Advertisement

அவனின் அழுகையைப் பார்த்து தமிழும் கதறிவிட்டாள். “உனக்குத்தான் உன்ர அண்ணனுடைய கோபம் தெரியும்ல டா அப்புறம் எதுக்கு அவரைத் தனியா போகவிட்ட?”

“எல்லாம் என்னோட தப்புதானுங்க அண்ணி!” அவனின் கதறல் அங்கிருந்த அனைவரின் கண்களிலுமே கண்ணீரை வரவழைத்து விட்டது.

அக்காவைப் பார்த்துவிட்டு ஓடிவந்த எழில், மாறன் கோபமாக நர்ஸ்சிடம் தமிழை எதற்குக் கூட்டிவந்த என்ற மாதிரி கோபத்தில் திட்டுவதைக் கேட்டதும், கோபத்துடன் அவனைத் திட்ட அருகில் வந்தவளுக்கு அப்போதுதான் அவனின் கோபத்தில் கூட தன் அக்காமேல் வைத்திருந்த பாசம் தெரிந்ததும் அப்படியே நின்றுவிட்டாள். அப்போது அவள் மனதில்  ‘இவனை கட்டிக்கப்போற பொண்ணு குடுத்துவச்சவ. அண்ணன் பொண்டாட்டியவே இம்புட்டு தாங்கறான் இன்னும் அவனுடைய பொண்டாட்டியா இருந்தால் தரையில் நடக்க விடமாட்டான் போலையே!’ என்றுதான் நினைத்தாள்.

ஐசியுவின் அருகில் வந்தவள் மகனை நினைத்து அழுது அழுது சோர்ந்துபோய் சுவரில் சாய்ந்தவாறு வெறித்துக் கொண்டிருந்தவரை பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டவாறே, “ஒரே ஒருதடவ மாமாவ பாத்துபோட்டு போய்விடட்டுமா?” எனக் கெஞ்சினாள்.

அந்த நிலையில் தமிழை பார்த்த அனைவருக்குமே நெஞ்சு பதறிவிட்டது. மற்றவர்களுக்கே அந்த நிலை எனும்போது தன்னால்தான் என்ற குற்ற உணர்ச்சியில் செத்துக் கொண்டிருந்த கங்காவிற்கு அவளின் செயல் மேலும் வலியை உண்டாக்கியது. “நான் உனக்குப் பண்ண பாவத்துக்குத்தா என்ர மகன இன்னைக்கு இந்த கோலத்தில் பாத்துபோட்டு இன்னும் சாகாம உசுரோட இருக்கேன். இதுல நீ ஏன் கண்ணு என்ரகிட்டக் கையெடுத்து கும்பிட்டுற?” எனக் கேட்டவர், “போ போய் உன்ர புருசனை பாரு நீ வந்துட்டேனு தெரிந்தாலாவது என்ர மகன் கண்ண திறந்து பார்க்கட்டும்…” எனக் கூறிக்கொண்டே கண்ணீர் வடித்தார்.

கங்காவின் மாற்றம் தமிழுக்கு மட்டும் அதிர்ச்சி இல்லை அங்கிருந்த அனைவருக்குமே சந்தோசம் கலந்த அதிர்ச்சிதான்.

இத்தனைநாள் மனைவியிடம் ஒரு வார்த்தைகூட பேசாமல் இருந்த தென்னரசு கங்காவின் அருகில் வந்து அமர்ந்தவாறே அவரை தட்டிக்கொடுத்து, “நம்ம மகன் நல்லபடியா எழுந்து வருவான்ம்மா.” என்றார். கங்கா கணவனின் தோளில் சாய்ந்துக்கொண்டு தேம்ப ஆரம்பித்தார்.

ஐசியூவிற்குள் சென்ற தமிழ்  கை, கால், தலையெல்லாம் கட்டு போட்டுப் படுத்திருந்த கணவனை பார்த்ததும் வீல்சேரைவிட்டு எழுந்து சரவணனின் மண்டையில் கட்டுபோட்டிருந்த இடத்தின் மேல் கைவைத்து லேசாகத் தொட்டவாறே சத்தமில்லாமல் அழுதாள்.

ஐசியூவில் சரவணனை பார்த்துக்கொள்ள இருந்த இருந்த நர்ஸ் தமிழை பார்த்ததும் அவளுக்கு தனிமை குடுத்து வெளியே வந்து நின்றுக்கொண்டாள்.

குழந்தைக்கு தடுப்பூசிப்போட பணம் கட்ட சென்றிருந்த யசோதா அப்போது தான் அறைக்கு வந்தார். அங்கு மகள் இல்லாததைப் பார்த்ததும் நெஞ்சம் பதற வெளியே வந்து தேடியவர் மதுவைப் பார்த்ததும், “என்ர மகள பாத்தியா கண்ணு?” என்று கேட்டார்.

