அத்தியாயம் -1(2)
ஸ்ரீக்கு தேநீர் வைக்க கூட தெரியாது. அம்மாவிடம் சென்றவள் சின்ன குரலில், “பாப்பாக்கு பசிக்கும்ல மா, டீ போட்டுத் தர்றியாமா?” எனக் கேட்டாள்.
எதுவும் சொல்லாமல் எழுந்து கொண்ட ஜோதி அழுது கொண்டே தேநீர் போட்டு வைத்தவர், “பாப்பாக்கு கொடுத்திட்டு நீயும் எடுத்துக்க” என சொல்லி மீண்டும் படுக்கைக்கு சென்று விட்டார்.
ஒரு தட்டில் பிஸ்கட்கள் வைத்து தேநீரோடு தங்கைக்கு கொடுத்தவள் அம்மாவுக்கும் கொடுத்தாள்.
சாப்பிட பிடிக்கவில்லை என்றாலும் கண் முன் நின்ற இரண்டு பெண் குழந்தைகளும் ‘வாழ்ந்துதான் ஆக வேண்டும்’ என்ற கட்டாயத்தை பறை சாற்ற வயிற்றை நிரப்பினார் ஜோதி.
மெல்ல, “அப்பா எங்கேம்மா?” எனக் கேட்டாள் ஸ்ரீ.
‘தெரியாது’ எனும் விதமாக தலையாட்டிய ஜோதி விரக்தியாக புன்னகை செய்தார். அதற்கு மேல் ஏதும் ஸ்ரீயால் கேட்க முடியவில்லை.
“கொஞ்ச நேரம் தூங்கும்மா” என்ற மகளின் சொல்லுக்கு கட்டுப்பட்டு மீண்டும் படுத்துக் கொண்டார் ஜோதி.
ஏன் வீட்டை விட்டு செல்லக் கூடாது, அத்தை வீட்டின் முன் ஏன் பந்தல் போடப் படுகிறது, அங்கே ஏன் இவ்வளவு கூட்டம் என கேள்விகளால் துளைத்தெடுத்தாள் மஹதி.
“சும்மா ஏதாவது கேட்டுட்டே இருக்காத பாப்பா, டிராயிங் புக்ல கலர் பண்ணு, போ” என தங்கையை திசை மாற்றி விட்ட ஸ்ரீயின் கவனம் முழுதும் எதிர் வீட்டில்தான் இருந்தது.
மாலையில் வாசுவின் உடல் வந்தது. ஜோதி செல்லவே இல்லை, ஆனால் அவரின் மரணத்தை எண்ணி எண்ணி அவருக்காக அவரின் குடும்பத்துக்காக அழுதார்.
தொலைதூர சொந்தங்கள் என யாரும் இல்லை, வர வேண்டியவர்கள் வந்து விட்டதால் வாசுவின் இறுதி ஊர்வலம் ஆரம்பமானது.
மஹதிக்கு பழங்கள், பிஸ்கட்கள் என கொடுத்து கவனித்து கொண்ட ஸ்ரீ காலை தேநீருக்கு பின் தண்ணீரை தவிர வேறெதுவும் அருந்தவில்லை. அவளின் அம்மாவும் அப்படித்தான்.
இருட்ட தொடங்கிய போது மொட்டையடிக்க பட்ட ஜனாவையும் அவனின் கை பற்றியிருந்த ஜெய்யையும் ஜன்னல் வழி பார்த்தாள் ஸ்ரீ.
தன் வீட்டின் பக்கம் திரும்பிய ஜெய்யின் விழிகளில் கோவக்கனல் இருப்பதை பார்த்தவளுக்கு பயமாக இருக்க, வேகமாக ஜன்னலை அடைத்து விட்டாள்.
ஒரே நாளில் ஜெய், ஸ்ரீ இருவருக்கும் அவர்களின் வயதுக்கு மீறிய பொறுப்பு வந்து சேர்ந்தது.
அடுத்த நாள் வாசுவின் தம்பி, துளசியின் சகோதரர்கள் இன்னும் இரண்டு ஆடவர்கள் ஜோதியின் வீட்டுக்கு வந்தனர். துரைசாமி எங்கே என கோவமாக கேட்டனர். ஜோதிக்கு பயம் பற்றிக் கொண்டது.
ராஜாம்பாள் பாட்டி வந்தார், “தனியா இருக்க பொம்பளைய இப்படிலாம் மிரட்டாதீங்க ப்பா, அந்த கடங்காரன் இவளையும் சேர்த்துதான் ஏமாத்திட்டு ஓடிட்டான், விடுங்க இவளை” என்றார்.
