Advertisement

அத்தியாயம் -5

“என்ன டாக்டர் சொல்றீங்க?” என்று மொத்த குடும்பமும் அவர் முன் அமர்ந்து கேட்க,

அவரோ “ஆமா சார். இது ஏய்ட்டி பர்சண்ட் கன்பார்ம். புல்லா கன்பார்ம் பண்ண பையாப்சி பண்ணனும் அதுக்கான ஏற்பட்டை நாங்க பாக்கறோம். எதுக்கும் நீங்க டோனர் யாரும் கிடைக்கறாங்களானு பாருங்க” என்றுவிட, மொத்த குடும்பமும் அதிர்ந்து போய் அமர்ந்திருந்தது.

மீனா திருவிழாவில் தொலைந்த சிறு பிள்ளை போல் விழித்து “டாக்டர் என்ன சொல்றீங்க. ஆனா இந்த சின்ன வயசுல இது எப்படி சாத்தியம். அது மட்டும் இல்லாம பயாப்சி அது இதுனு சொல்றீங்க எனக்கு எதுவும் புரியல. கொஞ்சம் புரியற மாதிரி சொல்லுங்க”.

லதா, “ஆமா டாக்டர். அவனுக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்ல. எங்க கைக்குள்ளயே வச்சு வளர்த்த ஒரே பையன். நீங்க ரிப்போர்ட்ட மாத்தி பாத்துட்டீங்கன்னு நினைக்கறேன் நல்லா இன்னொரு டைம் செக் பண்ணுங்க”

“இல்ல மேடம் இது உங்க பையன் ரிப்போர்ட்தான். அவருக்குதான் கிட்னி பெய்லியர்னு சந்தேகப்படறோம் பயாப்சி பண்ணுனா கன்பார்ம் ஆகிடும். குடினால மட்டும்தான் கிட்னி பெய்லியர் ஆகும்னு இல்ல. உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் காரணமாகூட வரும். ஆட்டோ இம்யூன் சிறுநீரக நோய்கள், மறுபடியும் மறுபடியும் வரும் சிறுநீரக நோய்த்தொற்றுகள், சிறுநீர் பாதை அடைப்பு, இதயம் அல்லது கல்லீரல் சம்பந்தப்பட்ட அமைப்பு ரீதியான நோய், கடுமையான நீரிழப்பு, சில மருந்துகளின் பயன்பாடு இந்த மாதிரியான காரணங்களாலகூட வரும். பார்ப்போம்.

“பயாப்சினா என்னன்னு. கேட்டீங்க இல்ல. இது ஒரு மருத்துவ முறை. இதுல உடம்பில் பாதிக்கப்பட்ட திசுக்களின் மாதிரியை, எடுத்து , கோளாறின் தன்மையைக் கண்டறிய நுண்ணோக்கிய வச்சு ஆய்வு செய்யறது. டெஸ்ட் ரிசல்ட் வர ரெண்டு இல்ல மூணு நாள் ஆகும். வேற எதுவும் சந்தேகம் இருந்தா நர்ஸ்ட்ட கேளுங்க. இப்போ நீங்க போகலாம்” என்று சொல்ல,

மூவரும் கண்ணீருடன் அவர் அறையில் இருந்து வெளியேறினர்.

சத்யா ஐசியூவில் இருந்தான். மீனா அந்த அறையையே வெறித்து பார்த்து கொண்டு அமர்ந்திருந்தாள். லதா, ஜெகன் இருவரும் மகன் நிலை கண்டு மனமுடைந்து போய் இருந்தனர்.

டாக்டர் நர்ஸ் என மாறி மாறி வந்தனர். சத்யாவை ஸ்ட்ரெச்சரில் வைத்து எங்கோ அழைத்து சென்றனர். டாக்டர் சொன்ன ரிசல்ட் வர மூன்று நாட்கள் ஆனது.

