்களை இடுக்கிக் கொண்டு கேட்டான் ஜெய்.
ஸ்ரீக்கு கோவம் வந்து விட்டது. அவர்களின் அருகில் விரைந்து சென்றவள், “என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் நல்லாதான் இருக்காங்க. நாங்க வெளில லஞ்ச்க்கு போனோம், அப்புறம் சினிமா பார்த்து முடிச்சிட்டு இப்போதான் கிளம்பினோம். உங்களுக்கு என்ன பிரச்சனை?” எனக் கேட்டாள்.
ஜெய் சியாமளனை முறைத்தான்.
“ஹையோ ஸார், லீலாக்கு மேரேஜ் ஃபிக்ஸ் ஆகியிருக்கு, அவதான் எல்லாருக்கும் விருந்து வச்சா. நாங்க பதிமூணு பேர் சேர்ந்துதான் சினிமாக்கு போனோம். ஸ்ரீ ஆட்டோதான் பிடிக்க ட்ரை பண்ணினா, நான்தான்.. “ என சொல்லிக் கொண்டிருந்த சியாமளனுக்கு மூச்சு வாங்கியது.
“நீதான்… ம்ம்… சொல்லு… நீதான்…” ஜெய்யின் பற்கள் நற நறவென கடிபட்டது.
சியாமளனிடம் ஜெய் நடந்து கொள்ளும் முறை அறவே அவளுக்கு பிடிக்கவில்லை.
“சியாம் நீ வா, மெக்கானிக் ஷாப் வரை நாம நடந்தே போலாம்” என்றாள்.
“கூப்பிடுறாங்க பாருங்க, கிளம்புங்க ஸார் நீங்க” ஒரு மாதிரியான இகழ்ச்சி தொனியில் அவனிடம் சொன்னான் ஜெய்.
சியாமளனுக்கு தன்னை முன்னிட்டு அவர்களுக்குள் பிரச்சனை வருமோ என்ற பயம். பைக்கை இரண்டொரு முறை ஸ்டார்ட் செய்ய முயன்றான், அவனது நல்ல நேரம் பைக் ஸ்டார்ட் ஆகி விட்டது. ஸ்ரீயை பார்த்து தலையசைத்தவன், “வர்றேன் ஸார்” என ஜெய்யிடமும் சொல்லி கிளம்பி விட்டான்.
கணவனை கனல் கக்க பார்த்திருந்தவள் அவனை விட்டு விலகி நடக்க ஆரம்பித்தாள்.
வேகமாக சென்று அவளின் கை பிடித்து நிறுத்தியவன், “முதல்ல வண்டில ஏறு, வீட்ல வச்சு பேசிக்கிறேன் உன்னை” என சீற்றமாக சொன்னான்.
அவனின் கையை உதறி விட்டவள், “யார் நீங்க என்ன ஸார் பேசணும் என்கிட்ட?” எனக் கேட்டாள்.
“ஓ… நான் யாருன்னு தெரியலை, தெரியாது எப்படி தெரியும்?” என்றவன் கோவத்தை அடக்க முயன்றான்.
அவள் மீண்டும் அங்கிருந்து செல்ல முயன்றாள்.
“ஏய் நைட்ல ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துல தனியா போய்… ஏன் டி ஏன்… இன்னும் என்னென்ன செய்ய காத்திருக்க நீ? என் நிம்மதிய குலைக்கன்னு வந்து சேர்ந்தியா என்கிட்ட?” என சத்தம் போட்டான்.
“நான் யார் நிம்மதியையும் குலைக்கல, இந்த திடீர் அக்கறைலாம் எனக்கு வேணாம். சியாமுக்கு கால் பண்ணினா அவன் வருவான்” என்றவள் அவளின் கைப்பேசியை எடுத்தாள்.
அடுத்த நொடி அவளின் கைப்பேசி சாலையில் மோதி சிதறிப் போனது. ஸ்ரீ அவனை கோவாவேசமாக பார்த்தாள்.
