புதிய உதயம் -18
அத்தியாயம் -18(1)
எல்லாம் முடிந்து போய் வதங்கிய வெற்றிலையாக அறையில் படுத்திருந்தாள் ஸ்ரீ. இன்னும் மயக்கம் தெளிந்திருக்கவில்லை.
ஜெய் இன்னும் யாருக்கும் விஷயத்தை சொல்லியிருக்கவில்லை. அவனுக்கு அடுத்து என்ன செய்வதென ஏதும் புரியாமல் மூளை ஸ்தம்பித்து போயிருந்தது.
அவளை அழைத்து சென்றிருந்த டிரைவர் மது அருந்தி விட்டு காரோட்டியிருக்கிறான். அதனால்தான் விபத்து நேர்ந்திருக்கிறது. அவனுக்கு காலில் மாவுக் கட்டு போட்டிருந்தார்கள். மற்றபடி பயப்படும் காயங்கள் இல்லை.
அவன்தான் ஸ்ரீ அரசு மருத்துவமனைக்கு சென்ற விவரத்தை சொன்னான். அத்தோடு நிறுத்தாமல் ஸ்ரீயும் அந்த ஊழியனும் பேசிக் கொண்டதை அரை குறையாக புரிந்து கொண்டவன், “மேடமோட அப்பா முடியாம அங்கதான் இருந்தார் போல. பணம் கொடுத்து இவங்கதான் ஆள் வச்சு பார்த்திருக்காங்க. ரொம்ப சீரியஸாகிட்டாருன்னு பார்க்க போனாங்க, ஆனா அவர் இறந்து போயிட்டார். அவரை பார்த்துகிட்டவனுக்கு பணம் கொடுத்திட்டு கிளம்பிட்டாங்க” எனவும் கதை சொல்லியிருந்தான்.
குழப்பம், கோவம், வேதனை, விரக்தி என பல உணர்வுகள் ஜெய்யை தாக்கிக் கொண்டிருந்தன.
மயக்கத்தில் இருந்தவளின் வயிற்றை தொட்டுப் பார்த்தவனுக்கு உள்ளம் நடுங்கியது. கண்களில் இருந்து கண்ணீர் இறங்கியது. இன்று ஒரு நாள் இவளோடேவே நான் இருந்திருக்க கூடாதா, ஐயோ என் குழந்தையை காக்க தவறி விட்டேனே என மனதுக்குள் சத்தமாக அலறினான்.
எத்தனை தைரியம் இருந்தால் அந்த துரோகியை பார்க்க சென்றிருப்பாள், குடிகாரனின் காரில் போய் பார்க்கும் அளவுக்கு அப்படியென்ன திடீர் பாசம் வந்தது? அதற்கு அநியாயமாக என் குழந்தையை கொன்று விட்டாளே என ஸ்ரீயின் மீது ஆத்திரம் பொங்கியது.
சட்டென அவளது வயிற்றிலிருந்த கையை எடுத்து விட்டான். சலைன் மாற்றி சென்றார் செவிலியர். போலீஸ் வந்து ஏதோ காகிதத்தில் அவனிடம் கையெழுத்து வாங்கி சென்றார்.
ஜெய்க்கு அவனது அம்மாவிடமிருந்து அழைப்பு வந்தது. எடுக்காமல் ஓய்வறை சென்று விட்டான்.
அரை மணி நேரம் கழித்து முகம் கழுவிக் கொண்டதற்கு அடையாளமாக ஈரத்தோடு வந்தவனின் விழிகள் பறை சாற்றின அவனது அழுகையை.
அம்மாவுக்கு அழைக்காமல் தம்பிக்கு அழைத்து விவரம் சொன்னவன் ஸ்ரீயின் அம்மாவையும் உடன் அழைத்து வரும் படி கூறினான்.
எப்படி நடந்தது என வேதனையோடு ஜனா கேட்ட கேள்விக்கு பதில் தர அவன் அழைப்பில் இருக்க வேண்டுமே.
