அத்தியாயம் -18(2)

துளசியின் மனநிலை பற்றி உணர்ந்திருந்தபாட்டி மருமகளை மாடிக்கு அனுப்பாமல் ஸ்ரீயை தன்னிடம் வரவழைத்துக் கொண்டார்.

“ஏன் பாட்டி அவர் எங்க?” கலங்கிய குரலில் கேட்டவளுக்கு என்ன பதில் சொல்வார்.

“ஏன் என் கூட இருக்க மாட்டியா?” எனக் கேட்டார் பாட்டி. பாட்டிக்கு தெரியக்கூடாதென நினைத்தவள் அவருக்கு முதுகு காண்பித்து தன்னை சமாளிக்க முயன்றாள். பாட்டி தலையிடவில்லை, வேதனை வெளியாகட்டும் என விட்டு விட்டார்.

இரவுக்குரிய எந்த மாத்திரை மருந்தையும் விழுங்காமல் பாட்டியிடம் சாப்பிட்டேன் என சொல்லி விட்டு படுத்து விட்டாள். பிள்ளையையே விட்டு விட்டேன் இனி என்ன என்னை கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வந்து விட்டது அவளிடம்.

நடு இரவே அவளுக்கு காய்ச்சல் வந்து விட்டது, சில உடல் உபாதைகளும் சேர்ந்து படுத்தியது. இதெல்லாம் எனக்கு போதாது, இன்னும் வேண்டும் என எண்ணிக் கொண்டவள் பாட்டியை எழுப்பவே இல்லை.

விடியற்காலையில் மிகவும் அதிகமாகி விட்டது அவளின் காய்ச்சல். சாதாரண நேரமாக இருந்தால் காய்ச்சலுக்கு வீட்டிலேயே மாத்திரை கொடுத்திருப்பார் பாட்டி. இப்போது ரிஸ்க் எடுக்க விரும்பாமல் மருத்துவமனை செல்லலாம் என கூறி விட்டார்.

வீட்டில் ஜெய் இல்லாத காரணத்தால் ஜனாதான் காரோட்டினான். பாட்டியை அலைய வைக்க முடியாது என துளசி உடன் சென்றார்.

ஸ்ரீக்கு மார் கட்டியிருந்தது. அந்த மாற்றத்தையும் வலியையும் உதாசீனப் படுத்தியிருக்கிறாள் அவள்.

ஜனா தன் அண்ணனுக்கு அழைத்து, “அண்ணிக்கு ஹை ஃபீவர், ஹாஸ்பிடல் வந்திருக்கோம், அம்மாவும் அண்ணியும் டாக்டர் பார்த்திட்டு இருக்காங்க. இன்னும் வெளில வரலை. நீ உடனே வர்றியா ண்ணா?” எனக் கேட்டான்.

ம் என்றவன் அழைப்பை துண்டித்து விட்டான்.

ஸ்ரீக்கு செய்யப் பட்ட இரத்தப் பரிசோதனையில் தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிய வர காய்ச்சலும் குறையாமல் போக மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்க பட்டு விட்டாள்.

அரை மணி நேரத்தில் இரவில் அணிந்திருந்த அதே ஆடையுடன் சிவந்து போயிருந்த விழிகளோடு வந்து சேர்ந்தான் ஜெய்.

“என்ன ண்ணா நீ?” வருத்தமாக கேட்டான் ஜனா.

“ப்ச், எந்த ரூம்ல இருக்கா, டாக்டர் என்ன சொன்னாங்க?” எனக் கேட்டான் ஜெய்.

“அம்மா ஒண்ணும் சொல்லலை, நீயே கேளு” என்ற ஜனா அறை எண்ணை சொன்னான்.

ஜெய் சென்று பார்த்த போது ஸ்ரீ காய்ச்சலின் தீவிரத்தில் அனத்திக் கொண்டிருந்தாள். மகனிடம் ஸ்ரீயை பற்றிய விவரம் சொன்ன துளசி அவனை அங்கே இருக்க சொல்லி விட்டு சின்ன மகனிடம் வந்து விட்டார்.

அவனால் அவள் படும் வேதனையை சகித்துக் கொள்ள முடியவில்லை. மனதில் இன்னுமின்னும் பாரம் கூடிக் கொண்டே போனது. தம்பியை அனுப்பி ஜோதியை அழைத்து வரச் செய்து விட்டான்.

