புதிய உதயம் -19

அத்தியாயம் -19(1)

ஜனாவின் நிதி நிறுவனத்தின் திறப்பு விழா அன்று. பாட்டி அம்மா இருவரையும் அழைத்துக் கொண்டு அண்ணியின் பிறந்த வீட்டிற்கு சென்று முறையாக அழைப்பு விடுத்திருந்தான் ஜனா.

தன்யஸ்ரீக்கு தேர்வுகள் நடந்து கொண்டிருந்ததால் மாலையில் வருவதாக சொல்லியிருந்தாள். ஜோதி சின்ன மகளோடு வந்திருந்தார். அவர்களை மரியாதையாக வரவேற்ற ஜெய் மனைவியை பற்றி ஏதும் கேட்டுக் கொள்ளவில்லை.

இன்னும் ஜெய்க்குள் கோவம் கனன்று கொண்டேதான் இருக்கிறது. ஸ்ரீ அவளின் அம்மா வீட்டிலேயே இருக்கட்டும் என விட்டு விட்டான். ஆனால் அவளை பற்றி எல்லாம் அவனது காதுக்கு பாட்டி மூலமாக வந்து சேர்கிறது.

ஜெய் உணவருந்தும் வேளையில் தினம் ஸ்ரீயின் புராணம் பாடுவதை வழக்கமாக்கி வைத்திருக்கிறார் பாட்டி. பதிலே பேசாமல் அமைதியாக சாப்பிட்டு எழுந்து சென்று விடுவான்.

“அவன் ரியாக்ஷனே கொடுக்க மாட்டேங்குறான், எதுக்கு உங்க எனர்ஜிய வேஸ்ட் பண்ணிக்கிறீங்க அத்தை?” எனக் கேட்பார் துளசி.

“என்னத்த ரியாக்ஷன் கொடுக்கணும் அவன். நான் சொல்லும் போது அவளை பத்தி பேசாதன்னு சொன்னானா, இல்லை காத பொத்திகிட்டானா, இல்லைதானே?” என்ற பாட்டி அவரின் வழக்கத்தை நிறுத்தியிருக்கவில்லை.

துளசிக்கு அவரது வருத்தத்தின் வீரியம் எல்லாம் குறைந்து விட்டது. மருமகளை நேரில் சென்று பார்த்தார், வா என அழைக்கவும் செய்தார். ஆனால் ஸ்ரீதான் வர மறுத்து விட்டாள்.

‘ஜெய் நடந்து கொள்ளும் முறை சரியில்லை, அவள் வர வேண்டுமென்றால் இவன்தான் நேரில் சென்று பேசி அழைத்து வர வேண்டும், ஓரளவு தேறியிருப்பவள் தேர்வுகளை நன்றாக எழுத வேண்டுமென்றால் அங்கு இருப்பதே நல்லது’ என மருமகளிடம் சொல்லி விட்டார் பாட்டி. எனவே இப்போதெல்லாம் துளசி மருமகளை பார்த்து வருவதோடு சரி, வா என்றெல்லாம் கூப்பிடுவதில்லை.

ஜெய்யை தவிர மற்றவர்கள் வந்து போக இருக்க, ஸ்ரீயின் பிரச்சனை தீர்ந்து விடும், படிப்பை முடிக்கவும் புகுந்த வீடு சென்று விடுவாள் என நம்பிக் கொண்டிருந்தார் ஜோதி.

ஜனாவின் நிறுவனத்தின் திறப்பு விழாவுக்கு ஜெய்யும் ஸ்ரீயும் சந்தித்துக் கொள்வார்கள், ஏதாவது மனமாற்றம் நடக்கலாம் என அனைவருமே எதிர் பார்த்திருந்தனர். ஆனால் ஸ்ரீயால் காலையில் வர முடியாத சந்தர்ப்பம் ஆகி விட்டது.

துளசியின் சகோதரர்கள், ஜெய்யின் சித்தப்பா ஆகியோரின் குடும்பங்களையும் அழைத்து விழாவை பெரிதாக செய்யலாம் எனதான் வீட்டு பெண்கள் சொன்னார்கள். ஜெய் வேண்டாம் என மறுத்து விட்டான்.

“எடுத்த உடனேயே எந்த ஆர்ப்பாட்டமும் வேணாம், தொழில்ல ஓரளவாவது அவன் வளரட்டும், அப்புறம் சொல்லிக்கலாம். யாரும் ஏதும் சொன்னா நான் பேசிக்கிறேன்” என சொல்லி விட்டான்.

ஜனாவின் நண்பர்கள் மாணிக்கவாசகம் மற்றும் விக்டர் ஆகிய இருவரும் முதலீடு போட்டு பார்ட்னர்களாக இணைந்து கொண்டனர். இன்னும் இரண்டு நண்பர்கள் பணம் போடாமல் வேலையில் பங்கெடுத்துக் கொள்வதாக ஏற்பாடாகியிருந்தது.

