அத்தியாயம் -13(2)
அவளுக்கு கோவம் வந்து விட்டது. “இது இதுதான்… இந்த குதர்க்க பேச்சுதான் உங்களை கண்டாலே தள்ளி நிக்க சொல்லுது. ஒரு அடி உங்க பக்கமா எடுத்து வச்சாலும் நாலு அடி என்னை பின்னால தள்ளி விடுறீங்க நீங்க” என்றாள்.
பின் தலையை தடவிக் கொண்டே மன்னிப்பாக பார்த்தான். அதில் மலை இறங்கியவள் சாப்பாடு எடுத்து வைத்தாள்.
“நீ சாப்பிட்டியா ஸ்ரீ?” என விசாரித்தான்.
“ம்”
“நாளைக்கெல்லாம் சீக்கிரம் வந்திடுறேன், உன் தூக்கம் டிஸ்டர்ப் ஆகாது”
“ம்”
“வர லேட் ஆனா ஒரு கால் பண்ணு, வந்திடுறேன்” என்றான்.
“ம்”
எரிச்சலடைந்தவன் எடுத்த சாப்பாட்டை தட்டிலேயே வைத்து விட்டு, “இந்த முக்கல் முணகல கேட்டா சாப்பாடு இறங்கின மாதிரிதான்” என்றான்.
“வாங்களேன் இடுப்புல தூக்கி வச்சிட்டு நிலா காட்டிட்டே சோறு ஊட்டி விடுறேன்” என்றவளுக்கு அந்தக் காட்சி கற்பனையில் விரிய சிரிப்பு வந்து விட்டது.
அவனது பார்வையும் அவளது இடுப்புக்கு தாவ, “ஒரு பேச்சுக்கு சொன்னா ஆள பாரு, சாப்பிடுங்க” என்றாள்.
“சாப்பிடுறேன், உட்காரு” என அவன் சொல்ல, அவனுக்கு எதிரில் அமர்ந்தாள்.
“இப்படி கீரியும் பாம்புமா நாம இருந்தா சரி பட்டு வராது. பேச்சு ஏதாவது தப்பா போனா உடனே சொல்லு, எனக்கு நம்ம உறவை நல்லா எடுத்திட்டு போகணும்னுதான் ஆசை” என்றான்.
அவள் சம்மதமாக தலையாட்டிக் கொண்டாள்.
அந்த வாரம் முழுவதும் அவன்தான் அவளை அழைத்து சென்று அழைத்து வந்தான். வார இறுதியில சைலேஷ் அவனது வீட்டுக்கு விருந்து சாப்பிட அழைப்பு விடுத்திருந்தான்.
அவளிடம் சொன்னவன், “எப்படியும் ஒத்துப்பேங்கிற நம்பிக்கைல வர்றேன்னு சொல்லிட்டேன், உன்கிட்ட கேட்காம எப்படி சொல்லலாம்னு சண்டை போடாம வரணும் நீ” என்றான்.
“பரவாயில்லை எம்மேல நம்பிக்கைலாம் வருது ஸாருக்கு…” என்றவள், உடனே தலையில் தட்டிக் கொண்டாள்.
அதிசயமாக கோவப்படாமல் அவளை சின்ன புன்னகையோடு பார்த்திருந்தவன், “நீ நம்பினாலும் நம்பாட்டாலும் அந்த நம்பிக்கை உம்மேல இருக்கிறதாலதான் என் லைஃப தூக்கி உன் கைல கொடுத்திருக்கேன்” என்றான்.
தன் கைகளை விரித்து பார்த்தவள், “அப்படியா?” என்றாள்.
அவளின் கைகளின் மேல் தன் கைகளை வைத்துக் கொண்டவன், “அப்படித்தான்” என்றான். சில நொடி நேரம் இருவரின் பார்வையும் ஒரே புள்ளியில் இருந்தது.
அவள் தன் கைகளை விலக்கிக் கொள்ள, ஒரு அழுத்தம் கொடுத்து விட்டே விட்டான்.
ஞாயிறு மதியம் பதினோரு மணிக்கெல்லாம் சைலேஷின் வீடு வந்து விட்டனர். தடபுடலான வரவேற்பு.
