அத்தியாயம் -16(2)
“ஆஹா நல்லா பேசுறீங்க, உங்ககிட்ட இப்போ சொல்றேன் கேட்டுக்கோங்க. கோவம் வந்தா திட்டிடுங்க, நானும் திருப்பி உங்களை திட்டிக்குவேன், சண்டைதானே சமாதானமா போயிக்கலாம், ஆனா அவாய்ட் பண்ணாதீங்க. அதுதான் என்னை ஹர்ட் பண்ணுது” என்றாள்.
“ஈஸியா சொல்லிட்ட, சண்டை மாறாத வடுவா மனசுல நின்னு போயிடும். அதுக்கு பேசிக்காம இருக்கிறது எவ்வளவோ தேவலாம்” என்றவன் அவளது கழுத்தில் முகத்தை வைத்து அழுத்திக் கொண்டான்.
“விடுங்க காபி சாப்பிடலாம். மாவு பிசைய மட்டும் சொல்லிருக்கேன், போய் பூரி செய்யணும்” என்றாள்.
“காபி சாப்பிடலாம், அப்புறம் உன்னை உடனே விடுறதா இல்லை. சனிக்கிழமைய வேஸ்ட் பண்ணிட்டேன், அத ஈடு செய்யணும்” என்றான்.
“நான் வருவேன்னு அத்தை எதிர் பார்த்திட்டு இருப்பாங்க, எங்க ஓட போறேன் நான்?” எனக் கேட்டுக் கொண்டே ஃபிளாஸ்க்கிலிருந்து காபி ஊற்றிக் கொடுத்தாள். அமைதியாக பருகியவன் அடம் செய்து அவளை தன் வழிக்குத்தான் வரச் செய்தான்.
படுக்கையில் அவள் தன்னை மறந்து கொண்டிருக்கும் வேளையில், “பூரி செய்யணும்னு சொன்ன?” என கிண்டலாக கேட்டான் ஜெய்.
கள்ளச்சிரிப்புடன் கண்கள் சிமிட்டியவள் அவனது கேலிப் பார்வைக்கு பதிலாக அவனது கழுத்து வளைவை காயம் செய்து வைத்தாள். அதற்கு மன்னிப்பாக அவன் கேட்காமலே அவனுக்கு விருப்பமானதையெல்லாம் அள்ளி வழங்கினாள்.
குளித்து முடித்து சங்கடத்தோடுதான் கீழே சென்றாள் ஸ்ரீ. ஆனால் யாரும் ஏதும் கேட்டுக் கொள்ளவில்லை.
“நாங்க சாப்பிட்டோம், ஜெய் வந்ததும் சேர்ந்து சாப்பிடுங்க” என்ற பாட்டி மருமகளோடு தோட்டத்திற்கு சென்று விட்டார்.
ஜெய் வரவும் அவனை திட்டினாள் ஸ்ரீ.
“அதான் எதுவும் சொல்லலைல, ரொம்ப பண்ணாத. சாப்பிட்டு தூங்கு, மதியமும்…”
“மூச்! எனக்கு படிக்கணும்”
“நைட் படிச்சுக்க, எப்படியும் ஒரு வாரம் கிட்ட வர விட மாட்ட, மதியம் புத்தகத்துக்கு டைம் கொடுக்காத, அது என்னோட நேரம்” என்றான்.
“முடியாது முடியாது”
“எப்படி கொஞ்ச நேரம் முன்னாடி பாதில நான் பூரிய ஞாபக படுத்தினப்போ…” என சொல்லிக் கொண்டிருந்தவனின் வாயில் பெரிய பூரி வில்லையை மசாலாவோடு சேர்த்து எடுத்து திணித்து விட்டாள்.
அவனது வாய் பேசா விட்டாலும் மிச்சத்தை அவனது கண்களே பேசின, அவளின் முகம் வெட்கத்தில் குளித்திருந்தது.
*****
ஜனா சென்ற மாதமே நண்பனின் மாமாவிடம் வேலை கற்றுக்கொள்ளவென புதுக்கோட்டை சென்று விட்டான்.
