Advertisement

பகுதி.18

“என்னடா மாப்பிள்ளை சொல்ற நீ இப்போ எங்க இருக்கடா?”

“அண்ணா கூட ஆம்புலன்ஸ்ல வந்துட்டு இருக்கேனுங்க மாமா.” அழுதவாறே கூறினான்.

அடுத்த கொஞ்ச நேரத்தில் சரவணபாண்டியன் ஐசியூ வார்டில் பலத்த அடியுடன் படுத்துக்கிடந்தான். மருத்துவர்கள் அவனின் உயிரை காப்பாற்றப் போராடிக்கொண்டிருந்தனர்.

சரவணனின் மொத்தக் குடும்பமும் அகிலாண்டேஸ்வரியை தவிர மற்ற அனைவரும் ஐசியூ வார்டின் முன் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு அவன் பிழைத்து வருவதற்காகக் காத்துக் கொண்டிருந்தனர்.

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தொடர்ந்து கேட்டதும், தன் பேரனை இரத்த வெள்ளத்தில் பார்த்தது எல்லாம் சேர்ந்தும் அகிலாண்டேஸ்வரி மயங்கி விழுந்துவிட்டார். அவரை ஐசியூவின் பக்கத்து அறையில் வைத்திருந்தனர்.  இன்னும் மயக்கம் தெளியாமல் படுத்திருந்தார். அவருக்குத் தேவையான சிகிச்சை நடைபெற்றுக் கொண்டிருந்தது.

யசோதா மயக்கநிலையில் படுத்திருந்த மகளின் அருகில் அமர்ந்திருந்தாலும் மனது முழுசும் மருமகனைச் சுற்றித்தான் வந்து கொண்டிருந்தது. தன்னுடைய கோபம் மருமகனை இந்த நிலையில் படுக்கவைத்து விட்டதை நினைத்து உள்ளுக்குள் அழுது கொண்டிருந்தார். அவனின் மேல் எவ்வளவு தான் கோபமிருந்தாலும் அவன் மகளின் கணவன் அல்லவா? அவனுக்கு ஒன்று என்றால் அது தன் மகளையும் பேரக்குழந்தையையும் தானே பாதிக்கும் எனத் தெரிந்தவராயிற்றே. மருமகன் பிழைத்து வரவேண்டுமென்று அனைத்து தெய்வத்தையும் வேண்டிக்கொண்டிருந்தார்.

ஐசியூவில் கிட்டதட்ட இரண்டு மணிநேரம் போராடி அவனின் உயிரைக் காப்பாற்றி விட்டு வெளியே வந்த மருத்துவரைப் பார்த்ததும் குடும்பத்தினர் சரவணனைப் பற்றி விசாரித்தனர்.

“உயிருக்கு ஒன்னு பிரச்சனையில்லை கை,கால் ரெண்டுலையும் எழும்பு முறிவு, தலையில் அடி பலமா பட்டு இருக்கறதால என்ன பாதிப்புனு ஸ்கேன் ரிப்போர்ட் வந்தா தான் சொல்ல முடியும்.” எனச் சாதாரணமாகக் கூறிவிட்டு கடந்து சென்றுவிட்டார். அவருக்கு இந்த கேஸ் பத்தோடு பதினொன்று ஆனால் அவனின் சொந்தங்களுக்கு? இப்போதைக்கு உயிருக்கு ஆபத்தில்லை என்ற வார்த்தைதான் அவர்களை மூச்சு விடவைத்தது.

அந்த இரவு முழுவதும் கணவன் மனைவி இருவரும் மயக்க நிலையில் தான் கழித்தனர்.

காலையில் கண்விழித்த தமிழ் அம்மாவிடம் முதலில் கேட்டது கணவனைத் தான் “அம்மா மாமா எங்க இன்னும் வரலையா?”

அவரும் தான் என்ன பதில் சொல்வார் உன்ர மாமன் அடிப்பட்டு இன்னும் நினைவு திரும்பால் கிடைக்கின்றான் என்றா? அவர் பதில் ஏதும் சொல்லாமல் இருக்கவும் சிறிது நேரம் பார்த்தவள் “ஏன்ம்மா நா கேட்டதுக்கு பதில் சொல்ல மாட்டேங்கிறீங்க?” என்று கேட்டாள்.

“வருவார் கண்ணு நீ இப்போதானே மயக்கம் தெளிஞ்சு எழுந்திருச்சிருக்க?  சுடுதண்ணி எடுத்து வச்சிருக்கேன் குளிச்சி போட்டு வந்து ஒருவா ரசஞ்சோறு சாப்பிடு. கொஞ்சம் தெம்பா இருக்கும்.” என்றார்.

