Advertisement

பகுதி.20

மூன்று வருடங்கள் கடந்தபின்பு.

அந்த ஊரிலே மிகப்பெரிய திருமண மண்டபம் அலங்காரத்தினால் ஜொலித்துக் கொண்டிருந்தது.  பிரம்ம முகூர்த்தம் விடியற்காலை நான்கு மணிக்கு என்பதால்   கெட்டிமேளம் முழங்க நாதஸ்வர இசைக்க அகிலாண்டேஸ்வரியின் செல்லப்பேரனும், அந்த வீட்டின் கடைசி வாரிசுமான இளமாறனின் திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. இளமாறன் முகத்தில் சந்தோசம் மின்ன பட்டுவேட்டி பட்டுச் சட்டையில் மாப்பிள்ளை தோரணையில் மணவறையில் அமர்ந்திருந்தவன் மெரூன்கலர் பட்டுப்பாவாடை  சட்டை அணிந்த அவனின்  குட்டித்தேவதையை மடியில் அமரவைத்தவாறே அருமைக்காரர் சொல்லும் சடங்கை மனநிறைவுடன் செய்து கொண்டிருந்தான்.

அகிலாண்டேஸ்வரி, யசோதா, தமிழின் அப்பத்தா மூவரும் மணவறைக்கு கீழே போடப்பட்டிருந்த சேரில் அமர்ந்தவாறே தங்கள் வீட்டு செல்லக்குழந்தைகளின் திருமண வைபவத்தை மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். அகிலாண்டேஸ்வரியின் மடியில் அமர்ந்து கொள்ளுப்பாட்டியின் சேலையை வைத்து தன் அம்மாவுக்குத் தெரியாமல்  மறைத்துக்கொண்டு விரலைச் சப்பிக்கொண்டிருந்தான் சரவணபாண்டியன், தமிழரசியின் தவப்புதல்வன் ஒருவயதே ஆன தமிழினியன்.

தன் பேரனின் திருட்டுத்தனத்தைக் கண்டுவிட்ட யசோதா அவனின் விரலை வாயிலிருந்து எடுத்துவிட்டவாறே, “என்ர குட்டித்தங்கம் என்ன பண்றீங்க? அங்க பாருங்க சித்தப்பா என்ன பண்றாங்கனு.” என்றவாறே குழந்தையின் கவனத்தைத் திருப்பினார்.

அருமைக்காரர் பிள்ளையாரை வணங்கி விட்டு மாங்கல்யத்தை எடுத்து கொடுக்கவும் அதனை வாங்கி தன் அருகினில் அமர்ந்திருந்த மணப்பெண்ணின் கழுத்தில் வந்திருந்த அனைவரும் அட்சதை தூவி ஆசிர்வதிக்க குடும்பத்தினரின் மனநிறைந்த ஆசீர்வாதத்துடன் திரு மாங்கல்யத்தை அணிவித்து  அவளை தன்னில் சரிபாதியாக ஆக்கிக்கொண்டான்.

அருமைக்காரர் கொடுத்த குங்குமத்தை வாங்கியவன் பெண்ணவளின் விழிகளைப் பார்த்துக்கொண்டே அவனின் நான்கு வருடக்காதல் நிறைவேறிய மகிழ்ச்சியுடனே வகிட்டில் குங்குமமிட்டவாறே, “ஐ லவ் யூ டி என் செல்ல ராட்சசி!” என்றான்.

அவனின் காதலை இரண்டு குடும்பத்தில் உள்ளவர்கள் ஏற்றுக்கொண்டாலும் தான் உயிருக்கு உயிராய்  காதலித்தவளே  திருமணத்திற்குத் தடையாக நிற்கவும் அவளை ஓகே சொல்லவைக்க எத்தனை முறை முயன்றான். ஒன்றா இரண்டா கிட்டத்தட்ட ஒருவருடம் கஜினி முகமது மாதிரி விடாது அவளைத் தொடர்ந்து சம்மதிக்க வைத்தான். எறும்பூறக் கல்லும் தேயுமாம் கல்லே தேயும்போது சாதாரண மனம் கொண்ட பெண்ணவள் அவனின் தீவிர காதலில் கரை(த்)ந்து  தான் விட்டா(ன்)ள்.

மங்கையவளும் அவனின் காதலில் உருகி  விழிகளைப் பார்த்துக்கொண்டிருந்தவள் அவனின் ராட்சசியில் கோபம் கொண்டு, “ராட்சசினு சொன்ன உன்ன கொன்றுவேன்டா.” தான் அமர்ந்திருப்பது மணவறை என்றும் பாராமல் அவனிடம் சண்டைக்குப் போனாள்.