 நான்கு நாட்கள் ஸ்ரீக்கு மருத்துவமனை வாசம். அவள் உறங்கும் வேளையில் பார்த்து விட்டு செல்லும் மருமகனையும் விழித்திருக்கும் வேளையெல்லாம் கணவனை தேடும் மகளையும் கண்டு கவலையடைந்தார் ஜோதி.

தன்னை தவிர்க்கிறான் என்பது நன்றாகவே புரிய இந்த முறை டிஸ்சார்ஜ் ஆனவள் அம்மாவின் வீட்டுக்கு சென்று விட்டாள். துளசியும் மருமகளின் மீது வருத்தத்தில் இருக்க, ஸ்ரீயை இங்கேயே வைத்துக் கொள்கிறேன் என பாட்டியால் உறுதியாக சொல்ல முடியவில்லை.

அண்ணனுக்கும் அண்ணிக்கும் மனப்பிசகல் என ஜனாவுக்கு தெரிகிறது. அவர்களின் பிரச்சனையில் எப்படி மூக்கை நுழைப்பது என கருதி அமைதியாக இருந்தான்.

நான்கு வார ஓய்வுக்கு பின்னரே கல்லூரி செல்லும் படி அறிவுறுதியிருந்தார் மருத்துவர். கல்லூரிக்கு நேரில் சென்று பேசி ஸ்ரீ விடுப்பில் இருக்க அனுமதி வாங்கினான் ஜெய்.

ஸ்ரீயின் கல்லூரி தோழமைகள் அவளை பார்த்து சென்றனர். வார இறுதியின் இரண்டு நாட்களிலும் பகல் பொழுதெல்லாம் ஸ்ரீயின் வீட்டிற்கு வந்து விடுகிறான் சியாமளன். விட்டுப் போன வகுப்புகளை அவளுக்கு அவன்தான் சொல்லிக் கொடுத்தான்.

உண்ண உறங்க மட்டும் வீட்டுக்கு வந்து வார்த்தைகளை அளந்து பேசி கண்களில் ஒளி இழந்து நிற்கும் பேரனை அப்படியே விட பாட்டிக்கு மனமில்லை. கோயிலுக்கு செல்லலாம் வா என சொல்லி அவனை வற்புறுத்தி அழைத்துக் கொண்டு கிளம்பினார்.

காரெடுக்க ஜனா வரவும், “நீ எங்க வர்ற?” என்றான் ஜெய்.

“ஏன் சாமியோட எல்லா அருளும் உனக்குத்தான் கிடைக்கணுமா? எனக்கு வேணாமா?” எனக் கேட்டு ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து கொண்டான்.

கார் போய் நின்றதோ ஸ்ரீயின் வீட்டில். ஜெய் முறைக்க, “உடம்பு முடியாம போனாடா அவ, ஒரு எட்டு கூட போய் பாக்கலைனா நல்லா இருக்காது. நீ ஒரு ரெண்டு நிமிஷம் என் பக்கத்துல உட்கார்ந்திட்டு கிளம்பிடு” என கெஞ்சலாக சொன்னார் பாட்டி.

உச்சு கொட்டி அவன் சலித்துக் கொள்ள, “அண்ணி பாவம் ண்ணா” என்றான் ஜனா.

“டேய்…” ஜெய் ஏதோ சொல்ல வர இடையிட்டான் ஜனா.

“உனக்கு கவலைன்னா அதேதான் அவங்களுக்கும். இப்படி ஆகும்னு அவங்களுக்கு தெரியுமா? அவங்க மேல தப்பே இருந்தாலும்…” ஜனா சொல்லிக் கொண்டிருக்க, “போனது என் குழந்தை. அதுவும் அவ கேர்லெஸால, என்ன சொல்லியும் அத நியாயம் பண்ணாத” என கோவமாக சொன்னான் ஜெய்.

“அடேய் தேவையில்லாம பேசாத” சின்ன பேரனை கண்டித்து அடக்கினார் பாட்டி.

இறுகிப் போன முகத்தோடு அமர்ந்திருந்த ஜெய்யின் தோளை பற்றிய பாட்டி, “அவளை ஒரு முறை வந்து பார்த்திட்டு கிளம்பு, இப்போ வா. வேற எதுவும் பேசிக்க வேணாம்” என்றார்.

பாட்டியின் கையை உதறி விட்டான் ஜெய்.