மகனுக்கு எந்த பிரச்சனையும் இருக்கக் கூடாது சீக்கிரமாகவே அவன் நலமாக வேண்டும் என்று ஊரில் உள்ள அனைத்து சாமிகளுக்கும் வேண்டுதல் வைத்தார் லதா.

மீனாவின் நிலை தான் மிகவும் மோசமாக இருந்தது பத்தொன்பது வயதில் திருமணம் இரண்டு மாதம் மகிழ்ச்சியான வாழ்க்கை. இப்போது அந்த திருமண வாழ்க்கையே முடிவுக்கு வருவது போன்ற இக்கட்டான சூழ்நிலை.இதில் தான் எப்படி ரியாக்ட் செய்வது. இனி தன் நிலை என்ன? இப்போது நான் என்ன செய்ய வேண்டும்? என்று ஒன்றும் புரியாமல் திகைத்து போனாள்.

லதாவாலும் அப்பொழுது மீனாவிடம் பேசி அவள் மன குழப்பத்தை போக்க முடியவில்லை. தனக்குள்ளேயே யோசித்து யோசித்து ஓய்ந்து போனவள் தாயிற்கு அழைத்துச் சொல்லி அழ,

தனமும் தன் மகளின் வாழ்க்கையை நினைத்து அழ, இரண்டு குடும்பமும் பயாப்சி ரிசல்ட்டிற்காக காத்திருந்தனர்.

அனைவரையும் காத்திருக்க வைத்து, பொறுமையை சோதித்து, அவர்களின் நிம்மதியை குலைப்பதற்கென்றே ரிசல்டும் வந்தது.

டாக்டர் முன் உலகில் உள்ள அனைத்து கடவுள்களையும் வேண்டியவாறு அமர்ந்திருந்தார் லதா.

ஆனால் அவர் அறியாத ஒன்று எதை டாக்டர் சொல்ல கூடாது என்று வேண்டி கொண்டிருந்தாரோ அதைதான் அவர் சொல்ல போகிறார் என்று.

ஜெகன் இறுகி போய் அமர்ந்திருக்க, மீனாவோ உயிரை கையில் பிடித்து கொண்டு அமர்ந்திருந்தாள். அவளது வாழ்க்கையை நிர்மானிக்க போகிற தருணம்.

நாம எதிர்பார்த்த அளவுக்கு பெரிய பிரச்சனை இல்ல. அவருக்கு கிட்னில ஏதோ அலர்ஜி ஏற்பட்டுருக்கு அவ்வளவுதான் சீக்கிரம் குணமாகிடுவாரு என்று சொல்ல போறாரு என்ற எண்ணத்துடன் அமர்ந்திருந்தவளுக்கு அவர் சொன்ன பதில் உயிர் கூட்டயே நடுங்க வைத்துவிட்டது.

ஆம், அவர் சொன்ன பதில் “எஸ். நாம சந்தேகப்பட்டது போல அவருக்கு கிட்னி பெயிலியர்தான். இப்போதைக்கு டயாலிசிஸ் செய்துக்கலாம். ஆனா டோனார் யாரும் கிடைக்கறாங்களா பாருங்க. கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்றதுதான் இதுக்கு ஒரே வழி” என்றார்.

லதா, மீனா இருவரும் கண்ணீரோடு அமர்ந்திருக்க, ஜெகன்தான் பேச்சை ஆரம்பித்தார்.

“டாக்டர் நாங்க முயற்சிபண்றோம். நீங்களும் மற்ற ஹாஸ்பிடல்க்கு இன்பார்ம் பண்ணி டோனர் கிடைக்கறாங்கலானு பாருங்க” என்று சொல்ல, அவரும் பெரு மூச்சுடன் சரியென்றார்.