“அக்கா அவங்க வீட்டுக்காரரைப் பாக்க போயிருக்காங்கம்மா.” அவள் கூறியதை கேட்டதும் எங்க தன் மகளை திட்டி விடுவாங்களோ என்ற பயத்தில் ஐசியூவை நோக்கி விரைந்தவர், அங்கு பெரியமகள் இல்லாமல் சின்னமகள் மட்டும் சாப்பாட்டுப் பையுடன் நிக்கவும் எதுவோ புரிய ஐசியூ கதவின் முன்னால் இருந்த சிறிய துவாரத்தில் பார்த்தவர் கண்களில் கண்ணீருடன் மூச்சை இழுத்து விட்டவாறு அப்படியே தரையில் அமர்ந்துவிட்டார்.

அவளின் கண்ணீர் கன்னத்தில் விழுந்ததும் உள்ளூணர்வு அவனை விழிப்படைய செய்ததில் மயக்க நிலையிலிருந்து மெல்லக் கண்களைத் திறந்தான்.

கண்விழித்தவன் தன் முன்னால் கண்ணீருடன் நின்று கொண்டிருந்தவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

கணவன் கண்விழித்தது கூட தெரியாமல் கண்ணீருடன்  அவனின் காயத்தை மெல்லத் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

சரவணன் மனைவியின் கண்ணீரைத் துடைக்க நினைத்தாலும் கையில் ஏற்பட்டிருந்த எழும்பு முறிவு அவனைக் கையை அசைக்க முடியாமல் வலியை உண்டாக்கவும் ‘ஷ்ஷ்!’ அவனின் முனகல்  சத்தம் அவளைச் சுயநினைவிற்குக் கொண்டு வந்தது.

அதுவரையில் கணவன் அடிப்பட்டுக் கிடப்பதைப் பார்த்து அழுது கொண்டிருந்தவள் அவன் விழித்ததை பார்த்ததும் அழுகை நின்று  கோபம் வந்து அமர்ந்து கொண்டது.

அவனின் நெஞ்சில் லேசாக அடித்தவாறே “ஏன்டா இப்படி பண்ண? என்ர அம்மா கோபத்தில் ஒருவார்த்தை சொன்னா அவங்கள பேசி சமாதானப் படுத்தி என்னையும் குட்டிமாவையும் உன்ர கூட கூட்டிபோட்டு போகாம அப்படியே எங்கள விட்டு நீ கிளம்பிப்போய் சாகபாப்பியாடா. நீ போயிட்டா நானும் உன்ர குட்டிமாவும் என்னடா பண்ணுவோம், சொல்லு டா சொல்லு டா?” என வார்த்தைக்கு வார்த்தை டா போட்டு ஏகவசனத்தில் திட்டி அவனின் நெஞ்சில் குத்தியவாறே திட்டிக் கொண்டிருந்தாள்.

சரவணபாண்டியன் மனைவியிடம் இதைத்தான் இத்தனை நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்தான். அது நிறைவேறிய மகிழ்ச்சியில் இதழ்கள் புன்னகையில் விரிய, “இன்னும் ரெண்டு அடி நெஞ்சில் அடிச்சினா நா செத்துருவேன்டி.” என்றான்.

“செத்துப்போடா அதான் எங்கள வேண்டாம்னுட்டு சாகப்போயிட்டில. போ போய் செத்துப்போடா என்ன மாதிரியே என்ர மகளும் அப்பா இல்லாம வளரட்டும். நாளைக்கு ஊரே என்ர மகளோட ராசிதான் மக பிறந்தவுடனே அப்பா செத்து போயிட்டான்னு பேசட்டும் அதனால உனக்கென்ன வந்தது.” எனக் கோபத்தில் பொரிந்தாள்.

“நான் பண்ணது தப்புதான் அதுக்கு நீ என்ன தண்டனை வேணாலும் குடு தமிழ். ஆனா அத நான் நல்லானதுக்கப்பறம் குடுடி. இப்போ என்னால முடியலை  வலிக்குது.” என்றவனின் முகத்தில் வலியின் வேதனை தெரியவும், “ரொம்ப வலிக்குதாங் மாமா நான் டாக்டர வரச் சொல்லட்டுமா மாமா?” என்று கேட்டாள்.

“இவ்வளவு நேரம்  வார்த்தைக்கு வார்த்தை டா போட்டு திட்டிட்டு இப்போ மாமாவா?”

“அது கோபத்தில் வந்துடுச்சுங்க மாமா சாரி.” அவள் பாவமாகக் கூறவும்,

“இங்க வந்து பக்கத்தில் உக்கார் தமிழ்.” அவன் கூறவும் அவனின் பக்கத்தில் பெட்டில் உட்கார்ந்தாள்.