ஜெய்க்கும் ஸ்ரீக்கும் அவ்வப்போது சண்டைகள் வந்தாலும் சமாளித்துக் கொண்டார்கள், பெரிதான ஏற்ற இறக்கங்கள் இன்றி சீராகவே சென்றது அவர்களின் இல்லற வாழ்க்கை.
மஹதி நல்ல மதிப்பெண்களுடன் பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சி பெற்றாள். அடுத்து என்ன படிக்கலாம் என நிறைய குழம்பினாள். ஜெய்யின் யோசனை படி ஆடை வடிவமைப்புக்கான இளம்கலை பிரிவை தேர்ந்தெடுத்து திருச்சியிலேயே படிக்க ஆரம்பித்தாள்.
அவளை கல்லூரி சேர்க்கும் போது ஜெய்தான் எல்லாம் பார்த்துக் கொண்டான். மகளின் படிப்புக்காக சேமித்து வைத்திருந்தார் ஜோதி. ஸ்ரீயும் அதையே உபயோகிக்கத்தான் சொன்னாள்.
“அதனால என்ன ஸ்ரீ, யார் பணமா இருந்தா என்ன? நாளைக்கு யூஸ் ஆகும் அவங்ககிட்டேயே அந்த பணம் இருக்கட்டும்” என்றான்.
“எனக்கும் செமஸ்டர் ஃபீஸ்லாம் நீங்கதான் கட்டுறீங்க, மஹதிக்கு வேணாமே”
“உனக்கு நான் கட்டாம யார் கட்டுவா பின்ன?” விழிகளை இடுக்கிக் கொண்டு கேட்டான்.
“ஐயோ உடனே கெட்ட பையன் வெளில வர்றார். அம்மாட்ட பணம் இல்லைனா பரவாயில்லை, இருக்கிறதால உங்களுக்கு ஏன்…”
“ஏன்… என்ன ஏன்… சொல்லு”
“பேசிட்டுதானே இருக்கோம், எதுக்கு கோவப்படுறீங்க?”
“என் வரவு செலவை உங்கிட்ட மறைச்சதில்ல நான். மஹதிக்கு ஃபீஸ் கட்டுறதெல்லாம் பெரிய விஷயமா? ஏன் நான் செஞ்சா உன்கிட்ட தேவையான அளவு இருக்கிற தன்மானம் குறைஞ்சு போயிடுமோ?”
“அம்மாக்கு சங்கடமா ஃபீல் ஆகலாம்”
“அவங்களுக்கு அப்படி ஆனா நீதான் எடுத்து சொல்லி புரிய வைக்கணும். ஜனாக்காக நீ ஏதாவது செஞ்சா நிஜமா நான் ரொம்ப சந்தோஷ படுவேன், என் தம்பிக்கு நீ எப்படி செய்யலாம்னு கேள்வி கேட்க மாட்டேன்” என்றவனிடம் மேலும் வாதிடாமல் அம்மாவைத்தான் சமாளித்தாள் ஸ்ரீ.
ஜெய்யின் இந்த செயல் ஜோதியை மிகவும் உருக செய்து விட்டது. தனக்கு ஏதாவது ஆனால் கூட தன் பெரிய மகள் நன்றாக இருப்பாள், இளைய மகளையும் கை விட்டு விடாமல் பொறுப்பெடுத்தக் கொள்வான் ஜெய் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. ஜோதியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம். சொல்லப் போனால் பத்து வயது குறைந்தது போன்ற தெம்போடு இருந்தார்.
எல்லாரும் எல்லா வகையிலும் மிகச் சரியாக இருப்பதில்லை, ஏதாவது ஒரு குறை இருக்கும். ஜெய்யிடமும் அப்படித்தான் குறைகள் இருக்கின்றன. அதனால் என்ன, என் மீது அளவு கடந்த அன்பு வைத்திருக்கிறானே, குறைகளை விட பல மடங்கு அதிகமான நிறைகள் அவனிடம் இருக்கின்றன என நினைத்த ஸ்ரீ அவனது குண நலன்களை அனுசரித்து நடந்து கொண்டாள்.