“என்னடா… எப்பவோ போவ வேண்டிய உசுர புடிச்சு வச்சிட்டு உட்கார்ந்திருக்கேனே இதையெல்லாம் பார்க்கதானா? என் வார்த்தைக்கு மதிப்பில்லாம போயிட்டுல்ல?” அழுகையை அடக்கிக் கொண்டு கேட்டார் பாட்டி.

அது அவனை சற்றே அசைத்து பார்த்தது.

“உயிரை வாங்காத, என்ன இப்போ அவளை பார்க்கணும் அதானே?” கோவமாக கேட்டவன் கார் கதவை திறந்து கொண்டு வேகமாக ஸ்ரீயின் வீட்டை நோக்கி சென்றான்.

பாட்டியால் உடனே எல்லாம் இறங்க முடியாது, அவருக்கு ஜனா உதவிக் கொண்டிருந்தான்.

ஜோதியும் மஹதியும் வீட்டில் இல்லை. பின் கட்டில் நாற்காலிகள் போட்டு படித்துக் கொண்டிருந்தனர் ஸ்ரீயும் சியாமளனும்.

எந்நேரமும் சோகமாக இருப்பவளை சிரிக்க வைக்க விரும்பினான் சியாமளன். படிப்புக்கு நடுவில் சிறிது இடைவெளி எடுத்துக் கொண்டவன் கல்லூரியில் நடந்த ஏதோ சம்பவத்தை நகைச்சுவையாக கூறினான்.

அவனது நோக்கம் புரிந்து அவளும் மெலிதாக சிரித்தாள். அவன் அவனது வகுப்புத் தோழர்களை போல இமிடேட் செய்து காட்ட ஸ்ரீ சற்று விரிந்து சிரித்தாள். அவளது இழப்பிலிருந்து கொஞ்சமாக வெளி வந்து இன்றுதான் அதுவும் சியாமளனின் முயற்சியில் சிரிக்கிறாள்.

சமையலறையின் வாசலில் கை கட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்திருந்த ஜெய்யின் இதழ்க் கடையோரம் ஏளன சிரிப்பு. மனக் கண்ணில் குழந்தையின் உருவம். வந்த சுவடே தெரியாமல் திரும்பி நடந்து விட்டான்.

பாட்டியும் ஜனாவும் வீட்டுக்குள் நுழைய அவர்களை கடந்து வேகமாக நடந்து சென்றான் ஜெய்.

“டேய் நில்லுடா எங்க போற?” என பாட்டியும், “அண்ணா நில்லு, அண்ணிய பார்க்கலையா நீ?” என ஜனாவும் சத்தம் போட்டனர்.

ஸ்ரீயின் காதுகளில் இந்த சத்தம் விழ ஓடி வந்தாள்.

“ஜெய் உன்கிட்ட கோச்சுக்கிட்டு போறானாடி?” எனக் கேட்டார் பாட்டி. பதில் தராமல் வெளியில் ஓடி வந்தாள். ஜெய்யின் காலணிகள் அங்கேயே கிடந்தன, அவனை காணவில்லை.

வெற்று கால்களோடு தெருவில் ஓடிச் சென்றாள் ஸ்ரீ. பாட்டியை அங்கேயே இருக்க சொல்லி விட்டு ஜனாவும் அவள் பின்னால் ஓட, சியாமளனும் ஓடினான்.

ஐம்பது அடி தூரத்தில் ஸ்ரீயின் பார்வைக்கு கிட்டினான் ஜெய். அவனும் வெறும் கால்களிலேயே வேகமாக நடந்து கொண்டிருந்தான். உணர்ச்சி மிகுதியில் அவனை அவளால் கத்தி அழைக்க முடியவில்லை. ஆனால் அவனை நோக்கி விரைந்து ஓடினாள்.

கப்பிக் கல் ஒன்று அவளின் இடது கால் கட்டை விரலை பதம் பார்த்தது. பொருட்படுத்தாமல் ஜெய்யை பிடித்து விட ஓடிச் சென்றாள்.

வழியில் வந்த ஆட்டோவை மறித்து ஏறி விட்டான் ஜெய். ஆட்டோவின் பின்னாலும் ஓடப் போனவளின் கைப் பற்றி தடுத்து நிறுத்திய ஜனாவுக்கு மூச்சு வாங்கியது.