வெளியில் வந்த லதா “ஐயோ கடவுளே. நாங்க யாருக்கு என்ன பாவம் செஞ்சோம். எதுக்காக எங்களை இப்படி சோதிக்கற. கருவேப்பிலை கொத்து மாதிரி ஒரே பையன வச்சிருந்தேனே அவனுக்கு இப்படி ஒரு நிலைமையா.

அம்மா, அப்பான்னு எங்களையே சுத்தி சுத்தி வருவானே. மத்தவங்க மனசு நோகாம பேசுவானே. எதுக்காக இப்படி ஒரு தண்டனை எங்களுக்கு. அப்படி என்ன தப்பு நாங்க பண்ணிட்டோம்.

ஐயோ ராஜா உனக்கு ஏன்டா இப்படி ஒரு சோதனை. ஊருக்குள்ள யார் யாரோ என்னன்ன பாவமோ செஞ்சுட்டு நல்லாதானே இருக்காங்க. எல்லாரும் நல்லா இருக்கணும்னு நினைக்கற உனக்கா இந்த நிலைமை. அந்த சாமிக்கு கண்ணு இல்லையா” என்று தலையில் அடித்து கொண்டு அழ,

ஜெகன் மனைவியை தேற்றி சமாளிப்பதற்குள் ஓய்ந்து போனார். மீனா கணவனை எப்போது பார்க்கவிடுவார்கள் என்று துடித்து கொண்டிருந்தாள்.

அதே நேரம் நர்ஸ் வந்து ஒருவர் ஒருவராக பார்க்க செல்லலாம் என்று சொல்ல, முதல் ஆளாக எழுந்து ஓடிய மீனா சோர்ந்து போய் படுத்திருந்த கணவனை கண்டு கதறி கொண்டு சென்று அணைக்க அவன் கண்களிலும் கண்ணீர். தன் உயிர் மேல் கொண்ட ஆசையால் உண்டான கண்ணீர் இல்லை. தன்னை நம்பி வந்த பெண்ணின் நிலை இனி என்ன என்பதால் உண்டான கண்ணீர்.

மீனா அழுது கொண்டே இருக்க, அந்த நிலைமையிலும் அவளை அழ வேண்டாம் என்று பேச முடியாமல் ஆணவன் மெதுவாக சொல்ல, அவளுக்கு கண்ணீர் நிற்காமல் வடிந்து கொண்டே இருந்தது.

அப்போது உள்ளே வந்த நர்ஸ் “என்னம்மா நீ எதா இருந்தாலும் பார்த்துக்கலாம். நீங்க தைரியமா இருங்கன்னு சொல்லுவன்னு பார்த்தா இப்படி அழற” என்க,

உடனே வழிந்த கண்ணீரை துடைத்தவள் “நான் அழல. ஏங்க நீங்களும் வருத்தப்படாதீங்க. சீக்கிரமே உங்களுக்கு சரியாகிடும்னு டாக்டர் சொல்லிட்டாரு. சரியா” என்று அழுகையோடு பேச, அவனோ வலி நிறைந்த சிரிப்பை சிரித்து “நீ சொன்னா சரிதான்” என்று சொல்ல,
கணவனது வலி நிறைந்த வார்த்தைகளில் என்ன உணர்ந்தாளோ அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் வாயில் கை வைத்தவாறு வெளியில் ஓடி வர, லதா மருமகளை அணைத்து கொண்டு அழ ஆரம்பித்துவிட்டார்.

அங்கு வந்த நர்ஸ் “இங்க பாருங்க மேடம் பேஷண்ட்க்கு மன அமைதி ரொம்ப முக்கியம். நீங்க எல்லாரும் அமைதியா அவருகிட்ட அழாம பேசுனாதான் அவரும் அமைதியா இருப்பாரு. இல்லைனா பிபி அதிகமாகிடும். பார்த்துகோங்க” என்று சொல்லி கொண்டிருக்கும்போதே டயட்டிஷியன் அங்கு வந்து சேர்ந்தார்.