சண்டைகளின் போது அவனை போலவே வீம்பு பாராட்டாமல் அவளே இறங்கி சென்று விடுகிறாள். நிறைய விட்டுக் கொடுப்பதும் அவள்தான். அவனுக்காகதானே என எளிதாகவே அதை எடுத்துக் கொள்கிறாள். ஆனால் ஆழ் மனதில் இது தொடர்பான அதிருப்தி அவளுக்கு தெரியாமலே படிந்து போகிறது.
அவளது ஸ்கூட்டர் சர்வீசுக்கு விட்டிருந்தாள். ஜெய்க்கு வர முடியாத நிலை என்பதால் ஆட்டோவில் வந்து விடுவதாக சொல்லியிருந்தாள்.
மாலையில் கல்லூரி முடிந்ததும் தான் அழைத்து செல்வதாக சொன்னான் சியாமளன். உடனே மறுத்து விட்டாள்.
“போற வழிதானே ஸ்ரீ, உனக்காக தனியாவா பெட்ரோல் போட போறேன்?” எனக் கேட்டான்.
என்ன சொல்லி அவனை தவிர்ப்பது என அவளுக்கு தெரியவில்லை. உண்மையை சொல்லி விட்டாள்.
“இல்லை சியாம், அவர் ரொம்ப பொஸஸிவ், தப்பா எடுத்துக்காத. உன் கூட போனா ஒண்ணும் சொல்ல மாட்டார், ஆனா… அவர் ஃபீலிங்ஸோட விளையாட விரும்பல, உனக்கு புரியும்னு நினைக்கிறேன்” என்றாள்.
“அவருக்கு மட்டும்தானா உனக்குமா?”
“அது தெரியலை, யோசிச்சு பார்த்தா அவர் அப்படி ஒரு சிட்டிவேஷனை எனக்கு கொடுத்தது இல்லை. என்னை தவிர வேற எந்த பொண்ணு கூடவும் சம்பிரதாயமா கூட அவர் சிரிச்சு நான் பார்த்தது இல்லை”
“அவர் என்கிட்டேயே சிரிச்சு பேசினது இல்லை. உங்கிட்டயாவது சிரிப்பாரா மாட்டாரா?” என கிண்டல் செய்தான் சியாமளன்.
“ஹோய் என்ன நீ ரொம்ப டேமேஜ் பண்ற அவரை? இதுக்கு மேலல்லாம் எங்க கதையை உன்கிட்ட சொல்ல மாட்டேன். முடிஞ்சா ஒரு ஆட்டோ பிடிச்சு கொடு” என்றாள். அவனும் ஆட்டோ பிடித்து அவளை ஏற்றி விட்டே புறப்பட்டான்.
ஜெய் இப்போது திருச்சியில் நல்ல பிரபலமாகி விட்டான். வாடகைக்கு இருந்த அலுவலகத்தை பக்கத்தில் இருந்த போர்ஷன்களோடு சேர்த்து சொந்தமாக வாங்கி விட்டான். தனக்கு பிடித்த வகையில் நவீனமாக்க நினைத்தவன் ஸ்ரீயை நேரில் அழைத்தான்.
“எனக்கு சில ஐடியாஸ் இருக்கு, நீயும் பார்த்திட்டு சொன்னா அதே மாதிரி பண்ணிக்கலாம். இப்ப போயிட்டு வருவோமா?” என்றான்.
“நான் எதுக்கு? உங்க விருப்ப படி செய்ங்க”
“ரொம்ப பண்ணாத, உன் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் அது, உனக்கு பிடிச்ச மாதிரிதான் இருக்கணும்”
“அது உங்களோடது”
“ஏன் மேடம் பட்டத்த வாங்கிட்டு எனக்கெதிரா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் ஸ்டார்ட் பண்ண திட்டம் வச்சிருக்கீங்களோ?”