அவளுக்கும் குளிக்க வேண்டும் என தோன்றியதால் அவரின் கையை பிடித்துக்கொண்டு மெல்ல பெட்டைவிட்டு இறங்கியவள், “அம்மா என்ன குழந்தை?” என்றாள்

“பாப்பா தான் கண்ணு.”

“மாமாவும் குட்டிமா குட்டிமானுதான்  சொல்லிட்டு இருந்தார் ம்மா. அவர் ஆசைப்பட்ட மாதிரி அவரோட குட்டிமாவே பிறந்துட்டா.” எனச் சந்தோசமாகக் கூறினாள்.

அவள் குளித்துமுடித்துச் சாப்பிடும் வரையிலும் கணவனை பற்றித்தான் வாய் ஓயாமல் கூறிக் கொண்டிருந்தாள். யசோதா மகள் மருமகனின் மேல் வைத்திருந்த அன்பைப் பார்த்து திகைத்துத்தான் போய்விட்டார். இப்போது உண்மையைச் சொன்னால் மகள் என்ன செய்வாளோ என்ற கவலை அவரை பயமுறுத்தியது. அவளின் மனதை மாற்ற நினைத்து “கண்ணு போய் பாப்பாவை பாத்துபோட்டு வரலாமா?” என்றார்.

“இல்லைம்மா மாமா வந்ததும் நானும் மாமாவும் சேர்ந்து போய் பாக்குறோம்.” என்றுவிட்டாள்.

மணி பத்தாகவும் “கண்ணு பாப்பாவுக்குத் தடுப்பூசி போடோணும்னு  சொன்னாங்க நான் போய் தடுப்பூசிக்கு பணம் கட்டிபோட்டு வரேன்.” எனக் கூறிவிட்டு வெளியே சென்றார்.

யசோதா சென்ற சிறிது நேரம் கழித்து மருத்துவர் அவளை செக் பண்ண அறைக்கு வரவும் அவரை பார்த்து தமிழ் புன்னகைத்தாள்.

அவர் அவளை கண்டுகொள்ளாமல் அமைதியாகப் பரிசோதித்து விட்டு நர்ஸ்சிடம்  வலி இல்லாமல் இருக்க மாத்திரை மட்டும் கொடுக்கச் சொல்லிவிட்டு வெளியே செல்லவும் தமிழ், “அத்தை ஏன் பேசாம போறீங்க?” என்றாள்.

முன்பிருந்தவராக இருந்திருந்தால் அறைக்குள் நுழையும்போதே, “என்ன மருமகளேனு!” சிரித்த முகமாகக் அழைத்துக் கொண்டே வந்திருப்பார். அவளும் அதைத்தான் எதிர்பார்த்து ஏமாந்துபோய் வாய்விட்டே கேட்டுவிட்டாள்.

அவளை திரும்பி பார்த்தவர் பதில் ஏதும் கூறாமல் சென்றுவிட்டார். அவளுக்கு மாத்திரை எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்த நர்ஸ்சிடம் “அத்தை ஏன் பேசாம போறாங்க? என்ர மேல கோபமா இருக்காங்களா மது?”  என்று கேட்டாள்.

“அதலாம் இல்லைங்க்கா நீங்க மாத்திரையை சாப்பிடுங்க.” என்றவாறே மாத்திரையை நீட்டினாள். குழந்தை உண்டானதிலிருந்து ஒவ்வொரு முறை செக்கப்க்கு வரும்போதும் பேசிப் பழகியதில் தமிழை அக்கா என்றும் தமிழ்  அவளைப் பேர் சொல்லி அழைக்கும் அளவிற்கு இருவரும் நெருங்கிவிட்டனர்.

“நீ முதல்ல அத்தை எதனால் பேசாம போனாங்கனு சொல்லு மது? அப்போதா நா மாத்திரையை சாப்பிடுவேன்.”

“ப்ளீஸ்க்கா… நான் சொன்னேனு தெரிந்தால் மேம் திட்டுவாங்க.”

“அப்போ நீ சொல்லமாட்ட? சரி நானே போய் அத்தைக்கிட்ட கேட்டுக்கறேன்.” என்றவாறே பெட்டைவிட்டு இறங்கப்போனாள்.

“ஐயோ அக்கா ஏன் இப்படி பிடிவாதம் பிடிக்குறீங்க? இந்த மாத்திரையை போட்டுக்கோங்க சொல்றேன்.” என்றாள்.

தமிழ் மாத்திரை சாப்பிட்டதும்  நேற்று நடந்த அனைத்தையும் கூறியவள் இப்போது சரவணன் அடிப்பட்டு ஹாஸ்பிட்டல்ல இருக்கவரையிலும் அனைத்தையும் கூறிவிட்டாள்.