“அவருக்கு என்ன புட் குடுக்கறதுனு இவங்க சொல்லுவாங்க” என்றுவிட்டு அவர் சென்றுவிட,

டயட்டிஷியன் பேச துவங்கினார்.”பாருங்க மேடம் லிக்விட் புட் குடுக்காதீங்க. தண்ணீர் கேட்டார்னா கொஞ்சமா அதாவது கால் டம்ளர்கும் குறைவா குடுங்க போதும். அப்புறம் காய்கள் நிறைய குடுங்க. சௌசௌ, பீர்க்கங்காய், சுரைக்காய் இந்த மாதிரி நீர் காய்கள அதிகமா சேர்த்துக்கோங்க, ஈவ்னிங் டைம்ல பச்ச பயிறு, சுண்டல், தட்ட பயிறு இது மாதிரி குடுங்க. வேற எதுவும் சந்தேகம் இருக்கா”என்க,

மூவரும் இல்லை என்பது போல் தலையசைக்க. “ஓகே…” என்றுவிட்டு சென்றுவிட்டார்.

வீட்டில் இருந்த மொத்த சந்தோஷமும் இருந்த இடம் தெரியாமல் ஓடியது. தனம் மகளுக்கு உதவியாக வந்துவிட்டார். ஒருவர் மாற்றி ஒருவர் ஹாஸ்பிடலில் சத்யாவுடன் இருந்தனர்.

மீனா அனைவருக்கும் சமைத்து கணவனுக்கு தேவையான பத்திய உணவை ரெடி செய்து எடுத்து கொண்டு மருத்துவமனைக்கு கிளம்பினாள் இரவு எட்டு மணிக்குதான் வீட்டிற்கு வருவாள்.

லதா ஒரு நாள், மீனா ஒரு நாள் என்று மருத்துவமனையில் இருந்தனர். ஜெகன் மருத்துவமனையே வீடாக மாற்றி கொண்டார். தனக்கு தெரிந்த அனைவரிடமும் மகனின் நிலை சொல்ல, எங்கு தன்னிடம் பணம் எதுவும் கேட்டுவிடுவார்களோ என்று அனைவரும் அவர்கள் குடும்பத்தில் இருந்து விலகினர்.

ஒருவன் நன்றாக இருக்கும்போது வரும் சொந்தங்களை விட, அவன் துன்பத்தில் இருக்கும்போது வரும் சொந்தங்களே உண்மையான சொந்தம்.

நான்றாக இருக்கும்போது பாராட்டும் அதே உறவுகள் கொஞ்சம் நொடித்த உடன் “எனக்கு அப்போவே தெரியும். ஊர்ல இல்லாத புள்ளைன்னு புருசனும் பொண்டாட்டியும் கொஞ்ச நஞ்ச ஆட்டமா ஆடுனாங்க. அஞ்சு வருஷம் முன்னாடி என் பையன் கல்யாணத்துக்கு கூப்பிட போனேன். பையன் படிக்கறான். அது. இதுனு காரணம் சொல்லிட்டு வராம இருந்துகுச்சுங்க. ஊர்ல இல்லாத அழகு புள்ளைய பெத்து, ஒஸ்தி படிப்பு படிக்க வைக்கறாங்க”என்று புறம் பேச, ஏற்கனவே நொந்து போய் இருப்பவர்களுக்கு அவர்களின் வார்த்தைகள் மேலும் காயத்தை ஏற்படுத்தியது.

தங்களிடம் இருந்து விலகும் உறவுகளிடம் எப்படி உதவி கேட்பது, யாரிடம் கிட்னி கேட்பது. தன்னுடையது மேட்ச் ஆனால் கூட பரவாயில்லை ஆனால் அதற்கும் வழி இல்லாமல் பெற்றோர் இருவரின் ரத்த மாதிரியும் சத்யாவிற்கு செட் ஆகவில்லை என்று தடுமாறி கொண்டிருந்தனர்.