நல்ல அசைவ விருந்து. லாப்ஸ்டர் நண்டு கிரேவி, நட்சத்திர மீன் வறுவல் என ஸ்ரீ சாப்பிட்டிராத வகைகள் சிலவும் இருந்தன. சைலேஷின் மனைவி சிரத்தையோடு கவனித்தாள்.
ஜெய்யின் கட்டிட பணி சிறப்பாகவும் திருப்திகரமாகவும் இருப்பதாக ஸ்ரீயிடம் சொன்ன சைலேஷ், “ஆனா இதுக்கு துவக்க புள்ளி நீங்கதான், உங்க பிரசென்டேஷன்தான்” என அவளை பாராட்டினான்.
“ஒரு வேளை இவருக்கு அடி படலைனா இவரே வந்திருப்பார், என்னை விட நல்லாவே இவர் செய்திருப்பார்” என்றாள் ஸ்ரீ.
“வீட்ல என்ன அடி அடிச்சாலும் வெளில மட்டும் ஹஸ்பண்ட்சை விட்டுத் தர்றதே இல்லை இந்த லேடிஸ், என்ன ஜெய் சரிதானே?” என்றான் சைலேஷ்.
ஜெய் சிரித்து வைத்தான்.
“அப்ப உண்மைதான் போல, ஸ்ரீ மேடம் அதிகமா அடிக்காதீங்க, ஸார் எனக்கு முடிச்சு தர வேண்டிய வேலை நிறைய இருக்கு” என்றான் சைலேஷ்.
“ஆமாம், இவங்க ஊமைக்குத்தா குத்துறது எல்லாம் வெளில தெரியறதே இல்ல, ஆ ஊ ன்னா பொம்பளைங்களையே சொல்ல வேண்டியது” என்றாள் சைலேஷின் மனைவி.
அதற்கு சைலேஷ் பதில் பேச அவனது மனைவி விடாமல் பிடித்துக் கொண்டாள். ஜெய்யும் ஸ்ரீயும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஆனால் அவர்களே சுமூகமாக முடித்து விட்டனர், பின்னர் ஒன்றுமே நடக்காதது போல சாதாரணமாக பேசிக் கொண்டனர்.
அங்கிருந்து வீட்டுக்கு செல்லும் வழியில் அந்த தம்பதியினரை குறிப்பிட்டு சொன்ன ஸ்ரீ, “இப்போவும் அவங்க சாதாரணமா இருப்பாங்களா? இல்ல டைனிங் டேபிள் பேச்சு வச்சு சண்டை போட்டுப்பாங்களா?” எனக் கேட்டாள்.
“எனக்கு ஐடியா இல்ல. ஆனா இதே மாதிரி நாமளும் இருந்தா நல்லா இருக்கும்னு தோணிச்சு” என்றான்.
“எப்படி சண்டை போட்டுக்கிட்டேவா?”
“ம்ஹூம், சண்டை போட்டாலும் உடனே சரியாகிடுறது”
பதில் சொல்ல வாய் திறந்தவளுக்கு இருமலாக இருந்தது. அவளை கண்ணாடி வழி பார்த்தவன் பைக்கை ஓரமாக நிறுத்தி அவள் பக்கமாக திரும்பினான்.
ஸ்ரீயின் உதடுகள், கண்ணிமைகள் வீங்கிப் போயிருந்தன. சுவாசம் கூட சீரில்லாமல் போனது. பயந்து போனவன் பைக்கை எடுத்து வேகமாக விரட்டினான். அவனது இடுப்பை கெட்டியாக பிடித்துக்கொண்டவளுக்கு அந்த பிடியின் இறுக்கம் தளர்ந்து போகும் போது மருத்துவமனை வந்து விட்டான் ஜெய்.
அவளை கையில் ஏந்திக் கொண்டு அவன் உள்ளே நுழைகையில் அவளுக்கு நினைவு தப்பிப் போக ஆரம்பித்திருந்தது.
ஸ்ரீக்கு சாப்பிட்ட எதுவோ ஒத்துக் கொள்ளவில்லை. ஒவ்வாமை ஏற்பட்டு விட்டது.
அவசர சிகிச்சை அளித்த பிறகுதான் விருந்தின் போது புதிதாக அவள் சாப்பிட்ட நட்சத்திர மீன் அவளுக்கு சேரவில்லை என்பதை கண்டறிந்தனர்.