அவர்களின் குடும்பத்தினரும் வந்தனர். பளீர் என்ற ஆரஞ்சு நிற சுடிதாரில் வந்திருந்தாள் மஹதி.

வாயை வைத்துக்கொண்டு சும்மா இல்லாமல், “எதுக்கும் ஓரமா நில்லு, யாருடா இது ஃபேண்டா ல குளிச்சிட்டு வந்து நிக்கிறதுன்னு யாராவது கேட்க போறாங்க” என்றான் ஜனா.

மஹதி வெடுக் என பார்த்து விட்டு முகத்தை திருப்பிக் கொண்டாள்.

“இந்நேரம் ரெண்டு குடைக்குள்ள பத்திரமா இருக்க கண்ணுல மழை வந்திருக்கணுமே” என சிரிப்பை அடக்கிக் கொண்டு சொன்னான்.

அவள் விழிக்க, “உன் இமை ரெண்டும் குடை, ஏன்னா அழற நீ நல்லா இருக்க, ஆப்போசிட்ல உள்ளவங்கதான் உன் மழை வெள்ளத்துல நனைஞ்சி பாதிக்க படுறாங்க. மழை ஏன் வரலை, என்ன தண்ணி வத்தி போச்சா?” என்றான்.

அவர்களை கடந்து சென்ற ஜெய்யிடம், “மாமா உங்க தம்பி வம்பு பண்றார்” என்றாள் மஹதி. நின்று விட்ட ஜெய் தம்பியை முறைத்தான்.

“சும்மா பேசினதுக்கு வம்புகாரன்னு பேர் கொடுக்குது உங்க வைஃபோட தங்கச்சி” என்றான் ஜனா.

“திருந்தவே மாட்டியாடா நீ? இன்னிக்குதான் பொறுப்பா ஏதோ செய்றேன்னு நினைச்சேன், அதுக்குள்ள சின்ன பொண்ணுகிட்ட வம்பு பண்ணிட்டு நிக்கிற, உருப்படுறதுக்கான வழிய பாரு போ” என திட்டினான் ஜெய்.

இப்போது ஜனா தன் அண்ணனை முறைக்க, “ஹையோ என்ன மாமா இப்படி பேசுறீங்க, அவர் ஜாலியாதான் கலாய்ச்சார். எனக்கு பதில் பேச தெரியாம சும்மா விளையாட்டுக்குத்தான் உங்ககிட்ட சொன்னேன்” என பரிதவிப்பாக சொன்னாள் மஹதி.

“அதான் கேட்கிறேன், என்ன நாள் இன்னிக்கு, பூஜைய கவனிக்காம உங்கிட்ட என்ன கலாய்ச்சு பேச வேண்டி கிடக்கு? நீ போ, அம்மாட்ட போய் நில்லு” என மஹதியை அனுப்பி வைத்தவன் தம்பியின் பக்கம் பார்த்தான்.

அண்ணனை நோக்கி கையெடுத்துக் கும்பிட்ட ஜனா, “இவ்ளோ வெரப்பு ஆகாது ண்ணா உனக்கு” என்றான்.

தம்பியின் சட்டையின் மேல் பட்டனை போட்டு விட்ட ஜெய், “பூஜை அப்போலாம் என்னடா இது நெஞ்சு தெரியற மாதிரி சட்டை போட்ருக்க? அப்பாவை மனசுல நினைச்சு நல்லா வேண்டிக்க, வாய குறைச்சிட்டு அமைதியா நல்ல பையனா இரு” என்றான்.

தினம் சவரம் செய்து நிமிர்வோடு வலம் வரும் ஜெய் நன்றாக தாடி வளர்த்து வைத்திருந்தான். எங்கு சென்றாலும் கவனமெடுத்து கிளம்புவதில்லை, ஏனோ தானோவென ஏதோ ஒரு உடை. எப்போது பார்த்தாலும் சிடு சிடுப்பான பேச்சு, சுள் என்ற கோவம்.

“அண்ணி அவங்க அம்மா வீட்டுக்கு போனதிலிருந்து நீ ஆளே சரியில்ல ண்ணா. நீ கூப்பிடாம அவங்க வர மாட்டாங்க, அண்ணிய மிஸ் பண்ணவே இல்லையா ண்ணா நீ?” எனக் கேட்டான் ஜனா.

“இப்போதான் வாய குறைக்க சொன்னேன் உன்னை” கடினமாக சொல்லி அகன்று விட்டான் ஜெய்.

பூஜை நல்ல படியாக முடிந்தது. கிளம்புவதற்கு முன் ஜனாவிடம் வந்த மஹதி, “ஸாரி, இன்னிக்குன்னு போய் மாமாகிட்ட திட்டு வாங்கி கொடுத்திட்டேன். நான் ஃபன்னாதான் மாமாகிட்ட சொன்னேன்” என்றாள்.