தனம் மகள் வீட்டிற்கு சென்ற மூன்று நாட்களில் சென்னப்பன் மருமகனை பார்க்க வந்தார். வந்தவர் நேராக சத்யாவை பார்க்க செல்லாமல் டாக்டரை சென்று பார்த்துவிட்டு, வீட்டிற்கு கிளம்பிவிட்டார்.

அங்கு சமைத்து கொண்டிருந்த மகளின் கையை பிடித்து இழுத்து கொண்டு தங்கள் ஊருக்கு சென்றுவிட்டார்.

ஜெகன் லதா யாரிடமும் எதுவும் சொல்லாமல். வர மாட்டேன் என்று அழுத மீனாவை அடித்து இழுத்து சென்றுவிட்டார்.

காலை பத்து மணி ஆகியும் மருமகள் வராததால் ஜெகன் வீட்டிற்கு அழைக்க போன் அடித்து கொண்டே இருந்தது. யாரும் எடுக்கவில்லை. உடனே பயந்து போனவர்கள் வீட்டிற்கு சென்று பார்க்க பூட்டிய வீடே அவர்களை வரவேற்றது.

பக்கத்து வீட்டில் இருக்கும் பெண் ஓடி வந்து வீட்டு சாவியை குடுத்தவர் “லதாம்மா உங்க மருமக அவங்க அப்பா, அம்மாகூட போய்ட்டா. அந்த பொண்ணு வர மாட்டேன்னு சொல்லி அழுதுது,அதை எல்லாம் காதுல வாங்காமா, வீட்ட கூட போட்டாம போய்ட்டாங்க. நான்தான் வீட்ட பூட்டி சாவி எடுத்து வச்சேன்” என்க,

தம்பதிகள் இருவருக்கும் ஒன்றும் புரியவில்லை. என்ன ஆச்சு?ஏன் சொல்லாம போனாங்க? மருமக அழ அழ இழுத்துட்டு போனதா சொல்றாங்களே. என்னாச்சுனு புரியலையே என்று பதற்றத்தோடு உள்ளே ஓடி சென்று மருமகள் போனிற்கு அழைக்க அதுவோ சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

“என்னங்க சுவிட்ச் ஆப்னு வருது. சம்மந்திக்கு போடுங்க”என்று சொல்லும்போதே ஜெகன் போனிற்கு மருத்துவமனையில் இருந்து அழைப்பு வந்தது.

“ஹலோ…. சத்யா அட்டண்டராங்க என்னங்க பேஷண்ட்கூட யாருமே இல்ல. மெடிசின் வாங்க அனுப்பனும்னாகூட யாரும் இல்ல. இன்னைக்கு டயாலிசிஸ் இருக்கு. எங்க போயிட்டீங்க”என்றார்.

சத்யாவிற்கு டயாலிசிஸ் செய்ய வேண்டும் என்ற முடிவெடுத்த பின் அவனை நார்மல் வார்டுக்கு மாத்தியிருந்தனர்.

“இல்ல மேடம் இங்க பக்கத்துல இருக்கேன். இதோ அஞ்சு நிமிஷத்துல வந்துருவேன்” என்ற ஜெகன் “பாரு லதா ஹாஸ்பிடல்ல இருந்துதான் கூப்பிட்டிருக்காங்க. உடனே வர சொல்றாங்க. நான் கடைல பையனுக்கு இடியாப்பம் வாங்கிட்டு போறேன். நீ மதியத்துக்கு சமச்சு எடுத்துட்டு வா. வேற எதைபத்தியும் யோசிக்கவும் செய்யவும் நமக்கு நேரம் இல்ல. சீக்கிரம்” என்றுவிட்டு ஹாஸ்பிடல் நோக்கி ஓடினார்.