ஸ்ரீக்கு வைத்தியம் பார்த்த வயதான அந்த மருத்துவர் வந்தார். ஜெய்யிடம் அவனது இழப்புக்காக வருத்தம் தெரிவித்தார். ஸ்ரீ சரியாகி விடுவாள், பயப்பட எதுவுமில்லை, நாளை வீட்டுக்கு அழைத்து செல்லலாம் என்றார்.
ஜெய் மெலிதாக தலையசைத்துக் கொண்டான். அவனது சோகம் அப்பிக் கிடந்த முகமும் தடித்திருந்த இமைகளும் அவரை பாதித்தன போலும்.
“வெளியுலகம் வராத சிசுலேருந்து பச்ச குழந்தைங்க, வாழ வேண்டிய வயசுல உள்ளவங்கன்னு நிறைய இழப்புகள் பார்த்திருக்கேன். கடவுள் கருணை இல்லாதவர்னு கூட தோணியிருக்கு. நிஜம் என்னன்னா சிலர் போன ஜென்மத்துல வாழ்நாள் முடியறதுக்கு முன்ன அசம்பாவிதமா தவறி போயிடுறாங்க, மிச்சம் இருக்க அந்த சில நாழிகைக்கோ நாளுக்கோ வருஷத்துக்கோ ஜனனம் எடுத்து அவங்க நேரத்தை கணக்கை முடிச்சிக்கிட்டு முக்தி அடைஞ்சிடுறாங்க. ஒரு டாக்டர் இப்படி சொல்றானேன்னு நினைக்கலாம். இந்த நம்பிக்கை எனக்குள்ள இருக்கிறதாலதான் என் தொழிலை இயல்பா செய்ய முடியுது. சின்ன வயசுதான் உங்க ரெண்டு பேருக்கும். வாழ்க்கை ரொம்ப பெருசு, ஸ்டே ஸ்ட்ராங்!” என சொல்லி சென்றார்.
மருத்துவர் கூறிய வேதாந்தத்தை ஜெய்யின் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை. உருவம் கொடுத்து வைத்திருந்த அவனது குழந்தை மீண்டும் அவனது தொண்டையை கவ்விப் பிடித்தது.
கலங்கிய கண்களை மூடாமல் மேலே பார்த்தான். கைப்பற்றி நடந்த, தலை கோதிக் கொடுத்த, கன்னம் வருடிய அவனது அப்பா நினைவுக்கு வந்தார். தன் வாரிசை ஏந்தக் காத்திருந்த தன் கைகளால் முகத்தை மூடிக் கொண்டான். பிஞ்சின் கால்களை தாங்க காத்திருந்த அவனது மார்பு ஏறி இறங்கியது.
அவனால் நடந்ததை ஏற்றுக்கொள்ளவோ தாங்கிக் கொள்ளவோ முடியவே இல்லை.
“என்னங்க…” என சின்ன குரலில் அழைத்தாள் ஸ்ரீ. முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டே அவளை பார்த்தான்.
கார் விபத்துக்குள்ளான போதே மயக்கமடைந்திருந்தாள் ஸ்ரீ. பின்னர் நடந்த எதுவும் அவளுக்கு நினைவில் இல்லை. இப்போதும் இடுப்புக்கு கீழே மறத்து போயிருக்க தனக்கு நடந்ததை அவள் உணரவே இல்லை.
அவளிடம் வந்தவன் மூண்டிருந்த கோவத்தை உள்ளேயே அடக்கி அவளின் கை பிடித்துக் கொண்டான். கணவனின் முகத்தை காண சகிக்காமல் தன் நிலைமை புரியாமலேயே அவளின் கண்களிலேயும் கண்ணீர் திரண்டது.
அவளது கன்னத்தை தடவிக் கொடுத்தவன், “தூங்கு” என்றான்.