“அட நீ வேற, அவர்கிட்ட திட்டு வாங்கலைனா நமக்கு அந்த நாளே டல்லாதான் போகும். அவர் என்னடான்னா காலையிலேருந்து எம்மேல ஓவர் லவ்ஸ்ல சுத்திட்டு இருந்தார். என்னடா இதுன்னு ஒரே கடுப்பா இருந்தேன். அப்பன்னு பார்த்துதான் நீ ஹெல்ப் பண்ணிட்ட, தங்களின் பங்களிப்பால் இந்த நாள் எனக்கு இனிய நாளாக அமைந்தது தோழி” வேடிக்கையாக சொன்னான்.

வாயை மூடிக் கொண்டு சிரித்தவள், “ஆல் த பெஸ்ட்!” என்றாள்.

அதற்கும் சாதாரணமாக அல்லாமல் இடை வரை குனிந்து வேடிக்கையாகவே நன்றி சொன்னான். அவள் விடை பெற்று கிளம்பி விட்டாள்.

“என்ன மச்சி, புதுசா ரூட் விடுற பொண்ணா, சொல்லவே இல்லை” கிண்டலாக கேட்டான் விக்டர்.

“வாய வச்சிட்டு சும்மா இருடா, ஜெய் அண்ணன் காதுல விழுந்தா கைமா பண்ணிடுவார்” என்றான் மாணிக்கவாசகம்.

“என் அண்ணியோட சிஸ்டர்டா, தப்பாலாம் பேசாத. அண்ணி காதுக்கு போனா ஒரே சர்ம தங்கடம் ஆகிடும்” என ஜனா சொல்ல, “அப்படின்னா?” எனக் கேட்டான் மாணிக்கம்.

“நீ ஒழுங்கா சொன்னாலே மாணிக் பாட்சா உருது கேட்ட லுக் கொடுப்பான்” என விக்டர் சொல்ல, “அப்ப உனக்கு புரிஞ்சிச்சா மச்சி! வானம் கறுக்குதுடா” என்றான் ஜனா. இப்படி இவர்களின் கலாட்டா பேச்சு நீண்டு கொண்டே சென்றது.

அவர்களிடம் வந்த ஜெய், “எப்படிறா ஒழுங்கா நடந்திடுவீங்களா ஃபைனான்ஸ?” என சந்தேகமாக கேட்டான்.

“வேலைல பொறுப்பா இருக்கிறவனுக்கு சிரிக்க தெரிஞ்சிருக்க கூடாதுன்னு எங்கேயும் ரூல்ஸ் இருக்கா ண்ணா? எப்படி கடமை கண்ணியம் தட்டுப்பாடுன்னு இருக்கோம்னு நீயே பார்ப்ப” என்றான் ஜனா.

“எங்களுக்கு தொழில்தான் ண்ணா கடவுள், கோயில் உண்டியல்ல காசு சேருதோ இல்லையோ எங்க கல்லா நிறைஞ்சிடும்” என்றான் மாணிக்கம்.

“ஆமாம் முதல்ல நீ ஏதாவது எனக்கு மொய் எழுது ண்ணா” என்ற ஜனா அண்ணனின் வாலெட் உருவிக் கொண்டான். அடுத்து ஜெய் திட்டுவதற்கு முன் தப்பித்து பாட்டியிடம் சென்று விட்டான்.

தன் வாலெட்டை பிடுங்கிக் கொண்ட ஜெய் அவனே பணம் எடுத்து கொடுத்து விட்டு புறப்பட்டான்.

ஜனாவும் அவனது நண்பர்களும் மட்டும் இருந்தனர். மற்றவர்கள் கிளம்பி விட்டனர். மாலையில்தான் ஸ்ரீ வந்தாள். பெரிதாக சுவாமி படம் வாங்கி வந்திருந்தவள் அவளின் கையாலேயே அலுவலகத்தில் வைத்தாள். ஜனாவின் கையில் பணம் கொடுத்தாள்.

“எதுக்கு அண்ணி? என்கிட்ட இருக்கு” எனக் கேட்டு வாங்க மறுத்தான்.

“உன்கிட்ட நிறைய இருக்குன்னு தெரியும். இது நான் தர்றது, என்னால முடிஞ்சது, வாங்கிக்க” என்றாள்.

“எம் பங்கு பணத்தை கொடுத்ததே அண்ணன்தான், அப்ப அது நீங்க கொடுத்த மாதிரிதான் அண்ணி” என்றான்.

பணத்தை அவனது சட்டைப் பையில் திணித்தவள், “வச்சுக்க, ஏதாவது வாங்கிக்க” என்றாள்.