“கட்டினவன் கண்ணு முன்னாடி நிக்கையில கண்டவன்கிட்ட ஹெல்ப் கேட்பியா? மரியாதையா பைக்ல ஏறு” என்றான்.
“நீங்க ரொம்ப ஒழுங்கா? கட்டினவ நான்…” என்றவளுக்கு பழைய நினைவில் தொண்டை அடைத்துக் கொண்டது.
குரலை செருமிக் கொண்டவள், “குழந்தை பெத்து தர்ற மெஷினா போயிட்டேன்ல நான்? என்ன நடந்துச்சுன்னு ஒரு வார்த்தை கேட்டுக்காம எல்லா பழியையும் எம்மேல தூக்கி வச்சிட்டு… அவ்ளோதான்ல நான் உங்களுக்கு?” என்றவள் கண்களை துடைத்துக் கொண்டு, “நான் கஷ்ட பட்டப்பலாம் எங்க போயிருந்தீங்க… ஹ்ம்ம்… எங்க என்னத்த வெட்டி முறிக்க போயிருந்தீங்க? சுரேகா…கா… உங்க எக்ஸ் சுரேகாவுக்கு சர்வீஸ் பண்ணனும்னா மட்டும் ஸார் ஃப்ரீயா இருப்பார்” என்றாள்.
“ச்சீ தப்பா பேசாத. அவளுக்கு…”
“நீங்க பேசலாம் நான் பேசக்கூடாதா? அப்படித்தான் பேசுவேன். சியாம் உங்களுக்கு கண்டவனா போயிட்டான், ஒரு காலத்துல உங்களை வேணாம்னு சொன்னவ என்னை விட உயர்வா போயிட்டா”
“இதுக்கு மேல எதுவும் பேசினா கன்னம் வீங்கிடும் பார்த்துக்க. ஒரு கொலைபாதகனை பார்க்க போய் என் குழந்தையை…”
“பேசாதீங்க…” காதில் கை வைத்துக்கொண்டு அலறினாள்.
“உண்மையை சொன்னா கசக்குதா? நீ நல்லாதான்டி இருக்க, சினிமா பார்ட்டி ஊர் சுத்துறதுன்னு சந்தோஷமா நல்லா இருக்க. நான்தான்…”
“ஆமாம் சந்தோஷமாத்தான் இருப்பேன், யாருக்காக கவலை படணும் நான்? புருஷன் கை விட்டா நாலு சுவத்துக்குள்ள உட்கார்ந்திட்டு அழுது வடிஞ்சிட்டே இருக்கணுமா?”
“நீ ஏன் அழணும், நான்தான் அழணும். துரோகம் செஞ்சவன் பொண்ணு மேல ஆசை வச்ச நான்தான் அழணும்” வேகமாக தன் தலையில் அறைந்து கொண்டான்.
“நானா உங்களை தேடி வரலை, உங்க சங்காத்தமே வேணாம்னுதான் வேலைய விட்டு போனேன். என் விதி உங்ககிட்ட வந்து சிக்கி சீரழிஞ்சு நிக்கிறேன். துரோகியோட பொண்ணுன்னு இப்போதான் கண்ணுக்கு தெரியுதா, படுக்கைல…”
“வாய மூடுடி!”
சுரேகாவின் மீது எந்த தவறான எண்ணமும் ஜெய்க்கு இல்லை, சியாமளனோடு நட்பை தாண்டி வேறெதுவும் ஸ்ரீக்கு இல்லை என இருவருக்குமே தெரியும். ஆனாலும் வார்த்தைகளால் ஒருவரை ஒருவர் குத்திக் கிழித்துக் கொண்டனர்.
இருவருமே தொட்டால் வெடித்துச் சிதறும் அணுகுண்டு போன்ற நிலையில் இருந்தனர். லேசாக தூறல் போட ஆரம்பித்தது.