ஜோதியும் அழுகையை அடக்கிக் கொண்டு ‘துரை பற்றி தனக்கு எந்த விவரமும் தெரியாது, அப்படி தெரிய வந்தால் கண்டிப்பாக உங்களுக்கு அறிவிக்கிறேன்’ என தன் மகள்களின் தலையில் அடித்து சத்தியம் செய்தார்.
அந்த ஆண்கள் கூட்டம் எரிச்சல் கலந்த இயலாமையோடு அங்கிருந்து வெளியேறினார்கள்.
ஜோதிக்கு அங்கிருந்து சென்று விடத்தான் விருப்பம். ஆனால் பழகிய பாதுகாப்பான இடத்தை விட்டு எங்கு செல்வது என அச்சமாக இருந்தது. துளசியின் முகத்தில் எப்படி விழிப்பது என சங்கடம் இருந்தாலும் அவ்விடம்தான் தங்களுக்கு அடைக்கலம் என தோன்றியதால் அங்கேயே இருந்தார்.
ஜோதியின் நிலையையும் அங்கிருந்தவர்கள் புரிந்து கொண்டனர். துரை தன் தொழில் பார்ட்னர் வாசுவுக்கு மட்டும் துரோகம் செய்யவில்லை, தன் மனைவி ஜோதிக்கும் சேர்த்துதான் துரோகம் இழைத்திருக்கிறார், பாவம் யாருமில்லா பெண், இரண்டு பெண் குழந்தைகளோடு கஷ்ட படுகிறார் என ஜோதியின் மீது பரிதாப பார்வைதான் விழுந்தது.
தங்கள் குடும்பத் தலைவனை மரணம், துரோகம் என இரு விதங்களால் இழந்து விட்ட இரண்டு பெண்மணிகள் எதிரெதிர் வீடுகளிலேயே வசித்தனர்.
ஜோதிக்கு தையல் மெஷின் கை கொடுத்தது. கணவரின் இழப்பிலிருந்து மீளாத துளசியை அவரின் மாமியார் தாங்கிக் கொண்டார்.
தன் சின்ன மகனிடம் பேசி இந்த வீட்டுப் பத்திரத்தை அவனிடம் கொடுத்து கடன்களை அவனை கொண்டே அடைக்க செய்தார். துளசியின் சகோதரர்கள் கொஞ்சம் உதவினார்கள்.
மேல் மாடியில் ஷெட் போட்டு அங்கே குடியேறி முதல் தளத்தில் அவர்கள் இருந்த வீட்டையும் வாடகைக்கு விட்டனர்.
ரசமோ, மோரோ பசிக்கு எதையோ சாப்பிட்டுக் கொண்டனர், தேவைக்கு இல்லாமல் புதுத் துணிகள் எடுப்பதில்லை. எவ்வளவு முடியுமோ அந்தளவுக்கு செலவுகளை சுருக்கிக் கொண்டு பேரன்களின் படிப்பிற்கு பாதகம் வராமல் பார்த்துக் கொண்டார் பாட்டி.
ஜெய் எதிர் வீட்டு சின்ன பெண்ணிடம் பேசுவதை மட்டுமல்ல, அவளை பார்ப்பதையே நிறுத்திக் கொண்டான். அவனின் உலகத்தில் எதிர் வீடு இல்லவே இல்லை.
என் அப்பாவின் குற்றத்துக்கு எனக்கு தண்டனையா என மனதிற்குள் வெம்பினாள் ஸ்ரீ. போக போக அவளுக்குள்ளும் வீம்பு, நீ என்ன என்னை தவிர்ப்பது, நீ யாரென்றே எனக்கு தெரியாது என்பது போல அவளும் நடந்து கொண்டாள்.
துளசி வீட்டை விட்டு வெளியில் சென்று நடமாடவே இரண்டு வருடங்கள் ஆனது. ஜோதியும் துளசியும் ஒருவரை ஒருவர் நேரில் கண்டு கொள்ளும் சந்தர்ப்பங்கள் வாய்க்கத்தான் செய்கின்றன. ஜோதியின் தவறு ஏதுமில்லை என துளசியின் மனதுக்கு புரிகிறது, ஆனால் அவரிடம் பேச முடியவில்லை.
தன் கணவரின் இழப்புக்கு காரணமான துரோகியுடன் சம்பந்தப்பட்ட யாரையும் ஏற்றுக் கொள்ள அவர் தயாராகவே இல்லை. துளசியின் மனம் புரிந்தவர் போல ஜோதியும் விலகியோ ஒதுங்கியோ நின்றார்.
