Advertisement

“ஏனுங்கப்பா இம்புட்டு சொத்து இருக்கும்போது ஏன் இத்தனை நாளா வேற ஆரும் பொண்ணுக் குடுக்கல?”

“அவங்க சொந்தத்துலையே அந்த பையனுக்கு பொண்ணுக் குடுக்க நிறையப் பேர்க்கு ஆசைதான் போல அம்மணி. ஆனா அந்த பையனுடைய ஜாதகத்தில் செவ்வாய், ராகு கேது இருந்ததால நிறைய ஜாதகம் பாத்து போட்டாங்க போல ஒண்ணும் சரி வரலையாட்டுக்கு அதான் இம்புட்டு நாள் கண்ணாலம் ஆகாம தள்ளிபோயிருக்கு அம்மணி.”

“அந்த பையன் எப்படி இருப்பானுங்கப்பா போட்டோ எதும் இருக்கா?”

“ம்ம்… ஜாதகத்தோட வந்துச்சு அம்மணி. பையனை எல்லாம் குறை சொல்ல முடியாது அம்மணி.” என்றவர் தானாவதிக்காரர் கொடுத்திருந்த போட்டோவை தேடி எடுத்து வந்து கொடுத்தார்.

அப்பாவிடம் இருந்து போட்டோவை வாங்கி பார்த்தவள், “நல்லாத்தான் இருக்கான் சரி விடுங்கப்பா.”  எனக் கூறிவிட்டு தனதறைக்குச் சென்றவள் அவனின் போட்டோவை பார்த்து, “நீ ரொம்ப நல்ல பையனாம் என்ர அப்பாவே சொல்றாரு உன்ன பார்த்தே ஆகோணும் போல இருக்கு அதுக்காகவே முதல்நாளே எழில் கண்ணாலத்துக்கு வரப்போறேன்.” போட்டோவை பார்த்துக் கூறினாள்.

கண்ணாலத்திற்கு வந்ததிலிருந்தே தன் தோழியுடன் பேசியதை விட சுகன்யா கண்ணனை தான் கவனித்துக் கொண்டிருந்தாள். இரவு கண்ணனின் அம்மா அவளிடம் வந்து, “கண்ணு நீ!” அவளோட அப்பா பேர் சொல்லி அவரோட பொண்ணுதானே என்று கேட்கவும், “ஆமாங்க நீங்க?’ என்று கேட்டாள்.

“உன்னோட ஜாதகமும், போட்டோவும் போன வராம் என்ற வூட்டுக்கு வந்ததுக்கண்ணு. அதான் உன்ன எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கேனு யோசிச்சிட்டே இருந்தேன் இப்போதா நெனப்பு வந்தது. போட்டோவுல பாத்தத விட நேர்ல இன்னும் அழகாத்தா இருக்கக் கண்ணு. என்ர மகன் உன்ன பாக்காமையே வயசு கம்மியா இருக்குனு வேண்டாம்னு சொல்லிப் போட்டான்.” எனக் கவலையாகக் கூறினார்.

‘ஓஓ… நீங்கத்தா என்ர வருங்கால மாமியாரா?’ என மனதில் நினைத்தவள் “உங்களுக்கு என்ன புடிச்சிருக்காங்க அத்தை?” என்றாள்.

“என்ராகண்ணு இப்படி கேட்டு போட்ட உன்னப்போய் புடிக்கலைனு சொல்லுவேனா?”

“அப்போ என்ர அப்பாக்கிட்ட பேசுங்க அத்தை.”

“நெசமாவா கண்ணு?”

அவளும் முகம் வெக்கத்தில் சிவக்க, “ம்ம்… ஆமாங்த்தை.” என்றாள்.

அவளின் கன்னத்தை வழித்து நெற்றி முறித்தவர், “என் ராசாத்தி உடனே பேசறேன்டா கண்ணு.” எனக் கூறினார்.

பழைய நினைவிலிருந்து வெளிவந்தவள் கண்ணனை  தேடினாள்.

திருமணம் முடிந்து உறவினர்கள் எல்லாம் கிளம்பிச் சென்றதும் மண்டபத்தில் நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

தமிழ் தன் மகளுடன்  தன் கணவன் வந்ததும் சாப்பிட போவதற்காகக் காத்துக் கொண்டிருந்தாள். சரவணபாண்டியன் யாரிடமோ பேசிக்கொண்டே வருவதைப் பார்த்த அவனின் மகள் தன் அப்பாவைப் பார்த்ததும் அம்மாவின் மடியிலிருந்து இறங்கி ஓடிச் சென்று, “அப்பா தூக்குங்க.” எனக் கையை விரித்தாள்.

மகளைப் பார்த்ததும் தூக்கிக்கொண்டவன் அவரிடம், “நீங்க போங்க நா. அப்பறமா வரேன்.” என கூறி அனுப்பி வைத்தவன் “குட்டிமா சாப்பிட்டிங்களா?” என்றான்.