சியாமளனும் வந்து விட்டான். ஸ்ரீயின் முகமெல்லாம் சிவந்து போய் அழுகையை அடக்கிக் கொண்டு நின்றிருந்தாள். ஒரு வார்த்தை பேசினாலும் உடைந்து போவோம் என உணர்ந்து வாய்க்குள் கேவலை அதக்கிக் கொண்டாள்.

“என்னாச்சு, ஜெய் ஸார் ஏன் போயிட்டார்? ஃபோன் பண்ணி கூப்பிடுங்களேன்” என்றான் சியாமளன்.

ஜனாவும் அண்ணனுக்கு அழைக்க எடுத்தவன், “என்னடா?” என சீறினான்.

“அண்ணி…”

“ஏன் அவளுக்கென்ன, சிரிச்சு பேசி நல்லாத்தானே இருக்கா? என் இழப்பு பச்ச ரணமா கெடக்கு, நீங்களே அவளை சீராட்டி பார்த்திட்டு வாங்க” என இரைந்த ஜெய் அழைப்பை துண்டித்து விட்டான்.

கன்னம் வழிந்த கண்ணீரை துடைக்கம் மறந்து இடது காலை விந்திக் கொண்டே நடந்து வீட்டை நோக்கி சென்றாள் ஸ்ரீ.

“பாஸ்… உங்க ஃபோன்ல வால்யூம் கம்மி பண்ணி வைங்க” என்றான் சியாமளன்.

“என் அண்ணன் போட்ட சத்தத்துக்கு ஃபோன் இல்லாமலே அங்கேருந்து இங்க கேட்ருக்கும் பாஸ்” என்ற ஜனாவும் சியாமளனும் அடுத்து செய்வதறியாது ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“நீங்க அங்க இருந்தீங்களா, அண்ணா அண்ணியை பார்க்கத்தான் வந்தார்” என்றான் ஜனா.

“அவர் வந்ததே எங்களுக்கு தெரியாது, நீங்களும் பாட்டியும் சத்தம் போடவும்தான் எங்களுக்கு தெரியும்” என்றான் சியாமளன்.

நெற்றியை தேய்த்து விட்டுக் கொண்டான் ஜனா.

வீட்டுக்கு வந்த ஸ்ரீ பாட்டியின் மடியில் முகம் புதைத்துக் கொண்டாள். இவர்களை எப்படி சேர்த்து வைப்பது என கவலை கொண்டார் பாட்டி.

ஜனா வந்துதான் அண்ணியின் காலுக்கு முதலுதவி செய்தான். ஜோதி சின்ன மகளோடு வந்து சேர்ந்தார்.

“செத்த நேரம் வீட்ல இருந்திருக்க கூடாதா நீங்க?” அங்கலாய்த்துக் கொண்ட பாட்டி நடந்ததை சொன்னார்.

ஜோதி வாடிப் போனவராக அமர்ந்து விட்டார். எல்லாம் சரியாகும் என நம்பிக்கை சொல்லி விட்டு பேரனோடு கிளம்பி விட்டார் பாட்டி.

இரவில் ஜெய்க்கு கைப்பேசியில் அழைப்பு விடுத்து பார்த்தாள் ஸ்ரீ. அவன் ஏற்கவில்லை. அடுத்த அழைப்பு துண்டிக்க பட்டது.

அவனது பாராமுகமும் குற்றசாட்டும் அவளுக்கு அதிகப் படியாக தெரிந்தது. சமீபமாக அதிகமாக அழுது விட்டவளுக்கு இப்போது அழப் பிடிக்கவில்லை.

இனியும் அவனுக்காக தொங்கிக் கொண்டு நிற்க கூடாது, அவனே வரட்டும் என நினைத்துக் கொண்டாள்.

“கவலையை மறக்க கொஞ்சமா சாப்பிடுங்க ஸார்” என்ற சசி மதுக் கோப்பையை ஜெய்யிடம் நீட்டிக் கொண்டிருந்தான்.

அதை கையில் வாங்கிய ஜெய்யின் முகத்தில் அப்படியொரு கோவத்தணல். மதுவின் நெடி அவனுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தியது.

சசியின் முகத்திலேயே அந்த மதுவை ஊற்றி, மதுக் கோப்பையை தரையில் வீசி எறிந்தான்.

கெட்ட வார்த்தை கொண்டு அவனை அர்ச்சித்து விரட்டியடித்த ஜெய் தலையை தாங்கிப் பிடித்துக் கொண்டான்.