Advertisement

“நான் ஆருங்றதுலாம் என்ர வருங்கால  மாமியார்கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கோ என்ன புடிச்சிருக்கா? புடிக்கலையானு மட்டும் சொல்லு? நான் போயிடுறேன்.” என்றாள்.

அவனுக்கு எதுவோ புரிவது போல் இருக்க, “உன்ர வருங்கால மாமியார் ஆரு?” என்றான்.

“உன்ர அம்மாத்தான்…”

“சுகன்யா?”

“ம்ம்… அது நானேதான்.” என்றாள்.

அவனால் நம்பவே முடியவில்லை. வயசு ரொம்ப கம்மியா இருக்கவும் ரொம்ப சின்ன புள்ளையா இருக்கும் என நினைத்துத்தான் போட்டோவை பார்க்காமலே வேண்டாம்னு சொன்னான். ஆனா இப்போ நேரில் பார்க்கும்போது அவள் சிறு பெண் எனச் சொன்னால் அவனது மனசாட்சியே அதை ஏற்றுக்கொள்ளாது.

“நீ குட்டிப்பொண்ணா இருப்பேனு நினச்சேன்.”

“என்ன பார்த்தா குட்டிப்பொண்ணு மாதிரி தெரியுதா?”

“அதான் நினைச்சேனு சொல்லிபோட்டேனே!” அவன் தன்னை பார்க்கும் போது கண்களில் வந்துபோன ரசனையைப் பார்த்தவள், நாணத்தில் முகம் சிவக்கத் தலையைக் குனிந்தவாறே “என்ன உங்களுக்கு புடிச்சிருக்கா?” எனத் திரும்பக் கேட்டாள்.

அவளின் வெக்கத்தை ரசித்தவன் அவளின் இடுப்பில் கைபோட்டு  தன்னருகில் இழுத்து நிற்க வைத்ததும் அவள் அதிர்ந்து போய், “மாமா என்ன பண்றீங்க? ஆராவது வந்துடப்போறாங்க.” என்றாள்.

“வந்தா வந்துபோட்டு போறாங்க.”

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஊருக்குள்ள உங்க பேருக்குன்னு ஒரு மரியாதை இருக்குன்னீங்க இப்போ எல்லாரும் வந்து பாத்தா அது கெட்டுப்போய்டாதா?”

“முன்பு என்னால ஒரு பொண்ணோட பேர கெட்டு போயிடக்கூடாதுனு பயத்தில் சொன்னேன். ஆனா இப்போ அப்படி இல்லை நீ என்ர பொண்டாட்டியா வரப்போறவ அதானால தைரியமா எல்லார் முன்னாடியும் உன்ன கைப்புடிச்சி கூட  கூட்டிப்போவேன்.”

“பார்டா என்ற மாமனுக்குள்ளேயும் காதல் மன்னன் இருப்பான் போலையே.” என நக்கலடித்தவள், “உங்களுக்கு நான் பொண்டாட்டியா வரோணும்னா அதுக்கு என்ர அப்பா சம்மதிக்கோணும் அதை மறந்துப் போடாதிங்க.” என்றாள்.

அவளை விட்டவன், “என்ன நக்கலா ஒதைவிழும்.” எனச் சிரித்துக்கொண்டே மிரட்டியவன், “உன்ர அப்பா பொண்ணு குடுக்கமாட்டேனு சொன்னா அவர் காலில் விழுந்தாவது சம்மதிக்க வச்சிப்போட மாட்டேன்.” என்றான்.

அவனை விட்டு விலகி ஓடியவாறே, “ஆருக்கு ஒதை விழுகப்போகுதுனு கண்ணாலம் முடிஞ்சதும் பார்க்கலாம் மாமா.” கூறினாள்.

“வாலு!” என்றவன் ‘இவ என்ர வாழ்க்கைக்குள்ள வந்தா தெனமும் வூட்ல பூரி கட்டை பறக்கும் போலையே!’ என மனதில் நினைத்தவாறே சிரித்தான்.

இரவு தமிழ் எழிலை சாந்தி முகூர்த்தத்திற்கு ரெடி பண்ணி கொண்டிருந்தாள். எப்போதும் வாய் ஓயாமல் பேசிக்கொண்டிருக்கும் எழில் இன்று அமைதியின் திருவுருவாய் அமர்ந்து அக்காவிடம் தன்னை ஒப்படைத்துவிட்டு அமர்ந்திருந்தாள். மனதில் இன்று இரவை நினைத்து பயத்துடன் அமர்ந்திருந்தாள். திருமணம் ஆன எல்லா பெண்களுக்கும் வரும் பதட்டமும், பயமும் எழிலையும் விட்டு வைக்கவில்லை.

அப்போது அறைக்குள் வந்த கங்கா அவர்களின் அருகில் வந்தவர் கொண்டுவந்த பால் செம்பை டேபிளில் வைத்துவிட்டு எழிலின் மிதமான அலங்காரத்தைப் பார்த்து அவளின் முகத்தை வழித்து நெற்றி முறித்தவாறே, “ரொம்ப அழகா இருக்கடா கண்ணு.” என்றார்.