“செஞ்சா என்ன தப்பு?”
“உங்கிட்ட போட்டி போட்டா தோத்துல்ல போயிடுவேன்”
“ஜெய்க்கு எப்பவும் வெற்றிதான் கிடைக்கும். உங்களை தோக்க விட மாட்டேன்”
“அதுக்குத்தான் சொல்றேன், நீ முதலாளி ஆகிடு, நான் உனக்கு வேலை பார்த்து கொடுக்கிறேன்” என அவன் சொல்லவும் சிரிக்க மட்டும் செய்தாள்.
“சீரியஸா சொல்றேன் ஸ்ரீ. எனக்கு பர்டன் அதிகமாகிடுச்சு. சசி சொல்றத செய்வான், அவனுக்கா சுய புத்தி கிடையாது. மத்த யாரையும் நம்ப நான் தயார் இல்லை. நீ வந்தா நிம்மதியா இருப்பேன்”
“ம்ம்… அப்படி ஓடி ஓடி யாருக்கு சம்பாதிக்கணும்?”
“நீ பெத்து தரப் போற என் பசங்களுக்குதான்” சொல்லும் போதே ஜெய்யிடம் அத்தனை ஆசை தெரிந்தது.
அவனது காதை பிடித்து இழுத்தாள். அவளது கையை தட்டி விட்டவன் வாகாக அவளின் மடியிலேயே படுத்துக் கொண்டான்.
“வயித்த தள்ளிட்டு காலேஜ் போக முடியுமா நான்?”
“இப்போ இல்லை, படிச்சு முடிச்சிட்டு பெத்து கொடு. எங்கப்பாவே எனக்கு பிறப்பார்னு அப்பயி சொல்லும். என்ன கொடுக்கிறேனோ இல்லியோ நிறைய தைரியத்தையும் தன்னம்பிக்கையும் நிறைஞ்சவனா வளர்க்கணும் ஸ்ரீ. பாப்பாவா இருந்தாலும் அப்படித்தான் வளர்ப்பேன்” என்றவன் அவளது வயிற்றில் முகம் புதைத்துக் கொண்டான்.
“அப்புறம் எங்க உங்க கூட வர்றது நான்? குழந்தை பிறந்தா அதுக்கு ஒரு வயசு ஆகுற வரைக்கும் என்னோட பிரையாரிட்டி குழந்தைதான்”
“நல்ல விஷயம்தான், நம்ம இடத்துல உனக்கு என்ன ரூல்ஸ் இருக்க போகுது. குழந்தையும் பார்த்துக்கலாம், வேலையும் பார்த்துக்கலாம்” என்றவன் அவளை அப்படியே படுக்கையில் சாய்த்தான்.
அவனது எண்ணத்தை அறிந்து கொண்டவள், “டயர்ட் ஆகிடுவோம், அப்புறம் எந்த வேலையும் நடக்காது. தள்ளிப் போங்க” என்றாள்.
ஒருக்கலித்து படுத்து தலையை கையில் தாங்கிக் கொண்டவன், “இப்போ பிரையாரிட்டி பெட்டுக்கா வேலைக்கா?” எனக் கேட்டான்.
“அஃப்கோர்ஸ்…” என்றவள் அவனது மூக்கை பிடித்து ஆட்டிக் கொண்டே கண்களால் படுக்கையை காண்பித்தாள்.
பின்னர் மாலையில்தான் அலுவலகம் செல்ல முடிந்தது. அவளுடன் கலந்தாலோசித்து அவளது விருப்ப படிதான் அலுவலகத்தை புணரமைத்தான்.
எதிர்காலம் குறித்து நிறைய திட்டமிட்டிருந்தனர், தாங்கள் நினைத்த படிதான் எல்லாம் நடக்கும், தங்கள் வாழ்க்கையில் இனி எப்போதுமே மகிழ்ச்சி மட்டும்தான் நிறைந்திருக்கும் என உறுதியாக நம்பியிருந்தார்கள்.