லதாவிற்கு ஒன்றும் புரியவில்லை. என்ன நடந்தது. ஏன் சம்மந்தி நம்மை வந்து கூட பார்க்கவில்லை என்று பலவித எண்ணத்தோடே சமைக்க ஆரம்பித்தார்.

நாட்கள் வயதான தம்பதி இருவருக்கும் மிகவும் கடுமையாக சென்றது. மனைவி எங்கே என்று விசாரிக்கும் மகனை சமாளிப்பதுதான் அவர்களுக்கு மிகுந்த சவலான விஷயமாக இருந்தது.

சென்னப்பன் மகளை அழைத்து சென்ற அன்று மாலை நேரம் அவருக்கே அழைத்து என்ன நடந்தது என்று கேட்கலாம் என நினைத்து ஜெகன் போனில் அழைக்க, நான்கு, ஐந்து அழைப்புகளை எடுக்காமல் விட்டு அதன் பின்பே அந்த பக்கம் அழைப்பு ஏற்கபட்டது.

ஜெகன், “ஹலோ சம்மந்தி…..”

“யாரு…. யாருக்குல சம்மந்தி. என்ன ஏமாத்தி உன் சீக்கு வந்த பையன என் பொண்ணு தலைல கட்டிட்டீட்டு. இப்போ சம்மந்தி, சாராயமந்தினு சொந்தத்த வளர்க்குரியலோ? இந்த சென்னப்பனையே ஏமாத்திட்டீங்கல்ல”

“இல்ல சம்மந்தி அது…”

“வாய மூடுல. இன்னொருவாட்டி என்னை சம்மந்தினு சொன்ன மருவாதி கெட்டிறும் பார்த்துக்கோ. இனி உங்களுக்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்ல. என்னை…இந்த சென்னப்பன்னயே ஏமாத்தி கல்யாணம் பண்ணுனீங்கன்னு போலீஸ்க்கு போனேன். உங்க பொழப்பு நாறி போகும் நாறி.

“இன்னொரு வாட்டி மருமக, சம்மந்தின்னு உங்க போன் வந்துச்சு ஊர் தேடி வந்து வெட்டிருவேன் பார்த்துக்கோ. ச்ச…. என்ன ஒரு ஈன பிறவிங்கலே நீங்க. உன் சீக்கு புடிச்ச பையனுக்கு சேவகம் செய்யதான் நான் புள்ள பெத்துவிட்ருக்கனா?.

உன் குடும்பத்துக்கு வேலை செய்ய சென்னப்பன் புள்ள கேட்குதோ? . சீக்கிரமே ரெண்டு பேரையும் பிரிக்கறதுக்கான வேலைய ஆரம்பிக்கறேன். ரெண்டு மாசம் என் பொண்ண வச்சு என்னை கேவலமா ஏமாத்துனத கெட்ட கனவா நினைச்சு மறக்கணும்னு நினைச்சுட்டு இருக்கேன். அதை மறுபடியும் போன்பண்ணி நியாபகப்படுத்தாதீங்க.

உன் குடும்பத்த இத்தோட விடறேன்னு சந்தோஷப்பட்டுக்கோ, இல்ல என்ன ஏமாத்துனத்துக்கு உங்க எல்லாரையும் வெட்டி என் தோப்புல இருக்க மரத்துக்கு உரமா போட்டுருவேன்.

ஏற்கனவே பாதி செத்த பயலதான் வச்சுருக்கீங்க. முழுசா எப்போ சாக போறானோ அவனை எதுக்கு நான் வெட்டிக்கிட்டு, அப்புறம் அவன் சாகரத்துக்குள்ள என் புள்ளைக்கு நல்லது பண்ணிட்டு போக சொல்லு, சொத்த பையனை பெத்து வச்சுக்கிட்டு அவன் உசுரோட இருக்க வரைக்கும் பெத்த பாவத்துக்கு நீ பாரு.