அவரின் பாராட்டுதலில் எழில் வெக்கத்தில் முகம் சிவக்க தலையைக் குனிந்து கொண்டாள்.

மூன்று வருடத்திற்கு முன்னால் கங்காவின் முகத்தில் கூட முழிக்கப் பிடிக்காமல் அவரை வெறுத்து ஒதுக்கிய எழிலை  தன் அன்பால் மாற்றிவிட்டார். எழிலை இந்த திருமணத்திற்கு ஒத்துக்கொள்ள வைக்க அவரும் ஒரு காரணம். மாறனின் ஆசைக்காக ஒருநாள் எழிலைச் சந்தித்து அவளின் கையை பிடித்துக்கொண்டு மன்னிப்புக் கேட்டதை எழிலாலும் நம்பவே முடியவில்லை. கங்காவின் மாற்றத்தை அன்றுதான் உணர்ந்தாள். அதுக்கப்புறம்தான்  மாறனின் காதலை ஏற்றுக்கொண்டாள்.

கங்கா தமிழின் தலையில் பூ இல்லாததை பார்த்ததும் வெளியே சென்று பிரிஜில் இருந்த பூவை எடுத்துவந்தவர், “இந்தப்பூவ நீ வச்சிக்கோ கண்ணு.” எனப் பூவை மருமகளிடம் நீட்டினார்.

“எனக்கு இப்போ எதுக்குங்கத்தை பூ ப்ரிட்ஜ்லேயே வைங்க காலைல வச்சிருக்குறேன்.”

“காலைல வைக்கறதுக்கு இருக்கு கண்ணு நீ இத வச்சிக்க.” என வற்புறுத்தி அவரே மருமகளின் தலையில் வைத்துவிட்டார்.

“சரி கண்ணு வெரசா எழிலைக் கூட்டிப்போய் மாறனோட அறையில் விடுகண்ணு.”

“இனியன் தூங்கிட்டானுங்களா அத்தை?”

“இன்னும் இல்லைக்கண்ணு. குழந்தை அவன் தாத்தாகூட விளையாடிட்டு இருக்கான், நீ போ நான் பேரனைத் தூங்க வைச்சிப்போடறேன்.” என்றவர் இருவரையும் அனுப்பி வைத்தார்.

தமிழ் தங்கையைக் கொழுந்தனின் அறைக்குக் கூட்டிவந்தவள் எழில் உள்ளேப்போய் கதவைச் சாற்றியதும் தன் அறைக்குச் சென்றாள்.

உள்ளே வந்த எழில் அறையில் முதலிரவுக்கென்று பண்ணியிருந்த அலங்காரங்களைப் பார்த்தவாறே கொண்டு வந்திருந்த பால் சொம்பை டேபிளில் வைத்து விட்டுத் திரும்பியதும் தன் முன்னாள் மண்டியிட்டவாறே இருந்த கணவனைப் பார்த்ததும் ஒரு நொடி அதிர்ந்துவிட்டாள்.

எழில் உள்ளே வந்து பாலை வைத்ததும் அவளின் முன்னால் மண்டியிட்டவாறே கையில் ஒரு பார்சலை நீட்டி “என் அழகான ராட்சசிக்கு மாமாவோட பரிசு.” என்றான்.

கணவனின் காதலில் உருகியவள் அவன் குடுத்த நகைப்பெட்டியைத் திறந்து அதிலிருந்த நகையை பார்த்தும் முகத்தில் மகிழ்ச்சி மின்ன, “மாமா இது நா அன்னைக்குத் தாலிக்கொடி எடுக்கப்போனப்ப நல்லாருக்கேனு எடுத்து பாத்தேன்ல அதுதானே? எனக்கு இது புடிச்சிருக்குனு  உனக்கு எப்படி தெரியும் மாமா?”

“நீ ஆசையா எடுத்து பார்க்கும் போதே உனக்கு இத வாங்கி குடுக்கோணும்னு முடிவு பண்ணிபோட்டேன்டா. அதான்  அன்னைக்கே திரும்பப் போய் அதே மாடல்ல ரெண்டு வாங்கிட்டேன்.”

மாறன் அவளுக்கு ஆசையாக வாங்கிக்குடுத்தது குட்டி குட்டி இதயம் சுத்தியும் வரமாதிரி வடிவமைக்கப்பட்ட ப்ரேஸ்லெட்.

அவளைக் கட்டில் அமரவைத்தவன் அதனை எடுத்து அவளின் கையில் போட்டுவிட்டவன் தன் கையை அவளிடம் நீட்டினான்.

அவளும் அவனுக்குப் போட்டு விட்டுவிட்டு நா, “உனக்கு கிப்ட் எதும் வாங்கலையே மாமா?”

“அதுக்கென்னடா மாமாவுக்கு ஆசையா ஒரு முத்தம் குடு வாங்கிக்குறேன்.” என கண்ணடித்தவாறே கூறினான்.