ஜனாவுக்கு அவனது அண்ணனை போல ஸ்ரீ வீட்டினர் மீது கோவமில்லை. அவனுக்கு அவ்வளவாக விவரங்களும் தெரியாது, ஆகவே அவன் எப்பொழுதும் போல பள்ளியிலோ தெருவிலோ அவர்களை பார்த்தால் சிரிப்பான், பேசுவான்.
ஜெய் கல்லூரி படித்துக் கொண்டிருந்த சமயம், தெருவிலிருந்த மனோ என்ற பையனும் ஜெய்யுடன் படித்தான். அவன் வாழ்த்து அட்டை ஒன்றில் கிறுக்குத் தனமான காதல் வாசகங்கள் எழுதி ஜனாவின் கையில் கொடுத்து, ஸ்ரீயிடம் சேர்ப்பிக்க சொன்னான்.
“அதெல்லாம் முடியாது, அண்ணாக்கு தெரிஞ்சா அடிப்பான்” என மறுத்தான் ஜனா.
“ஹெல்ப்தானேடா ப்ளீஸ்டா, என் கிரிக்கெட் பேட் தர்றேண்டா உனக்கு” என ஜனாவை சரி கட்டி விட்டான் மனோ.
அன்று ஸ்ரீக்கு உடம்பு சுகமில்லாத காரணத்தால் பள்ளிக்கு வரவில்லை. ஜனா அந்த வாழ்த்து அட்டையை தன்னிடமே வைத்திருந்தான்.
ஜனா அதிக குறும்பு நிறைந்த பையன், சேட்டைகள் மித மிஞ்சிய அளவிலிருக்கும். குடும்ப விழா ஒன்றில் அவனது குறும்பில் அதிருப்திஅடைந்த அவனுடைய மாமி அப்பா இல்லாத பிள்ளைத்தானே அதான் இப்படி இருக்கு என சொல்லி விட்டார்.
அவனது அம்மாவோ பாட்டியோ விழாவுக்கு வந்திருக்கவில்லை. சகோதரர்கள் இருவர் மட்டும்தான் வந்திருந்தனர்.
உண்மையில் ஜனாவின் வேலையும் அப்படித்தான் இருந்தது. அவனுடைய மாமா உரிமையோடு திட்டுகிறேன் என்ற பெயரில் சிறுவன் என்றும் பாராது கண்ணில் தண்ணீர் வரும் படி பேசி விட்டார். ஜெய்யால் பொறுக்க முடியவில்லை.
ஒரு வேளை அப்பா இருந்திருந்தால் இப்படி நிலை ஆகியிருக்காதோ என நினைத்தவன் தம்பியை தனியே அழைத்து சமாதானம் செய்து இனி இப்படியெல்லாம் மற்றவர்கள் திட்டும் படி நடந்து கொள்ளாமல் ஒழுங்காக இரு என அறிவுரை வழங்கினான்.
தலையாட்டிக் கொண்ட ஜனா, அவனது மாமி ஸ்டோர் ரூமில் இருக்கும் வேளையில் கதவை அடைத்து விட்டான். அரை மணி நேரம் சென்றுதான் மாமி இருக்குமிடம் தெரிந்து விடுவிக்க பட்டார். விசாரணையில் ஜனாதான் என தெரிந்து விட்டது.
மற்றவர்களுக்கு முன் முந்திக் கொண்ட ஜெய் தம்பியை அடி வெளுத்து விட்டான். இரண்டு பெரிய ஆட்கள் சேர்ந்து இழுத்தும் கூட ஜெய்யை கட்டுப்படுத்த முடியவில்லை.
ஜனாவைத்தான் ஜெய்யின் கண் பார்வையிலிருந்து அப்புறப்படுத்தும் படி ஆனது. அன்றிலிருந்து அண்ணன் என்றால் ஜனாவுக்கு மிகுந்த பயம், பிடிக்கிறதோ இல்லையோ அண்ணனின் சொல் படி கேட்டுக் கொள்ளவும் செய்வான்.
இப்போது ஜனா ஒளித்து வைத்திருந்த வாழ்த்து அட்டை ஜெய்யின் கைக்கு கிடைத்து விட்டது. பெயர் போடப் படாமல் மொட்டையாக எழுதப் பட்டிருந்தது.
தம்பியை அழைத்தவனின் கண்களில் தென் பட்ட ரௌத்திரத்தில் ஜனாவுக்கு அழுகை வந்து விட்டது.