ஸ்ரீக்கு நிலைமை ஓரளவு புரி பட துவங்கியது. இதயத்தின் அதிர்வு அவளின் செவிகளுக்கு கேட்டது. எதையும் யோசிக்க முடியாமல் கணவனின் முகத்தையே பார்த்தாள். அவளின் சீரற்ற மூச்சுகள் அவளின் பயத்தை காண்பித்துக் கொடுத்தன.
“தூங்கு” என்றான் மறுபடியும். ஸ்ரீ எழ முற்பட்டாள், அவளால் முடியவில்லை.
“அலட்டாம படுத்துக்க!” அவளின் தோளை ஆதரவாக பற்றிக் கொண்டே அதட்டினான். சோர்வின் காரணமாக கண்களை மூடிக் கொண்டாள்.
ஜனா மற்றவர்களோடு வந்து விட்டான். ஸ்ரீயின் கையை விட்டு விட்டு ஓரமாக போய் நின்று கொண்டான் ஜெய்.
வழியிலேயே வேதனையை விழுங்கி தைரியத்தை கையிலெடுத்திருந்த பாட்டி ஸ்ரீயின் முன் அழுது ஆர்ப்பாட்டம் செய்யக் கூடாது என துளசிக்கும் ஜோதிக்கும் அறிவுரை சொல்லித்தான் அழைத்து வந்திருந்தார்.
மனதளவில் தயாராகி வந்தவர்கள் தங்களின் அழுகையை யாருக்கும் காட்டாமல் இருந்தார்கள்.
மஹதி சின்னப் பெண் அல்லவா, அக்காவை அப்படி பார்க்க முடியாமல் அழுதாள். சட்டென ஜனா அவளின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு வெளியே சென்று விட்டான்.
வெளியே இருக்கை ஒன்றில் அமர்ந்த மஹதி கேவி கேவி அழுதாள்.
“மொத்தமா அழுதிடு, அண்ணி முன்னாடி அழக் கூடாது” என்றான் ஜனா.
“அக்கா பாவம்” என தேம்பினாள். ஆறுதலாக ஏதோ சொல்லி அவளை தேற்றினான்.
சற்று நேரத்தில் ஸ்ரீ எங்கே சென்றாள், எப்படி விபத்து நடந்தது என அனைவருக்கும் தெரிய வந்தது.
“ஐயோ பாவி, அந்த சண்டாளன பார்க்க போயா இப்படி ஆச்சு? படிச்சி படிச்சி சொன்னேனேடி அந்தாள பத்தி மறந்து போன்னு. வாழ்ந்தும் கெடுத்தான் இப்படி செத்தும் கெடுத்தானே…” புலம்பினார் ஜோதி.
ஜெய் அங்கே நில்லாமல் வெளியேறி விட்டான். அண்ணன் தன்னை கடந்து போகவும் அவன் பின்னால் ஓடிச் சென்றான் ஜனா.
“நில்லு ண்ணா” என சொல்லி கை பிடித்தான். தம்பியின் கையை உதறி விட்ட ஜெய் நிற்காமல் சென்று விட்டான்.
அறைக்கு ஓடிய ஜனா அங்கே அரற்றிக் கொண்டிருந்த ஜோதியை அப்பறப்படுத்தினான்.
துளசிக்கும் அலை கடலென உணர்ச்சிகள் பொங்கிக் கொண்டிருந்தன. அவரால் அங்கே இருக்க முடியவில்லை, ஸ்ரீயை குற்றம் சுமத்துவது போல பார்த்தவர் வெளியேறி விட்டார்.
“அவர் மேல எந்த அக்கறையும் இல்லை பாட்டி, என் குழந்தை குழந்தைக்கு…” மேலே சொல்ல முடியாமல் வாய் விட்டு அழுதாள் ஸ்ரீ. பாட்டி அவளை ஆதரவாக பற்றிக் கொண்டார்.