ஜெய் தன் வீட்டினருக்கோ சைலேஷுக்கோ இந்த விஷயத்தை சொல்லவில்லை. சில மணி நேரங்களில் முற்றிலும் குணமாகி விட்டாள். இன்னும் சற்று நேரம் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என சொன்னதால் மருத்துவமனையில்தான் இருந்தனர்.
இது போன்ற ஒவ்வாமைகள் சில சமயங்களில் உயிரிழப்பை கூட ஏற்படுத்தி விடும் என மருத்துவர் சொல்லியிருந்ததில் ஜெய்யின் பயம் இன்னும் அவனை விட்டு அகன்றிருக்கவில்லை. அவளின் கையை கெட்டியாக பிடித்துக் கொண்டவன் தன் முகத்தில் வைத்து அழுத்திக் கொண்டான்.
அவளுக்கு சங்கடமாக இருந்தது. “எதுவும் ஆகல, ரிலாக்ஸ்” என்றாள்.
அவளின் கையை முகத்திலிருந்து விலக்கியிருந்தாலும் தன் கைக்குள்தான் வைத்திருந்தான்.
அவன் பேசவே இல்லை, எதுவும் சொல்ல முடியவில்லை அவனால். எழ முயன்றவளை தடுத்து படுத்துக் கொள்ள செய்தான்.
வெகுவாக சோர்ந்து போயிருந்த அவளின் முகத்தை கண்டவன், கன்னங்களை தடவிக் கொடுத்து, “எதிர் பார்க்காத நேரத்துல அப்பாவை இழந்திட்டு தவிச்சவன் ஸ்ரீ. அன்னிக்கு நான் பட்ட வேதனையை இந்த கொஞ்ச நேரத்துல காட்டிட்ட நீ” என்றான்.
அவள் மறுப்பாக தலையசைக்க, “உன்னை கஷ்ட படுத்தினத்துக்காக எவ்ளோ பெரிய தண்டனை கொடுக்க இருந்த நீ” என்றான்.
பின் வெகு நேரம் இருவரும் பேசிக் கொள்ளவில்லை. அவனது பிடிக்குள்ளேயே அவளது கையை வைத்திருந்தான்.
கண்களை மூடியிருந்தவள் என்ன அசை போட்டு பார்த்தாளோ? திடீரென, “நீங்க லவ்னு சொன்னதும் நான் மறுத்ததுல காரணம் இருக்கு. திரும்ப எந்த முயற்சியும் செய்யாம வேறொரு பொண்ணோட கல்யாணம் வரை போய்ட்டு இப்ப ரொம்ப உருகுறீங்க” என்றாள்.
அவளது கையை பட்டென விட்டவன், “என் கூட வாழறத அருவருப்பா நினைச்ச நீ என்னை குறை சொல்லாத” என்றான்.
பதிலுக்கு கோவம் கொள்ளாமல் நிதானமாகவே, “குத்தம் சொல்லலை, தெரிஞ்சிக்க கேட்டேன்” என்றாள்.
அவன் மீண்டும் அவளது கையை பிடிக்க போக பின்னால் இழுத்துக் கொண்டாள்.
“நினைச்சா பிடிக்கவும் நினைச்சா விடவும் இந்த ஸ்ரீயோட கை அவ்ளோ ஈஸி இல்லை” என்றாள்.
“ஈஸியா கிடைக்கிறத பிடிச்சுக்கிறதுல என்ன சுவாரஷ்யம் இருக்க போகுது?”
“கேட்டதுக்கு பதில் இல்லைனா எப்படில்லாம் மழுப்பலாம்னு உங்ககிட்ட கத்துக்கலாம்”
“திரும்ப திரும்ப உன் பின்னால ஏன் சுத்தலைன்னு கேட்கிறியா? அப்படிலாம் சுத்துற வயசா எனக்கு? இல்ல நீதான் சும்மா விடுவியா? காபி வாங்கி கொடுத்திட்டு மிரட்டி அனுப்ப மாட்ட?”
அவனது பதிலில் திருப்தி கொள்ளாமல் பார்த்தாள்.
“பிடிச்ச பொண்ணுக்கு என்னை பிடிக்கலைனா அத மதிச்சு விலகி போறதுதான் சரிங்கிற கொள்கை உள்ளவன் நான்” என்றான்.