“ஸ்ரீ அக்கா… உனக்கு தெரியாம… அடிச்சிடாத ண்ணா இனிமே வாங்க மாட்டேன்…” வார்த்தைகளை பிய்த்து போட்டு உளறிக் கொட்டினான் ஜனா.
வாழ்த்து அட்டையோடு கோவமாக வெளியில் கிளம்பி விட்டான் ஜெய். ஸ்ரீக்கு ஓரளவு உடல் நன்றாகியிருக்க டியூசன் செல்ல புறப்பட்டாள். வழியில் அவளை கண்டு விட்ட ஜெய், வாழ்த்து அட்டையை கசக்கி அவளின் முகத்தில் விட்டெறிந்தான்.
“ஆளும் மூஞ்சியும், ஸ்கூல் படிக்கிற வயசுல செய்ற வேலையா இது? அது சரி ஓநாயோட பொண்ணு வேறெப்படி இருக்கும்?” அருவருப்பான குரலில் சொன்னான்.
எதுவும் புரியாத ஸ்ரீயின் கண்களில் கண்ணீர் கோர்த்துக் கொண்டது. ஆனாலும் தன்னை திட்டுபவனை சும்மா விடுவதா என்ற எண்ணமும் எழ, அவளும் பதிலுக்கு திட்ட ஒரு விரல் நீட்டி ஏதோ சொல்ல வாய் திறந்தாள்.
அதற்குள் முந்தியிருந்தவன், “கண்ணு முன்னாடியே இருந்து உயிரை வாங்காம எங்கேயாவது போய்த் தொலைங்க” என சீறி விட்டு அவளின் பதில் மொழிக்கு காத்திராமல் சென்று விட்டான்.
கண்ணீர் கன்னம் நனைக்க தரையில் கிடந்த அட்டையை எடுத்து பிரித்துப் படித்தாள். இப்போதும் அவளுக்கு எதுவும் சரியாக புரியவில்லை. ஆனால் அவமானமாக இருக்கிறது, யாரும் பார்க்கவில்லை என்பதை உறுதி செய்து மனதை திடப் படுத்திக் கொண்டாள்.
வாழ்த்து அட்டையை கிழித்துப் போட்டவள் டியூசன் செல்லாமலேயே வீடு திரும்பி விட்டாள். அன்றிலிருந்து ஜெய் வருவதோ நிற்பதோ தூரமாக தெரிந்தாலே அவனது பார்வையில் படாத வண்ணம் ஒளிந்து கொள்வாள். இப்போது அவனை கண்டால் பயமில்லை, ‘துஷ்டரை கண்டால் தூர விலகு’ எனும் மனப்பாங்கு.
அந்த வருட கோடை விடுமுறை வந்தது.
ஜோதியின் வீட்டு ஓனர் அந்த வீட்டை புதுப்பிக்க போவதாக கூறி காலி செய்ய சொன்னார்கள். வேலைகள் உடனடியாக ஆரம்பிக்க போவதாக சொன்னவர்கள், கடைசி மாத வாடகை வேண்டாமெனவும் உடனடியாக காலி செய்து தரும் படியும் கேட்டுக் கொண்டனர்.
ஒரு வாரத்தில் வேறொரு இடத்தில் வீடு பார்த்து விட்டார் ஜோதி. அவர்கள் ஜாகை மாறவும் தான் எதிர் வீட்டு பக்கம் ஜெய்யின் பார்வை சென்றது. ஆனாலும் அந்த வீடு ஒரு வித எரிச்சலையும் கோவத்தையும் கொடுத்தது.
தன் தந்தையின் இறப்புக்கு காரணமான துரையின் மீதான கோவ வெறி அவர் சம்பந்த பட்ட அனைத்தின் மீதும் படர்ந்தது. அவனது அந்தக் கோவம் முழுவதுமாக இறக்கி வைக்கப் படாமல் உள்ளுக்குள்ளேயே கனன்று கொண்டிருந்தது.
சமயம் வாய்க்கும் போது சொற்ப அளவிலான கோவத்தை யார் மீதாவது காட்டுவான், அதற்கே அந்த எதிராளிகள் மருண்டு போய் விடுவர்.
துரையின் குடும்பம் தன் கண் பார்வையிலிருந்து தன் அண்மையிலிருந்து எங்கோ தூரமாக போய் விட்டதாக நினைத்துக் கொண்டான். இனி அவர்களை சந்திக்க போகும் வாய்ப்பு தன் வாழ்நாளில் இல்லவே இல்லை என உறுதியாக நம்பினான்.
ஆனால்?