அவள் கூறியதைக் கேட்டதும் மனம் பதறக் கண்களில் கண்ணீருடனே பெட்டைவிட்டு கீழே இறங்கி வெளியே போகவும் மது ஓடிப்போய் அவளைத் தடுத்தவாறே “அக்கா எங்க போறீங்க?” என்று கேட்டாள்.

“என்ன விடு மது நா என்ர மாமாகிட்ட போவோணும்.” எனக் கோபத்தில் கத்தியவாறே மதுவின் கையை உதறிவிட்டு மெல்ல நடந்து சென்றாள்.

தமிழ் கையை உதறவும் திகைத்து நின்றவள் அவள் போவதைப் பார்த்ததும் அவளருகில் ஓடிப்போய், “இருங்க்கா நானும் வரேன்  உங்களைத் தனியா போகவிட்டா என்னைத்தான் திட்டுவாங்க.” என்றாள்.

பிள்ளை பெற்ற உடம்பு, அதிக இரத்தபோக்கு இரண்டும் சேர்ந்து அவளைக் களைப்புறச் செய்தது. ஒருதுணை தேவையாக இருந்ததால் மதுவின் கையை  இறுகப் பற்றிக்கொண்டு மெல்ல நடந்தாள்.

எழில் நேற்று இரவு வீட்டிற்குச் சென்றுவிட்டு காலையில் அப்பத்தா தமிழுக்குச் செய்து குடுத்த பத்திய சாப்பாடும், அம்மாவுக்கு மதிய சாப்பாடும் எடுத்துக்கொண்டு ஹாஸ்பிட்டல் வந்தவள் தமிழ் ஐசியூ இருந்த பக்கம் நர்ஸ்வுடன் போவதைப் பார்த்ததும் பயந்துபோய் அங்கு ஓடிவந்தாள்.

ஐசியூவின் முன்னால் சரவணன் கண்விழிப்பதற்காகக் காத்திருந்தவர்கள் அங்கு தமிழை பார்த்ததும் நந்தினியைத் தவிர மற்ற அனைவரும் அதிர்ந்துவிட்டனர்.

நந்தினி தமிழ் வருவதைக் கண்களில் கோபத்துடன் பார்த்துக்கொண்டிருக்கவும் அவளின் கணவன் நந்தினியின் கையை அழுத்திப்பிடித்துக்கொண்டு கண்களாலேயே ‘எதுவும் பேசிடாத நந்து.’ கெஞ்சினான். கணவனின் கெஞ்சலான பார்வையில் கோபத்தை அடக்கிக்கொண்டு நின்றிருந்தாள்.

மாறன் தமிழ் இந்த நிலையில் கஷ்டப்பட்டு நடந்து வருவதைப் பார்த்ததும் அவளிடம் ஓடிவந்தவன் நர்ஸ்சை பார்த்து கோபத்துடன், “ஏங்க உங்களுக்கு அறிவு இருக்கா இல்லையா? அண்ணியை இந்தநிலையில்  கூட்டி வந்துருக்கீங்க?” என கோபத்தில் திட்டினான்.

“என்ன மன்னிச்சிப் போடுங் சார் அக்காத்தான் பிடிவாதம் பிடிச்சாங்க அதான் கூட்டிவந்தேன்.”

“அண்ணி பிடிவாதம் பிடித்தால் நீங்க நடக்க வச்சி கூட்டிவருவீங்ளா? போய் வீல் சேர் எடுத்துப்போட்டு வாங்க.” என அவளைத் திட்டியவன் தமிழை கைதாங்கலாக பிடித்துக்கொண்டவன் அவள் வீல்சேரை எடுத்து வந்ததும் அதில் அமரவைத்தான்.

சேரில் உட்கார்ந்தவள் “உனக்கும் என்ரகிட்ட சொல்லோணும்னு தோணவே இல்லைல டா நான் உங்க எல்லாருக்கும் வேண்டாதவளா போயிட்டேனா? இனி நான் தேவை இல்லை அப்படித்தானே மாறா?”

அவளின் முன்னால் மண்டியிட்டு அமர்ந்தவன் அவளின் கையை பிடித்தவாறே, “ஐயோ அண்ணி நான் போய் உங்கள வேண்டாதவங்களா பாப்பேனா? அந்த நேரத்துல எனக்கு என்ன பண்றதுனே தெரியலைங்க அண்ணி. என்ர கண்முன்னாடி அண்ணா அடிப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடக்கறாங்க அத பார்த்தவுடனே பாதி உசுரு போயிடுச்சுங்க அண்ணி.” எனக் கூறியவாறே கதறி அழுதான்.

Advertisement