“என்ர பொண்டாட்டி எங்கிட்ட உரிமையா சண்டை போடமாட்டாளா? அவளுக்கு தேவையானதை வாங்கிக்குடுங்க மாமானு கேக்கமாட்டாளானு எத்தனை நாள் ஏங்கியிருக்கிறேன் தமிழ். மாசம் மாசம்  உன்னோட சம்பளத்தை நீ சாப்பாட்டுக்குனு சொல்லிக் கொடுக்கும் போது  இவ்வளவு சாம்பாதிச்சும் பொண்டாட்டிக்கு ஒருவேளை சாப்பாடு போடமுடியாத நிலைமைல நான் இருக்கேனு என்ர மேலையே எனக்குக் கோபம் அந்த கோபத்தை உன்ர மேல காட்டிப்போடுவேங்ற பயத்துலையே உன்னை விட்டு விலகியே இருப்பேன். ராத்திரி எம்புட்டு நேரமானாலும் எனக்காக நீ சாப்பிடாம  காத்து கிட்டு இருக்கப்ப எனக்கு மனசுக்குள்ள அம்புட்டு நிறைவா இருக்கும். ஆனா உன்ன சாப்பிட்டியானு கேக்கலாம்னு மனசு சொன்னாலும் அறிவு நீ புருசனோட காசில்  சாப்பாட்டுக் கூட தயாரா இல்லாம உன்னோட சம்பாதியத்துல சாப்பிடுறப்ப நாம ஏன் கேக்கோணும்னு அறிவு வாய்விட்டு கேட்கவிடாது. மனசுக்கும் மூளைக்கும் நடக்கற யுத்தத்தில் எப்பவும் மூளைதான் ஜெயிக்கும். அதுவுமில்லாமல் நான் கேக்காத முன்னடியே எல்லாமே கிடைச்சுட்டதாலயோ என்னவோ உன்ரகிட்ட இறங்கி வந்து என்னோட மனசைச் சொல்ல ஈகோ இடம் குடுக்கல. ஒரு கட்டத்தில் எங்க நீ என்னை விட்டு போயிடுவியோங்கிற பயமே என்னோட ஈகோவ அழிச்சிடுச்சு அந்த பயமே உன்ரகிட்ட என்னோட மனசை வெளிய காட்ட வச்சிப்போடுச்சு. அதுக்கப்பறம் நடந்ததுதான் உனக்கு தெரியுமே.” தன் மனதிலிருந்ததை எல்லாம் அவளிடம் கொட்டிவிட்டான்.

‘மாமா நம்மள சாப்பிட்டியானு கேக்கலைனு எத்தனை நாள் பீல் பண்ணிருக்கிறேன் அவர் கேட்காமல் இருந்ததுக்கே நான் கொடுத்த பணம்தானா? நம்ம மேல தப்ப வச்சிக்கிட்டு மாமாவ விலக்கி வச்சிருந்த முட்டாள் தனத்த மாமாகிட்ட எப்படி சொல்றது?’ என மனதிற்குள் நினைத்துக் கொண்டவள் “என்னை மன்னிச்சிப்போடுங்க மாமா நான் என்ர பக்கத்து நியாயத்தை மட்டும் வச்சிக் கிட்டு உங்ககிட்ட இருந்து விலகி இருந்துட்டேன். இதுவும் ஒரு வகைல ஈகோங்றது எனக்கு லேட்டாத்தான் புரிஞ்சது மாமா. இப்போ இருக்க உங்க பொண்டாட்டி மனசில் நீங்கதான் முழுசும் நெறஞ்சு இருக்கீங்க.” என்றவள் அவனின் நெற்றில் இதழ் பதித்தவாறே, “ஐ லவ் யூ மாமா!” என்றாள்.

“லவ் யூ டீ பொண்டாட்டி.” கணவனிடம் மனம் விட்டுப் பேசிய சந்தோசத்தில் நேற்று அவள் அனுபவித்த சுகமான வலியைக் கூற ஆரம்பித்தாள்.

“பாப்பா பிறந்த அந்த நொடி என்ர மனசுக்குள்ள பொக்கிசமா சேர்த்து வச்சிக்கிட்டேன் மாமா. பாப்பா பொறக்கறதுக்கு முன்னாடி வரையிலும் அனுபவித்த அத்தனை வலியையும் அந்த நிமிஷம் ஒண்ணுமே இல்லாத மாதிரி மனசில் தோணிடுச்சுங் மாமா.” எனக் கூறிக்கொண்டிருந்தவள் அசதியில் அவனின் மார்பிலே தலைவைத்துத் தூங்கிவிட்டாள்.

அவள் சொல்வதை அணு அணுவாக ரசித்தவாறே கேட்டுக்கொண்டிருந்தவன் அவள் தூங்கவும் அவளைப் பார்த்தவாறே அவனும் உறக்கத்தைத் தழுவினான்.

மனம் விட்டு பேசியதில் இருவரும் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தனர். ரொம்ப நேரமாகியும் தமிழ் வெளிவராமல் இருக்கவும் உள்ள வந்த மாறன் அண்ணனும் அண்ணியும் தூங்குவதைப் பார்த்ததும் மனதில் நிம்மதி தோன்றியது

தமிழ் காலை கீழே தொங்கப்போட்டவாறே தூங்கவும் அவளின் காலை தூக்கம் கலையாமல் எடுத்து மெல்ல சேரில் வைத்துவிட்டு  முகத்தில் புன்னகையுடன் வெளியே சென்றான்.

மாறனின் முகத்திலிருந்த சந்தோசமே வெளியிலிருந்தவர்களுக்கு  நிம்மதியை கொடுத்தது.

Advertisement