“அப்படியா? எத்தனை பொண்ணுங்ககிட்ட இந்த பாலிஸியை ஃபாலோ பண்ணிருக்கீங்க?”
“இருக்கும்… அஞ்சாறு… இல்ல… அதுக்கும் மேல கூட” சிரிக்காமல் சொன்னவன் அவள் முகத்தில் மாற்றம் ஏற்படாததை கண்டு, “துளி கூட பொசசிவ் ஆகல நீ” என்றான்.
“நம்புற மாதிரி சொன்னா ஆகலாம்” என்றவள் நாக்கை கடித்துக் கொண்டாள்.
“சொல்றேன், இப்போ இல்ல இன்னொரு நாள்”
அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாதவள், “வீட்டுக்கு போலாம்” என்றாள்.
மருத்துவரிடம் கேட்டு வந்தவன் சிறிது நேரத்தில் அவளை அழைத்துக் கொண்டு புறப்பட்டான். வீடு வந்த போது இரவு பத்தாகி விட்டது. எங்கேயோ வெளியில் சென்று வந்திருக்கிறார்கள் என நினைத்துக் கொண்டனர் வீட்டினர்.
ஜெய்க்கு முன் படுத்து விட்டாள் ஸ்ரீ. சற்று தாமதமாக உறங்க வந்தவன் முதல் காரியமாக ஸ்ரீயின் முதுகில் அணைவாக கிடந்த தலையணையை விலக்கி வைத்தான்.
அவள் திரும்பிப் பார்க்க, “இன்னும் தூங்கலையா நீ?” என கேட்டுக் கொண்டே படுத்தான்.
“உங்களுக்கு நைட்ல… தூக்கத்துல…” எப்படி சொல்ல என விழித்தவள், தன் தலையிலிருந்த தலையணையை உருவி அவன் கைகளில் திணித்து, “இதோட ஹெல்ப் தேவைப்படும் உங்களுக்கு, வச்சுக்கோங்க” என்றாள்.
“அப்ப உனக்கு இது தேவையில்லையா?”
“பரவாயில்லை அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்” என அவள் சொல்லும் போதே அந்த தலையணையை தன் காலுக்கு கீழே போட்டு விட்டான்.
“இங்க தலை வச்சு அட்ஜஸ்ட் பண்ணிக்க” தன் தோள் வளைவை காட்டி கூறினான்.
அவள் தயக்கமாக பார்க்க, தன் தலையணையை அவளுக்கு வைத்து விட்டு காலுக்கு கீழ் இருந்ததை அவனுக்கு வைத்துக்கொண்டான்.
அவள் நிம்மதியாக கண் மூடுக்கையில் அவளது இடுப்பை சுற்றி படர்ந்தது அவனது கை. அவள் பதற்றம் கொள்ள, “தூக்கத்துல கை போடல, நினைவோடதான் போடுறேன். இதெல்லாம் அட்ஜஸ்ட் பண்ணிக்க வேணாம், பிடிக்கலைனா ஓபனா சொல்லிடு” என்றான்.
இதற்கு சரியென்றால் அடுத்து வேறு என்ன கேட்பானோ என அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே, “இன்னும் நானே அதெல்லாம் யோசிக்கல ஸ்ரீ. இப்போதைக்கு இது மட்டும்தான், சொல்லு, கை இருக்கட்டுமா எடுத்திடவா?” என்றான்.
“இங்க ஓகே, வேற எங்கேயும் கை போடக்கூடாது” என நிபந்தனை போட்டாள்.
“வேற… என்ன சொல்ற?” என்றவன் அதிர்ந்து போய் கை எடுத்து விட்டான்.
அவன் பக்கமாக திரும்பி, “நான்தான் ஓகே சொன்னேனே…” என்றவள் அவனது பேய் முழியில் வாயை மூடிக் கொண்டு சிரித்தாள்.
“தூக்கத்துல… தெரியாம… ஸாரி…ஹையோ நான் உம்மேல கையே போடல” என திணறலும் தடுமாற்றமுமாக சொன்னவனுக்கு அவளது தொடர் சிரிப்பு தைரியத்தை கொடுத்தது.
அதிர்ச்சிதான் என்றாலும் அந்த இதழ் முத்தத்தை தடுத்திருக்கவில்லை அவள்.