அந்த சாலையின் முடிவில்தான் காத்திருந்தான் சியாமளன். ஜெய் ஸ்ரீயை அழைத்து செல்வதை கண்ட பிறகுதான் புறப்பட வேண்டுமென அங்கேயே இருந்தான்.
நேரமாகியும் ஜெய்யின் பைக் இன்னும் இங்கு வராததால் அவனுள் பதற்றம். பயத்தோடு பைக்கை எடுத்துக் கொண்டு ஸ்ரீயை விட்டு வந்த இடத்துக்கே மீண்டும் சென்றான்.
ஜெய் சியாமளனை கோவமாக பார்த்தான். அவனிடம் ஓடி வந்த ஸ்ரீ, “உடனே என்னை வீட்ல கொண்டு போய் விடு சியாம்” என அழுது கொண்டே சொன்னாள்.
கண்ணீரும் கம்பலையுமாக நின்ற தன் தோழியின் வார்த்தைக்கு கட்டுப் பட்டான் சியாமளன்.
ஜெய் மழையில் நனைந்து கொண்டு அங்கேயே நின்றிருந்தான்.
ஜம்புலிங்கத்திடம் ஏற்கனவே பேசியிருந்தாள் ஸ்ரீ. அவருக்கு எல்லாமே தெரியும். அவளுக்காக வருந்தியவர் ஜெய்யிடம் பேசியிருந்தார், அவன் பிடி கொடுத்து பேசாமல் போக அவன் மீது அவருக்கு வருத்தம். அவரின் மனைவியும் ஸ்ரீக்காக கவலை பட்டார்.
சில மாதங்களுக்கு மாற்றம் தேவை என சொன்னவளிடம் அவர்தான் தன்னிடம் வருகிறாயா என கேட்டிருந்தார்.
அம்மாவின் உடல்நிலை நல்ல முன்னேற்ற நிலையில் இருக்க, தங்கையும் விவரம் உள்ளவளாக வளர்ந்து நிற்க, சியாம் ஜனா போன்றோர் பார்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையும் இருக்க ஜம்புலிங்கத்தின் அழைப்பை ஏற்றுக்கொள்ளலாமா என யோசித்தாள் ஸ்ரீ.
அதற்கான முயற்சிகளை அம்மாவுக்கு தெரியாமல் சியாமளனின் உதவியோடு செய்து கொண்டுதான் இருந்தாள். அவனால் அவளின் வார்த்தையை மீற முடியவில்லை. செல்லாதே என சொன்னாலும் அவள் கேட்டதெல்லாம் செய்து கொடுத்தான்.
ஆனாலும் ஸ்ரீ அமெரிக்கா செல்ல முழு மனதாக தயாராகவில்லை. ஜெய்யுடனான பிணக்கு சரியாகி விட வேண்டும் என்ற எண்ணமும் மனதில் ஒரு ஓரமாக இருந்தது.
அன்று மருத்துவமனையில் தனக்கு துணைக்கு வராமல் சுரேகாவுடன் வந்திருந்தவனை பார்த்த பிறகுதான் அமெரிக்கா செல்லும் முடிவில் உறுதியானாள்.
அதற்கு பின்னரான சண்டை யார் என்ன எடுத்து சொல்லியும் கேட்க முடியாத நிலைக்கு அவளை மாற்றி விட்டது. ஜெய்யின் காதுக்கும் விஷயம் போனதுதான்.
என்னை விட்டு சென்று விடுவாளா? பார்க்கிறேன் நான், அவள் மட்டும் போகட்டும்! அப்படியெல்லாம் போய் விட மாட்டாள்… இறுமாப்போடு இருந்தவனின் ஆங்காரத்திற்கு பலத்த அடி கொடுத்து விட்டு வெளிநாடு சென்று விட்டாள் ஸ்ரீ.