நல்லவன், நல்ல வேலைல இருக்கவன்னு நினைச்சு என் புள்ளைய நானே பாழும் கிணத்துல தள்ளிட்டேன். வைய்யா போன. உன்கிட்ட பேசுனாலேயே நான் ஏமாந்ததுதான் நியாபகம் வருது” என்று மேலும் அவர்களை வார்த்தையால் நோகடித்துவிட்டு போனை கட் செய்ய, ஜெகன், லதா இருவரும் சுக்கல் சுக்கலாய் நொறுங்கி போயினர்.

லதா அழுகையோடு “என்னங்க அந்த மனுஷன் இப்படி பேசுறாரு. நம்ம பையன். அவங்க மருமகன் இல்லையா? மனசாட்சியே இல்லாம, அது இதுனு எப்படி பேசறாரு. பையன் வேற மீனா எங்க? மீனா எங்கன்னு கேட்டுட்டே இருக்கான். அவனுக்கு என்ன பதில் சொல்ல போறேன்னு தெரியலையே.

அந்த ஆளு மாமனார் மாதிரி பேச வேண்டாம் அட்லீஸ்ட் மனுஷன் மாதிரி பேசியிருக்கலாம். மீனாவும் ஏன் இவரை பேசவிட்டுட்டு அமைதியா இருக்கானு தெரியலையே.

ஏதோ சாதாரணம் மாதிரி ரெண்டு பேரையும் பிரிக்கறதுக்கான வேலைய ஆரம்பிச்சுட்டேன்னு சொல்றாரே. கல்யாண பந்தங்கறது அவங்களுக்கு அவ்ளோ சாதாரணமா போச்சா.

இந்த ரெண்டு மாசத்தையும் கனவா நினைச்சு மறக்கறாராம் ச்ச…. இவங்க எல்லாம் மனுஷங்களா. எப்படி பேசறாங்க. ஏற்கனவே நொந்து போய் இருக்கவங்ககிட்ட எப்படி பேசணும்னு தெரியுதா பாருங்க. நாக்குல நரம்பில்லாம சொத்தைனு சொல்லிட்டானே அந்த ஆளு” என்று அழ,

“வயதான காலத்தில் இன்னும் நான் என்னென்ன பார்க்கணும்னு இருக்கோ தெரியலையே” என்று ஜெகன் ஒரு புறம் வருத்தப்பட,

இவர்கள் அறியாத ஒன்று.நர்ஸ் வந்து செக் செய்துவிட்டு செல்லும்போது கதவை திறந்து வைத்துவிட்டு சென்றதால் அவர்கள் பேசிய அனைத்தையும் சத்யா கேட்டுவிட்டான் என்பதை.

அதன்பின்னான நாட்களில் சத்யா மீனாவைப்பற்றி கேட்கவே இல்லை. வாரத்திற்கு நான்கு நாட்கள். டயாலிசிஸ் செய்யப்பட்டது.

மருத்துவர்கள் ஒருபக்கம், ஜெகன் ஒரு பக்கம் என்று அனைவரும் கிட்னி டோனர்காக அழைந்து கொண்டு இருந்தனர். சத்யா நிலை மிகவும் மோசமாக இருந்தது. எழுந்து அமரவே தெம்பில்லாமல் படுத்தே இருந்தான்.

லதாவும் மருத்துவமனையிலே தங்கிவிட்டார். காலை வீட்டிற்கு சென்று சமைத்து எடுத்து கொண்டு செல்பவர். மீண்டும் அடுத்த நாள் காலைதான் வீட்டிற்கு செல்வார். தொடர்ந்த அலைச்சலில் கணவன் மனைவி இருவரும் தளர்ந்துதான் போனார்கள்.

இந்த சூழ்நிலையில்தான் அவர்களை மொத்தமாக வீழ்த்த என்றே அந்த கடிதம் வந்தது.

அது என்ன கடிதமாக இருக்கும்….. அடுத்த எபியில் பார்க்கலாம்.

Advertisement