ஜனா மருத்துவரை அழைத்து வந்தான். ஸ்ரீயை உறங்க வைக்க மருந்து கொடுத்தார்கள். அவள் உறங்கி விட்டாள், பாட்டி அவளின் பக்கத்திலேயே அமர்ந்திருந்தார்.
அன்றைய இரவு ஜோதியை மட்டும் மருத்துவமனையில் விட்டு மற்றவர்களை அழைத்து சென்று விட்டான் ஜனா. மஹதியையும் தங்களுடன் அழைத்து சென்று விட்டார் பாட்டி.
சற்று முன் கண் விழித்த நொடியிலிருந்து கணவனைதான் தேடிக் கொண்டிருக்கிறாள் ஸ்ரீ.
ஜெய் வந்தான். ஜோதியை படுக்க சொல்லி விட்டு மனைவியின் அருகில் போய் அமர்ந்து கொண்டான். அவளுக்கு அவனை கட்டிக் கொண்டு கதற வேண்டும் போல இருக்கிறது. ஆனால் அவனது பார்வையே அவளை அவனிடம் நெருங்க விடாமல் தடுத்து நிறுத்தி விட்டது.
ஸ்ரீ உறங்கிய பின் அங்கேயே வேறொரு அறை எடுத்து தங்கியிருந்தான். விடியற்காலையில் அவன் வந்த போது சுவரை வெறித்துக் கொண்டு படுத்திருந்தாள் ஸ்ரீ. மகளை நினைத்து இரவெல்லாம் உறங்கியிருக்காத ஜோதி அப்போதுதான் அசந்திருந்தார்.
கணவனை கண்டதும் எழுந்து அமர்ந்தாள் ஸ்ரீ. அவளருகில் சென்றவனின் முகத்தை பாராமல் அவனை அவனது இடையோடு சேர்த்து கட்டிக் கொண்டாள். மௌனமாக அழுதாள்.
அவளின் முதுகை வருடி விட்டுக் கொண்டே சற்று நேரம் அவளை அழ விட்டான். பின் ஓய்வறைக்கு அனுப்பி வைத்தான். அதற்குள் ஜோதி எழுந்து விட்டார். ஸ்ரீயை பார்த்துக் கொள்ளும் படி சொன்னவன் வீட்டுக்கு சென்று விட்டான்.
பின் குளித்து தயாராகி பத்து மணிக்கு மேல்தான் வந்தான் ஜெய். பணம் செலுத்தி டிஸ்சார்ஜ் நடைமுறைகளையெல்லாம் கவனித்தவன் அறைக்கு வந்தான்.
தன்னிடம் கனிவாக ஏதும் பேச மாட்டனா… வேண்டாம் கோவமாக ஏதாவது திட்டவாவது மாட்டானா என அவனது முகத்தையே பார்த்தாள் ஸ்ரீ. அவளின் கண்களை சந்திக்க மறுத்தவன் ஜோதியை வெளியில் அழைத்து சென்றான்.
“ஜி ஹெச் ல யாரோ என்னவோ பயமுறுத்துற மாதிரி சொல்லவும் பைத்தியக்காரத்தனம் பண்ணிட்டா, அவளை மன்னிச்சிடுங்க தம்பி” என்றார் ஜோதி.
“ஸ்ரீ என்ன சொல்றா, அங்க வர பிரிய பட்டா அழைச்சிட்டு போங்க அத்தை” அவர் சொன்னதற்கு சம்பந்தமே இல்லாமல் அவன் வேறு ஏதோ சொன்னான்.
ஜோதி மட்டுமில்லை அனைவருமே ஜெய்யை கவனித்துதானே வருகிறார்கள். காலையிலேயே ஜோதிக்கு அழைத்த பாட்டி, “நீ பாட்டுக்கும் அவளை உன்னோட அழைச்சிட்டு போயிடாத, இங்கேயே அனுப்பி வை, நாங்க இருக்கோம் பார்த்துக்கிறோம். ஜெய்யை விட்டு தனியா இருக்க கூடாது அவ” என கண்டிப்போடு சொல்லியிருந்தார்.