அதில் வெட்கப்பட்டவள் “அதலாம் முடியாது போடா.” என்றாள்.

“நீ குடுக்காட்டி என்னடா, மாமாவே எடுத்துக்கறேன்.” அவளின் உதடுகளைப் பார்த்தவாறே மனைவியின் அருகில் நெருங்கி வரவும் அவனைப் பிடித்துத் தள்ளிவிட்டுவிட்டு எழுந்து கட்டிலைச் சுற்றி ஓட ஆரம்பித்தாள்.

அவள் ஓடவும் அவனும் துரத்த ஆரம்பித்தான். சிறிது நேரம் ஓடி பிடித்து விளையாடியவர்கள், மூச்சு வாங்கவும் எழில் நின்றுவிட்டாள். அவள் நிற்கவும் அவளின் கையை எட்டி பிடித்து கட்டிலில் தள்ளிய அவளின் அருகில் படுத்தவாறே அவன் நினைத்ததை அவளிடம் இருந்து எடுத்துக்கொள்ள ஆரம்பித்தாள்.

அவளும் அவனின் தொடுகையில் உருகிக் கரைந்தாள். அங்கு அழகான கூடல் அரங்கேறியது.

சரவணபாண்டியன் தன் மகளை தன் மார்பிலே போட்டு தட்டிக்கொடுத்து தூங்க வைத்துக் கொண்டிருந்தான். அப்போது உள்ளே வந்த தமிழை பார்த்தவன், “எங்க தமிழ் இனியன்?” என்று கேட்டான்.

“பெரிய மாமா கூட இருக்கான் மாமா. அத்தையே இனியன  பாத்துக்குறேன் சொல்லி என்ன எழில் கூட அனுப்பி வச்சி போட்டாங்க.” என்றவாறே கட்டிலில் அமர்ந்தவள் மாமியார் வைத்து விட்டிருந்த பூவை எடுக்கப்போனாள்.

அவளின் கையை பிடித்துத் தடுத்தவன், “தலையில் வச்சப்பூ வாடறதுக்குள்ள எடுக்காத டி!” என்றான்.

கணவன் சொன்னதும்தான் ஞாபகம் வந்தது, “சாரி மாமா மறந்துபோட்டேன். நான் வேண்டாம்னு தான் சொன்னேன் அத்தத்தான் வச்சிவிட்டுடாங்க.” என்றவாறே காலை தூக்கி கட்டிலில் வைத்து நீட்டிவிட்டு உட்கார்ந்தாள்.

 “கால், கையெல்லாம் ரொம்ப வலிக்குது மாமா.”

சரவணபாண்டியன் தன் மார்பில் உறங்கிக் கொண்டிருந்த மகளை தன் அருகில் படுக்க வைத்து விட்டு எழுந்து வந்து அவளின் காலின் அருகில் அமர்ந்தவாறே மனைவியின் காலை மடியில் எடுத்து வைத்துப் பிடித்துவிட ஆரம்பித்தான்.

அவன் பிடித்துவிடவும் சிறிது நேரத்திலே கால் வலி குறைந்ததும், “போதும் மாமா இப்போ பரவால!” என்றாள்.

மடியிலிருந்த காலை எடுத்து கட்டிலில் வைத்துவிட்டு அவளருகில் வந்து அமரவும் உட்கார்ந்தவாறே கணவனின் மார்பில் சாய்ந்துக்கொண்டாள்.

அவனும் அவளின் தலையை தடவிக்கொடுத்தவாறே அந்த நிமிடத்தை  ரசித்தான். அவன் தலைகோதி விட்டதில் கணவனின் மார்பிலே துயில்கொண்டாள்.

மனைவி தூங்கவும் அவளை மெல்லத் தூக்கம் கலையாமல் படுக்க வைத்து அவளின் நெற்றியில் விழுந்து கிடந்த முடியை ஒதுக்கிவிட்டு நெற்றியில் இதழ் பதித்தவன் அவளின் முகத்தைப் பார்த்தவாறே, “ஐ லவ் யூ டி என் செல்லப்பொண்டாட்டி.”

அவளும் அரைத்தூக்கத்திலே “மீ டூ மாமா.” என மெல்ல முனகினாள்.

அவளின் பதிலில் அழகாகப் புன்னகைத்தவன், “உறக்கத்திலும் தன்னை காதலித்துக்கொண்டிருக்கும் காரிகையவளின் காதலில் உருகித்தான் போனான்.

எதிர்பாராமல் அவன் வாழ்வில் நுழைந்த காரிகையவள் நேசம் எனும் விதையைத் தூவி அவனின் மனதில் காதல் எனும் மூன்றெழுத்து மந்திரத்தைத் துளிர்க்கச்செய்து விட்டாள். இனி அவர்களின் வாழ்வில் மகிழ்ச்சி மட்டுமே…!!!

                                ❤️❤️❤️முடிவுற்றது❤❤❤

Advertisement