“இல்லப்பா. அம்மா சாப்பிடலையா. அதனால உங்க குட்டிமாவும் சாப்பிடல.” மகளின் முகத்தில் வந்துபோன பாவங்களை ரசித்தவாறே தன் மனைவியின் அருகில் வந்தவன், “ஏன் தமிழ் இம்புட்டு நேரம் குட்டிமாக்கு சாப்பாடு ஊட்டாம இருக்க?” என்றான்.

“அம்மா தம்பிக்குச் சோறு ஊட்டுனப்பவே வர சொல்லிக் கூப்பிட்டாங்க. உங்க குட்டிமாத்தான் அப்பாவும், அம்மாவும் வராம நா சாப்பிடமாட்டேனு சொல்லிபோட்டா. அதுக்கு நான் என்ன பண்றதுங் மாமா?” மகளைப் பற்றி கணவனிடம் புகார் வாசித்தாள்.

“ரெண்டுபேரும் நான் வர வரையும் சாப்பிடாம இருந்து போட்டு இப்போ ஆளுக்கொரு காரணம் சொல்றதே வேலையா போச்சு.” எனக் கடிந்தான்.

“நீங்க வராம நாங்க சாப்பிட மாட்டோம்னு தெரிஞ்சும் கேள்வி கேட்டது உங்க தப்புங்க மாமா.” எனச் சிரித்துக்கொண்டே கூறினாள்.

அவனும் சிரித்தவாறே  “ஓவரா செல்லம் குடுக்கறேன்ல அது என்னோட தப்புதான்.”  கூறினான்.

மகள், “அப்பா நீங்க அம்மாவுக்கு என்ன செல்லப் பேர் வச்சிருக்கிங்க?”

“செல்லப்பேரா அப்படினா என்னடா குட்டிமா? உனக்கு ஆரு இதலாம் சொல்லிக்குடுத்தாங்க?”

“செல்லப்பேர்னா உங்களுக்கு தெரியாதாங்ப்பா? சித்து சித்திக்கு  ராட்சசினு செல்லப்பேர் வச்சிருக்காங்க தெரியுமா? நீங்களும் அம்மாவுக்குச் செல்லப்பேர் வைங்கப்பா.”

“சரிடா குட்டிமா அப்பா அம்மாவுக்கு என்ன செல்லப்பேர் வைக்கட்டும்னு நீயே சொல்லுடா?”

 “அம்மாவுக்கு நீங்கதான்ம்ப்பா செல்லப்பேர் வைக்கோணும். நான் எப்படி வைக்கமுடியும் ப்பா?”

“அட ஆமாம்ல சரி இரு அப்பா யோசிக்குறேன் சிறிது நேரம் யோசிக்கற மாதிரி நடித்தவன் கண்ணம்மா நல்லாருக்கா குட்டிமா?”

“கண்ணம்மானா பாரதியுடைய கண்ணம்மாதானேப்பா அந்த பேர் வேணாம்ப்பா. நீங்க  வேற பேர் வைங்கப்பா.”

மூன்று வயதில் மகளின் அறிவை பார்த்து பிரமித்துத்தான் போனான். தமிழரசி வெண்பா பேச ஆரம்பித்ததிலிருந்தே தமிழின் பெருமையையும் தமிழ் மொழியில் புகழ்பெற்ற கவிஞர்களைப் பற்றி சொல்லிக் கொடுத்ததின் விளைவு இன்று அப்பா கண்ணம்மானு சொன்னதும்  பாரதியுடைய கண்ணமாவாப்பானு கேட்கிறாள்.

“குட்டிமா அப்பாவுக்கு இப்போ ஒரு பேரும் தோணலடா அப்பறமா யோசித்துச் சொல்லட்டுமா?”

“ம்ம்…சரிங்கப்பா.”

ஒருவார்த்தை கூட பேச யோசிக்கும் சரவணபாண்டியன் இன்று மகளின் தொடர்ச்சியான கேள்விகளுக்கு ஓயாமல் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறான்.

மகள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லிக்கொண்டே தூக்கிக்கொண்டு பந்தி பரிமாறும் இடத்திற்குச் சென்றான். மகளை நடுவில் அமர வைத்துக்கொண்டு கணவன் மனைவி  இருவரும் மகளுக்கு ஊட்டிவிட்டவாறே சாப்பிட்டனர்.

கண்ணன் கடைசியாகச் சாப்பிட அமர்ந்ததும் அவசரமாக ஓடிவந்து தன் அருகில்  அமர்ந்த பெண்ணை பார்த்ததும் கோபம் வந்தது. அவளிடம் எதுவும் பேசாமல் சாப்பிடாமல் எழுந்தவனை கையை பிடித்து இழுத்து உட்கார வைத்தவள், “சாப்டாம எழுந்துபோனிங்க கொன்றுவேன்.” என மிரட்டினாள்.