இப்போது ஜெய் இப்படி கேட்கவும் ஜோதிக்கு பகீர் என்றிருந்தது.
“தைய கடைல வேலை கொஞ்சம் அதிகம் தம்பி, ஸ்ரீக்கும் உங்க வீடுதான் வசதி” என்றார்.
தலையாட்டிக் கொண்டு சென்று விட்டான். அறையில் இல்லாமல் மருத்துவமனை வளாகத்தில்தான் எங்கேயோ நின்றிருந்தான். கிளம்பலாம் என மருத்துவமனை நிர்வாகத்தில் சொன்ன பிறகுதான் வந்தான்.
முதலில் ஜோதியை அவரது வீட்டில் விட்டவன் ஸ்ரீயை அவனது வீட்டிற்கு அழைத்து சென்றான். காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்தவளுக்கு அவனிடம் பேசவே பயமாக இருந்தது. குழந்தை தன்னால்தான் போய் விட்டது என அவளுக்குமே குற்ற உணர்வு.
வீட்டுக்குள் வந்ததுமே மனைவியை தன் அம்மா மற்றும் பாட்டியின் பொறுப்பில் அவளை விட்டு விட்டு வெளியே சென்று விட்டான். மஹதியை அழைத்துக் கொண்டு போய் அவளின் வீட்டில் விட்டு வந்தான் ஜனா.
ஜெய் வரப் போகும் இரவுக்காக காத்திருந்தாள் ஸ்ரீ. தன் இழப்பின் துக்கத்தை இன்னும் ஒழுங்காக அனுசரித்திருக்கவில்லை அவள். மனமெல்லாம் அத்தனை பாரம்.
என்ன பாவம் செய்தேன் என என் குழந்தை என்னை விட்டு சென்றது என அதே நினைப்பு. துரோகியை பார்க்க சென்றதுதான் பாவமோ, நானே என் பாப்பாவை… அடுத்து சிந்திக்க முடியாமல் வாயை மூடிக் கொண்டு அழுதாள்.
‘நீ காரணமில்லை’ என்ற ஜெய்யின் வார்த்தை வேண்டும், இல்லா விட்டாலும் ‘ஏன் இப்படி பண்ணின?’ என அவளைப் போட்டு அவன் உலுக்க வேண்டும். இரண்டுமே இல்லாமல் அவனது அருகாமை கிட்டாமல் உள்ளுக்குள் மாய்ந்து கொண்டிருந்தாள்.
நம் குழந்தையை நானும் உன்னளவு நேசித்தேன், என் உயிர் விட்டாவது காத்திருப்பேன், என்னை மீறி நடந்து விட்டது என ஜெய்யிடம் சத்தம் போட்டு அழ நினைத்தாள்.
அவனது கையை இறுக பற்றிக் கொண்டு காற்றில் கரைந்து விட்ட அவர்களின் உயிரிடம் மன்னிப்பு வேண்ட பிரயாசை பட்டாள்.
அவன் வரவில்லை. ஸ்ரீயை அந்த இக்கட்டான அழுத்தமான சூழலிலிருந்து மீட்கும் வல்லமை படைத்தவன் அவளுக்கு அந்த விடுதலையை ஆறுதலை கொடுக்க வரவே இல்லை.
ஸ்ரீயோடு யாராவது தங்கிக் கொள்ளுங்கள் என்ற செய்திதான் பாட்டிக்கு வந்தது. ஜெய்க்கு வீடு வர முடியாத படிக்கு அத்தனை வேலைப் பளுவாம். அலுவலகத்தின் சோஃபாவில் காலி வயிற்றோடு இருட்டுக்கு கம்பெனி கொடுத்துக் கொண்டிருந்தான்.