“நா அப்படித்தான்டி சொல்வேன்.” அவனும் அவளிடம் வம்பிழுத்தான். மணமக்களின் பின்னால் நின்றிருந்த தமிழ் குனிந்து இருவருக்கும் கேட்குமாறு “ரெண்டுபேரும் கொஞ்சநேரம் சண்டைப் போடாம இருக்க மாட்டிங்களா? உங்க சண்டையை வூட்ல போய் வச்சிக்கோங்க இப்போ  எல்லாரும் உங்களைத்தான் பாக்கறாங்க.” என அதட்டினாள்.

தமிழ் அதட்டவும் எழில் மாறனின் முகத்தை முறைத்துப் பார்த்துவிட்டுத் திரும்பிக்கொண்டாள். அவளின் சிறுபிள்ளைத் தனமான செயலில் மாறன் சிரித்து விட்டான்.

மணவறையில் இருவரும் சண்டை போட்டுக் கொள்வதைப் பார்த்து அவர்களின் உறவினர்கள் சிரித்தனர். அவர்கள் மனதில் ‘இதுக ரெண்டும் எப்போதா சண்டைபோட்டுக்கறத நிறுத்துமோ!’ என நினைத்துக்கொண்டனர்.

மாறனின் மடியில் அமர்ந்திருந்த அவனின் குட்டித்தேவதை, “சித்து ஏன் சித்திய ராச்சசினு சொல்ற? சித்தி பேரு எழிலரசி தானே?” என்று கேட்டாள்.

எழில் தன் அக்கா மகள் கேட்டதில் புன்னகைத்தவாறே ‘இப்போ என்னனு சொல்லி சமாளிக்கறேனு நானும் பாக்கறேன்டா.’ என மனதில் நினைத்துக்கொண்டாள்.

“எழிலரசி அம்முச்சி சித்திக்கு வச்சப்பேருடா குட்டிமா, ராட்சசிங்றது உன்ர சித்து  சித்திக்கு செல்லமா வச்சப் பேருடா குட்டிமா.” என தன் மகளுக்குப் புரியும் படியாக விளக்கினான்.

“அப்பாவும் அம்மாவுக்கு செல்லப்பேர் வச்சிருப்பாரா சித்து?”

“ம்ம்… வைத்திருப்பார் குட்டிமா.”

தமிழரசி மகளிடம், “குட்டிமா சித்தப்பாவ தொல்லை பண்ணாம உக்கார்.” என அதட்டவும் அமைதியாக அமர்ந்து கொண்டாள்.

மணவறையில் மனைவியின் அருகில் நின்றவாறே தம்பியின் குறும்புத்தனத்தைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தான் சரவணபாண்டியன். அவன் பக்கத்தில் நின்றிருந்த கண்ணன், “நான் பார்த்து பிறந்த பையனுக்கெல்லாம் கண்ணாலம் நடக்கிறது. ஆனால் எனக்கு மட்டும் கண்ணாலமே ஆகாமாட்டைங்குது.  கடைசியில் சன்னியாசியாகத்தான் போவோணும் போல.” என புலம்பிக்கொண்டிருந்தான்.

அதைக்கேட்ட சரவணபாண்டியன், “அதுக்கு நீ பாக்கற பொண்ண எல்லாம் குறைசொல்லி தட்டிக்கழிக்காமல் இருக்கோணும்டா.”  என்றான்.

“நானாடா தட்டி கழிக்கிறேன். ஒண்ணு ஜாதகம் சரியா வரமாட்டைங்து ஜாதகம் சரி வந்தா பொண்ணுக்கு என்ன புடிக்கலைனு சொல்லி போடுதுங்க. இப்போதா ஒரு ஜாதகம் சரியா இருக்குனு சந்தோச பட்டா அந்த பொண்ணு எழில் கூட படிச்ச புள்ளையாம் என்னைவிட  எட்டு வயசு கம்மி ரொம்ப சின்ன புள்ளையா இருக்கும்போல நான் எப்படிடா அந்த புள்ளய கட்டமுடியும் பாவம் டா அந்த புள்ள.” என்றான்.

“நீ இப்படியே பேசி போட்டே இருடா. கடைசியில் காவிதான் கட்டிட்டு திரியப்போற.” எனக் கூறிவிட்டுச் சென்றான்.

“அடப்பாவி பயலே இவனெல்லாம் ஒரு நண்பனா? ஆறுதலா ஏதாவது சொல்லுவான்னு பார்த்தா இவனும் சாமியாரா போகப்போறேனு சொல்லிப்போட்டு போறானே.” எனத் தனியாகப் பேசிக்கொண்டிருக்கும் போதே சரவணன், “டேய் அங்க நின்னு என்ன தனியா பேசிட்டு இருக்க வெரசா வாடா வேலை கெடக்குது.” என்றான்.

சரவணன் கூப்பிடவும் அங்குச் சென்றவன் எதிரில் வந்த பெண்ணை கவனிக்காமல் மோதிவிட்டான். “சாரிம்மா.” என்றவாறே விலகிப்போனவனின் முன்னால் வந்து கோபமாக நின்றவள், “நான் உங்களுக்கு அம்மாவா?” என்றாள்.