அவனும் கோபத்தில் “ஆருங்க நீங்க நானும் அப்பத்தில் இருந்து பாத்து போட்டே இருக்கேன் நீங்க என்ற பின்னாடியே சுத்திட்டு இருக்கிங்க? பாக்கறவங்க என்ன நினைப்பாங்க?” எனக் கோபத்தில் எரிந்து விழுந்தான்.

அவன் திட்டுவதைக் காதிலே வாங்காமல் வாயின் மேல் விரல் வைத்து “உஷ்ஷ்ஷ்!!!” என்றவள், “பேசாம சாப்பிடுங்க.” என்கூறிவிட்டு எதுவும் நடக்காததைப்போல் சாப்பிட ஆரம்பித்தாள்.

அவளை முறைத்து பார்த்தவன் பின் வேகமாகச் சாப்பிட்டு விட்டு கை கழுவ எழுந்து சென்றான்.

அவன் போகவும் அவளும் இலையை மூடிவைத்துவிட்டு அவன் பின்னால் எழுந்து ஓடி அவனுக்கு முன்னால் கைகழுவினாள்.

கண்ணனுக்கு அவளின் சிறுபிள்ளைத்தனமான செயலில் சிரிப்பு வர அதனை அடக்கியவாறே கையை கழுவிக்கொண்டு, நகரப்போகவும் அவனின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு மறைவான இடத்திற்குச் சென்றாள்.

அதில் கோபம் கொண்டவன் “என்னங்க பண்றீங்க நீங்க பாட்டுக்கு கைய புடிச்சி இழுத்துப்போட்டு வரீங்க?” என்று கோபமாகக் கேட்டான்.

“கையைத்தானே புடிச்சி இழுத்தேன், என்னமோ கற்பு போன மாதிரி கத்தற சத்தம் போட்ட கொன்றுவேன்டா!” என மிரட்டினாள்.

அவளின் மிரட்டலில் சிரிப்பு வந்தாலும் சிரிக்காமல் முறைத்துக்கொண்டு நின்றான்.

“ஏன்டா என்ன வேண்டாம்னு சொன்ன?”

“ஏய் முதலில் மரியாதையா பேசு. உன்ர வயசென்ன என்ர வயசென்ன? வாடா போடானு பேசற பல்ல தட்டி கையில் கொடுத்துப் போடுவேன்.”

 “மரியாதை கொடுக்க முடியாது என்னடா பண்ணுவ? நீ முதலில் நான் கேட்டதுக்குப் பதில் சொல்லுடா?”

“சொல்ல முடியாது போடி!” அவனும் முறுக்கிக் கொள்ளவும் “சொல்லாட்டிப் போ. நான் எல்லாரையும் கூப்பிட்டு நீ என்ர கைய புடிச்சி இழுத்து கிஸ் பண்ணிபோட்டேனு சொல்லுவேன்.” அவள் சாதாரணமாகக் கூறினாள்.

அவளின் பேச்சில் அதிர்ந்தவன், “அடிப்பாவி ஊருக்குள்ள என்ர பேருக்குனு ஒரு மரியாதை இருக்கு அதை கெடுத்து போடுவ போல இருக்கே. சரி என்ன கேட்ட அதை மொதல்ல சொல்லித் தொலை?”

“என்னய எதுக்கு வேண்டாம்னு சொன்னடா? நானும் அழகாகத்தானே இருக்கேன்?” இடுப்பில் கைக்குடுத்து நின்றவாறே கேட்டாள்.

அவளை நன்றாகப் பார்த்தவன் ஐந்தரை அடி உயரத்தில் அவளின் சிவந்த நிறத்திற்கு ஏற்றவாறு டார்க்கலர் பட்டுப்புடவை கட்டி தலையில் மல்லிகை சரத்தைத் தொங்கவிட்டு அழகாக இருந்தவளைப் பார்த்து மனதில், ‘நல்லாத்தான் இருக்கா!’ என நினைத்துக் கொண்டாலும் வெளியே அவன் ரசித்ததைக் காட்டிக்கொள்ளாமல், “நா எப்போ வேண்டாம்னு சொன்னேன்?” எனப் புரியாமல் கேட்டான்.

“அப்போ என்ன புடிச்சிருக்கா மாமா?” அவள் ஆசையாக கேட்கவும், “ஏய் என்ன லூசு மாதிரி பேசி போட்டு இருக்க? எனக்கு முதல்ல உன்ன ஆருனே தெரியலை? அப்படி இருக்கப்ப என்ரகிட்ட வந்து சம்பந்தமில்லாமல் உளறிட்டு இருக்க? ஒழுங்கா போயிடு இல்லைனா அறைஞ்சிட போறேன்.” எனக் கோபத்தில் திட்டினான்.

Advertisement