கோபமாக தன் முன்னாள் வந்து நின்ற பெண்ணை பார்த்ததும் ஒன்றும் புரியாமல் நின்றவன் அவள் கோபமாகக் கேட்கவும், “சாரி பாப்பா.” என்றான்.

அதல் இன்னும் கோபமானவள், “நான் பாப்பா மாதிரியா தெரியறேன்?” என அதற்கும் எகிறினாள்.

 “தெரியாம பாப்பானு சொல்லிபோட்டேனுங்க. சாரிங்க..”

“யோவ் நா உன்ரகிட்ட இப்போ மரியாதை கேட்டேனா?” அதுக்கும் சண்டைக்கு வந்தாள்.

கையெடுத்துக் கும்பிட்டவன் “ஆளவிடுங்க.” என்றுவிட்டு அவளிடம் இருந்து தப்பித்து ஓடினான்.

அவன் ஓடுவதைப் பார்த்துச் சிரித்தவள், “உன்னைமாதிரி ஒரு ஆள நான் பார்த்ததே இல்லை மாமா. நான் முடிவு பண்ணி போட்டேன் எனக்கு கண்ணாலம்னு ஒண்ணு நடந்தா அது உன்ரக் கூடத்தான் மாமா.” என்றாள்.

அவளருகில் வந்த கண்ணனின் அம்மா “என்ராக்கண்ணு என்ர மகன புடிச்சிருக்கா?” என்றார்.

இவள்தான் கண்ணனுக்குக் கடைசியாகப் பார்த்த பொண்ணு எழில் ப்ரண்ட் சுகன்யா.

“மாமாவ போட்டோவுல பாத்தப்பவே புடிச்சிப் போச்சுங்கத்தை. இப்போ நேரில் பேசினதும் முடிவே பண்ணிப்போட்டேன். உங்க பையன்தான் என்ர புருசன்னு வெரசா எங்க கண்ணாலத்தை ஏற்பாடு பண்ணுங்கத்தை.” என்றாள்.

அதில் மனம் நிறைந்தவர் “ரொம்ப சந்தோம்டா கண்ணு. இன்னைக்கே உன்ர அப்பாக்கிட்ட பேசிப் போடறேன்.” எனக் கூறிவிட்டு மகிழ்ச்சியுடன் சென்றார்.

அவர் சென்றதும் தனது வீட்டில் நடந்ததை நினைத்து பார்த்தாள். அவளின் அப்பாவுக்கு கண்ணன் பெண்ணுக்கு ரொம்ப வயசு கம்மியா இருக்கு வேணாம்னு சொன்னதில் ரொம்ப வருத்தம். அன்று இரவு அவளின் அம்மாவிடம் வருத்தமா பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டவள், “அப்பா  எனக்கென்ன வயசா ஆகிப்போச்சு அந்தாளு வேணாம்னு சொன்னதுக்கு நீங்க ரெண்டு பேரும் இம்புட்டு வருத்தப்படுறீங்க? இவன் இல்லைனா இந்த ஊரில் வேற மாப்பிள்ளையே இல்லையா?” எனக் கோபமாகக் கேட்டாள்.

“அப்படி இல்லை அம்மணி… ஜாதகம் தானாவதிக்காரர் கொண்டு வந்து கொடுத்துப் போட்டு போனதும்  நானும் பையனுக்கு வயசு அதிகமா இருக்குனு வேண்டாம்னுதா நினைச்சேன். உன்ர அம்மாத்தா அவங்க ரொம்ப நல்லக் குடும்பமா தெரியுது முதல்ல ஜாதகத்த பாத்து போட்டு வாங்க, நல்லாருந்தா அப்பறமா பொண்ணு குடுக்கறதப்பத்தி பேசிக்கலாம்னா? நானும் ஜாதகம் சரியா இருக்கவும் அந்த பையன் ஊரில் எனக்கு தெரிஞ்சவங்கல வச்சி விசாரிச்சி பாத்தேன். எல்லாருமே அந்த குடும்பத்தையும், பையனையும் அம்புட்டு புகழராங்க பையனுக்கு ஒரு கெட்டப்பழக்கமும் கிடையாதாம் அம்புட்டு சொத்துக்கும் ஒத்த வாரிசு, இருந்தும் தனியா சுயமா அவனோட மாமன் பையன் கூட சேர்ந்து தொழில் பண்றான்.  அந்த பையனோ மாமன் பையன் கூட உன்ர கூட படிச்ச எழிலோட அக்கா புருசன் போல அவனைப் பத்தியும் ரொம்ப பெருமையாகத்தான் சொல்றாங்க. ரெண்டுபேரும் சின்னவயசுல இருந்தே நண்பர்களாம். இந்த காலத்துல இப்படி ஒரு பையன் கிடைக்கறது ரொம்ப கஷ்டம்னு நான் விசாரிக்கச் சொன்னவர் ரொம்ப பெருமையா சொல்றார்‌.” என மகளிடம் கூறினார்.

Advertisement